Pen andrum indrum webseries 15 by narmadha devi அத்தியாயம் 15: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி
Pen andrum indrum webseries 15 by narmadha devi அத்தியாயம் 15: பெண்: அன்றும், இன்றும் - நர்மதா தேவி

அத்தியாயம் 15: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலை செய்தால்தான் சோறு

இந்தியாவில் 1911 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அன்றைக்கு 100 பேரில் 47 பேர் தொழிலாளர்களாகவும், 53 பேர் சார்ந்திருந்தவர்களாகவும் இருந்தார்கள் என்கிறது. வட-மேற்கு பகுதிகள், மைசூர் போன்ற பகுதிகளில் தொழிலாளர்களைச் சார்ந்திருந்த நபர்கள், தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம். மத்திய இந்தியப் பகுதியில் தொழிலாளர்களின் எண்ணிக்கை சார்ந்திருந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம்.

பொதுவாக, ‘தொழிலாளர்களின் எண்ணிக்கை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகம் இருந்த மாகாணங்களில், பெண்கள் வேலைக்குச் செல்வது குறித்த பாரபட்சம் அறவே இல்லை, அல்லது பெரும்பாலும் இல்லை எனலாம்’ என்கிறது 1911 மக்கள்தொகை அறிக்கை. “மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார் பகுதியில், சமூகத்தின் ஒரு சில வர்க்கங்களில்தான் பெண்களை தனித்து வைத்திருக்கும் பழக்கம் இருக்கிறது. பெரும்பாலான முக்கிய விவசாய சாதிகளில், சில கைவினைஞர் சாதிகளில், எல்லா தாழ்த்தப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடிகளில், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்வதற்கான உழைப்பில் பெண்கள் கணிசமாகப் பங்கேற்கிறார்கள்.” – இப்படி மத்திய மாகாணங்கள் மற்றும் பேரார் பகுதியின் ஐ.சி.எஸ் அதிகாரி, ஜே.டி.மார்டன் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவிலேயே மத்திய மாகாணங்களில்தான் அன்றைக்கு தொழிலாளர் விகிதம் அதிகமாக இருந்திருக்கிறது. 59 தொழிலாளர்களுக்கு, 41 சாந்திருப்பவர்கள்தான் இந்தப் பகுதியில் இருந்தார்கள். அதாவது 60 சதவிகித்தினர் தொழிலாளர்கள். சென்னை மாகாணத்தில் கிட்டத்தட்ட பாதி பேர் தொழிலாளர்களாகவும், பாதி பேர் சார்ந்திருப்பவர்களாகவும் இருந்தனர் (49 தொழிலாளர்கள்/51 சார்ந்திருந்தவர்கள்). சென்னை மாகாணம் என்பது அன்றைக்கு ஒரிசாவின் கஞ்சம் பகுதி வரைக்கும் இருந்தது.

வங்கத்தின் சணல் ஆலைகளில், ‘எங்கள் பகுதிகளில் பெண்களை வேலைக்கு அனுப்பமாட்டோம். அதனால், ஆண்கள் நாங்கள் மட்டுமே மில் வேலைக்கு வந்தோம். எங்கள் பெண்கள் கிராமங்களில் குடும்பத்தோடு இருக்கிறார்கள்’ என்று சொன்ன வங்கத்துக்கு இஸ்லாமிய ஆண்களும் தொழிலாளர்களாகப் பணியாற்றினார்கள். இவர்களோடு பணியாற்றிய பிற இடம்பெயர்ந்த தொழிலாளர்களில், பீகார், பெனாரஸ் போன்ற பகுதிகளில் இருந்து குடும்பங்களாக இடம்பெயர்ந்து சென்ற இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் இருந்தார்கள். “எங்கள் ஊரில் வறுமை. எனது சொந்தக்காரர்கள் எல்லோரும் இங்கு வேலைக்கு வந்தார்கள் நானும் வந்தேன். நாங்கள் சம்பாதிப்பதில், சாப்பிட்டால் உடை வாங்க முடியாது, உடை வாங்கினால் சாப்பிட முடியாது. இதுதான் எங்களின் நிலையாக இருக்கிறது’ – சணல் ஆலையில் வேலை பார்த்த பீகாரைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் தொழிலாளர் ஹபீப், தான் வேலை பார்க்க வந்த சூழலையும், வேலை பார்த்தும் தனது நிலை மாறவில்லை என்பதையும் இவ்வாறு இந்தியத் தொழிலாளர்கள் குறித்த ராயல் கமிஷனிடம் (1929-1931) விளக்கியிருந்தார். நகரங்களின் இடப்பெயர்வு தொழிலாளர்களில் ஆண்களே அதிகம் என்றாலும், குடும்பத்தோடு வந்த பெண் தொழிலாளர்களும், தனித்து வாழ்ந்த பெண்களில் கணவரை இழந்த பெண்கள், கைவிடப்பட்ட பெண்களும்கூட இருந்தார்கள்.

‘பெண்களும் வேலை செய்தால்தான் சாப்பாடு! பெண்கள் வேலை பார்ப்பது இழிவு என்று கருதினால் பட்டினிதான்!’ என்ற நிலையில் இருந்த தொழிலாளர் குடும்பங்களை தேயிலைத் தோட்டங்களில், சுரங்கத் தொழில்களில் கூடுதலாகவே காண முடிந்தது. எனவே, பிற துறைகளைவிடப் பெண் தொழிலாளர்கள் எண்ணிக்கை இந்தத் துறைகளில் அதிகம்.

தேயிலைத் தோட்டங்களில்…

தொடக்கத்தில் (1850-60 வாக்கில்) கிழக்கு இந்தியாவின் அஸாம், டார்ஜிலிங், டோஆர் பகுதிகளில், பிறகு (1870க்கு மேல்) தெற்கே ஆனைமலை, குன்னூர், பீர்மேடு போன்ற பகுதிகளில், ஆயிரக்கணக்கிலான ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஏக்கருக்கு 2.5 ரூபாய்- 5 ரூபாய் விலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் வனநிலத்தை தேயிலைத் தோட்டங்கள் உருவாக்குவதற்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விற்பனை செய்தது. இவ்வளவு முதலீடு செய்து வாங்கும் சக்தி ஆங்கிலேய முதலாளிகளுக்கு மட்டுமே இருந்ததால், தொடக்க காலத்தில் எல்லா எஸ்டேட்டுகளும் ஆங்கிலேயர்களிடம்தான் இருந்தன.

வனவிலங்குகள் இருக்கிற காட்டை அழித்து, மலைப்பாங்கான நிலத்தைப் பக்குவப்படுத்தி தேயிலை தோட்டங்களை உருவாக்குவது, தேயிலை நட்டு அதன் வளர்த்தியைக் கட்டுப்படுத்திப் பராமரிப்பது, தேயிலை பறிப்பது, பக்குவப்படுத்துவது, இவைபோக தேயிலைத் தோட்டத்திற்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது -இப்படி எல்லாமே மிகக் கடுமையான பணிகள். இவற்றைச் செய்வதற்கு ஏக்கருக்கு ஒருவர் அல்லது இருவர் என்ற எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேண்டும். என்ன செய்யலாம்? ஏற்கனவே அமெரிக்கா போன்ற பகுதிகளில் கருப்பின அடிமைகளை வைத்து தோட்டத்தொழிலில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்கள் அல்லவா இந்த பிரிட்டிஷ் முதலாளிகள்? அதனால், சற்றே தன்மையில் மாறுபட்ட அடிமைமுறையை தேயிலைத் தோட்டங்களில் புகுத்தினார்கள். பி.ஹெச் டேனியல் எழுதிய ‘ரெட் டீ’ (Red Tea) நாவல் (தமிழில்: எரியும் பனிக்காடு, மொழிபெயர்ப்பு: எழுத்தாளர் இரா. முருகவேள்) தமிழ்நாட்டின் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்ந்த நரகவாழ்க்கையை நம் கண்முன்னே கொண்டுவரும்.

அப்பட்டமான அடிமைமுறை…

‘நல்ல வேலை, நல்ல கூலி, செழுமையான எதிர்காலம் இருக்கிறது’ என்று ஆசைகாட்டி ஏமாற்றி தொழிலாளர்களைக் குடும்பங்களாக அழைத்து வருவது, தோட்டத்திற்கு அழைத்து வருவதற்கு செலவிட்ட தொகை, தோட்டத்தில் வாழ்வதற்கு கம்பளி, பாத்திரங்கள் வழங்கிய தொகை- எல்லாவற்றிற்கும் கடன்பத்திரம் எழுதி, கைநாட்டு வாங்கிக்கொள்வது, உயிர்போகும் அளவிற்கு சித்தரவதை செய்து வேலை வாங்குவது, தப்பித்து ஓடுபவர்களைக் கொன்று அல்லது அங்ககீனம் செய்து, வேலை பார்க்கும் பிற தொழிலாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி தோட்டத்திலேயே சிறைவைப்பது, இரவு, பகல் 24 மணிநேரமும் கண்காணிப்பது, கடன் பாக்கி இல்லை என்றாலும் விடுவிக்காமல் வேலை வாங்குவது – என்று இந்தத் தேயிலைத் தோட்டங்களில் அப்பட்டமான அடிமைமுறையைக் கடைப்பிடித்தார்கள்.

ஏக்கருக்கு சராசரியாக ஒருவர் அல்லது இருவர் என்ற கணக்கில் தொழிலாளர்கள் இந்தத் தோட்டங்களில் வேலை பார்த்தார்கள். 4000 ஏக்கர் இருக்கக்கூடிய எஸ்டேட் ஒன்றில் 8,000-10,000 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை அடித்து சித்ரவதை செய்து வேலை வாங்க வேண்டும் என்றால், உள்ளூர் பகுதியில் இருந்து இவர்களைப் பெறுவது முடியாது. அதனால், அஸாம், மேற்கு வங்க எஸ்டேட்டுகளைப் பொறுத்தவரையில் மத்திய இந்தியப் பகுதிகளைக் குறிவைத்தார்கள். இங்கு வாழ்ந்த பழங்குடி, அரைப்பழங்குடி மக்கள், பழங்குடிகள் அல்லாத விவசாய சமூகங்களைச் சேர்ந்த மக்களை கொத்துக்கொத்தாக அழைத்துவந்தார்கள்.

தமிழகப் பகுதிகளின் தோட்டங்களில் மைசூரிலிருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடக்க காலத்தில் அதிகமாக இருந்தார்கள். பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கு பெரும்பான்மையாக மாறினார்கள். கணிசமான எண்ணிக்கையில் மலையாளத் தொழிலாளர்களும் வேலை செய்திருக்கிறார்கள். சென்னை மாகாணத்தின் புலம்பெயர்ந்த ஒப்பந்தத் தொழிலாளர்களில், நூற்றில் 55 பேர் சிலோனுக்கு சென்றிருக்கிறார்கள், 25 பேர் வயநாடு, நீலகிரி, கோவை பகுதி மற்றும் அஸ்ஸாம் எஸ்டேட்டுகளுக்குச் சென்றார்கள் என்று சென்னை மாகாணத்தில் தலைமை கண்காணிப்பாளர் அறிக்கையில் இருந்து அறிய முடிகிறது (1929).

தொழிலாளர்களை வெளியூர்களில் இருந்து அழைத்துவரும் பணியை மேஸ்திரிகள் அல்லது கங்கானிகள் செய்தார்கள். ஜி. சுப்ரமணிய ஐயர் 1903 ஆம் ஆண்டில், “கங்கானி ஒரு பை நிறைய பணத்தோடு கிராமப்புறங்களுக்குச் செல்வார். குடும்பத்தின் அந்தரங்க சச்சரவுகள், வேறுபாடுகளைத் தெரிந்துகொண்டு, எக்கச்சக்கமான பொய் வாக்குறுதிகளை அள்ளிவீசி, கிராமத்தில் அதிருப்தியில் உள்ள ஆண்கள், பெண்களை கவர்ந்துசெல்வார்” என்று பதிவுசெய்திருக்கிறார்.

“மதராஸ் மாகாணத்தின் தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு எடுக்கப்படும் தொழிலாளர்களில் அநேகமாக எல்லோரும் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்” (Depressed classes) என்கிறது 1931 மக்கள்தொகை அறிக்கை. 1921-1930 காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இலங்கைக்கு சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்களின் சமூகப் பின்னணியைப் பார்க்கும்போது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதியளவுக்கு இருந்திருக்கிறார்கள், அல்லது மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் இடம்பெயர்ந்திருக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தின் தாழ்த்தப்பட்ட மக்களில் (1901 மக்கள் தொகை கணக்கெடுப்பு) தமிழகப் பகுதி மக்களைப் பொறுத்தவரையில் பெண்களின் விகிதம் 1000 ஆண்களுக்குப் 903. குடும்பத்தோடு இடம்பெயரும் விகிதம் இவர்களில் அதிகம். அதுவே, மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மலையாள, கனரா பகுதி தாழ்த்தப்பட்ட மக்ககளில் பெண்களின் விகிதம் 1000 ஆண்களுக்கு வெறும் 244. பெண்கள் குறைவாக இடம்பெயர்ந்திருக்கிறார்கள். குறிப்பாக தெற்கு மலபார் பகுதியின் செருமான் சாதியைச் சேர்ந்த தொழிலாளர்களில் பெண்களின் சதவிகிதம் ஒன்றுக்கும் குறைவு. இந்த சாதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அவர்கள் தங்கள் குடும்பப் பெண்களை உடனழைத்துப் போகக்கூடாது என்று நிலப்பிரபுக்கள் தடுக்கும் கொடுமை இருந்திருக்கிறது. அவர்கள் மீண்டும் விவசாயப் பணிகளுக்குத் திரும்ப வேண்டும் என்று நிர்பந்திப்பதற்காக நிலப்பிரபுக்கள் இப்படியான கொடுமை செய்திருக்கிறார்கள் என்று பல்வேறு ஆய்வுகளை, அறிக்கைகளை சுட்டிக்காட்டி நீலகிரியின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலையை ஆய்வு செய்த பார்பரா இவான்ஸ் குறிப்பிடுகிறார்.

மூலதனத்தின் மேலாதிக்கத்திற்குள் தேயிலைத் தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டாலும், பழைய சமூகத்தின சமூகப் பொருளாதார அம்சங்களில் இருந்து முற்றிலும் விடுபட முடியாத நிலையில்தான் அவர்கள் இருந்தார்கள். விவசாய உற்பத்தி முறையும், தொழிற்துறை உற்பத்தி முறையும் இணைந்த உற்பத்தியாக தேயிலை உற்பத்தி இருந்தது. தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்புச் சக்தியை சரக்காக விற்று பண வடிவில் கூலி பெறும் கூலி உழைப்பு முறையும் இந்தத் தோட்டங்களில் இருந்தது. ஆனாலும், இந்தத் தொழிலாளர்களைச் சார்ந்திருந்தவர்கள் அனைவரையும் இந்த தோட்டப் பொருளாதாரத்தின் கூலி உழைப்பை வைத்துக் காப்பாற்றும் சூழல் இல்லவே இல்லை. பகுதி பேர் சொந்த ஊர்களில் இருந்தார்கள். முதலாளித்துவ தோட்ட உற்பத்திமுறை ஒட்டுமொத்தமாக தொழிலாளர்களின் இருத்தலைத் தக்கவைப்பதற்காக அடிமைமுறையின் அம்சங்களைக் கூச்சமின்றி கடைப்பிடித்தது.

தோட்டங்களில் நடந்த கொடுமைகளைத் தாங்க முடியாமல் தொழிலாளர்கள் தவித்தார்கள். தொழிலாளர்களை விடுவிக்காமல் தொடர்ந்து சுரண்டுவதற்கும், தப்பித்துச் சென்றால் பிடித்து முதலாளிகளிடம் ஒப்படைப்பதற்கும் உதவும் வகையில்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொடக்ககால சட்டங்கள் இருந்தன. “அஸாம் தோட்டத்தொழில்-தொழிலாளர் இடப்பெயர்வு சட்டம், மெட்ராஸ் தோட்டக்காரர்கள் தொழிலாளர் சட்டம் (The Madras Planters’ Labour Act), முதலாளிகள் வேலைக்காரர்கள் சட்டம் (The Masters and Servants Act), தொழிலாளர் ஒப்பந்த மீறல் சட்டம் எல்லாம் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து முதலாளிகள் சுரண்டுவதற்காக கொண்டுவரப்பட்டன. தொழிலாளர்கள் 15-18 மணிநேரம் தொடர்ச்சியாக வேலை வாங்கப்பட்டபோது, இந்தச் சட்டங்கள் எல்லாம் மனிதத்தன்மையற்ற கடின உழைப்பில் இருந்து தப்பித்துச் சென்ற தொழிலாளர்களை முதலாளிகள் தண்டிப்பதற்கே உதவின. 1860 இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 490, 492 கூட இவ்வகையான பிரிவுகளைக் கொண்டிருந்தது” என்று இந்தியாவின் தொழிலாளர் வர்க்கம் நூலில் தோழர் சுகுமால் சென் குறிப்பிடுகிறார். தப்பித்துச் சென்ற தொழிலாளர்களுக்கு ரயில் டிக்கெட் வழங்கக்கூடாது என்ற உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவர்களை சிறைகளை ஒத்த தோட்டங்களுக்கே அனுப்பிவைக்கும் வேலையை அன்றைய மாவட்ட நிர்வாகங்கள் செய்தன.

அஸாமின் ஜோஹார்ட் பகுதியில் பொலோமா என்ற தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றியவர் மிரியம் என்ற இஸ்லாமியப் பெண் தொழிலாளி. உத்திரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். தனது கையில் பல அங்குளம் நீளத்திற்கு இருந்த காயத்தைக் காட்டி தன்னை எஸ்டேட்டில் அடித்ததை ராயல் கமிஷனிடம் பதிவுசெய்திருக்கிறார். ‘என்னுடைய பெயரை பதிவேட்டிலிருந்து எடுத்துவிட்டால் போதும், நான் எனது ஊருக்குப் போய்விடுவேன்’ என்று சொல்லி இருக்கிறார். இந்தத் தோட்டத்தின் எல்லா தொழிலாளர்களின் வாக்குமூலங்களிலும் விடுதலை வேட்கையைக் காண முடிகிறது. மிரியத்தைக் காப்பாற்ற வந்த அவருடைய மகன் சுலேமானுக்கும் அடி விழுந்தது. ‘நாங்கள் தப்பித்துவிடக் கூடாது என்பதற்காக, கழிப்பதற்காக சென்றால்கூட என்னைக் கண்காணிப்பார்கள்’ என்று சுலேமான் சொல்லி இருக்கிறார்.

சூட்டன் என்ற ஆண் தொழிலாளி லக்நவ் நகரத்திற்கு அருகே சீதாபூரில் இருந்து இடம்பெயர்ந்தவர். இவரும் சுலேமான் போலவே, கழிப்பிடத்திற்கு செல்லும்போதுகூட பின்தொடரப்படுவது பற்றி சொல்லி இருக்கிறார். ‘தப்பிச்செல்லையில், பிடிபட்டுவிட்டால் சாட்டையால் அடிப்பார்கள், முதுகில் உள்ள தோலெல்லாம் வந்துவிடும். அதனால், நான் தப்பிக்க முயற்சி செய்யததே இல்லை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

‘இரவில் நாங்கள் வீட்டில்தான் இருக்கிறோமா எனப் பார்க்க வருவார்கள். நாங்கள் சரியாக உடை உடுத்தாமல் இருந்தாலும், கதவைத் திறந்து பார்ப்பார்கள்’ என்று சாட்சி சொல்லி இருக்கிறார் ராய்ப்பூரைச் சேர்ந்த காடமோனி என்கிற பெண் தொழிலாளி.

ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் இருந்து ஆனைமலை தோட்டங்களில் பணியாற்றிய பெண் தொழிலாளர்கள் ராயல் கமிஷனிடம் சாட்சி அளித்திருக்கிறார்கள், ‘ஒரு கம்பளி கொடுத்துவிட்டு 4 ரூபாய் 8 அணா பிடித்துக்கொள்வார்கள். பத்து மாதங்கள் வேலை பார்த்த பிறகு 2 ரூபாய் 4 அணாவை திரும்பச் செலுத்துவார்கள். நம்முடைய கணக்கில் எவ்வளவு பணம் மீதமிருக்கிறது என்று ஒவ்வொரு மாதமும் கணக்கு வாசிப்பார்கள். அந்தக் கணக்கு சரியாக இருக்கிறதா என்று எங்களால் கண்டுபிடிக்க முடியாது’ என்று சொல்லி இருக்கிறார்கள். ‘காலையில் 7 மணிக்கு வேலை செய்ய வந்தால், மாலை 5 மணி ஆகிவிடும். இடையில் எங்களால் தண்ணீர்கூட குடிக்க முடியாது’, ‘எங்களை தண்ணீர் குடிக்கக்கூட அனுமதிக்க மாட்டார்கள்’ என்று இந்தப் பெண் தொழிலாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அடிபணிந்து அசராமல் வேலை பார்க்கக்கூடிய தன்மை தொழிலாளர்களிலேயே பெண் தொழிலாளர்களுக்கு அதிகம் என்பதால், தேயிலை பறிக்கும் பணிகளில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பஞ்சாலை தொழிற்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் 15-20 சதவிகிதம் இருந்தார்கள் என்றால், தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களில் பாதி அல்லது பாதிக்கும் மேல் பெண்களாக இருந்தார்கள்.

அன்றைக்கு தேயிலைத் தோட்டங்களில் மனைவி, கணவன், குழந்தைகள் என ஒரு குடும்பமே வேலை பார்த்தாலும், அன்றாட வாழ்க்கைக்கான செலவுகளில் வெறும் 60-80 சதவிகிதத்தை மட்டுமே ஒட்டுமொத்த குடும்ப வருமானத்தால் பூர்த்தி செய்ய முடிந்தது. தீரவே தீராத கடன்சுமையில் தொழிலாளர்களை சிக்க வைப்பது, அதன் மூலம் அவர்களை நிரந்தரத் தொழிலாளர்கள் ஆக்குவது என்பது, தேயிலைத் தோட்டங்களில் ஒரு பிரதான சுரண்டல் உத்தியாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

ஒரு ஆண் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கூலியில் மூன்றில் இரண்டு பங்கே பெண்களுக்கு வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கூலி மிகமிகச் சொற்பம் என்கிறபோது, தனித்து வாழ்ந்த பெண் தேயிலைத் தொழிலாளர்களின் நிலை அன்றைக்கு மிக மோசமாக இருந்தது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சின்னம்மாள் என்ற பெண் தொழிலாளி கரூரைச் சேர்ந்தவர். ஆனைமலையில் ஒரு எஸ்டேட்டில் வேலை செய்தார். கணவரை இழந்த இவர் தன்னுடைய 6 வயது குழந்தையை ஊரில் விட்டு வந்திருந்தார். ராயல் கமிஷனிடம், ‘இந்த எஸ்டேட்டிற்கு வந்தபோது 15 ரூபாய் முன்பணம் வாங்கி இருந்தேன், அதை அடைக்கவே 10 மாதங்கள் ஆனது. இப்போது மீண்டும் 20 ரூபாய் வாங்கி இருக்கிறேன். அதை அடைக்காமல் வெளியே போக முடியாது. மேஸ்திரி விடமாட்டார். அம்மாவோ, குழந்தையோ இறந்தால்கூட போக அனுமதிக்க மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். ஸ்வீட் கேப்பிடலிசம்!

 

தொடரும்…

ஆதாரங்கள்:

Census of India, 1911, Volume 1, Census of India, 1931, Volume 14, Madras, Part 1

Report of the Royal Commission on Labour in India (1929-1931), Vol. V. Bengal-Part 1 Written evidence & Part 2. Oral evidence; Vol. VI. Assam and the Dooars; Vol VII. Madras presidency and Coorg-Part 1 Written evidence & Part 2 Oral evidence.

From Peasants and Tribesmen to Plantation Workers: Colonial Capitalism, Reproduction of Labour Power and Proletarianisation in North East India, 1850s to 1947, Ranajit Das Gupta, Economic and Political Weekly, Vol. 21, No. 4 (Jan. 25, 1986)

British Tea Planters and the Madras Planters’ Labour Law of 1903: The Creation and Coercion of a Migrating Labour Force in the Nilgiri Hills of Southern India, PH. D Thesis, Barbara A. Evans, Dept. of History, University of Sydney, 1991.

Working Class of India – History of Emergence and Movement (1830-1970), Sukomal Sen, K. P. Bagchi & Company, Calcutta, 1977

D. H. Buchanan, The Development of Capitalistic Enterprise in India, London, 1966.

 

Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *