அண்டை நாட்டின் அலட்சிய நிலை!
அரிய நம் வன விலங்கின் அழியும் நிலை!
பொதுவாக, நம் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள், உடன் நாம் நட்புடன் இருக்க முயன்றாலும், எல்லை சுவர், மரம் நம் வீட்டு செல்ல பிராணி, அங்கு செல்லுதல், என பல காரணங்களினால், முரண்பாடு ஏற்பட்டு, அமைதி கெட்டு சச்சரவு வர வாய்ப்புகள் உள்ளது. அதே போல், அருகருகில் உள்ள இரு அண்டை நாடுகள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.இது ஒரு புறமிருக்க “பன்னாட்டு புலிகள் தினம் ” நம் நாட்டில் பல்வேறு இடங்களில் இவ்வாண்டு சிறப்பாக, கொண்டாடப்பட்டு, மக்கள், குறிப்பாக பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மத்தியில், உரிய
விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது. நமது தேசிய விலங்கு என்ற உயர் நிலை பெற்ற விலங்கின் அரிய தன்மை, அழகு, அதன் மதிப்பு அவற்றை காணக்கூடிய வன
சரணாலயங்கள், புலிகள், பாதுகாப்பு அவசியம். அவை, இயற்கை சுற்று சூழலில் பங்கு பெறும் நிலை பற்றிய தகவல்கள் சமூக ஊடகங்களின் மூலம், நம் அனைவருக்கும் அறிய பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப் பட்டன.
ஆம்! மகிழ்ச்சி, எனினும், அந்த அரிய உயிரினம் நம் அண்டை நாட்டின் அலட்சியம் காரணமாக அழியும் நிலைக்கு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது, என்பதை நம் மக்களில் பெரும்பாலானோர் அறியவில்லை! இந்தியாவில் புலிகள் சரணாலயங்கள் வட பகுதியிலும், தென் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைகாடுகளிலும் நிறைய உள்ளது. இவற்றை பாதுகாக்க 1973 ஆம் ஆண்டு புலித்தொகை காப்புத் திட்டம் (TIGER PROJECT )அப்போதைய இந்திய அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் 50 ஆண்டுகளுக்குப் பிறகும், ஒரு அரிய தேசிய வன உயிரினத்தின் நிலை குறித்து நாம் கவலைப்படவேண்டிய அவலம் தொடர்கிறது!
புலிகள் வேட்டை மூலம் அவற்றைக் கொன்று, அவற்றின் உடல் உறுப்புகள், குறிப்பாக எலும்பு, பற்கள், தோல், மண்டை ஓடு நகங்கள் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகிறது. நமது அண்டை நாடான பங்களாதேஷ் நாடு, நம் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள சுந்தர வன காடுகளில் வசிக்கின்ற புலிகள் வேட்டையாடப்பட்டு, கொன்று, அவற்றின் உறுப்புகள் வெளிநாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. மேலும் , அந்த நாட்டில் உள்ள மிக உயர்ந்த, செல்வந்தர்கள், அவற்றில் மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பிக்கை கொண்டு வாங்க முயற்சி செய்து வருகின்றனர்.புலிகளின் உறுப்புகள் வெளிநாடுகளுக்கு கடத்தி, அத்து மீறிய வணிகம் செய்ய ஒரு தலமாக இந்த அண்டை நாடு விளங்கிடும் நிலை கவலைக்குரிய சுற்றுசூழல் சவால் தான்!அல்லவா!!? இந்தியாவின் வட கிழக்கு பகுதி, வடக்கு மியான்மர் பகுதி போன்ற இடங்களில் இந்த கடத்தல், வணிகம் மிக தீவிர மாக நடைபெறுகிறது. பங்களாதேஷ் நாடு மட்டும் 15 வெளிநாடுகளுக்கு, (சீனா, மலேசியா உட்பட ) புலிகளின் உறுப்புகளை விற்கும் நிலையில் உள்ளது. மேலும் G 20 நாடுகள் வரிசையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளுக்கும் இவை அனுப்பப்படுவதாக தகவல் இருக்கிறது.
சரி!இந்த அத்துமீறிய புலி உறுப்புகளின் கடத்தல் எவ்வாறு
நிகழ்ந்து கொண்டு வருகிறது!? பங்களாதேஷ் நாட்டிற்கும் சுந்தர வன காடுகள் இடையில் உள்ள அலையாத்தி காடுகளின் வாய்க்கால்கள் மூலம், தோராயமாக 30 கொள்ளை கும்பல்கள், இவற்றை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 7 குழுக்கள்,இந்த அத்துமீறிய செயல்பாடுகளில் முன்னணி வகிக்கின்றன. இத்தகைய
கொள்ளை கும்பல்கள் 2000 ஆம் ஆண்டு துவக்கத் திலிருந்து, தொடர்ந்து இவ்வாறு செய்வதால் சுந்தரவனக் காடுகளில் 2009 ஆம் ஆண்டில் வசித்து வந்த புலிகள் எண்ணிக்கை 300 -500 வரை இருந்து வந்த நிலை மாறி 2018 ஆம் ஆண்டு 118 ஆக குறைந்த நிலை அதிர்ச்சி தருகிறது.ஆனால் 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷ்
நாடு கடத்தல் கும்பல்களுக்கு, பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் போலி உறுதியின் காரணமாக, அந்த குறிப்பிட்ட கடத்தல் பகுதியில், இனிமேல் அந்த அத்து மீறிய செயல்பாடுகள் தடை செய்யப் பட்டதாக அறிவித்தது. ஆனால் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்பது பரிதாபம் ஆகும்.
வனவிலங்கு ஆய்வாளர் குழு, தொடர்ந்து நான்கு முக்கிய எல்லை பகுதிகளில் புலிகள் கொலை, உறுப்புகள் கடத்தல் நடைபெறும் நிலையினை சுட்டிக் காண்பிக்கிறது. அதாவது பங்களாதேஷ், இந்திய நாடுகளுக்கு இடையில் கரம்பானி பூங்கா -காசிரங்கா காடுகள், சுந்தரவனக் காடுகள், மயான்மர் வடக்கு எல்லை, நம்தபா-ராயல் மணாஸ் சரணாலயம் ஆகியவை ஆகும். மேலும் இந்த கடத்தல் குழுக்களின் தலைவர்கள், அந்த நாட்டில் சில நிறுவனங்களின் உரிமையாளர் நிலையில், சட்டபூர்வ வனவிலங்கு வணிகம் நடத்த உரிய அரசு அனுமதி லைசென்ஸ் பெற்றுள்ளார்கள்.
இதனால் கடத்தல் செயல்பாடுகளை திரை மறைவில் மேற்கொள்ள அவர்களுக்கு எளிதில் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் இந்தியா, மியான்மர் இடையில் பங்களாதேஷ் நாடு வழி இந்த கடத்தல்கள் நடக்க இந்த மூன்று நாடுகளில் எல்லையில் மொழி, கலாசாரம் ஆகிய ஒற்றுமை காரணம் ஆகும். மேலும் இப்பகுதியில் அரசியல் நிலையற்ற தன்மை, அரசுத் துறைகளிலும் மந்தமான, செயலற்ற நிலைக்கு முக்கிய காரணம் ஆகும். விலங்கு கடத்தல் உடன் போதை பொருட்கள் கடத்தல் மேற்கொள்ளப் படுவதால் அவற்றின் முன்னுரிமை அதிகரிக்கிறது.
டாக்டர் நசிருதீன் என்ற ஆராய்ச்சியாளர் , இந்த கடத்தல் பிரச்சினைகள் பற்றி ,163 கடத்தல்நபர்கள், வியாபாரிகள், ஆகியோரிடம் பேட்டி எடுத்து வெளியிட்ட தகவல்கள்
அடிப்படையில், புலி உறுப்புகள் 2016-2021 ஆம் ஆண்டு வரை, பங்களாதேஷ் நாட்டின் உயர் செல்வந்தர்களுக்கும், வெளிநாடுகளுக்கும், கடல், வான்வழி மூலம் கொண்டு செல்லப் பட்டு விற்பனை செய்வது அறியப்படுகிறது. ஒவ்வொரு புலி உறுப்பும் 17450 டாலர் தொகை மதிப்பு கொண்டுள்ள நிலை தெரிகிறது!.
புலிகளின் மாமிசம் அதிக உடல் ஆற்றல் தருவதாகவும் புலிகளின் பற்கள், நகங்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்திருப்பது, வீரத்தின் அடையாளம், அவை இருப்பதால் தீய சக்திகள் மக்களை அணுகாது என்ற மூட நம்பிக்கை, புலிகளின் தலை, மண்டை ஓடு, தோல் போன்றவைகள் வைத்திருப்பது சமூக அந்தஸ்து தருவது போன்ற வழக்கங்கள் பங்களாதேஷ், மியான்மர் நாடுகளில் நிலவுகிறது. மேலும்தென் கிழக்கு ஆசிய நாடுகள், சீனா, வியட்நாம், போன்ற பகுதிகளில் புலிகள் கடத்தல் என்பது ஒரு சாதாரண தகவல் என்ற நிலை தொடர்கிறது.
நமது நாட்டில் தேசிய விலங்கு என்ற பெருமை பெற்ற புலி
ஒரு இயற்கை, சுற்று சூழல் புவி அமைப்புகளின், உச்ச நிலையில் உள்ள ஒரு நுகர்வோர் ஆக இருப்பது, அறிவியல் உண்மை ஆகும். காடுகளில் புலிகள் எண்ணிக்கை உரிய நிலையில் இருந்து வந்தால், அவற்றின் உணவாக, மற்ற தாவர உண்ணிகள் எண்ணிக்கை கட்டுப்பாடு கொண்டும், ஒரு சரணாலயத்தின் இயற்கை சமநிலை பேணப்படுவது உறுதி ஆகிறது. வனங்கள் சுற்றியுள்ள கிராம மக்கள் பாதிக்காத நிலையில், வனத்துறை இயற்கை சமநிலை புரிந்து செயல் பாடு மேற்கொள்ளும் போது, விலங்கு கடத்தல் காரர்களுடன்,இயைந்து போகாமல் எவ்வித அச்சமும் இன்றி பணியாற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புலிக்கொடி வைத்து, நாட்டினை ஆணட் சோழர் காலத்தில், நிச்சயம் அந்த அரிய விலங்கு
எண்ணிக்கை பற்றிய கவலை கொள்ளும் வாய்ப்பு, நிச்சயம் இருந்திருக்காது, அல்லவா!? ஆம்,புலிகள் பற்றிய மூட நம்பிக்கைகள் சமுதாயத்தில் நம் நாடு, வெளிநாடுகள் ஆக்கிரமிப்பு செய்வது வேதனை! புலி கடத்தல் நடை பெறும் எல்லை பகுதியில் உள்ள மாநில அரசுகள், ஒன்றிய இந்திய அரசு, அண்டை நாடுகளின் அரசுகளுடன் இந்த முக்கிய பிரச்சனை பற்றி பேச்சு வார்த்தை நடத்தி கடத்தல்கள்
தடை செய்வது அவசரம், அவசியம் ஆகும்.
புலிகள் பெருமை, வீரம், தோற்றம் பற்றிய அறிவியல் விழிப்புணர்வு மட்டும் அவற்றின் பாதுகாப்புக் கான தீர்வுகளை தந்து விடாது என்பதை அரசுத்துறைகள் உணரவேண்டும். ஒரு அரிய விலங்கின் அழிவு நிலை, அலட்சியத்தால் விரைவில் வரும்.! ,புலிகள் பற்றிய புள்ளிவிவரங்கள் நிச்சயம் அலுவலக பணிப் பதிவுகளாய் மட்டுமே இருக்கும் நிலை திருப்தி அளிக்கும். அரிய விலங்குகள் அமைதியாக அறியாமல் அழியும் நிலை தொடராமல் இருக்க நடவடிக்கை வேண்டும்!சிந்தித்து பார்ப்போம்!!!