thodar-17: vanathin idi muzhakkam - a.bakkiyam தொடர்-17: வனத்தின் இடி முழக்கம் -அ.பாக்கியம்thodar-17: vanathin idi muzhakkam - a.bakkiyam தொடர்-17: வனத்தின் இடி முழக்கம் -அ.பாக்கியம்

முகமது அலியின் அப்பீல் மனுமீது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்குப்பின் 1971 ஜூன் மாதம் 28ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த மனுவை 9 நீதிபதிகள் குழு விசாரித்தது. அதில் ஒருவர் ஏற்கனவே இந்த வழக்கை தொடர்ந்து நடத்தியவர் என்ற காரணத்தினால் நீதிபதிகள் குழுவிலிருந்து விலகிக் கொண்டார். உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “போருக்கு தார்மீக மற்றும் நெறிமுறை ஆட்சேபனைகள் மத ஆட்சேபனையைப் போலவே செல்லுபடியாகும்” என்று கூறி முகமது அலியின் தண்டனையை ரத்து செய்தனர். மேலும், முகமது அலி கீழ் நீதி மன்றத்தின் தண்டனையை எதிர்த்து மாவட்ட நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். யுத்தம் தன் மனசாட்சிக்கும், மதத்துக்கும் எதிரானது என்று கூறி, யுத்தத்தில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு வேண்டும் என்று கேட்டதை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், அதற்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று 8 நீதிபதிகளும் தங்களது தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தனர்.

மூன்றரை ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தடை நீங்கியதும், மீண்டும் வளையத்துக்கு வந்த அலி 1981 ம் ஆண்டு ஓய்வு பெறும் காலம் வரை 31 போட்டிகளில் பங்கேற்றார். அவற்றில் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வி அடைந்தார். தடை செய்யப்படுவதற்கு முன்னால் அவர் பங்கேற்ற 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தார். குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்த மூன்றாண்டு காலத்தில் அவர் அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கு எதிராக எடுத்த நிலைப்பாட்டின் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். அதன் தொடர்ச்சியாக குத்துச்சண்டையில் மறு பிரவேசம் செய்த பொழுது இயல்பாகவே பரபரப்பு பற்றிக் கொண்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்கு முன்பே 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ம்தேதி அட்லாண்டா நகர தடகள ஆணையத்தால் முகமது அலிக்கு போட்டியில் பங்கேற்பதற்கான உரிமம் வழங்கப்பட்டது. உள்ளூரில் செல்வாக்கு மிகுந்த பலர், ‘‘ஹவுஸ் ஆப் ஸ்போர்ட்ஸ்’’ என்ற அமைப்பை உருவாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தார்கள். ஜார்ஜியா பகுதியில் கருப்பின மக்களுக்கு இருந்த அரசியல் செல்வாக்கை இந்த போட்டி ஏற்பாட்டுக்கான நடவடிக்கைகள் காட்டுகின்றன. அதன்படி 1970ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி நடந்த போட்டியில் ஜெர்ரி குவாரி என்பவரை வீழ்த்தி முகமது அலி வெற்றி பெற்றார். அதே ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்கார் போனோ வேணா என்பவருடன் முகமது அலி களம் கண்டு வாகை சூடினார்.

இதன் பிறகு நடைபெற்ற போட்டிகளில் 3 போட்டிகளை முக்கியமான போட்டிகள் என்று வரலாறு வடித்து வைத்திருக்கிறது. நியுயார்க் நகரில் ஜோ பிரேசியருடன் நடந்த போட்டி. 1974 ஜயர் நாட்டில் ஜார்ஜ் போர்மனுடன் நடந்த போட்டி, 1975ல் பிலிப்பைன்ஸ் நடைபெற்ற மணிலா திரில்லர் என மூன்றையும் காவிய போட்டிகள் என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுகின்றனர். 1971ஆம் ஆண்டு மார்ச் 8ம் தேதி நியூயார்க் நகரத்தில் ஜோ பிரேசியர் என்பருடன் முகமது அலி மோதிய போட்டி ‘நூற்றாண்டின் சண்டை’ என்று அழைக்கப்படுகிறது. அது தோல்வியே கண்டிராத இரண்டு குத்துச் சண்டை வீரர்கள் பங்கேற்ற போட்டியாகும்.

அமெரிக்காவில் குத்துச்சண்டைப் போட்டியைக்காண ஆர்வம் இல்லாதவர்களையும் இந்தப் போட்டி கவர்ந்திழுத்தது. காரணம் முகமதுஅலி அமெரிக்காவின் யுத்த அழைப்பை எதிர்த்தவர். ஜோ பிரேசியரோ அதற்கு மாறாக அமெரிக்காவின் யுத்த ஈடுபாட்டை ஆதரித்து செயல்பட்டவர். இதன் காரணமாக போட்டியில் மிகுந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முகமது அலி 15 வது சுற்றில் தோல்வியைத் தழுவினார். 36 நாடுகளில் இந்தப் போட்டி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதுவரை இல்லாத அளவுக்கு இந்தப் போட்டியை அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மக்கள் பார்த்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்பிறகு அடுத்தடுத்து நடைபெற்ற 12 போட்டிகளில் முகமது அலி 11 போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் 1974 ம் ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி ஜோ பிரேசியருடன் இரண்டாவது முறையாக முகமது அலி மோதினார். ஆரம்பத்தில் இருந்தே ஆக்ரோஷமாக சண்டையிட்டு முகமது அலி வெற்றி பெற்றார். ‘‘மணிலா திரில்லர்’’ என்ற பெயரில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 1975 ஆம் அக்டோபர் 1 ஆம் தேதி அன்று ஜோ பிரேசியருக்கும் , முகமது அலிக்குமான முன்றாவது போட்டி நடைபெற்றது. ஏற்கனவே ஆளுக்கு ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால் இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவர் என்ற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.

களத்தில் இருவரும் கடுமையாக மோதிக் கொண்டனர். 14வது சுற்றில் முகமது அலியின் கை ஓங்கியது. ஜோ பிரேசியரை வீழ்த்தி முகமது அலி வாகை சூடினார். குத்துச்சண்டை வரலாற்றில் மிகச்சிறந்த அதே நேரத்தில் அதிகம் சேதாரத்தை உருவாக்கிய சண்டையாக இது இருந்தது என்று இந்தப் போட்டியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். பல லட்சம் பேர் பார்த்த இந்தப் போட்டிக்குப் பிறகு மணிலாவில் முகமது அலி பெரும் புகழ் பெற்றார்.

பிலிப்பைன்சில் அப்போதைய சர்வாதிகாரி மார்கோஸ் இந்தப் போட்டியை நடத்த பெரிதும் ஆர்வமாக இருந்தார். அதற்கு காரணம் இருந்தது. பொதுவாக ஆளுவோர், தங்களது ஆட்சியின் மீது உள்ள அதிருப்தியை திசை திருப்புவதற்கு பிரபலங்களை இது போன்று பயன்படுத்திக் கொள்வது ஒரு வழிமுறையாகவே வரலாற்றில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது, தனது ஆட்சி மீது இருந்த அதிருப்தியை திருப்புவதற்கான ஒரு வழியாகத்தான் மார்கோஸ் இந்தப் போட்டியைக் கையாண்டார். அதற்காக பெரு முயற்சி செய்து இந்தப் போட்டியை ‘‘மணிலா திரில்லர்’’ என்ற பெயர் சூட்டி பெரும் விளம்பரம் செய்து நடத்தினார்.

இந்தப் போட்டிக்கு முன்பாக முகமது அலிக்கும் ஜார்ஜ் போர்மன் என்பவருக்கும் இடையிலான போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இருவரும் பங்கேற்ற போட்டிக்கு ‘‘வனத்தின் இடி முழக்கம்’’ (the rumble in the jungle) என்று பெயர் சூட்டப்பட்டது. 1974 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி ஆப்பிரிக்காவின் ஜயர் (இப்போது காங்கோ) நாட்டில் கின்ஷாசா தலைநகரில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை மக்களிடம் கெட்ட பெயர் எடுத்த அந்த நாட்டின் ஜனாதிபதி மொபுடு செசே சேகோ நடத்தினார். இவர் துரோகத்தின் மறு வடிவம். கூட இருந்தே குழி பறித்து, கொலையும் செய்தவர்.

பேட்டரிஸ் லுமும்பா – காங்கோ விடுதலைப் போராளி. பெல்ஜிய படைகளுக்கு எதிராக தீவிரமாக போராடியவர். தேர்தல் மூலமாக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறியவர். கூடவே இருந்து சதி செய்து லுமும்பாவை படுகொலை செய்து, ஆட்சியைக் கைப்பற்றியவர் மொபுடு செசே சேகோ. இவருக்கு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரட்வெய்மர் ஆலோசகராக இருந்தார். மொபுடு தன் மீதான மக்களின் அதிருப்தியை திசை திருப்புவதற்காகவே ‘‘வனத்தின் இடி முழக்கம்’’ என்ற போட்டியை செலவு செய்து நடத்தினார்.

போட்டிக்கு முன்னதாக அந்த நாட்டில் பயணம் செய்த இடங்களில் எல்லாம் முகமது அலிக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தான் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கன் என்று சொல்லிக் கொள்வதில் அவர் பெருமை அடைந்தார்.

போட்டிக்கு முன்னதாக எதிர் போட்டியாளரை உளரீதியில் பலவீனமடைய செய்வதும் தன் நம்பிக்கையை திடப்படுத்திக் கொள்ளும் செயலை முகமது அலி செய்தார். எதிர் போட்டியாளர் ஜார்ஜ் எனக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சகட்டுமேனிக்கு அவரை சாடினார்.

‘‘ஜார்ஜ் நினைக்கிறான் வெல்வேன் என்று

எனக்குத் தெரியும் அவனால் முடியாது

நான் முதலைகளைப் பிடித்து

சிலுவையில் அறையக்கூடியவன்

திமிங்கலத்துடன் மோதி வீழ்த்துவேன்

கடந்த வாரம் நான் ஒரு பாறையை

படுகொலை செய்தேன்

ஒரு கல்லை காயப்படுத்தினேன்

செங்கல்லை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன்

நான் என்றால் நிரந்தரமாக காயப்படுத்துபவன்

என்று அறைகூவல் விட்டு ஜார்ஜ் போர்மனை பயமுறுத்தினார்.

போட்டியை காண்பதற்கு 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடினார்கள். முதல் சுற்றில் இருந்தே போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. எட்டாவது சுற்றில் முகமது அலி, ஜார்ஜ் போர்மனை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். இந்தப் போட்டியில் தான் ‘‘ரோப் ஏ டோப்’’ ( Rope-a-dope) என்ற புதிய உத்தியை முகமது அலி அறிமுகப்படுத்தினார். எதிரி தன்னை தாக்கும்போது, அதிலிருந்து தப்பித்துக்கொண்டே எதிரியை களைப்படைய செய்வது. அதன்பிறகு அதிரடி தாக்குதல் என்ற உத்தியை கையாண்டார். அந்த உத்திக்குத்தான் ‘‘ரோப்-ஏ-டோப்’’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் போட்டியில் வழக்கம் போலவே முகமது அலியின் வேகம் மற்றும் புதிய உத்திக்காக அவருக்கு பேரும் புகழும் கிடைத்தது.

குத்துச்சண்டையில் முகமது அலியின் பாணி வழக்கத்திற்கு மாறாக இருந்தது. ‘‘ஒரு பட்டாம்பூச்சியை போல காற்றில் மிதந்து தேனீயை போல் கொட்டு’’ என்ற அவரது வார்த்தைகள் அடிக்கடி உருவகப்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் தனது கை வேகத்தாலும் அபாரமான அனிச்சை செயல்களாலும், தொடர்ந்து நடன பாணியிலான அசைவுகளை ஏற்படுத்திக் கொண்டும் எதிரிகளை தாக்கும் முறைகளை கையாண்டார்.

முகமது அலியின் மிகப்பெரிய தந்திரங்களில் ஒன்று குத்துக்களில் இருந்து நேராக எதிரியை பின்னோக்கி இழுத்து சோர்வடையச் செய்வது. அவர், ஒரு வகையான சென்டர் ரிங் ஜிங் நடனம் ஆடுவதன் மூலம் தனது இயக்கத்தை வெளிப்படுத்துவார். இதை “அலி ஷிப்ட்” என்று அழைத்தார்கள். இதுகுறித்து பிரபல குத்துச்சண்டை வீரரான பிலாயிட் பேட்டர்சன் கூறும் பொழுது, ‘‘முகமது அலியின் நகரும் இலக்கை தாக்குவது மிகவும் கடினம்’’ என்றார். தனக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கிய பிறகு 1974 ஆம் ஆண்டுகளில் அவர், குத்துச்சண்டை களத்தில், வேகத்தை குறைத்து ரோப்-ஏ-டோப் நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். முகமது அலியின் குத்துக்கள் தோராயமாக 1000 பவுண்டு சக்தி கொண்டது..

1981ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி தனது 39 ஆவது வயதில் குத்துச்சண்டை போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதை முகமது அலி அறிவித்தார். அதன் பிறகு நூற்றுக்கணக்கான காட்சிப் போட்டிகளில் அவர் கலந்து கொண்டார். தொழில் முறை குத்துச்சண்டை போட்டியில் 37 போட்டிகளில் நாக்அவுட் முறையில் அவர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 1984ம் ஆண்டு அவர் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு முடக்கப்பட்டார். ஆனாலும் முகமது அலியின் குத்துச்சண்டை வெற்றிகளும், மதமாற்றம் மற்றும் பெயர் மாற்றம் செயல்களும், கருப்பின மக்களின் விடுதலைக்காக அவரின் போராட்டமும்,, அமெரிக்காவின் யுத்த வெறிக்கு எதிராக அவர் களமாடியதும் அமெரிக்க மக்களிடமும் உலக மக்களிடமும் ஆழப் பதிந்து விட்டது. எத்தனை முயற்சி செய்தாலும் அதை அழிக்க முடியாது என்று ஆளும் வர்க்கம் உணர்ந்து கொண்டது. வரலாற்றில் புகழ்பெற்ற கலகக்காரனை இணைத்து செயல்பட வேண்டிய தேவை அமெரிக்க அரசியலுக்கு தேவைப்பட்டது. முகமது அலி அமெரிக்க அரசுடன் சிலவற்றில் இணைந்தும் சிலவற்றில் வேறுபட்டும் தன் பயணத்தை தொடர்ந்தார். ஆனாலும், இனவெறிக்கு எதிரான கொள்கையில் அவர் உறுதியாக இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *