முத்துலிங்கத்தின் காலப்பிழை – மு இராமனாதன்காலம் ஒரு கயிற்றரவு? – இப்படிக் கேட்டவர் புதுமைப்பித்தன். கயிறு அரவாகவும் அரவு கயிறாகவும் காட்சியளிக்கிற தோற்றப்பிழைதான் கயிற்றரவு. “இன்று – நேற்று – நாளை என்பது எல்லாம் நம்மை ஓர் ஆதார எண்ணாக வைத்துக்கொண்டு கட்டி வைத்துப் பேசிக் கொள்ளும் சவுகரியக் கற்பனைதானே.” – உச்சிப் போதில் பனை மூட்டினடியில் குந்தி உட்கார்ந்திருக்கும் பரமசிவம் பிள்ளை இப்படி நினைத்துக்கொள்வார். ‘கயிற்றரவு’ (1948) கதை இப்படித்தான் தொடங்கும். காலமும் நேரமும் அளவவைகளும் மதிப்பும் இன்னபிறவும் மனிதன் உண்டாக்கியவை. புவியியலும் அறிவியலும் அதற்கேற்ப உருவாக்கப்பட்டவை. ‘கயிற்றரவு’ தமிழ்ச் சூழலில் மிகுதியும் வேதாந்தமாகவும் மாயாவாதமாகவுமே விரித்துப் பொருள் கூறப்பட்டது. கதை தொட்டுச் செல்லும் புவியியலையும் அறிவியலையும் யாரும் பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. புதுமைப்பித்தனைப் போலவே இந்தக் காலப் பிழையைக் கதையாடல் ஆக்கியவர் அ.முத்துலிங்கம். இரண்டாமவரது கதைகள் அயல் தேசங்களில் பயணிப்பதால், அவை இந்தக் காலமும் நேரமும் நாடுகளுக்கிடையில் உண்டாக்கி வைத்திருக்கும் கால வித்தியாசத்தையும், அது எளிய மனிதர்களுக்கு உண்டாக்கும் இன்னல்களையும் பேசுகிறது.

முத்துலிங்கத்தின் எழுத்துகள் புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களையும், சிறப்புகளையும் ஒருங்கே சொல்லிச் செல்பவை. புலம்பெயர் மண்ணில்
பிடுங்கி நடப்படும் நாற்றுகளில் பலவும் வேர் பிடிப்பதில் உள்ள சவால்களை விவரிப்பவை. இந்தச் சவால்களில் உருக்கும் குளிர் இருக்கும். கையிருப்பில் குறைவாக உள்ள காசு பேசப்படும். பற்றாக்குறை ஆங்கிலம் பாடாய்ப்படுத்தும். நிறவேற்றுமையும் நாடற்றுப் போவதன் துயரமும் இடம்பெறும். இவற்றுடன் காற்றில் வரையப்பட்டிருக்கும் தீர்க்கக்கோடுகளும் கதாபாத்திரங்களாக மாறும். அவை உருவாக்கும் கால வித்தியாசமும் கதைகளின் பேசுபொருளாகும்.

அங்கே இப்ப என்ன நேரம்? - Angae Ippo Enna Neram?: கட்டுரைகள் (Tamil Edition) eBook: அ.முத்துலிங்கம், A.Muthulingam: Amazon.in: Kindle Store

முத்துலிங்கத்தின் புகழ் பெற்ற கட்டுரை ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ (“அங்கே இப்ப என்ன நேரம்?” தமிழினி, 2004). முத்துலிங்கம் சூடானில் பணியாற்றும்போது உடன் பணியாற்றியவர் அலி. வங்கதேசத்துக்காரர். அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் போவார். அங்கிருந்து தொலைபேசியில் அழைப்பார். முதல் கேள்வியாக ‘அங்கே என்ன நேரம்’ என்று விசாரிப்பார். இரவு இரண்டு மணிக்கு அழைத்துவிட்டு மிகச் சாதாரணமாக ‘அப்படியா, மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு உரையாடலைத் தொடர்வார். ஒரு முறை முத்துலிங்கம் சொல்கிறார்: “அலி, சூரியன் கிழக்கே உதிக்கிறது, ஆகவே நீங்கள் கிழக்கில் இருக்கும்போது உங்களுக்கு சூரியன் முதலில் உதயமாகிவிடும். அப்போது மேற்கில் இருக்கும் எனக்கு இன்னும் விடியாமல் நடுச்சாமமாக இருக்கும். ஆகையால் உங்கள் நேரத்தில் இருந்து சில மணித்தியாலங்களைக் கழித்த பிறகே என் நேரம் வரும்.”

அலி படித்தவர்தான். ஆனால் அவருக்கு இந்த நேர வித்தியாசம் பிடிபடுவதேயில்லை. மாறாக ‘அமெரிக்கக்காரி’ (“அமெரிக்கக்காரி”, காலச்சுவடு, 2009) கதையில் வரும் அம்மா படிக்காதவர். அமெரிக்காவில் படிக்கும் மதியுடன் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பட்டணத்திலிருந்து அழைத்து மூன்று நிமிடம் பேசுவார். சரியாக மாலை ஆறு மணிக்கு அந்த அழைப்பு வரும். அம்மா தன் கஷ்டங்களை ஒருபோதும் மதியிடம் சொல்லமாட்டார். கிராமத்தில் ராணுவம் ஆட்களைக் கொன்று குவித்திருக்கும். அம்மா மூச்சுவிடமாட்டார். அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தூர இடைவெளியும் கால இடைவெளியும் அவரது துயரங்களை மகளுக்குக் கடத்திவிடாமல் காப்பாற்றிவிடும் என்று அவர் நினைத்திருப்பார்.

நாடுகளுக்கு இடையிலான கால வித்தியாசம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

உலக உருண்டையில் செங்குத்தாக வரையப்பட்டவை தீர்க்கக்கோடுகள். ஒரு வட்டத்திற்கு 360 பாகை. ஒவ்வொரு பாகைக்கும் உலக உருண்டையில் ஒரு தீர்க்கக்கோடு. ஒரு கோட்டைக் கடக்க சூரிய ஒளி எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் நான்கு நிமிடங்கள். உலக உருண்டையின் மையத்தில் வரையப்பட்டிருக்கும் 0° கோட்டிற்கு , கிரின்விச் மையக்கோடு என்று பெயர். அதன் நேர் மறுபுறம் இருப்பது 180° கோடு. இரண்டு கோடுகளுக்கும் இடையிலலான வித்தியாசம் 720 நிமிடங்கள், அதாவது 12 மணி நேரம். கிரின்விச் கோட்டில் நள்ளிரவாக இருக்கும்போது 180° கோட்டில் நண்பகலாக இருக்கும். உலக உருண்டை , மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுகிறது. அதனால் கிரின்விச் தீர்க்கக்கோட்டிலிருந்து மேற்கே செல்லச் செல்ல நேரம் குறையும். கிழக்கே செல்ல நேரம் அதிகரிக்கும். இப்போது கிரின்விச்சில் ஏப்ரல் 15 நள்ளிரவு என்று வைத்துக் கொள்வோம். 180° தீர்க்கக்கோட்டை நோக்கி கிழக்கு மார்க்கமாகப் போனால் அங்கே ஏப்ரல்15 நண்பகலாக இருக்கும். மேற்கு வழியாகப் போனால் நேரம் குறையும், ஏப்ரல் 14 நண்பகலாக இருக்கும். நேரம் ஒன்றுதான், ஆனால் நாள் மாறுகிறது. உலக உருண்டை இந்தக் காலக் கணக்கைப் பற்றிக் கவலையில்லாமல்தான் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆனால் மனிதனுக்குக் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். ஆகவே 180° கோட்டிற்கு அவன் பெயர் சூட்டினான். சர்வதேச தேதிக் கோடு. அந்தக் கோட்டைக் கிழக்கு வழியாகக் கடந்தால் நாள் கணக்கில் ஒன்று குறையும், மேற்கு வழியாகத் தாண்டினால் ஒரு நாள் கூடும். இப்படி ஒரு விதி எழுதிக்கொண்டான்.

அமெரிக்கக்காரி

இதை மையமாக வைத்து எழுதப்பட்ட கதைதான் முத்துலிங்கத்தின் ‘மயானப் பராமரிப்பளர்’ (“அமெரிக்கக்காரி”, காலச்சுவடு, 2009) . ஆனால் இந்தக் கதையில் மேலே சொன்ன வியாக்கியானம் எதுவும் இராது. எல்லோரும் பள்ளியில் புவியியல் பாடத்தில் படித்திருப்போம்தானே? ஆகவே அதைத் தொட்டுக்காட்டிவிட்டு கதைக்குள் போய்விடுவார். அது வாசகனைக் கண்ணியப்படுத்துவது.

கதைசொல்லி ஒரு வெள்ளிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து விமானத்தில் புறப்படுகிறான். அடுத்த நாள் சிட்னி வந்து சேர்கிறான். அடுத்த நாள் சனிக்கிழமையாகத்தானே இருக்க வேண்டும்? இல்லை. அது ஞாயிற்றுக்கிழமை. ஏனெனில் வழியில் விமானம் சர்வதேச தேதிக் கோட்டைக் கடக்கிறது. அப்போது ஒரு நாள் கூடிவிடுகிறது. இது கதைசொல்லிக்குத் தெரிகிறது. உடன் பயணித்த டிலனின் அப்பாவுக்கும் தெரிகிறது. ஆனால் டிலனுக்குத் தெரியவில்லை. ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்கு இது எப்படித் தெரிய முடியும்? லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் அவளின் அப்பாவுக்கும் சிட்னியில் வசிக்கும் அம்மாவுக்கும் இடையில் மணமுறிவு ஏற்பட்டுவிட்டது. ஒரு வருட வழக்கின் முடிவில் குழந்தை அம்மாவோடுதான் இருக்கவேண்டும் என்று தீர்ப்பாகிவிடுகிறது. அப்பா குழந்தையை அழைத்துக்கொண்டு வருகிறார். அப்பாவிடம் அளப்பரிய பாசத்தோடு இருக்கிறது குழந்தை. வெள்ளிக்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸில் புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை சிட்னி வந்து சேரும் விமானத்தில் பயணிப்பதால் சனிக்கிழமை முழுதும் அப்பாவோடு இருக்கலாம் என்று அந்தக் குழந்தை நினைத்திருக்கலாம். சர்வதேச தேதிக் கோடு எனும் பெயரில் பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிற சதி அந்தக் குழந்தைக்குப் புரியவில்லை. அந்தச் சனிக்கிழமை என்றென்றைக்குமாக அவளுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. அந்தக் குழந்தை புறங்கையால் துடைக்கத் துடைக்க கண்களில் நீர் பெருகிக் கொண்டே வருகிறது.

அந்தக் குழந்தையைப் போலவே இந்த நேர வித்தியாசத்தில் வஞ்சிக்கப்பட்ட இன்னொரு பெரியவரின் கதைதான் ‘கடன்’ (“மகாராஜாவின் ரயில் வண்டி”, காலச்சுவடு, 2001). அமெரிக்க அரசாங்கம் அவரிடமிருந்து ஒரு மணி நேரம் கடனாக வாங்குகிறது. ஆனால் திருப்பிச் செலுத்துவதில்லை. பெரியவர் அமெரிக்காவுக்கு வேண்டி விரும்பி வந்தவரில்லை. மனைவியைப் பறிகொடுத்தவர். மகனுடைய பராமரிப்பில் இருக்கிறார். அமெரிக்காவின் குளிரோடும் நியதிகளோடும் பொருந்திப்போகச் சிரமப்படுகிறார். அப்போதுதான் அவருக்குப் பச்சை அட்டையைப் பற்றித் தெரிகிறது. உதவிப் பணம் கிடைக்கும். தனியாக வாழலாம். சிறுமைகள் இல்லை. மருத்துவச் செலவை அரசாங்கம் ஏற்கும். இவர் விண்ணப்பிக்கிறார். நேர்முகத்திற்கு அழைப்பு வருகிறது. ஐந்து நிமிடம் முன்னதாகவே போய்விடுகிறார். ஆனால் இவர் தாமதமாக வந்ததாகச் சொல்கிறாள் வரவேற்புப் பெண்மணி. முதல் நாள் இரவு இவருக்கு எதிராக ஒரு சதி நடந்துவிட்டது. இது இவருக்குத் தெரியாது.

“…அமெரிக்காவில் பனிக்காலம் தொடங்கும்போது ஒக்டோபரில் வரும் நாலாவது ஞாயிற்றுக்கிழமை நேரத்தை ஒரு மணித்தியாலம் பின்னுக்குத் தள்ளி வைத்துவிடுவார்கள். மறுபடியும் ஏப்ரல் மாதத்தில் வரும் முதல் ஞாயிறு அதிகாலை இரண்டு மணிக்கு ஒரு மணித்தியாலம் முன்னுக்குத் தள்ளி வைத்துவிடுவார்கள். இதுக்கு அது சரியாகிவிடும்….இது ஏப்ரல் மாதத்து முதலாவது திங்கள்கிழமை. கடந்த இரவு இவரைக் கேட்காமல் இவரிடமிருந்து ஒரு மணி நேரம் திருடிவிட்டார்கள். ….அமெரிக்கா பெரிய கடனாளியாகிவிட்டது. இவரிடமிருந்து எடுத்த ஒரு மணித்தியாலத்தை அது திருப்பிக் கொடுக்கவே இல்லை. அதற்கு சந்தர்ப்பமும் வரவில்லை. ஏனென்றால் அடுத்த ஒக்டோபர் மாதம் நாலாவது ஞாயிற்றுக்கிழமை வருமுன்னரேயே இவர் காலமாகி விட்டார்….”

புலம்பெயர் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் உள் நுழையும் இந்தக் கால வித்தியாசம் முத்துலிங்கத்தின் கதைகளில் இடம்பெறும் எளிய மனிதர்களை அவதிக்கு உள்ளாக்குகிறது. அதைப் புரிந்துகொண்டவர்கள் தமக்குத்தாமே சமாதானங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். ‘மயானப் பராமரிப்பாளர்’ கதையில் வரும் அப்பா கதைசொல்லியிடம் இப்படிச் சொல்வார்: “நான் மகளை நினைத்து கவலைப்படப் போவதில்லை. தினம் சூரியனை நான் [லாஸ் ஏஞ்சல்ஸில் ] பார்க்கும் முன்பு என் மகள் அதை சிட்னியில் பார்த்துவிடுவாள். எந்த சர்வதேச தேதிக் கோட்டினாலும் எங்களைப் பிரிக்கமுடியாது.”

இதே மாதிரியான ஒப்பீடு ‘அங்கே இப்ப என்ன நேரம்?’ கட்டுரையிலும் வரும். அலி சூடானிலிருந்து மாற்றலாகி டோக்கியோ போய்விடுவார். அலிக்கு ஒரு மகளுண்டு. சிறுமி நுஸ்ரத். ஒரு நாள் அலியிடமிருந்து தொலைபேசி வருகிறது. அந்தக் குழந்தை இறந்து போய்விட்டாள். தொலைபேசியை வைத்த பிறகும் அதை அமர்த்திப் பிடித்தபடியே இருக்கிறார் முத்துலிங்கம். கிழக்கே சூரியன் முன்பே உதித்துவிடுகிற டோக்கியோவில் நுஸ்ரத் தனது கடைசி தினத்தைத் தொடங்கும்போது, தான் மேற்கே சூடானில் மற்றுமொரு மாலைப் பொழுதைத் தொடங்கியதை நினைத்துக் கொள்கிறார் முத்துலிங்கம். அதற்குப் பிறகு நண்பர்கள் பேசிக் கொள்வதில்லை. முத்துலிங்கம் சொல்கிறார்: “அதன் பிறகு, ஒரு தேசத்தையும் தீண்டாத சர்வதேச தேதிக்கோடு இடையிலே விழுந்ததுபோல எங்களுக்குள் பெரும் மௌனம் இறங்கிவிட்டது. ”

புதுமைப்பித்தனின் 'காசு'; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம் | Perumal Murugan

இந்த சர்வதேச தேதிக் கோட்டைப் பற்றிப் பரவசத்துடன் பேசுவார் ‘மயானப் பராமரிப்பாளர்’ கதையில் வரும் கதை சொல்லி. அதற்குக் குழந்தையின் அப்பா இப்படிப் பதில் சொல்வார்: “இது எல்லாம் மனித மூளையில் உதித்த கற்பனைதான். கற்பனைக் கோட்டை நாங்கள் எங்கேயும் கீறி வைக்கலாம். இன்னும் ஒரு வாரத்தில் புதுவருடம் பிறக்கிறது, அதை உலகமே கொண்டாடும். புதுவருட நாள்கூட ஒரு கற்பனைதானே”.

இதையேதான் பரமசிவம் பிள்ளையும் சொல்வார், வேறு வார்த்தைகளில். ‘கயிற்றரவு’ கதையில் அவரது சிந்தனை ஓட்டம் இப்படி இருக்கும்: “ஞாயிற்றுக்கிழமை மடிந்து திங்கட்கிழமை பிறக்கிறது எந்த வினாடிக்குள் என்று யாருக்காவது நிர்த்தாரணமாகச் சொல்ல முடியுமா? நாமாக முடுக்கிவிட்ட கெடிகாரம் சொல்லுவதும், நாம் சொல்லுவதும் ஒன்றுதான். ஞாயிற்றுக்கிழமையாகவே இருந்து கொண்டு வந்தது திங்கட்கிழமை என்று நாம் சொல்லும்படியாகிவிட்ட ஒரு தன்மை போல, நாகரிகம் அங்கே உட்கார்ந்து அசைபோட்டுக் கொண்டிருப்பது போலத் தென்பட்டதும் ஒரு தோற்றந்தான்.”

இந்தத் தோற்றத்தை நாம்தான் ஊதிப் பெரிதாக்குகிறோம் என்று முத்துலிங்கமும் சொல்கிறார். அதைத் தனது சர்வதேச அனுபவத்தில் தோய்த்துச் சொல்கிறார். அப்போது மனிதன் உருவாக்கிய கற்பனைக்கோடுகளின் அபத்தம் புலனாகிறது. ஒரு குழந்தையின் எதிர்பார்ப்பின் நடுவில் இறங்குகிறது சர்வதேச தேதிக்கோடு. ஒரு பெரியவரின் எதிர்ப்பார்ப்பைச் சிதைக்கிறது செயற்கையாகச் சுருக்கவும் நீட்டிக்கவும்பட்ட பகல் பொழுதுகள். அவர்களுக்கு இந்தத் தகிடுதித்தங்கள் புரிவதில்லை. அலி போன்ற எளிய மனிதர்களுக்கும் புரிவதில்லை. ஆனால் எல்லோரும் இந்த அரங்கத்திற்குள்தான் வட்டாட வேண்டியிருக்கிறது.

‘தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது’ என்ற புகழ் பெற்ற வாசகத்தைச் சொன்னவர் பேராசிரியர் சிவத்தம்பி. அவர் சொல்லும் தொடர்ச்சி மொழியை மட்டுமல்ல, இலக்கியத்தையும் குறிக்கிறது. சிறுகதைகளையும் குறிக்கிறது. அப்படித்தான் புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு’ நீட்சி பெறுகிறது. அது முத்துலிங்கத்திடமிருந்து வெளியாகிறது. அப்போது அது ‘மயானப் பராமரிப்பளர்’, ‘கடன்’, ‘அங்கே இப்ப என்ன நேரம்’, ‘அமெரிக்கக்காரி’ என்று புதிய புதிய பெயர்களைப் பெறுகிறது.

(மு இராமனாதன், எழுத்தாளர், பொறியாளர். தொடர்புக்கு: [email protected])

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.201 – 05.05.2021 வரை மட்டும்)