Ukraine War: Conflict between capitalist countries Article in tamil translated by S. Veeramani உக்ரேன் போர்: முதலாளித்துவ நாடுகளுக்கு இடையேயான மோதல் - தமிழில் : ச.வீரமணி

“கொடூரமான எதேச்சதிகாரி புடின்” மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி அமெரிக்கா தலைமையிலான நேட்டோ மேற்கொண்ட முயற்சிகள் பாசாங்குத் தனத்தையும் இரட்டை வேடத்தையும் வெளிப்படுத்துகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ஜான்சன் ஆகியோர் ரஷ்யாவுக்கு எதிராக வெளியிட்டுள்ள அறிவிப்புகளுக்குப் பின்னர், ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போர் மற்றும் பனிப் போர் முடிவடைந்தபின், முதன்முறையாக அமைதி நிலைமை ஆட்டம் கண்டிருக்கிறது. 1991இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட பின்னர், ஐரோப்பாவில் நடைபெற்ற முதல் யுத்தம் என்பது நேட்டோ படையினர் செர்பியா மற்றும் யூகோஸ்லேவியாவில் 1999இல் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தம்தான் என்கிற உண்மையை அவர்கள் முழுமையாக மூடி மறைக்கிறார்கள். யூகோஸ்லேவியாவைத் துண்டாடுவதற்காக பெல்கிரேடிலும் மற்றும் பல இடங்களிலும் 78 நாட்கள் வான்வழித் தாக்குதல்களை நேட்டோ படையினர் மேற்கொண்டிருந்தார்கள்.

நேட்டோ அரங்கேற்றிய பயங்கரங்கள்..
உலக அளவிலான தனது மேலாதிக்கத்திற்கான ஒரு கருவியாக, நேட்டோவை அமெரிக்கா பயன்படுத்தி வருவது தெள்ளத்தெளிவாகி இருக்கிறது. அமெ ரிக்காவும், பிரிட்டன் உட்பட அதன் கூட்டணி நாடுகளும், இராக்கில் ஆட்சி செய்த சதாம் உசேன் மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை வைத்திருக்கிறார் எனப் பொய்யாகக் குற்றம்சாட்டி, இராக்கிற்குள் புகுந்து, அதனை அழித்து, பல லட்சக்கணக்கான இராக்கியர்களைக் கொன்று குவித்தது. அதன் பின்னர், நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தானத்திற்குள் புகுந்து, சுமார் 20 ஆண்டு காலம் அதனை ஆக்கிரமித்திருந்தனர். நேட்டோ கூட்டாளிகள் இறையாண்மை மிக்க நாடுகளாக இருந்த லிபியா மற்றும் சிரியாவையும் தாக்கினர். அவற்றின் நாசகர விளைவுகளிலிருந்து அந்த நாடுகள் இன்னமும் மீள முடியவில்லை. எனவே, உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமிப்பு செய்வதாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூப்பாடு போடுவதை உலகில் உள்ள நாடுகளில் பல, குறிப்பாக ஆசியா, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் அநேக மாக ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து பல்வேறுபட்ட குழப்பமான செய்திகள் வெளிந்திருக்கின்றன. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிச அமைப்பு முறை ஒழிக்கப்பட்ட பின்னர் அங்கே ஏற்பட்ட நிலைமைகளைப் பார்க்காமல் இதனைப் புரிந்துகொள்ள முடியாது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு அங்கே இரண்டு விதமான முரண்பாடுகள் முட்டி மோதின. ஒரு பக்கத்தில் அங்கே இருந்துவந்த பல்வேறு தேசிய இனங்களின் பிற்போக்கு சக்திகளது கூக்குரல்களும், மறுபக்கத்தில் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய கூட்டணி நாடுகள் ஒட்டுமொத்த ஐரோப்பாவையே விழுங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளும் அங்கே முட்டி மோதின; மோதிக்கொண்டிருக்கின்றன.

ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தை நோக்கி…
1991இல் பனிப்போர் முடிந்த ஒருசில மாதங்களிலேயே, அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்கள், அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை உலகின் ஒரே துருவமாக நிறுவிட வேண்டும் என்று தீர்மானித்தன. அமெரிக்க ராணுவக் கொள்கை வழிகாட்டு தல்கள், “நம் கொள்கையானது எதிர்காலத்தில் சாத்தியமான எந்தவொரு உலகளாவியப் போட்டியும் தோன்று வதைத் தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று கூறின. உலகை ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏகாதிபத்தியத்தின் ராணுவ சூழ்ச்சி நடவடிக்கைக ளின் புவி அரசியல் கோட்பாடு இந்தத் திசைவழியில் தான் அமைந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இதற்கான முதல் தேவை என்பது ரஷ்யாவைப் பலவீனப் படுத்துவதே. அப்போதுதான் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ரஷ்யாவின் செல்வாக்கை வலுவிழக்கச் செய்திட முடியும். இதற்கு நேட்டோவை ஐரோப்பாவின் கிழக்கே விரிவாக்கம் செய்திட வேண்டும். பின்னர், தங்கள் கவனத்தை சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் திருப்பிட வேண்டும். 1990இல், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி கோர்ப்பசேவிடம், இரண்டு ஜெர்மனிகளும் ஒன்றாக இணைவதன் காரணமாக, நேட்டோ விரிவாக்கம் மேலும் கிழக்கே நீட்டிக்கப்படாது என்ற உறுதி மொழியை அளித்தார். ஆனால் இந்த உறுதிமொழி வெறும் உதட்டளவில் மட்டுமேயானதாகும். அதன் பின்னர் நேட்டோ படையினர் ஐந்து முறை படை யெடுத்து வந்து, கிழக்கு ஐரோப்பா முழுவதுமே, அதாவது முன்பு சோவியத் ஒன்றியத்தின் அங்கங்களாக இருந்த பால்டிக் நாடுகள் அனைத்தையுமே தாங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டன.

இதயத்திற்கு நேராக கூர்வாள்..
2008இல் நேட்டோ, ஜார்ஜியாவையும், உக்ரைனையும் தன்னுடைய உறுப்பு நாடுகளாக ஏற்றுக் கொள்ள முன்வந்தது. இது நடந்துவிட்டால், ரஷ்யா சுற்றி வளைக்கப்பட்டது போலத்தான். உக்ரைன், நேட்டோவின் ஓர் அங்கமாகிறது என்றால் அதன் பொருள் ரஷ்யாவின் இதயத்திற்கு எதிரே கூர்வாளை எப்போதும் நீட்டிக்கொண்டிருப்பது என்பதாகும். 2014இல் உக்ரைனில் ஜனாதிபதி விக்டர் யானுகோ விச் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக உக்ரைனில் ஒரு கலகம் நடத்தப்பட்டது. இவர் ரஷ்யாவுடன் உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கூறியதற்கு எதிராகவே நவீன நாஜிக்களால் ‘மைதான் புரட்சி’ எனும் அந்தக் கலவரச்சதி (Maidan revolution coup) மேற்கொள்ளப்பட்டது. 2015இலிருந்து அமெரிக்கா, உக்ரைனிய துருப்புக்களுக்கு பயிற்சி அளித்து வந்தது. இதற்காக அது பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் அளித்தது. ரஷ்யாவுடன் உக்ரைன் மோதல் போக்கைக் கடைப்பிடித்திட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இதையெல்லாம் செய்தது. இவ்வாறு அமெரிக்காவினால் ஊட்டி வளர்க்கப்பட்ட வலதுசாரி ஆட்சியாளர்கள், உக்ரைனில் டான்பாஸ் பிராந்தியத்தில் மிகப் பெரிய அளவில் வாழ்ந்துவந்த ரஷ்ய இனமக்களுக்கு விரோதமான முறையில் செயல்பட்டு வந்தனர். கிழக்கு உக்ரைனில் தொடங்கிய உள்நாட்டு யுத்தத்திற்கு, மின்ஸ்க் ஒப்பந்தத்திற்குப் பின்னர் தற்காலிகமாக தீர்வு காணப்பட்டது.

உக்ரைன் புதிய ஆட்சியாளர்கள் செய்தது என்ன?
உக்ரைனின் புதிய ஆட்சியாளர்கள் நேட்டோவில் சேர்வதை அரசமைப்புச் சட்டத்தில் பதிவு செய்தனர். வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், இன ரீதியாகவும் ரஷ்யாவுடன் உறவுகளை வைத்திருந்த உக்ரைன், முற்றிலும் ரஷ்யாவுக்கு எதிராக நிலை எடுத்தது, ரஷ்யாவை மிகவும் கவலைக்கு உள்ளாக்கியது. இது, கிரீமியாவில் உடனடியாக வெளிப்பட்டது. உக்ரைனின் ஓர் அங்கமாக இருந்த கிரீமியாவில் ரஷ்யர்கள்தான் அதிகமான அளவில் வசித்து வந்தார்கள். இங்கே 2014இல் நடைபெற்ற கருத்துக்கணிப்பில் அவர்கள் ரஷ்யாவுடன் சேர்வது எனத் தீர்மானித்தார்கள். ரஷ்யாவின் கருங்கடல் கப்பற் படை (Black Sea naval fleet) கிரீமியாவின் செவஸ்டபோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் துறைமுகம் ரஷ்யாவுக்காக இருந்துவருகிற ஒரேயொரு மிதமான வெப்பத் துறைமுகமாகும். ரஷ்யாவைச் சுற்றியுள்ள நாடுகள் நேட்டோவில் சேர்ந்தபின்பு, அமெரிக்காவும், நேட்டோவும் தங்கள் துருப்புகளையும், ஏவுகணைகளையும் அந்த நாடுக ளில் நிலைநிறுத்தியதன் காரணமாக, ரஷ்யாவில் பதற்ற நிலைமைகள் அதிகரித்தன. ரஷ்யா, உக்ரைனின் எல்லைகளில் தங்கள் துருப்புகளுடன் அணிவகுத்தது. உக்ரைன், நேட்டோவில் இணையக் கூடாது என்றும், ஆபத்தை விளைவித்திடும் ஏவுகணைகளை நிலை நிறுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திட முன்வர வேண்டும் என்றும், ஐரோப்பாவில் புதிய பாதுகாப்பு கட்டமைப்புக்கான பேச்சுவார்த்தைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் ரஷ்யா கோரியது. அமெரிக்காவும், நேட்டோவும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. உக்ரைன் இறையாண்மையுடன் கூடிய நாடு என்றும், நேட்டோவில் இணைவதா வேண்டாமா என முடிவு செய்வதற்கான உரிமை அந்த நாட்டுக்கு உண்டு என்றும் கூறின. இதனைத் தொடர்ந்து உக்ரைன்மீது ஏற்பட்டுள்ள ராணுவத் தாக்குதல் ஐரோப்பாவின் எதிர்கால அமைதி மீதும், பொருளாதார விவகாரங்கள் மீதும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தப் போகின்றன.

விரிவான மோதலின் பிரதிபலிப்பு..
உக்ரைன் யுத்தம், அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷ்யாவிற்கும் இடையே, ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ நாடுகளின் மத்தியில் ஏற்பட்டுள்ள விரிவான மோதலைப் பிரதிபலிக்கிறது. சோவியத் யூனியன் தகர்ந்தபின்பு ரஷ்யா ஒரு தனியதிகாரத் தலைவரின் கீழ் ஒரு முதலாளித்துவ நாடாக மாறியிருக்கிறது. நாட்டின் முக்கியமான பாதுகாப்பு நலன்களுக்காக நடவடிக்கைகள் எடுப்பது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தன்னுடைய எல்லையைத் தாண்டிச் சென்று, ஓர் இறையாண்மை மிக்க நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் தொடுப்பது அனுமதிக்க முடியாததாகும். இதனை எவ்விதமான சந்தேகத்திற்கிடமின்றி எதிர்த்திட வேண்டும். இந்த யுத்தமானது ஏற்கனவே மிகப் பெரிய அளவில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புடினின் ‘தேசிய வாதம்’ ‘மகாரஷ்யா’ எனும் பேரினவாதம் ஆகும். இதனை அவர் போல்ஷ்விக்குகளைக் கண்டித்திருப்பதிலிருந்தும், ‘லெனினின் உக்ரைனை’ உருவாக்கப் போவதாகக் கூறியிருப்பதிலிருந்தும் பார்க்க முடியும். எனவேதான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போர் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியது.

பைடனின் திட்டம்..
பைடன் நிர்வாகத்தைப் பொறுத்தவரையிலும், அதற்கு ஐரோப்பிய யூனியன் சுயாட்சி மிக்க ஒன்றாக உருவாவதற்கான வாய்ப்பு வாசல்களை அடைப்பதற்கும், நேட்டோ கூட்டணியை அங்கே மிக நெருக்கமாகக் கொண்டுசெல்வதற்கும், ஒரு பொன்னான வாய்ப்பாகும். ஐரோப்பாவிற்குள்ளேயே கூட ஜெர்மனி, நேட்டோவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் சுழித்துக்கொண்டுதான் ஆதரவு அளித்து வந்தது. இதுவரையிலும் ராணுவத்திற்கு மிகப்பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிர்த்தே வந்தது. ஆனாலும் இப்போது, ஜெர்மனி அதிபர் உல்ப் சோல்ஸ் 100 பில்லியன் யூரோ (112 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 2022 பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கி இருக்கிறார். மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சத வீதத்தை, ராணுவத்திற்கு ஒதுக்குவதாகவும் உறுதி மொழி அளித்திருக்கிறார். இவ்வாறு ஜெர்மனி ராணு வத்திற்கு நிதி ஒதுக்கிட வேண்டும் என்று அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் இதுவரையிலும் கோரி வந்தன. அதற்கு இதுவரையிலும் ஒப்புதல் அளிக்காமல் இருந்துவந்த ஜெர்மனி இப்போது ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு ஏராளமான துருப்புகளையும், ஆயுதங்களையும் அனுப்பி இருக்கின்றன. உக்ரைனுக்கும் நேட்டோ நாடுகள் உயிர்க்கொல்லி ஆயுதங்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது ஜெர்மனியும் முதன் முறையாக ஆயுதங்களை அனுப்பி இருக்கிறது.

போரின் நிலை என்ன?
உக்ரைனின் போர் எப்படிப் போகும் என்பதைப் பரிசீலிக்கும்போது, இந்தப் பின்னணி அனைத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. ரஷ்ய ராணுவம் தாக்குதல் தொடுத்து இரண்டு வாரங்களாகிவிட்டன. அவை மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. கேர்சன் (Kherfson) நகரத்தைக் கைப்பற்றி இருக்கிறது. தலைநகர் கீவ் (Kiev), கார்கிவ் (Kharkiv) மற்றும் மரியபோல் (Mariupol) ஆகியவற்றைச் சுற்றி வளைத்திருக்கிறது. டான்பாஸ் (Don bas) பிரதேச உள்ளூர்ப் படையுடன் கைகோர்த்துக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் உக்ரைன் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தபோதிலும், ரஷ்யத் துருப்புக்கள் தரை வழியாகவும், நீர் வழியாகவும், வான் வழியாகவும் ஆதிக்க நிலையில் இருந்துவருகின்றன. பெலாரஸில் ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுக்கு இடையே மூன்று சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. மார்ச் 7 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போர் நிறுத்தம் தொடர்பாக சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதுபோல் தோன்றுகிறது. முதலாவதாக, மனிதாபிமான அடிப்படையில் நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வழி திறந்துவிட வேண்டும். சுமி நகரில் தங்கியுள்ள சுமார் 700 இந்திய மாணவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட வேண்டும்.

உக்ரைன் தரப்பில், தாங்கள் நேட்டோவுடன் இணையமாட்டோம் என உறுதிமொழி அளிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் நடைபெற்ற நேர்காணலின் போதும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு குடியரசுகள் குறித்தும், கிரீமியா, ரஷ்யாவின் ஒரு பகுதி என அறிவித் திருப்பது குறித்தும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. நாம் இதனை (மார்ச் 9அன்று), எழுதிக்கொண்டி ருக்கும் சமயத்தில் மார்ச் 10 அன்று ரஷ்ய அயல்துறை அமைச்சர் செர்ஜி லவ்ரவ் உக்ரைன் அயல்துறை அமைச்சர் குலேபா ஆகிய இருவரும் துருக்கியின் அண்டால்யாவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். அயல்துறை அமைச்சர்கள் இடையே பேச்சு வார்த்தை என்பது ஒரு முன்னேற்றமான நடவடிக்கையே. யுத்தத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். மின்ஸ்க் ஒப்பந்தங்கள் அடிப்படையில் உக்ரைனுக்கு நடுநிலை அந்தஸ்து அளிப்பதும், டான்பாஸ் குடியரசுகளுக்கு தீர்வு காண்பதும் மிகவும் நடைமுறைத் தீர்வாக இருக்கக்கூடும்.

(மார்ச் 9, 2022),
நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *