கேரள சட்டமன்றத் தேர்தலில் மூன்று கூட்டணிகள் போட்டி போடுகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது ஜனநாயகக் முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய மூன்று கூட்டணிகள் போட்டியிடுகின்றன. காங்கிரசும் பாஜகவும் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே இருக்கின்றன. இது, சென்ற ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தங்கக் கடத்தல் வழக்கிலிருந்து தொடங்கியது.
இப்போது இவற்றுடன் தேர்தல் களத்தில் மூன்றாவது தரப்பும் புகுந்திருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு அப்பால் இப்போது அமலாக்கத் துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), சுங்கத் துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகிய மத்தியப் புலனாய்வு அமைப்புகளும் இடது ஜனநாயக முன்னணிக்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு மத்திய புலனாய்வு முகமைகள் தலையீடு என்பது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, அனைத்து சட்ட மற்றும் நிறுவன நெறிமுறைகளையும், கூட்டாட்சித் தத்துவத்தையும் அப்பட்டமாக மீறி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. எந்த மாநிலத்திலும் எந்தவொரு சட்டமன்றத் தேர்தலின்போதும் இதற்குமுன் இதுபோல் நடந்ததில்லை. கடந்த காலங்களில் மத்திய அரசு, தன்னுடைய அரசியல் எதிரிகளைக் குறிவைத்து, அமலாக்கத் துறை, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் மற்றும் வருமான வரித்துறை ஆகியவற்றைப் பயன்படுத்தி இருக்கிறது. அமித் ஷா, உள்துறை அமைச்சரான பின்னால், வித்தியாசமான விதத்தில் ஓர் “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்”-ஆக மாறியிருக்கிறார். எந்தத் தேர்தலுக்கு முன்பும், உயர் அரசியல் எதிரிகள் மத்திய முகமைகளால் ‘என்கவுண்டருக்கு’ உள்ளாக்கப்படுவார்கள். மகாராஷ்ட்ரா தேர்தலுக்கு முன் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு இதுதான் நடந்தது. விசாரணைக்காக, அவருக்கு அமலாக்கத் துறையினரால் அழைப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால் கேரளாவில் மத்திய முகமைகளின் தலையீடு என்பது முதலமைச்சரையும் இதர அமைச்சர்களையும் குறி வைத்தும், கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் (KIIFB-Kerala Infrastructure Investment Fund Board) மற்றும் அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் மீது குறிவைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் ஆளும் இடது ஜனநாயக முன்னணியை மதிப்பிழக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
தேசியப் புலனாய்வு முகமையால் தங்கக் கடத்தல் வழக்கின் புலன்விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், அமலாக்கத்துறையும், சுங்கத்துறையும் மாநிலத்தின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலரை அக்குற்றத்துடன் பிணைத்திட கடும் முயற்சிகளை மேற்கொண்டன. சிறுபான்மை நலன்களுக்கான அமைச்சர், கே.டி. ஜலீல் அவர்களிடம் அமலாக்கத்துறையினர், ரம்ஜான் சமயத்தில் விநியோகம் செய்வதற்காக, ஐக்கிய அரபுக் குடியரசின் தூதரகத்திலிருந்து வந்த குரான் நூலின் பிரதிகள் குறித்தும், அவை வந்த தேதிகள் சம்பந்தமாகவும் துருவித்துருவிக் கேள்விகளைக் கேட்டார்கள். அந்த நூல்கள் வந்த அதே தேதியில்தான் தங்கக் கடத்தலும் நடந்தது என்று பொய்ச்செய்தி ஒன்றை மிகவும் திட்டமிட்டு, புலனாய்வு அமைப்புகள் கசியவிட்டு, அதன் பேரில் காங்கிரஸ் கட்சியும், பாஜக-வும் மேற்படி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். தேசியப் புலனாய்வு முகமை, ஆறு மாதங்கள் புலன் விசாரணையை மேற்கொண்ட பின்னர், 20 நபர்கள் மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், முன்னாள் பிரதம செயலாளர் சிவசங்கர் மீதோ, அல்லது வேறெந்த அரசியல் நபர்கள் மீதோ குற்ற அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
தங்கக் கடத்தல் வழக்கு, நவம்பரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில், இடது ஜனநாயக முன்னணி மீது அவதூறுச் சேற்றை அள்ளிவீசுவதற்காக மட்டுமே, காங்கிரஸ் கட்சியாலும் பாஜக-வினரால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. தங்கக் கடத்தல் வழக்கில் இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தைப் பிணைத்திட எதுவும் கிடைக்காததால், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும், அமலாக்கத் துறையும் கேரள அரசாங்கத்தின் லைஃப் மிஷன் (Life Mission) போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்குள் புகுந்து புலனாய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கின. காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கொடுத்த தனிப்பட்ட புகாரின் அடிப்படையில், லைப் மிஷன் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் தலையிடுவதற்கு அடிப்படையாக அமைந்தது. லைப் மிஷன் என்பது இடது ஜனநாயக முன்னணியின் முத்திரைபதித்திடும் முதன்மையான திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இரண்டரை லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டிருக்கின்றன. அமலாக்கத்துறை இத்துடன் நின்றவிடவில்லை. அரசாங்கத்தின் வேறு பல திட்டங்களிலும் தங்கள் மூக்கை நுழைத்தது. ஏழைகளுக்கு இணைய வசதி அளிப்பதற்கான கே ஃபோன் (K Fon) மற்றும் மின் வாகனங்கள் கொள்கை போன்ற திட்டங்களின் ஆவணங்களையும் கோரும் அளவுக்குச் சென்றது. இவ்வாறு இவர்கள் விசாரணையை மேற்கொண்டதற்கான நோக்கம் என்பது அரசாங்கத்திற்கு எதிராக ஏதாவது தவறைக் கண்டுபிடித்துவிட முடியாதா என்பதேயாகும்.
தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபின்னர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பாஜக-வின் பேரணி ஒன்றில் உரைநிகழ்த்தும்போது, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் (KIIFB-Kerala Infrastructure Investment Fund Board) மீதும், மாநில அரசாங்கத்தின் பட்ஜெட் மீதும் அடுக்கடுக்கான பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அதனைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கிடும் அமலாக்கத் துறை, கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்தின் மீது அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் (FEMA-Foreign Exchange Management Act) வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்காக அதன் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பாணைகள் அனுப்பியது. கேரளா உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியம் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக முதலீடுகளை உயர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதன் மூலம் நெடுஞ்சாலைகள், பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைக் கட்டிடங்கள் முதலானவற்றிற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புள்ள திட்டங்களுக்கு நிதி வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் நெடுஞ்சாலைகள், பள்ளிக் கட்டிடங்கள், மருத்துவமனைக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
இது, கேரளாவின் சமூக மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பில் பெரிய அளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இந்த நடைமுறையைச் சீர்குலைக்க வேண்டும் என்பதே அமலாக்கத் துறையினரின் நடவடிக்கைக்குக் காரணமாகும். இதனால்தான் அது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. இதில் சமீபத்திய தாக்குதல், அது உயர்நீதிமன்றத்தில் சுங்கத்துறையினரின் மூலம் ஓர் உறுதிவாக்குமூலத்தைச் சமர்ப்பித்திருப்பதாகும். அதில் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷ், தாக்கல் செய்துள்ள கமுக்கமான அறிக்கையில் (confidential statement), அவர், முதல்வர், சட்டமன்ற சபாநாயகர் மற்றும் மூன்று அமைச்சர்கள் டாலர் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறியதாக இருக்கிறது. இந்த உறுதிவாக்குமூலம் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஒன்றாகும். அது ஸ்வப்னா சுரேஷ் நீதித்துறைக் காவலில் இருந்த சமயத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்து கீழமை நீதிமன்றத்தில் சில கருத்துக்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்கு, சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் தாக்கல் செய்த மேல்முறையீடு சம்பந்தப்பட்டதாகும். இவர் கூற்றை ஒத்துரைத்திடும் விதத்தில் எவ்விதமான சாட்சியமும் கிடையாது என்று புலனாய்வு முகமையே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சுங்கத்துறையினரின் உறுதிவாக்குமூலத்தில் முதலமைச்சரையோ, இதர அமைச்சர்களையோ சம்பந்தப்படுத்துவதற்கு எவ்வித முகாந்திரமும் கிடையாது.
இதுபோன்றதோர் அறிக்கையை அளிக்குமாறு ஸ்வப்னா சுரேஷ் நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. சென்ற ஆண்டு நவம்பர் 18 அன்று பதிவு செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் குரல் பதிவில் (voice recording), முதலமைச்சரின் பெயரை அந்நிய நிதிப் பரிவர்த்தனைகளுடன் சம்பந்தப்படுத்திக் கூறுமாறு தான் நிர்ப்பந்திக்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.
இவ்வாறு ஸ்வப்னா சுரேஷ், அமலாக்கத்துறையின் அசிஸ்டண்ட் டைரக்டர் ஒருவரால் நிர்ப்பந்திக்கப்பட்ட சம்பவத்தை, அப்போது அங்கே உடன் இருந்த பெண் போலீஸ் கான்ஸ்டபிள் உறுதிப்படுத்தி இருக்கிறார். மத்தியப் புலனாய்வு முகமைகளின் இத்தகைய இழிவான தந்திரங்கள், உயர்மட்டத்திலிருந்து அறிவுரைகள் எதுவும் பெறப்படாமல், கீழேயுள்ள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்க முடியாது. அமலாக்கத்துறையானது இவ்வாறு, பாஜக-விற்காக அதன் அரசியல் எதிரிகள் மீது பாய்வதற்கான ஏவல் நாய்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
அமலாக்கத்துறையினரால் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படுவது அல்லது புலனாய்வுக்கு உட்படுத்தப்படும் எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் நாடு முழுதும் வியாபித்திருக்கிறது. சமாஜ்வாதிக் கட்சியின் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியின் பூபிந்தர் ஹூடா மற்றும் டி.கே. சிவகுமார், காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் பரூக் அப்துல்லா, பிடிபி கட்சியின் மெகபூபா முப்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேஜஷ்வி யாதவ் மற்றும் மிசா பாரதி என இப்பட்டியல் நாடு முழுதும் நீள்கிறது. இதேபோன்று அமலாக்கத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முகுல் ராய் மற்றும் காங்கிரஸ் கட்சியின் ஹிமாந்தா பிஷ்வா சர்மா ஆகியோர் பின்னர் பாஜக-வில் சேர்ந்தவுடன் அவர்கள் மீதான தொடர் நடவடிக்கைகள் கைவிடப்பட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சி, இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக மத்தியப் புலனாய்வு முகமைகள் புலன் விசாரணை மற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திட வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறது. கேரளாவில் உள்ள ரமேஷ் சென்னிதாலா மட்டுமல்ல, ராகுல் காந்தியும் கூட இதேபோன்று கோரியிருக்கிறார். இவ்வாறு செய்திருப்பதன் மூலம், ராகுல் காந்தி மற்றும் அதன் கம்பெனி பாஜக-வின் இசைக்கு ஒத்து ஊதுவதுடன், அமலாக்கத்துறையினர் நாட்டின் இதர மாநிலங்களில் தங்கள் கட்சிக்காரர்கள் மீது எடுத்திடும் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அமலாக்கத்துறை, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த்துறையின் கீழ் செயல்படும் ஒரு துறையாகும். இது தனக்கு சட்டபூர்வமாக அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, செயல்படுவது என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதன் நடவடிக்கைகளுக்கு சட்டப் பின்புலம் எதுவும் கிடையாது. எனினும் இது திடீரென்று பல இடங்களில் புகுந்து சோதனைகள் மேற்கொள்வது, கைது செய்வது, சொத்துக்களை அரசுக்கு ஆதாயமாக்குவது போன்று விரிவான அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் இது பணப் பரிவர்த்தனைத் தடைச் சட்டம் (PMLA-Prevention of Money Laundering Act), அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA-Foreign Exchange Management Act) ஆகியவற்றின் கீழ் உள்ள வழக்குகளில் விசாரணை செய்கிறோம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறது.
அமலாக்கத்துறையின் தற்போதைய இயக்குநரான சஞ்சய் குமார் மிஷ்ரா, வருமான வரித்தறையின் முன்னாள் ஆணையர். அமலாக்கத்துறையின் இயக்குநர் பதவிக்காலம் என்பது இரு ஆண்டுகளாகும். ஆனால் மிஷ்ராவைப் பொறுத்தவரை, அவருக்கு 2020 நவம்பரிலிருந்து மேலும் ஓராண்டு காலத்திற்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இது அவரை, அவருடைய எஜமானர்கள் விருப்பத்திற்கிணங்க அவர்கள் சொல்கிறபடியெல்லாம் செயல்பட வைத்திருக்கிறது.
கேரளாவின் அனுபவம் அமலாக்கத்துறையின் செயல்பாடுகளை சட்டபூர்வமாக நெறிப்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது. அது, தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கைக்கும் நீதிமன்றத்தின் முன் பதில்சொல்லக் கடமைப்பட்டதாக மாற்றப்பட வேண்டும்.
கேரளாவில், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல் மற்றும் ஊழல் புகார்களின் முதல் சுற்று, பாஜக-வினாலும், காங்கிரசினாலும் மற்றும் மத்தியப் புலனாய்வு முகமைகளாலும் எழுப்பப்பட்டபோது, அதனை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்ற சமயத்தில் மக்கள் தீர்மானகரமான முறையில் நிராகரித்தார்கள், இடது ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றியைப் பெற்றது. இப்போது சட்டமன்றத் தேர்தலின்போதும், புனிதமற்ற அதே முக்கூட்டுக் கலவைக்கு, கேரள மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.