புத்தகம் : வள்ளலார் கடிதங்கள்
பதிப்பகம்: வ உ சி நூலகம்
கடிதங்கள் மறைந்து போய் அதன் வடிவத்தை இன்று மின்னனு சாதன வழியிலான உரையாடல்கள் இடம் பிடித்துள்ளது. லகுவாகவும் விரைவாகவும் எளிமையாகவும் ஆவணப்படுத்த வகையிலாகவும், நமக்கு வசப்படுகிறது. ஆனால், காலகாலத்திற்கும் அன்பிலான உணர்வான கையெழுத்தின் உயிர்ப்பு?
இன்றும் என் பெற்றோர் எழதிய கடிதங்கள் சமயங்களில் என்னை உத்வேகப்படுத்தி என்னை அவர்களுடன் மானசீகமாக உரையாடுகின்றன. ஏறக்குறைய எல்லோர் வாழ்விலும் இந்தக் கடிதங்கள் ஒரு உன்னத நிலையில்தானிருக்கும்.
கடிதங்களே இந்த அளவில் வாழும் பொழுது, சமூகப் பெரியோர்களின் கடித இலக்கியம் எத்துணை உயர்வாகவும் அன்றைய காலகட்டத்தின் தகவல் சுரங்கங்களாக மின்னும் ! அந்த வரிசையில் கடித இலக்கிய புத்தகங்கள் என்றுமே என்னை வசீகரிக்கும்.
சமீபத்தில் சென்னை புத்தக கண்காட்சியையொட்டி நண்பர் க. விக்னேஷ்வரன் கனலி கலை இலக்கிய இணையதளம் சில புத்தகங்களை அறிமுகம் செய்தார். புத்தகங்களை வாங்கி தோழர் Muthusamy Jeya Prabakar உதவி செய்தார்.
சமயங்களை நேசிப்பவர்களை ஆன்மீகப் பாதைக்கு அழைத்துச் செல்லுதலே உண்மையான சமயப் பெரியவர்களின் கடமை. அதில் , மனிதன் கண்டு பிடித்த அனைத்து வேற்றுமைகளையும் கடக்கச் செய்தல் மிக முக்கியம். அதனில் வெற்றி கண்டவர் அருட்பெரும் ஜோதி இராமலிங்க அடிகளார்.
அவரின் காலம் 1823-1874. அக்காலத்தில் அவர் நிறுவிய நிறுவனம் இன்று வரை உயிர்ப்போடு இயங்குகிறது. அவரின் பசிப்பிணி போக்கும் யாகத்தின் உன்னதம் பசியை உணர்ந்தவருக்கே புரியும். வயிறு நிரம்பாத ஒருவரின் உடல் என்ன பாடுபடும்? பசிப்பிணியைப் போக்கும் உன்னதம் பற்றிய கடிதத்தில் அதனை உணர முடிகிறது.


கடவுளுக்கும் மனிதனுக்குமான கடிதங்கள் என்ற முன்னுரையில் வீ.அரசு அவர்கள் எழுதியுள்ள தகவல்கள் சுருக்கமாகவும் ஆழமாகவும் உள்ளன. மயிலையில் வாழ்ந்தார் என்பதற்கு ஒரு கடித ஆதாரம் உள்ளது. திருமண வாழ்க்கை பற்றிய அவரின் கருத்தும், நண்பர்கள்பால் கொண்ட அக்கறையும் உடல் நலன் பேணுதல் பற்றிய சுருக்க விவரங்களாகவும் உள்ள கடிதங்கள் நம்மை அவர் மீதான மரியாதையுடன் கூடிய வணக்கத்தை ஏற்படுத்துகிறது.
சபை ஆரம்பித்த கால கட்டத்தில் வந்த அறிக்கைக் கடிதங்கள், நன்கொடை கொடுத்தோர் விவரங்களை வெளியிட்ட அறிக்கைகள் என உள்ளன. நன்கொடை பல்வேறு வகையிலான பெரியோர்களும் கொடுத்துள்ள விவரம் வெளிப்படைத் தன்மைமையும் நேர்மையையும் வெளிப்படுத்துகின்றன.
விளக்கு எப்படி இருத்தல் வேண்டும், சுத்தம் செய்யும் விதம், யார் எந்த வயதைச் சேர்ந்தவர் செய்ய வேண்டும் என்பதை வாசிக்கும் பொழுது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. பாடசாலையில் சேர்வதற்கான தகுதி மற்றும் வயதினையும் குறிப்பிடுகிறார். மற்றும் சபைகளில் எந்த அளவில் ஒற்றுமை பாராட்ட வேண்டும் எனவும் கூறுகிறார்.
சமயத்தை மக்களுக்கான இயக்கமாக மாற்றிய அவரின் அமைப்பு உலக அளவில் எடுத்து செல்லப்பட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. அந்த அளவில் சமீபத்தில் சர்வதேச அளவிலான மையம் அமைக்கப்படும் என திமுக அதன் அறிக்கையில் கூறியுள்ளது அரசியல் கடந்து அனைவருக்குமான சத்திய ஜோதியின் வெளிச்சமாகும் !



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *