வசிஷ்டரிடம் கல்வி பயில டொனேசனாக ஆயிரம் பசுக்கள் ...! vasistaridam kalvi paila donesanaaga aairam pasukkal...!

அடடா இந்த நூல் 2012ல் வெளியாகி இருக்கிறது. ஆனால் 2023ல் தான் கண்ணில் பட்டது. இவ்வளவு நாள் எப்படி பார்க்காமல் போனேன் என்று தெரியவில்லை. உண்மையிலே ஆசிரியர் தோழர் ச.சுப்பாராவ் அவர்களுக்கு நல்ல தேர்ந்த ஞானம் இருக்கு என்பதை இந்நூலின் வழியே உணர்கிறேன்.

தோழர்களே. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை இப்படியும் வழங்க முடியுமா என்று ஒரு நிமிடம் ஆடிப்போனேன், ஆச்சரியப்பட்டேன். எவ்வளவு நேர்த்தியான தோழர் இவர். ஆம் இந்நூலில் 19 தலைப்புகளில் வந்துள்ள பதிவு கட்டுரையா, கதையா, சொந்த அனுபவத் தொகுப்பா, முக்காலம் உணர்த்தும் கொள்கை குறிப்பா என்றால் எல்லாம் கலந்த கலவை தான் தோழர்களே. படு பிற்போக்காக சிந்திப்பவர்கள் கூட இந்நூலை வாசித்தால் ஒருநிமிடம் முற்போக்கு சிந்தனைக்குள் வந்துபோனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஒவ்வொரு ஞானக் கட்டுரையின் இறுதியிலும் குபுக் என்று சிரிக்க வைத்துவிடுவார் உடன் நல்ல சிந்தனையை தட்டியெழுப்பி விட்டு. நிச்சயம் “அடடா” என்று சொல்லாமல் அடுத்தக் கட்டுரைக்கு தாவ மாட்டோம். விமர்சனம் செய்வதில் தன் குடும்பத்தையும் விட்டு வைக்கமாட்டார். எனவே ஆச்சாரம், அனுஷ்காரம் என்று யாரும் தண்டால் பயிற்சி எடுத்து சண்டைக்கு வரமாட்டார்கள். வந்தாலும் கட்டுரையில் வச்சு செய்திருக்கும் சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் அமைதியாக அவர்களை திருப்பி அனுப்பிவிடும். அவ்வளவு யதார்த்தமான பதிவுகள்.

நிறைய சொல்லலாம் ஆனால் ஒன்றை மட்டும் உங்களோடு

‘என்றும் மாறாதது’
அந்தக் காலத்தில் குருகுலத்தில் குழந்தையை சேர்ப்பதை வைத்து வச்சு செய்திருப்பார். இன்றைக்கு குழந்தையை பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர் படித்திருக்க வேண்டும், நல்ல பள்ளியை தேடி அலைதல், கட்டணம், பள்ளியில் இடம் இப்படி இருப்பதை குருகுல காலத்தில் எப்படி இருந்திருக்கும் என்று நமக்கு காட்டியிருப்பார். அவ்வளவும் அசத்தலாக கொடுத்திருப்பார்.

ஆறு மாதத்திற்கு முன் ஜனகனின் யாகத்திற்குப் போய் தானம் வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில்தான் நமுசியும், கார்க்கியாரும் பேசிக்கொள்வார்கள். கார்க்கியார் தன் குழந்தையின் கல்விக்காக நல்ல குருகுலத்தில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. நமுசியிடம் சொன்னபோது, நமுசி வாய்விட்டு சிரித்துவிட்டு, “இன்னும் எந்தக் காலத்தில் இருக்கிறீர்? போனவுடன் அப்படியே குருகுலத்தில் சேர்ப்பதெல்லாம் அந்தக் காலம். இப்போது குழந்தை பிறந்தவுடனே பரத்வாஜிடம் சொல்லி வைத்தால்தான் இடம் உண்டு. வசிஷ்டர் என்றால் ஆயிரம் பசுக்கள் தானமாக அளிக்க வேண்டும். உன்னுடைய அறியாமையை என்னவென்பது என்று சிரித்தார் நமுசி. இதேபோல் பத்து மாணவர்கள் சேர்க்கை மட்டுமே நடைபெறும் குருகுலம் இப்படி வகை வகையான, தினுசு தினுசான குருகுல விவரங்களை கூறினார்.

இறுதியில் புதியதாக தொடங்க இருக்கும் குருகுலத்தில் குழந்தைகளுக்கு குடில் கட்டுவதற்கு மூங்கில் தேவையிருக்கும். ஒரு ரெண்டு கட்டு நல்ல மூங்கிலாக வெட்டிக்கொண்டு போனால் சீட்டு கிடைக்கலாம்” என்று நமுசி சொன்ன ஆலோசனையின் பேரில் எல்லாம் தயார் செய்து குழந்தையை அழைத்துக்கொண்டு செல்லலாம் என்று கார்க்கியார் தன் குழந்தையுடன் தயாரான போது அவருடைய மனைவி, “ஏங்க பாடம் தொடங்கியிருப்பாங்களோ, என்ன சொல்லிக்கொடுப்பாங்க?” என்று கணவரை கேட்க, “போன உடனே பாடம் நடக்காது. குருவோட பசுக்களை ஓட்டிக்கொண்டு நன்கு மேய்த்து வரவேண்டும், நல்ல காய்ந்த விறகுகளை பொறுக்கி வரவேண்டும். அப்படி குரு சொல்வதை தட்டாமல் செய்து வந்தால்தான் குரு மகிழ்ந்து பாடம் நடத்துவார்” என்று கணவர் கூற உடனே மனைவி, “ஏங்க நம்ம பையனும் இங்க அந்த மாட்டைத்தானே மேய்ச்சுகிட்டிருக்கான். அங்கேயும் அதுதான்னா என்னாங்க அது?” என்று  மனைவி புலம்ப  “பே உனக்கு என்ன தெரியும் போய் சமையலை கவனி” என்று அதட்டுவார் கார்க்கியார். கதை முடியும். இதில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளது, இன்றைய கல்விமுறையின் போதாமை பழைய குருகுல முறையிலிருந்து சற்றும் மாறவில்லை என்று நல்லா நெற்றிப்பொட்டில் அடித்தது போல் கூறியிருப்பார்.

ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போல இன்னும் மீதம் 18 கதைகளும் இன்னும் டாப்பாக இருக்கும். கடவுள்கள் வந்து போவார்கள். ராமன், தசரதன் வந்து போவார்கள். இன்றைய பணி, குடும்பத்தில் பெண்கள் படும் சமையலறை சிறை என எல்லாமும் சும்மா வேற லெவலாக வந்து போவார்.
என்னுடைய ஞானத்தை கிளப்பிவிட்ட தோழருக்கு மனமார்ந்த நன்றி!
வாசியுங்கள் தோழர்களே
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்.

வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!

நூல்விமர்சனம் :

இரா.சண்முகசாமி- புதுச்சேரி.

நூல் : இரண்டாவது ஞானம்
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
ஆண்டு : 2012 முதல் பதிப்பு (இந்நூல் பல பதிப்புகளை கண்டிருக்க வேண்டிய நூல்)
பக்கம் : 112
விலை : ரூ.70.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *