வேளாண் அவசரச் சட்டங்கள் யாருக்கு லாபம்? – பாமயன்இந்திய ஒன்றிய அரசு, மூன்று சட்ட முன்வரைவுகளை முன்வைத்து கடும் எதிர்ப்புகளையும் மீறி அதைச் சட்டமாக நிறைவேற்றியும் உள்ளது. ஒன்று உழவர் உற்பத்தி பரிமாறல் மற்றும் வணிக (ஊக்கப்பாடு, வழிகாட்டு) முன்வரைவு 2020 என்ற சட்டத் திருத்தம், அடுத்தது, விலை உறுதிப்பாட்டில் உழவர் (அதிகாரப்படுத்தல், பாதுகாத்தல்) மற்றும் பண்ணை சேவைகள் முன்வரைவு அடுத்தது அத்தியாவசிய பொருகள் திருத்தச் சட்ட முன்வரைவு* என்று மூன்று வரைவுகள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதனால் இந்தியாவின் பல மாநிலப் பகுதிகளில் அண்மைக் காலங்களில் காண முடியாத உழவர் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. பஞ்சாப், அரியானா, தெலுங்கானா, உத்திரப் பிரதேசம் என்று உழவர் போராட்டங்கள் பெருவீச்சாக பீறிட்டு வருகின்றன. தேசிய சனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அவர்களுடைய தொப்புள்கொடி உறவு போல இருந்த சிரோமனி அகாலி தளக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ஒன்றிய அமைச்சருமான அர்சிம்ரத் கவுல் பாதல் என்பவர் தனது பதவியைத் துறந்து வெளியேறி உள்ளார். ராகுல் காந்தி இச்சட்டங்களை கறுப்புச் சட்டங்கள் என்று கடுமையாகச் சாடியுள்ளார். குறிப்பாக மோடி அவர்களின் பிறந்தநாளன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த சட்ட முன்வரைவுகள் வரமா? அல்லது சாபமா? என்பது விரைவில் தெரிந்துவிடும். இத்தகைய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் ஏன் நடந்து வருகின்றன. அதன் பின்னணிதான் என்ன?

இந்தியாவின் வேளாண் சந்தை மிகப்பெரியது. ஏறத்தாழ 16,58,700- கோடி ரூபாய்கள் புரளும் துறை. இந்தியாவின் வேளாண்மையை நம்பி உள்ளவர்கள் 55 விழுக்காட்டு மக்கள். இன்று இவ்வளவு பெரிய சந்தையை பன்னாட்டு அமைப்புகளுக்குத் திறந்து விட்டுள்ளார்கள். தடைகள் யாவும் தளர்த்தப்பட்டுள்ளன.தேவைக்கான உற்பத்தியில் ஈடுபட்டு வந்தபோது உழவர்கள் சந்தையைப் பெரிதும் நம்பி இருக்கவில்லை. ஆனால் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் வேளாண்மையின் ஏற்பட்ட மாற்றம், குறிப்பாக சந்தையை நோக்கிய உற்பத்தி ஏற்பட்டபோது, அதை விற்க வேண்டிய நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டார்கள். அப்போது அவற்றை முறைப்படுத்த வேளாண் கொள்முதல் மையங்கள் உருவாக்கப்பட்டன. அவை சிறப்பாகவும் செயல்பட்டன. ஆனால் வழக்கம்போல அதில் அரசியல் கட்சிகளின் தலையீடு, ஊழல் போன்றவற்றால் சீரழிந்து போகத் தொடங்கின. எப்படி நன்னோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டனவோ அதேபோல இவையும் சீரழிக்கப்பட்டன. இதையே காரணங்காட்டி அவற்றை மூடும் நடவடிக்கைகளும் நடந்தன. அத்தோடு அவற்றை தனியார்களிடம் ஒப்படைக்கவும் செய்தார்கள். குறிப்பாக பீகாரிலும் கேரளாவிலும் நடந்த முயற்சிகள் நமக்கு ஒரு பாடமாக மேற்கொள்ளப்பட வேண்டியன. ஆனால் அவற்றால் எந்த நல்ல பலனும் கிட்டவில்லை. தனியார் அமைப்புகள் நன்றாகப் பயன்பட்டன, உழவர்களுக்குப் பயன் கிட்டவில்லை. இதை தேசிய மாதிரி கணக்கீட்டு நிறுவனம் தெரிவிக்கிறது.

குறிப்பாக பீகாரில் திறக்கப்பட்ட தனியார் மண்டிகளால் அறுவடைக்காலத்தில் மிகக் குறைவாக விளைபொருட்கள் வாங்கப்பபட்டன. மக்காச்சோளம் டன் 22000 ரூபாய்களில் இருந்து 13000 ரூபாய்களுக்கு வீழ்ச்சியடைந்தது. இதை வேளாண் பொருளாதார அறிஞர் தேவிந்தர் சர்மாவும் தெரிவிக்கிறார்.

Adani Agri Logistics Dispatched 30 000 MT Grains For PMGKAY - BW  Businessworld

அதானி குழுமத்தின்ADANI Agri Logistics Pvt Ltd இந்தியா முழுவதும் 14 இடங்களில் உணவுப்பொருட்களை சேமிக்கும் இராட்சத Silo க்களை நிறுவியுள்ளது..!!
8,75,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்த இராட்சத silo க்கள் Cement Base and scalvanizing metal முறையில் தயாரிக்கப்பட்டது. நெல் அரிசி கோதுமை பருப்பு வகைகள் என அனைத்து பொருட்களையும் பல காலங்கள் சிறிதும் சேதமின்றி சேமித்து வைக்கலாம். இந்த வகை முதல் silo க்கள் முதன்முதலாக பஞ்சாப்பின் Moga விலும், ஹரியானாவின் Khaithala விலும் தான் கட்டப்பட்டது.

இதைவிடக் கொடுமை பீகாரில் விளைந்த நெல்லைக் குறைந்த விலைக்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்து பல லட்சம் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு போய் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு (ஏனெனில் அங்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்தது) விற்றுவிட்டார்கள். பஞ்சாப் மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் ஏறத்தாழ 5 லட்சம் நெல் மூட்டைகளைப் பறிமுதல் செய்திகள் வெளிவந்தன. கடந்த 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் பீகாரில் நிறைய உழவர் குடும்பங்கள் புலம் பெயர்ந்தன. இன்று இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் உள்ள பீகார் உடல் உழைப்பாளிகளில் கணிசமானவர்கள் அவர்களே. கேரளாவில் கோவிட்-19 நெருக்கடியால் அரசு கூட்டுறவு பால் நிறுவனம் இலவசமாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பால் வழங்கியது. ஆனால் எந்த தனியார் நிறுவனமும் வழங்க முன்வரவில்லை. இந்த இரண்டு அனுபவங்களும் நம்முன்னால் வந்து செல்கின்றன.

இந்தச் சட்டங்களால் முதலில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பஞ்சாப், அரியானா முதலிய நன்செய் வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளே. ஏனென்றால் அதிகமான நீர் வளம், அதிகமான ரசாயன உரங்கள் வீரிய விதைகள் என்று உற்பத்தியை பெருமளவு பெருக்கியதால் கோதுமையும், நெல்லும் அதிக அளவு விளைந்தன. தமிழத்தில் தஞ்சை மண்டலத்தில் இதே நிலைதான் உள்ளது. அவ்வாறு அதிகமாக உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்த வேளாண் விளைபொருள் சந்தைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் பயன்பட்ட உழவர்களும், மண்டி எனப்படும் சிறு கொள்முதல் மையங்களும் பயன்பட்டன. பஞ்சாப் போன்ற மாநிலங்களில் விவசாயப் பின்னணியில் இருந்து வந்தவர்களும் பெருமளவில் மண்டிகளை உரிமம் பெற்று நடத்தி வருகின்றனர். இதனால் மாநில அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. குறிப்பான 7 விழுக்காடு வரை மாநில அரசுகளுக்கு பரிவர்த்தனையில் வருமானம் கிட்டும். இந்த சட்டங்கள் வழியாக தனியார் அமைப்புகள் குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே நுழைந்து சந்தையைக் கைப்பற்றுவார்கள். மாநில வருவாயும் தடைப்படும். சிறு குறு மண்டிகள் காணாமல் போகும். அரசு முன்வைக்கும் வாதம் என்னவென்றால், உழவர்கள் தங்களது விளைபொருளை எங்கும் கொண்டு சென்று விற்றுக்கொள்ளலாம் என்பதாகும். அதற்கு புதிய சட்டம் ஒன்றும் தேவையில்லை. ஏற்கனவே உழவர்கள் தங்கள் விளைபொருட்களை எங்கும் கொண்டு சென்று விற்பதை யாரும் தடை செய்ய முடியாது. உண்மையில் இந்தச் சட்டத்தின் உட்பொருள், வணிகம் எங்கும் சென்று வேளாண் விளைபொருட்களை வாங்கலாம் என்பதாகும். ஆக ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாக, உழவர்களைக் காப்பாற்றப் போகிறோம் என்று கூறி பெருவணிகர்களைக் காப்பாற்றும் முயற்சி இது என்றே கூற முடியும்.

அடுத்தாக நிறைய வாங்குவோர் சந்தைக்குள் வரும்போது போட்டி உருவாகி உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். உண்மையில் அப்படி நடக்கவில்லை என்பதற்கு பீகாரும், கேரளாவும் நல்ல எடுத்துக்காட்டுகள். பீகாரில் உழவர்களுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. கேரளாவில் அவசரகாலத்தில் கூட தனியார் நிறுவனங்களில் நிறைந்த பாலை புலம் பெயர் மக்களுக்குக் கொடுக்கவில்லை. நாம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் போட்டி ஏற்படுத்தினால் கட்டணம் குறையும் என்றார்கள். நடைமுறை என்ன? பல நிறுவனங்கள் வருவதுபோல் வந்தன. அவை ஒரே நிறுவனமான ரிலையன்சால் அடித்து நொறுக்கப்பட்டு சின்னாபின்னமாகியுள்ளன. இதுதான் நமது வேளாண் சந்தையிலும் நடக்கும். குறிப்பான கொரானா அச்சத்திற்குப் பின்னர் வெகு வேகமாக வளர்ந்துவரும் ஆன்லைன் சந்தையான இணையச்சந்தைக்கு ஏராளமான இருப்பு வேண்டும். அந்த பெருமளவு இருப்பு வைக்கும் சூழல் இப்போதுள்ள சட்டங்களின்படி இயலாது. எனவே இதை மாற்றி யாரும் எவ்வளவு இருப்பு வேண்டுமாலும் வைத்துக் கொள்ளலாம் என்று இப்போது வந்துள்ள சட்ட வரைவு உறுதி செய்கிறது. எனவே இனி பதுக்கல் என்ற பேச்சே வராது, அதாவது அவர்கள் சட்டப்படி இருப்பு வைத்துக் கொள்வார்கள். விலையை எவ்வளவு வேண்டுமானாலும் கூட்டி விற்கலாம். யாரும் கேட்ட முடியாது.

ஒரே நாடு ஒரே சந்தை என்ற முழக்கம் அமெரிக்க நாட்டில் உருவான முழக்கம். அமெரிக்காவின் அந்த நடைமுறையை வெட்டி ஒட்டும் வேலையை நமது கொள்கை வகுப்பாளர்கள் இந்தியாவில் செய்து வருகிறார்கள். வேளாண்மையை அமெரிக்கமயமாக்கும் பணி என்றே கூறலாம். உண்மையில் அமெரிக்காவில் 60 ஆண்டுகளுக்கு மேல் தனியார்மயம் நடைமுறையாக்கப்பட்டடு அங்கு பண்ணையாளர்கள் மிகப் பெரும் மானியங்களில் உயிர் வாழ்கிறார்கள். அவர்களது வருமானம் ஆண்டுக்கு ஆண்டு கடுமையாகக் குறைந்து வருகிறது. ஏறத்தாழ 1.3 விழுக்காடு மக்கள் தொகையே வேளாண்மையிலும், கால்நடை வளர்ப்பிலும் அங்கு ஈடுபடுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு 42 விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பி இருந்தார்கள். அங்கு 9150 லட்சம் ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. இந்தியாவில் 3946 லட்சம் ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது. ஏறத்தாழ 78 கோடி மக்கள் வேளாண்மையை நம்பி உள்ளார்கள். அமெரிக்காவில் 39 லட்சம் பேர் மட்டுமே வேளாண்மையில் உள்ளனர். அப்படியானால் அந்த மாதிரி எப்படி இந்தியாவிற்குப் பொருந்தும். வேளாண்மையை நம்பிய பெருந்தொகை மக்கள் தங்கள் வாழ்விடங்களைவிட்டு வெளியேறினால் எப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கும் என்பதை கோவிட்-19 நமக்குத் தெரிவிக்கவில்லையா? அப்படியானால் நமது வேளாண்மையை பரவலாக உயிரூட்டுவதன் மூலமாகத்தானே பெரும்பான்மையான உழைக்கும் மக்களைக் காக்க முடியும்.

Discussion on changes in agricultural laws - Granthshala News

இந்திய அரசியல் சாசனம் வேளாண்மையை மாநிலப் பட்டியலில் வைத்துள்ளது. அந்த உரிமையை இந்த அவசரச் சட்டங்கள் முற்றிலும் மீறுகிறது என்கிறார் பிரீத்தம்சிங் என்கின்ற ஆய்வாளர். எப்படி இந்திராகாந்தி, நெருக்கடிநிலைகால (1975-77) கட்டத்தில் பல மாநில உரிமைகளை பறித்தாரோ, அதைப்போல கோவிட்-19 நெருக்கடிக்காலத்தில் இன்றைய நடுவண் அரசு பறிக்கிறது என்று அவர் விளக்குகிறார்.

இதை நமது மாநில உரிமை நாடும் சட்ட வல்லுநர்கள் கணக்கில் கொண்டு நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காட முடியுமா என்று பார்க்கலாம். ஏற்கனவே சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் வணிக வரி உரிமை பறிபோன நிலையில் தேசிய நுழைவுத்தேர்வு மூலம் உயர்கல்வி உரிமை பறிபோன நிலையில் இப்போது இந்தச் சட்டங்கள் மாநிலங்களை மேலும் உரிமையற்றவையாக மாற்றுவதைக் காணமுடிகிறது.

அதுமட்டுமல்ல அதைவிடப் பேரச்சம் குறைந்தபட்ச ஆதரவு விலை. இதுவே மிகப் பெரிய மோசடி. அதாவது உழவர்களின் உண்மையான விளைவிப்பு மதிப்பைக் குறிப்பிடாமல், ஆண்டுக்கு ஆண்டு ஏற்படும் பணவீக்கத்தைக் கணக்கிடாமல், இடுபொருட்களின் விலை ஏற்றத்தைக் கணக்கிடாமல் உழவர்களைக் கொள்ளையடிக்கும் இந்த குறைந்தபட்ச ஆதாரவிலையிலும் கைவைக்கும் போக்கு என்று உழவர் அமைப்புகள் கடமையாக எச்சரிக்கின்றன. ஆனால் அரசு அப்படி எல்லாம் நடக்காது. நாங்கள் ஆதார விலையை எடுக்க மாட்டோம் என்று வாயால் உறுதி கூறுகின்றன. சட்ட வரைவில் ஏதும் இல்லை. உண்மையில் குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைவாக வாங்கும் வணிகர்களைத் தடை செய்ய எந்தச் சட்டமும் இல்லை. ஆனால் வெங்காயம் விலை ஏறினால் அதைத் தடுக்கச் சட்டம் உண்டு. ஏனென்றால் அது நகர்ப்புற மக்களின் நலனைப் பாதுக்காக்கிறது. ஏழை உழவனைப் பாதுகாக்க என்ன சட்டம் உள்ளது?

உண்மையில் என்ன செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நியாயமாக அறுதியிட வேண்டும். அதை ஆண்டுக்கு ஆண்டு விலைவாசிக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். குறைந்தால் குறைக்கட்டும், உழவர்கள் யாரும் அதை எதிர்க்கப்போவதில்லை. அதேபோல நேரடிக் கொள்முதல் நிலையங்களை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக சிறு குறு உழவர் குழுக்களை அதில் பயன்படுத்த வேண்டும். உழவர் உற்பத்தியாளர் கம்பனி என்று ஆயிரம் உழவர்களைச் சேர்த்து குழு வைத்து போகாத ஊருக்கு வழிகாட்டும் கதையைத் தூக்கிப் போட்டு விட்டு, இருபது முதல் ஐம்பது பேர்களுக்குள் இருக்கும் குழுக்களை வலிமைப்படுத்தி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து இயங்க வைக்க வேண்டும். விலையை உறுதி செய்யும்போது (அதாவது உண்மையாக அவர்கள் விளைவித்த செலவை ஈடுகட்டும் முறையான விலை) அது சிறு மண்டியாக இருந்தாலும், பெரும் நிறுவனமாக இருந்தாலும் அதில் நடக்கும் குளறுபடிகளைக் களைய வேண்டும், அடுத்ததாக தரம் என்ற பெயரில் உழவர்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் போக்கு, முன்பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டி போட்டு வாங்குவது, அவர்களை மற்றவர்களிடம் விற்பனை செய்ய விடாமல் தடுப்பது, விலைப்பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பது, குறிப்பாக எடையில் ‘அடிப்பது’ அதாவது எடைபோடுவதில் ஏமாற்றுவது, போன்ற குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Farmers protest in Delhi for farm loan waivers, fair prices for crops

தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் பொது விநியோக முறை என்ற நியாய விலைக்கடைகளை வலுப்படுத்த வேண்டும். அங்கங்கே விளையும் பொருள்களை மதிப்பேற்றி அங்கங்குள்ள நியாய விலைக் கடைகளுடன் இணைக்க வேண்டும். அதன் மூலம் தேவையற்ற பணச்செலவு குறைவும். இதனால் குறைந்த விலையில் நல்ல உணவு மக்களுக்குக் கிடைப்பதோடு உழவர்களுக்கும் நியாயமான விலை கிடைக்கும். இதைத்தான் குமரப்பா, காந்தி போன்ற மேதைகள் வலியுறுத்தினார்கள். உற்பத்தியையும், விநியோகத்தையும் பரவல்மயப்படுத்தி, மக்கள்மயப்படுத்துவதற்கு முயல வேண்டும். இந்த முறையில் ஒரு சில குறைகள் இருப்பதால் அவற்றை களைய வேண்டுமேயன்றி, அவற்றை மூடிவிட்டு பெருநிறுவனங்களிடம் கைவிட்டுவிடுவது மிகவும் ஆபத்தானது. நடைவண்டியில் நடைபழகும் குழந்தை தவறிக் கீழே விழுந்துவிட்டது என்பதற்காக நடை வண்டியையே தூக்கி வீசும் கதையாக இன்றைய ஆட்சியாளர்கள் வலுவான அரசுக் கட்டமைப்புகளைச் சிதைப்பது நல்லதல்ல.

அதைவிட அவசியமான பணி, வேளாண் துறையில் உள்ள ஊழியர்களின் பங்கு. அவர்கள் இன்று அரசு தரும் திட்டங்களை கொண்டு செல்லும் தரகர்போல ஆக்கப்பட்டுள்ளார்கள். குறிப்பாக கும்பணிகளின் பொருள்களை விற்கும் முகவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். உழவர்களுக்கு வேளாண்மை அறிவைப் பகிரவும், அவர்களுடன் சேர்ந்து கண்டறியவும் வழிவகை செய்ய வேண்டும். அவர்களுக்கு போதிய அதிகாரமும், சுதந்திரமும் கொடுக்கப்பட வேண்டும். அந்தத் துறையை முடக்கிப்போட்டுவிட்டு, பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டு எப்படி வேளாண்மையை முன்னேற்ற முடியும்.
——————–