உயிர்த்தெழும் நாள் | Day of Resurrection - ஐ.முரளிதரன்

உயிர்த்தெழும் நாள்

 

வெரோனிகா வை பற்றி முதன்முதலாக குமரன் எனக்குச் சொன்னது “அந்த உதட்டு மச்சத்தைப் பற்றி தான்”. நல்ல வடிவான முகம் அவளுக்கு. அந்த முகத்தில் மேலுதடு முடிந்து கிழுதட்டினை தொடுகிற இடத்தில் மெல்லிதாக ஒரு புள்ளி. பிறந்த குழந்தைக்கு அம்மா வைப்பாலே அது போல ஒரு சிறு பொட்டு. அவளுக்கு கருவிலேயே தாய் வைத்திருப்பாள் போல. திருஷ்டி பட்டுவிடாமல் இருக்க தான் மை பொட்டு வைப்பார்கள். வெரோனி க்கு அந்த மச்சமே பெரும் திருஷ்டி தான் என பல நேரங்களில் தோன்றியதுண்டு.

போதையில் சொன்னதையே திரும்ப திரும்பச் சொல்லும் குடிகாரனைப் போல அவன் அதை சொல்லிக் கொண்டே இருந்தான். “ டேய் அவளோட அந்த மச்சம் இதுவரைக்கு அப்டி பாத்ததே இல்லடா” என்றான். அவளை விட அவனுக்கு “மச்சம்” தான் பிடித்திருந்தது போல.

“நீ பாத்திருக்கனுமே ப்பா சான்சே இல்லடா” என்றான். அவன் சொல்ல சொல்ல நான் எனக்குள் வெரோனியை உருவகமாக வரைந்து பார்த்தேன். ஒரு முழு வடிவத்தை மட்டும் நிலை நிறுத்த முடியவில்லை. அடுத்த நாள் அவளைப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஆவல் மட்டும் அடங்காமல் இருந்தது. குமரனிடம் “டேய் எங்கதான்டா இருக்கா அவ” என்றேன்.

“நேத்து தான் டா நம்ம தெருவுல குடி வந்திருக்காங்க” ……”நம்ம ரைஸ்மில் நல்லசிவம் அண்ணே காம்பவுண்ட் டா” ….”அப்பா பேரு இருதயராஜ் அம்மா பேரு ரோஸ்லின் மேரி”

“கிறிஸ்டியனாடா”

“ம்ம்” …”ரோமன் கத்தோலிக்” காம்டா

“ரேசன் கார்டு எதும் வச்சிருக்கியா?”…” இவ்ளோ டிடெய்லா சொல்லிட்டு இருக்க”

“எல்லாம் விசாரனய போட்றது தான்”

“நல்லா விசாரிச்ச போ” என்றேன்.

மறுநாள் காலை “வெரோனி” யை பார்த்தேன். குமரன் சொன்னது உண்மை தான் அவள் அப்படி ஒரு அழகு. குறிப்பாக அந்த மச்சம் இன்னும் அழகாக்கி காட்டியது. குமரனும் நானும் எதிர் எதிர் வீடு. என்னை கடந்து சென்ற போது “எப்டி இருக்கா” என்பது போல புருவத்தை உயர்த்தி கேட்டான். நானும் “கண்களை உருட்டி சூப்பர்” மாப்ள என பதிலளித்தேன். பின்பு இருவரும் வேகவேகமாக ஸ்கூலுக்கு கிளம்பினோம். அந்த நாளில் பிஸிக்ஸ் டெஸ்ட் முதல் பிரியடில் இருந்தது. இருவரும் ப்யூர் சைன்ஸ் குருப். ப்ளஸ் டு வேறு. அவசர அவசரமாக கிளம்பி கூடலூர் பஸ்சை பிடித்தோம்.

மாலை வீட்டிற்கு வந்ததும் வெரோனியை பார்க்க கிளம்பினான் குமரன்.

“டேய் அந்த பொன்னுலாம் நம்மள பாக்குமாடா” என்றேன்.

“தம்பி என்னப்பா கூட்டுச்சேர்ற அது என்னப் பாத்தா போதும் உன்ன எதுக்குடா பாக்கனும்”

“சரித்தான்டா”

கொஞ்ச நாள் இதே வேலையாக பொழுதுகள் ஓடின. ஞாயிறு நாட்களில் சர்ச்சுக்கு போவதும். திரும்புவதும். வெரோனி யின் பின்னால் அலைந்து கொண்டிருந்தான்.

அவனுடைய நோட்டில் “இயேசுவின் இரத்தம் துடைக்க ஓடி வந்தவளே- என் இதயம் நிறைக்க என்று வருவாய்” என எழுதி இருந்தான்.

கேட்டதற்கு “மாப்ள யேசு சிலுவை ய தூக்கி வர்றப்ப யாருமே அவருக்கு உதவலயாம். ஒரு பொன்னு தான் அவர் இரத்தத்தை துடைச்சுதாம்டா” “அந்த இரத்த அச்ச வச்சு தான் இயேசு முகமே வரஞ்சாங்களாம்” ….”அந்த பொன்னு தான் “வெரோனிகா” என் ஆளு பேரு”

“இதயம் நிரப்ப வராளோ இல்லயா இரத்தம் துடைக்க நான் இருக்கேன் மாப்ள” என்றேன்.

“ச் சே போடா”…..” மூடை கெடுத்துக்கிட்டு” என்பான்.

இறுதியில் அந்த ஆண்டவர் அவனுக்கான கிருபையை அளித்தார். முதன் முதலில் என்னிடம் சொல்லும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான்.

“எப்ட்றா”

“அப்டித்தான் மாப்ள” …..”முயற்சி திருவினையாக்கும்”

“கர்த்தாவே”…. இந்த ஜீவனைக் காத்தருளும்”

“யேய் நக்கலா”

“ஏன்டா சர்ச்சுக்கு வாரம் வாரம் கூட்டு போனியே இந்த எபெக்ட் கூட இல்லனா எப் டி டா”

“அதுவும் சரிதான்” என்றான்.

அடுத்தடுத்த நாட்களில் அவர்களின் காதல் பக்கத்து சந்து, மொட்டை மாடி, சர்ச்சுக்கு பின்புறம் என மறைவான இடங்களில் வளரத்தொடங்கியது. அந்த நேரங்களில் அவர்களின் “வாட்ச்மேனாக” நான் பணிக்கப்பட்டிருந்தேன். இரகசிய சந்திப்பு முடியும் தருவாய்களில் “சிரிப்பு சத்தமும்”….” டேய் நாயே” …”ரெம்ப மோசம்டா நீ” என வெரோனியின் குரல் விழுவதுண்டு.

பதிலுக்கு “நான் சைன்ஸ் ஸ்டுடன்ட் பா” இது எல்லாம் பெரிய விசயமா பாக்க கூடாது” என்பான்.
நாகரீகம் கருதி அந்த சொற்களை மட்டும் கேட்பதோடு நின்று கொள்வேன்.

“நேத்து தான் ஜூவாலஜி மேடம் அப்டி கிழிச்சுச்சு அட்டானமிய” தப்பா குறிச்சான்னு” இவன் சைன்ஸ் ஸ்டுடன்டாம்” என நொந்து கொள்வேன்.

கிறிஸ்துமஸ் அன்று அவனை சந்திக்க எங்கள் தெருவின் முக்கில் இருக்கும் வழக்கமான இடைச்சந்தில் வரச் சொல்லியிருந்தாள். அது கொஞ்சம் ரிஸ்க்கான இடம். சந்துக்குள் நடமாட்டம் இல்லாவிட்டாலும் இருபுறமும் இரண்டு மாடி வீடுகள் இருக்கும். மேலே இருந்து யாராவது பார்த்தால் கீழே நடப்பது அப்படியே தெரியும். இருந்தாலும் போகத் தான் செய்தோம். காதல் எப்போதும் “குருட்டு தைரியத்தைக்” கொடுக்கும்.

அது குமரனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தலையில் சிவப்பு நிற முக்காடு அணிந்தபடியே வெரோனி வந்தாள். வலதும் இடதும் வெடுவெடுவென பார்த்த பின்பு ஒரு புத்துக்குள் நுழையும் பாம்பினைப் போல சரசரவென சந்தினுள் மறைந்தாள். கையில் ஏதோ பாட்டிலும் சிறு கவரும் இருந்தது. நான் சந்தினைக் காவல் காத்தபடி இருந்தேன். யாராவது வந்தால் “ஏதேனும் சத்தம் எழுப்பி” எச்சரிக்கை செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெரோனி வெளியே வந்தாள். கால்கள் இரண்டும் தரையில் நிற்காதது போல ஓடினாள்.

“இந்தாடா கொஞ்சம் குடி” என சிவப்பு நிற ஜீசை பாட்டிலோடு நீட்டினான்.

“என்னடா இது”

“வொயின் டா மாப்ள” என்றான்

“ஓகோ” ……..”இயேசுவின் இரத்தம் ஜெயம்”

“பார்ரா…” இதெல்லாம் தெரியுமாடா”

“ம்ம்” …..”இயேசுவின் சதை [அப்பம்] தந்தாளா?”

“இல்ல மாப்ள”…..” அப்றம்

“அவளின் மச்சத்தை சுவைத்தேன்”

“யெது…..”

“ஆமா முத்தம் கொடுத்தா”

அந்த முத்தத்தின் ஈரத்தை நினைத்தாறே சிரித்துக் கொண்டே இருந்தான். அடிக்கடி உதட்டை கடித்து பார்த்தான். என் தொடையை கிள்ளினான். என் தோள் மீது சாய்ந்தபடியே வானத்தை பார்த்தான்.மரத்தைக் கட்டிபிடித்தான். ரோட்டில் இருந்த கல்லை எத்தினான். பெண்ணின் முத்தம் ஆணை எப்படியெல்லாம் பாடுபடுத்தும் என்பதை அவனருகில் இருந்து தெரிந்து கொண்டேன். அதுவும் முதல்முத்தம். சிலாகித்துக் கொண்டிருந்தான்.

“டேய் முத்தம் குடுத்தா குழந்தை பிறந்திரும்னு சொல்லுவாங்களேடா “

“இல்ல மாப்ள அதெல்லொம் இல்ல” ……”பொய்யாம்”

“யாருடா சொன்னா”

“அவ தான் சொன்னா சொல்லிட்டு தான முத்தம் கொடுத்தா”…..” கூடவே குழந்தை எல்லாம் கல்யாணத்துக்கு அப்றம் தானாம்”

“புரிஞ்சிடுச்சு மாப்ள”

“கல்யாணத்துக்கு முன்னாடி முத்தம் கொடுத்தா எப்டி பிள்ள பிறக்கும்”….” கல்யாணத்துக்கு அப்றம் கொடுத்தா தான பிறக்கும்”…”எப்டி நானும் சயின்ஸ் ஸ்டுடன்ட் தான் மாப்ள”

“உனக்கு ஒரு நாள் புரியும் டா”

அன்று இரவு அவன் தூங்காமல் புரண்டு புரண்டு படுத்ததாக கூறினான். வெரோனிக்கு வீட்டிற்கு போனதும் கொடுப்பதற்காக “ஒரு சிலுவை” ஒன்றை வாங்கினான். எப்படியாவது அதை கொடுத்து விட வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவனது சந்தோசம் மாலை வரை நீடிக்கவில்லை.

அவனும் நானும் தெருவில் நுழையும் போதே குமரனின் அப்பா அவனை பெல்ட்டால் அடிக்கத் தொடங்கினார். “வேண்டாம்ங்க வீட்ல போய் பேசிக்கலாம்” என்ற அவனது அம்மாவிற்கும் காலால் மிதி விழுந்தது. தடுக்கப் போன எனக்கும் “ரெண்டு அடி பெல்ட்டால் விழுந்தது”….” அப்பா வேணாம் விடுங்க என்றவனை”

“ஏண்டா படி டா னு சொன்னா காதல் கேட்குதா காதல் உனக்கு”…..” சொல்லி சொல்லி அடித்தார். “ரெண்டு பேரும் தெல்லவாரிதனம் பண்ணிட்டு இருக்கீங்க” என அடிமாட்டை அடிப்பது போல தெரு முக்கில் இருந்து வீடு வரை அடித்தே இழுத்து வந்தார். என் அம்மா தான் ஓடி வந்து அப்பாவின் பிடியில் இருந்து விடுவித்து இருவரையும் என் வீட்டினுள் தள்ளி கதவை அடைத்தாள்.

“என்னணே தோலுக்கு மேல வழந்த புள்ளய இப்டி அடிக்குறீங்களே”

“இந்த வயசுல என்ன காதல் இவனுக்கு”….” படிக்கிற வயசுல”

“சரி விடுங்கணே” என சமாதானம் செய்து அனுப்பினாள்.

குமரன் தரையில் படுத்தவாறே அழுது கொண்டிருந்தான். எழவே இல்லை. சட்டையை கழற்றி பார்த்தேன். அடிமையின் முதுகைப் போன்று அத்தனை வரிகள் கோடு கோடாக இருந்தது. முதுகு என்றில்லை முகம், கை,கால் மேலுதழு தெரித்து இரத்தம் கசிந்து கொண்டிருந்தது. “வெரோனி” என முனங்கிக் கொண்டிருந்தான். எனக்கும் அங்கங்கே காயங்கள் இருந்தது. அம்மா இருவருக்கும் தேங்காய் எண்ணெய் வைத்து நீவி விட்டால். “ஏன் டா குமரா இப்டி பண்ற ஒத்தப்புள்ள நீ உங்கம்மா எம்புட்டு வேதனை படறா தெரியுமா” என்றாள்.

குனிந்த தலை நிமிராமல் அழுது கொண்டே இருந்தான்.

இரவு என் அப்பா வந்தார். “என்னங்கடா அடி ரெம்ப பலமோ” என்றார். “சரி நான் பேசுறேன் அவன்ட்ட” என்றார். அப்பாவும் அவரும் சிறு வயது முதலே நண்பர்கள் தான். இருவரும் ஒன்றாக வேலை கற்றுக் கொண்டவர்கள். “கொத்தனார்” வேலை என்பதால் பெரும்பாலும் இருவரும் சேர்ந்தே கான்ட்ராக்ட் பிடிப்பதுண்டு. அப்பா “கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில்” இருந்தார். குமரனின் அப்பா வுக்கு அதில் எல்லாம் நாட்டம் கிடையாது. அப்பாவின் அழுத்தத்தால் சந்தா கட்டும் உறுப்பினராக மட்டும் இருந்தார். மற்றபடி வேறெதிலும் பங்கெடுக்க மாட்டார். இனி அவரை அப்பா பார்த்துக் கொள்வார் என்கிற நம்பிக்கை வந்தது. இரவு உணவாக “கோழிக்கறியும் சப்பாத்தியும்” வந்தது. வாங்கிய அடிக்கு ஆறுதலாக இருந்தது எனக்கு. குமரனுக்கோ அது எந்த விதத்திலும் மகிழ்வை தரவில்லை.

“அடி வாங்க தெம்பு வேணாமா சாப்டுடா என இரண்டு சப்பாத்தியை வலுக்கட்டாயமாக வாயில் திணித்து ஊட்டி விட்டாள். என்னோடு தூங்கும் போது அவன் கேட்டது “ வெரோனிய பாக்கனும்டா” என்றார். அடிவயிற்றில் ஒரு நடுக்கம் கண்டது. “சரி டா நாளைக்கு எப்டியாச்சும் பாக்கலாம் டா” என்றேன்.

அலுப்பில் கண்களை மூடுகிற போது சர்ச்சில் எழுதியிருந்த” நான் உன் கூடவே இருந்து செய்யும் காரியங்கள் பயங்கரமாயிருக்கும்”
என்கிற வாசகம் ஒரு நிமிடம் முன்னால் வந்து மறைந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் “வெரோனி” எங்கள் கண்ணில் படவே இல்லை. திருவிழாவில் பிள்ளையை பறிகொடுத்தவன் போல அவன் அவளது வீட்டு பக்கம் போவதும் வருவதுமாக அலைந்து கொண்டிருந்தான். “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்கிற வாசகத்தினை தாங்கியிருந்த அந்த வீட்டுக்கதவு மட்டும் திறக்கவில்லை. வாரமும் அப்படியே கடந்தது.

அடுத்த நாட்களில் வெரோனி வீட்டிற்கு புதிது புதிதாக யாரோ வந்து போனார்கள். ஒருவனின் இதயத்தை அவன் கண்களின் முன்பே பறித்து சிலுவையில் அடித்து ஒருவரால் இரசிக்க முடியுமா?

ஆம் வெரோனியின் அப்பா அதைச் செய்தார். “இருதயமே இல்லாத இருதயராஜ்” அதைச் செய்தார். பற்றாக்குறைக்கு குமரனின் வீட்டிற்கு வந்து பத்திரிக்கை வைத்தார். “உங்க பையனால எதும் பிரச்சினை வராம பாத்துக்குங்க” என்றார். எங்கள் வீட்டிற்கு வரும் போது அப்பா “.ஏன் சார் படிக்கிற புள்ளய இதெல்லாம் சகஜம் தான” ….”இப்பவே கல்யாணம் பண்ணனுமா” …..”எதிர்காலத்துல படிச்சி நல்ல நிலைமைல இருந்தா நாமளே” என சொல்லும் போதே “சார் இதெல்லாம் வேணாம்.”…..” நாங்க கிறித்தவத்து ஆளுங்க காலம் காலமா தேவனிக்கு ஊழியம் பன்ற குடும்பம்”….”ஒரு இந்து பையனுக்கு யோசிக்கவே முடியாது” கிளம்புறேன். என்றார்.

உலகத்தில் காதலுக்கு மட்டும் எத்தனை எதிர்ப்புகள். மதமாக,சாதியாக,பணமாக என எத்தனை வடிவங்களில் தான் இந்த காதலுக்கு எதிரிகள். இல்லை உண்மையில் காதலுக்கு மதமோ,சாதியோ,கடவுளோ எதிரியில்லை. இதையெல்லாம் தூக்கிச் சுமக்கின்ற மனிதன் தான் காதலுக்கு எதிரி. அதை எதிர்ப்பதற்கு இவையனைத்தையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தி கொள்கிறேன். தேவைப்படும் நேரத்தில் மதம், சாதி, இன்ன பிற. பலிக்காத பட்சத்தில் அதன் பெயரால் அவர்களைக் கொல்கிறான். எனக்கு குமரனை எப்படி தேற்றுவது என்று தான் தெரியவில்லை. அத்தனை நடந்த பிறகும் “வெரோனிய ஒரு தடவ பாக்கனும்” என்றான்.

அந்த நேரத்தில் அதை செய்து வைப்பது மட்டுமே எனக்கு சரியெனப் பட்டது. விடிந்தால் கல்யாணம் சர்ச்சில் நிச்சயம் செய்வதற்காக கூட்டம் கூடியிருந்தது. மேடைக்கு அருகில் இருந்த ஜன்னல் வழியாக மணப்பெண்ணாக இருந்த வெரோனியை பார்த்தான். அத்தனை ஒளி விளக்குகள் மேலே பட்டும் பிரகாசமற்றதாக இருந்தது அவளது முகம். அந்தக் கம்பிகளின் வழியே குமரனின் கண்களை அவள் பார்த்தாள். அவளது கண்கள் வழியே அவன் வழிந்து கண்ணீராக வெளியேறிதைக் கண்டதும்.

“வெரோனி என்கிட்ட வந்திடு” என கத்த தொடங்கி விட்டான். நிலைமை மோசமாவதற்குள் அவனை வலுகொடுத்து இழுத்து வந்தேன்.

“உனக்கு தெரியுமாடா”….. “ அவ ஒரு தடவ வயித்துல கைவைச்சு இது நம்ம பிள்ளைங்க வளர போற இடம்” சொன்னா…

“…….”

“என் நெஞ்சுல தலை சாச்சு இது நான் இருக்க இடம் டா”…..” யாரையும் விடக் கூடாது” சொன்னா….”எந்த சூழ்நிலை வந்தாலும் விட்டு போக கூடாது நானும் போக மாட்டேன் சத்தியம் லா வாங்குனா”
எல்லாம் பொய்யாடா”

“இல்லடா அவ என்ன செய்ய முடியும்”

“வெரோனி” …..என கத்தி அழுதான்.

மறுநாள் “வெரோனி” வீட்டின் முன்பு பயங்கர கூட்டம் இருந்தது. அம்மா தான் அந்த விசயத்தை சொன்னாள். “டேய் அந்தபுள்ள தூக்கு போட்டுகிச்சு” ….”விசயம் தெரிஞ்சு குமரன் ஓடிட்டான்” சீக்கிரம் போய் புடிடா”……பரபரத்தபடி எழுந்து ஓடினேன். குமரன் கண்ணில் படுபவரை எல்லாம் அடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய அப்பாவும் நானும் இழுத்து பிடித்தோம். பார்க்க வந்தவனை தடுக்க நினைத்ததால் நடந்த விபரீதம் அது. “அந்த பையன ஒரு தடவ பாக்க விடுங்க சார்” ப்ளீஸ் என அப்பா கெஞ்சி கேட்ட பிறகு அனுமதித்தனர். எப்படி சொல்லித் தொலைப்பது அவனது கதறலை. அதனை வார்த்தைகளால் தான் எழுதி விட முடியுமா. எல்லோரும் பிணமாக நினைத்த அந்த உடலினை உயிருள்ள பெண்ணாக அவன் நினைத்து அழுதான். “முழிச்சுப்பாரு வெரோனி”……” உன் மாமா வந்திருக்கேன் டி” …..”என்ன விட்டு போகாதடி நாம எங்கயாவது போயிரலாம்” ….அவளுடைய அப்பாவிடம் வந்து “சார் ப்ளிஸ் எங்கள விட்ருங்க சார் நாங்க போயிரோம்” வெரோனிய என்கிட்ட குடுத்துருங்க என காலில் விழுந்து அழுதான்.

“வெரோனி வாடா”…..முகம் எல்லாம் வாடியிருப்பதாக நினைத்து ஈரத்துணியால் முகத்தை துடைத்தான். “ மச்சம் இருந்த இடத்தை அழுத்தி அழுத்தி துடைத்தான். அவளின் இருகைகளையும் இணைத்து அதன் நடுவில் வைத்திருந்த “ஜெப மாலையை” தூக்கி எரிந்தான். திடீரென “நாங்க போறோம்” என அவளைத் தூக்க முயன்றான். அனைவரும் அவனைத் தடுத்து அமர வைத்தனர். “வெரோனி” …..என்றவாறே மயங்கி விழுந்தான். வீட்டிற்கு கூட்டிச் சென்று படுக்க வைத்தோம். என் அப்பா மட்டும் கல்லறை வரை சென்று இறுதிசடங்கு முடிந்த பின்பு வீடு வந்தார்.

“அவன பாக்கவே முடியல பயமா இருக்கு நானும் வெரோனி கிட்ட போக போறேன்” சொல்றான் என இரவு குமரனின் அம்மா அழுதாள்.

“வரமா வரமிருந்து பெத்த புள்ள”

“சரி விடுக்கா சரி ஆகிடும்” …..”கொஞ்ச நாள் தனியா விடாதீங்க”என அம்மா சமாதானம் சொன்னாள்.

வெரோனி இறந்து அடுத்த இரண்டாம் நாள் இரவு பண்ணிரெண்டரை மணி வாக்கில் “டக் டக் டக்” கதவு தட்டும் சத்தம். குமரனின் அப்பா தான். “குமரனை காணோம் என் பக்கத்துல இருந்தான்” என்றார். அப்பா வேக வேகமாக சட்டையை மாட்டி டார்ச்லைட்டை எடுத்தார். நானும் கிளம்பினேன். ஆளுக்கொரு பக்கமாக தேடினோம். நான் அம்மாவின் செல்போனை எடுத்துக் கொண்டேன். “பார்த்தா உடனே கூப்பிடு டா” என அப்பா சொன்னார்.

அரக்க பரக்க சைக்கிளை மிதித்து தேடத்தொடங்கினேன். சர்ச்சில், மெயின் ரோட்டில் என தேடினேன் காணவில்லை. சுருக்கென ஒரு விசயம் தோன்றியது. வேகவ்கமாக சை க் கிளை அழுத்தினேன். நான் நினைத்தது சரி தான் அந்த உருவத்தை பார்த்தேன். கல்லறைகளுக்கு நடுவே “வெரோனியை” புதைத்த இடத்தில் அவளுக்காக வாங்கிய “சிலுவை யை” கையில் வைத்தபடி இருந்தான்.

“குமரா என்றேன்”….

“ ஆதியில் இறந்த பின்பு உயிர்த்தெழுந்த இயேசுவே என் வெரோனியை உயிர்த்தெழ வை”

“உயிர்த்தெழு வெரோனி”
“உயிர்த்தெழு”

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனாலும் அந்த தருணத்தில் தோன்றியதெல்லாம்.

“பிதாவே நீ உயிர்த்தெழுந்தது உண்மையோ இல்லையோ இங்கே செத்து கொண்டிருக்கும் என் நண்பனுக்காக வெரோனியை உயிர்ச்தெழச் செய்” ….

என் நண்பனுக்காக தயவு செய்து கேளுங்களேன் வெரோனி “உயிர்த்தெழு”

 

எழுதியவர் 

ஐ.முரளிதரன்

 

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *