நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – கருப்பு அன்பரசன்நூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி
ஆசிரியர்: அ. கரீம் 
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ரூ. 140

உலகத்தின் பல நாடுகள் கொரோனா பெரும் தொற்றுக் காலத்தில் தம் மக்களைக் காப்பாற்ற, நோய்த் தொற்றிலிருந்து அச்சமின்றி வாழ்ந்திட நிறபேதமின்றியும், கட்சி வித்தியாசமின்றி எல்லோரும் இணைந்து மக்களுக்கான அரசாக மாறி ஒருமித்து நின்றார்கள்.. மக்களின் உயிர் காத்திட ஒற்றுமையாய் இருந்து
தொற்றை எதிர்கொண்டார்கள். ஆனால் இந்திய தேசத்தில் மட்டும் ஆளும் அரசாங்கம் நோய்த் தொற்றை எதிர்கொண்ட விதமே இந்திய மக்களுக்கும், அறிவியலாளர்களுக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

தீவிரவாதமும் பயங்கரவாதமும் எல்லா மனிதர்களுக்குள்ளும், நிறங்களுக்குள்ளும் கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் கலந்திருக்கும் இவர்தான் பயங்கரவாதி தீவிரவாதி எனத் தெரிந்து கொள்ளாதபடி. இந்தப் பெரும் தொற்றுக் காலத்தில் மேற்சொன்ன இரண்டு பயங்கரமான வார்த்தைகளை விட அதிபயங்கரமான வார்த்தையொன்று குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு எதிராகவே அரசு நிர்வாகம் தொடங்கி ஆட்சியாளர்கள் வரை விடாமல் தொடர்ந்து உச்சரிக்கப்பட்டது. “பயங்கரவாதம், தீவிரவாதம்” என்ற சொற்களை விட இந்த வார்த்தை பேராபத்தை விளைவிக்கக் கூடியதாக இந்தியா எங்கிலும் திட்டமிட்டு பரப்பப்பட்டது.

“சிங்கிள் சோர்ஸ்”இந்த வார்த்தை இந்திய அரசு நிர்வாகத்தால், ஆளும் இந்துமதவெறி சக்திகளால்; திட்டமிட்டே முஸ்லீம் சிறுபான்மை மக்களை அடையாளப்படுத்திட பெரும்பான்மை மக்களுக்கு எதிரான ஒரு தொற்று நோயாக அம்மக்களை காட்சிப்படுத்திட, குயுக்தியான நுட்பமான அரசியலை கையில் எடுத்துக்கொண்ட கொடூரத்தை கேவலத்தை பார்க்க முடிந்தது இக் காலத்தில். எல்லா மக்களாலும் மிகச்சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய; சிறுபான்மை மக்களை பார்த்து பயந்து விலகி ஓடக்கூடிய அல்லது அம்மக்களை அந்நிய நாட்டவர்கள் என வெறுத்து ஒதுக்க கூடிய வெறுப்பு அரசியலை நிகழ்த்துவதற்கு ஒரு காரணியாக இந்தப் பெரும் தொற்றையும் இந்தியாவிற்குள் இந்து மதவெறி சக்திகள் வெகு நேர்த்தியாக பயன்படுத்திக் கொண்டார்கள் “சிங்கிள் சோர்ஸ்” என்கிற வார்த்தைகளினால் மக்கள் பெரும் தொற்றுக்கு பயந்தார்களோ இல்லையோ, சிங்கிள் சோர்ஸ் என்கிற வார்த்தைக்கு பெரும்பான்மை சிறுபான்மை மக்கள் அனைவருமே பயந்தார்கள். இந்திய நாட்டை, பெரும்பான்மை மக்களை அழிக்க வந்திருக்கும் பெரும் தொற்றாக பார்க்க வைக்கப்பட்டார்கள்.. சித்தரிக்கப்பட்டார்கள் இந்து மதவெறியர்களின் விஷம் மிகுந்த வஞ்சக அரசியலால் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தினர் மீது இந்த வார்த்தையைப் பயன்படுத்தி.

உலக மக்களையே அச்சுறுத்தி வந்த பெரும் தொற்றுநோய் ஒன்றினை பார்த்த இந்திய மக்கள் அனைவரும் பயந்து கிடந்த பொழுது; எளிய மக்கள் அனைவரும் ஒரு கவளச் சோற்று உருண்டைகாக தெருவெங்கும் பசி மிகுதியால் பெரும் துயரத்தால் தெருவெங்கும் அலைந்திட; வயிற்றுப் பசியின் பெரும் துன்பத்தால் குழந்தைகள் அழுதழுதே தொண்டை வறண்டு போக செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு அறிந்தும் கூட அவர்களை பாதுகாக்க வக்கற்றதாக இந்த அரசு தன்னை “சிங்கிள் சோர்ஸ்” என்று வார்த்தைக்குள் தன்னை வெத்துவேட்டு அரசாக அறிவித்துக் கொண்டது. பெரும் தொற்றை அறிவியல் ரீதியாக எதிர்கொள்வதென்பதை அறிந்து இருந்தாலும் கூட அதனை தான் பின்பற்றி வரும் பகுத்தறிவுக்கு எதிரான கருத்தியலில் “சிங்கிள் சோர்ஸ்” என்கிற விஷம் தோய்த்தெடுத்த வார்த்தையை பரவலாக்கி ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களையே பெரும்பான்மை மக்களுக்கு எதிராக நிறுத்திய கேவலம் இந்திய தேசத்தில் மட்டுமே நிகழ்ந்தது. பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை முஸ்லிம் மக்களை பார்த்து எள்ளிநகையாட செய்த வார்த்தையாக, அச் சிறுபான்மை மக்களே தங்களின் அடையாளத்தை மறைத்துக்கொண்டு சொந்த நாட்டிலேயே அச்சத்தோடு வெளியே வருவதற்கு; வீட்டிலேயே முடங்கி கிடப்பதற்கும், விபரீதம் மிகுந்த பதட்டமான ஒரு சூழலை நிகழ்த்த பயன்படுத்தியது இந்த வார்த்தை வழியாக ஆளும் அரசு.. இருபெரும் சமூகத்தை சார்ந்த சாதாரண எளிய மக்கள் இரண்டு மதத்தின் அடிப்படை வாதத்திற்கு எதிராக இருந்து அன்பை பேசக்கூடிய மக்கள், இந்த அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்பதை தன்னுடைய “கிருமி நாசினிகள்” கதையில். பெருநாளன்று எப்பொழுதும்போல் பர்கத் வீட்டிலிருந்து பிரியாணிக்காக மாலை வரை காத்திருக்கும் குமாரின் அப்பா அம்மா தன் வயிற்றில் குழந்தையை சுமந்து கொண்டிருக்கும் உமா அக்கா ஆகியோரின் குடும்ப நேச உணர்விலிருந்து பேசியிருப்பார் அதனை ஆசிரியர். அரசு திட்டமிட்டு உருவாக்கிய “சிங்கிள் சோர்ஸ்” என்கிற வார்த்தைக்கு எதிராக அன்பானவர்கள் இப்படித்தான் உள்ளார்ந்த எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்தார்கள்.. எதிர்கொண்டார்கள்.இப்பெரும்தொற்றுக் காலத்தில்தான் இந்தியாவின் எளிய மக்கள், தொழிலாளர்கள் எப்படியெல்லாம் நிராயுதபாணியாக தெருவெங்கும் நிறுத்தப்பட்டு கொன்று புதைக்கப்பட்டார்கள் ஆட்சியாளர்களாலும் அதிகாரிகளாலும் அவர்களின் கையாலாகாத்தனத்தாலும்.. எளியவர்கள் அனைவரையுமே பசி கொன்று புதைத்தது.
மக்களின் தன்மானத்தையும் சுயமரியாதையையும் பலி வாங்கியது தூக்குக் கயிறும் விஷ நிறைந்த பாட்டில்களும் இங்கே. தினமொரு வேலைக்கு சென்று உடல் உழைத்தாலே குடும்பத்தவரின் பசி போக்க இயலும் என வாழ்ந்தவர்கள் எத்தனை நாள்தான் இன்னொருவரின் கையேந்திக் இருப்பது, கையேந்திக்கையேந்தி கைகள் இரண்டும் முடமாகி போனவர்களை விட குடும்பம் குடும்பமாய் மூச்சு நிறுத்தி செத்தவர்கள் நிறையவே..

அந்த கொடுமை மிகுந்த நாட்களில் பல இலட்சக்கணக்கானோர் இந்தியாவெங்கிலும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்து கொண்டே இருந்தார்கள்.. தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக தங்களின் சொந்த கிராமங்கள் நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்து பிழைக்க வந்தவர்கள்.. அரசு அறிவித்த ஒரே ராத்திரி அறிவிப்பால்  பிழைக்க வந்த இடத்தில் வாழ வழியெல்லாம் மறுக்கப்பட்டு செத்தாலும் சொந்த ஊரில் போய் செத்து ஒழியலாம் என நடந்து சென்ற தொழிலாளர்களின் குடும்பங்கள் கொத்துக் கொத்தாய் செத்துப்போனவை எத்தனை..?

தங்களின் கழுத்தை தாங்களே அறுத்துக் கொண்டு மாண்ட உயிர்கள் எத்தனை என்கிற எதற்கும் இங்கு கணக்கேதும் கிடையாது.. நடைபோட்டவர்கள் குடும்பத்தில் வயதானவர் அல்லது வயிற்றுப் பட்டினியால் குழந்தை எவரேனும் ஒருவர் செத்துப்போனால் அந்த பிணத்தைக் கூட புதைக்க வழியின்றி தவித்து பெரும் கொடுமைகளை எவரும் இங்கு அறிந்திலர்.. நடந்து சென்றவர்களின் கண்களில் தென்பட்ட ஆறுகளிலும் குளங்களிலும் கிணறுகளிலும் நீர் இருக்கிறதோ இல்லையோ எம் பிள்ளைகளின், எளிய மக்களின் செத்த பிணங்கள் ஏராளம் ஏராளம்..
ஆற்று நீரும், குளத்து நீரும், ஏறி நீரும், கிணற்று நீரும் எம் குழந்தைகளின்..
எம் குடும்பங்களின் உயிர் குடித்து தங்களின் தாகத்தை தீர்த்துக் கொண்ட கொடுமை தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

அப்படி நாளெல்லாம் வாரமெல்லாம் தன்னுடைய சொந்த ஊர் தேடி.. கிராமம் தேடி.. மனைவி, மக்களைத் தேடி.. இறந்தவர்களின் நிஜத்தை புனைவாக்கி வாசிப்பவர்களின் கண்களில் ரத்தம் கசிய”அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி” என்கிற சிறுகதைத் தொகுப்பை வலி மிகுந்த எழுத்தில் கொடுத்திருக்கிறான் எங்களின் எழுத்தாளன் கரீம்.

மஞ்சுநாத் கொடுத்த அந்த ஒரு ரொட்டியை, தன் வயிறு பசியெடுத்தழுத போதும்; வேண்டாமென மறுத்து “நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும், நீங்கள் சாப்பிடுங்கள்”என்று சொல்லி நடக்கத் தொடங்கிய அகல்யா “ஜெய் ஸ்ரீ ராம்” என்று அடிவயிற்றிலிருந்து உரக்கக்கத்தி ஆற்றுக்குள் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளோடு குதித்து ஆற்றுநீர் தாகசாந்தியடைய ஜலசமாதியாகிப் போனாள்.. தன் உயிரினும் மேலாக வளர்த்த குழந்தைகளின் பசியினை எதிர்கொள்ள முடியாமல் ஆற்றுக்குள் தூக்கி வீசி எறியும் பொழுது அந்தத் தாய் எத்தனை முறை செத்திருப்பாள் என்பதை யோசிக்க முடியவில்லை கரீம். வலிமிகுந்த நிஜத்தை இந்திய மக்களின் பெரும் சோகத்தை புனைவாக “அகல்யா வுக்கும் ஒரு ரொட்டி” கொடுத்திருக்கும் உன்னுடைய வலியான வலிமையான விரல்களுக்கு என்னுடைய விழி நீரின் ஈர முத்தங்கள் தோழா..

இந்திய நாட்டின் சிறுபான்மை மக்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்கிற ஒரு கருத்தை கைபர் போலன் கணவாய் வழியாக பிழைக்க வந்து கும்பல் ஒன்று
தங்களின் வஞ்சனையும் வஞ்சகமும் மிகுந்த அரசியல் சூதால் ஆட்சியதிகாரம் கைப்பற்றி இன்று அதே கருத்தினை அரசியல் சட்டமாக மாற்ற பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். சொந்த நாட்டின் குடிமக்களை அகதிகளாக.. கைதிகளாக்கி, திறந்தவெளிச் சிறைச்சாலையாக நாட்டினை மாற்றிட எத்தனிக்கும் பொழுது எழும் எதிர்ப்புக் குரலை அடக்கிவிட, அரசு அதிகாரத்தை பயங்கரவாதமாக மாற்றி களத்தில் நிற்கும் கொடுமை மிகுந்து அரசின் நடவடிக்கைகளை “இன்று தஸ்தகீர் வீடு” சிறுகதையில் பதிவாக்கி இருக்கிறார் ஆசிரியர்.கருத்தியல் சார்ந்து மூடநம்பிக்கைகளை கேள்விகளாக்கி பகுத்தறிவு வெளிச்சத்தை நிறுவ முற்படும் வேளையில் அது கொலையும் செய்யப்படலாம் மூட நம்பிக்கைகளால் மட்டுமே உயிர்வாழும் அடிப்படைவாதத்தால். அர்த்தம் மிகுந்த வலிகொண்ட கண்ணெதிரே நிகழ்த்தப்பட்ட ஒரு கொலையினை புனைவாக மாற்றி
“அன்பே ஆசியா.. செல்லமே யாஸ்மின்”..
இயல்பான சில கேள்விகளை முன் நிறுத்தி அடிப்படை வாதத்தின் முகத்தினில் அழித்தொழிக்க முடியாத தழும்பை ஏற்படுத்தியிருக்கிறார் கரீம்.
“அவன்” கைகளில் இறுகிப் பற்றிக் கொண்டிருக்கும் புரோட்டாவின் மீது தெரிந்திருக்கும் கருஞ்சிவப்பு ரத்தத் துளி சூட்டினில் வாசிப்பவரின் இருதயததை உறைய வைத்து விட்டாய் கரீம். உலகம் உருண்டை என ஒத்துக்கொண்டது.. அறிவியல் நிலைத்து நிற்கும் தன்னை நிரூபிக்கும்.. குத்துபட்டு முள்வேலிக்குள் விழுந்து கிடக்கும் “அவனின்” குடலில் இருந்து தெறித்து விழுந்த ரத்தத் துளியின் வெப்பச் சூட்டிலிருந்து உருவாகியிருக்கும் வெளிச்சம் உன் எழுத்துக்கள் வழியாக எல்லா மக்களின் மனங்களுக்குள்ளும் காத்திரமாய் அப்படியே கொண்டு சேர்க்கும் நீ செய்யத் தொடங்கி இருக்கும் கலகத்தை.!

சிறுபான்மை சமூகத்தில் அடிப்படைவாதம் பேசி பொதுச் சமூகத்தில் சிறுபான்மை மக்களை கலக்க விடாமல்.. இணைய விடாமல் பார்த்துக் கொள்ளும் சைத்தான்களுக்கு எதிராக கலகத்தை தொடக்கி இருக்கிறாய்.. கலகம் தொடரட்டும் அன்பும் வாழ்த்துக்களும் தோழா.

ஆகப்பெரிய எழுத்து ஜாம்பவான்..
எழுத்து வியாபாரி.. பெரும்பான்மை சாதியின் அடையாளத்தோடு.
நடுநிலை எழுத்தாளன் என்கிற முகமூடி அணிந்து சமாதான சகவாழ்வு போதித்துக் கொண்டு மேட்டிமை வாழ்வு நடத்தும் சிலபல புளிச்ச மாவிற்கு,
அவன் எழுதிய புத்தகங்களே அவன் எண்ணத்திற்கு தீ வைக்கும் ஒரு கனவினை..
நடந்தால் நன்றாகத்தான் இருக்கும் கரீம்.

சிறுகதை தொகுப்பிற்குள் அரசியல் பகடியாக.. எளியவர் படும் துயரங்கள்.. எதிர்கொள்ளும் வாழ்வியல் சோகங்கள்..
உயிர்களை நேசித்திடும் பேரன்பாளர்கள்.. நடைமுறை வாழ்க்கையில் அன்பினை தொலைத்த கணவன் மனைவி..
இப்படியானவர்களை, நாம் தினந்தோறும் சந்திக்கக்கூடிய நமக்கு நெருக்கமான பலரை கதாபாத்திரங்களாக்கி கதைகளை சொல்லி இருக்கிறார்..
சில உண்மைச் சம்பவங்களை புனைவாக மாற்றியும்.

படைப்பாளி படைத்திடும் ஒவ்வொரு ஏழுத்துக்குள்ளும் ஒரு அரசியல் இருக்கும் . பிரச்சாரம் இருக்கும்.. படைப்பின் நோக்கமே பிரச்சாரம்தான். அந்த பிரச்சாரம் எப்படி இருக்கிறது..? எந்த அழகியல் தாங்கி?.. எவரோடு அது தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறது.? எவரின் கருத்தை அது உயர்த்திப் பிடிக்கிறது
என்பதைப் பொருத்தே அந்த எழுத்தும் அவனும் சமூகத்தால் போற்றக் கூடியதாக மாறுகிறார்கள்.! கொண்டாடப்படுகிறார்கள்..!!
கரீம் எழுத்து வழியே பேசுவது முழுக்க முழுக்க எளிய மக்களின் வாழ்வினை.. அம் மனிதர்களிடம் தொடரும் இயலாமையின் மேலே நின்று கொக்கரிக்கும் மேட்டிமை மக்களுக்கு எதிரான வலுவானதொரு ஆட்டத்தினை தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். வலு கொண்டவர்களின் வஞ்சனை மிகுந்த உத்திக்கு தினம்தினம் தோற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு, தன்படைப்புகள் வழியாக வலியின் வேதனையை ரௌத்திரத்துடன் சொல்லி புது ரத்தம் பாய்ச்சி உசுப்பி விடக்கூடிய வேலையினை திறம்படச் செய்கிறார்.கரீம்.. தோழா..
காலத்தின் அடையாளம் நீ..!
காலத்தின் கண்ணாடி உனது எழுத்து..!
எளியவர்களின் படைப்பாளி நீ.

நிகழ்காலமும் எதிர்காலமும் உன்னைக் கொண்டாடும்.

அன்பும் வாழ்த்துக்களும் கரீம்.

கருப்பு அன்பரசன்

குறிப்பு:
முதல் பதிப்பில் வெளியான அத்தனை புத்தகங்களையும் முதல் பிரதி எனச் சொல்லியே எல்லோரையும் அவசியம் படிக்கச் செய்து உனது திறமையையினையே வருங்காலத்தில் உன்னைப் போன்ற இளம் எழுத்தாளர்கள் பின்பற்றுவது சிறப்பு.