நூல் அறிமுகம்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி – ராதிகா விஜய் பாபுநூல்: அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி
ஆசிரியர்: அ. கரீம் 
வெளியீடு: எதிர் வெளியீடு
விலை: ரூ. 140

சிறுகதை என்பது சிறு நிகழ்வுகளையோ உணர்வுகளையோ மட்டுமல்ல நாட்டில் நிகழும் பெரிய அதிர்வுகளையும் அந்த ரணம் மாறாமல் வாசிப்பவர்களுக்கு கடத்த முடியும் என தோழர் கரீம் அவர்கள் நிரூபித்திருக்கிறார்.

அனைத்துக் கதைகளையும் ஒரே நாளில் படித்து முடித்து விட முடியவில்லை ஒரு கதையைப் படித்து ஆசுவாசப் படுத்திக் கொண்டு சிறு இடைவெளிக்குப் பிறகே அடுத்த கதையை படிக்க முடிந்தது அவ்வளவு கனமான கதைக்களமும் வலியும் வேதனையும் பயமும் வெளிப்படுகிறது.

அன்பே ஆசியா செல்லமே யாஸ்மின் கதையில் மதம் என்பது மனிதனை ஒழுங்கு படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் ஆவதைப் போல ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்ட மதமே கொலை செய்ய காரணமாகிறது என்பதை பார்க்க முடிகிறது. ஒரு மதம் சார்ந்த வாட்ஸ்அப் குழுவில் நடைபெறும் விவாதம் கொலையில் முடிவதை விறுவிறுப்புடன் கூறியிருக்கிறார்.

தேச விரோதியின் எஞ்சிய குறிப்புகள் சமுதாயத்தின் மீது அக்கறையும் மக்களின் மீது அன்பும் கொண்ட அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களின் நிலையை விளக்குகிறது இந்த கதையை படிக்கும் பொழுது சமீபத்தில் கைது செய்யப்பட்ட திஷாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அதிகாலை நிசப்தம், ஒரு அரசாங்கம் தினமும் அதிகாலையில் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டி உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்கிறது என்றால் அது எவ்வளவு கொடுங்கோல் ஆட்சியாக இருக்க முடியும் இந்தக்கதையில் ஆதவன் தீட்சண்யாவின் லிபரல் பாளையத்தையும் இணைத்து இருப்பது சிறப்பு லிபரல் பாளையமாக இருந்தாலும் குந்திய தேசமாக இருந்தாலும் அறிவுஜீவிகளுக்கு தேசத்தில் இடமில்லை என்று அவர்களை அழிப்பது வருங்கால நம் நாட்டைப் பற்றி பதற வைக்கிறது.

இன்று தஸ் கதிர் வீடு, ஒரே நாடு ஒரே மதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் அரசின் புதிதாக உருவாகியுள்ள குடியுரிமை சட்டத்தினால் பல அப்பாவி மனிதர்கள் கண்டிப்பதும் தண்டிக்கப் படுவதை யும் விளக்கியுள்ளார்.

அகல்யா வுக்கு ஒரு ரொட்டியும் கானல்நீர் உருவங்களும் கிருமிநாசினிகள் கதைகள் ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மன உளைச்சல்களையும் கஷ்டங்களையும் விளக்கியுள்ளார்.

எதிர் வெளியீடு, 96, New Scheme Road, Pollachi (2021)

புலம்பெயர் தொழிலாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு நடந்த நடையை அவர்களுடன் பயணப்பட்ட ஒரு களைப்பை ஏற்படுத்துகிறது.
இதிகாசத்தில் ரிஷிகள் சாபம் இடப்பட்டு ராமபிரானால் மீட்டு காப்பாற்றப்பட்ட அகல்யா ராமர் சீடர்களால் வதம் செய்யப் படுகிறாள் என்ற வரிகளின் வலி பசியின் கொடுமையால் இறந்த அகல்யா விற்கு ரொட்டியை ஆற்றில் தூக்கிப் போடும் பொழுது ஏற்படுகிறது.

கானல்நீர் உருவங்கள் ஊரடங்கு காலத்தில் பிச்சைக்காரரின் நிலையை எடுத்துரைக்கிறது.

கிருமிநாசினிகள், ஊரடங்கு காலத்தில் இரண்டு மதத்தவர்கள் இடையே வன்மத்தை உருவாக்கி,
பிரச்சனையை உருவாக்குபவர்களுக்கு இடையில் வேறு வேறு மதத்தை சேர்ந்த 2
நண்பர்களின் அன்பு அழகாக வெளிப்படுகிறது.

சாம்பல் பறவைகள் ஒரு புத்தகம் ஒரு எழுத்தாளரிடம் முற்போக்கு சிந்தனையுடன் பேசுவதை நகைச்சுவையுடன் நகர்த்தி இருக்கிறார்.

எம்ஜிஆருக்கு வயசாயிடுச்சு கதையில் ஒரு வயதானவர் தன் குடும்பத்தில் உள்ள மாப்பிள்ளை கல்லால் சுரண்டப்படுவது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் போல் நடிப்பதற்கு கூட்டிச் செல்லும் குழுவினர் ஆளும் ஏமாற்றப்படுவதை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.

பஷீரின் கடைசி கிடாய் 80 வயதை எட்டிய முதியவர் செம்மறி ஆட்டுடன் ஏற்படும் இணக்கத்தை யும் பிரியத்தையும் அழகாக விளக்கியிருக்கிறார்.

வறண்ட நிலத்தில் பூ நீண்ட காலத்திற்குப் பிறகு வயதான மனைவியின் மீது ஏற்படும் பரிவையும் காதலையும் அழகாக கூறியுள்ளார்.

சிறந்த சிறுகதைகளை படைத்த கரீம் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

பெங்களூரிலிருந்து
ராதிகா விஜய் பாபு