தமது எதிர்கால வருவாய் குறித்து விவசாயிகளிடமும் ஆலைத் தொழிலாளரிடமும் அதிகமான பிரமையைத் தோற்றுவிக்கக் கூடிய நேரம் இதுவல்ல.

கடந்த ஆண்டு நிதி ஆயோகின் முதன்மை அதிகாரி அமிதாப் காந்த் அவர்கள், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பெரும் சீர்திருத்த நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் பயனளிக்குமென்றாலும், பொருளாதாரத்துக்கும், அதன் வளர்ச்சி விகிதத்துக்கும் பெரும் கேட்டை ஏற்படுத்தி விட்டனவென்று மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

இந்தக் கேடு விளைவித்த சீர்திருத்தங்களின் முடிவான பலன்கள் தெரிவதற்கு முன்னாலேயே, மோடி அரசு புதிய வேளான் மசோதாக்கள் மூலமாகவும், தொழில் சட்டத் திருத்தங்கள் மூலமாகவும் மேலும் சீர்குலைவை உருவாக்குவதைத் தேர்ந்தெடுத்து விட்டது.

இந்த நடவடிக்கைகளின் தகுதி அல்லது வேறு ஒன்றுக்கு அப்பாற்பட்டு, மிகவும் முக்கியமானது என்னவென்றால் இந்தச் சீர்குலைவு சீர்திருத்தங்கள் புகுத்தப்படும் நேரமாகும்.

வேறு எதையும் விட, நோய்த்தொற்றால் சீரழிந்து கிடக்கும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள வலியைக் குறைக்க வேண்டிய நேரத்தில் அவை வருகின்றன.  தேசத்தின் ஒட்டுமொத்த வருவாய் ஏற்கனவே 24% சுருங்கியுள்ள நேரத்தில், பொருளாதாரம் பெருமளவுக்கு கிராக்கித் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் நேரத்தில், தமது எதிர்கால வருவாய் குறித்து விவசாயிகளிடமும் ஆலைத் தொழிலாளரிடமும் அதிகமான பிரமையைத் தோற்றுவிக்கக் கூடிய நேரம் இதுவல்ல.

கட்டுமான சீர்திருத்தங்கள் நீண்ட காலத்தில் பலனளிப்பவை என்றாலும் கூட, அவை வாய்ப்பான நேரத்தில், பொருளாதார முகமைகள் மனதளவில் தயாராக இருக்கும் சமயத்தில் வரவேண்டும்.  அவை புதிய வேளான் சட்டங்களும், முன்மொழியப்பட்டுள்ள தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் விவசாயிகள், தொழிலாளர்களின் தொண்டையில் திணிக்கப்படுவது போன்ற வழியில் திணிக்கப்படக் கூடாது.

ஒரு ஜனநாயகத்தில், அரசு மக்களுடன் ஊக்கத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும்.  பிரதமர் மோடியோ, வழக்கம் போல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை போலவே செயலைச் செய்து விட்டுத் தனது தொடர்பு நடவடிக்கையைத் தொடங்குகிறார்.

இந்திய விவசாய வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க கணம்!  இந்த முக்கியமான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறியதற்கு  கடுமையாக உழைக்கும் நமது விவசாயிகளுக்கு வாழ்த்து.  அவை விவசாயப் பகுதி முழுமையாக மாறுவதை உறுதிப்படுத்தும், கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு அதிகாரமளிக்கும்.

  • நரேந்திர மோடி(@ நரேந்திரமோடி) செப்டம்பர் 20, 2020.

அவர் திங்களன்று பீகார் மக்களுக்கு வீடியோ வழியாக ஆற்றிய உரையில், இந்த விவசாயச் சட்டங்களை எதிர்ப்பவர்கள் இத்தனை ஆண்டுகளாக சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை மீது உட்கார்ந்திருந்தவர்கள் என்று மக்களிடம் சொன்னார்.  ஆனால் இத்தனை ஆண்டுகளாக, சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தவே முடியாதென்று உச்சநீதிமன்றத்திடம் கூறியது இதே மோடியின் சொந்த அரசுதான்.

ஆக, விவசாயிகளுடன் தொடர்பு கொள்வதில் பிரதமரே உண்மையாக இருக்கிறாரா?  இல்லை, அவர் நேர்மையுடன் இல்லவே இல்லை.  இந்தக் காரணத்தால்தான் விவசாயிகள் இந்த அரசு சொல்லும் ஒரு வார்த்தையைக் கூட நம்புவதாக இல்லை.  

இந்தக் குழப்பச் செய்திகளுக்கு இன்னொரு உதாரணம் கடந்த சில ஆண்டுகளில் இடைவெளி விட்டு நடக்கும் (வாரச்சந்தை போன்றவை) சந்தைகளை முதன்மை விவசாயச் சந்தைகளாகவோ அல்லது சிறிய மண்டிகளாகவோ மாற்றி அரசு நடத்தக்கூடிய, கட்டுப்படுத்தப்பட்ட மண்டிகளை சுமார் 20,000 அளவுக்கு அதிகரிக்க உதவ அரசு கொடுத்த உறுதிப்பாடு ஆகும்.

இந்த நடவடிக்கை புதிய வேளான் சட்டக் கட்டுமானத்தில் எங்கு பொருந்துகிறது என்பது யாருக்கும் தெரியாது.

2022 வாக்கில் விவசாய வருவாயை இரட்டிப்பாக்க இந்த அரசு அமைத்த அஷோக் தல்வாய் குழுவின் பரிந்துரை இது.  தல்வாய் குழுவானது மாநில அரசுகள் நடத்தும் மண்டி கட்டமைப்பை அதிகரிப்பதன் மீது வெகுவாக நம்பிக்கை கொண்டது.

எனவே, விவசாயச் சந்தையை விடுவிப்பது என்ற பெயரில் மோடி அரசு திடீரென இந்த வேளான் மசோதாக்களைக் கொண்டு வந்ததன் உண்மையான நோக்கம் என்னவென்று யாருக்கும் தெரியாது.  இந்தியாவில் விவசாயிகள் சுதந்திரச் சந்தையால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளனர்.

Do new agri Bills impact State? - The Hindu

அதேபோல் நோய்த்தொற்றுக்கு நடுவில் அரசு வேகமான தொழிலாளர் சட்டத் திருத்தங்களைத் திணித்துள்ளது.  மீண்டும் இங்கும் அதில் தொடர்புடையவர்களுடன் எந்த விவாதமும் கிடையாது.  ஏப்ரலில் சில பாஜக ஆளும் மாநிலங்கள் சீனாவிலிருந்து தமது சப்ளை நிறுவனங்களை இடமாற்றும் அமெரிக்க, ஜப்பானிய கம்பெனிகளை ஈர்ப்பது என்ற பெயரில் தொழிலாளர் சட்டத் திருத்தங்களைத் திணித்தன. 

வெறும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் மூலம் மட்டுமே இதை அடைய முடியுமா என்பது வேறு விவாதம்.  இத்தகைய சீர்திருத்தங்களின் தகுதி மற்றும் பிறவற்றுக்கு அப்பால், 90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான உலகப் பொருளாதாரச் சரிவுக்கு இடையில் இதை அமலாக்க வேண்டுமா என்பதே கேட்க வேண்டிய கேள்வி.

விவசாயச் சட்டங்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர் சட்டங்களில் நீண்ட கால விளைவுகளை உண்டாக்கக் கூடிய மாற்றங்களை பாராளுமன்றத்திலோ அல்லது சமூகத்திலோ பெரிய விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றி விடலாம் என்று பிரதமர் மோடி நம்பிக்கையுடன் இருப்பதாகத் தோன்றுகிறது.  கோவிட் 19 ஊரடங்குக்கு இடையில் 20 லட்சம் கோடியுடன் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான பெரிய கட்டுமானச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் ஜனநாயக குணாம்சத்துக்கான அனைத்து விதிகளும் ஜன்னலுக்கு வெளியே தூக்கியெறியப்பட்டு விட்டன.

விவசாயம் என்பது மாநில உரிமை.  விவசாயச் சந்தைகளைக் கட்டுப்படுத்துவது என்பது மாநில உரிமைக்கு உட்பட்டது.  எனினும் விவசாயச் சட்டங்களில் மாற்றங்கள் செய்ய மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்படவில்லை.  அது விவசாயிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் இடையில் புதிய ஒப்பந்தங்கள் உருவாக்குவதில் மாநிலங்களின் அதிகார வரம்பை மீறப் பார்க்கிறது.

நாட்டில் குறிப்பிட்ட சுமார் 7000 மண்டிகளுக்கு வெளியே தமது உற்பத்தியை விற்பதற்கு விவசாயிகளுக்கு வாய்ப்பளிப்பது என்ற பெயரில் புதிய திருத்தங்கள் செய்வதற்கு எதிராக அரசியல் சாசனச் சட்டரீதியாக வழக்குத் தொடுக்க சில மாநிலங்கள் திட்டமிட்டு வருகின்றன.

புதிய வேளான் சட்டங்கள், தொழில் சட்டங்கள் இரண்டுமே விவசாயிகள் மற்றும் அணிதிரட்டப்பட்ட தொழிற்சாலைத் தொழிலாளர்கள் இருவருக்கும் எதிர்கால வருவாயில் பெரும் விளைவுகளை உருவாக்கக் கூடியவை.  தொழிற்சாலை சட்டங்களில் மாற்றங்கள் 300 பேர் வரை கொண்ட தொழிற்சாலைகள் எந்த சட்டபூர்வ அனுமதியுமின்றித் தொழிலாளர்களை அமர்த்தவும் துரத்தவும் முழு சுதந்திரத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இதுவரை, அது நூறு பேர் வரை கொண்ட தொழிற்சாலைகளுக்கு மட்டுமே பொருந்துவது.  உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற சில பாஜக ஆளும் மாநிலங்கள் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக இந்த அம்சங்களை ஏற்கனவே அமல்படுத்தி விட்டன.

புதிய தொழிற்சாலை சட்ட ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் ஒரு சீரான கூட்டு ஒப்பந்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழிகிறது.  இது இரண்டு தரப்பினரின் உரிமைகளையும், கடமைகளையும் வரையறுக்கும்.   இதன் கீழ் ஊழியர்கள் அதிகாரபூர்வமாக ஒரு கூட்டு முரண்பாட்டை எழுப்பி நிர்வாகத்துடன் ஒரு அதிகாரபூர்வ கட்டமைப்புக்குள் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

எனினும், மின்னல்வேக வேலைநிறுத்தத்துக்குச் செல்லும் தொழிற்சங்க உரிமையானது கடுமையான கட்டுப்பாட்டுக்கு உள்ளாகிறது.  இந்த சீரான ஆவணம் வேலையில் அமர்த்தல், வேலையிலிருந்து நீக்குதல், நிவாரணம் போன்ற அனைத்துக்கும் விதிகளை வகுக்கிறது.

வேளான் சட்டங்கள், தொழில் சட்டம் இரண்டிலும் உள்ள ஒரு பொதுவான அம்சம், அவற்றைப் பெரும் வர்த்தகங்கள் பெருமளவில் வரவேற்கின்றன என்பதாகும்.  விவசாய விளைச்சலை அதிகரிக்க உச்சரிக்கப்படும் புதிய மந்திரம் விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குதல்.  கார்ப்பரேட்மயத்தாலோ அல்லது “விவசாயச் சந்தையைக் கட்டவிழ்த்து விடுதல்” போன்ற மற்ற குழப்பமான வார்த்தைகளாலோ இந்திய விவசாயத்தைச் சூழ்ந்திருக்கும் உண்மையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியாதென்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மேற்கத்திய முதலாளித்துவ வளர்ச்சியின் வரலாறு முழுவதுமே அரசுகளிடமிருந்து விவசாயத்துக்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளது.  வர்த்தகர்களும் கூட இந்தியாவில் வேலையின்மை 45 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பொருளாதாரத்தை கோவிட் 19 தாக்குவதற்கு முன்பாகவே தொட்டு விட்ட போது, புதிய தொழில் சட்டம் எதோ ஒரு மந்திரக் குண்டு என்பது போல் பேசியுள்ளனர்.

Congress, farmers' outfits plan massive nationwide protests against agri  bills - The Federal

2008 இலிருந்து வர்த்தகத்தை தொடர்புடைய உலகமயத்திலிருந்தும் முதலீடுகளிலிருந்தும் பின் வாங்குவது போன்ற உலக அளவில் இருக்கக்கூடிய கட்டுமானப் பிரச்சனைகள் உண்டு.  அது உலகின் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பின் தரத்தைக் குறைத்துள்ளது.  இந்தியாவும் அதனால் பாதிப்படையாமல் இருக்காது.

உண்மை என்னவென்றால் இந்தியாவின் 95% உழைப்பாளர் சக்தி அணிதிரட்டப்படாத துறையிலேயே உள்ளது.  இந்தப் புதிய தொழில் சட்டங்களின் மாற்றம் அவர்களை எப்படித் தாக்கப் போகிறது என்பது நிச்சயமாகத் தெரியவில்லை.  ஆம், அது தொழிலாளர்களை விருப்பப்படி அமர்த்தவும், நிறுவனங்களுக்கு நெகிழ்வுத்தன்மையக் கொடுக்கிறது.  பெரிய நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள சீரான கூட்டு ஒப்பந்தத்துக்குள் தொழிலை மூடுவதையும் அது எளிதாக்குகிறது.

ஒட்டு மொத்தத்தில், விவசாயிகள் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் சட்டத்தில் உள்ள மாற்றங்கள் பெரும் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டவை போல் தோன்றுகிறது.  பெரும் முதலீடுகளும், தொழில்நுட்பமும் இந்தியாவின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியும் என்பதற்கு பெரிய சான்று எதுவும் கிடையாது.

மோடியும் அவரது ஆலோசகர்களும் வேலைவாய்ப்பு, வருவாய் முதல் சேமிப்பு, முதலீடுகள் வரை அனைத்துப் பொருளாதாரக் குறியீடுகளிலும் ஏற்பட்டு வரும் தீவீரமான பின்னடவுக்குத் தீர்வு காண முடியாமல் ஆறு ஆண்டுகளாக இருட்டில் துழாவிக் கொண்டிருக்கிறார்கள்.

மோடி தான் ஒரு முனைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக உணர்வது போல் தோன்றுகிறது.  நோய்த்தொற்று உருவாக்கும் குழப்பத்துக்கு மத்தியில் அவர் இந்தப் புதிய சீர்திருத்தங்களைக் கொண்டு ஒரு பெரிய சூதாட்டத்தில் இறங்குகிறார்.  இவையெல்லாம் தொழிலாளர், விவசாயிகளின் நலனை முன்னேற்றுதல் என்ற பெயரில் நடத்தப்படுகின்றன.

ஏற்கனவே இந்தியா முழுவதிலும் ஒரு எதிர்ப்பு அலை எழுந்துள்ளது.  ஒரு வெளிப்படையான மறைவற்ற விவாதம் இல்லாமல் இது மேலும் வலுவடையவே செய்யும்.  பாஜக இந்த மாற்றங்களை ரகசியமாகச் செய்து விட்டதால், அது அகாலி தளம் என்ற கூட்டணிக் கட்சியை இழக்கும் நிலையில் உள்ளது.

புதிய தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் குறித்து பாஜக தனது உறுப்பு சங்கமான பாரதிய மஸ்தூர் சங் உட்பட தேசியத் தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியதா என்பது தெரியாது.  ஒழுங்கான விவாதமும் ஆலோசனையும் இன்றி பிரதமர் மோடி இந்த முன்னறியாத மாற்றங்களைத் திணிப்பதில் ஒரு பெரிய துணிகரச் செயலில் இறங்கியுள்ளார்.

வயர் இணையதளம்

எழுதியவர் எம்.கே.வேணு

தமிழில்:கி.ரமேஷ்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *