பொருளாதாரச் சீர்திருத்தங்கள், பாபர் மசூதி இடிப்பு, பம்பாய் தொடர் குண்டு வெடிப்பு, மண்டல் குழு பரிந்துரையை நடைமுறைப் படுத்தப்பட்டது போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கிடையே 1996ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) தனித்து 161 இடங்களில் வெற்றிபெற்றது இதனைத் தொடர்ந்து அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு மே 16,1996ல் பதவி ஏற்றது ஆனால் அரசுக்குப் போதுமான எம்.பிகளின் ஆதரவு இல்லை என்பதால் மே 31,1996ல் ஆட்சியினை இழந்தது. இவர் மொத்தமாக 13 நாட்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் பிரதமராக இருந்துள்ளார். அடுத்து பிரதமராகப் பதவி ஏற்ற எச்.டி.தேவ களொடா, ஐ.கே.குஜரால் ஆட்சிகள் அரசியல் நெருக்கடியினால் குறுகிய காலமே நீடித்தது. மீண்டும் 1998ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 182 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாகத் திகழ்ந்தது (காங்கிரஸ் 147 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது). தெலுங்கு தேசம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க), திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அடல் பிஹாரி வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். அ.இ.அ.தி.மு.க தன்னுடைய ஆதரவை விளக்கிக் கொண்டதால் ஏப்ரல் 1998ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. வாஜ்பாய், மார்ச் 1998 முதல் ஏப்ரல் 17,1999முடிய 13 மாதங்கள் பிரதமர் பதவியில் இருந்தார். இதன் பின் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயன்றும் தோல்வியடைந்ததால் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் செப்டம்பர்-அக்டோபர் 1999ல் நடைபெற்றது. இதில் பா.ஜ.க கூட்டணி 296 இடங்களைப் பெற்றது, காங்கிரஸ் கூட்டணி 134 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வாஜ்பாய் தலைமையில் தேசிய முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டு அதற்குத் தலைமையேற்று பிரதமராக அக்டோபர் 13, 1999 முதல் மே 2004வரை பதவி வகித்தார். மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவி வகித்தபோது முழு காலத்தையும் நிறைவு செய்தார் மேலும் காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் முழு கால அளவில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது (Biban Chandra 2000).

வாஜ்பாய் ஆட்சி பெரும் சவால்களின் காலமாகும். ஒரு பக்கம் கூட்டணிக் கட்சிகளின் வேறுபட்ட கொள்கைகள், மற்றொரு பக்கம் வலதுசாரிகளின் கடும் நெருக்கடி என்று ஆட்சிக் காலம் முழுக்க பயணித்தார். 1999ல் இந்து ராஷ்டிரா அமைத்திடவும், ராமர் கோவில் கட்டவும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது. ஆனால் கூட்டணிக் கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். அணு குண்டு சோதனை கடந்த காங்கிரஸ் ஆட்சியில் தள்ளிப் போடப்பட்டதை வாஜ்பாய் அரசானது மே 1998ல் ராஜஸ்தான் பாலைவனத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் உடனுக்குடன் மூன்று முறை சோதனையை நடத்தியது. இது இந்தியாவிற்குள் பெரிய அளவிற்கு வரவேற்பினைப் பெற்ற அதேவேலையில் மேற்கத்திய நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன. இதன் தொடர்ச்சியாக இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் அணு குண்டு சோதனையைத் தொடர்ந்து பாக்கிஸ்தானும் அணு குண்டு சோதனையினை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு வாஜ்பாய் இருநாடுகளுக்கிடையே பேருந்து போக்குவரத்தை 1999ல் துவக்கிவைத்தார். ஆனால் பாக்கிஸ்தான் இந்தியப் பகுதிகளில் தொடர்ந்து ஊடுருவி வந்தனர். இந்தியாவின் கார்கில் பகுதியில் பாக்கிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால் இந்தியா-பாக்கிஸ்தான் கார்கில் போர் உண்டானது. நூற்றுக் கணக்கான இந்தியப் படைவீரர்கள் இதில் வீர மரணம் அடைந்தனர். இந்தியா கடுமையாகப் போர்புரிந்ததாலும், பன்னாட்டு அழுத்தத்தின் காரணமாகவும் பாக்கிஸ்தான் ராணுவம் பின்வாங்கியது. அரசியல் காரணங்களுக்காகவே பா.ஜ.க இதனைக் கையாண்டது என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது (Biban Chandra 2000).

டிசம்பர் 1999ல் ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹாருக்கு இந்தியப் பயணிகள் விமானம் நேபாள நாட்டின் தலைநகரான காத்மாண்டுவிலிருந்து 179 பயணிகள், 11 விமான ஊழியர்களுடன் தீவிரவாதிகள் கடத்தினர். 36 போராளிகளை விடுவிக்க நிபந்தனை முன்வைக்கப்பட்டது. கடைசியில் மூன்று முக்கியப் போராளிகளை விடுவித்து பயணிகளை மீட்டனர். அமைதியை ஏற்படுத்த ஆக்ரா பேச்சுவார்த்தை ஜூலை 2001ல் இந்தியப் பிரதமர் வாஜ்பாய்க்கும் பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷ்ரப்பிற்கும் இடையே நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001ல் இரட்டை கோபுரங்கள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் விமானம் மூலம் மோதி தாக்குதல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா இந்தியாவை அரவணைத்துச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இந்தியா மீது விதிக்கப்பட்ட அணு ஆயுத சோதனையின்போது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது (Biban Chandra 2000).

1999 மற்றும் 2000ல் இரு பெரும் புயல், 2001ல் குஜராத்தில் நில நடுக்கம், 2001ல் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல், 2002-2003ல் கடுமையான பஞ்சம், 2002ல் குஜராத்தில் வன்முறையினால் படுகொலைகள் வரை நடந்தது. 2001ல் தெஹல்கா என்ற ஊடகம் பல்வேறு அரசியல் (பா.ஜ.க உட்பட), உயர் பாதுகாப்பு அலுவலர்களின் ஊழல் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டது. இது நாட்டில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியது. 2001ல் இந்திய யூனிட் டிரஸ்ட் ஊழல் நடைபெற்றது. இதனால் லட்சக்கணக்கான சிறு முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்பினை இழந்தனர். இதற்குப் பிரதமருக்கு நெருக்கமானவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுபோல் பெட்ரோல் நிலையங்கள், எரிவாயவு முகவர், மண்ணெண்ணெய் வியாபாரம் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் போன்றவை தொடர்ந்து வாஜ்பாய் அரசை அச்சுறுத்தி வந்தன. மாநிலச் சட்டசபைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்று வந்தன.

2003ல் எரிபொருள் நெருக்கடி சவாலை வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தபோது எதிர் கொண்டார். மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து துணிவுடன் மேலும் பல சீர்திருத்தங்களை (புதுப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள்) நடைமுறைபடுத்தினார். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். 1999ல் 4.7 விழுக்காடு என்றிருந்த பணவீக்கம் 2004ல் 3.8 விழுக்காடாக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1999ல் 6.7 விழுக்காடாக இருந்தது 2004ல் 8 விழுக்காடாக அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தது, அந்நியச் செலாவணி கையிருப்பில் கணிசமான இருப்பு, பணவீக்கம் கட்டுக்குள் இருந்தது போன்ற சாதகமான போக்கும் காணப்பட்டது.

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடைமுறைப்படுத்தப்பட்டது. இத் திட்டமானது வறுமை ஒழிப்பு, வேலையின்மையினைப் போக்குதல் ஆகியவற்றை வேளாண் வளர்ச்சியினை முடுக்கிவிடுவதன் வழியாக அடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. எனவே வேளாண் வளர்ச்சி ஆண்டுக்கு 4.5 விழுக்காடு என்ற இலக்கினை முன்னிறுத்தியது. உணவு தானியம், எண்ணெய் வித்துக்கள், சர்க்கரை, போன்றவை 1980களில் வளர்ச்சியின் அளவில் ஒப்பிடும்போது 1990களில் குறைந்து காணப்பட்டது. ஆனால் பழவகைகள், காய்கறிகள் போன்றவை வளர்ச்சியில் மேம்பட்டிருந்தது. இந்தியாவில் வேளாண்மையானது வட்டார ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. இந்தியாவின் கிழக்குப் பகுதிகளான கிழக்கு உத்திரப் பிரதேசம், கிழக்கு மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் போன்றவை அதிக வளங்கள் உள்ள பகுதியாகும். ஆனால் அவற்றைச் சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் (utapped) இருந்தது. உண்மையில் இந்த பகுதி சரியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் நாட்டின் 50 விழுக்காடு உணவு உற்பத்தியினைப் பெற்றிருக்க முடியும். எனவே ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டமானது இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டது. வேளாண்மையில் சில அறைகூவல்கள் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தன. அதில் குறிப்பாக மாநிலங்களில் பாதிக்கு மேற்பட்ட விளைநிலங்கள் சிறு, குறு விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வந்தது, குத்தகைகுப் பயிரிடுபவர்கள் பற்றிய சரியான விவரங்கள் பெறப்படுவதில்லை, குத்தகை தாரர்கள் அதிக அளவில் விளைபொருட்களை நில உடைமையாளர்கள் பங்கிட்டுக்கொள்ளும் முறை புழக்கத்திலிருந்தது, விளை நிலப்பரப்புகள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகிறது, நிறுவனக் கடன் முறை மிகவும் பலவீனமாக இருந்தது, பல்வேறு காரணங்களினால் மண்ணின் தன்மை குறைந்து காணப்பட்டது, நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. இது போன்ற நிலைமையினை மாற்றி அமைத்து வேளாண் வளர்ச்சியினை அதிகரிக்க வாஜ்பாய் அரசு முயன்றது. இதற்காக வேளாண் உள்கட்டமைப்பினை உருவாக்குவது, குளிர்பதன கிடங்குகளைக் கட்டமைப்பது, ரயில், துறைமுகம், தகவல் தொடர்பினை வலுப்படுத்துதல், கிராமப்புறச் சாலை இணைப்பினை ஏற்படுத்தித் தருதல் பொன்றவை வாஜ்பாய் அரசு முன்னெடுத்த முக்கிய முயற்சிகள் ஆகும் (Chandra Shekhar Prasad 2009).

1980களின் பிற்பகுதியிலிருந்து 1990களின் முற்பகுதிவரை அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலன் தொழில் மற்றும் சேவைத் துறைகளுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் வேளாண் துறை தகுந்த பலனைப் பெற இயலவில்லை. இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1990ஆம் ஆண்டுகளின் முற்பகுதி வரையில் எந்த ஒரு பெரிய சீர்திருத்தங்களும் வேளாண்மைக்காகத் தனிப்பட்டுச் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 1990களின் பிற்பகுதியில் வேளாண்மையினை நோக்கிய சிறப்புச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. அதில் முக்கியமானது, உர விலையினைப் பகுதி அளவில் கட்டுப்பாட்டை நீக்குதல், வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்தும்போது எதிர்கொள்ளும் தடைகளைக் களைவது, அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 கட்டுப்பாட்டில் தளர்வு செய்தல், முக்கிய வாணிபப் பயிர்களின் முன்னோக்கிய வர்த்தகத்தை நடைமுறைப்படுத்துதல், இலக்கின் அடிப்படையில் பொது விநியோக முறையினை நடைமுறைப்படுத்துதல், கிராமப்புற உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியை உண்டாக்குதல், வர்த்தக அளவுக் கட்டுப்பாட்டிற்குப் பதில் வரிகளை விதிப்பது போன்றவை ஆகும் (Malrika Singh 2017).

விவசாயிகள் இயற்கைச் சீற்றங்களினால் வேளாண்மையில் தோல்வி ஏற்பட்டு இழப்பினைச் சந்திக்கின்றனர். இதனைப்போக்க ஒருங்கிணைந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் 1985 தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தை அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் (National Agricultural Insurance Scheme) என்பது 1999-2000ல்; தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தினால் 1999-2000லிருந்து 2015-16ஆம் ஆண்டுவரை 2691 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர் (https://agricoop.nic.in). 2002-03ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் நிதி அமைச்சர் இந்திய வேளாண்மைக் காப்பீட்டு வரையறுக்கப்பட்ட நிறுவனம் தொடங்கப்படுவதை அறிவித்தார். அதுவரை வேளாண்மைக்கான காப்பீட்டுத் திட்டங்களை இந்தியப் பொது காப்பீட்டுக் கழகம் நடைமுறை படுத்திவந்தது. இந்த புதிய அறிவிப்பினால் அனைத்து வேளாண் காப்பீட்டுத் திட்டங்களையும் இது நடைமுறைப்படுத்துகிறது.

வாஜ்பாய் அரசானது 2000ல் தேசிய வேளாண் கொள்கையை அறிமுகப்படுத்தியதுஇதன்படி,

  1. வேளாண்ஆராய்ச்சிமனித வள மேம்பாடுஅறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் சந்தைப் படுத்துதல்தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்துவது.
  2. வேளாண்வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு அதிகரிக்கச் செய்தல்.
  3. நாட்டின்பல்வேறு பகுதிகளுக்கு வேளாண் விளைபொருட்களைக் கொண்டு செல்வதற்கானக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்ததை நீக்குதல்.
  4. விவசாயிகளின்மேம்பாட்டிற்கு வேளாண்மைக்கு வெளியே முறைப்படுத்துதல் மற்றும் வரி வசூல் செய்யும் முறைக்குச் சரியான அளவீடுகளை உருவாக்குதல்.
  5. வேளாண்வளர்ச்சிக்கான அடிப்படையான கிராமப்புற மின்சாரத்திற்கு முன்னுரிமை அளித்தல்.
  6. விவசாயக்கடன் தகுந்த நேரத்திலும்போதுமான அளவிலும் விவசாயிகளுக்குக் கிடைக்கக் கிராமப்புறங்களில் நிதி நிறுவன முறையினை கட்டமைப்பது போன்றவையாகும்.

2000-01ல் வேளாண்மைக்கான பேரியல் மேலாண்மை திட்டம் (Macro Management of Agriculture Scheme) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதன்மை நோக்கமாக உணவு தானியம் மற்றும் இதர வேளாண் விளைபொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பது ஆகும். இத் திட்டம் 17 கூறுகளை உள்ளடக்கியது. இதன்படி ஒருங்கிணைந்த தானிய மேம்பாட்டுத் திட்டம் நெல், கோதுமை, சிறுதானியங்கள் விளைவிக்கும் பகுதிகளில் மேற்கொள்வது, சிறப்புச் சணல் மேம்பாட்டுத் திட்டம், சரியான கரும்பு சாகுபடி செய்யும் திட்டம், ஒருங்கிணைந்த மற்றும் சமமான உரம் பயன்படுத்துதல், சிறு விவசாயிகள் வேளாண் இயந்திரப் பயன்பாட்டிற்கு உட்படுத்துதல், வானம் பார்த்த விளைநிலங்களில் தேசிய நீர் மேம்பாட்டுத் திட்டம், விதை உற்பத்தி, மண் வளப் பாதுகாப்பு, கலர்-உவர்ப்பு நிலங்களை மேம்படுத்துதல், நிலப் பயன்பாட்டுக் கழகம், நலிந்தவர்களுக்குக் கடன் வழங்கக் கூட்டுறவு, கூட்டுறவு மூலம் பெண்களுக்குக் கடன் உதவி, வேளாண் கடன் நிலைப்பு நிதி, ஆதிதிராவிடர்-பழங்குடியினர்களுக்குச் சிறப்புத் திட்டம் போன்றவை இதன் மூலம் நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

தேசிய விதைக் கொள்கை 2002: வேளாண்மையில் விதை ஒரு முக்கிய இடுபொருளாகும். தரமான விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் இன்று வேளாண்மையில் தன்னிறைவினை அடைந்துள்ளோம். 1950ல் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி 50 மில்லியன் டன் என்ற அளவில் இருந்தது பசுமைப் புரட்சியின் விளைவால் மேம்படுத்தப்பட்ட, அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகளைப் பயன்படுத்தப்பட்டதால் 200 மில்லியன் டன்னிற்கும் அதிகமாக உணவு தானிய உற்பத்தி செய்யப்பட்டது. எனவே உணவு உற்பத்தியினை எதிர்காலத்தில் சிறந்த அளவிற்கு அடையவும், புதிய உணவு தானிய வகைகளை உருவாக்கவும் தேசிய விதைக் கொள்கை 2002 நடைமுறைப்படுத்தப்பட்டது (https://seednet.gov.in/).

2004ஆம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்சாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் குழு  (National Commission on Farmersஅமைக்கப்பட்டது.  இக்குழுவானது விவசாயிகள் மற்றும் வேளாண் துறையில் மேற்கொள்ள வேண்டிய  ஆலோசனைகளை டிசம்பர் 2005 முதல் அக்டோபர் 2006வரையில் ஐந்து முறை  அறிக்கையினை அரசுக்கு அளித்ததுஇதன்படி,

  1. நிலம்நீர்கால்நடைகள்மற்றும் உயிரிய வளங்கள் (Bioresourcesகுறித்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்.
  2. விவசாயிகளின்நண்பன் என்ற அடிப்படையில் சாகுபடி விரிவாக்கம்பயிற்சி மற்றும் அறிவாற்றல்இணைப்புகடன் மற்றும் காப்பீடு போன்ற சேவைகளை வழங்குதல்.
  3. வேளாண்விளைபொருட்களுக்குக் கட்டுபடியாகும் விலையினை உறுதி செய்தல்.
  4. இடுபொருட்கள்மற்றும் விநியோகச் சேவைகள் அளித்தல்.
  5. வேளாண்பல்கலைக் கழகங்களில் உள்ள பாடத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருதல்.
  6. வேளாண்மையைப்பொதுப் பட்டியலுக்குக் கொண்டுவருதல்.
  7. தேசியஉணவு பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக் குழு அமைத்தல்.
  8. அனைவருக்குமானப்பொதுவிநியோக முறை.
  9. இந்தியவர்த்தக  அமைப்பை நிறுவுதல்.
  10. வேளாண்மைச்செலவு மற்றும் விலைக் குழுவை தன் அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்றி அமைத்தல்.
  11. வேளாண்விளைபொருட்களுக்கு அதன் செலவிலிருந்து கூடுதலாகக் குறைந்தது 50 விழுக்காடு குறைந்தபட்ச ஆதரவு விலையினைத் தருவது.
  12. கிராமப்புறவேளாண் சார் வாழ்வாதார முயற்சியினைத் தொடங்குவது.

இந்த அறிக்கையினை மாநிலங்களுடன் விவாதித்து அரசு தேசிய விவசாயக் கொள்கை 2007க்கு ஒப்புதலுக்காக சமர்ப்பித்தது.

 வேளாண்மைக்கு மிக முக்கியமானது வேளாண் பொருட்களைச் சந்தைப் படுத்துதல் ஆகும். இதற்காக வாஜ்பாய் அரசானது வேளாண் சந்தைத் தகவல் வலைப்பின்னல் (Agricultural Marketing Information Network – AGMARKNET) என்ற திட்டம் 2000ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய வேளாண் சந்தைகளுடன் இணைப்பினை ஏற்படுத்துவது, இந்திய இணையவழிப் பொருட்கள் பரிமாற்றத்துடன் இணைப்பினை ஏற்படுத்தி, தேசியத் தகவல் மையத்தின் வழியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. தேசிய அளவில் சந்தை நிலவரங்களை உடனுக்குடன் விவசாயிகளுக்குத் தெரிவிப்பது, புதிய அறைகூவல்கள் பற்றி விவசாயிகளுக்குப் புத்தாக்கம் செய்வது, வேளாண் சந்தையைத் திறம்படச் செயல்பட வைப்பது, சந்தை ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் வேளாண் தொடர்பான திட்டங்களை விவசாயிகளுக்குத் தெரிவிப்பது போன்றவை ஆகும் (www.indiafilings.com/learn/agmarknet/).

தேசிய இயற்கை வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் (National Project on Organic Farming) பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. இயற்கை வேளாண்மையினை மேம்படுத்தத் தொழில்நுட்பத் திறனை உருவாக்குவது, அறிவியல் அறிவினை வளர்த்தெடுப்பது, தடைகளைக் கண்டு அவற்றைக் கடந்து வருவது போன்ற நிலைகளில் உதவுவதற்காக அமைக்கப்பட்டது. இதற்காக பத்தாவது திட்டக் காலத்தில் ரூ.57.04 கோடியும் பதினோராவது திட்டக் காலத்தில் ரூ.101 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

1998-99ல் கிசான் கடன் அட்டைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இதன்படி விவசாயிகளுக்கு நீக்குப் போக்குடன் கடன் அளிக்கவும், செலவு-திறனுடைய முறையில் வழங்கப்படவும் வழிவகை செய்யப்பட்டது. இதனை வணிக வங்கிகள், கிராமப்புற வட்டார வளர்ச்சி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மத்தியக் கூட்டுறவு சொசைட்டி, பொன்றவை வழியாகக் கடன் அளிக்க வசதியை ஏற்படுத்தித் தந்தது. இதன்படி 1989-99ல் 7.84 லட்சம் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டது இது 2001-02ல் 93.4 லட்சமாக அதிகரித்தது. சிறு, குறு விவசாயிகள் பயன்பெறவும், மத்திய மாநில அரசுகள் 1997-98ல் சோதனை அடிப்படையில் பயிர்க் காப்பீட்டு என்ற புதிய திட்டம் 8 மாநிலங்களில் உள்ள 24 தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் 1999-2000ல் இந்த திட்டம் புதிய வடிவமாகத் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜனவரி 21, 2004ல் விவசாயிகளின் சந்தேகங்களைப் போக்கவும், வழிகாட்டவும் விவசாயிகள் தொலைப்பேசி மையங்கள் அனைத்து வாரநாட்களிலும் காலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்க அனைத்து மாநிலங்களிலும் உருவாக்கப்பட்டது. மே 18, 2001ல் விவசாயத் தொழிலாளர்களுக்கு முதன் முதலில் அவர்களின் சமூகப் பாதுகாப்பையும், நலனையும் அடிப்படையாகக் கொண்டு விவசாயத் தொழிலாளர் பீமா யோஜனா (Khethihar Mazdoor Bima Yojana) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

வேளாண் விளைபொருட்களில் அழுகக்கூடியது (காய்கறிகள், பூக்கள்), அழுகாமல் குறிப்பிட்ட காலம் வரை பயன்பாட்டுக்கு உடையது (தானியம், பருப்பு வகைகள்) என்று பிரிக்கலாம். வருடத்தில் சில சாகுபடிக் காலங்களில் இவை மிதமிஞ்சிய அளவில் உற்பத்தியாகி அளிப்பு அதிகரிப்பதால் விளைபொருட்களை மிகவும் குறைந்த விலையில் விற்று பெரும் இழப்பினை விவசாயிகள் சந்திக்கின்றனர். எனவே இதனைப் போக்க 2001-02ல் கிராமப்புறச் சேமிப்புக் கிடங்கு திட்டம் (Gramin Bhandaran Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி தனிநபர், நிறுவனங்கள், உழவர்கள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், மற்றும் பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கிராமப்புறங்களில் வேளாண் சேமிப்புக் கிடங்குகள் கட்டவோ அல்லது சீரமைக்கவோ அரசு நிதி அளிக்கிறது. இதனால் வேளாண் விளைபொருட்கள் வீணாகுவதை தவிர்க முடியும் (Saumitra Mohan 2017).

வாஜ்பாயின் முக்கியப் பொருளாதாரச் சாதனைகளாகத் தங்க நாற்கரச் சாலை, பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டம், அரசு தொழில் மற்றும் வாணிப நிலைகளில் முதலீடு விலகல் (disinvestment), நிதிப் பற்றாக்குறையினைக் குறைக்க நிதி பொறுப்புச் சட்டம், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை, அனைவருக்கும் கல்வி இயக்கம் (Sarva Shiksha Abhiyan போன்றவை ஆகும். இந்தியா சுதந்திரம் அடைந்தும் கிராமப்புறங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கான முக்கியக் கரணம் முதன்மைச் சாலைகளுடன் கிராமங்கள் இணைப்பினைப் பெற்றிருக்கவில்லை என்பதாகும். எனவே 2000ல் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் இணைப்பு திட்டம் (Pradhan Mantri Gram Sadak Yojana) தொடங்கப்பட்டது. இதன்படி அனைத்துக் காலநிலையினைத் தாங்கக்கூடிய கிராமப்புறச் சாலை இணைப்பினை 1000 பேர் வசிக்கக்கூடிய சமதளக் குடியிருப்புப் பகுதிகளிலும் (பின்னால் 500 நபர்கள் என்று 2007ல் மாற்றி அமைக்கப்பட்டது), மலை மற்றும் வனப் பகுதிகளில்; 500 நபர்கள் வசிக்கக்கூடியக் குடியிருப்புகளுக்கு (பின்னால் 250 நபர்கள் என்று 2007ல் மாற்றியமைக்கப்பட்டது) சாலை இணைப்பினை உறுதி செய்வதற்காகத் தொடங்கப்பட்டது. இதனால் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வேளாண் உற்பத்தி பொருட்கள் வெளிச்சந்தையில் விற்பனைக்குக் கொண்டுசெல்லவும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டது (Saumitra Mohan 2017). தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சி திட்டம் மற்றும் பிரதம மந்திரி கிராமப்புறச் சாலை இணைப்பு திட்டம் வழியாக 1997-2002ஆம் ஆண்டுகளுக்கிடையே 23814 கி.மீ நீளத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை கூடுதலானது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் 60 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. 2002ல் இந்தியா பெரும் வறட்சியினை சந்தித்தது. இதற்குக் காரணம் இயல்பான மழையைவிட 19 விழுக்காட்டுக்குக் குறைவான மழைப்பொழிவு இருந்ததாகும். இதனால் 38 மில்லியன் டன் உணவு உற்பத்தி குறைந்தது (Amitabh Tiwari 2021).

1996-97ல் தொடங்கப்பட்ட விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசன நன்மையளிக்கும் திட்டத்தின் கீழ் 2002ல் விரைவு செயலாற்றும் திட்டம் துவக்கப்பட்டது. 2003-04ஆம் ஆண்டு முடிய 18 நீர்ப்பாசன திட்டங்களுக்குக் கடன் அளிக்கப்பட்டது. பாசனப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை திட்டம் (Command Area Development and Water Management Programme) மறுசீரமைக்கப்பட்டு ஏப்ரல் 2004ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி 133 நீர்ப்பாசன திட்டங்கள் இதன் மூலம் பயன் பெற்றது. விவசாயிகளுக்கானக் கடன் அளவு 1999-2000ல் ரூ.46268 கோடியாக இருந்தது 2004-05ல் ரூ.85686 கோடியாக அதிகரிக்கப்பட்டது. 1998-99ல் தொடங்கப்பட்ட விவசாயக் கடன் அட்டை திட்டம் டிசம்பர் 2004 முடிய 435 லட்சம் கடன் அட்டைகள் வழங்கப்பட்டு ரூ.111459 கோடி கடன் கொடுக்கப்பட்டது. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தின்படி 1999-00ல் ரபி பருவத்திலிருந்து 2004 காரீப் பருவம் முடிய 5.89 கோடி விவசாயிகள் பயன் அடைந்தனர். இத்துடன் 2003-04ல் முன்னோட்ட அடிப்படையில் விவசாயிகள் வருமானக் காப்பீடு திட்டத்தினால் (Farm Income Insurance Scheme) 2004 காரீப் பருவத்தில் 2.22 லட்சம் விவசாயிகள் பயன் பெற்றனர். இதுபோல் விதை உற்பத்தி மற்றும் பகிர்வில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.

விவசாயிகள் அதிக உரங்கள் பயன்படுத்தக் குறைந்த விலையில் மானியத்துடன் வழங்க அரசு நடவடிக்கையை மேற்கொண்டது. உர மானியம் 2000-01ல் ரூ.13800 கோடி வழங்கப்பட்டது இது 2003-04ல் ரூ.11847 கோடியாகக் குறைந்தது. வேளாண்மையை இயந்திரமயமாக்கலுக்கு அரசு முன்னுரிமை அளித்தது. இதன்படி இயந்திரமயமாக்கல் மற்றும் மின்சாரப் பயன்பாட்டின் பங்கானது 1971-72ல் 40 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 84 விழுக்காடாக அதிகரித்தது. 1999-2000க்கும் 2003-04க்கும் இடையில் 11.17 லட்சம் டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டது, இது ஆண்டுக்குச் சராசரியாக 223333 விற்பனை அளவாக இருந்தது. இதுபோல் விசைக் கலப்பைகள் (power tillers) இதே காலகட்டத்தில் 68034 விற்பனையானது, இது ஆண்டுக்குச் சராசரியாக 13606 விற்பனையானது. அதேசமயம், வேளாண்மையின் மீதான பொதுத்துறை முதலீடுகள் குறைந்து வந்தது. 1990களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மைக்கான மூலதன ஆக்கமானது 1.92 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 1.3 விழுக்காடாகக் குறைந்தது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியின் பங்கானது 2002-03ல் 12.8 விழுக்காடாக இருந்தது 2003-04ல் 11.8 விழுக்காடாகக் குறைந்தது. எனவே வேளாண் ஏற்றுமதியினை ஊக்குவிக்க வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2004-2009ல் வேளாண்மைப் பொருட்களின் ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதன்படி சிறப்பு வேளாண் உற்பத்தி திட்டம் (Vishesh Krishi Upaj Yojana) தொடங்கப்பட்டு பழவகைகள், காய்கறிகள், பூக்கள், சிறிய வகைக் காடுகளில் உற்பத்தியாகும் பொருட்கள் போன்றவை ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்கப்பட்டது. இத்துடன் வேளாண் ஏற்றுமதி மண்டலம் உருவாக்கப்பட்டது. இந்திய வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்கின்ற அதே வேலையில் சில வகைப் பொருட்களை (சமையல் எண்ணெய், உலர் கொட்டைகள் மற்றும் பழங்கள், பருப்பு வகைகள்) இறக்குமதி செய்கிறது. இதன்படி மொத்த இறக்குமதியில் சராசரியாக ஆண்டுக்கு 4.6 விழுக்காடு வேளாண் பொருட்கள் பங்கெடுத்துக்கொள்கிறது.

அட்டவணை: வாஜ்பாய் ஆட்சியில் இந்திய வேளாண் உற்பத்தி

வேளாண் உற்பத்தி1998-992003-04
பரப்பு (மில்லியன் ஹெக்டேர்)உற்பத்தி (மில்லியன் டன்)உற்பத்தி திறன் (கி/ஹெ)பரப்பு (மில்லியன் ஹெக்டேர்)உற்பத்தி (மில்லியன் டன்)உற்பத்தி திறன் (கி/ஹெ)
நெல்44.8086.08192142.4188.282051
கோதுமை27.5271.29259026.6272.112707
எண்ணெய் வித்துக்கள்26.2324.7594423.4425.291072
சர்க்கரை4.05288.72712034.00237.3159119
பருப்பு வகைகள்23.514.9163424.4514.94623
சிறுதானியங்கள்29.3431.34106830.7638.121228
அனைத்து உணவு தானியங்கள்125.17203.611627124.24213.461707
தலா உணவு (தானியங்கள் + பருப்புகள்)447.0 கிராம்462.7 கிராம்

Source: Government of India (2005, 2007): “Economic Survey2004-05 & 2006-07,” Ministry of Finance, Government of India. 

அட்டவணை: இந்தியப் பொருளாதாரப் போக்கு (விழுக்காட்டில்)

காரணிகள்1950-19641965-791980-19901991-20041980-2004
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி3.72.95.85.65.7
தொழில் வளர்ச்சி7.43.86.55.86.1
வேளாண் வளர்ச்சி3.12.33.93.03.4
மொத்த முதலீட்டிற்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள விகிதம்131822.822.322.5

Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005,”Economic Political Weekly, 41, (14).

Source: Atul Kohli (2006): “ Politics of Economic Growth in India 1980-2005 Part II: The 1990s and Beyond,”Economic Political Weekly, 41, (15).

வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திப் பொருளாதாரம் உச்ச அளவான 8 விழுக்காடு வளர்ச்சியினைத் தக்க வைத்துக்கொண்டிருந்தது. அதே சமயம் பணவீக்கம் 4 விழுக்காட்டுக்குக் குறைவான அளவிலும், அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகமாகவும் இருந்தது. வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளும் ஆண்டு பொருளாதார வளர்ச்சி வீதமானது ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் 3.2 விழுக்காடும், எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் 4.7 விழுக்காடும், ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தில் 2.1 விழுக்காடுமாக இருந்தது. இது 2003-04ஆம் ஆண்டு 9.6 விழுக்காடாக அதிகரித்தது.

இந்திய அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணமாக்கத் திகழ்கிறது. 1970-71ல் இந்தியாவின் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் 59 விழுக்காடாக இருந்தது, 1977-78ல் 51.3 விழுக்காடாகவும், 1983ல் 44.5 விழுக்காடாகவும், 1993-94ல் 36 விழுக்காடாகவும், 1999-2000ல் 26.1 விழுக்காடாகவும், 2004.05ல் 22.1 விழுக்காடாகவும் குறைந்தது. ஆனால் தற்போதும் உலக அளவில் வறுமையின் கீழ் வாழ்பவர்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் அதிக பங்கினை இந்தியா பகிர்ந்துகொள்கிறது. இதற்கு முக்கியக் காரணம் தேவைக்கு அதிகமான தொழிலாளர் ஆற்றல் வேளாண்மையினைச் சார்த்திருப்பதாகும். வட்டார நிலையில் பார்த்தால் வறுமையில் வாழ்பவர்களில் பெரும் பங்கினைக் கிராமப்புறங்கள் பகிர்ந்துகொள்கிறது. குறிப்பாக விவசாயிகள் பாதிக்குமேல் வறுமையில் வாழ்கின்றனர் என்கிறது புள்ளிவிவரம். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், கிராமப்புறக் கைவினைஞர்கள் அதிகமாக வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது பெருமளவிற்குக் கைகொடுக்கவில்லை. 1970களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வறுமையை ஒழிப்பதில் சிறப்பான பலனை அளிதது. எனவே 2000களின் இடையில் இத்திட்டத்தைத் தேசிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவினை அடைந்து மட்டுமல்ல உலக அளவில் வேளாண் விளைபொருட்களை ஏற்றுமதி செய்யும் முன்னனி நாடாகவும் உள்ளது. இருந்தும் அதிக அளவிலான மக்கள் உணவின்றி வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். இதற்காக உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ல் கொண்டுவரப்பட்டது. இதன்படி குறைந்த விலையில் உணவு தானியம் பொது விநியோக முறையின் மூலமாக வழங்கப்பட்டது. இதனால் 800 கோடி மக்கள் பயன் பெறுகின்றனர். வேளாண்மையில் முக்கிய உற்பத்தியாகப் பருத்தி திகழ்கிறது. 1950-51ல் தலா துணியின் அளவு 9 மீட்டராக இருந்தது 2002-03ல் 31.4 மீட்டராக அதிகரித்தது. பல மாநிலங்கள் ஏழை மக்களுக்கு இலவச துணி அளிக்கும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டுவருகிறது. இது போன்று இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வறுமை, பாக்கிஸ்தானிலிருந்து அதிக அளவில் அகதிகள் வருகை போன்றவற்றால் பாதிக்கப்பட்டது. இதனால் வீடற்றவர்கள் பெருமளவிற்கு காணப்பட்டனர். இத்துடன் கிராமங்களில் பெருமளவிற்கு மண்-குடிசை வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இதனைப் போக்க அரசு ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டங்களைப் பல்வேறு பெயர்களில் அவ்வப்போது நடைமுறைப்படுத்தியது. இதன் விளைவு வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 0.15 விழுக்காடு மக்கள் வீடற்றவர்களாக உள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகிய மூன்று அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு வழங்கத் தொடர்ந்து அரசு பல்வேறு உத்திகளை இன்றும் கடைப்பிடித்து வருகிறது.

டியாகோ மயோரானோ (2014) என்பவருடைய ஆய்வுக் கட்டுரையில், கிராமப்புற பொருளாதாரம் மோசமான பாதிப்பினை அடைந்ததற்கான காரணங்களை விளக்கியுள்ளார். அதன்படி 1) விவசாயிகள் கடன் பெறுவது மிகவும் கடினமாகிக் கொண்டுவந்தது, 2) பன்னாட்டுப் போட்டியிலிருந்து விவசாயிகளை போதுமான அளவிற்குப் பாதுகாக்கப்படாதது, 3) பொதுத் துறை முதலீடு வேளாண்மை மீது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது போன்றவை ஆகும். இவை அனைத்தும் வேளாண் துறையின் வீழ்ச்சிக்கான முக்கியக் காரணமாக இருந்துள்ளது என்கிறார். இந்த பாதிப்பினால் 1995-2011ஆம் ஆண்டுகளுக்கிடையே 2.7 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். 1980களில் வேளாண்மைக்கு அளித்த முக்கியத்துவம் ஒப்பீட்டு அளவில் 1990களில் அளிக்கப்படவில்லை. குறிப்பாக மொத்த முதலீட்டில் வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கான முதலீட்டு விகிதமானது தொடர்ந்து குறைந்து வந்துள்ளது. 1980ல் மொத்த திட்ட ஒதுக்கீட்டில் வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி மற்றும் நீர்ப்பாசனத்திற்கு 25 விழுக்காடு ஒதுக்கீடு செய்யப்பட்டது, இது 1989ல் 19 விழுக்காடாகக் குறைந்தது, 2008ல் 18 விழுக்காடாக மேலும் குறைந்தது. ஆனால் இந்த முதலீட்டு இடைவெளியைத் தனியார் மற்றும் பொது-தனியார்-கூட்டேற்பு (PPP) வழியாக நிறைவடையச் செய்தது. இதுபோல் மொத்த முதலீட்டு ஆக்கத்தில் வேளாண்மையின் மொத்த முதலீட்டு ஆக்கமானது 1980ல் 16.1 விழுக்காடாக இருந்தது 1999ல் 11.5 விழுக்காடாகவும், 2005ல் 7.3 விழுக்காடாகவும் குறைந்தது (Diego Maiorano 2014).

உணவு மற்றும் உரங்களுக்கு அளிக்கப்பட்ட மானியம் 1980 மற்றும் 2004க்குமிடையே மாறுபட்டு இருந்தது. இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் உரத்திற்கான தலா மானியம் 600 விழுக்காடு அதிகரித்தது ஆனால் உணவிற்கான தலா மானியம் 202 விழுக்காடு அதிகரித்திருந்தது. 1990களில் உரத்திற்கான தலா மானியமானது 160 விழுக்காடும், உணவிற்கான தலா மானியம் 308 விழுக்காடும் அதிகரித்திருந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உரத்திற்கான நிதி ஒதுக்கீட்டு அளவு 0.40 விழுக்காடாக 1980ல் இருந்தது. 1989ல் 1.11 விழுக்காடாக இது அதிகரித்தது. இதுபோல் உணவிற்கு இதே காலகட்டங்களில் 0.53 விழுக்காட்டிலிருந்து 0.9 விழுக்காடாக அதிகரித்தது. இந்திய உணவுக் கழகம் நெல் மற்றும் கோதுமைக்கானக் கொள்முதல் விலையானது 1980களில் குறைந்திருந்தது ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் அதிகரித்துக் காணப்பட்டது (Diego Maiorano 2014). பொதுவாகப் புதுப் பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதில் வேளாண்மைக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக வேளாண் சார்ந்த உள்கட்டமைப்புகள் (சாலைகள், சேமிப்புக் கிடங்குகள்) வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவு கிராமப்புற மேம்பாடு, வேளாண் வளர்ச்சி போன்றவற்றில் நேர்மறை விளைவுகள் தோன்றியது. ஆனால் இதனைத் தக்கவைக்க அடுத்து வரும் காலங்களிலும் வேளாண்மைக்கான நிதி ஒதுக்கீடு அதிகம் தேவை இருந்தது.

– பேரா.பு.அன்பழகன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *