‘அமெரிக்காவில் சாதி’ என்ற நூல் டிசம்பர் 2023 ல் வெளியாகியுள்ளது. வெளியீடு ‘பாரதி புத்தகாலயம்’.80 பக்கமுள்ள இந்த நூலின் விலை ரூ.80. பாமரன் இந்த நூலிற்கு அணிந்துரை எழுதியுள்ளார். கூர்மையும் எள்ளலும் கலந்த அந்த முன்னுரை இப்புத்தகத்தின் சாளரங்களைப் புரிதல்களோடு திறந்து வைக்கிறது.

இந்நூலின் ஆசிரியர் பெயர் அருள்மொழி. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிறந்த இவர், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பின் பெயர் ‘ டைரி’. இந்த நூலையும் பாரதி புத்தகாலயம் டிசம்பர் 2022 ல் வெளியிட்டுள்ளது.

‘அமெரிக்காவில் சாதி’ என்னும் தலைப்பிடப்பட்ட இவரது இரண்டாவது நூல் வாசகர்களிடம் பெரிய அதிர்வை உருவாக்கி இருக்கிறது. சாதியை நேர்கோடாகக் கொண்டு உண்மைத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட 9 கட்டுரைகளே அதற்கு காரணமாகும்.

‘ எல்லைக் காணாத ஏற்றத் தாழ்வுகள்’ என்னும் தலைப்பில் ‘செம்மலர்’ ல் வெளியான இவரது கட்டுரைகளின் தொடர்களே ‘ அமெரிக்காவில் சாதி’ என்னும் பெயரில் புத்தகமாக வடிவம் பெற்றிருக்கிறது.

” இந்துக்கள் பூமியில் உள்ள மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்தால் இந்திய சாதி ஓர் உலகப் பிரச்சனையாக மாறும் ”

அம்பேத்கரின் இந்தக் கூற்றை இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஆதாரங்களோடு நிரூபித்திருக்கிறது.

அமெரிக்காவில் நிலவும் சாதி சார்ந்த சிக்கல்களை அமெரிக்கர்கள் விநோதமான ஒன்றாக பார்த்ததையும் நூலாசிரியர் சுட்டிக்காண்பிக்கிறார்.

அடிமை இந்தியாவில் வெள்ளைக்காரர்களுக்கு ஏவலர்களாக இருந்து ஆங்கிலத்தை முழுமையாக கற்றறிந்த கூட்டமும், கல்வி மறுக்கப்படாத மேல்தட்டு வர்க்கமும் சுதந்திரத்திற்குப் பிறகு அமெரிக்கவிற்கு புலம்பெயர்ந்து போனது.

பல ஆண்டுகள் கழித்து வறுமையைப் போக்க ஒரு கூட்டமும் பணப்பேராசை கொண்ட ஒரு கூட்டமும் இனக்கலவரங்களால் நாடிழந்த ஒரு கூட்டமும் என்று மூவகைப் பிரிவினர் வெளிநாடு சென்ற புலம்பெயர்வைப் பட்டியலிடுகிறார்.

இந்த இரண்டு தலை முறையினரிடம் நிலவும் சாதி பாகுபாடுகள் தான் மிகப் பெரிய சமூகப் பொருளாதார சிக்கலாக அமெரிக்காவில் உருவெடுக்கிறது. கீழ்தட்டு மக்கள் உழைப்பினால் முன்னுக்கு வருவதை அவர்களால் தாக்கிக்கொள்ள முடியவில்லை என்கிற உளவியல் காரணியையும் இக்கட்டுரை வழி கண்டறியமுடிகிறது.

சாதி பாகுபாடுகளைத் தீவிரமாக கடைபிடித்தல், அதிக மணி நேர உழைப்பைச் சுரண்டுதல், கொத்தடிமைகளாக நடத்தி மனதாலும் உடலாலும் இம்சித்தல். கடவுச் சீட்டு முதலான ஆவணங்களைப் பறித்து வைத்துக்கொள்ளுதல், சிற்பிகள் என்ற பெயரில் நிறுவனமாக நடத்தும் கோயில்களில் கட்டுமான பணி செய்ய ஆட்களை கடத்தி வருதல், பெண்களை தேவதாசிகளைவிட மிக மோசமாக அடைத்து வைத்து சுரண்டுதல், சிறுவயது சிறுமியர்களின் மீது பாலியல் வன்மங்களை கோயில் வளாகங்களுக்குள் கட்டவழித்து விடுதல், சைவம் அசைவம் என்கிற உணவரசியலை எதிர் எதிர் துருவங்களாக வைத்து மானுடக் கூட்டத்தை கூறுபோடுதல், மேட்டுக்குடிகளின் கலைகளை இந்தியாவின் தொல்கலைகள் என்று அடையாளப்படுத்துதல், குறிப்பாக பரதநாட்டியக் கலையை இந்திய கலையாக விளம்பரம் செய்தல், போன்ற பன்முனை தாக்குதல்கள் கீழடுக்கு சாதிகளின் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்பதை வேதனையோடும் ஆதாரங்களோடும் ஒரு சேர முன்வைக்கிறார் எழுத்தாளர் அருள்மொழி.

திருமண இணையைத் தேடும் தளங்களில் அந்தந்த குறிப்பிட்ட சாதியினருக்கென்று தனித்தனியான தளங்களை உருவாக்குதல், முகநூல் பக்க குழுக்கள் கூட சாதியின் அடிப்படையில் அணிதிரளுதல் போன்ற பிற அபத்தங்களும் அரங்கேறுகின்றன என்று குறிப்பிடுகிறார்.

அம்பேத்கர் கிங் படிப்பு மையம், மற்றும் அம்பேத்கர் இண்டர்நேசனல் போன்ற சாதி மற்றும் இனப்பாகுபாடுகளை எதிர்த்தும் சமூக வர்க்க நீதிக்கு ஆதரவாக இயங்கிவரும் பல அமைப்புகள் கொடுத்த சட்டரீதியிலான அழுத்தத்தின் காரணமாக சாதி சிக்கல்களை குற்றநடவடிக்கையாக நீதித் துறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான தீவிர முன்னெடுப்பகளை மேற்கொண்டதை அருள்மொழி குறிப்பிடுகிறார்.

இந்த சட்ட வரைவை நிறுத்திவிட வலது சாரிகள் ஒவ்வொரு கட்டத்திலும் பெரும் முயற்சிகளை நயவஞ்சகமாக மேற்கொண்டதையும் முகத்திரை கிழிய கூறியுள்ளார்.ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிரான சாதி்ய வன்மத்தின் கொடூர முகங்களை நமக்கு அடையாளப்படுத்துகிறார்.

‘ இங்கு பூநூல் அணிபவர்களுக்கு நல்ல முறையில் பூநூல் அணிவிக்கப்படும்’ ‘ இங்கு சுத்தபத்தமாக சமைக்கப்படுகிறது’ முதலான மேட்டுகுடி சாதியினரின் பொது அறிவிப்புகள் எத்தகைய சாதி வன்மத்தை மெளனமாக நிகழ்த்துகின்றன என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

இந்தியர்களில் 70 சதவிகிதத்திற்கு மேற்பட்டோர் அசைவ உணவு உண்பவர்களாக இருக்கும் நிலையில் இந்தியர்களின் உணவு மரக்கறி உணவு என்பதான அவர்களின் புனைவின் முயற்சியிலும் சாதீயத்தின் கோர முகத்தைப் பார்க்க முடிகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களை ‘ தலித் ‘ என்ற பொதுச்சொல்லால் அழைப்பது வழக்கத்திற்கு வந்த போது உயர் சாதியினரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற இழிமொழி நீங்கி புனிதப்பட்டுவிட்டவர்கள் போன்ற உணர்வை ஏற்படுத்தியதே அதற்குக் காரணம்.

சாதி மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் தலித் என்னும் ஒற்றை வார்த்தையால் அடையாளப்படுத்தப்பட்டு அவர்களது விடுதலைக்கான போராட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன.

பாடத்திட்டத்தில் ‘ தலித்’ என்கிற சொல் தருகின்ற மேன்மையை தாங்கிக் கொள்ளும் மனமில்லாத சாதி ஆதிக்கவாதிகள் ‘ ஹரிஜன்’ என்ற வார்த்தையை வைக்கும்படியும் அழுத்தம் கொடுக்கிறார்கள்.

ஆரியர்கள் இந்தியாவின் ஆதிக்குடிகள், அவர்கள் வந்தேரிகள் அல்ல என்னு வரலாற்றை திருத்தி எழுதும் அபத்தங்களையும் அரங்கேற்றினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

வரலாறுகளை திருத்தி எழுதும் அபத்தங்களை திட்டமிட்டே அரங்கேற்றும் போக்கை அருள்மொழி அவர்கள் தோலுரித்து காட்டியுள்ளார்.

‘பிறப்பொக்கும் எல்லா மானிடர்க்கும்’ என்று சொல்லாமல் ‘ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவன் பிரபஞ்சத்தின் அத்தனை உயிர்களையும் சமமாக தரிசித்தவன். ‘ இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் ‘ என்று இரண்டாக பார்த்த ஒளவை பசிபிணி தீர்த்தவள். ‘ யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்று சொன்ன கணியன் உலகத்தார் ஒவ்வொருவரையும் தன் உறவுகளாக கொண்டாடியவன். அறிவை விரிவு செய்யாமல், விசால பார்வைகளால் மக்களை விழுங்கச்சொன்னவன் பாவேந்தன்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரியையும் சமமாக கொண்டாட வேண்டும் என்ற ஞானத்தை சங்கம் தொடங்கி சமகாலம் வரையிலும் கற்பித்துக் கொடுத்த தொன்மையான அறிவுச் சமூகத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனும் இந்த நவநாகரீக உலகில் சாதி வேறுபாடு பார்ப்பது எத்தனை அபத்தமானது என்பதை இந்தநூல் கோடிட்டு காட்டுகிறது.

இன்னும் நிறைய அம்பேத்கர்கள் அவதரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். இம்பேத்கரின் சாயலில் ஒருத்தி. அவர் பெயர் அருள்மொழி.

 

நூலின் தகவல்கள் 

நூல் : “அமெரிக்காவில் சாதி”

நூலாசிரியர் : அருள்மொழி

பதிப்பகம்  : பாரதி புத்தகாலயம்

நூலை பெற : 44 2433 2924 thamizhbooks.com

விலைரூ. 80

 

அறிமுகம் எழுதியவர் 

 போ.மணிவண்ணன்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *