Are You Ok Baby Tamil Movie Review By Era Ramanan, செப்டம்பர் 2023இல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம்.

 

செப்டம்பர் 2023இல் அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள தமிழ் திரைப்படம். ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார். சமுத்திரக்கனி, அபிராமி, முல்லை அரசி, அசோக் குமார் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துளள்னர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

திருமணமாகாமல் சேர்ந்து வாழும் இணையர்கள் ஷோபா,தியாகி. அவன் சினிமா வாய்ப்பு தேடி அலையும் ஒரு நடிகன். குடிகாரன். குழந்தை பிறந்தால் தியாகி திருந்துவான் என்று எண்ணுகிறாள் ஷோபா. ஆனால் அவன் அவளை ஐந்து முறை கருக்கலைப்பு செய்ய வைக்கிறான் ஆறாவது முறை கருத்தரிக்கும்போது செவிலியர் ஒருவர், குழந்தையை தத்து கொடுத்தால் நல்ல தொகை கிடைக்கும் என்று ஆசை காட்டுகிறாள். குழந்தைப் பேறு இல்லாத, வசதியான இணையர்கள் வித்யாவும் பாலச்சந்திரனும் அந்த குழந்தையை தத்து எடுக்கிறார்கள். பிரசவத்திற்கு முன்னும் நிறைய பணம் தருகிறார்கள். குழந்தையுடன் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்கிறார்கள்.

‘சொல்லாததெல்லாம் உண்மை’ என்கிற தொலைக்கட்சி நிகழ்ச்சியை கேள்விப்பட்டு அதன் மூலம் தன் குழந்தையை மீண்டும் பெறலாம் என்று ஷோபா அங்கு செல்கிறாள். அவர்களின் ஆலோசனையின்படி குழந்தைகள் நல வாரியத்திடம் தன் குழந்தையை மீட்டு தருமாறு புகார் தெரிவிக்கிறாள். காவல்துறை விசாரணை நடக்கிறது. பணம் கொடுத்ததை வித்யா பாலன் இணையர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். வழக்கு நடக்கிறது. குழந்தை அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்படுகிறது. தத்து எடுக்கும் சட்டப்படி பணம் கொடுப்பது குற்றமாகும். எனவே குழந்தையை பெற்ற தாயான ஷோபாவிடமே ஒப்படைக்க வேண்டுமென்று அரசு வழக்குரைஞர் வாதிடுகிறார்.

வித்யா பாலனின் வக்கீல், ஷோபாவின் நடத்தையை கேள்விக்குள்ளாக்குகிறார். அவளின் வசதியின்மையை சுட்டிக் காட்டி குழந்தை வித்யா பாலன் இணையரிடம் வளர்வதே அதற்கு நல்லது என்று வாதிடுகிறார். திடீர் திருப்பமாக ஷோபாவே தான் மனப்பூர்வமாகவே குழந்தையை தத்து கொடுத்ததாகவும் குழந்தை அவர்களிடமே வளரட்டும் என்று கூறுகிறாள். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துபவர்கள் ஷோபாவை தங்கள் டிஆர்பிக்காக பயன்படுத்துகிறார்கள் என்கிற வாதத்தையும் வித்யா பாலனின் வக்கீல் வைக்கிறார். ஆகவே குழந்தை வித்யா பாலன் இணையரிடமே இருக்கலாம் என்று நீதியரசர் தீர்ப்பு கூறுவதுடன் படம் முடிகிறது.

Are You Ok Baby? (2023) - IMDbதத்து எடுக்கும் சட்டத்தை மையமாக வைத்து, அதிகம் நாடகத்தன்மை இல்லாமல், இயல்பாக ஒரு படத்தை இயக்கியதை பாராட்ட வேண்டும். எல்லா நடிகர்களும் பாத்திரங்களுகேற்றவாறு நடித்துள்ளார்கள். உரையாடல்களும் பல இடங்களில் பாராட்டும் விதமாக உள்ளன. குழைந்தகள் நல வாரிய அதிகாரி ‘நியாயப்படி நடப்பதா இல்லை சட்டப்படி நடப்பதா?’ என்று கேட்பது; ஷோபா நீதிமன்றத்தில் தங்கள் இல்லற உறவு பற்றி வெளிப்படையாக பேசும்போது அதை ஆட்சேபிக்கும் அரசு வக்கீலிடம் ‘சில உண்மைகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை’ என்று நீதியரசர் கூறுவது; சேர்ந்து வாழ்வதை ஒரு ஒழுக்கக் கேடாக வக்கீல் வாதிடுவதை நீதியரசர் மறுத்து உச்ச நீதிமன்றமே அது தவறில்லை என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டும் இடமும் சிறப்பு. ஆனால் கூட வாழ்பவன் நேர்மையானவனா என்பதை தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பதை படம் காட்டுகிறது.

வறுமையின் காரணமாக குழந்தையை கொடுத்து விட்டு தாய் பாசத்துடன் ஷோபா போராடுவது நல்ல கதையம்சம். அந்தப் பாத்திரத்தின் மீது பார்வையாளர்க்ளுக்கு கோபம் வருமளவுக்கு அப்பாவியாக, அதிகம் சிந்திக்காதவளாக படைக்கப்பட்டிருக்கிறாள். ஐந்து முறை கருக்கலைப்பு செய்ய ஒரு பெண் ஒத்துக்கொள்வாளா என்ற கேள்வி எழுகிறது. அவளுடய ஒப்பனை கூட பரிதாபமாக செய்யப்பட்டிருக்கிறது.

‘சாட்டர்ஜி எதிர் நெதர்லாந்து’ என்கிற இந்தி திரைப்படத்திலும் பெற்றவர்களால் குழந்தையை சரியாக வளர்க்க முடியாது என்று கூறி குழந்தைகள் நல வாரியத்தினர் குழந்தையை முரட்டுத்தனமாக எடுத்து செல்வது; பெற்ற தாய் குழந்தைகளை திரும்பப் பெற நடத்தும் போராட்டம்; இறுதிக் காட்சியில் நீதியரசர் நியாயத்தின் அடிப்படையில் நீதி வழங்குவது ஆகியவற்றை ஓரளவிற்கு இந்தப் படத்துடன் ஒப்பிடலாம்.

Are You Ok Baby? (2023) - IMDbதொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்ற நிகழ்ச்சிகள் எவ்வாறு மக்களின் உணர்ச்சிகளை தூண்டுமாறு கட்டமைக்கப்படுகிறது என்பதை காட்டியிருப்பதையும் பாராட்டலாம். ஏற்கனவே ‘அருவி’ போன்ற படங்களில் இத்தகைய காட்சிகளை பார்த்திருக்கிறோம். இதில் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதில் குழுவினரின் உழைப்பையும் காட்டியிருக்கிறார்கள்.

வளர்ப்பு பிள்ளைகளிடம் தாங்கள் அவர்களின் உயிரியல் பெற்றோர்கள் இல்லை என்று கூறும் சிக்கலை ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற படங்களில் காட்டியிருப்பார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ‘புன்னகை’ திரைப்படத்தில், உண்மையே பேசும் கதாநாயக பாத்திரம் தன் பிள்ளையிடம் அவன் தனக்குப் பிறந்தவன் இல்லை என்ற உண்மையை கூறியிருப்பான். இந்த திரைப்படத்திலும் அதை அந்த பெண் குழந்தையிடம் மறைமுகமாக கூறுவதாக படம் முடித்திருக்கிறார்கள். சில எடிட்டிங் குறைகள் இருப்பது போல் தெரிகிறது. வித்தியாசமான படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *