தனிப்பட்ட மற்றும் அமைப்பு ரீதியான இன்னல்களை எதிர்கொண்டு, அதிரடி அரசியல் பிரச்சாரங்களைப்  பயன்படுத்துகின்ற கலையில் பிரதமர் நரேந்திர மோடியும், அவரது நீண்டகால கூட்டாளியுமான உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நிபுணர்களாக இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான கேசுபாய் படேலிடமிருந்து முதல்வர் பதவியைப் பறித்து குஜராத்தின் இடைக்கால முதல்வராக மோடி பொறுப்பேற்ற 2001 அக்டோபரிலிருந்து, முதலில் மாநில அரசியலிலும், பின்னர் தேசிய அளவில் கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய இந்த இருவரும் தமக்கு முன்பிருக்கின்ற சவால்களைச் சமாளிப்பதற்காக மீண்டும் மீண்டும் அந்த தந்திரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். 2020 ஜூன் கடைசி வாரத்திலும், அவர்கள் மீண்டும் அதையே செய்தார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் நேருக்கு நேர் மோதல் மற்றும் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட பல விவகாரங்களில் தாங்களும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் சந்தித்திருக்கும் இழப்பை ஈடுகட்டுவதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தை, மோடி-ஷா குழு தொடர்ச்சியான ஒத்திசைவான நகர்வுகளின் மூலமாகத் தொடங்கியிருக்கிறது.

கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலில், கர்னல் பதவியில் இருந்த அதிகாரி உட்பட இருபதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலருக்கு காயம் ஏற்பட்டது. தொற்றுநோயைப் பொறுத்தவரை, நாட்டில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையில் ஜூன் மாதத்தில் அதிவேக உயர்வு காணப்பட்டது. மாதத்தின் கடைசி ஏழு நாட்களில் ஒரு நாளைக்கு ஏறக்குறைய 20,000 புதிய நோயாளிகள் என்று அதிக அளவில் நோயாளிகளின் சராசரி எண்ணிக்கை அதுவரையிலும் இருந்து வந்த எண்ணிக்கையைவிட கூடுதலாகப் பதிவாகியது.

India's Reply To China: Times Now Shows 39.8 Is Greater Than 60.2 ...

சீன வீரர்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த பொதுமக்களின் எதிர்விளைவுகள் உணர்ச்சிவசப்பட்டவையாக  இருந்தன. ஜூன் 19 அன்று நடைபெற்ற அனைத்து கட்சி வீடியோ மாநாட்டில் பிரதமர் கூறியவற்றை ஏராளமான மக்கள் – 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் – நம்பவில்லை என்பதை ஐஏஎன்எஸ்-சிவோட்டர் எடுத்த வாக்கெடுப்பு உட்பட பல்வேறு ஏஜென்சிகள் நடத்திய ஆய்வுகளும் சுட்டிக் காட்டின. சமீப மாதங்களில் சீனாவிடம் எந்தவொரு பகுதியையும் இந்தியா இழக்கவில்லை என்றும், ’நமது எல்லைக்குள் அவர்கள் ஊடுருவவில்லை, அவர்களால் எந்த இடத்தையும் ஆக்கிரமிக்க முடியவில்லை’ என்றும் அப்போது மோடி தெரிவித்திருந்தார். ’நமது வீரர்களில் 20 பேர் தியாகிகளாகி இருக்கிறார்கள். ஆனால் பாரத் மாதாவை போருக்கிழுத்தவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டது’ என்று அவர் கூறியிருந்தார். ஆனாலும் அந்த கருத்துக்கணிப்பு ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ’சீனர்களுக்கு பொருத்தமான பதில் வழங்கப்படவில்லை’ என்று கருத்து தெரிவித்திருந்தனர். கோவிட்-19ஐப் பொறுத்தவரை, மக்கள்தொகையில் பெரும்பாலானோர் தங்களைப் பாதுகாப்பற்றவர்களாக  உணரத் தொடங்கியிருக்கின்ற நிலையில், இந்தியா மற்ற நாடுகளை விட சிறப்பாக பணியாற்றியிருக்கிறது என்று காட்டுவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பைப் போல, மற்ற நாடுகளுடன் இந்தியாவை பிரதமர் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

எல்லா வகைகளிலும் வாய்ச்சவடால் 

இவ்வாறான சூழலில் மோடி மற்றும் ஷா இருவரும் பகிரங்கமாகத் தோன்றி இந்த விஷயங்களில் ஈடுபாடு காட்டினர். கால்வான் மற்றும் கோவிட் இரண்டையும் மையமாகக் கொண்டு தங்களுடைய வாய்ச்சவடால்களை அவர்கள் நிகழ்த்தினர்.’உலகளாவிய சகோதரத்துவம் குறித்த இந்திய ஆன்மா உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டையும், வலிமையையும் உலகம் கவனித்துள்ளது’ என்று குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தி வருகின்ற ’மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் மோடி வலியுறுத்தியிருந்தார். ’லடாக்கில் இந்திய மண்ணின் மீது கண் வைத்தவர்களுக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது’ என்று கூறிய அவர், ’இந்தியா நட்புணர்வை மதிக்கிறது… (ஆனாலும்) பயந்து ஓடாமல் எந்தவொரு எதிரிக்கும் தகுந்த பதிலை அளிக்கும் திறன் இந்தியாவிடம் இருக்கிறது’ என்றும் அவர் கூறியிருந்தார்.

News18 - Amit Shah: Under PM's Leadership We Will Win Both Wars ...

கோவிட்டை எதிர்த்துப் போராடுவதைப் பொறுத்தவரை, கோவிட்டிற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாக மக்கள் காட்டிய ஒற்றுமை உணர்வு இருந்துள்ளது என்று அவர் கூறினார். மோடியின் இந்த பிரகடனங்களையே, தொலைக்காட்சி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது அமித் ஷாவும் எதிரொலித்தார். ’நாங்கள் இந்த இரண்டு போர்களையும் வெல்வோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம். ஒன்று கோவிட்டிற்கு எதிரானது, மற்றொன்று சீன இராணுவம் லடாக்கிற்குள் ஊடுருவ முயற்சிகள் மேற்கொண்டது தொடர்பானது’ என்று அவர் கூறினார். ’மோடியின் தலைமையின் கீழ் இந்த இரண்டு போர்களையும் நாங்கள் வெல்வோம் என்று மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்’ என்றார்.

Border dispute between India and China - M.I.C.S. IAS LUCKNOW

சீனாவுடனான நேருக்கு நேர் நிலைப்பாட்டை விளக்க முயன்ற அமித் ஷா ’ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம், அதில் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் பகுதிகளும் அடங்கும் என்பதை நான் அதிகாரப்பூர்வமாக குறிப்பிட விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அரசியலமைப்பால் தீர்மானிக்கப்பட்ட எல்லைகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் ஆகிய பகுதிகளும் அடங்கும்’ என்று கூறினார். இருந்த போதிலும், மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டில் (எல்.ஏ.சி) நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்து குறிப்பிட்ட கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சர் தவிர்த்தார்.

ஜூன் மாத இறுதியில் எதிர்க்கட்சிகளை, குறிப்பாக காங்கிரஸை குறிப்பிட்டு, வெளிப்படையான இலக்காக கொண்டே இந்த இரண்டு தலைவர்கள் பேசிய பேச்சுக்களின் மையக் கருப்பொருள் இருந்தது. அவர்கள் கூறியவை உலகளாவிய மற்றும் தேசிய பிரச்சனைகள் பற்றியவையாக இருந்தன என்றாலும், அவை பொதுவாக மிகச்சிறிய அளவிலான அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலக்கியே வைக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் ’இந்திய விரோத பிரச்சாரத்தை’ முன்னிலைப்படுத்த முயன்ற அமித் ஷா, முன்னாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி பாகிஸ்தானிலும் சீனாவிலும் விரும்பப்படுகின்ற அரசியல் நிகழ்ச்சி நிரலையே முன்வைக்கிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் ’இந்த நெருக்கடியின் போது, இத்தகைய பிரச்சாரத்தில் நீங்கள் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. உங்கள் தலைவரின் ஹேஷ்டேக் பாகிஸ்தான் மற்றும் சீனாவால் விளம்பரப்படுத்தப்படுவது குறித்து காங்கிரஸ் கட்சி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் கூறினார்.

பாதுகாப்பைப் பொறுத்தவரையிலும் நாட்டின் தோல்விக்கு, கிட்டத்தட்ட முழு அரசியல் தலைமையும் பொறுப்பேற்க வேண்டும் என்று 2014இல் பாஜக ஆட்சிக்கு வரும் வரை மோடி குற்றம் சாட்டி வந்தார். சுதந்திரத்திற்கு முன்பு, பாதுகாப்பு விஷயங்களில் நமது நாடு உலகின் பல நாடுகளை விட ஏராளமான ஆயுத தொழிற்சாலைகளுடன் முன்னணியில் இருந்தது என்று கூறிய அவர், அப்போது இந்தியாவை விட பின்தங்கியிருந்த பல நாடுகள், இப்போது நம்மை முந்திச் சென்றிருக்கின்றன என்றார். மேலும் அவர் கூறும் போது, ’சுதந்திரத்திற்குப் பிறகு, நம்முடைய முந்தைய அனுபவங்களைப் பயன்படுத்தி, பாதுகாப்புத் துறையில் நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்க  வேண்டும். ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லை. ​​பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில், இப்போது இந்தியா சுயசார்பை நோக்கி முன்னேறி வருகிறது’ என்றார்.

Surender Modi' tweet intensifies BJP backlash against Rahul Gandhi ...

கட்சியின் நிர்வாகரீதியான பெரிய அமைப்புகளும், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) தலைமையிலான சங்பரிவாரில் இருக்கின்ற அதன் கூட்டாளிகளும், பாஜக மற்றும் அதன் அரசாங்கத்தின் மிகச்சிறந்த இந்த இரண்டு செயற்பாட்டாளர்களிடமிருந்து தங்களுடைய நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டன. அதன்படி, 1962 முதல் நடைபெற்றிருக்கும் சீன ஊடுருவல்கள் குறித்த விவாதத்திற்கு வருமாறு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸுக்கு, குறிப்பாக ராகுல் காந்திக்கு சவால் விடுத்தார். தற்போதைய சர்ச்சையில் இந்தியா சீனாவிடம் தன்னுடைய பிரதேசத்தை ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்த கருத்துக்களை ஒட்டி பிரதமரை ’சரண்டர்’ மோடி என்று வேறு பெயரிட்டு ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, அந்த சவால் விடுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் நேருவின் காலத்திலிருந்தே, இந்தியா ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தை சீனாவிடம் இழந்திருக்கிறது என்பதுதான் நட்டா சொல்ல வருகின்ற கருத்து. ’அதனால்தான் 1962 முதல் இன்றுவரையிலும் எல்லையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கான பொறுப்பை சரிசெய்ய வரலாற்றுரீதியான விவாதம் நமக்குத் தேவைப்படுகிறது’ என்று நட்டா கூறினார். சங்பரிவாரைச் சேர்ந்த அனைவரும், குறிப்பாக அதன் இணைய வீரர்கள் இந்தப் பிரச்சாரத்தை விரைவாக முன்னெடுத்துச் சென்றனர். நேரு குடும்பத்தினர் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது தனிப்பட்ட தாக்குதல்களாக அந்த பிரச்சாரம் கொடூரமாக இருந்தது.

அகமதாபாத்தில் உள்ள பாஜகவின் முன்னாள் மூத்த தலைவர் ஃப்ரண்ட்லைனிடம் பேசும் போது, இவ்வாறான அதிரடிப் பிரச்சாரத்தைக் கொண்டு தாக்குவதை, குஜராத் அரசியலில் தங்களது ஆரம்பகாலத்திலிருந்தே மோடி – ஷா  கூட்டணி மிகச்சரியாக செய்து வந்திருப்பதாக கூறினார். ’2002ஆம் ஆண்டு இனவாத கலவரத்தின் மீது எழுந்த விமர்சனங்களையும், அதானி, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு ஆதரவளித்து வருவதற்காக பி.எம்.எஸ் [பாரதிய மஜ்தூர் சங்கம்] போன்ற அமைப்புகளிடமிருந்து வந்த விமர்சனங்களையும் அவர்கள் துணிச்சலாக எதிர்கொண்டனர். இதுபோன்ற ஒட்டுமொத்த தாக்குதலே, சங்பரிவாரில் உள்ள மற்ற தலைவர்களை, சங்பரிவார் அதிகார மட்டத்தில் மோடிக்கு இணையாக அல்லது அவருக்கும் மேலாக மதிக்கப்பட்டு வந்த சஞ்சய் ஜோஷி, விஸ்வ ஹிந்து பரிஷத் [வி.எச்.பி]. அமைப்பின் முன்னாள் சர்வதேச தலைவரான பிரவீன் தொக்காடியா ஆகியோரை ஓரம்கட்டுவதற்கும் வழிவகுத்துக் கொடுத்தது. தனிப்பட்ட அரசியல் பேராசைகளின் அடிப்படையில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட ஜோஷி, பாலியல் தொடர்பான சர்ச்சையில் வெளிப்படையாகச் சிக்க வைக்கப்பட்டார். மும்பையில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பாக, சந்தேகத்திற்குரிய சிடி ஒன்று வெளியானது. விளைவாக ஜோஷி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்’ என்று அந்த முன்னாள் தலைவர் கூறினார்.

Sanjay Joshi - Alchetron, The Free Social Encyclopediaஅவர் மேலும் கூறும் போது, ’நிலைமை மோசமாக இருக்கும்போது மோடி 20 கைகளுடன் சண்டையிடுவார் என்ற கூற்று குஜராத் பாஜகவில் உள்ளது. சீனா மற்றும் கோவிட் ஆகியவற்றால் தங்கள் நிலைமை மோசமாகி இருப்பதன் பொருத்தப்பாட்டையும், முக்கியத்துவத்தையும், குறிப்பாக அது களத்தில் வெளிப்பட்ட விதம் குறித்து மோடியும் ஷாவும் நன்கு உணர்ந்துள்ளனர். சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்கள் பின்வாங்குவதற்கும் பொதுமக்களின் மனநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கும் எதையும் செய்வார்கள்’ என்று தெரிவித்தார்.

இருந்த போதிலும், இவர்களுடைய புதிய பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டங்களில், பொதுமக்களின் மனநிலை ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. பணியில் இருப்பவர்களையும், ஓய்வு பெற்ற அதிகாரிகளையும் உள்ளடக்கிய பெரிய ராணுவ அமைப்பிற்குள், பாஜக-சங்பரிவார் பிரச்சாரத்தில் இருக்கின்ற சில கருத்துக்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ’தற்போதைய சர்ச்சை மற்றும் உயிரிழப்புகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டால், 1962 முதல் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர்களை நாம் இழந்திருக்கிறோம், விவாதங்கள் அங்கிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று பதிலளிக்கிறார்கள். தற்போதைய நிலைமை தொடர்பாக, நீங்கள் தற்காப்பு உணர்வுடன் இருப்பதையே இத்தகைய வாதம் காட்டுகிறது’ என்று முன்னாள் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் ஃப்ரண்ட்லைனிடம் தெரிவித்தார்.

படைவீரர்களிடம் அமைதியின்மை

ராணுவத்தின் அதிகாரப்பூர்வமற்ற, கட்டுப்படுத்தப்பட்ட சமூக ஊடக தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்ற பல விஷயங்களை அந்த அதிகாரி மேற்கோள் காட்டினார். ’லடாக் பகுதியில் நிலைமை குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை. சீனர்கள் பின்வாங்குவது குறித்து பேசினாலும், தங்கள் இடங்களில் இருந்து அவர்கள் விலகவில்லை. தங்கள் நிலைகளை கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் த்சோ பகுதிகளில் சீனர்கள் மேலும் பலப்படுத்தியுள்ளனர். துருப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மட்டுமல்லாமல், அந்த இடங்களில் கான்கிரீட் கட்டமைப்புகள் மற்றும் கனரக ஆயுதங்கள் இருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன. ராணுவம் மற்றும் அதிகார மட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளில், கால்வான் பள்ளத்தாக்கு முழுவதிலும் தங்கள் இடத்தை வலியுறுத்தியுள்ள சீனர்கள், இந்த விவகாரம் குறித்து மேலும் விவாதிப்பதற்குத் தயாராக இல்லை. பாங்கோங் த்சோ பகுதியில், தாங்கள் இதுவரையிலும் உரிமைகோரி வந்த எல்லைக்கோட்டைப் புறக்கணித்ததோடு, பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்த எல்ஏசியையும் முற்றிலுமாக மீறியுள்ளனர். 1962 முதல் தாங்கள் பராமரித்து வந்த இடங்களை விட நன்கு முன்னேறி வந்துள்ளனர். கிட்டத்தட்ட முழு வடகரையும் இப்போது அவர்களிடம் உள்ளது. தொடர்ந்து துருப்புக்களைக் குவித்து வருவதால், டெப்சாங் சமவெளி மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ்-கோக்ரா பகுதியிலும் நிலைமை பதட்டமாகவே உள்ளது’ என்று அந்த விவாதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

காரகோரம் கணவாய்க்கு செல்லும் முக்கியமான டார்புக்-டிபிஓ சாலையில் ஆதிக்கம் செலுத்துவதே சீனாவின் உத்தியாக இருக்கிறது என்று இந்த குழுக்களில் அதிகமாக இருக்கின்ற மற்றொரு பார்வையாக உள்ளது. ’இப்போது ஏன் இது நடக்கிறது என்று புரியவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக டிபிஓ சாலை கட்டுமானத்தில் இருந்து வருகிறது. என்ன நடக்கிறது என்பதை சீனர்கள் நிச்சயமாக அறிந்திருப்பார்கள்’

சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தை (சிபிஇசி) பாதுகாக்கும் நோக்கத்துடன், வடக்கு லடாக்கைத் துண்டித்து, அக்ஸாய் சின் நெடுஞ்சாலையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காஷ்மீரில் (POK) உள்ள காரகோரம் நெடுஞ்சாலையுடன் இணைப்பதே சீனாவின் உத்தியாக இருப்பதாக பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ’இந்த கருத்தில் எந்த அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு துப்பாக்கிச்சூடுகூட இல்லாமல் சின்ஜியாங் மாகாணத்திலிருந்து, குஞ்ஜராப் கணவாய் வழியாக பால்டிஸ்தானுக்குள் நுழைவது எளிது எனும் போது,  காரகோரம் மலைகள் மற்றும் பால்ட்டிஸ்தானுக்குள் சியாச்சின் பனிப்பாறை உட்பட, உலகின் மிகப்பெரிய பனிப்பாறைகளைக் கடந்து, தொழில்முறையிலான ஒரு ராணுவத்திற்கு எதிராக, தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற காஷ்மீரில் நுழைய சீனர்கள் ஏன் போராட வேண்டும்? சின்ஜியாங் மாகாணத்திலிருந்து தங்களுடைய நடவடிக்கைகளைத் தொடங்குவது அவர்களுக்கு மிகவும் எளிதானது’.

Indo-Pacific News on Twitter: "3) One #IndianArmy CO (Commanding ...

’சீனர்கள் தொடர்ந்து முன்னேறுவார்கள், அவர்கள் தங்கள் இடங்களைப் பெறும் வரை படிப்படியாக அடியெடுத்து வைப்பார்கள், ‘சலாமி நறுக்கல்’ என்று ஆய்வாளர்கள் அழைப்பதைப் போல, எப்போது தங்களுக்கு விருப்பம் ஏற்படுகின்றதோ, அப்போது அவர்களால் அங்கிருந்து தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த முடியும். அவர்களால் சிறிய மோதல்கள் மற்றும் கலகங்கள் மூலமாக இதைச் செய்ய முடியுமென்றால், தங்கள் நோக்கத்தை அவர்கள் அடைந்து விடுவார்கள்’ என்பதாகவே ராணுவ குழுக்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முடிவு இருக்கிறது.

மோடி மற்றும் அமித் ஷா தலைமையில் பாஜகவும், சங்பரிவாரும் முன்னேற முயல்கின்றன என்கிற பிரச்சாரம், ராணுவத்தின் குறிப்பிடத்தக்க பிரிவுகளுக்குள் உள்ள உணர்வுகளை எதிரொலிக்கவில்லை என்பது தெளிவாகிறது. இந்த நிகழ்வுகளின் ஒட்டுமொத்த வரிசை குறித்து கருத்து தெரிவிக்கையில், ’இதுபோன்ற காலங்களில், தேசிய நலன்களின் தனித்துவங்களின் மீது மட்டுமே தேசிய தலைமை கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் மனதில் தெளிவின்மையை உருவாக்கும் வகையில் அது செயல்படக்கூடாது’ என்று முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் எச்.எஸ்.பனாக் ஃப்ரண்ட்லைனிடம் கூறினார்.. ’தேசிய பாதுகாப்பிற்கான தர்க்கரீதியான அணுகுமுறையானது, விரிவான தேசிய பாதுகாப்பு உத்தியை உருவாக்குவதற்கு உள்ளுக்குள்ளும், வெளியேயும் இருக்கின்ற தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்பு சவால்கள் என்ன என்பதை நிறுவுவதற்கான மறுஆய்விலிருந்தே தொடங்க வேண்டும். அதை நோக்கிய முதல் படியாக, தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரங்களை உள்நாட்டு அரசியலுடன் தொடர்புபடுத்தாமல் நீக்குவதே இருக்கும். அதற்கான முழுப்பொறுப்பும் அரசாங்கத்திடமே உள்ளது. எதிர்க்கட்சிகள், பாராளுமன்றம், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களை அரசாங்கம் நம்பிக்கையுடன் தன்னுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். அறிந்து கொள்ளத் தேவையான பாதுகாப்புக் கொள்கையை அது பயன்படுத்த வேண்டும். ஒன்றிணைந்த முன்னணியை தேசம் முன்வைக்கும் வகையில், களத்தில் உள்ள யதார்த்தத்தை அவர்கள் விளக்க வேண்டும்’ என்றார்.

முன்னாள் லெப்டினன்ட் ஜெனரலின் வார்த்தைகளில் ஆழ்ந்த சிந்தனைக்கான கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அதிகார பதவிகளைப் பெறுவதிலும், அவற்றைத் தக்க வைத்துக் கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்கள் இதுகுறித்து அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்களா?

https://frontline.thehindu.com/cover-story/article31955618.ece

நன்றி: ஃப்ரண்ட்லைன் இதழ், 2020 ஜூலை 17 

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *