B.V.Sugumaran's Dhiya novel in tamil translated by Yuma vasuki book review by Dhurai. Arivazhakan பி.வி.சுகுமாரனின் தியா நாவல் தமிழில்-யூமா வாசுகி - துரை. அறிவழகன்



“குழந்தைகளின் விருப்பப் பள்ளிக்கான திறவுகோல்”

2016ல் சிறார் இலக்கிய விருது பெற்ற குழந்தை பருவத்தினருக்கான நாவல் பி.வி. சுகுமாரனின், “தியா”. துளிர்க்கும் பருவத்து பசு இலை குறுஞ்செடிகளுக்கு வானத்தின் திசை காட்டும் பொறுப்புமிக்க பெரியவர்களும் வாசித்து நாவலின் உள்ளோட்டத்தை உள்வாங்கி சிறார் உலகுக்கு கடத்தலாம். கல்வியின் சாரத்தையும், மணத்தையும் கொண்ட அரசுப் பள்ளிகளின் சிறப்பு உணர்த்தும் எழுத்துக்கள்.

நூலின் மூல ஆசிரியர் பி.வி. சுகுமாரன் அவர்கள் கேரள பாலக்காட்டை வசிப்பிடமாகக் கொண்டவர். “தியா” நாவலுக்கான “கேரள பாயல்புக்ஸ் சிறார் இலக்கிய விருது” மட்டுமல்லாமல், “ஃபாதர் சின்னப்பா நாவல் விருது” மற்றும் “ராஜீவ் காந்தி கலாசார விருது” ஆகிய விருதுகளையும் பெற்றவர்.
கையகள நிலத்தை அளந்து சிறுகக் கட்டி பெருக வாழும் மனநிலை விலகி, பறப்பதைப் பிடிக்கும் மன உலகு கொண்டவர்கள் நடுத்தர வாழ்வியல் குடும்பத்தினர். அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகள் கல்வி கற்பதை இழுக்காகவும், தனியார் பள்ளி மாயப் பெருமையில் மூழ்கி தத்தளித்து தடுமாறும் பொருளியல் வாழ்வில் பயணிப்பவர்கள் இவர்கள். இந்த முரண் நகையை தன் எழுத்தின் சித்தரிப்பில் துல்லியமாக காட்சிபடுத்தி உள்ளார் நாவலாசிரியர் பி,வி.சுகுமாரன்.
கனவுச் சிறகுகளுடன் பரந்து, விரிந்த ஆகாயத்தில் சிறகடிக்க வேண்டிய பருவத்தில் முடக்கப்பட்ட சிறகுகளுடன் தங்களை சுருக்கிக் கொண்டு பயணிக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகும் குழந்தை மனதின் தெறிப்புகள் இழையோட பின்னப்பட்ட படல் இந்நாவல்.

சுய பெருமை எனும் மாபெரும் பொய்ப் பிம்பத்துடன் தங்கள் குழந்தைகளின் சிறகுகளை பொசுக்கும் பெற்றோர்களுக்கு சில உண்மைகளை உணர்த்தும் வகையில் தீட்டப்பட்டுள்ள சித்திரம் “தியா” நாவல். இச்சித்திரத்தின் வழி அரசுப் பள்ளிகளின் உயர் தன்மை நிறம்பெறுகிறது. மாயத் திரை விலக்கி, குழந்தைகளின் அக உலகம் மலர்வதற்கான இதமான காற்றை படரச் செய்யும் இது போன்ற வரவுகள் பிற மொழிகளில் இருந்து தமிழ் மண்ணில் உயிர் பெறும் போது சிறார் இலக்கியம் புது திசையில் புத்தொளி பாய்ச்சலுடன் பயணிக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
நாவலின் நாயகி ஆறு வயதுச் சிறுமி “தியா” நடந்த பாதை, கண்ட காட்சிகள், செய்த குறும்புகள், மலர்வுகள் என அவள் வாய்வழி விவரிக்கப்பட்ட யதார்த்த உண்மைகளின் அலையோட்டம் கொண்ட நாவல் “தியா”. அனுபவ துணுக்குகளில் சிறிதான புனைவு நிறம் சேர்த்து நாவலை அழகுற மலரச் செய்துள்ளார் ஆசிரியர். இதுவே நாவலின் கூடுதல் சிறப்பு.

1966ல் கும்பகோணத்துக்கு அருகாமையிலுள்ள திருவிடைமருதூரில் பிறந்தவர் யூமா வாசுகி. ‘மாரிமுத்து’ எனும் பெயரில் உள்ளொளி பாய்ந்த ஓவியங்களை இவர் தீட்டியுள்ளார். மலையாளத்திலிருந்து மொழிபெயர்த்த ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலுக்காக 2017ஆம் ஆண்டு ‘சாகித்திய அகாதெமி’ விருதினை பெற்றவர் இவர்.
‘உனக்கும் உங்களுக்கும் – 1993’; ‘தோழமை இருள் – 1997’ ; ‘இரவுகளின் நிழற்படம் – 2001’ ; ‘என் தந்தையின் வீட்டை சந்தை யிடமாக்காதீர் – 2008’ ; ‘சாத்தானும் சிறுமியும் – 2012’ ; ஆகிவைகள் இதுவரை வெளிவந்துள்ள இவரது பூரணத்துவம் பெற்ற கவிதை நூல்கள்.
“பொதுவாக ஒரு எழுத்தாளரின் படைப்புகளைத் தொடர்ந்து வாசிக்கையில் நாம் அவைகளுக்குள் ஒரு பொதுத்தன்மையை கண்டடைய முயற்சிப்போம். யூமா வாசுகியின் படைப்புகளை வாசிக்கையில் அதிலுள்ள பொதுத் தன்மையென எனக்குள் ஒரு வார்த்தை தோன்றுகிறது; “கள்ளமின்மை” – என சொல்கிறார் இளம் எழுத்தாளர் ‘சுரேஷ் பிரதீப்’.

யூமாவின் கவிதைகளை வாசிப்பது என்பது, குழந்தைமையை தொலைத்துவிடாத ஒரு தூய மனதை வழி தொடரும் நிகழ்வாகவே எனக்குப்படுகிறது. ‘எங்கே யாருக்கும் அவர்கள் கையசைத்தாலும், அங்கே நானும் நின்று ஏற்றுக்கொள்வதெப்படி’ என்று கையசைக்கும் குழந்தைகளின் உலகில், குழந்தைகளின் கையசைப்பை யாசித்து நிற்கும் எளிய மனிதராகவே தன்னை இருத்திக் கொள்ளும் ‘யூமா வாசுகியை’ அவரது எழுத்துக்களின் வழி காண முடிகிறது.
சத்தியமான இலக்கிய வாழ்வு என்பது மகுடங்களைத் தருவதில்லை; ஆனால் சிறகுகளைத் தரக்கூடியது. அத்தகைய காருண்ய சிறகுகளக் கொண்ட கலை ஆளுமையாகத் திகழ்பவர் யூமா வாசுகி. “நுண்ணுணர்வுகள் சலனித்துக் கொண்டிருக்கும் மனவோடை யூமாவுடையது” என்கிறார் எழுத்தாளரும், விமர்சகருமான ‘சி.மோகன்’ அவர்கள். குழந்தைமையும், களங்கமின்மையும் கலந்து கைகோர்த்து உலாவுகிற தூய வெளியை கருவாகச் சுமந்து யூமா வாசுகியின் படைப்புக்கள் உருக்கொள்கின்றன. பாசாங்கொழித்து முன் நிற்கும் தவிப்புக்கு உயிர்நீர் வார்க்கும் ஈரக்கரங்கள் போல இவருடைய ஒவ்வொரு கவிதையும் வாசிப்பு அகத்தை நனைக்கிறது. வெள்ளந்தி மனிதர் யூமாவின் ஒவ்வொரு வார்த்தையும் அன்பின் மகரந்தக் கருவை தன்னுள் கொண்டுள்ளது. கவிதை பெருவெளி எனும் பேரொளிக்குள் தன்னைக் கரைத்துக் கொண்டு ‘ஃபினிக்ஸ்’ பறவையாக எழும் யூமா வாசுகி அவர்கள் எதிர்வரும் படைப்பாளிகளுக்கான நற்சிறந்த பாதையாளர்.

தணலென தகிக்கும் வாழ்வின் நடுவே மொழி எனும் மானுடச்சொல் கொண்டு ஒரு தொல்மரமாக உருவெடுத்து நிற்கிறார் யூமா வாசுகி.
பிற மொழி சிறார் இலக்கியக் கதவின் பெரும் திறவுகோல் ‘யூமா’ அவர்கள் என்பதை “தியா” நாவலின் மொழிபெயர்ப்பு மீண்டும் நிரூபணம் செய்கிறது. அசல் மற்றும் சுய புனைவு என இரு நிலங்களிலும் கால்பதித்து மொழியாக்கம் செய்யும் கலை அறிந்தவர் யூமா அவர்கள். இசையின் ஓசையும், இயற்கையும் முயங்கி வெளிப்படும் காவியத்தன்மை கொண்ட மொழி கட்டமைப்பின் தீண்டல் நெகிழ்வை கண்டடையலாம் “யூமா வாசுகியின்” மொழிபெயரிப்பு சிறார் இலக்கிய நூல்களின் வாசிப்பு வழியாக.

எளிமையான விவரிப்பில் கதை நகரும் போது எழுத்து குறித்த சமூகப் பொறுப்பு உணர்ந்த ஆளுமையை பார்க்க முடிகிறது. சிறார் இலக்கியத்தின் அண்டரண்டப் பட்சி ‘யூமா வாசுகியின்’ அவர்கள் மலையாள மூலத்தின் உணர்வு ஒளி சிறிதும் பிசகாமல் நேர்த்தியுடனும், அழகியலுடனும் மொழி பெயர்த்துள்ளார். சிறார் இலக்கியத்தின் உயிர்ப்பான நிலம் மொழிபெயர்ப்பு கதைகள்; அதனை சிறப்புற தாய் மொழி வாசிப்பின் நெருக்கத்தை ஏற்படுத்துபவை யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பு.

சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் மீது நேசமும் அக்கறையும் கொண்ட பெரியவர்கள் வாசிக்க வேண்டிய சிறப்பான நாவல் பி.வி.சுகுமாரனின், “தியா”.

நூல் பெயர் : “தியா”
நூல் வகை : “சிறார் நாவல்”
மலையாள மூலம்: பி.வி.சுகுமாரன் / தமிழில் : யூமா வாசுகி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (புக்ஸ் ஃபார் சில்ரன்)
பக்கங்கள் : 110 விலை : 100 /-
தேவைக்கு :”புக்ஸ் ஃபார் சில்ரன்”,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி :044-24332424, 24332924, 24356935
புத்தகம் வாங்க : Tamizhbooks.com

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *