பாரதி கிருஷ்ணகுமாரின் *அப்பத்தா* சிறுகதை தொகுப்பு – விஜயராணி மீனாட்சி

Bharathi Krishnakumar’s Appatha Short Story Collection Book Review By Vijayarani Meenakshi. பாரதி கிருஷ்ணகுமாரின் *அப்பத்தா* சிறுகதை தொகுப்பு - விஜயராணி மீனாட்சிஅம்மாவும் அந்தோன் சேக்கவும் மற்றும் கிணறும்….:

அம்மா. அம்மா என்றாலே அழகுதான். பூவும் மஞ்சளும் குங்குமமுமாக அம்மாவின் அழகே தனி. ஒட்டுகிற பொட்டு வைக்காத குங்குமமே வைத்தும் வைத்த பொட்டு வைத்ததுபோலவே எழுகிற மகாலட்சுமி என்கிறார். எனக்கும்கூட அம்மாவை அப்படியே பார்த்துப் பழக்கம். குங்குமம் இல்லாமலோ கலைந்தோ அப்பாவை இழக்கும்வரை நாங்கள் பார்த்ததேயில்லை எங்கள் அம்மாவையும். அதிகாலை நாங்கள் எழும்முன்பே குளித்து நெற்றிக்கிட்டுவிட்டால் அப்படித்தானே பார்க்கயியலும். காலை எழுந்ததும் முதலில் பார்க்கவிரும்பும் முகமாக அக்கம்பக்கத்தாருக்குமான அன்பான ராசியான முகமாக இருந்தது அம்மாவின் முகம். அம்மா எனக்கு நல்ல தோழியாக இல்லையில்லை அம்மாவுக்கு நான் நல்ல தோழியாக இருந்ததற்குக்கூட அம்மா தான் காரணம்.

கொடுத்துச் சிவந்த கரங்கள் கர்ணனுக்கானவை என்றால் மற்றவர்களுக்கு எந்த உதவியானாலும் பிள்ளைப்பேறு உட்பட செய்தே சிவந்த கரங்கள் அம்மாவின் கரங்கள். சமையல் உட்பட அப்பா சொன்னதையே செய்கிற ஏன் ஒரு படி மேலே போய் நினைத்ததையே செய்கிற அம்மா மாதிரிப் பெண் கிடைப்பதெல்லாம் பெருந்தவம் செய்தவர்க்கே கிடைக்கும் கொடுப்பினை எல்லோருக்கும் வாய்த்துவிடாது. நம் அப்பாக்களுக்கு வாய்த்தது.

காவிரிக்கரையில் பிறந்த அம்மாவுக்கு காவிரியைப் பிரிந்த அம்மாவுக்கு ஆடிப்பெருக்கு திருவிழா தான். ஆனால் என் அம்மாவும் ஆடிப்பெருக்கைக் கொண்டாடுவாள். ஐந்துவகை அன்னம் படைத்து கிணறு குழாய் கழுவிப்பொட்டிட்டு பூவைத்து வணங்குவாள். அம்மாபொண்ணாக இன்றும் அதைக் கடைப்பிடிக்கிறேன்.

அங்கே கிணற்றை மூடிய இடத்தில் பூசிய சிமெண்ட் காயாமல் பதினைந்து நாள் வியர்த்துக் கசிந்து பதினாறாம் நாள் காலை கசிவு நின்று காய்ந்த சிமெண்டின் சாம்பல் பூத்த அதே காலையில் தன் தேவைகளுக்காக பிறர் உதவியை நாடாத அம்மா ரெம்பத் தாகமெடுப்பதாகச் சொல்லி, நான்கைந்து சொம்பு நிறையத் தண்ணீர் குடித்தும், தாகம் தணியாமல், ஈரம்விட்டுச் செத்துப்போனாள் அம்மா என்கிறார்.

எனக்கோ அம்மா நிறைவுத்தருணத்தை நெருங்குகிறாள் என்றதும் பத்துமணிநேரப் பயணம் முழுதும் பரிதவிப்பில் தொடர அக்காவை நானாக நிறுத்தி என்னைப்போல் ஆடையுடுத்தி இதோ வந்துவிட்டாள் உன் செல்லமகள் என்றபோது வேறுதிசைநோக்கி முகம் திருப்பிய அம்மா (இறுதிப்பொழுதென்றாலும் அவளுக்கா தெரியாது அவள் பார்க்கத் தவிக்கும் மகளின் உருவம்?) நான் சென்று பாலூற்றி என்கை ஈரம் வாங்கித்தான் என் மடிமீதுதான் உயிர்நீங்கிப் போனாள். பேருந்துப் பயணத்தில் அழுத நான் நேரில் துளிக்கூட அழவில்லை. அம்மா திரும்ப வரவேவராத பயணம் போனபிறகு வீடே காலியான பிறகு தான் உறைத்தது மனதுக்கு அப்போது வெடித்தழுத அழுகை.

இந்தக்கதைகளைப் படித்த மகள், ‘என்னம்மா அப்படியே ரெண்டுபேர் வீட்டுக்கதையும் கிட்டத்தட்ட ஒண்ணாயிருக்கு’ எப்பிடியிப்பிடின்னு கேட்கிறாள். பிறகேன் எனக்கு இந்த நூல் இத்தனை ஈர்ப்பாய் இருக்காது? சொல்லுங்க.

தெய்வநாயகம் சார்:

தெய்வநாயகம் சார் போலவே தான் என் அப்பா. மென்மையும் மேன்மையும் உண்மையுமானவர். இங்கே குடும்பமே எலிபிடிப்பதும் பிடித்த எலியைக் கொல்லாமல் காம்பவுண்டுக்கு வெளியே கொண்டுவிடுவதும், அங்கே எங்கள் வீட்டில் நானும் அப்பாவும் செய்த வேலை.

உண்மை பொய் என்பதெல்லாம் வார்த்தை விளையாட்டு. அறிந்தது அறியாதது என்பது மட்டுமே தெய்வநாயகம் சார் அறிந்தது.

ஆனால் என் அப்பா எங்களுக்குச் சொன்னது, “பொய் சொல்வதற்கு மிகுந்த நினைவாற்றல் வேண்டும்.ஒரு பொய் மறைக்க பல பொய்யுரைக்க வேண்டிவரும்” அவ்ளோ தான் அறிவுரையாகவெல்லாம் சொல்லவேமாட்டார். இது செய்தால் இது நிகழும் என்பதே அவர் உரை.

ஊத்து:

அத்தியூர் கூட்டுரோட்டுக்கு வடக்குப்புற புஞ்சைக்காட்டின் சீரும்சிறப்பும் செழிப்பும் கண்ணுக்குள் பச்சை போர்த்துகிறது. “பாப்பாக்குடி அண்ணாச்சி”யால் கெட்டழிந்து போன நிலத்தடிநீர் ஊத்துக்கண் வழி வந்த வெப்பக்காற்றாய் வெறுமையை சூடேற்றுகிறது.

லுங்கி :

அப்பாவின் சட்டை போடாத மகன்களோ அம்மாவின் சேலைகட்டாத மகள்களோ குழந்தைமைத்தன்மை இல்லாத ரசனையற்ற வளர்ப்பென்றே சொல்லலாம். ஆனால் இங்கே நாயகனுக்கு வேட்டி கட்டுவது அதுவும் நாலுமுழ வேட்டி கட்டுவது பெரிய தொல்லை. இரவு படுக்கைக்கான உடையாக இருந்து அலைக்கழிப்பது அவஸ்த்தையான அவஸ்த்தை.

வீட்டில் அண்ணன் தம்பி வேட்டிக்குப் பழகியிருக்கிறார்கள். இவர் மட்டும் இரவெல்லாம் கவனமாய் இருந்தும் காலையில் அது ஒருபுறமும் இவர் ஒரு புறமுமாக இருந்ததும் நகைச்சுவை.

எனக்கோ வேறுவிதமான அனுபவம். படுக்கையில் படுத்தாலும் விடியும்போது எங்கேயோ எதிர்புறம் கிடப்பதைப் பார்த்து அப்பா என்னிடம், “படுக்கைக்கு எதிர்ப்பக்கம் படுத்துக்கொள்ளேன், விடியலில் சரியாக உருண்டு படுக்கைக்கு வந்துவிடுவாய் என்பார். இப்போது அம்மாவாகிவிட்டேன் ஆகையால் அம்மா போல படுத்தால் படுத்தபடியே கலையாமல் இருக்கும் கலை கைவந்துவிட்டது.

நண்பர்கள் பற்றிய ஆய்வு எனது அப்பாவிடமும் உண்டு. தெருவைக்கேட்டு ஜாதி தெரிந்து கொள்வார் போல. எனது அக்கா ஒருமுறை தன் தோழி (நாயக்கர் இனமாம்) வீட்டில் உணவருந்திவிட்டு வந்தாள். அன்றைய தினம் ஆகஸ்ட் 15. அப்பாவின் கோபம் கட்டுக்கடங்காமல் அடித்தேவிட்டார். எனக்குச் சிறுவயதென்பதால் அப்போது அப்பா அவளை அடித்ததும் அடிவாங்கியதும் ஆகஸ்ட் 15ம் தான் நினைவு. ஆனால் ஜாதி மறுத்து மணம்செய்தபிறகு நானொருமுறை கேட்டேன். அக்கா வேறு ஜாதிப்பொண்ணு வீட்ல சாப்பிட்டதுக்கே அடிச்சீங்க. அதுக்குத்தான் இப்படி ஆகிடுச்சோ என்று கேட்டேன். அன்று தான் விளக்கினார் அப்பா. அது அவர்கள் வீட்டில் உணவருந்தியதற்காக அடிக்கவில்லை. வீட்டில் சொல்லாமல் சென்றதற்கும் மிகமிக நீண்ட நேரமாக அவளைக் காணாமல் நாங்கள் தேடியலைந்ததற்குமான கோபத்தில் விழுந்த அடி என்று சொன்னார். எத்தனையோ பேர் உங்க தோழிகளெல்லாம் நம்வீட்டில் உணவருந்துவது சரியென்றால் இதைத் தவறென்று எப்படிச் சொல்வேன் என்றும் சொன்னார்.

பெண்களின் கற்புக்குக் காட்டிய தீவிரத்தைத் தமிழர்கள் ஆண்களின் கற்புக்குத் தரவில்லை என்பதால் தான் ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பினைப் பொதுவில் வைப்போம் என்றாரோ பாரதி…!

பெரியப்பா (அப்பாவின் அண்ணன்) சாப்பிடும்போது கூட்டோ பொரியலோ சோற்றுக்குள் புதைத்துவைத்துச் சாப்பிடுகையில் அண்ணன் என்ன நினைக்கிறார்னோ பிடிச்சிருக்கு பிடிக்கலன்ற முகபாவனை தெரியக்கூடாதுன்னோ அப்படிச் சாப்பிடுவதாகச் சொல்வார் அப்பா.

முதல்மாதச் சம்பளத்தின் வேண்டுதலாய் விரும்பி வாங்கிய லுங்கி, விலகுமென்ற கவலை நீக்கிய லுங்கி, விரும்பிய திசைக்கு உருண்டுபடுக்க உதவிய லுங்கி வசீகர மணம் கொண்ட லுங்கி….அடடா… அப்படியான லுங்கி காணாமல் போனது வாசகர்களுக்குள்ளும் பதைப்பை உண்டாக்குகிறது. எதையும் ஆழமாக அறிவார்த்தமாக அலசும் பெருமாள் வாத்தியாருடன் பயணிக்கத்துவங்கியதாலேயே, காணாமல் போன லுங்கியைத் துப்பறிந்து தேடிய மனது மாற்றம் பெறும் கணம் மெல்ல பூக்கத்தொடங்கி மணம்பரப்ப ஆயத்தமான கணமாகிறது. அதுவே ஊற்றாய்ச் சுரக்கிறது வாழ்நாளெல்லாம்.

பெண்களுக்கு இரவு உடையாக நைட்டியும் தற்போது நைட் சூட்டும் சகஜமாக ஆகிவிட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் எல்லாப் பெண்களும் நைட்டி அணிவதில்லை. அப்பா வாங்கித்தந்த நைட்டி டேட்டியானதெல்லாம் அப்பா எங்களுக்கு முக்கியமாக எனக்குத் தந்த சுதந்திரம்.

கோடி:

ஒரு மனுஷன்மேல ஒரு மனுஷி ஆசைப்பட்டதற்கான வாழ்நாள் துயரம் சொல்லும் கதை. கதையல்ல தற்போதும் நிஜம். வருடங்கள் பலகடந்தும் தன் ஒரே மகள் திருமணத்துக்கு அழைக்க வந்தவளை அப்பாவும் அண்ணனும் ஏற்காத துயரமும் மௌனமும் மனதை ரம்பமாய் அறுக்கிறது. வளர்ந்து ஆளான பிள்ளைகளுக்கு அதுவரையிலும் அப்படியொரு அழகான அத்தை இருப்பதே தெரியாமல் தலைமுழுகிய உண்மை வருடங்கள் கடந்து வெளிப்படுகிறது. அதன்பிறகு ஒரு ஒன்பது வருடம் கழித்து மாமா இறந்த செய்தியை தங்கை சொல்லி யாருமே போகாவிட்டாலும் தான் போகணுமென்ற மனிதத்தன்மை அபாரம். பொறந்தவீட்டுக் கோடி வாங்கிக் கொள்ள அன்பை யாசிப்பது போன்ற கரங்களும் “யண்ணே…..” என்ற பெருங்கதறலும் கண்முன்னே நிழலாடுகிறது.

Bharathi Krishnakumar’s Appatha Short Story Collection Book Review By Vijayarani Meenakshi. பாரதி கிருஷ்ணகுமாரின் *அப்பத்தா* சிறுகதை தொகுப்பு - விஜயராணி மீனாட்சி

அப்பத்தா:

தாத்தாவுக்கும் அப்பத்தாவுக்குமான நெருக்கமும் ஆத்மார்த்த அன்பின் பெருஞ்சுடரும் இந்தக் கதையில் வரிக்கு வரி இல்லை எழுத்து எழுத்தாய் மின்னி ஒளிர்கிறது.

கல்யாணமான நாளிலிருந்து கடைசி வரை இணக்கமும் நெருக்கமுமான தம்பதியை இன்றெல்லாம் பார்ப்பது கடினம். கடைசிவரை இருவரும் ஒன்றாய்ச் சேர்ந்து குளிப்பதெல்லாம் இந்த அவசரயுகத்தில் நடக்கிற காரியமா? பேரன்பேத்தி வந்தபிறகும் தனியறையில் தனித்துப் படுப்பது ஆச்சர்யம். ஒற்றைப் பிள்ளை அதுவும் இன்றைய நாளில் இருவருக்கு நடுவில் வந்துவிடுகிற காலம் இது. தாத்தாவை கண்ணின்மணியாய்க் காத்து நிற்பவளாய் அப்பத்தா. சாப்பாடுகூட எதைச் சாப்பிடலாம் எதைச் சாப்பிடக்கூடாதெனத் தீர்மானிக்கிற தாய்மை. பின்னிரவிலும் அப்பத்தாவும் தாத்தாவும் பல்லாங்குழி தாயமென விளையாடிச் சிரித்து மகிழ்ந்த சத்தமாய் வீடே கேட்ட ஊரே பார்த்த அதிசயங்கள்.

காய்ச்சல் தலைவலின்னு ஒருநாளும் படுக்காத அப்பத்தாவை,
எப்போதும் கலகல சிரிப்பும் கதம்ப வாசனையுமான அப்பத்தாவை,
ஊறுகாயைக்கூட கையால் தொட்டாலும் கெடாத, காலையில் அம்மியில் அரைத்த தேங்காய்ச் சட்னி இரவுவரை கெடாத ராசிக்கைக்காரி அப்பத்தாவை,
கல்யாணமான மூணாம்நாள் தாத்தாவோடு வாழவந்த பிறகு ஒருமுறைகூட பொறந்தவீட்டுக்குப் போகாத அப்பத்தாவை
அனுப்பிவைக்க எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்….

பிள்ளைகளும் பேரன்பேத்திகளும் பாலூற்றியும் உயிர்பிரியல.
கட்டிலைவிட்டுத் தரையில் போட்டும் உயிர்பிரியல.
முட்டைக்கரண்டியில் மூணுகரண்டி நல்லெண்ணெய் கொடுத்தும் உயிர்பிரியல.
நல்லெண்ண வேப்பெண்ண விளக்கெண்ண சேர்த்துக் குளிப்பாட்டியும் உயிர்பிரியல.
செப்புக்கலக்காத பொன்னைத்தேய்த்து ஊற்றியும் உயிர்பிரியல.
காசித்தண்ணீர் கொடுத்தும், புறவாசல் முன்வாசல் வயக்காட்டு மண்ணெல்லாம் கரைத்து ஊற்றியும் உயிர்பிரியல.

தாத்தா யாருக்குமே சொல்லாத பெரும்ரகசியம். அப்பத்தாவுக்கு பதினைந்து வயதிலேயே சொந்தத்தில் படித்துக்கொண்டிருந்த கண்ணுச்சாமிக்குப் பேசிமுடித்து வசதியிழந்த ஒற்றைக்காரணத்தால் அவரை நிராகரித்து விட்டனர் அப்பத்தா வீட்டினர். பிறகு வசதியான தாத்தாவை மணமுடித்த அன்று கண்ணுச்சாமி ஊரறியச் செய்த சத்தியம் அப்பத்தாவை நிலைகுலைய வைத்து வாழ்நாளெல்லாம் வதைத்திருக்கிறது. தாய்தந்தை செய்த தவறால் ஒருவரின் வாழ்வே பாழானது பரிதாபம். அப்பத்தா மீது தவறில்லாத காரணத்தாலும் தேவையில்லாமல் மற்றவர்கள் எப்படிப் புரிந்துகொள்வார்களோ என்பதாலும் தாத்தா கடைசிவரை இதுபற்றி வாய் திறக்காத பண்பாளராய் இருந்திருக்கிறார்.

உயிர்பிரியாத அப்பத்தாவைவிட்டு காணாமல்போன தாத்தா மீண்டும் தாத்தா வயதொத்த ஒருவரோடு வீடுவருகிறார். அவரைவிட்டு தண்ணீர் ஊற்றச்சொல்கிறார் தாத்தா. அவரும் விரல்படாமல் விட்ட தண்ணீர் உள்ளிறங்கி உயிர் வெளியேறுகிறது காற்றாய்… வணங்கிவிடைகொடுக்கிறார் தாத்தா தான் அழைத்துவந்த கண்ணுச்சாமிக்கு.

பெயரிடப்படாத தாத்தா கதாபாத்திரமாக இல்லாமல் அப்படியே மனதில் விஸ்வரூபமாய் வானளாவ உயர்ந்து நிற்கிறார். இப்படி ஒரு கணவனோடு வாழ்ந்த அப்பத்தா கொடுத்துவைத்தவள்.

கல்பனா:

பாட்டும் கூத்தும் கொண்டாட்டமுமாய் ஐந்தாம் வகுப்பு தொடங்கிய முதல் இரண்டு நாட்களை பிள்ளைகளுக்கு உற்சாகமாகத் தொடங்கி வைக்கிறார் ஜோசப் வாத்தியார். பிள்ளைகளை அழைத்து அவரவருக்கான பெயருக்கு வீட்டில் காரணம் கேட்டுவரச் சொல்கிறார். அதன்பிறகு ஒவ்வொருவரையும் பெயர்சொல்லி அழைக்கவைத்த பெருமை அவரையே சாரும். கதையின் நாயகன் சுபாஷ் சந்திரபோஸ் பெயரை கம்பீரமாகச் சொல்லி போஸ் பற்றி நிறைய சொல்கிறார். பொதுவாக நம்பெயரை யாரும் அழைக்காத

விதத்தில் அழைத்தாலே மனம் லயிக்கத்தானே செய்யும்?! அப்படியான தனித்த அழைப்பே காதலாகி கல்யாணமுமாகிறது சுபாஷுக்கு.

வேலை நிமித்தமாக ரயிவ்நிலையத்தில் டிக்கெட் எடுக்க நின்ற பொழுது கவனத்தை ஈர்த்த அழகிய பெண்ணொருத்தியை பின்னாலிருந்து ரசிக்கிறான். கவனத்தைத் திசைதிருப்பி கையிலிருந்த புத்தகத்தை வாசிக்கையில் அவளே “சுபாஷூ”என்றழைத்தபடி முன்னே நிற்பது கண்டு திகைக்கிறான். நம்மை எந்தவிதத்தில் எதைச்சொல்லி நினைவூட்டுகிறார்களோ அவர்களுடனான பயணத்தின் காலகட்டத்தை அடையாளம் காணமுடியும். அப்படி அந்தப் பெண் ஜோசப் வாத்தியார் என்றதுமே இவளை சுபாஷ் கல்பனா என்று அடையாளம் கண்டுகொள்கிறான். பெயர்சொன்ன மாத்திரத்தில் கைகளைப் பிடித்துக்கொள்கிறாள். தன் மகளை அறிமுகப்படுத்துகிறாள். குழந்தையும் கரங்குவித்து வணக்கம் சொல்ல இவனும் கரங்களைக்குவித்து வணக்கம் சொல்கிறான். பிறகு தன்னுடன் பயின்ற ரஹமத், மாணிக்கம், உஷா, நாகரத்தினம் மற்றும் சிலரை விசாரிக்கும்போதே மீண்டும் கைகளைப்பற்றியவாறே மிகமிக நெருக்கமாக நின்று பேசியதை சிறுது நேரம் கழித்தே கவனிக்கிறான். அந்தக் கரங்களின் மென்மையும் குளிர்மையும் ஸ்நேகம் கொண்டதாய் இருக்கிறது.

திடீரென கல்பனாவின் கணவன் வருவதாக குழந்தை, ‘அம்மா .. அப்பா வந்துட்டாரு’ என்று சொல்லக் கேட்டதும் முகம் இறுகி வாடிப்போய் விடுகிறது. சட்டென சுதாரித்து சுபாஷைப் பிடித்திருந்த கைகளை உதறி விடுவித்து “அவன் வந்துட்டான் நாம்போறேன்” என்றவாறு இரண்டடி பின் நகரும் நுட்பமே அவளும் கணவனும் வாழ்கின்ற வாழ்வின் நுட்பமும் அந்நியத்தனமும் நமக்கு வெளிச்சமாக்குகிறது.

விடுபட்ட கதைகளெல்லாம் புத்தகம் வாங்கி முழுமையாக லயித்து வாசியுங்கள்.

அப்பத்தா – சிறுகதைகள்
ஆசிரியர் – பாரதி கிருஷ்ணகுமார்
பதிப்பகம் : THE ROOTS
விலை : ரூ.100/-

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.