தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் நூலை அண்மையில் பேரா. க. ஜெயபாலன் அவர்கள் எழுதியுள்ளார். இந்நூலை பாபா சாகேப் அம்பேத்கர் கலை இலக்கிய சங்கம் வெளியிட்டுள்ளது. இந்நூலைப் பற்றி பின் வருமாறு காணலாம்.

வரலாற்று நெடுங்கணக்கில் பாபாசாகேப் அம்பேத்கர் ஒவ்வொரு நாளும் நினைவு கூற வேண்டிய மனிதராக திகழ்கிறார். அவர் இதுவரை இந்த பூமி பந்தில் 64 ஆண்டுகள் ஆறு மாதங்கள் 8 நாட்கள் என்று தன் வாழ்நாளை அலங்கரித்தவர்‌. இவ்வுலகில் படிப்பதற்காகவே பிறப்பு எடுத்தவர் என்று சொன்னால் டாக்டர் அம்பேத்கரை மட்டுமே குறிப்பிடவியலும். அவர் இந்த பூமியில் பிறந்த நாள் முதல் பரிவுநிப்பானம் அடைந்த நாலள்வரை ஒவ்வொரு நாளையும் நினைவுக் கூரத்தக்க வகையில் அல்லது எண்ணிப் பார்க்க வேண்டியவராக உள்ளார். குறிப்பாக அவருடைய பிறந்தநாள், பள்ளியில் சேர்ந்த நாள், படிப்பதற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்திற்குச் சென்ற நாள், லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ், பூனா ஒப்பந்தம், லண்டனில் நடைப்பெற்ற மூன்று வட்ட மேசை மாநாடுகள், அக்டோபர் மாதம் 14ஆம் நாள் 10 லட்சம் மக்களுடன் பௌத்தம் தழுவியது, அவருடைய இறப்பு இப்படி ஒவ்வொரு நாளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். அதேபோன்று அவர் எழுதிய ஒவ்வொரு நூலும், அவர் பேசிய ஒவ்வொரு சொல்லும் பொருள் குறித்தவை. அதனால்தான் உலகில் எந்த ஒரு தனிமனிதனுடைய வரலாற்றைவிட டாக்டர் அம்பேத்கரின் வரலாறு அத்தனை பொருள் பொதிந்தவையாகக் காண முடிகிறது.

இந்திய வரலாற்றைப் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்லும் பொழுது, பௌத்தத்திற்கும், பார்ப்பனத்திற்கும் நடந்த போர்தான் இந்திய வரலாறு என்கிறார். நவீன இந்தியாவின் தந்தையான டாக்டர் அம்பேத்கர் அந்த வரலாற்றை மாற்றியமைத்தார். எல்லா நதிகளும் கடலை நோக்கிப் பாய்வதைப் போல யார் எதைப் பற்றி ஆய்வு செய்வதாக இருந்தாலும், அவர்கள் டாக்டர் அம்பேத்கரிலிருந்து தொடங்குகின்றனர். அல்லது அவ்வாய்வு அம்பேத்கரிலிருந்து தொடங்கப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு, பணவீக்கம், பணப்புழக்கம், ரிசர்வ் வங்கி உருவாக்கம், இந்தியா பாகிஸ்தான் சிக்கல், எல்லைப் பிரச்சினை, சாதி ஏற்றத்தாழ்வு, சாதி ஒழிப்பு, இட ஒதுக்கீடு, 360 சட்டப்பிரிவு, வெளிநாட்டு உறவு, மத்திய மாநில அரசு உறவு, வறுமை ஒழிப்பு,கல்வி, வேலை வாய்ப்பு, சமூக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பெண் விடுதலை இப்படி இன்னுமின்னும் எத்தனை சட்டதிட்டங்களைப் பற்றிய தெளிவு வேண்டுமென்றால் டாக்டர் அம்பேத்கர் தான் வேண்டப்படுவராக திகழ்கிறார். காரணம்

இந்தியாவின் குறுக்கும், நெடுக்கும் பயணித்து ஆய்வு செய்தவர் டாக்டர் அம்பேத்கர். அதற்கு ஒரே சாட்சி இந்திய அரசியலமைப்புச் சட்டம். அந்த வகையில் அவருடைய தென்னிந்தியப் பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த தென்னிந்திய பயணம் குறித்து பேரா.க.ஜெயபாலன் அவர்கள் தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் என்ற நூலை ஆக்கியுள்ளார். இந்நூல் உருவாக்கத்தைக் கடுமையான சோதனை முயற்சி என்று கூறவியலும். டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஒவ்வொரு எழுத்தாளர்களும் எழுதிய வண்ணம் இருக்கின்றனர். அவற்றுள் தனஞ்செய்கீர் எழுதிய டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு (Dr. AMBEDKAR LIFE AND MISSION) குறிப்பிட தகுந்தது. அந்த நூலை படித்தால் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கு துணை நிற்கும். இந்நூல் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் உயிரோடு இருக்கும் பொழுது அவருடைய பார்வைக்கும் சென்றது. டாக்டர் அம்பேத்கரும் நூலைப் படித்தபிறகு, நாம்தான் நம்வரலாற்றை எழுத வேண்டும் என்பதை பதிவுசெய்துள்ளார். அதிலும் குறிப்பாக தன்னுடைய இளமைக்காலம் பற்றிய வரலாற்றை தெளிவாக எழுத வேண்டும் என்று நோக்கம் அவருக்கு இருந்தது. 

அதேபோன்று இந்திய அரசாங்கம் 90களில் டாக்டர் அம்பேத்கர் துவரை தன் வாழ்நாளில் எழுதியும், பேசியதையும் தொகுத்து 37 தொகுதிகளாக வெளியிடப்பட்டது. இந்த 37 தொகுதிகளும் மிக முக்கியமானவையாகும். இந்நூட்கள் அனைத்தும் சமூக விடுதலைக்கும் அரசியல் அமைப்பிற்கும் ஓர் அகராதியாக திகழ்கிறது. எந்த சொல்லுக்கு பொருள் தேட வேண்டும் என்றாலும், எந்த செயலுக்கு தீர்வுகாண வேண்டும் என்றாலும்,  நான் முதலில் தேடிச் செல்வது டாக்டர் அம்பேத்கர் எழுதிய தொகுதிகளைத்தான் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் பதிவு செய்துள்ளார். இதை தான் நிதி அமைச்சராக இருந்த பா.சிதம்பரம் அவர்களும் வேறொரு இடத்தில் பதிவு செய்துள்ளார். இதேபோன்று விஐடி வேந்தர் விஸ்வநாதன் அவர்களும் டாக்டர் அம்பேத்கரின் 125வது ஆண்டு பிறந்தநாள் விழாவில் நடந்த கருத்தரங்கத்தில் இதே கருத்தைப் பதிவு செய்ததில் இருந்து அறிய முடியும். டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்கள் எந்த அளவிற்கு முக்கியமானது என்பதற்கு மேற்சுட்டிய சான்றுகளை சாட்சி. 

ஆனால் இந்த 37 தொகுதிகளிலும் இடம்பெறாத பல வரலாற்று அறிய தகவல்களை எல்லாம் அத்தனை அழகாக தமிழ் சமூகத்திற்கு மட்டும்மல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் தென்னிந்தியாவில் பாபசாகேப் அம்பேத்கர் என்கின்ற நூலின் வாயிலாக பேராசிரியர் க.ஜெயபாலன் அவர்கள் கொண்டு சேர்த்திருக்கிறார்.

1932,1934,1944,1945,1950,1954 ஆகிய ஆறாண்டுகளில் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இதில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, உதகமண்டலம் உள்ளிட்ட இடங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கும் வருகை தந்த வரலாற்றுப் பயணத்தைத் தேடி கண்டறிந்து தொகுத்து வெளியிட்டுள்ளார். 

சமகாலத்தில் யார் வேண்டுமென்றாலும் நூலை எழுத முடியும். அது இந்தச் சமூகத்திற்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும். அதனால்தான் தமிழில் கண்டு அதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று ஒரு முதுமொழி உண்டு. 

இங்கு பேராசிரியர் க. ஜெயபாலன் அவர்கள் இந்த நூலை ஏன் எழுத வேண்டும் என்று கேள்வியும் எழுகிறது?. இந்திய திருநாட்டையும், அரசியலமைப்பையும் பாபாசாகேப் அம்பேத்கரை தவிர்த்து விட்டு ஓர் அங்குலம கூட நகர்த்த முடியாது. இன்றைய காலகட்டத்திலும். 1956 அக்டோபர் மாதம் 14ஆம் நாள் சுமார் பத்து லட்சம் மக்களுடன் இந்து மதத்தை விட்டு பௌத்த மார்க்கத்தை தழுவினார். காரணம் இந்து மதம் மக்களை இழிவாக நடத்துகிறது அதிலும் குறிப்பாக பட்டின மக்கள் விடுதலை அடைய வேண்டும் என்றால் அவர்கள் பௌத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முழு விடுதலைக்கான வழியை தேர்வு செய்து 22 உறுதிமொழிகளுடன் பௌத்த மார்க்கத்தை தழுவினார். இந்த 22 உறுதி மொழிகளும் உலகத்தின் தலைசிறந்த உரைகளில் குறிப்பிட தகுந்தவையாக திகழ்கிறது. அதனால்தான் அவருடைய அந்த உரை முழு விடுதலைக்கான வழி என்கின்ற தலைப்பில் நூலாக வெளியாகியிருக்கிறது. அது இந்தியாவில் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து லட்சோபலட்ச பிரதிகள் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது. இந்த வரலாறு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு தென்னிந்தியாவில் பாவ சக்தி அம்பேத்கர் என்ற நூலும் முக்கியமான.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக கவர்ச்சிகரமான திட்டங்களுடன் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி உள்ளபடியே மக்கள் நலனிலும் நாட்டின் முன்னேற்றத்திலும் அக்கறை கொள்ளவில்லை.  மாறாக மக்களை பிளவுபடுத்துவதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. அதுக்கு சரியான சான்றை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை புறக்கணித்துவிட்டு இந்து சனாதனத்திற்கான ஒரு சட்டவரைவைக் கொண்டு வருவதற்கும் தயாராகி விட்டனர். இது ஒட்டுமொத்த நாட்டுக்கே பெரிய பாதிப்பு. இந்த 21ம் நூற்றாண்டிலும் மக்களை சாதியும், மதத்தையும் சொல்லி பிளவுபடுத்துவதை எண்ணியும் அதைக் கண்டிக்கும் நோக்கத்திலும் 14.10.2022 அன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த கௌதம் ராஜேந்திரபால் அவர்கள் பத்தாயிரம் மக்களுடன் பௌத்தத்தை ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் பௌவுத்தசமயத்தை தழுவினர். அதேபோன்று ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களிலும் பௌத்தத்தை தழுவுவதற்கு சாரை சாரையாக மக்கள் தயாராகி விட்டனர்.

அக்டோபர் 5, 2022 தேதி அன்று பாம்சேக் அமைப்பு குமார் இரண்டு லட்சம் மக்கள் ஒன்று திரண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை முற்றுகை இட்டது குறிப்பிடத்தக்கது. இப்படிதான் 2500 ஆண்டு காலமாக பௌத்தத்திற்கும் பார்ப்பனத்திற்கும் போர் நடைபெற்று வந்துள்ளது.

தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர் எனும் இந்தநூலில் மொத்தம் 50 கட்டுரைகளும் 14 பின்னிணைப்புகளும் இணைந்து மொத்தம் 64 கட்டுரைகள் 329 பக்கங்களில் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரையும் அடிக்குறிப்பிட்டு அல்லது குறிப்பு எடுத்துப் படிக்க வேண்டிய ஓர் ஆராய்ச்சி நூலாக திகழ்கிறது. டாக்டர் அம்பேத்கரின் தென்னிந்திய வருகையும் சென்னை உரைகளும் எனும் முதல் தலைப்பில் அமைந்துள்ள கட்டுரையில் 1932 ஆம் ஆண்டு சென்னை வரலாற்றில் இருந்து தொடங்குகிறது. அந்தக் கட்டுரையில் தான் டாக்டர் அம்பேத்கர் பொது வாழ்க்கைக்கு வந்த வரலாற்றை பின்வருமாறு 27.1.1919 இல் சவுத்பரோ குழுவிடம் வாக்குரிமை குறித்து தன் கருத்துக்களை எடுத்துரைத்த காலத்தில் இருந்தே புரட்சியாளர் அம்பேத்கரின் பொது வாழ்க்கை குறிப்பிடத்தக்க பரிணாமத்தை அடைந்தது (ப.41) ன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடைய பொது வாழ்க்கைக்கு வந்த வரலாற்றை, வரலாற்று தரவுகளோடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னைக்கு வந்த காரணத்தைப் பற்றி 1932 இல் வாக்குரிமை குழு உறுப்பினர் என்ற முறையில் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சென்னைக்கு வருகை புரிந்தார். பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று சென்னையில் அவருக்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட வண்ணமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் முஸ்லிம்கள் கிருத்துவர்கள் மற்றும் பிறபார்ப்பனர் அல்லாத மக்களும் கலந்து கொண்டனர் (ப.40) எனும் முக்கியமான காரணத்துடன் பதிவு செய்த வரலாறு.

தென்னிந்தியாவில் குறிப்பிட தகுந்த முக்கிய பயணம் ஆந்திராவின் பயணமும் முக்கியமானது. 1932,1938,1944, 1950,1953 போன்ற ஆண்டுகளில் பயணம்  முக்கியத்துவம் வாய்ந்தது.

  1. அவுரங்காபாத்தில் டாக்டர் அம்பேத்கர் தொடங்க இருந்த கல்லூரி தொடர்பான பணியை முன்னிட்டு 1950 மே 19ஆம் நாள் வருகை புரிந்த பயணம்.
  2. 1953 ஜனவரி 12ஆம் நாள் உஸ்மானிய பல்கலைக்கழகம் இலக்கியத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கியது.
  3. 1938 டிசம்பர் கடைசி வாரத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் மாநாட்டில் தலைமை ஏற்க வருகை புரிந்தது. என்று ஒவ்வொரு பயணத்திற்கான காரணத்தை விரித்துரைக்கப்பட்ட கையேடாகவும் இந்நூல் திகழ்கிறது.

தென்னிந்திய பயணங்களில் கோலார் தங்கவயல் பயணம் அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது. தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போன்று டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றில் பதிவுகளில் எங்கும் கிடைக்காத தகவல்களைத் திரட்டி தந்ததில் பேரா. க.ஜெயபாலன்., ஐம்பதுகளில் டாக்டர் அம்பேத்கரின் மக்கள் கல்வி கழக பணிகளுக்காகவும், பௌத்த மறுமலர்ச்சி பணிகளுக்காகவும் ஊக்கமான ஆக்கமான உதவிகளைப் பல இந்திய அரசர்கள் செய்துள்ளனர். அவ்வகையில் மைசூர் மகாராஜா குடும்பத்தினர் டாக்டர் அம்பேத்கர் மீது உயர் நட்பும் மரியாதையும் கொண்டு பல நல்ல உதவிகளை செய்துள்ளனர். சத்ரபதி சாகு மகாராஜா போலவே மைசூர் மகாராஜாவும் பல முற்போக்குப்பணிகளை செய்திருப்பதை வரலாறுகள் காட்டுகின்றன.

1954 ஜூலை 12 கோலார் தங்க வயலுக்கு டாக்டர் அம்பேத்கரின் வருகை அவருடைய வரலாற்று புத்தகங்களையும் பதியப்படாமல் இருக்கிறது அண்மைக்காலமாகத் தங்க வயல் வருகை குறித்து பல்வேறு கட்டுரைகள் ஒளிப்படங்கள் ஆகியவை இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன (பல.50) என்று பல அறிய தகவல்களை தேடி தொகுத்து தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு அறிவியல் விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுக்கு ஆதரவாக டாக்டர் அம்பேத்கர் நீதிமன்றத்தில் ஆஜராகி வெற்றி பெற்றுள்ளார். அதேப்போன்று கல்விக்காக அரும்பாடுபட்ட மகாத்மா ஜோதிராவ் ஃபுலே, அவருடைய மனைவி சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நோபல் பரிசு பெற்ற மேரிகியூரி வாழ்க்கை வரலாற்றோடு பொருத்தி பார்த்து இச்சமுகத்திற்கு ஒரு செய்தியை தந்துள்ளார்.

அய்யன் காளி, ரெட்டமலை சீனிவாசன் எம்.சி. ராஜா,  பெரியார், லட்சுமி நரசு வட்டமேசை மாநாட்டின் தரவுகள்,  என். சிவராஜ் உள்ளிட்ட என்னத்த தகவல்களையும் தரவுகளையும் இந்த நூலில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.

இந்த நூல் தமிழ்ச் சமூகம் மட்டும் பயனுறுவதோடு அல்லாமல் அனைவரும் இதன் பயனை உணர வேண்டும். அதனால் இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் அதே சமயத்தில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து உலக அரங்கிற்கும் என் நூலை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

நூல் பற்றி
தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்
ஆசிரியர் : முனைவர் க.ஜெயபாலன்
வெளியீடு : பாபா சாஹிப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
முல்லை அச்சகம்
சென்னை – 600 00 2
ரூபாய் ₹ 350

முனைவர் எ. பாவலன்
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
இலயோலா கல்லூரி,
சென்னை- 34
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *