நூல் : கைரதி 377 – சிறுகதைத் தொகுப்பு
ஆசிரியர் : மு ஆனந்தன்
விலை : ரூ.₹120
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

எழுத்தாளர் மு.ஆனந்தன் அவர்கள் எழுதிய ‘கைரதி 377’ சிறுகதைத் தொகுப்பு மாறிய பாலினத்தவரின் சுவடுகளைப் பிரதிபலிக்கின்றது. கல்கி சுப்பிரமணியம், அ. ரேவதி, சல்மா என மாறிய பாலினத்தவரை பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள். பெண் எழுத்து பெண்ணால் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணத்தைப் பாமா, குட்டி ரேவதி, அ.வெண்ணிலா, சுகிர்தராணி போன்ற பல்வேறு பெண் எழுத்தாளர்கள் பெண்மையைப் போற்றி எழுதியிருந்தாலும் அதில் மாற்றுக் கருத்தும் எழலாம். ஆனால் மாற்றுச் சிந்தனையாக மாறிய பாலினத்தவர்களின் வலிகளை வார்த்தைகளாகப் பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் மு.ஆனந்தன்.

உடல் ஊனமுற்றவர்களை மாற்றுத் திறனாளிகள் எனச் சிறப்பிக்கும் தமிழ்ச் சமூகம், ஆணும் பெண்ணுமாகப் பிறந்தவர்களில் ஆணாகவோ பெண்ணாகவோ உள்ளத்தால் உடல் மாற்றம் அடைந்தவர்களை தூற்றும் செயல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. அலி, அரவாணி, உஷ், ஒம்போது, பேடி எனக் கேலிப் பெயர்கள் இவர்களுக்குத் தாராளம்.

தமிழக அரசு 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் நாளை திருநங்கையர் தினமாக அறிவித்தது. மூன்றாம் பாலினத்தவருக்கான எத்தனை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும் அந்நிகழ்வில் அவர்களைத் தவிர ஏனையோர் வேடிக்கைப் பார்ப்பவராகிறார்கள். திருநங்கைகளை ஏற்க மறுக்கும் நம் சமூகம் திருநர்களை மட்டும் விட்டுவிடவா போகின்றது. மாறிய பாலினத்தவரைக் கதைக் கருவாகக் கொண்டு மு.ஆனந்தன் எழுதியுள்ள கதைகளில், திருநங்கைகளாக, நம்பிகளாக மாற்றம் கொண்டவர்களின் வாழ்க்கைச் சூழல்கள், வாழ்வியல் சிக்கல்கள், மன அழுத்தங்கள் எனப் பல்வேறு கொடுமைகளை வெளிக் கொணர்கின்றன. தங்களின் வயிற்றுப் பிழைப்பிற்காக நாகரீகமாகக் கருதப்படும் பல்வேறு தொழில்களைச் செய்கின்றனர். சக மனிதர்களின் வெறுப்பு, இவர்களை ஏற்றுக் கொள்ளாத மனப்பாங்கு, சுய இன்ப வக்கிரங்கள் என நங்கைகள், நம்பிகள் மீதான தாக்குதல்கள் தீவிரவாதச் செயலாக மாறியுள்ளது. ஒருசில காவல் அதிகாரிகளிடம் சாதாரணப் பாமர மக்கள் சிக்கினால் அவர்களைக் கொல்லவும் தயங்குவதில்லை என்பது நாம் அறிந்ததே. அதே அதிகாரிகளிடம் நங்கைகளோ, நம்பிகளோ சிக்கிக் கொண்டால் காவலர்களின் வக்கிர புத்தி ஒரு படி மேற்சென்று ஆடையுருவி அலங்கோலம் செய்கின்றது.

“அலிய அம்மணக்கட்டையா பாக்குற பாக்கியம் இப்பத்தான் கிடைச்சிருக்கு”

“மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஒலையக்காளாக மாறினாள் கைரதி. தன் மீது தீ பற்றவைத்துக்கொள்ள சுள்ளிகளைத் தேடினாள். சுற்றிலும் சு….களாக இருந்தது.

எனக் கைரதியின் மானம் சரிந்தக் கதையை ஓலையக்கா லாக்கப் என்ற கதையில் படைத்துள்ளார் ஆசிரியர். தவறு செய்பவர்களை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட சிறைச் சாலைகள் பலருக்கும் சுடுகாடாக மாறியுள்ளது. புதியதாகப் பார்க்கும் எதையும் ஆராய்வதென்பது மனித இயல்பு. அதிகாரத்தின் பிடியில் சிக்கிய எத்தனையோ பெண்களின் மானம் பறிபோயிருக்கிறது. அதே கொடுமை எத்தனையோ கைரதிகளுக்கும் அரங்கேறியுள்ளது. மானத்தைப் பெரிதாகப் பேசியுள்ள வள்ளுவரும் மனிதர்களுக்கானது என வரையறுத்துள்ளார். மாறிய பாலினத்தவரை மனிதர்கள் என்ற பட்டியலிலிருந்து அகற்றிவிட்டார்கள் போலும்.

தமிழிலக்கியங்கள் காதல், காமம், வீரம் ஆகியவற்றைப் பெரிதாய்ப் பேசுகின்றன. தற்காலச் சூழலில் கவிதை, கதை, புதினம் என எவற்றை எடுத்தாலும் காமத்தைப் பேசாத எழுத்தாளர்களே இல்லை எனலாம். ஆண், பெண்ணின் காமத்தின் உச்ச உடலுறவு நிலைகளை காம சூத்திரமாகப் படைத்ததும், காமத்தைக் கொண்டாடும் கலைகளை உருவாக்கியும் மனித இனம் உடலுறவுகளைக் கொண்டாடுகிறது. புதியதாக கண்டுபிடிக்கப்படும் உணவுப் பதார்த்தங்களை சுவைப்பதைப் போல, திருநங்கைகளாக, நம்பிகளாக மாறியவர்களின் உடலை அம்மணமாகப் பார்க்கும் பிராப்தியைத் தேடும் கயவர்கள் உள்ளவரை எத்தனையோ கைரதிகளின் கதறல்கள் நம்முடைய செவிப் பறையை அறையும். திருநங்கைகள் குறித்து தவறான கருத்தைக் கொண்ட சில அயோக்கிய காவலர்களின் முகத்திரையை கிழிக்கும் ஆசிரியரின் வரிகளை அப்படியே பதிவிடுகிறேன்.

“சார், முன்னாடி ஓட்டையே இல்ல, குஞ்சாமணிதான் இருக்கு” ஏமாற்றத்தில் கத்தினார் 1336.

“முன்னாடி இல்லைனா என்ன பி.சி. பின்னாடி இருக்குல்ல”

இப்போதும் கால்களை அகட்டி வைத்துதான் நின்றிருந்தாள். கூட்டி வைத்தால் வலி புடுங்கி எடுக்கும். அவள் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவருகிறது என்றாலும் கக்கூஸ் போகும் போது சுண்டி இழுக்கும் உயிர் போகிற வலி மட்டும் இன்னும் என்னமோ மாறவில்லை.

377 ஆம் பிரிவின் கீழ் கைரதி எனும் கதையில் கைரதியின் அவல நிலை மனித குலத்திற்கான ஒப்பாரியாக அமைந்துள்ளது.

ஒருவர் தன்னுடைய பெயருடன் கணவனின் பெயரையோ? தந்தையின் பெயரையோ? சேர்க்க விருப்பம் தெரிவித்தாலும் பல்வேறு மனநோயாளிகள் சாதியின் பெயரை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கின்றனர். ஆண்கள் பெண்களுக்கான தனித்தனி கழிவறை தொடங்கி, மரணத்தை தழுவி பிணத்தைச் சுடுகாட்டில் சுடும் வரைக்கும் இங்கு பிரிவுகள் ஏராளம். ஆண், பெண் என்பதைத் தவிர நங்கைகளுக்கும் நம்பிகளுக்கும் இங்கு ‘பிறர்’ எனும் சொல்லாடல் மட்டுமே வழக்கில் உள்ளது. ‘OTHER’S’ ஐ அகற்றிவிட கைரதி கிருஷ்ணனின் கல்லூரிக் கதையில்

“உங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டோம் விண்ணப்பப் படிவத்தில் மூன்றாம் பாலினத்தைச் சேர்த்துக் கொள்கிறோம்”

என்ற செய்தி எங்கோ யாருக்கோ ஒருவருக்கான சமாதன உடன்படிக்கையாக உள்ளது. ஒரு துளி தீர்ப்பில் ஒட்டு மொத்த மூன்றாம் பாலினத்தவரின் தாகத்தையும் தீர்த்துக் கொள்ள முடியாது.

மாதவிடாய்ப் பிரச்சினைகளை தீட்டெனக் கருதுபவர்களும், மாதவிடாய் சங்கடத்தை பேசாத பெண்களும் இருக்க, ஆணாய்ப் பிறந்து பெண்ணாய் மாறியவளுக்கு ஒரு மாதவிடாயின் சந்தோசம் அலாதியாவதை, கூடுதலாய் ஒரு நாப்கின் எனும் கதையில் ஆசிரியர் சிவப்பாக எழுதியுள்ளார்.

“சேலையை முழங்கால் வரை மேலே உயர்த்தி அணிந்திருந்த உள்ளாடையைக் கழற்றினாள். அந்தப் பழைய ஜட்டியை முன்னும் பின்னுமாகத் திருப்பிப் பார்த்து அதன் உள் பகுதியை வெளிப்புறமாகத் திருப்பினாள். அதன் அடிப்பகுதியில் அந்த சிவப்பு வண்ண லிப்ஸ்டிக்கைத் தேய்த்தாள். அடிப்பகுதி முழுவதும் சிவப்பு நிறமாக மாறியது.

சிவப்பாக மாறிய அடிப்பகுதியை கண்ணாடியில் காட்டிப் பேசினாள்.

“அடியே கைரதி உனக்கு பீரியட் ஆகியிருக்கு, பாரு நல்லா பாரு உன்னோட ஜட்டி முழுசும் ரத்தமா இருக்கு”

மாதவிடாய்ப் பிரச்சினைகளை அனுபவிக்கும் பெண்களின் சிரமங்களுக்கு மத்தியில், மாதவிடாயே வாய்க்கப்படாத கைரதியின் துக்க நிலை ஒரு நிமிடம் நமது குருதியோட்டத்தை நிறுத்தி விடுகின்றது.

மனித இனம் கூட்டமாக வாழத் தொடங்கினாலும் சாதி எனும் வட்டத்தை வரைந்து வைத்துக் கொண்டு வாழ்கின்றது. சில திருநங்கைகள் பிற நங்கைகளைத் தம்முடைய கூட்டத்துடன் சேர்க்க உறுப்பு அறுக்கப்பட வேண்டும் என்றக் கொள்கையைப் பிடித்துக் கொள்கின்றனர். ஆணையும் பெண்ணையும் பார்த்துப் பார்த்துப் புளித்துப் போன மனிதர்கள் நங்கைகளையோ நம்பிகளையோ வெறும் காட்சிப் பொருளாகவே பார்க்கின்றனர். உறுப்பறுத்து நங்கையாக வாழ நினைக்கும் கைரதியின் துயர நிலையை ஜாட்ளா எனும் கதை கண்ணீர் வடிக்கின்றது.

மதம், மொழி, இனம், நாடு, கலாச்சாரம் என மனிதர்கள் எங்கு பயணித்தாலும், திருநம்பிகளும், நங்கைகளும் ஏதோ ஓர் மூலையில், நம்மைக் கடந்து செல்கையில், ஏதோ ஓர் இருட்டறையில், யாரோ ஒருவரின் அவசரமான ஐந்து நிமிட இன்பத்தில், ஏதோ ஓர் வீட்டின் படுக்கையறையில், எது எப்படி இருந்தாலும் அப்படியே பிரதிபலிக்கும் காண்ணாடிகளில், என மாறிய மாற முனைகின்ற பாலினத்தவர் இப்புவியில் எங்கெங்கோ சிதறிக்கிடக்கின்றார்கள்.

நஸ்ரியா ஒரு வேஷக்காரி எனும் கதையில்…

“படைச்சவனே! என்னை எதுக்கு இப்படிப் படைச்ச? என்னோட மார்பையும் கர்ப்பப்பையையும் எடுத்துட்டு என்னை ஆம்பளையா மாத்திடு” அல்லாவிடம் இறைஞ்சாத நாளில்லை.

இலா எனும் கதையில்…

“ஏண்டியம்மா ஆம்படையாள் உடுப்பு போட்டிருக்கேள், நோக்கு சங்கோஜமா இல்லையோ?

பாவசங்கீர்த்தனம் எனும் கதையில்…

“பாதர், நான் ஆணாக இருந்த போது மதம் எனக்குப் பெரிதாக தெரிந்தது. மத குருவாக ஆசைப்பட்டேன். எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை என்பது இப்போது நான் பெண்ணாக உணரும் போது தான் புரிகிறது. நான் எல்லா மதங்களுக்கும் பாவ மன்னிப்பு அளிக்கிறேன். இனிமேலாவது மதங்கள் பெண்களை சமமாக நடத்தட்டும்”.

எனும் வரிகள் அனைத்தும் மதம், சாதி எதுவென்று பாராமல் உருவாகி உருக்குலையும் கைரதிகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

ஓரிருவர் அரசாங்க ஊழியர்களாகவும், சுய தொழில் முனைவோர்களாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும், இன்னும் எண்ணற்ற தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் நங்கைகளும், நம்பிகளும் உள்ளனர். நம்பிகள் நம்பிகளை மணம் முடிப்பதும், நங்கைகள் நங்கைகளை மணம் முடிப்பதும் புதிதல்ல. ஆண் ஆணை உறவு கொள்வதைப் போல பெண் பெண்ணை உறவு கொள்வதைப் போல திருநங்கைகளும், நம்பிகளும் அவர்களது வலிகளை மறைக்க வழிகளைத் தேடிக் கொள்கின்றார்கள்.

“ஆண் குழந்தை பொறந்த சந்தோஷத்தில் அவன் குஞ்சைத் தொட்டு முத்தம் கொடுத்து வளர்த்தேன். இப்பக் குஞ்ச அறுத்துக்கிட்டு வந்து நிக்கறானே”

என்ற “மாத்தாரணி கிளினிக்” கதையில் வரும் வரிகளைப் போல் உறுப்பு அறுத்து பாலுறுப்பு மாற்றுச் சிகிச்சை செய்துகொண்ட திருநங்கைகளின் செய்திகளும், மார்பகங்களை அறுத்து ஆணுறுப்பு பொருத்தப்பட்ட திருநம்பிகளின் செய்திகளும் இனி எக்காலத்திற்கும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

திருநங்கைகளும், நம்பிகளும் மனிதர்கள் தான் என்பதை இவ்வுலகம் புரிந்து கொள்ளாத வரைக்கும் அவர்கள் ஏலியன்களாகவே பார்க்கப்படுவார்கள். இந்நூல் மாறிய பாலினத்தவரைப் பார்த்தவுடன் முகம் சுளிப்பவர்களுக்கு ‘அம்மணமில்லா அர்ப்பணம்’.

வாழ்த்துகளுடன்

சசிகுமார்.செ , முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை & ஆய்வு மையம்,
அரசு கலைக் கல்லூரி, சித்தூர், பாலக்காடு.
நவிதலுக்கு-9496344493

கைரதி 377 – சிறுகதைத் தொகுப்பு
(மாறிய பாலினரின் மாறாத வலிகள்)

ஆசிரியர் – மு ஆனந்தன்

வெளியீடு – பாரதி புத்தகாலயம்

பக்கம் 120 – விலை 120

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *