தஸ்தயேவ்ஸ்கியின் மிக முக்கியமான நாவலான Notes From a Dead House நண்பர் கூத்தலிங்கம் அவர்களால் மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டு நியூ செஞ்சுரி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான நாவல் என்று சொல்வதைவிட தஸ்தயேவ்ஸ்கி நாவல்கள் அனைத்துக்கும் தாய் என்று இந்நாவலைக் கருதலாம் என்பது என் எண்ணம். தஸ்தயேவ்ஸ்கி சைபீரியாவில் சிறைப்பட்டிருந்தபோது சந்தித்த சக கைதிகள், அவர்களுடைய மன அமைப்பைப் பற்றிய சித்திரம் என்று ஒரு சௌகரியத்துக்காக இந்நாவலை வகைப்படுத்தலாம். ஆனால் இந்த நாவலுக்குப் பிறகு அவர் எழுதிய எல்லா நாவல்களிலும் விரிவாகவும் ஆழமாகவும் அலசிய psychocentric விஷயங்கள் அனைத்தும் இந்த நாவலில் glimpses ஆக தெளிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் உணரலாம். இந்த நாவலில் ஒவ்வொரு வாசற்கதவை மட்டும் திறந்து காட்டிவிட்டு நகர்ந்து விடுபவர் மற்ற நாவல்களில் உள்ளே சென்று முழு விஸ்தீரணத்தையும் காட்டுகிறார். இந்த நாவலில் இடம்பெறும் எல்லா பாத்திரங்களையும் அவருடைய மற்ற நாவல்களில் வருகின்ற பிரதான பாத்திரங்களின் பெயரோடு நம் மனதுக்குள் இணைத்து வாசிப்பது ஓர் அலாதியான அனுபவமாக இருக்கும்.

கூத்தலிங்கத்திடமிருந்து நேற்றுதான் நாவல் கிடைக்கப் பெற்றது. அவருடைய அருமையான முன்னுரையை மட்டுமே இதுவரை வாசித்திருக்கிறேன். ஆனால் அவரை அழைத்துப் பேசும்போது வேறு சில முக்கிய விஷயங்களை தெரிவித்தேன். அவற்றைப் பொதுவில் பகிரலாம் என்று நினைக்கிறேன்.

கூத்தலிங்கம் நாவலை சோவியத் ரஷ்யாவின் இலக்கிய நூல்கள் வெளியீட்டு நிறுவனமான Foreign Languages Publishing House பதிப்பித்த L.Navrozov & Y.Guralsky யின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்திருக்கிறார். இந்த நாவலுக்கு ஆங்கிலத்தில் பல்வேறு மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. Indirect translation களிலிருந்து மொழிபெயர்க்கும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்களையும் வாசித்து அவற்றின் அடிப்படையில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் கருத்து. ஏனெனில் எந்த மொழிபெயர்ப்பும் பரிபூரணமாக மூலத்தை பெயர்த்துத் தந்திருக்காது. விடுதல்கள், கூடுதலாக சேர்க்கப்பட்ட (மொழிபெயர்ப்பாளரின்) வரிகள், தவறுகள், குழப்பமான வாக்கியங்கள் என பலவிதமான பிறழ்வுகள் இருந்தே தீரும். ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மூலத்தை மொழிபெயர்ப்பாளன் வாசிக்காவிட்டாலும்கூட நெருங்கிவிட முடியும். மூல ஆசிரியரின் நடை, அவருடைய தொனி இவற்றையெல்லாம் துல்லியமாகப் பற்றிக்கொண்டு நமது மொழியில் கொண்டுவருவதற்கு இத்தகைய வாசிப்பு உதவும்.

கூத்தலிங்கத்திடம் நான் பரிந்துரைத்தது இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகளை. கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பும், சமீபத்திய Richard Pevear and Larissa Volokhonsky இணையரின் மொழிபெயர்ப்பும்.
கார்னெட் நம்முடைய கநாசு வைப் போல. சரளமாகப் படித்துவிடலாம் ஆனால் துல்லியத்துக்கு உத்திரவாதம் இல்லை. பேவியரின் மொழிபெயர்ப்பு ரஷ்ய மூலத்துக்கு நெருக்கமானது என்று பலரும் சான்றளித்துள்ளனர். ஆனால் சற்று உலர்ந்த நடை என்றுதான் சொல்லமுடியும். மூலத்தை அச்சு பிசகாமல் கொண்டு வரும் முனைப்பில் உணர்விழைகள் அறுந்து தொங்குவதை பல இடங்களில் உணரலாம். ஆனால் நம்பிக்கையான மொழிபெயர்ப்பு அவர்களுடையது.

கூத்தலிங்கம் பின்பற்றுவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் நுட்பமான வாசகர். தேர்ந்த எழுத்தாளர். முக்கியமாக மிகவும் சிரத்தையுடன் செயலாற்றுபவர். அவரை நம்பி வாசிக்கலாம்

– ஜி.குப்புசாமி முகநூல் பதிவிலிருந்து….

நூல் : மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்
ஆசிரியர் : ஃ பியோதர் தஸ்தயெவ்ஸ்கி
தமிழில்: கே.பி.கூத்தலிங்கம்

விலை : ரூ.₹825/-
வெளியீடு : நியூ செஞ்சுரி பதிப்பகத்தால்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

Bharathi Puthakalayam

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *