நூல் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் 
ஆசிரியர் : ஏ.ஜி.நூரானி
தமிழில்: ஆர். விஜயசங்கர்
விலை : ரூ.₹ 800/-
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/

விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

சிறந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் வழக்கறிஞருமான ஏ.ஜி‌. நூரானியின் ‘ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ எனும் நூலின் தமிழாக்கத்தை பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர் மூலம் பாரதி புத்தகாலயம் அழகுற அச்சிட்டு பதிப்பித்துள்ளது.

இந்நூலின் 25 தலைப்புகளில் 626 பக்கங்களும் பின்னிணைப்புகள் 198 பக்கங்களும் என 824 பக்கங்கள் படிப்பதற்கு முதலில் மலைப்பாக இருந்தாலும் படிக்கப் படிக்க அறியப்படாத புதிய புதிய செய்திகளாக தொடர்ந்து கொண்டே போகிறது. சுரங்கப்பாதை போல போய்க் கொண்டேயிருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்தது போன்ற உணர்வை இறுதியில் பெற முடிகிறது.

சில மிரட்டும் மொழிபெயர்ப்பு நூல் போலன்றி மூல தமிழ் நூலை வாசிப்பது போன்ற உணர்வே மேலிடுகிறது. அவ்வகையில் வெகு நேர்த்தியாக மொழி பெயர்த்துள்ள ஆர். விஜயசங்கர் அவர்களையும் அவருக்கு உறுதுணையாக இருந்த கமலாலயன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்நூலின் முகவுரையின் இறுதியில் நூலாசிரியர் “எதையும் சீர்தூக்கிப் பார்த்து சிந்திப்பதற்காகப் படியுங்கள்” என்று கூறியிருப்பது பொருள் பொதிந்தது. மேலும் மொழிபெயர்ப்பாளர் உரையில் நோக்கம் குறித்துக் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சம் “அறிவுப் பூர்வமற்ற ஒன்று நாட்டிற்கு எவ்வளவு அபாயகரமானது, அரசியல் அமைப்பு அல்ல என்று கூறிக்கொண்டே ஒரு அரசியல் கட்சியைத் தன் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து மத்தியில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றித் தன்னுடைய இந்து ராஷ்டிரக் கனவை நோக்கி ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு விரைவாக நகர்கிறது என்கிற வரலாற்றை தமிழ் வாசகர்கள் அறியச் செய்வதுதான் இந்த மொழிபெயர்ப்பின் முக்கிய நோக்கம்” என்று குறிப்பிடப்பட்டிருப்பது வெற்றி அடைந்துள்ளது எனலாம். இரண்டு ஆண்டுகளாக மொழிபெயர்ப்பாளர் உழைத்த உழைப்பு வீண்போகவில்லை. அது வெற்றி அடைந்திருக்கிறது என்பதை நூல் முழுவதையும் படித்தபின் உணர முடிகிறது.

இந்திய சுதந்திரப் போரில் பங்கு பெற்று ரத்தம் சிந்தி, சிறைப்பட்டு, இளமையை இழந்து, சித்திரவதைக்குட்பட்டு குடும்பத்தை இழந்த தியாகிகளுள் இஸ்லாமிய மக்கள் குறிப்பிடத்தக்க முத்திரை பதித்துள்ளனர் என்பதை வரலாற்று ஆவணங்கள் பறை சாற்றுகின்றன. இந்தியச் சுதந்திரப் போரின் முக்கியமான கட்டமான சிப்பாய் கலகம் என சொல்லிக் கொடுக்கப்பட்ட சிப்பாய் புரட்சியில் இஸ்லாமியர்களின் பங்கு மகத்தானது என்பதை ‘அறிமுகம்’ எனும் முதல் தலைப்பிலேயே அறியலாம். இப்பகுதியில் இந்துக்களைக் காட்டிலும் இஸ்லாமியர்களைக் கண்டே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதிகம் அஞ்சினர் என்பதையும் ஆகவேதான் அவர்கள் மீது அதிகமான அடக்குமுறை ஏவப்பட்டது என்பதையும் டெல்லி மண்டலத்தில் இருந்த முஸ்லீம்களின் அசையா சொத்தில் நான்கில் ஒரு பங்கு அதிக வரிகள் வாயிலாகப் பறிக்கப்பட்டதும் அதே நேரத்தில் இந்துக்களின் மீது 10 சதவீத வரியே விதிக்கப்பட்டது என்பதையும் தெரியப்படுத்துகிறார் நூலாசிரியர். மேலும் பிரிட்டிஷாரின் பிரித்தாள் சூழ்ச்சியில் சிக்குண்ட பல தலைவர்களை நூலில் பார்க்க முடிகிறது. பஞ்சாப் சிங்கம் என போற்றப்பட்ட லாலா லஜபதிராய் இந்து மகா சபையின் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றியதும் அதுசமயம் “இந்திய தேசிய காங்கிரஸ் பெரும்பாலும் ஒரு இந்து அமைப்பு என்பதை மறைப்பதில் பயனேதும் இல்லை” எனப் போட்டு உடைப்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால் இந்துக்களின் நலன்களை முதன்மைப்படுத்தும் அரசியல் பார்வை, தேசத்தின் மீது மத-கலாச்சார ஒற்றைத் தன்மையைத் திணிக்க வேண்டும் என்கிற ‘சர்வாதிகார’ ஆசை கொண்டிருக்க வேண்டும் என்பதில்லை என்பதையே லஜபதிராயின் கண்ணோட்டம் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

“ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு பவுத்தம் இந்தியாவின் பெரும் மதமாக இருந்தது என்னும் வரலாற்று ஆசிரியர் ரொமிலா தாப்பரின் கூற்று சிந்திக்கத் தக்கது. பவுத்தம் கடுமையான தாக்குதலைச் சந்தித்திருக்கும் என ஊகிக்க முடிகிறது.

பவுத்தத்தை அழித்து, இஸ்லாத்தை அழித்து இந்துத்துவாவைக் கட்டி எழுப்ப சாவர்க்கர் துவங்கி வரிசையாக பணியாற்றி அவர்கள் அளவில் வெற்றி முகமாக பயணித்துக் கொண்டிருப்பது வெள்ளிடை மலை. இந்துத்துவம் மதக்கோட்பாடு அல்ல. அது ஓர் அரசியல் கோட்பாடு‌ அந்தக் கோட்பாட்டினைப் புதிதாகப் படைத்தார் சாவர்க்கர்.

“நான் ராமர் என்ற காரணியைத் திறம்படப் பயன்படுத்தாமலிருந்தால், டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் தோற்றிருப்பேன்” என்று அத்வானி கூறியதாகவும், “இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் முகமதியா இந்துக்கள் தான், இந்தியாவிலிருக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்டி இந்துக்கள் என்று நான் கூறுகிறேன். கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் அவர்களுடைய மதமாக ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் தாம் அவர்கள். எனவே முஸ்லிம்களையோ இந்துக்களையோ அவர்களுக்கே உரிய தனி அடையாளங்களுடன் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் இந்துமத மயமாக்கப்பட வேண்டும்” என 1991-ஜனவரி 12ல் பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேசியிருப்பதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையில் சமரசம் என்பதே கிடையாது. சிறுபான்மையினர் சரணாகதி அடைய வேண்டும் என்பதில் குறியாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

இப்போதிருக்கும் அரசாங்கம் இந்தியாவை ஓர் இந்து நாடாக பிரகடனப்படுத்தும் வகையில் ஓர் அரசியல் சட்ட திருத்தத்தை செய்யவேண்டியதில்லை. அது ஓர் இந்து நாட்டை ஆள்வதைப் போன்றே ஆட்சி செய்தால் போதும். இதைத்தான் நரேந்திர மோடி குஜராத்திலும், 2014 முதல் இந்தியாவிலும் செய்கிறார். ஜனநாயகமற்ற இந்திய மண்ணின் மீது போடப்பட்டிருக்கும் ஜோடனைதான் ஜனநாயகம்‌. மோடியின் திட்டமான நிறுவனங்களில் இந்துத்துவாவாதிகளை நிரப்புவது, யோகிகளை முதலமைச்சர்களாக்குவது, காபினட் முறையை முடக்குவது, ஆட்சிப் பணியைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வருவது, நீதித்துறையைத்தன் செல்வாக்கிற்குள் கொண்டு வருவது என தனது நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. அரசு.

மனித உரிமைகளுக்கான கிறிஸ்தவர்களின் அமைப்பு 1998-டிசம்பர் 4 அன்று வெளியிட்ட கடிதத்தில் “நாடு சுதந்திரம் பெற்ற 50 ஆண்டுகளை விட அதிகமான தாக்குதல்கள் ஜனவரி 1998 முதல் கிறிஸ்தவ சமூகத்தின் மீது நடந்து வருகின்றன. கன்னியாஸ்திரீகள் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பாதிரியார்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். பைபிள் எரிக்கப்பட்டுள்ளது. மதாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன.
கல்வி நிலையங்கள் தாககப்பட்டிருக்‌‌‌கின்றன. மத நம்பிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர்.”
என குறிப்பிடப்பட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது.
இது கோல்வால்கரின் சிந்தனைக் கொத்தில் குறிப்பிட்டுள்ள ‘முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள்தாம் உள்நாட்டு அபாயங்கள் என்பதை ஒத்துள்ளன.

ஆர் எஸ் எஸ்ஏன் உருவாக்கப்பட்டது எனும் தலைப்பில் நூராணி ஆதாரங்களை அடுக்குகிறார்.

“ஒரு புறத்தில் அன்னிய நிர்வாகத்தின் அரசியல் ஆதிக்கமும் மறுபுறத்தில் முஸ்லிம்கள் செய்யும் சித்திரவதையும் கத்தரிக்கோலின் இரு கத்திகளுக்கு இடையே நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இந்துக்களை முஸ்லிம்களாக்குவதற்காக அவர்கள் நம்மீது தொடுத்திருக்கும் தாக்குதல்களையும் நம் மகள்களையும், மருமகள்களையும் அவர்கள் பாலியல் வன்புணர்வு செய்வதையும் குறித்து நான் பேசத் துவங்கினால் என் உணர்ச்சிகளை என்னால் கட்டுப்படுத்த இயலாது. எனவே நான் அவை குறித்து அதிகம் பேசவில்லை. கிறிஸ்தவர்கள் நம்மை காயப்படுத்துகிறார்கள். இந்தத் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டுமானால் நாம் நம்மை ஒரு அமைப்பாக்க வேண்டும். இந்த ஒரு நோக்கத்திற்காகத்தான் 1925 ஆம் ஆண்டில் ஆர். எஸ். எஸ். உருவாக்கப்பட்டது.”

மறு ஆண்டே மோதிலால் நேரு தன் மகன் நேருவுக்கு இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்.

“மதரீதியான வெறுப்பும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதும் சகஜமாக நடக்கிறது. நான் முழுவதுமாக வெறுத்துப் போய்விட்டேன். பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெறலாம் என நினைக்கிறேன். அதற்குப் பின் என் நேரத்தை எப்படிச் செலவிடுவது என்பதுதான் எனக்குக் கவலை. நான் காங்கிரசின் கவஹாத்தி மாநாட்டிற்காகக் காத்திருக்கிறேன். அதுவரை பேசப் போவதில்லை. மாளவியா – லாலா கும்பல் பிர்லாவின் பண உதவியுடன் காங்கிரசைக் கைப்பற்ற நினைக்கிறார்கள்.”
தாராள பண உதவி செய்பவர் பிர்லாவாக மட்டும் இருக்க முடியாது. ஆர். எஸ். எஸ்‌ பங்கும் இல்லாமல் இருக்க முடியாது.”

இந்திய தேசியத்தின் மீதான உறுதிப்பாடு எனும் தலைப்பில் 1886ல் நடந்த இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டின் அறிக்கையில் “காங்கிரஸ் என்பது உலகியல் நலன்களை சார்ந்த சமூகமேயன்றி ஆன்மீக நம்பிக்கைகளுக்கானது அல்ல என்பதால் அரசியல் பிரச்சனைகளைப் பேசுவதில் அதிலிருக்கும் ஒருவர் மற்றவரை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதே அவர்களின் தகுதி. இந்த நாட்டில் அவர்களின் பொது நலன்கள் ஒரே மாதிரியானவை என நாங்கள் கருதுகிறோம்; இந்துக்களும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், பார்சிகளும் தத்தமது மத சமூகங்களின்
பிரதிநிதிகளாக இருந்து பொதுவாழ்வில் எழும்‌‌‌ மதம் சாராத பிரச்சனைகளை விவாதிக்கலாம்” என மதச்சார்பின்மை நிலை தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.

இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ். அனைத்து அமைப்புகளிலும் ஊடுருவிக் கால் பரப்பியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

“ஆர்.எஸ்.எஸ்.ஸின் யுக்தி பலனளிக்காது. அதற்கு இந்தியா முழுவதிலும் 1500 கிளைகளும் 2 லட்சம் உறுப்பினர்களும் இருப்பதாக அக்டோபர் 25, 1942 அன்று கோல்வால்கர் கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது‌. மேலும் அதன் உறுப்பினர்கள் குடிமைச் சமூகம் மற்றும் ராணுவத்தின் அனைத்து முக்கியச் சேவைகளிலும் ஊடுருவி விட்டனர். நம்பத் தகுந்த அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், குமாஸ்தாக்களையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரிலிருந்த துப்பாக்கி தொழிற்சாலையிலும், கமாரியாவிலிருந்த ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையிலும் ஷாகாக்களை அமைத்தது. எனினும் பிரிட்டிஷ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் ராஜனை மிஞ்சிய ராஜ விசுவாசியாய் ஆங்கில அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். வெண்சாமரம் வீசி வந்தது.

இன்றைய பாசிச அரசின் வித்து அக்காலத்திலேயே ஐரோப்பிய பாசிஸ்டுகளின் உதவியுடன் ஆர்.எஸ்.எஸ். வயல்களில் விதைக்கப்பட்டது. சாவர்க்கரின் ஹிட்லர் மீதான புகழ்ச்சி ஹிட்லரை ஒரு ஹீரோவாக வழிபடுவதற்கு இட்டுச் சென்றது. அவர்களின் கருத்துகளுக்கு வங்காளமும் பம்பாய் மாகாணமும் நல்ல விளைநிலமாக இருந்தன. 1931ல் மூஞ்சே இத்தாலிக்குச் சென்றதும், முசோலினியைச் சந்தித்ததும் வரலாற்றில் திருப்புமுனைகளாயின. போர்க்கொள்கையும், இனவாதமும் இருதரப்பையும் இணைத்த சபையானது.” எனும் குறிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. எனவேதான் “இத்தாலிக்கு ஃபாசிஸ்டுகள் எப்படியோ, ஜெர்மனிக்கு நாஸ்திகர்கள் எப்படியோ, அப்படி இந்தியாவிற்கு ஆர்.எஸ்.எஸ். என்றாக வேண்டும் என்றுதான் ஆர்.எஸ். எஸ்‌. நம்புகிறது என்று 1933லேயே உளவுத் துறையின் அறிக்கை எச்சரித்துள்ளது உற்று நோக்கத்தக்கது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்கள் எழுதி எழுதி அம்மணமானது அனைவரும் அறிந்ததே. 1913, நவம்பர் 14ல் சாவர்க்கர் சமர்ப்பித்த கடிதத்தில் “நான் எந்தத் திறன் அடிப்படையில் வேண்டுமானாலும் அரசுக்குச் சேவகம் செய்யத் தயாராயிருக்கிறேன். அரசு எனும் பெற்றோரின் வீட்டுக்குத் திரும்புவதைத் தவிர ஊதாரி மகனுக்கு என்ன வழி?”

இப்படிக் கேவலப்பட்ட சாவர்க்கர் காந்தி கொலை வழக்கில் வழக்கைத் தவிர்ப்பதற்காக பிப்ரவரி 22-1948 அன்று மும்பையில் காவல் துறை ஆணையருக்கு “அரசாங்கம் சொல்லும் எந்தக் காலம் வரையிலும் நான் மதவாதம் அல்லது அரசியல் சார்ந்த எந்தப் பொது நிகழ்விலும் கலந்து கொள்வதைத் தவிர்ப்பேன்” என்றார். சாவர்க்கர் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இறங்கிச் செல்லத் தயாராக இருந்தார் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. உண்மையான எந்த தேச பக்தரும் இவரை மன்னிக்க மாட்டார். ஆனால் காலக் கொடுமையால் சாவர்க்கர் வழிபாட்டிற்குரியராகவும் ஆக்கப்பட்டிருக்கிறார் எந்த மனிதரின் கொலைச் சதியில் சாவர்க்கர் ஈடுபட்டாரோ அவருடைய படத்திற்கு நேராக பாராளுமன்ற மைய மண்டபத்தில் சாவர்க்கரின் படமும் மாட்டப்பட்டிருக்கிறது என்னும் ஆதங்கம் நூலாசியருடையது மட்டுமல்ல. நம்முடையதும்தான்.

1996ல் கோல்வால்கர் எழுதிய ‘சிந்தனைக் கொத்து’ என்கிற புத்தகம் இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பைபிளாகப் போற்றப்படுகிறது. கோல்வால்கரின் பட்டியலில் ஏராளமான ஹீரோக்களின் பெயர்கள் இருந்தன. ஆனால் அதில் ஒரு முஸ்லிம் பெயர் கூட இல்லை என்னும் நூலாசிரியர் பண்டைக்கால இந்தியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்று மும்பையின் ரிலையன்ஸ் ஹர்கிசோன்தாஸ் மருத்துவமனையில் மோடி ஆற்றிய
உரைக்கு இவரே ஊக்க சக்தியாக இருந்துள்ளார் என்கிறார்.

கோல்வால்கரின் சிந்தனைக் கொத்து என்ற நூலின் 10 மற்றும் 11ஆம் அத்தியாயங்களை விஞ்சும் வகையில் ‘உள்நாட்டு அபாயங்கள்’ என்று தலைப்பிடப்பட்ட 12ஆம் அத்தியாயத்தில் முஸ்லிம்கள்‌, கிறிஸ்துவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் என்று உள்நாட்டு அபாயங்களாகக் குறிப்பிடுவதையும் அதனடிப்படையில் இப்போதும் அவ்வாறே நாடாளும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் இம்மூன்று பிரிவினரையும் பரம எதிரிகளாகக் கருதுவதையும் பார்க்க முடிகிறது.

“ஆர்.எஸ்.எஸ்.ஸினை ஓர் அபாயகரமான அமைப்பாகவும் ஃபாசிஸம் என்கிற சொல்லின் கறாரான பொருளுக்கு உகந்ததாகவுமே” நேரு கருதினார் எனும் நிலையில் இத்தகைய அபாயத்தை மக்கள் மத்தியில் நேரு ஏன் அம்பலப்படுத்தவில்லை எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.

நேருவின் அமைச்சரவையில் ஆர்.எஸ்.எஸ்.காரரான டாக்டர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி அமைச்சராக இருந்தது ஏற்க இயலாத முரண். “உங்கள் வீட்டின் மேல் பக்வா ஜண்டாதான் பறக்கிறது ‌. மூவண்ணக் கொடி இல்லை என்பதே எனக்குத் தெரியாது. தேசியக் கொடியல்லாத வேறு ஒரு கொடியை ஓர் அமைச்சர் பறக்க விடுவது எனக்கு விசித்திரமாகத் தெரிகிறது” எனப் பேசிவிட்டு நேருவால் எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடிந்தது என்பதும் உளவுத் துறையின் பணி குறித்த கேள்வியும் விடையின்றித் தொக்கி நிற்கின்றன. முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டிய களையை ஆல் விருட்சமாக விட்டதில் நாட்டை ஆண்டவர்களுக்குப் பங்கு இருந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

‘ஆர்.எஸ்.எஸ்.ஸும் காந்தி படுகொலையும்’ எனும் தலைப்பிலான கட்டுரையில் ஒரு கொலைகாரன் அரசியல் வசைபாடுவதை ஒரு நீதிபதி ‘கண்ணீர் மல்கக்’ கேட்டது யாரும் கேட்டிராத செயல் எனக் குறிப்பிடும் நூலாசிரியர் கொலைக் குற்றவாளி நாதுராம் கோட்சேக்கு எதிராக பெரும் ஆதாரங்கள் இருந்தன எனப் பட்டியலிடுவதும் குறிப்பிடத்தக்கவை.

காந்தியின் படுகொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ்‌.ஸுக்கு 04.02.1948ல் தடை விதித்த காங்கிரஸ் அரசு குறுகிய காலத்திற்குள்ளாகவே ஜூலை11,1949 அன்று தடையை நீக்கியது.

ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம் என்னும் அரசியல் அமைப்பைத் துவக்கியது. “ஆர்.எஸ்.எஸ்‌.ஸுக்கு முறை தவறிப் பிறந்த குழந்தைதான் ஜனசங்கம்” என்று நேரு கூறியது வரலாற்றுப் பதிவு.

1957-ஜனவரி 7 தேதியிட்ட ‘ஆர்கனைசர்’ இதழில் ‘இந்தியக் கலாச்சாரம்’ குறித்த தீர்மானத்தில்..”தேசியத்தை வளர்ப்பதற்காக நாட்டில் வாழும் அனைவரும் ஒரே கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்ள வேண்டுமென்று பாரதீய ஜனசங்கம் உறுதியேற்கிறது. இந்தக் கடமையை நிறைவேற்ற சமுதாயமும் அரசாங்கமும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்” குறித்து அன்று பட்டியலிடப்பட்டவற்றை இன்று மோடி அமுலாக்கி வருகிறார் எனின் மிகையன்று. பா.ஜ.க. சமீப காலங்களில் வெளியிட்டு வரும் தேர்தல் அறிக்கைகள் போன்ற ஆவணங்களில் வெளிப்படுத்திய கொள்கைகள் அந்தப் பழைய ஆவணத்தில் கலாச்சார தேசியம் என்ற பெயரில் கூறிய கருத்துக்களின் மறுபதிப்புக்கள்தான் என தெளிவுபடுத்தியுள்ளார் நூலாசிரியர். ஒரு நாடு, ஒரு மக்கள், ஒரு கலாச்சாரம் என்கிற கருத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய உணர்வை முடுக்கி வலுப்படுத்துவது அதிகாரம் குவிக்கப்பட்ட ஒற்றை ஆட்சியினால்தான் முடியும். கூட்டாட்சித் தத்துவம் தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எனும் ஜனசங்கத்தின் 1965ஆம் ஆண்டின் கொள்கை விளக்கத்தைக் குறிப்பிட்டு அதுவே ‘பழைய கள் புதிய மொந்தை’ யாக பா.ஜ.க.வின் கொள்கையாக இருப்பதை உணர முடிகிறது.

பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையாக்கும் கோயபல்ஸ் பாணியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் சங்பரிவாரங்களும் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.

“விவாகரத்து பெற்ற ஒரு இஸ்லாமியப் பெண் இரண்டாண்டுகளுக்குள் பிள்ளை பெற்றால் அக்குழந்தை அவளுடைய முதல் கணவனால் உண்டானதாகக் கருதப்பட வேண்டும் என குரான் கட்டளையிடுகிறது” எனும் பொய்யைக் கோல்வால்கர் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மையென கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்பினார்.

நச்சரவமான ஆர்.எஸ்.எஸ். மீது கடும் தொடர் நடவடிக்கையை நேருவும் அவரைத் தொடர்ந்து வந்த பிரதமர்களும் மேற்கொள்ளவில்லை. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர பிற எதிர்க்கட்சிகளின் பார்வையும் ஆர்.எஸ்.எஸ்‌. மீது மென்மைத்தன்மை மிக்கதாகவே இருந்தது. எனவேதான் 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயணன் துவங்கிய முழுப் புரட்சி இயக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸால் எளிதாக இணைய முடிந்தது.
மேலும் “1974ல் பீகாரில் தான் துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.ஸின் உதவியை ஜெ.பி‌. ஏற்றுக் கொண்டது பெரிய சோகமாகிறது. அப்படிச் செய்ததன் மூலம் ஒரு வாசகர் சக்திக்கு அவர் கவுரவத்தை வழங்கிவிட்டார் என்கிறார் நூலாசிரியர்.

1975ல் இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தின் பின்னணியில் 1977ல் நடைபெற்ற தேர்தலில் இந்திரா காந்தியைத் தோற்கடித்து காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க மாற்றுக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் இணைந்தது கொள்கை அடிப்படையில் முரணானது. புதிதாக அமைக்கப்பட்ட மக்களவையில் 85 உறுப்பினர்கள் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது சாதாரண விசயமல்ல. கொள்கை அடிப்படையில் எதிரும் புதிருமான தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படுதல் சாத்தியமற்றது. அதிகாரப் போட்டி வேறு. எனவே ஜனதா அரசு 1979ல் கவிழ்ந்தது. பாரதீய ஜனதா கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

1980ல் உருவான பாரதீய ஜனதா கட்சி இன்றளவும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் செயல்பாட்டு அணிதான். ஆர்.எஸ்.எஸ். என்பது தாய். பா.ஜ.க. அதனுடன் தொப்புள் கொடியினால் இணைக்கப்பட்ட குழந்தை. பா.ஜ.க. தோன்றிய முதல் பத்தாண்டுகளுக்குள்ளாகவே இந்துத்துவம் என்பதை வெளிப்படையாக பரப்புரை செய்யத் துவங்கியது.

பா.ஜ.க. 1981ல் பொய்ப் பரப்புரை ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டது. திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்திலிருக்கும் அனைத்து தலித் குடும்பங்களும் இஸ்லாமிய மதத்தினைத் தழுவக் காரணம் இஸ்லிமியத் தலைவர்களும் பணமும்தான் என்று குற்றம் சாட்டப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகினர். ஆனால் இந்திய அரசின் பட்டியலின் மக்கள் மற்றும் பழங்குடியினர்க்கான பிராந்திய ஆணையரின் அறிக்கை இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என அம்பலப்படுத்தியது என்பதை நிறுவுகிறார் நூலாசிரியர். மீண்டும் 1985ஆம் ஆண்டு புகழ்பெற்ற ஷாபானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக 1986ல் இயற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் விவாகரத்துச் சட்டம் பாபர் மசூதியின் பூட்டுக்களைத் திறக்க பிரதமர் ராஜீவ் காந்தியைத் தூண்டியதாகவும் அதன் தொடர்ச்சியாக ராமர் கோயில் புத்துணர்ச்சி பெற்று இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே இருந்த உறவைக் கெடுத்ததாகவும், நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளின் அடிப்படையைத் தகர்த்ததாகவும் பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனர் என்பது புலனாகிறது.

பாபர் மசூதியை அகற்ற வேண்டும் என்று ஏப்ரல் 8,1984 அன்று சங்பரிவாரமான விஸ்வ இந்து பரிஷத் அறைகூவல் விடுத்தது. ரத யாத்திரையும் துவக்கப்பட்டது. ராமர் கோயிலைக் கட்டுவதற்காக 2000க்கும் மேற்பட்ட ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ராம்ஷிலா என்கிற பெயரில் பூஜையால் புனிதப் படுத்தப்பட்ட செங்கற்களை அயோத்தி நோக்கி சுமந்து செல்லும் இந்த இயக்கத்தை வி.எச்‌.பி நடத்தியது. கருணை ததும்பும் ராமனின் பிம்பம் திரிசூலம், வில், அம்பு ஏந்திய வீரனைப்போல மாற்றி வடிவமைக்கப்பட்ட சுவரொட்டிகளை வி.எச்.பி. வெளியிட்டது.

1990, ஆகஸ்ட் 7 அன்று அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினைப் பரிந்துரைத்த மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல்படுத்துவதாக பிரதமர் வி.பி.சிங் அறிவித்தார். கூர்மையாக எதிர்வினையாற்றிய அத்வானி ரத யாத்திரை திட்டத்தை அறிவித்தார். ரத யாத்திரையின்போது பீகாரில் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் அத்வானியைக் கைது செய்யவும் வி‌பி.சிங்.அரசுக்கான ஆதரவை பா.ஜ.க. வாபஸ் பெற்றது. வி.பி.சிங் அரசு வீழ்ந்தது.

1991, ஜுன் 21ல் காங்கிரஸ் தலைமையிலான நரசிம்மராவ் அரசு பொறுப்பேற்றது. அப்போதே காவி உடையணிந்த பா.ஜக. பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தது இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே ஆண்டு கணிசமான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளும் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் பா.ஜ.க.வில்
இணைந்த செய்தியை விவரிக்கிறார் நூலாசிரியர்.

மீண்டும் ரத யாத்திரை.
“அத்வானியின் ரத யாத்திரை பி.ஜே.பி.யால் எடுக்கப்பட்ட முடிவல்ல. அது ஆர்.எஸ்.எஸ்.ஸினால் வடிவமைக்கப்பட்ட யுக்தி” எனும் நூலாசிரியர் கட்சியின் சின்னமான தாமரையைப் பெரிய அளவில் சுமந்து சென்ற அந்த டொயோட்டா ரதம் அவர்களின் அரசியல் நோக்கத்தை அறிவித்தது என்கிறார்.

1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்மராவிற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் அனைத்து அதிகாரங்களை வழங்கியிருந்த போதிலும் அவர் வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். உலகின் முன் இந்தியா வெட்கித் தலை குனிந்தது. ஆர்.ஏஸ்.எஸ், வி.எச்.பி. பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் தடை செய்யப்பட்டன. உ.பி. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய பா.ஜ.க. அரசுகள் கலைக்கப்பட்டன. குதிரைகள் பறந்த பிறகு லாயம் பூட்டப்பட்டன.

அரசியல் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் இயற்றுவது என்னும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரல்கள் மீது ஆர்.எஸ்.எஸ்.ஸின் கவனம் சென்றது. இன்றளவும் படிப்படியாக அவை நிறைவேறறப்பட்டு வருவது கண்கூடு.

பா.ஜ.க.வை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவது ஆர்.எஸ்.எஸ். அதன் தலைவர் சுதர்சன் பேசியவை அனைத்தும் நச்சுத்தன்மை வாய்ந்தவையே.
“முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் கடலில் தூக்கி எறிய வேண்டும்‌. அவ்வாறு செய்ய இயலாதென்பதால் அவர்களை இந்திய மயமாக்க வேண்டும். இந்துத்துவம் என்பதன் மறைமுகம் அது.

சங்க பரிவாரம் என்னும் ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தின் அங்கங்கள் குறித்து பாரத் பூஷன் குறிப்பிடும் பட்டியல் மிக நீளமானது. அப்பட்டியல் முழுவதையும் வாசித்தால் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலத்தின் தன்மைக்கேற்ப சங் பரிவாரம் எடுத்துள்ள பல அவதாரங்களை அறியலாம். குஜராத் அரசு தன் ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் மீதிருக்கும் தடைய நீக்கும் விதமாக அரசுப் பணியாளர் நடத்தை விதிகளைக் திருத்திய தையும் அதற்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ஆட்சேபனை தெரிவித்த போதிலும் பிரதமர் வாஜ்பாய் ஆதரவுடன் தடையை நீக்கியதையும் இந்நூல் விளக்குகிறது.

2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவமும் அதனைத் தொடர்ந்து அரங்கேறிய முஸ்லிம்களின் படுகொலையும் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“குஜராத் படுகொலையினால் மோடி அரசியல் ரீதியாக பாதிப்படைவதற்குப் பதிலாக, அத்வானியை ஓரம் கட்டிவிட்டு பிரதமர் பதவிக்கான பா.ஜ.க.வின் வேட்பாளரானார். அத்வானி செய்த உதவிக்குப் பரிசாக முக்கியமான நேரத்தில் அத்வானியைத் தகுந்த சடங்குகளுடன் பரணில் தூக்கிப் போட்டார் என்னும் வார்த்தைகள் அர்த்த அடர்த்தி மிக்கவை.

“காங்கிரசும் பாகிஸ்தானும் ஏதோ ஆபத்தான செயலில் ஈடுபட்டிருப்பதால் டிசம்பர் 12 அன்று நடக்கவிருக்கும் தேர்தலின்போது குஜராத்தியர் கவனமாக இருக்க வேண்டும்” என்று மோடி பேசியதன் தீய எண்ணத்தையும் அப்பட்டமான பொய்களையும் கலந்து சேற்றை வாரி இறைப்பதில் மோடி எந்த அளவிற்கு இறங்கிச் செல்லத் தயங்க மாட்டார் என்பதையே இந்த பேச்சுக்கள் காட்டுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

“பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் நடந்த ரயில் படுகொலையைத் தொடர்ந்து குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு மாநில நிர்வாகம் மறைமுக ஆதரவு அளித்தது மட்டுமன்றி, முதல்வர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வி.எச்.பி/பஜ்ரங் தளத்தின் அதிரடிப் படையினர்க்கு வேலையை முடிக்க 24 மணி நேரம் கொடுத்தது.” எனும் தி டெலிகிராப் பத்திரிகை செய்தியை ஆதாரமாக்கிப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல்.

2005-ஜுன் 15ல் நீனா வியாஸ்’தி இந்து’ பத்திரிக்கையில்..”மக்களுக்குப் பதில் சொல்ல பா.ஜ.க கடமைப்பட்டதல்ல; நாட்டுக்கு நல்லது எது என தமக்குத் தெரியும் என்று நினைத்த சூப்பர் தேசியவாத, சூப்பர் தேசபக்தக் கூட்டம் ஒன்றிற்குத்தான் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறது என்பதை அக்கட்சி மிகத் தெளிவாக உணர்த்தி விட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆர்.எஸ்.எஸ்‌ ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதை மறந்து விடாதீர்கள். பா.ஜ.க. எப்போதாவது தன் சொந்த பலத்தில் ஆட்சிக்கு வந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ்‌. என்கிற தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அமைப்புதான் நாட்டை ஆளும். ஜனநாயக இந்தியா என நாம் இன்று அறிந்து வைத்திருக்கும் ஒன்று பழைய கதையாகி விடும்.” என்று தீர்க்கதரிசனமாக எழுதியிருக்கிறார் என்பதை இன்றைய யதார்த்தக் களநிலவரம் மெய்ப்பிறக்கிறது.

இந்துஸ்தான் டைம்ஸ் 2005-அக்டோபர் 24ல் “பா.ஜ.க சரியான வழியில் செல்கிறதா என்பதைக் கண்காணித்து உறுதி செய்வதுதான் எங்கள் வேலை” என்று மோகன் பகவத் பேசியதாக குறிப்பிடப்பட்டிருப்பது சாதாரண விசயமன்று. ஆர்.எஸ்.எஸ்‌. பா.ஜ.க.வுக்குப் பரிந்துரைத்த 5 அம்சங்களாக 1. இந்துத்துவக் கொள்கைக்கு முதன்மை 2. அமைப்பை பலப்படுத்துவது 3. தொண்டர்களுக்கும் பயிற்சி அளிப்பது 4. நன்னடத்தை 5.கலந்தாலோசனை செய்வதற்கான கட்சி அமைப்பு ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இவை இன்றளவும் ஆர்
எஸ்.எஸ், பா.ஜ
க.வால் பின்பற்றப்படும் அன்றாட நடைமுறை வேலைகள் என்பது அனைவரும் அறிந்ததே.

“பெண்கள்‌ 10 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று சுதர்சன் சொன்னதும் “12 மகன்களைக் கொண்டிருக்கும் ஒரு தம்பதியரின் சந்ததி 1200 ஆண்டுகளில் 1200 ஆகப் பெருகியிருக்கும். 11 மகன்களைக் கொண்ட குடும்பம் 1100 சந்ததிகளை உருவாக்கியிருக்கும். மூன்று குழந்தைகளைக் கொண்ட குடும்பத்திற்கு 38 வாரிசுகள் இருப்பர். ஆனால் இரண்டே மகன்களைக் கொண்ட குடும்பத்தினுடைய சந்ததி பூஜ்யத்திலேயே இருக்கும்” என பீதி கிளம்பியதும் “இந்துக்கள் குடும்பக் கட்டுப்பாட்டினைக் கைவிட வேண்டும்” என்று பேசியதும் மதவெறிப் பரப்புரைதானே!

ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்வதற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதிமொழியைக் குறிப்பிடும் நூலாசிரியர், இவ்வுறுதி மொழியை ஏற்றபின் அந்நபர் பிரதமர் ஆகும்போது ஏற்கும் உறுதி மொழியையும் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ். எப்படி மக்களை ஏமாற்றுகிறது என் விவரிப்பது முக்கியமானது.

ஆர்.எஸ்.எஸ்‌ கூறும் அகண்ட பாரதத்தில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான் நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும் என்பதை மோகன் பகவத் வாய்வழி அறியமுடிகிறது. அவர் சொல்கிறார்: “தேசப் பிரிவினை தீர்மானமானதல்ல. அதனை ரத்து செய்வது பாகிஸ்தான் உட்பட அனைத்து தரப்புகளின் நலனுக்கு உகந்தது என்பதால் நாங்கள் அதைச் செய்வோம்‌. காந்தாரம் என்று ஒரு காலத்தில் அறியப்பட்ட ஆப்கானிஸ்தானத்தில் ரத்த ஆறு ஓடியிருக்கிறது. பாகிஸ்தான், பங்களாதேஷ், திபெத், மியான்மர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் நிலையைப் பாருங்கள். அகண்ட பாரதத்திலிருந்து அவை பிரிந்து சென்ற பிறகு என்ன மகிழ்ச்சியைக் கண்டன?”

இந்நூலின் முக்கியமான இன்றைய தேவையான பகுதியாக விரிகிறது ‘மோடியின் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். ராஜ்யம்”. காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற முழக்கத்தை முன்வைத்து நேருவின் மரபினை முற்றிலும் அழித்து எதிர்க்கட்சிகளே இல்லாத ஓர் ஆட்சியை அமைக்கும் எண்ணத்துடன் சர்வாதிகாரியாகக் காய்களை நகர்த்தி வருகிறார் மோடி.

“கிறிஸ்துவர்களை மீண்டும் இந்துக்களாக மாற்றுவதில் ஆர்.எஸ்.எஸ்‌ பிரதான கவனம் செலுத்துகிறது. வனவாசி கல்யாண் ஆஸ்ரமம், ஏகல் வித்யாலயா, சேவா பாரதி, விவேகானந்தா கேந்திரா, பாரத் கல்யாண் பரிஷத், ஃபிரண்ட்ஸ் ஆஃப் டிரைபல் சொசைட்டி, ஆகிய ஆர்.எஸ்.எஸ்‌ அமைப்புகள் ஆதிவாசிகள் மத்தியில் பணிபுரிவது இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

அவற்றுள் சில துளிகள்:
மார்ச் 2015ல் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் காவி ஆட்சியாளர்களின் ருசிக்கேற்றபடி மாற்றியமைக்கப்பட்டது. மதச்சார்பற்ற நாட்டைத் தகர்த்து ‘ஏகத்தலைவர்’ கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு இந்து நாட்டை உருவாக்க படிப்படியாக முன்னேறி வருகிறது. இந்தியாவின் சிறுபான்மையினரை, குறிப்பாக முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அரசியல் முக்கியத்துவம் இல்லாதவர்களாக்கி ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அரசின் உதவி ஆர்.எஸ்.எஸ்.ஸின் நடவடிக்கைகளுக்குப் புது வேகமளித்தது. 2012க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டிற்கு 2000 என்கிற விகிதத்தில் ஆர்.எஸ்.எஸ்‌ ஷாகாக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 2015க்குள் இந்தியா முழுவதிலும் 51,335 ஷாகாக்கள் தினசரி பயிற்சி நடத்தும் நிலை ஏற்பட்டது என டைம்ஸ் ஆஃப் இந்தியா மூலம் விவரிக்கிறார் நூலாசிரியர்.

அறிவியலுக்குப் புறம்பான பழமைவாத மூடநம்பிக்கை கருத்துக்கள் விதைக்கப்படுவது இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. “பறந்து கொண்டிருக்கும் விமானங்களை மாயமாய் மறையச் செய்யும் வேதியியல் சூத்திரத்தினை மகரிஷி பரத்வாஜ் என்பவர் எழுதிய வைமாணிக சாஸ்திரம் பரிந்துரைத்தது. மனிதர்களைக் குளோனிங் முறையில் தயாரிக்க முடியும் என்பதன் முதல் சான்றுதான் கௌரவர்கள் என்றும் புற்றுநோயை கோமியத்தால் குணப்படுத்த முடியும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தை ஆளும் பா.ஜ.க.வினர் கூறி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளதும் இந்தியாவின் பின்னோக்கிய பயணத்தை உணர்த்துகிறது.

“நாடு முழுவதும் கல்வியைக் காவி மயமாக்கும் பணியைச் செய்து வருகிறேன். அதனை விரைவில் செய்து முடிக்க நினைக்கிறேன்‌. உலக வளர்ச்சிக்கு நமது வல்லுநர்கள் என்ன பங்களித்திருக்கின்றனர் என்று நாம் உலகிற்குச் சொல்லிக் கொடுப்போம்” என்று தீனா நாத் பாத்ரா எனும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் தத்துவவியலாளர் உயர்கல்வித்துறை ஆலோசகராகி இவ்வாறு கூறியிருப்பதை எப்படி எளிதாகக் கடந்து செல்ல முடியும்?
2016-ஜூலை 27 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மூத்த நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டு புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனைகளைப் பெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மூலம் தெளிவுபடுத்தியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஒரே அடியில் இந்திரா காந்தி நேஷனல் சென்டர் ஃபார் தி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அறங்காவலர் குழுவை மாற்றியமைத்து தனக்கு விருப்பமானவர்களை நியமித்ததை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது இவ்வத்தியாயம்.

நிதியமைச்சகம் நடத்திய பொருளாதார மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட ஜீன் ட்ரேஸ் ரயிலில் சென்று கொண்டிருக்கும்போதே பேச்சாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார். நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நேஷனல் புக் டிரஸ்ட் தலைவர் ஏ. சேதுமாதவனைப் பதவியிலிருந்து இறங்கிச் சொல்லிவிட்டு அந்த இடத்திற்கு ஆர்.எஸ்.எஸ். கருத்தியலாளர் ஒருவரை நியமித்தது மோடி அரசு.

2015-ஆகஸ்ட்3 நாளிட்டு ஏசியன் ஏஜ் பத்திரிகைச் செய்தி:-
“மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பின் மதக்கலவரங்கள் அதிகரித்துவிட்டன; 2015ன் முதல் 6 மாதங்களை அதற்கு முந்தைய ஆண்டின் 6மாதங்களோடு ஒப்பிடும்போது மதக் கலவரங்கள் அதிகரித்திருக்கின்றன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.”

2015-அக்டோபர் 29 அன்று மதச்சார்பின்மைக்காக வீரமாகப் போராடி வரும் சமஹத் அமைப்பின் பதாகையின் கீழ் திரண்ட 53 வரலாற்றியலாளர்கள் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டனர் இது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவரை நிகழ்ந்திராதது. பலர் பல விருதுகளைத் திரும்ப மத்திய அரசிடமே கொடுத்ததும் நிகழ்ந்தது.

இந்திரா காந்தி தேசியக் கலைகளின் மையத்தின் அறங்காவலர் குழு மாற்றியமைக்கப்பட்ட போது அதன் தலைவரான இந்தியாவின் வெளியுறவுத் துறையின் மதிப்புமிக்க தூதுவராக இருந்த சின்மயா காரேகான் நீக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ்‌ ஆதரவாளர் ராம் பகதூர் ராய் நியமிக்கப்பட்டார்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அமுலாகும் திட்டங்களைக் குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நடத்திய ஒரு சர்வேயில் கிடைத்த தகவலாக இந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டவை அதிர்ச்சி தருகின்றன. அவை: “பாடப் புத்தகத்தில் மாற்றம் செய்வது; சூரிய நமஸ்காரம்; பசுவதை கண்காணிப்பு; ஆர்.எஸ்.எஸ்‌ ஷாகாக்களில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதன் மீதிருந்த தடையை நீக்குவது; நகரங்களின் பெயர்களை மாற்றுவது; நிறுவனங்களின் பெயர்களை மாற்றுவது”

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் படுகொலைக்கு நியூயார்க் டைம்ஸ் நேரடியாக குற்றம் சாட்டியது இந்தியப் பிரதமர் பதவிக்கு வெட்கக்கேடானது. ஆனால் அவருக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை. மருத்துவர் நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே ஆகியோரைக் கொன்ற ‘சனாதன் சன்ஸ்தா’ அமைப்பே கௌரி லங்கேஷையும் சுட்டுக் கொன்றது. சனாதன் சன்ஸ்தா என்பதும் சங் பரிவாரம் என்னும் நிலையில் பிரதமரிடம் என்ன பதிலை எதிர்பார்க்க முடியும். வழக்கமான கள்ள மௌனம்தான்.

2018ல் இறுதி ஆட்டம் எனும் அத்தியாயத்தில் 2014ல் அடைந்த தேர்தலில் அடைந்த பலன்களை 2019ல் அடைவதிலும், ஒரு கட்சி ஆட்சி முறையை அமைப்பதிலும் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார் மோடி. சுருக்கமாகச் சொன்னால் 2025ல் நடக்கவிருக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் நூற்றாண்டுக்கு இந்தியாவைத் தயார் செய்கிறார் என்னும் நூலாசிரியரின் வார்த்தைகள் அர்த்த முக்கியத்துவம் வாய்ந்தவை எனின் மிகையன்று.

குஜராத் பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குஜராத் அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியச் சுதந்திரதினப் பவளவிழாவை முன்னிட்டு விடுவிக்கப் பட்டிருப்பதும் அவர்களுக்கு மலர்மாலையும் இனிப்பும் கொடுத்து கொண்டாடியிருப்பதும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. இது சட்டப் போராட்டம் நடத்திய பில்கிஸ் பானுவிற்கு மட்டுமல்லாமல் சட்டத்தை நம்பும் அனைவருக்குமே மாபெரும் அதிர்ச்சிதான். அதைவிட கூடுதலான அதிர்ச்சி சட்டப் போராட்டம் நட்த்திய சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத், மற்றும் காவல் துறை உயர் அலுவலர் சிரீ குமார் ஆகியோர் சர்வாதிகாரமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதன் மூலம் ஜனநாயகத் தூண் இடிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் “ஆர்.எஸ்.எஸ். சார்புடைய தன்னார்வத் தொண்டு நிறுவனம் கல்கத்தாவில் நடத்திய நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் கே.கே. ஷர்மா தன் சீருடையிலேயே கலந்து கொண்டது எப்படி? என் எழுப்பியிருக்கும் கேள்வி ஒவ்வொரு இந்தியரும் எழுப்ப
வேண்டிய கேள்வி தானே!

தி டெலிகிராப் பத்திரிகையில் 2018-மார்ச் 11ல் “இந்தியாவின் புவியியல் பரப்பில் 96 சதவீதத்திற்கும் மேலான இடங்களில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுவதாக அதன் இணை பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால் கூறியதாகக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது‌ம் எச்சரிக்கை கொள்ள வேண்டியதும் ஆகும். மேலும் நாட்டிலிருக்கும் 37190 இடங்களிலுள்ள பூங்காக்களில் 58976 ஷாகாக்களை தினசரி நடத்துவதாகக் கூறும் அதன் ஆண்டறிக்கை புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.ஸும் வன்முறையும் எனும் அத்தியாயத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் மதவெறி வன்முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை அதன் ஆக்டோபஸ் கரங்கள் நச்சு விதைகளைத் தூவியபடியே வளர்ந்து வருகிறது. இது மனிதகுலத்திற்கே ஆபத்தானது.

கலவரம் குறித்து டொனால்ட் ஈ. ஸ்மித் “உயிர்களையும் உடைமைகளையும் அதிகம் இழப்பவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்தான்‌.” எனக் குறிப்பிடுவது உள்ளங்கை நெல்லிக்கனி. 1961ல் நடைபெற்ற ஜபல்பூர் கலவரமாகட்டும், 1970ல் நடைபெற்ற பிவாண்டி கலவரமாகட்டும் 1979ஆம் ஆண்டு நடைபெற்ற ஜாம்ஷெட்பூர் கலவரமாகட்டும், 1982 மண்டைக்காடு கலவரமாகட்டும், 1992ல் நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பு மற்றும் இடிப்பைத்தொடர்ந்த கலவரமாகட்டும், 2002 கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்த குஜராத் கலவரமாகட்டும் ஸ்மித்தின் கூற்றே காட்சிகளாயின.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் சந்ததிகளாக சங் பரிவார காவிக் கும்பலை அம்பலப்படுத்துகிறார் நூலாசிரியர். இந்தியாவின் மாநிலங்களின் தன்மைகளுக் கேற்ப பற்பல அவதாரங்களில் வலம் வரும் இந்துத்துவா அமைப்புகளின் பட்டியல் மிக நீண்டது. அவை ஒவ்வொன்றுமே மதவெறி என்னும் நஞ்சு தேங்கிய கொடுக்குகளைக் கொண்டவை. அனைத்துக்கும் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். செயல்படும் விதத்தையும் ஆதாரமான நிதியைக் கையாள்வது குறித்தும் விரிவாகக் குறிப்பிடும் நூலாசிரியர் இறுதியில் “ஆர்.எஸ்.எஸ்தான் நாட்டிலேயே மிகப் பெரிய பணக்கார அமைப்பு என்கிறார்.

பின்னிணைப்பாக நூலாசிரியர் தரும் 200 பக்கங்கள் முக்கிய ஆவணங்கள். ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல் என்பதற்கான அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள். ஆர்.எஸ்.எஸ். தோன்றியதிலிருந்து அதன் சர்சங்சாலக்குகள் என உயர் பதவியை வகித்தவர்கள் கையாண்ட ஆவணங்கள் தரப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சுதந்திர இந்தியா என அரசுகளுக்கு எழுதிய கடிதங்கள் ஆவணப் படுத்தப் பட்டுள்ளன. சாவர்க்கரின் சரணாகதியாகும் மன்னிப்புக் கடிதங்கள், மகாத்மா காந்தியின் படுகொலையின் பின்னணியில் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கக் கோரிய கடிதங்கள், இந்திரா காந்தி பிறப்பித்த அவசரநிலைப் பிரகடனத்தையொட்டி கைதான ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் விடுதலை பெற வேண்டி எழுதிய கடிதங்கள் என அனைத்தும் இடம் பெற்றுள்ளன. அக்கடிதங்கள் மூலம் ஆர்.எஸ்‌எஸ். தனக்குக் காரியம் ஆக வேண்டும் என்றால் எந்த அளவிற்கும் கீழிறங்கிச் செல்லும் என்பதை உணர முடிகிறது.

நூல் நெடுகிலும் ஆதாரங்களின் அணிவகுப்பும் பின்னிணைப்பான ஆதாரங்களும் ‘ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்’ என படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்நூல் உண்மையான தேச பக்தி கொண்டோர் மற்றும் மனித நேயத்தை உயர்த்திப் பிடிப்பவர்கள் வீடுகளின் நூலக அலமாரியில் இடம் பெற வேண்டிய நூல். வரலாற்று ஆவணமாகப் பாதுகாப்பதன் மூலம் நாமும் நமது தலைமுறையும் மதச்சார்பற்ற இந்தியாவைப் படைக்க துணை நிற்கும் எனின் மிகையன்று.

– பெரணமல்லூர் சேகரன்
(கைபேசி எண்
9442145256)

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *