வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற மதவெறி வன்முறை வெறியாட்டங்கள் குறித்து தில்லிக் காவல்துறை, எவ்விதமான கூச்சநாச்சமுமின்றி மாற்றி, தவறான வழியில் நாட்டின் கிரிமினல் நீதிபரிபாலன முறையையே கேலிக்கூத்தாக்கும் விதத்தில் புலன்விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது.
மார்ச் மாதத்திலிருந்து, வட கிழக்கு தில்லியில் மிகவும் விரிவான அளவில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் குறித்தும் அதில் 55 பேர் இறந்தது குறித்தும் புலன் விசாரணை மேற்கொள்ளும் பணி, இரு சிறப்புப் புலனாய்வுக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவ்விரு குழுக்களும் பாரபட்சமான முறையில் தங்களுக்குள் முன்கூட்டியே ஒரு கதையைக் கட்டமைத்துக்கொண்டு, வேலை செய்திருக்கின்றன.
வன்முறை நடந்ததற்கான பொறுப்பை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லியில் ஷாஹீன்பாக் உட்பட பல இடங்களில் தன்னெழுச்சியாக அமைதியானமுறையில் நடைபெற்ற கிளர்ச்சிப் போராட்டங்களில் முன்னணியில் நின்று பங்காற்றியவர்கள் மீது சுமத்தியிருக்கிறது. பதிவு செய்யப்பட்டிருக்கிற முதல் தகவல் அறிக்கைகளும், குற்ற அறிக்கைகளும் ஒரே பொதுவான நூலினால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதாவது குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள்தான் அரசாங்கத்தை அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், டிரம்ப் வருகையைப் பயன்படுத்திக்கொண்டு, சாலைகளை அடைத்து, சீர்குலைவையும் வன்முறையையும் ஏற்படுத்திட, முஸ்லீம் மக்கள் மத்தியில் உணர்வுகளைத் தூண்ட, திட்டமிட்டார்கள் என்கிற முறையில் புனையப்பட்டிருக்கின்றன.
இவ்வாறாக இவர்களால் ஜோடிக்கப்பட்டுள்ள கதைக்கு ஏற்றாற்போல, உண்மைகள் திரிக்கப்பட்டிருக்கின்றன, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் பேசியவர்களில் சிலரது பேச்சை மட்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒரு கொலை வழக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள துணை குற்ற அறிக்கையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, பொருளாதார மேதை ஜெயதி கோஷ், ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ், பேராசிரியர் அபூர்வானந்த் மற்றும் ஆவணப்படத் தயாரிப்பாளர் ராகுல் ராய் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், அவர்கள் ஆற்றிய உரைகள் அல்லது அவர்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அந்த வாக்குமூலத்தின்படி, சீத்தாராம் யெச்சூரியாலும், இதரர்களாலும் மேற்கொள்ளப்பட்ட உரைகள், மக்களைத் “தூண்டி, அணிதிரட்டுவதற்கான” பொருள் கொண்டவைகளாகும்.
இதர முதல் தகவல் அறிக்கைகளிலும், குற்ற அறிக்கைகளிலும்கூட, அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, அவர்கள் கூட்டத்தினரைத் தூண்டுவிடும் விதத்தில் பங்களிப்பினை ஆற்றினார்கள் என்றோ அல்லது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களுக்கு உதவினார்கள் என்றோ குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும், எப்படியெல்லாம் தில்லிக் காவல்துறையானது தாங்கள் ஜோடித்துள்ள சாட்சியத்தையொட்டி, குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும், சாட்சிகளையும் நிர்ப்பந்தம் செய்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.
இவை அனைத்தும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களை, தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அல்லது அவர்களை மத பேதத்தை உருவாக்க முனைந்தவர்கள் என்று சித்தரிப்பதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளாகும். அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான அநீதியான சட்டத்தை எதிர்ப்பவர்களைத் தண்டித்திட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாகும்.
இதுவரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் 20 பேர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்களில் பலர் ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்திலும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் பயின்று வரும் அறிஞர்கள் மற்றும் இளம் மாணவர்கள் ஆவார்கள். இவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருப்பதன் மூலம் ஆட்சியாளர்கள் கூற விரும்புவது என்னவென்றால், தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கருத்து கூறும் எவராக இருந்தாலும் அதனை சகித்துக்கொள்ள மாட்டோம் என்றும், அவர்கள் நசுக்கப்படுவார்கள் என்பதுமேயாகும்.
வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரங்களில் இந்துக்களும், முஸ்லீம்களும் பாதிக்கப்பட்டார்கள் என்றபோதிலும், எதார்த்தத்தில் பாதிப்பின் கூர்முனையை தாங்கிக்கொண்டிருப்பது முஸ்லீம்கள்தான். எனினும், கைதுகள் நடைபெறும் விதம், அதிக அளவில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருப்பதையும், அவர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும் காட்டுகின்றன. அவர்கள் குற்றம் எதுவும் புரிந்தததாக உருப்படியான சாட்சியம் எதுவும் இல்லாத நிலையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் தூண்டிவிட்டதன் காரணமாக முஸ்லீம்கள் இந்துக்களைத் தாக்கினார்கள் என்கிற தில்லிக் காவல்துறையின் கதைக்கு இது பொருந்துகிறது. இத்தகைய தாக்குதல்களுக்கு ஆளான இந்துக்களில் சிலர் பழிக்குப்பழி வாங்கினார்கள் என்றும் தில்லிக் காவல்துறை கதைக்கிறது.
உண்மையில் வன்முறையைத் தூண்டிய கயவர்கள் எவரையும் இதுவரை தொடக்கூட இல்லை. காவல் துணை ஆணையருக்கு முன்னாலேயே, பாஜக தலைவர் கபில் மிஷ்ரா, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது நேரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியபோதிலும், அவர்மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்திட மறுத்துவிட்டது. இதேபோன்று வேறுபல பாஜக தலைவர்களும் வெறுப்பை உமிழ்ந்து பேசினார்கள். அவர்களிலும் எவர்மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. அவ்வாறு செய்தால், அது, தற்போது காவல்துறையினர் மேற்கொண்டிருக்கும் கதைக்கு, அதாவது குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள்தான் வன்முறையைத் தொடங்கினார்கள் என்கிற கதைக்கு எதிரானதாக ஆகிவிடும்.
உள்துறை அமைச்சகத்தின் ஆதரவின்கீழ், தில்லிக் காவல்துறை இவ்வாறு கிரிமினல் நீதிபரிபாலன அமைப்புமுறையையே கேலிக்கூத்தாக்கி அழித்துக்கொண்டிருக்கிறது. இவை தடுத்துநிறுத்தப்பட வேண்டியது அவசியமாகும். சமூக செயற்பாட்டாளர்கள் மீது நரவேட்டை ஆடப்படுவதைத் தடுத்திட நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக சுயேச்சையான விசாரணை நடைபெற வேண்டியிருக்கிறது. அவ்வாறில்லாவிட்டால், நீதியை நிலைநாட்ட முடியாது.
(செப்டம்பர் 16, 2020)