ஏங்கெல்ஸ் குறித்து ஒரு தொழிலாளியின் நினைவலைகள்

பிரெடரிக் லெஸ்னர்

நான் கண்ணை மூடுவதற்குள் மாபெரும் போராளியான பிரடெரிக் ஏஙகெல்ஸுடனான எனது நீண்ட கால நட்பைப் பற்றி பதிவு செய்துவிட வேண்டும். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரைப் பற்றி நிறையவே பேசப்பட்டுவிட்டது, எழுதப்பட்டுவிட்டது. என்றாலும். 1847 முதல் எனக்கு அவர் பழக்கம் என்பதால், நான் அவர் பற்றி எழுதுவது நியாயமானதுதான்.

நான் எழுதுவது நான் ஆசைப்படும் அளவிற்கு அத்தனை முழுமையாக இருக்காது. ஏங்கெல்ஸுடன் நான் பழக ஆரம்பித்து ஐம்பதாண்டுகளாகி விட்டது. நான் அனைத்தையும் எனது நினைவிலிருந்துதான் எழுதுகிறேன். எனது வயது ஒரு பெரிய தடையாக இருக்கிறது. கையும் நடுங்குகிறது. எனது நினைவலைகள் அது இருக்க வேண்டிய அளவிற்கு சிறப்பாக இல்லாமல் போகலாம். மேற்சொன்ன காரணங்களை வைத்து என்னை நீங்கள் மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

AMERICAN LEFT HISTORY: From The Pens Of Karl Marx And Friedrich Engels-Their Struggles To Build Communist Organizations-The Early Days

பரபரப்பான காலமான 1847ன் இறுதியில், லண்டனில் நான் ஏங்கெல்ஸை, (மார்க்ஸையும் தான்) முதன்முதலாகச் சந்தித்தேன். கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் சொஸைட்டியில்தான் அவர்களைச் சந்தித்தேன். அந்தக் காலகட்டத்தில் அது மட்டும்தான் இயங்கி வந்தது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் முன்னணியில் நின்றது. ( பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்த சொஸைட்டி ஒரு சாதாரண கிளப்பாக சிதைந்து போனது.) இன்றைய சர்வதேச தொழிலாளர்கள் இயக்கம் துவக்கப்பட்ட அந்த மறக்க முடியாத நாளில்தான் நான் அவர்களைச் சந்தித்தேன். புதிய இயக்கத்திற்கான கொள்கைகள், நடைமுறைத் தந்திரங்கள் ஆகியவற்றை இறுதி செய்வதற்காக மார்க்ஸ், ஏங்கெல்ஸ், டபிள்யூ. உல்ஃப் ஆகியோர் பெல்ஜியம் தோழர். டெடெஸ்கோவுடன் லண்டன் வந்திருந்தனர். இந்த கம்யூனிஸ்ட் காங்கிரஸில்தான் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதும் பொறுப்பு மார்க்ஸ், ஏங்கெல்ஸிடம் தரப்பட்டது என்பதை இப்போது உலகமே அறியும்.

1847, 1848ல் வெளிவந்த டொயிட்ஷே- ப்ரூசெலர் ஜெய்டுங்கின் மூலம் நான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் பற்றி ஏற்கனவே அறிவேன். ஏங்கெல்ஸ் எழுதிய இங்கிலாந்தில் உழைக்கும் வர்க்கத்தின் நிலை என்ற புத்தகம் (இதன் முதல் பதிப்பு 1845ல் வந்தது) லண்டன் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் சொஸைட்டியில் விற்கப்பட்டு வந்தது. நான் வாங்கிய முதல் புத்தகம் அதுதான்.  அதன் மூலம்தான் நான் தொழிலாளர் இயக்கம் பற்றிய எனது முதல் பார்வையைப் பெற்றேன்.  அந்த காலகட்டத்தில் வந்த வைட்லிங்கின் Guarantees of Harmony and Freedom  என்ற புத்தகத்தின் மூலமாகவும் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

மார்க்ஸ், ஏஙகெல்ஸ், உல்ஃப் ஆகியோர் லண்டன் வந்தது கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் சொஸைட்டி உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்களுக்கும் பெரிய உற்சாகத்தை அளித்தது. இந்தக் கூட்டம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது பெரும் நம்பிக்கையையம் அளித்தது. இந்தக் கூட்டத்தின் விளைவாக கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியானது எனது கூற்றினை நிரூபிக்கிறது. 

வெளித் தோற்றத்தில் ஏங்கெல்ஸ் மார்க்ஸிடமிருந்து மாறுபட்டு இருந்தார். அவர் ஒல்லியாக உயரமாக இருப்பார். அவரது நடை வேகமாக இருக்கும், சுருக்கமாக, ஆணித்தரமாகப் பேசுவார். எப்போதும் ராணுவ வீரனைப் போல நிமிர்ந்து நிற்பார். மிகவும் கலகலப்பானவர்.  அவரோடு பழகும் எவருக்கும் மனதில், தான் மிகப் பெரிய ஒரு அறிவாளியுடன் பழகுகிறோம் என்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

புதியவர்களிடம் ஏங்கெல்ஸ் எளிதாக மனம் விட்டுப் பழகமாட்டார். அவரது முதுமையில் இந்த குணம் மேலும் அதிகரித்தது. அவர் பற்றி உங்களுக்கு ஒரு சரியான கருத்து உருவாக வேண்டும் என்றால் அவருடன் நீங்கள் நன்கு பழகியிருக்க வேண்டும். ஏனெனில் தான் முழுமையாக அறிந்த நண்பர்களிடம் மட்டுமே அவர் நெருக்கமாகப் பழகுவார்.

அவர் முன்னிலையில் உங்களால் பாசாங்கு செய்ய முடியாது. அவரிடம் கதையடிக்கிறோமா, உண்மையை மறைக்கிறோமா என்பதை உடனே கண்டுபிடித்து விடுவார். மனிதர்களை மிகச் சரியாக எடை போடுவார் ஏங்கெல்ஸ். ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் தவறியிருக்கலாம் ….

ஏங்கெல்ஸை 1843 முதல் அறிந்தவரான அவரது ஆங்கிலேய நண்பரும், சார்டிஸ்ட் பத்திரிகையான தி நார்தன் ஸ்டாரின் ஆசிரியருமான ஜார்ஜ் ஜீலியன் ஹார்னேயின் கூற்றைச் சொல்லாமல், ஏங்கெல்ஸ் பற்றிய சித்திரம் முழுமை பெறாது.  ஏங்கெல்ஸ் காலமான போது ஹார்னே பின்வருமாறு எழுதினார். “ 1843ல் ஏங்கெல்ஸ் பிராட்ஃபோர்டிலிருந்து லீட்ஸிற்கு வந்து தி நார்த் ஸ்டார் அலுவலகத்தில் என்னைப் பற்றி விசாரித்தார். ஒரு சிறுவனின் இளமை ததும்பும் முகம் கொண்ட உயரமான அழகான இளைஞன். ஜெர்மனியில் பிறந்து படித்திருந்தாலும், அவரது ஆங்கிலம் அப்போதே மிக சுத்தமாக இருந்தது. தான் தி நார்தன் ஸ்டாரின் வாசகன் என்றும் சார்டிஸ்ட் இயக்கத்தில் ஆர்வம் கொண்டவன் என்றும் அவர் கூறினார். இப்படியாக எங்களது நட்பு ஐம்பதாண்டுகளுக்கு முன் ஆரம்பித்தது,”

தன் அத்தனை வேலைகளுக்கு நடுவிலும், ஏங்கெல்ஸால் எப்போதும் தன் நண்பர்களுக்காக நேரம் ஒதுக்க முடிந்தது என்று ஹார்னே எழுதுகிறார். அவரது பரந்த படிப்பும், செல்வாக்கும் அவரை ஒதுங்கி நிற்கச் செய்து விடவில்லை. மாறாக 75 வயதிலும்,  தம் 22வது வயதில் இருந்ததைப் போலவே மிக அடக்கமாக, பிறரது உழைப்பிற்கு அங்கீகாரம் தருபவராக இருந்தார். அசாதாரண விருந்தோம்பல் குணமுடையவர். நகைச்சுவைகளை ரசிப்பவர். அவரது சிரிப்பு தொற்றுநோய் போல் பரவும். எந்த ஒரு உரையாடலிலும் ஆத்மார்த்தமாக ஈடுபடுவார். அவரது விருந்தினர்கள் ஓவனைட்டுகள். சார்ட்டிஸ்டுகள். தொழிற்சங்கவாதிகள். சோஷலிஸ்டுகள் என யாராக இருந்தாலும். மிக சகஜமாக உணரும்படி நடந்து கொள்வார்.

Frederick Lessner Internet Archive
Frederick Lessner Internet Archive

1848 ஜுன் இறுதியில் நான் லண்டனிலிருந்து கொலோன் வந்ததிலிருந்து எனக்கும், ஏங்கெல்ஸ், மார்க்ஸிற்குமான உறவு ஆரம்பித்தது. அங்குதான் நான் ரெய்னீஷ் ஜெய்டுங் ஆசிரியர் குழுவிற்கு அறிமுகம் ஆனேன். நான் ஒரு தையல் தொழிலாளி என்பதை ஏங்கெல்ஸ் அறிவார். எனவே அவர் என்னைத் தனது ஆஸ்தான தையல்காரராக அறிவித்தார். ஆனால் அவருக்கு நான் செய்து தந்ததெல்லாம் அவரது சில ஆடைகளை சரிசெய்து தந்தது தான். மார்க்ஸ், ஏஙகெல்ஸ் இருவருமே உடைகளுக்கு பெரிய அளவு முக்கியத்துவம் தரமாட்டார்கள். அன்றைய அவர்களது நிதிநிலமையும் அத்தனை பிரமாதமாக இல்லை.

நான் அப்போது வயதில் மிக இளையவன். அதனால் எல்லாவற்றிலும் முந்திக் கொண்டு போய் நிற்பேன். எனவே நாங்கள் பெரும்பாலான முக்கியமான கூட்டங்களில் எல்லாம் சந்தித்துக் கொள்வோம்.  அந்த சமயங்களில் சக போராளிகளாக வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வோம். எங்களிடையே பழக்கம் அப்போது குறைவு என்றாலும், இந்த இரு அபூர்வமான மனிதர்களைப் பார்த்து வியந்தேன். வருங்காலங்களில் அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்வோம் என்று நினைத்தேன்.

நிலவி வரும் சமூகம் பற்றிய அவர்களது புரிதலின் துல்லியத்தை கம்யூனிஸ்ட் அறிக்கை மிகத் தெளிவாகக் காட்டியது. அதோடு, வர்க்க முரண்பாட்டை சாதாரணத்  தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிதாக விளக்கிய அவர்களது திறமையையும் காட்டியது. ஆனால் ரெய்னீஷ் ஜெய்டுங்கில் தான் அவர்கள் தங்களது அறிவுத் திறனோடு, தங்களது வெல்ல முடியாத மனஉறுதியையும் காட்டினார்கள்.

கறுப்பு-வெள்ளை எதிர்புரட்சியினர் ( பிருஷ்யக் கொடியின் நிறம் கறுப்பு – வெள்ளை) விரைவிலேயே தாம் எத்தகைய எதிரிகளோடு மோதுகிறோம் என்று உணர்ந்தனர். ரெய்னிஷ் ஜெய்டுங்கை ஒழிக்க தம்மால் இயன்றது அனைத்தையும் செய்ய ஆரம்பித்தனர்.  இதில் வெற்றி கிடைக்காத போது, பத்திரிகையை முடக்க மேலும் கடுமையான நடவடிக்கைகளில் இறங்கினர். பிப்ரவரி 7 அன்றும், பிப்ரவரி 8 அன்றும், ரைன் கமிட்டிக்கு எதிராக இரு வழக்குகள் போடப்பட்டன. இரண்டு வழக்கு விசாரணைகளிலும் நான் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன். கறுப்பு-வெள்ளை எதிர்புரட்சி எவ்வளவு தீரத்துடன் எதிர்க்கப்பட்டது என்பதைக் கண்டேன்.  வழக்கு விசாரணயின் போது, எதிரிகளாலேயே இந்த இரண்டு மனிதர்களையும் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை !

பத்திரிகை பலவந்தமாக நிறுத்தப்பட்டு, மார்க்ஸிற்கு தடை விதிக்கப்பட்ட பிறகு, பத்திரிகையின் ஆசிரியர் குழுவினர் பல திசைகளுக்கும் பிரிந்து சென்றனர். மார்க்ஸ் பாரீஸ் சென்றார். ஏங்கெல்ஸ் அரசியலமைப்பிற்கான இயக்கம் நடந்து கொண்டிருந்த ஃபால்ஸிற்கு (ஜெர்மனியில்) சென்றார்.

Marx and socialism: A critical evaluation – World Socialist Movement

பாடனில் புரட்சி முறியடிக்கப்பட்ட பிறகு, ஏங்கெல்ஸும், மற்ற பல போராளிகளும் சுவிட்சர்லாந்து தப்பியோட நேர்ந்தது. அஙகு அவர் மிகக் குறைந்த காலத்திற்கே இருந்தார். பின்னர் அங்கிருந்து லண்டன் சென்றார். அங்கு மார்க்ஸையும், ஏராளமான புலம்பெயர்ந்த ஜெர்மானியர்களையும் சந்தித்தார்.

இருவருக்குமே வேலையில்லாததால், ஏங்கெல்ஸ், மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தினரும் லண்டனில் மிகவும் சிரமப்பட்டார்கள். எலினார் மார்க்ஸ் இந்த கடினமான காலகட்டத்தைப் பற்றி தனது பல கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காலகட்டத்தில்தான், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லீப்னெஃக்ட், வில்ஹெம் உல்ஃப் மற்றும் பல தோழர்கள்,  அப்போது பல்வேறு அரசியல் போக்குகளைச் சார்ந்த புலம்பெயர்ந்தோரும் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் எஜுகேஷன் சொஸைட்டியில் தீவிரப் பங்காற்றினார்கள். அப்போதைய அரசியல் நிகழ்வுகள், எதிர்காலம், புலம்பெயர் வாழ்க்கை பற்றியெல்லாம் பலவிதமான மாறுபட்ட கருத்துகள் அங்கு எழுந்தன. இதன் காரணமாக எழுந்த மனக்கசப்பின் விளைவாக விரைவிலேயே மோதல் ஏற்பட்டது….

எனது நினைவு சரியாக இருக்குமானால், ஏங்கெல்ஸ் 1850ல் மான்செஸ்டரில் தமது தகப்பனார் பங்குதாரராக இருந்த ஒரு பஞ்சாலையில் வேலைக்குச் சேருவதற்காக லண்டனை விட்டு வெளியேறினார்.  பின்னர் 1870ல்தான்  மார்க்ஸுடன் இணைந்து பணியாற்ற மான்செஸ்டரை விட்டு லண்டன் வந்தார்.

மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் வில்ஹெம் உல்ஃப், சாமுவெல் மோர், கார்ல் ஷோர்லெம்மர் ஆகியோருடன்தான் அதிகமாகப் பணியாற்றினார். அவ்வப்போது மார்க்ஸைப் பார்க்க லண்டன் வருவார். அல்லது மார்க்ஸ் அவரைப் பார்க்க மானசெஸ்டர் செல்வார். எனினும் இவ்வாறு நேரில் சந்திப்பது அபூர்வமாக, குறுகிய கால சந்திப்பாகவே இருந்தது. கடிதப் போக்குவரத்துதான் மிக உயிரோட்டமாக நடந்தது.

1859ல் நான் அவரது ஒரு புகைப்படத்தைக் கேட்டு ஏங்கெல்ஸிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அற்புதமான கடிதத்தோடு, புகைப்படத்தை அனுப்பி வைத்தார். அந்தக் கடிதத்திலிருந்து பலவற்றை இங்கு மேற்கோள் காட்ட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் எவ்வளவோ தேடியும் அந்தக் கடிதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

1870ல் ஏங்கெல்ஸ் தமது மனைவியுடன் லண்டனுக்குக் குடியேறினார். மார்க்ஸின் புகழ்பெற்ற பிரிம்ரோஸ் ஹில் வீட்டிற்குப் பக்கத்தில்தான் அவரது வீடு.

1870ல் வெடித்த பிரான்ஸ் – பிருஷ்ய யுத்தம் ஏங்கெல்ஸின் ஆர்வத்தைக் கிளப்பி விட்டது. அவருடைய பெரும்பாலான நேரத்தை அதுவே எடுத்துக் கொண்டது. இந்த யுத்தம் பற்றி பால் மால் கெஜட்டில் அவர் எழுதிய கட்டுரைகள் அவரது ராணுவம் குறித்த அறிவை நிரூபித்து, அவருக்கு ‘ஜெனரல்‘ என்ற பட்டத்தையும் பெற்றுத் தந்தன. பிரெஞ்சு ராணுவத்தின் பல தோல்விகளை அக்கட்டுரைகளில் அவர் முன் கணித்துக் கூறினார். பிரெஞ்சின் வடதிசைப் படைகளை ஜெர்மன் ராணுவம் சுற்றி வளைக்கத் துவங்கிய போது, மக்மோஹன் பெல்ஜியத்தை உடைப்பதில் வெற்றி காணாவிட்டால், சேடன் பகுதியில் உள்ள ஜெர்மன் ராணுவுத்தின் பிடி இன்னும் இறுகி, அவர் பின்வாங்க நேரிடும் என்று குறிப்பிட்டார். இரண்டு வாரங்கள் கழித்து ஏங்கெல்ஸ் சொன்னது போலவே நடந்தது.

1971 பாரீஸ் கம்யூன் தோல்விக்குப் பிறகு சர்வதேச உழைப்பாளர் கழகத்தின் பொதுக்குழுவின் நிலை மிக மோசமாகி விட்டது. குறிப்பாக கம்யூனின் சர்வதேச உறுப்பினர்கள் பலரும் லண்டனுக்குப் புலம்பெயர்ந்ததால், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நிலை மிகவும் கடினமாக இருந்தது.

ஹங்கேரியத் தோழரான லியோ ஃபிராங்கலை மறக்கவே முடியாது. அவர் கம்யூன் அரசாங்கத்தின் உறுப்பினராக இருந்தவர். தீப்பெட்டி விற்பவர் போல் வேடமிட்டு, பிருஷ்ய எல்லையை எப்படியோ கடந்து தப்பி வந்துவிட்டார். தமது நோக்கம் பற்றி தெளிவாக உணர்ந்திருந்த சிலரில் அவரும் ஒருவர். பொது மன்னிப்பிற்குப் பிறகு, ஃபிராங்கல் மீண்டும் பாரீஸ் திரும்பி, அங்கு தமது பிரச்சாரப் பணியைத் தொடர்ந்தார். சில ஆண்டுகளுக்கு முன்புதான் பாரீஸில் காலமானார். நான் ஒரு நல்ல நண்பரை இழந்தேன். கட்சி தனது சிறந்த ஊழியர்களில் ஒருவரை இழந்தது. அவர் நாமம் வாழ்க !

பல்வேறு அரசியல் போக்குகளைச் சார்ந்த கம்யூன் புலம்பெயர்ந்தோர்., ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டு, கம்யூனின் தோல்விக்கு ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்திக் கொண்டு இருந்தனர். அவர்களது நம்பிக்கைகள் பொய்த்துப் போனது. கிட்டத்தட்ட அனைவருமே பட்ட துன்பங்கள் ஆகியவைதான் மற்ற அனைத்தையும் விட இந்த மோதல்களுக்கு முக்கிய காரணங்கள். முதலாளித்துவ பத்திரிகைகளின் கீழ்தரமான தாக்குதல்கள், கம்யூன். அதன் முக்கியத்துவம் பற்றிய பொதுவான அறியாமை, இவை தவிர அராஜகவாதிகளின் தூண்டில் எல்லாமே சேர்ந்து அந்த சர்வதேச இயக்கத்திற்கு எதிராக சதி செய்வது போல இருந்தது.

ஹேக் காங்கிரஸின் முடிவின்படி பொதுக் குழு நியூயார்க்கிற்கு மாற்றப்பட்டதால். மார்க்ஸ், ஏங்கெல்ஸிற்கு தமது பொருளாதார ஆய்வுகளை நடத்த நிறைய நேரம் கிடைத்தது. மார்க்ஸ் தனது மகத்தான படைப்பான மூலதனம் எழுதுவதில் முழுமையாக கவனம் செலுத்தினார். அப்போதிலிருந்து ஏங்கெல்ஸ் அகிலத்திற்கு செயலாளராகி விட்டார். நடைமுறைப் பணிகள், கம்யூனிஸ்ட் அறிக்கையின் மொழிபெயர்ப்புகள், மற்ற கட்டுரைகளின் மொழிபெயர்ப்புகள், ஆகியவற்றைத் திருத்துதல், மட்டுமன்றி. பல முக்கியமான நிகழ்வுகளுக்கான அறிக்கைகளைத் தயாரித்தல் என்று ஏங்கெல்ஸிற்கு நேரம் சரியாக இருந்தது. இத்தனையையும் மீறி நமது தோழர் எப்படியோ நேரம் கண்டுபிடித்து ஏராளமான அறிவியல் படைப்புகளை எழுதியிருப்பது அவரது அசாதாரணமான திறமையையும். அந்தப் பணி மீது அவருக்கு இருந்த பெருவிருப்பத்தையும் காட்டுகிறது. 

1878ல் ஏங்கெல்ஸ் வாழ்வில் பெரும் சோகமான ஒரு நிகழ்வு நடந்தது. சின் –ஃபின் இயக்கத்திற்காக பாடுபட்டவரான அவரது மனைவி மரணமடைந்தார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. மனைவியின் மரணம் ஏங்கெல்ஸிற்கு மிகப் பெரிய அடியாக இருந்தது.

பிறகு மார்க்ஸ் வீட்டிலும் இதே மாதிரியான துக்க நிகழ்வுகள் – மார்க்ஸின் உடல்நலக் குறைவு, அவரது மனைவி மற்றும் மகளின் உடல்நலக் குறைவுகள், பின்னர் அவர்கள் இருவரின் மரணங்கள்.

1883 மார்ச்சில், ஓரளவு எதிர்பார்த்திருந்த, மார்க்ஸின் மரணம் பற்றிய துயரமான செய்தி வந்தது.

ஏங்கெல்ஸ் எனக்கு பின்வருமாறு கடிதம் எழுதியிருந்தார்.

“லண்டன், மார்ச் 15, 1883

அன்புள்ள லெஸ்னருக்கு,

நமது பழைய நண்பர் மார்க்ஸ் நேற்று மூன்று மணிக்கு மிக அமைதியாக மென்மையாக நிரந்தரமாக கண் மூடிவிட்டார். உள் ரத்தக் கசிவுதான் மரணத்திற்கான காரணம். 

இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமை 12 மணிக்கு நடைபெறும்.

துஸ்ஸி நீ வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறாள்.

அவரசமாக எழுதுவதற்கு மன்னிக்கவும். 

உன்,

 எஃப். ஏங்கெல்ஸ்“

மார்க்ஸின் மரணத்திற்குப் பிறகு, மார்க்ஸின் திருமணத்திலிருந்து அந்தக் குடும்பத்தின் சுகதுக்கங்களில் பங்கேற்று அவர்கள் கூடவே இருந்த லென்சன் டெமூத், ஏங்கெல்ஸ் வீட்டு நிர்வாகத்தை ஏற்றார். அவர் 1890 நவம்பர் 4 அன்று மரணமடைந்தார். அதுவும் ஏங்கெல்ஸிற்கு பேரிழப்பு. நல்லவேளையாக, சிறிது காலத்திலேயே, காட்ஸ்கியின் முன்னாள் மனைவியான திருமதி. ஃபிரேபெர்ஜர் ஏங்கெல்ஸ் வீட்டைப் பார்த்துக் கொள்ள வியன்னாவிலிருந்து லண்டனுக்கு வந்துவிட்டார்.

புதிய தொழிற்சங்க இயக்கத்தில் ஆர்வமாகப் பங்கேற்று, எட்டு மணிநேர வேலை இயக்கத்தை ஆதரித்த ஏங்கெல்ஸ், தான் மட்டும் இரவு முழுவதும் கண்விழித்து, ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் உழைத்தார் என்பது யாருக்குத் தான் தெரியாது? தனது முதிய வயதையும் பொருட்படுத்தாது அவர் மே தினக் கொண்டாட்டங்கள் அனைத்திலும் பங்கேற்றார். மேடையாகப் பயன்படுத்தப்படும் மாட்டுவண்டியில் கஷ்டப்பட்டு ஏறினார்.  அந்த கூட்டங்களைத் தொடர்ந்து நடக்கும் மே தின பார்ட்டிகளை யாரால்தான் மறக்க முடியும்?….

அவரது மரணம் வரை, உழைப்பதற்கான ஈடுபாடும், வேகமும் அவரிடம் இருந்தன. பல அயல்மொழிகளிலும் அவருக்கு இருந்த புலமை அனைவரும் அறிந்ததுதான். அவருக்கு பத்து மொழிகள் முழுமையாகத் தெரியும். எழுபது வயதிற்குப் பிறகு, இப்சனையும், க்யூலாண்டையும் மூலமொழியிலேயே படிக்க வேண்டும் என்பதற்காக நார்வீஜிய மொழியைக் கற்க ஆரம்பித்தார்.

மார்க்ஸைப் போலவே ஏங்கெல்ஸும் பொதுக் கூட்டங்களில் அதிகம் உரையாற்றியதில்லை. கடைசியாக 1893ல் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். ஜுரிச், வியன்னா, பெர்லின் காங்கிரஸ்களில் உரையாற்றி இருக்கிறார். ஜுரிச்சில் தனக்குக் கிடைத்த வரவேற்பில் தான் மிகவும் நெகிழ்ந்து போனதாக பின்னர் பலமுறை என்னிடம் கூறியிருக்கிறார். ஆஸ்ட்ரியா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அவர் மேற்கொண்ட பயணங்கள் நமது கருத்துகளுக்குக் கிடைத்த வெற்றிகள். புதிய ஜெர்மனியை, தொழிலாளர்களின் ஜெர்மனியைப் பார்க்க  மார்க்ஸ் உயிரோடு இல்லையே என்று அடிக்கடி வருந்துவார்.

தனது இறுதிக்காலம் வரை தனது அனைத்து செயல்களிலும் அமைதி, உறுதிப்பாடு. எளிமை. அர்ப்பணிப்பு ஆகியவற்றோடு இயங்கினார். எந்த விஷயம் பற்றி அவரிடம் கேட்டாலும், சுருக்கமாக. அதே சமயம்  நம்பகமான பதிலைத் தருவார்.  கேட்பவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், எப்போதும் தன் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுவார்.

கட்சியில் எந்த விஷயத்திலாவது உடன்பாடு இல்லாவிட்டால், அதை எந்தத் தயக்கமும் இன்றி உடனடியாகத் தெரிவிப்பார். எதிலும் சமரசம் செய்து கொள்ளமாட்டார். அவரைத் தேடி பலரும் வருவார்கள். கட்சித் தோழர்களும், மற்றவர்களும் வந்து கொண்டே இருப்பார்கள்.  எண்பதுகளில் சோஷியல் டெமாக்கிரட் பத்திரிகை ஜுரிச்சிலிருந்து லண்டனுக்கு மாறிய பிறகு, அவரைத் தேடி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அவரது வீடு எப்போதும், எல்லோருக்கும் திறந்தே இருக்கும். 

மார்க்ஸின் மரணத்திற்குப் பிறகு நான் ஏங்கெல்ஸை அடிக்கடி சென்று பார்ப்பேன். மார்க்ஸ் காட்டிய அதே உறுதியை அவரும் காட்டுவார். அவரைத் தேடி வருபவர்கள் அதிகமாகிக் கொண்டே போன போது, நான் அடிக்கடி போவதை சற்று குறைத்துக் கொண்டேன். உடனடியாக அவர், “நீ ஏன் முன்பு போல் அடிக்கடி வருவதில்லை?“ என்று என்னைக் கேட்டார்.

Monthly Review | The Return of Engels

1895 கோடையில், தனது உடல் ஆரோக்கியத்திற்காக ஏங்கெல்ஸ் (கடைசி முறையாக) ஈஸ்ட்போர்ன் சென்றார். ஜுலை இறுதியில் எந்த முன்னேற்றமும் இன்றித் திரும்பி வந்தார். இது குறித்து மிகவும் கவலைப்பட்டு, துஸ்ஸி (மார்க்ஸின் மகள் எலினாரை வீட்டில் செல்லமக துஸ்ஸி என்று அழைப்பார்கள் – மொழிபெயர்ப்பாளர் ) எனக்கு கடிதம் எழுதியிருந்தாள். சிறிது நாட்களுக்கு நாம் அடிக்கடி போய் அவரைப் பார்த்து தொந்திரவு செய்யக் கூடாது என்று நான் முடிவு செய்தேன். ஏனெனில், இயற்கையாகவே மிகவும் உணர்ச்சிவசப்படும் அவர், என்னைப் பார்த்தால் அதிகமாக உணர்ச்சிவசப் படுவார். இதனால், லண்டன் திரும்பி வந்தபிறகு, அவரை உயிரோடு நான் பார்க்கவே முடியாது போனது. ஆகஸ்ட் 5ம் தேதி, ஏங்கெல்ஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால், நான் அவரைப் பார்க்க விரும்பினால், உடனடியாகப் பார்க்க வரவேண்டும் என்று பெர்ன்ஸ்டீன் (ஜெர்மன் புரட்சியாளர். ஏங்கெல்ஸின் மரணத்திற்குப் பிறகு திரிபுவாதியாக மாறி, மார்க்சியத்தில் திருத்தங்கள் வேண்டும் என்றவர்)  மூலம் தகவல் வந்தது. அப்போதும் நான் அவர் விரைவில் மரணமடைந்து விடுவார் என்று நினைக்கவில்லை. மறுநாள் சீக்கிரமாகப் போய்ப் பார்க்கலாம் என்றிருந்தேன். 

ஆனால், எனது நண்பர் ஆகஸ்ட் 5 அன்று இரவு 11 -12 மணியளவில் மரணமடைந்து விட்ட அதிர்ச்சியான தகவல் திருமதி. ஃபிரேபெர்ஜர் மூலமாக வந்தது.

இந்த எதிர்பாராத சோகமான செய்தி என் மனதில் ஏற்படுத்திய துக்கத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. .. நான் உடனடியாக அவரது இல்லத்திற்குச் சென்றேன். 1883 மார்ச் 15 அன்று எங்கள் நண்பர் மார்க்ஸ் கண்மூடிப் படுத்திருந்ததைப் போலவே ஏங்கெல்ஸ்ஸும் தன் படுக்கையில் அமைதியாக கண்மூடியிருந்தார்.

என்னை ஏங்கெல்ஸின் அறைக்கு அழைத்துச் சென்ற திருமதி. ஃபிரேபெர்ஜரால் ஏங்கெல்ஸின் கடைசி சில மணி நேரங்கள் பற்றி ஏதுவுமே சொல்ல முடியாத அளவிற்குத் துக்கம்.

தனது அஸ்தி கடலில் கரைக்கப்பட வேண்டும் என்பது ஏங்கெல்ஸின் கடைசி விருப்பம். ஆகஸ்ட் 27 அன்று நானும், எலினார் மார்க்ஸ், டாக்டர். ஈ.அவ்லிங், பெர்ன்ஸ்டீன் ஆகியோர் அதை நிறைவேற்றினோம். ஏங்கெல்ஸ் விரும்பிச் செல்லும் கோடை வாசஸ்தலமான ஈஸ்ட்போர்ன் சென்றோம். ஒரு படகை அமர்த்தி அவரது அஸ்திக் கலசத்துடன், கடலில் இரண்டு மைல் தூரம் சென்றோம்… இந்தப் படகுப்பயணம் பற்றிய என் துயரமான உணர்வுகளை என்னால் எழுத முடியவில்லை…



மார்க்ஸும், ஏங்கெல்ஸும் நம்மை விட்டுச் சென்று எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன. உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்த இரு தலைவர்களும் காட்டிய கொள்கைகளும், வழிமுறைகளும் புரிந்து கொள்ளப்பட்டு. பின்பற்றப்படுவதைக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது….

இதில் எனக்கு பெரிய திருப்தி. கோடிக்கணக்கான தொழிலாளர்களோடு இணைந்து, நம் முழக்கத்தைக் கூறி, இந்த நினைவலைகளை முடிக்கிறேன்.

“உடனடியான எதிர்காலம் சோஷலிச இயக்கத்திற்கே”

கட்டுரையாளர்:  ஜெர்மனியைச் சேர்ந்த தையல் தொழிலாளி. கம்யூனிஸ்ட் லீக்கின் உறுப்பினர். 1848 புரட்சியில் பங்கேற்றவர். மார்க்ஸ், ஏங்கெல்ஸ் இருவருக்கும் மிக நெருங்கிய நீண்ட கால நண்பர்.

ஏங்கெல்ஸ் 200 மினி தொடர் 1 : நண்பர்கள் பார்வையில் ஏங்கெல்ஸ் – பால் லஃபார்கே (தமிழில் ச.சுப்பாராவ்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *