ஒரு வானொலி நிலையத்திற்கு மிக முக்கியமானது ஒலிவாங்கி (Microphone). என்னதான் வானொலியின் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தாலும், அது சிறந்த முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டால் மட்டுமே கேட்கும் நேயர்களுக்குத் தெளிவாகப் போய்ச் சேரும். ஹாம் வானொலியும் அது போன்றதே, ஒலிபரப்பிற்கு ஹாம் வானொலிப் பெட்டி எது வைத்திருந்தாலும், நல்ல தரமான ஒலிவாங்கி இல்லையென்றால் அந்த வானொலி இருப்பதும் ஒன்றுதான் இல்லாததும் ஒன்றுதான்.

மூன்று வகை ஒலிவாங்கிகள்

ஒலிவாங்கியில் மூன்று வகைகள் உள்ளன. ஒரு பக்கம் மட்டும் ஒலி வாங்கும் வகையிலான ஒலிவாங்கி, இரண்டு புறமும் ஒலிவாங்கும் ஒலிவாங்கி, 360 கோணத்திலும் ஒலிவாங்கும் ஒலிவாங்கி. இவற்றில் அமெச்சூர் வானொலியினர் பயன்படுத்த வேண்டிய ஒலிவாங்கி ஒரு பக்கம் மட்டும் ஒலிவாங்கும் ஒலிவாங்கியாகும். மற்ற இரண்டு ஒலிவாங்கியையும் பயன்படுத்தக் கூடாது. ஆனால், இது எத்தனை ஹாம்களுக்கு தெரியும் எனத் தெரியவில்லை.

Picture Credit: https://www.thepodcasthost.com

நாம் பயன்படுத்தும் கைப்பேசி, கணினி, ஹெட் செட்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒலிவாங்கியைப் பற்றியும் அறிந்து கொள்வது அவசியம். பொதுவாக இரண்டு தன்மையுள்ள ஒலிவாங்கிகள் சந்தையில் கிடைக்கின்றன. ஏற்கனவே நாம் கடந்த பத்தியில் பார்த்தது அதன் ‘ஒலி வாங்கும் அமைப்பை பற்றி வகைகளை’, இப்பொழுது பார்ப்பது அதன் தன்மையைப் பற்றி. ஒன்று டைனமிக் ஒலிவாங்கி, இன்னொன்று கன்டன்சர் ஒலிவாங்கி. இரண்டுக்குமான முக்கிய வேறுபாடே, அதன் செயல்பாட்டில் தான் உள்ளது. கன்டன்சர் வகை ஒலிவாங்கிகள், மிகவும் மென்மையான ஒலியைக் கூட உள்வாங்க கூடியவை, இவை பெரும்பாலும், கலையகங்களிலும், வானொலி நிலையங்களிலும் பயன்படுத்தப்படும். இதன் பயன்பாட்டினைப் பொருத்து இந்த ஒலிவாங்கிகளின் அளவு வேறுபடும்.

Picture Credit: https://www.3playmedia.com

கன்டன்சர் ஒலிவாங்கிகள் நமது கைப்பேசி, ஹெட் செட் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. சமீப காலமாக, இதன் தரம் மிகவும் உயர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. காரணம், நமது ஆராய்ச்சியாளர்களின் தீவிர உழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது. ஒரு சில கைப்பேசிகளில் உள்ள இந்த ஒலி வாங்கிகளை நீங்கள் தனியாக வாங்க வேண்டுமாயின் ரூ.20,000 வரை கூட செலவு செய்ய வேண்டியிருக்கும். காரணம் அந்த அளவுக்கு அதன் தரம் அமைந்துள்ளது.

தரம்

ஹாம் வானொலியில் ஒலிபரப்பும் போது குரலினை உயர்த்திப் பேசக்கூடாது. அப்படிப் பேசும் போது உங்களின் குரல் தெளிவாகக் கேட்காது. உங்களின் குரல் தெளிவாகக் கேட்க வேண்டுமாயின், நீங்கள் கூறுவதை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகவும் மெதுவாகவும் கூறுங்கள். உங்களின் ஒலிவாங்கி சரியாக வானொலிப் பெட்டியில் பொருத்தப்பட்டுள்ளதா என்று பாருங்கள். ஒலிவாங்கிக்கும் வானொலிப் பெட்டிக்கும் இடையே இணைக்கப்பட்டுள்ள ஒயர் நல்ல தரமானதா என்பதையும் சரிபார்த்து கொள்ளுங்கள். வானொலிப் பெட்டியில் இணைக்கப்பட்ட கனெக்டரில் அனைத்தும் சரியாக உள்ளதா, அந்த கனெக்டரும் தரமான ஒன்றா என்பதையும் பார்த்துக் கொள்ளுவது மிக முக்கியம்.

ஒரு சில நிலையங்கள் குறைந்த சக்தியில் ஒலிபரப்பும். அவற்றைக் கேட்பதற்குச் சக்தி மிக்க நிலையங்கள் இடையூறு செய்யும். அவற்றைக் கேட்பதற்கு அனுபவம் மிக்க ஹாம்கள் ஒரு சிலவற்றை செய்கின்றனர். ஒரு நிலையம் மட்டும் இடையூறு செய்தால் கூட கேட்டுவிடலாம், பல நிலையங்கள் இடையூறு செய்யும் போது அவற்றை எப்படிக் கேட்பது? அவற்றைக் கேட்பதற்கு ஒரே வழி, உற்று கவனித்துக் கேட்பது மட்டுமே. அனுபவம் மிக்க ஹாம அதனைத் தெளிவாக அறிவார்கள்.

தேடல்

வான் மண்டலத்தில் பல்லாயிரக்கணக்கான வானொலிகளின் ஒலி அலைகள் பயணித்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தினையும், அனைவராலும் கேட்டுவிட முடியாது. ஆனால் வானொலி அலைவரிசைகளை 24 மணி நேரமும் தேடும் பொழுது, ஒரு சில சமயங்களில் அரிதான நிலையங்கள் கூட கிடைக்கும். ஆனால் நம்மால், ஒவ்வொரு நாளும் 24 நான்கு மணி நேரமும் வானொலிகளை மட்டும் கேட்டுக்கொண்டு இருக்க முடியாது.

Picture Credit: http://www.dxsummit.fi

ஒரு சிலர் கிடைத்தற்கரிய நிலையங்களை மட்டுமே கேட்க விரும்புவர். அப்படி தேடிக் கேட்பவர்களுக்காகவே ஒரு சில இணைய தளங்கள் உள்ளன. இவற்றின் பணியே, உலகின் மூலை முடுக்குகளில் உள்ள வானொலிகளைக் கூட பட்டியலிடுவது தான். இந்த பட்டியலும் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கும். உதாரணமாக

VU3UOM 7003.7 A61AJ 14:42 05 OCT

என்று அந்த இணையதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும். இதில் VU3UOM என்பது இந்தியாவில் அந்த ஒலிபரப்பினை கேட்ட நிலையத்தின் பெயர். A61AJ என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஒலிபரப்பிய நிலையத்தின் பெயர். 7003.7 என்பது ஒலிபரப்பிய அலைவரிசை, 14.42 என்பது அந்த வானொலி, ஒலிபரப்பான நேரம் மற்றும் நாள். அவையனைத்தினையும் தெளிவாக அந்த இணைய தளங்களில்   குறிப்பிட்டுள்ளனர். இதனால் எளிதாக புதிய ஹாம் வானொலிகளைக் கேட்க முடியும்.

இதில் என்ன விஷேசம் எனில், இது போன்ற இணையதளங்களுக்குச் சென்று, புதிய ஹாம் வானொலிகளையும், அவை ஒலிபரப்பாகும் நேரத்தினையும் குறித்துக் கொண்டு நாமும் நம் நாட்டிலிருந்து அந்த ஒலிபரப்பினை கேட்க முயற்சிக்கலாம். இப்படியான தகவல்களைத் தரும் இணைய தளங்களை spotting network என்று கூறுவார்கள். புகழ்பெற்ற ஒரு சில இணைய தளங்கள் இதோ உங்களின் பார்வைக்காக. www.ac6v.com/dxlinks.htm மற்றும் www.dxsummit.fi. இது போன்ற இணையதளங்களையே எப்பொழுதும் சார்ந்திருத்தலும் கூடாது. தொடக்கக் காலத்தில் இதனைப் பயன்படுத்தலாம். அதன் பின் நாமே தேடிக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.



டி.எக்ஸ் விருதுகள்

பல்வேறு அமைப்புகள், வானொலிகளைக் கேட்பதற்கான போட்டிகளையும் வைத்து வருகிறது. அவற்றில் கலந்து கொள்வதை அமெச்சூர் வானொலிகள் பெருமையாகவே கருதுகின்றன. இந்த வகையான போட்டியின் ஊடாக சர்வதேச அளவில் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் ஒரு வகையில் உதவுகின்றன. அனைத்துலக ஹாம்கள் மத்தியில் புகழ்பெற்ற விருதாக ARRL வழங்கும் IARU எனும் அனைத்து கண்டங்களையும் கேட்கும் நேயர்களுக்கு, Worked All Continents (WAC) எனும் விருது வழங்கப்படுகிறது.

அதே போன்று Worked All States (WAS) எனும் விருதானது, அமெரிக்காவின் 50 மாநிலங்களையும் கேட்கும் ஹாம் வானொலி நிலையத்துக்கு வழங்கப்படுகிறது. DX Centuary Club (DXCC) எனும் விருதானது உலகில் உள்ள 340 நாடுகளில், 100 நாடுகளைக் கேட்கும் நேயர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் வழங்கும் அனைத்து விருதுகளைப் பற்றியும் www.arrl.org/awards எனும் முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

Picture Credit: https://alokeshgupta.blogspot.com

அடுத்து CQ Magazine எனும் மாத இதழ் வைக்கும் போட்டிகளும் அமெச்சூர் வானொலி நிலையங்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறது. World All Zones (WAZ), எனும் போட்டியில் 40 நாடுகளின் ஹாம் வானொலிகளைத் தொடர்பு கொள்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இன்னும் ஒரு சுவாரஸ்யமான போட்டியையும் இந்த இதழ் வைக்கிறது. அதாவது, A முதல் Z வரை உள்ள அனைத்து எழுத்துக்களுடன் தொடங்கும் ஹாம் வானொலிகளைத் தொடர்பு கொள்வது ஆகும். இங்கிலாந்தின் புகழ்பெற்ற வானொலி மன்றமான Radio Society of Great Britain உலகெங்கும் உள்ள தீவுகளில் ஒலிபரப்பாகும் வானொலிகளைக் கேட்பதை மையமாக வைத்து Island on the Air (IOTA) எனும் போட்டியை வைத்துவருகிறது.

தொடர்ந்து இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வதற்கு, முதலில் 100 ஹாம் வானொலிகள், 100 நாடுகள், 100 தீவுகள் போன்ற தொடக்க நிலையினருக்கான போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு புதிய அனுபவங்களை பெறலாம்.

 (தொடரும்) ■



மேலதிக தகவல்களுக்கு:

www.ac6v.com/dxlinks.htm

www.dxsummit.fi

www.arrl.org/awards

www.cq-amateur-radio.com

www.rsgbiota.org

https://alokeshgupta.blogspot.com

கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள: [email protected]

தொடர் 1ஐ வாசிக்க

http://-https://bookday.in/spectrum-war-amateur-radio-series-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-6/

தொடர் 7ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-7/

தொடர் 8ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-8/

தொடர் 9ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-9/

தொடர் 10ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-10/

தொடர் 11ஐ வாசிக்க

https://bookday.in/spectrum-war-amateur-radio-series-11/



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *