The politics of tamil short story (Ambai) article by Writer Sa. Tamilselvan. Book day website is Branch of Bharathi Puthakalayamதமிழ்ச்சிறுகதை வரலாற்றில் அதுவரை கேட்டிராத ஒரு புதிய குரலாக, 70 களில் வெடித்தெழுந்தது அம்பையின் குரல்.இன்றுவரை அக்குரல்  இன்னும் அழுத்தமாகவும் பிசிறுகள் நீங்கியும் மேலும் பக்குவப்பட்டும் சமரசமின்றிச், சந்தேகத்திடமில்லாத உறுதியுடன் ஓங்கி ஒலித்து வருகிறது.’ஓங்கி’ என்று இங்கு குறிப்பிடுவது கதைக்குள் ‘சத்தமாக’ என்கிற அர்த்தத்தில் அல்ல – வாசக மனதில் என்று கொள்ள வேண்டும்.

பாரதி,வ.வே.சு.அய்யர்,அ.மாதவய்யா ஆகிய  சிறுகதை முன்னோடிகள் மூவரும் ‘பற்றி நின்ற’ சமூக அக்கறை,சமூக விமர்சனம்,சமூக விடுதலை என்கிற பதாகையை இன்னும் புதிய அர்த்தங்களுடனும் ஆழங்களுடனும் புதிய பரிமாணங்களுடனும் தன் சிறுகதைகளில் உயர்த்திப் பிடித்திருப்பவர் அம்பை. இம்முன்னோடிகள் மூவரும் மறைந்த அடுத்த பத்தாண்டுகளில், ”சமூகத்துக்காக அல்ல, அவரவர் மனத்திருப்திக்காக எழுதுவதுதான் எழுத்து” என்று எழுந்த வலுவான போக்கை அம்பை பின் தொடரவில்லை. கலை அமைதி மிக்க அவரது படைப்புகளில் சில, சமூகத்துக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிப்பது முக்கியம் –அதற்காகச் சில சமயம் வடிவ அமைதி கெட்டாலும் பரவாயில்லை என்கிற போக்குடையவை. இந்தப்புள்ளியில், நம் சிறுகதையின் முன்னத்தி ஏர்கள் மற்றும் அம்பையின் சமகாலப் படைப்பாளிகள் பலரிடமிருந்தும் அவர் வேறுபட்டும் தனித்தும் நிற்கிறார்.

அவருடைய தலைமுறை பிறந்து வளர்வதற்கு முன்பே அவரது தாய் மற்றும் தந்தைவழிக் குடும்பத்தினர் பாலக்காட்டிலிருந்து கோயம்புத்தூருக்குக் குடி வந்துவிட்டதால் அவர் கோயம்புத்தூரில் பிறந்து,அவரது தந்தையாரின் பணி மாற்றங்கள் காரணமாக எட்டு வயதுவரை மும்பையில் வாழ்ந்து, பின்னர் இருபது வயது வரை பெங்களூருவில் வாழ்ந்து,பி.ஏ. முடித்த பிறகு சென்னை கிறித்துவக்கல்லூரி வாழ்க்கை சில காலம்.பின்னர் 11 ஆண்டுகள் டில்லியில் ஆய்வுப்படிப்பும் வேலையும் என.பிறகு 1978 முதல் இன்றுவரை மீண்டும் மும்பாய் வாழ்க்கை.பண்ருட்டியிலும் சில காலம் வாழ்ந்திருக்கிறார். இளவயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி, தமிழகத்தை விட்டு வெளியேறி இந்தியாவின் பல பாகங்களிலும் உலகின் பல நாடுகளிலும் வாழ்ந்து பார்த்த ஒரு ‘யாதும் ஊரே’ வாழ்க்கை அவருடையது.இந்த ‘வெளியேற்றம்’ குடும்பங்களையும் தமிழ் வாழ்வையும் இந்திய வாழ்வையும் ‘விலகி நின்று’ முழுதாகப் பார்க்கவும் விமர்சிக்கவும் உதவியுள்ளது.”இப்பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் கொஞ்சம் கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்க வேண்டும்’ என்பது போல சமயவேல் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.விலகி நின்று பார்த்தால்தானே எதையும் பூரணமாகப் பார்க்க முடியும்.

குழந்தைகள் பெற்று வளர்த்து ஆளாக்கி என வாழக் கூடிய வழக்கமான குடும்ப அமைப்பு தன் ஆய்வுகளுக்கும் பணிகளுக்கும் ஒத்துவராது எனத் தீர்க்கமாக அவர் எடுத்த முடிவுக்கு ஒத்திசையும் அவரது இணையர்,மற்றும் வளர்ப்பு மகளுடன் மும்பையில் வசித்து வருகிறார். 

பெண்களின் சரித்திரம், அன்றாட வாழ்க்கை, போராட்டம் இவற்றை ஒலி மற்றும் காட்சி வடிவங்கள் மற்றும் வாய்வழி சரித்திரப் பதிவுகள் மூலம் ஆவணமாக்கி வரும் ஒரே ஆவணக் காப்பகமான  ஸ்பாரோ(SPARROW).  SPARROW (Sound & Picture Archives for Research on Women) என்கிற அமைப்பை நிறுவி ,அதன் இயக்குநராகச் செயல்பட்டு வருகிறார்.’எழுத்தாளனுக்கு அமைப்பு தேவையில்லை’ என்கிற வாதத்தை இதன் மூலம் தகர்த்து இவ்வமைப்பின் வழி மிகச்சிறந்த சமூகப்பணி ஆற்றி வருகிறார்.எந்த அரசியல் இயக்கத்தோடும் தன்னை இணைத்துக்கொள்ளாத இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றவர்.

வியத்நாமில் அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு யுத்தத்தை வியத்நாம் மக்கள் தங்கள் ஆன்ம பலத்தால் முறியடித்த நாட்களில் (70 களின் முற்பகுதி) அந்தப் போர்ப் பின்னணியில் ஒரு மகனைப் போராளியாகக் களத்துக்கு அனுப்பி விட்டு மூத்த மகளை ராணுவத்தின் வெறிக்குப் பலி கொடுத்துவிட்டுச் சின்ன மகளுடன்  பயணிக்கும் ஒரு தாயின் வாழ்வைச் சொல்லும் ‘சூரியன்’ என்கிற கதையுடன் எழுத்துலகில் பிரவேசித்தவர் அம்பை.

தொடர்ந்த அவரது துவக்க காலக் கதைகளான மிலேச்சன்,ஆள் காட்டி விரல்,ஸஞ்சாரி,த்ரிசங்கு,சக்கர நாற்காலி,வாமனன் போன்றவை டெல்லியில் தங்கி ஆய்வு செய்யும் மாணவப்பருவத்து வாழ்க்கைப்பின்னணியில் எழுதப்பட்ட கதைகள்.

“பத்து வருடங்களுக்குக் குறைந்து அவரிடம் பி.ஹெச்.டி. வாங்க முடியாது” என்று புரபஸரைப்பற்றி சக மாணவர்கள் கூறுகிறார்கள்.தமிழ்நாட்டின் சின்ன ஊரிலிருந்து டெல்லிக்குப் போனவன் சாம்பு.” அவன் போன்றோர்களிடம் இல்லாத ஒரு போகப் பொருள் காலத்தை அலட்சியம் செய்யும் மனப்பான்மை தான். அவன் காலத்துடன் ஒன்றி, அதனுடன் சண்டையிட்டு, அவனிடம் மண்டி போட வேண்டியவன். இல்லாவிட்டால் இந்துவின் வாழ்வு குலைந்துவிடும். தம்பியின் எதிர்காலம் இருள் அடையும். எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிகளில் அவன் ஒருவன். புரிந்தது .ஏற்க முடியவில்லை.  இது மிலேச்சன்கதையில் வரும் சாம்பு எனில் ,ஓர் அறிவுஜீவிப்  பெண்ணைக்  காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டு  அடுத்தடுத்துக்  காதலில் தோல்வியுற்று  தொடர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு சக மாணவர்களுக்கு ஒரு ‘பேசு பொருளாகி’ மனப்பிறழ்வு கொண்டு  அலையும் ராஜனின் கதையைஆள்காட்டிவிரல்’ பேசுகிறது.

The Wind Beneath their Wings: Ambai and Sparrow- A Women's Day Special - With Dr. CS Lakshmi at Lodhi Colony, Delhi - Events High

ஆண் மாணவர்கள் கதை இப்படி எனில் தன் சராசரித்தனத்தை வெட்டி வீழ்த்தி விட்டு ஏதாவது ஒரு முகம் தனக்கு கிட்டாதா ( ’ஐ வாண்ட் டு பி ஸம்படி’ என்று தொண்டை அடைக்கப் பேசும்)  என ஏங்கும் மாணவி அஞ்சனாவின் கதையை ‘த்ரிசங்கு’ சொல்கிறது.ஜே.என்.யு போன்ற உயர் பல்கலைக் கழகங்களில் ரோகித் வெமுலா துவங்கி இன்று தமிழக மாணவர்கள்வரை  அடுத்தடுத்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கின்றன.சாதிய ஒடுக்குமுறையும் அவமதிப்பும் இத்தற்கொலைகளின் பின்னணியாக இருக்கின்றன. சாதி அல்லாமலும் இயல்பாகவே கிராமப்புற மற்றும் எளிய குடும்பப்பின்னணி கொண்ட மாணவ மாணவிகளை அரவணைக்கும் சூழல் உயர்கல்வி நிலையங்களில் 70 களிலேயே இல்லை என்பதை இக்கதைகள் உணர்த்துகின்றன.’70களில் தீவிரமாக மார்க்சியம் பேசிக்கொண்டிருந்த இளம் மாணவர்களிடம் குடிகொண்டிருந்த போலிமைகளை விமர்சிக்கும் கதைகளாகவும் இந்த ‘ஆராய்ச்சி’க் காலக்கதைகள் அமைகின்றன. 

ஆனால் அம்பையின் அடையாளமாகக் கருதப்படுபவை இக்கதைகள் அல்ல.பெண் நிலையில் நின்று இவ்வாழ்வைப் பார்க்கும் –இவ்வாழ்க்கையின் மீது கேள்விகளை முன் வைக்கும் – கதைகளே அவரது அடையாளம்.இவருக்கு முன் இவ்வளவு கூர்மையாகவும் வெளிப்படையாகவும் ‘பெண் பார்வை’யில் தமிழ்ச்சிறுகதை பேசியதில்லை.

அந்தப்பயணம் அவரது “ தனிமையெனும் இருட்டு” கதையிலிருந்து துவங்குவதாகக் கொள்ளலாம்.மிக மிக ஆரம்பத்தில் 1970 கணையாழி தீபாவளி மலரில் வந்த அக்கதை, 

”அறையில் விளக்குப் போட அவளுக்கு மனம் வரவில்லை. அந்த வெளிச்சம் அவள் தனிமையை பிரகடனப்படுத்தும் என்று ஒரு மன உறுத்தல் அவளுக்கு எப்போதுமே அந்த இருட்டு பரவும் வேளையில் உண்டாகும். போடத்தான் வேண்டும் என்ற அவசியம் வரும் வரை அவள் சாதாரணமாக விளக்கை போட மாட்டாள் .” என்று தொடங்குகிறது.

தனிமை பெண்களுக்கு பிடித்தமான ஒரு  நிலை அல்ல. அது அவர்கள் மீது வந்து விழுகிறது.அல்லது இவள் அதற்குள் தள்ளப்படுகிறாள். ஜெயகாந்தனின்காத்திருக்க ஒருத்திகதையில் வருவதைப் போல வீட்டில் காத்திருப்பவர்களாகப்  பெண்கள் ஆக்கப்படுகிறார்கள்.இக்கதையில் வரும்   அருணாவும்  அப்படித் தனிமையில் தள்ளப் பட்டவள்தான். பெங்களூரில் இருந்த அவளைக் கல்யாணம் கட்டிக்கொண்டு டெல்லிக்கு வரும் ரங்கநாதன், முதல்  மூன்று மாதம் அவளோடே இருந்து “ வார்த்தைகளில் வெளியிட்டால்   சோபையற்ற  வெறும் செயல்களாக மாறிவிடும், உள்ளத்துக்குள்ளேயே வைத்துக் கொள்ளக்கூடிய பல அனுபவங்கள் அவளுக்கு ஏற்படக்” காரணமாக வாழ்கிறான்.பின்னர் சொல்கிறான் மாதத்தில் 20 நாட்கள் அவன் வேலைக்காக வெளியூர் சென்றுவிடுவான் என்பதை. மாதத்தில் 20 நாள் தனிமையை மீதிப் பத்துநாள் சேர்ந்து வாழ்ந்த நினைவுகளோடும் இனி வரப்போகும் பத்து நாட்கள் பற்றிய கனவுகளோடும் கழிக்க விதிக்கப்பட்ட வாழ்க்கை.நாட்கள் செல்லச் செல்ல அந்தத் தனிமையில் அவள் தனக்குள்ளே ஒரு ரங்கநாதனை உருவாக்கி அவனோடு வாழத்துவங்குகிறாள்.

ஜெயகாந்தனின் ’காத்திருக்க ஒருத்தி’ யில் வரும் அழகம்மாளையும் பார்வதியையும் போலக் காத்திருத்தல் தன் விதி என்று சமாதானம் ஆகாமல், அருணா வேறு திசையில் பயணிக்கிறாள்.ரங்கநாதன் நாளை வருவதாகக் கடிதம் போடுகிறான். அவளாகவே ஜோடித்த ஓர் அழகிய உலகினுள் புகும் வெளியாளாய் அந்தக் கடித ரங்கநாதன் தோன்றுகிறான்.

சந்திகரில் அவன் எடுத்துக்கொடுத்த பச்சைப் புடவையைக் கட்டிக்கொள்கிறாள்.ஒரு பெரிய பிரயாணத்துக்கு முஸ்தீபு செய்வதுபோல எல்லா அறைகளுக்கும் சென்று விட்டு வந்தாள்.பிறகு விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக்கொண்டாள்.

தன் அருமையான உலகம் ஒன்றைக் காப்பாற்றிக்கொள்ளும் அசுர வெறியுடன்  புட்டியைத்திறந்து ஒவ்வொரு மாத்திரையாக விழுங்கினாள்.”

இந்தக் கதையில் முற்போக்கான முடிவு இல்லை.கற்பனாவாதம்தான்.அசலோ நகலோ எதுவானாலும் ரங்கநாதன் என்கிற ஆணைச் சார்ந்தேதான் அருணா இருக்கிறாள்.ஆனால் பெண்ணின் தீராத் தனிமை குறித்து ஒரு விவாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.70இல் இப்படி ஒரு காவியத்தன்மை கூடிய துன்பியல் முடிவைச் சொன்ன அம்பை பின்னர் அதிலிருந்து முறித்துக்கொண்டு முற்றிலும் வேறான பாதைகளில் பயணிக்கிறார்.

உடலை முன் வைத்து..

அம்பையின் கதைகள் காட்டும் ஆண்களும் பெண்களும் சமூகம் வார்த்த அச்சில் தம்மைச் சரியாகப் பொருத்திக்கொள்ளப் போராடுகிறவர்களாகவும் சமூக,கலாச்சாரத் தளைகளிலிருந்து தம்மை அறுத்துக்கொண்டு விடுபடத்துடிப்பவர்களாகவும் என இரு நிலைகளில் இயங்குகிறார்கள். ஒருவருக்குள்ளேயே இந்த இரு நிலைகளுக்குமான ஒற்றுமையும் முரணும் இருப்பதாகவும் பல கதைகள் காட்டுகின்றன.

முதலில் ஆண்-பெண்  உடலை முன் வைத்துப் பேசும் கதைகளைப் பார்க்கலாம். உடம்பு,அம்மா ஒரு கொலை செய்தாள்,வயது பதினைந்து,காட்டில் ஒரு மான்,கைலாசம்,சோக முடிவுடன் ஒரு காதல் கதை,பொய்கை ஆகிய கதைகளை இவ்வகையின் கீழ் வைத்து விவாதிக்கலாம்.இப்படி வகைமைப்படுத்துவது வாசிப்பின் வசதிக்காகத்தானேயன்றி,ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு ரகம்தான் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

“உடம்பு” என்கிற கதையின் நாயகன் பாலாரெட்டி  ஒரு நடனக் கலைஞர். இந்திரா குப்தா என்னும் பெண் கலைஞர் ஆடும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து சிவனாகவும் கிருஷ்ணனாகவும் ஒத்துழைப்பது பாலா ரெட்டி. புருவங்களை தீட்டி உதட்டுச் சாயம் பூசி உடம்பெல்லாம் மினுமினுக்க அவன் ஆடுவான் மேடையேறும்   முன்பாக உடம்பில் உள்ள ரோமங்களை எல்லாம் கர்ம சிரத்தையாக   மழித்துவிட்டு  அவன் மேடை ஏற வேண்டும். பிறரின் கேலிப் பார்வைகளுக்கும் கிசுகிசுப்புக்களுக்கும்  ஆளாகும் ஒரு  அன்றாடத்திடம்  தன் ஆண்மையை நிரூபித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு

”இரவில் மூக்கில் விரலை வைக்கும் அவன் மனைவி லலிதா. இப்படியும் ஒரு புலிப் பசியா என்று சிணுங்கும் லலிதா. புலியின் பசியில் தன் பசியையும் ஆற்றிக் கொண்டு உடல் உறங்கும் லலிதா. புலியாய் பாலா ரெட்டிஎன்று ஒரு பத்தியில் பாலா ரெட்டி என்கிற ஆண் தன் உடல் சார்  அவ மதிப்பை  மனைவியின் உடல் மீது இறக்கி வைப்பதை சொல்லிச் செல்கிறார்.திருநங்கைகள் சந்திக்கும் உடல்சார் அவமதிப்புகளை நினைவூட்டும் கதை.

அம்மா ஒரு கொலை செய்தாள் மற்றும் காட்டில் ஒரு மான் ஆகிய இரு கதைகளின் வழியாக பெண் உடல் சார்ந்த இரு நிலைகளை  முன்வைத்து  இரண்டுமே நம் கலாச்சாரத்திற்குப்  பிரச்சனையாகவும் சுமையாகவும் இருப்பதைக் காட்டுகிறார். அம்மா ஒரு கொலை செய்தாள் கதையில் ஒரு பெண் குழந்தை பூப்படைகிறாள்.. அக் குழந்தை   நல்ல கருப்பு. அவளைப் பெற்ற தகப்பனே கறுப்பி கறுப்பி என்றுதான் அழைக்கிறார். ஆனால் அவளுடைய அம்மா அவளை அழகி என்று கொண்டாடுகிறார். அம்மா ஊருக்குப் போன நாளில் அக்குழந்தை  பூப்பெய்துகிறாள். வீட்டில் உள்ள அக்காவும் மற்றவர்களும் அசிரத்தை யோடும் சாதாரணமாகவும் அதை எதிர்கொள்ள,,  அன்று ஏற்படும்  பயமும் நடுக்கமாக,  தன்னைச்  சீராட்டும் அம்மாவை எதிர்பார்த்து  அவளிடம் எல்லா மனக்கிலேசங்களையும் கோட்டுவத்ற்காக அக்குழந்தை காத்திருக்கிறாள். தங்கை மகளை பெண் பார்க்க வருகிறார்கள் என்பதற்காக, ஒத்தாசையாக இருக்க என்று,  ஊருக்குப் போனா அம்மா மறு நாள் திரும்பி வருகிறாள். தங்கை மகள் கருப்பு என்பதால் வந்த வரன் தட்டிப் போகிறது .அந்தச் சோகத்தோடு வீடு திரும்பும் அம்மா தன் கருத்த மகளும் பூப்படைந்து நிற்பதைக் கண்டு , “ உனக்கு இந்த இழவுக்கு என்னடீ  அவசரம்.. இதுவேற இனிமே  ஒரு பாரம்..” என்று   சுளீரெனக் கேட்கிறாள். ஒலி இல்லாக்கேவல்கள் அக்குழந்தையின் நெஞ்சில் முட்டக் கதை முடிகிறது. அக்குழந்தையின் மனதில் தெய்வமாக உயர்ந்து நின்ற அம்மாவை அம்மாவே கொலை செய்கிறாள்.

காட்டில் ஒரு மான் கதையில் வரும் தங்கம் அத்தை  பூப்படையவே  இல்லை. ஆனால் அவளுக்குத்  திருமணம் ஆகிவிடுகிறது.திருமணத்தின் தொடர் நிகழ்வாகப் பிள்ளை பெற்றாகணுமே?  தன்னால் தன் கணவனுக்கும் பிள்ளைப் பாக்கியம் இல்லாமல் போகக் கூடாது என்பதற்காகத்  தானே முன்னின்று கணவனுக்கு இன்னொரு திருமணத்தை நடத்தி வைக்கிறாள். அவள் மூலம் ஏழெட்டுக் குழந்தைகள்.

Not exclusion as much as an attitude that doesn't make women part of Tamil literary history': Ambai

அவளைப் பூப்படைய வைப்பதற்காகச்  செய்யப்பட்ட வைத்தியங்கள்  என்னும் சித்திரவதையிலிருந்து தப்பி ஓடிய நாட்கள்  ரணமாக அவள் நெஞ்சில் நிலைத்து இருக்கின்றன. வீடு முழுக்க  நிறைந்திருக்கும் குழந்தைகளுக்குத்  தானே புனையும் கதைகள் சொல்வதை தங்கம் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அவள் புனையும் கதைகளில் ஒன்றுதான் காட்டில் ஒரு மான். பழகிய காட்டிலிருந்து வழி தப்பி வேறு ஒரு காட்டுக்குள் புகுந்து விட்ட ஒரு மான் திகைத்து நிற்கிறது. பழகிய பாதைகள் இல்லை.பழகிய மரம் செடி கொடிகள் இல்லை. பல நாள் திகைத்து நிற்கும் மான் பின்னர்  ஒரு பௌர்ணமி நிலவொளியில் மந்திரம் போட்டது போலப் புதிய காட்டைப் புரிந்து கொள்கிறது. வேற காடாக இருந்தாலும் இங்கும் அருவி இருந்தது. மரம் செடி எல்லாம் இருந்தது. அந்தப் ப்புதுக் காட்டோட இரகசியம் எல்லாம் அந்த மானுக்கு  இப்பப் புரிய ஆரம்பித்தது. 

இவ்விரு கதைகளும் உண்மையில் ஒரு சமூக ஆய்வையே  நிகழ்த்துகின்றன. பெண்ணுக்கு என்று காலம் காலமாக இந்தச் சமூகமும் பண்பாடும் உருவாக்கி வைத்திருக்கும்  சித்திரத்தோடு நூறு சதமும் பொருந்திப் போய்விட வேண்டும்.இல்லாவிட்டால் துன்பம் தான்.இது என்ன நியாயம்?இக்கதைகளில் வரும் இந்த இரு பெண்களின் குற்றம்தான் என்ன?அவர்கள் ஏன் துன்பப்படவும் அவமதிப்புகளைச் சந்திக்கவும் வேண்டும்?

உணர்வலைகளின் மீது பயணம் துவக்கி அறிவார்ந்த உரையாடலுக்குள் நம்மை இழுக்கும் இக்கதைகள் இரண்டும் அம்பையின் முத்திரை பெற்ற கதைகள்.

ஆணோ பெண்ணோ பிறப்பதில்லை.உருவாக்கப்படத்தான் செய்கிறார்கள் என்பதையே ஒரு கதையாகப் படைக்கிறார்.’புனர்’ என்னும் கதை 

பெண்கள் வாழத்தகுதியற்ற சமூகமாக இந்திய சமூகம் இன்று மாறிவிட்டதை சர்வதேசப் புள்ளிவிவரங்களின் வழியே புரிந்துகொள்வதைவிட அம்பையின் கதைகள் வழியாகப் புரிந்துகொள்வது உணர்வுப்பூர்வமாகவும் கூடுதலான தெளிவைத்தருவதாகவும் இருக்கிறது.அம்பை என்கிற நுட்பமான படைப்பாளிக்குள் இருக்கும் ‘ஆய்வாளர்’ பெரும்பாலான கதைகளில் மருத்துவச்சிபோல் உடன் நின்று பிரசவம் பார்க்கிறார்..நாவல்கள்தான்  பொதுவாக சமூக ஆய்வுகளாக அமையும்.ஆனால் அம்பையின் சிறுகதை ஒவ்வொன்றுமே ஒரு சமூக ஆய்வாக மலர்ந்திருக்கிறது.

“கைலாசம்” கதை ஆணுடல் பெண்ணுடல் ஏற்படுத்தும் மயக்கங்கள்,தாபங்கள்,அவ்வுடல்கள் அடையும் மாற்றங்கள் என மிக விரிவாகவும்  வெளிப்படையாகவும் உளவியல்-உடலியல் ஆய்வு போலவும் ஆனால் நூறு சதம் ஓர் கலைப்படைப்பாகவும் வெளிப்பட்டிருக்கும்- ஒரு முதிர்ந்த கனி போன்ற படைப்பு.பண்பாடு எப்படி நம் உடல்களைச் சுமையாக மாற்றுகிறது என்பது கதையின் அடிநாதமாக ஓடுகிறது.இது போன்ற ஒரு கதையை இதற்கு முன்னும் பின்னும் தமிழில் யாரும் எழுதியதில்லை.

இரு பகுதிகளாக எழுதப்பட்டிருக்கும் இக்கதையின் முதல் பகுதி கல்லூரிக்காலத்து இளம் பெண்கள்-ஆண்கள் கொள்ளும் உடல் ஈர்ப்பு பற்றிப் பேசுகிறது.”உடல் அப்போது ஒரு பிரம்மாண்டம்.அதன் ஒவ்வொரு துளையும்,ஒவ்வொரு மேடும்,ஒவ்வொரு இடுக்கும்,ஒவ்வொரு நெளிவும்,ஒரு விடுபடும் ரகசியம்.உடலே உலகாய் விச்வரூபம் எடுத்த காலமது.அதன் ஒரு சிறு இழைதான் கைலாசம்.

கமலாவின் உடல் தந்த கிளர்ச்சியால் கல்லூரி நாட்களில் அவளை நெருங்க முயன்று அவளால் துரத்தப்பட்டவன் கைலாசம்.பின்னர் அவன் திருமணம் செய்து கொண்டபோதும் மனைவியைத் தொட அவனால் முடியவில்லை.அவன் மனைவி தேன்மொழி ஒரு டாக்டர்.ஒருமுறை கமலத்தின் அறையில் அவள் வந்து தங்கும்படி நேர்கையில் அவன் எப்படி என்று கமலம் கேட்கையில் அவள் கூறுகிறாள்:

“. அவர் யாருன்னே தெரியல. அவர் நல்லபடி தான் நடந்துக்கறாரு. ஒரு கோபமோ தாபமோ இல்ல. ஆனா என்னை  அவர் தொடல இன்னம். நடக்கறப்போ கூட என் மேல அவர் கை படல. தோளுல  கை போட்டு அணைக்கல. இன்னும் கல்யாணம் கட்டாத உங்ககிட்ட சொல்றேன் இதையெல்லாம், தப்பா நினைக்காதீங்க. உடம்பு பத்தின மோகம், வெறி, ஆவேசம் எதுவுமே இல்லாம வெறும் பொம்மையா இருக்காரு. நல்ல  மனுஷந்தான். கடிஞ்சு ஒரு வார்த்தை பேசல. ஹோட்டல்ல இருக்கலாமேன்னுட்டு எவ்வளவோ சொன்னேன். கேக்கல. இப்பிடி உங்க ரூம்ல உங்களுக்குத் தொல்லையாஏதோ ஒரு காலகட்டத்தில் அவர் உறைஞ்சுபோயிட்டாருன்னு படுது. எப்ப இளகப் போறாரோ யாருக்குத் தெரியும் .. ?”

அவள் புறக்கணித்த அந்தப்புள்ளிதான் கைலாசம் உறைந்துபோன புள்ளி என்பது நமக்குப் புரிகிறது.

தேன்மொழி  மீண்டும் 25 ஆண்டுகளுக்குப் பின் கமலத்தைச் சந்திக்கிறார்.ஓராண்டிலேயே கைலாசம் சொல்லி, கைலாசத்தை டைவர்ஸ் செய்துவிட்டு, அமெரிக்காவுக்குப் படிக்கப்போகிறாள்.அங்கு டாக்டர் குமாரசாமி என்பவரைத் திருமணம் செய்து கொள்கிறாள்.அவர்களுக்கு ஒரு பையனும் பெண்ணும்.ஆனால் கைலாசத்தை முற்றிலும் முறித்து விடாமல், இவர்களின் குழந்தைகள் பெரியப்பா என்று கைலாசத்தை அழைக்கும் வண்ணம் குடும்பத்துடன் உறவோடு வைத்திருக்கிறாள்.இப்போது கைலாசம் ஏரியில் விழுந்து இறந்துவிட்டார்.அவர் வீட்டைக் காலி செய்தபோது கமலத்தின் பேர் அட்டையில் எழுதிய ஒரு நோட்டுப்புத்தகம் பிளாஸ்டிக் கவரில் கட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதை அப்படியே பிரிக்காமல் கொண்டு வந்து கமலத்திடம் கொடுக்கிறார் தேன்மொழி.

Image
நன்றி: சொல்வனம்

பெண்ணுடலின் ரகசியங்கள் என்ன? அவள் அல்குல் எப்படி அமைகிறது? அதன் மேலுள்ள ஐது மயிர் தொடும்போது பட்டுப்போல் இருக்குமா அல்லது கம்பளிபோல் முரடாய் இருக்குமா? அது படமெடுக்கும் பாம்பின் தலைபோல் இருப்பதாகக் கூறியிருக்கிறது ஒரு பழங்கவிதையில். கமலத்துடையது எப்படி இருக்கும்?”

”மோகம் என்பது கூட ஒரு போதையா? ‘கிறுகிறுக்குதடீஎன்று சொல்லிவிட்டுமொந்தை பழைய கள்ளு போலேஎன்றாரே பாரதி? மொந்தை பழைய கள்ளுக்கு இங்கே எங்கே போவது? வாட்ச்மேனிடம் பேசி இங்கே தயாராகும் சரக்கைக் குடித்தேன். அந்தக் கிறுகிறுப்பு வேறு. உடலை ஆட்டுவிப்பது அது. நான் உணர்வது வேறு. ஒரு முறை கமலம் குனிந்து, எட்டி எதையோ எடுக்க முனைந்தபோது அவள் முலை என்மேல் பட்டது. ஜிவ்வென்று ஒர் உணர்வு. மிகவும் லேசாகிப் பறப்பதுபோல். அதே சமயம் உலகத்தின் அத்தனை கனமும் என் குறியின் மேல் கவிந்து விட்டது போல் தோன்றியது. ஒரு பக்கம் கனம் கூட இன்னொரு பக்கம் கனமின்மை . தத்தளிப்பு. கிறுகிறுப்பு. மூச்சு முட்டியது. இதுதானா மோகம்? இச்சையின் இலக்கணம் தெரியவில்லை.”

*

நான் மோகமானேன்

*

கமலம் என் மேல் இரும்புக்குண்டு போல் உருள வேண்டும்.என்னை அழுத்த வேண்டும்.நான் அவள் மேல் பூப்பந்துபோல் புரள வேண்டும்.நோகாமல்.நசுக்காமல்.

*

அவளை நான் இறுக்கும்போது அவள் முலைகள் நசுங்க வேண்டுமென் மார்பில்.முலைக்காம்புகள் விடைத்து நிற்க வேண்டும்.அவளுள் நான் உறைந்து போய்விட வேண்டும்.

*

கைலாசத்தின் குறிப்புகளை வாசித்த பின் கமலம் அவனுடன் மானசீகமாக உரையாடுவது போன்ற ஒரு நீள் பத்தியை அம்பை எழுதுகிறார்;

“கைலாசம், உனக்குள்ளே இவ்வளவு தாபம் இருந்தது என்பதை நான் உணரவில்லை.அப்போது என் உடலே எனக்கு ஒரு விடுபடுத்த வேண்டிய புதிராகத்தான் இருந்தது.என் உடலை நான் சமாளித்துக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும்…..நீ என்னை அணுகியபோது நான் அங்கில்லை.எத்தனையோ கவலைகளில் மூழ்கியிருந்தேன்.ஆராய்ச்சி பற்றிய கவலைகள்.எதிர்காலம் பற்றிய கவலைகள்.ஆணுடல் பற்றிய ஆர்வமும் ,குறுகுறுப்பும் இல்லாமல் இல்லை.அது அவ்வப்போது,ஓடும் மேகங்கள் போல் வந்து போய்க்கொண்டிருந்தது. ஆழமாக உள்ளிறங்கவில்லை.

…..எந்த மிகையும் எந்த மட்டுப்படுத்தலும் இல்லாமல் என் உடலை அதன் அத்தனை  குறைகளோடும்  நிறைகளோடும் ஏற்க முடிந்தது தனஞ்செயனுடன் தான்.அவன் என் உடலைப் பறக்க விட்டான்.மீண்டும் என்னிடமே ஒப்படைத்தான்..நான் அவன் உடலை அறியாத பிரதேசங்களுக்கு இட்டுச் சென்றதாகவும் ,திரும்பி வர வழி அமைத்துத் தந்ததாகவும் கூறினான். ஆண் உடல் பற்றி இருந்த அவன் கர்வத்தை நான் சமனப் படுத்தினேன் என்றான்….

அவனை மணந்துகொண்டு இருபத்தைந்து ஆண்டுகளாகி விட்டன. இன்னும் காதல் புரியவில்லை , கைலாசம். மோகம் புரிவது எளிது. காதல் அப்படியல்ல. பெண்ஆண் உறவு மிகவும் சிக்கலானது. அதில்தான் எத்தனை நெருக்கம், எத்தனை விலகல்? எத்தனை மர்மம், எத்தனை வெளிப்படை? எத்தனை வன்முறை, எத்தனை மென்மை? எத்தனை இறுக்கம், எத்தனை குழைவு? எத்தனை ஆதுரம், எத்தனை ஆவேசம்? காதலிக்கும் நபரையே விஷம் வைத்துக் கொல்லலாம் என்று ஆத்திரம் வருகிறது. தணிகிறது. பந்தம்போல் கட்டிப் போடுகிறது. கூடுபோல் ஆசுவாசம் தருகிறது. தகிக்கிறது. குளிர்விக்கிறது.

 

என் உடலை ஒரு பிரதியாகப் பார்க்கும்போது அது ஒரு நிலைத்தப் பிரதியாக இல்லை , கைலாசம். அது மாறியபடி இருக்கிறது. அதன் தோற்றமும் அர்த்தங்களும் மாறியபடி உள்ளன. என் முலைகள் தளர்ந்து, சற்றே கீழிறங்கி உள்ளன. என் தொடைகளில் பச்சை நரம்போடுகிறது. கால்களிலும் கைகளிலும்கூட. என் அல்குல் ஒரு பழுத்த இலை போல் இப்போது இருக்கிறது. என் ஐதுமயிர் முன் போல் அடர்த்தியாக இல்லை. கருமையாகவும் இல்லை. நரைத்து இருக்கிறது. ஈரமில்லாமல் உலர்ந்து இருக்கிறது. – செயனின் உடலிலும் பல மாற்றங்கள். முறுக்கிக் கட்டியது போல் இருந்த அவன் உடல் இப்போது சில சமயம் நனைத்து வைக்கப்பட்ட துணிபோல் இருக்கிறது. குளித்து விட்டு அவன் வரும்போது ஈரம் உலராத அவன் குறி நத்தைபோல் சுருங்கி உள்ளது. அவன் முடி முற்றிலும் நரைத்துவிட்டது. என்னுடையதும். அவன் முதுகில் முலைகள் பட சாய்ந்துகொண்டு பின் கழுத்தில் இன்னமும் முத்தம் தருகிறேன். சிலிர்ப்பதாகக் கூறுகிறான். அவன் என்னை வருடும்போது இதமாக இருக்கிறது. குறுகுறுக்கிறது.

இப்படியாக உடல் பல தடங்களில் ஓடியபடி.

நீ ஏன் தொடர்பே கொள்ளவில்லை. கைலாசம்? தேன் மொழியைத் தோழியாக்கிக் கொண்டதுபோல் என்னையும் தோழியாக நினைத்திருக்கக் கூடாதா?

இப்படியாக கதை இன்னும் நீள்கிறது. இக்கதையின் மையமான அச்சாக இருப்பவை கைலாசம் கமலத்துக்கு என எழுதிவைத்த அந்த நோட்டுக் குறிப்புகள்  மற்றும் கமலம் கைலாசத்துடன் நிகழ்த்தும் மானசீகமான அந்த உரையாடல். உடலை ஒரு ஆண் எப்படி பார்க்கிறான் அதே உடல்களை ஒரு பெண் எப்படி பார்க்கிறாள்  என்பதற்கான ஆவணங்களாக இப்பகுதிகள் திகழ்கின்றன.

நம் பண்பாட்டில் ஆரோக்கியமாக விவாதிக்கப்படாத  மர்மப் பிரதேசங்களாக இருக்கும் பலவற்றை இக்கதை  களத்தில் தானியங்களை விரித்துக் காயப்  போடுவதைப் போல நம் முன் விரித்துப் பரத்தி வைக்கிறது.உடல் தொடாத கைலாசத்தை மணமுறிவு செய்து கொண்டாலும் முற்றிலுமாக முறித்து விடாமல் தன் குடும்பத்துக்கு  உள்ளேயே ஒருவனாக  அவனுக்கும் ஒரு இடத்தை உண்டாக்கித் தரும் தேன்மொழியின் கதாபாத்திரம் அம்பையின் அற்புதமான முன்வைப்பு. பெண் உடலும் மனமும் இந்த ஆணாதிக்க சமூகத்தால் கொடுமையாகச்  சிதைக்கப் படுவதை   மட்டுமே பேசிய  படைப்பாளி அல்ல அம்பை. உடல்களை எப்படிக் கொண்டாட வேண்டும் என்பதையும்  அதில் உள்ள உளவியல்  அம்சங்களையும்  சேர்த்தே பேசுகிறார்.தன் உடல் மீதான தன் உரிமையை உணர்ந்த பெண்ணாகப் படைக்கப்பட்டிருக்கும் கமலம் கதாபாத்திரம் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய வரவு.

நினைத்தபோது நினைத்த உடலாகத் தன் உடலை மாற்றிக்கொள்ள முடிகிற மகிஷாசுரனின் காதல் தோல்வியை மறுவாசிப்புச் செய்யும் “ சோகத்தில் முடிந்த ஒரு காதல் கதை” உடலை முன் வைத்த இன்னொரு விவாதக்களமாக அமைந்துள்ளது.வயது  பதினைந்து”  என்கிற கதை பதின் பருவத்தின்  நுழைவாயிலில் நிற்கின்ற  பெண் குழந்தைகளின்  மன உலகத்தை அப்படியே பிடித்து நம் கைகளில் கொடுக்கிறது.அப்பருவத்தின்  குழந்தைகளின் அறியாமையும் அறிந்துகொள்ளும் குறுகுறுப்பும்  அந்த  வயதுக்கான வெள்ளந்தித் தனமும் என  எதுவுமே விட்டுப் போகாமல் படம் பிடிக்கும் கதை இது.

பொய்கைகதையில் சமகாலத்தில் வனப் பயணம் செல்லும்  ஒரு ஆண்கள் குழுவில்  இணைந்து செல்கின்ற ஒரு ஆண் வனத்துக்குள் இருக்கும் ஒரு பொய்கையில் நீராடி எழும்பொழுது அவருடைய ஆணுறுப்பு மறைந்து அவ்விடத்தில் பெண்ணுறுப்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.மார்பகமும் வளர்ந்துவிடுகிறது.

ஆண்கள் பெண்களாய் மாறிய பல புராண இதிகாசக்  கதைகளை முன் வைத்து விவாதிக்கும் கதையாக இதை மாற்றுகிறார் அம்பை. 

நாரதர் குசுமசரோவரில் மூழ்கிப் பெண்ணாகி, கோபிகையாய்க் கண்ணனை விரும்பும் மனநிலையைப் புரிந்துகொண்டது, அதை எழுதியது என்று ஆரம்பித்து, பல புராணக் கதைகளினூடே கதை பயணிக்கிறது.. விஷ்ணு மோகினியானது, ஈலா சுத்யும்னன் ஆன கதை, ஒரு மாதம் பெண்ணாகவும் ஒரு மாதம் ஆணாகவும் இருந்தது, பங்கஸ்வனன் பொய்கையில் மூழ்கிப் பெண்ணாகி, பின் ஒரு பெண்ணாய்க் குழந்தைகளை அதிகம் நேசிக்க முடியும் என்றும் பெண்ணாக மண வாழ்வில் துய்க்கும் இன்பம் அதிகம் என்றது, அம்பை சிகண்டியானது, அர்ஜுனன் பிருஹன்னளையானது, வாலி சுக்ரீவனின் தந்தை ரிக்ஷராஜன் அழகிய பெண் குரங்காய் மாறி அவர்கள் பிறந்தது, இரவு பெண்ணாகவும் காலை ஆணாகவும் இருந்த ஷிகித்வஜன், ஆணாக மாறிய அவன் மனைவி சுடலா, தன் மனைவிகள் கர்ப்பம் தரிப்பதற்காகத் தரப்பட்ட நீரைக் குடித்துக் கர்ப்பமுற்ற யுவனஷ்வன் இவ்வாறு சாபமும் விமோசனமும் காமமும் காதலும் தேவர்களும் கடவுளரும் முனிவர்களும் மந்திரகணங்களும் கூடிய கதைகளையெல்லாம் அம்பை இக்கதைக்குள் விவாதிக்கிறார்..

அந்தக் கதைகளின் நாடிபோல் இருந்த கருத்து “ பெண்ணுடல் ஆணுடல் இவற்றின் வரையறைகள் பௌதிக ரீதியாக மட்டுமே தீர்க்கமானவை. மனத்தளவில் அவை ஒன்றில் இன்னொன்று புகும் வகையில் இருப்பவை. அவற்றுக்கான இயல்புகள் உலக வாழ்க்கையை ஒட்டியே வந்திருப்பவை. பெண்ணாக மாறியதுமே சில இயல்புகள் இருப்பதாக நினைப்பது, உணர்வது எல்லாமே அந்த உடலை ஒட்டி வகுத்திருக்கும் உலக விதிகளை ஏற்பதால்தான். மற்றபடி பெண் ஆண் என்பது கோடிட்டு வகுக்க முடியாத ஓடும் நதி போன்றதுதான்.” என்று அம்பை சொல்கிறார்.கருப்பையும் பாலூட்டும் மார்பகங்களும் என்பவை மட்டுமே உயிரியல் வேறுபாடு மற்ற வேறுபாடுகள் எல்லாமே கலாச்சாரமும் வரலாறும் ஏற்படுத்தியதுதானே என்பதைக் கதையாகச் சொல்வது ’பொய்கை’.அமபையின் ஆழ்ந்தகன்ற வாசிப்பும் சிந்தனை வீச்சும் வியக்க வைப்பது.ஆணுடல்-பெண்ணுடலை முன் வைத்து என்னவெல்லாம் பேசவேண்டுமோ அதையெல்லாம் தன் கதைகளில் பேசிவிட்டார் அம்பை.இந்த உடல்சார் புதிர்கள் புராண காலந்தொட்டு ஒரு பேசு பொருளாக உலகின் எல்லாச் சமூகங்களிலும் இருந்து வந்துள்ளதைப் பார்க்கும்போது, உடல்-ஆணுடல்-பெண்ணுடல்-தனி மனிதர்-சமூகம் –பண்பாடு என்று சமூகத்தின் பொருளாதார அடித்தளத்துக்கு அப்பாலும் அந்த அடித்தளத்தோடு இணைத்தும் விவாதிக்க வேண்டிய வெளிகளின் விரிவை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

Image
நன்றி: சொல்வனம்

அடிமைப்பட்ட வாழ்க்கை

பிசிறற்ற கோடு கிழித்து அடிமைப்பட்ட வாழ்க்கை- விடுதலை பெற்ற வாழ்க்கை என வாழ்வையும் சரி இலக்கியத்தையும் சரி அப்படியெல்லாம் இரண்டாகப் பிளந்து காட்டிவிட முடியாது.ஒன்றிலிருந்து ஒன்றாகக் கிளை பிரிந்துதான் செல்லும்.அம்பையின் கதைகளும் அவ்விதமே என்றாலும் தொகுத்துப் புரிந்துகொள்வதற்காக மட்டுமே இவ்வகைப் பிரிப்பு.

வல்லூறுகள்,சிறகுகள் முறியும்,அறைக்குள்ளிருந்தவன்,வெளிப்பாடு,ஒரு கட்டுக்கதை,வீட்டின் மூலையில் ஒரு சமையலறை,ஆரம்பகாலக் கவிதைகள்,காவு நாள் போன்ற கதைகளை அவ்வகையின் கீழ் வைத்து விவாதிக்க முடியும்.

”மொட்டை மாடியில் படுத்து  அண்ணாந்து தாரகைகளைப் பார்த்தவாறே அம்மா சொல்கிறாள் ஒவ்வொரு நட்சத்திரமும் பிணம் தின்னிக் கழுகு மாதிரி கொடூரமா  மின்னரது  பாரு ஷைலு…. திடீர்னு ஒருநாள் பாரு , நட்சத்திரங்களுக்கு பதிலா இறக்கைகளை விரிச்சுண்டு மானத்தை அடைச்சுண்டு வெறும் வல்லூறுகள் இருக்கும்.கீழே எல்லாம் பிணங்கள் பிணங்கள் பிணங்கள் தான்…” எனத் தன் கற்பனையை மகளுக்குத் தாய் சொல்லுவதாகத் துவங்கும்’ வல்லூறுகள்’ கதையில் வரும் அம்மா அப்பாவின் கைதியாக அந்த வீட்டுக்குள் வாழ்கிறாள். 

 டெல்லியிலிருந்து கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்துவிட்டு திரும்புகிற மகளிடம்உனக்கு தப்பிக்க ஓரிடம் இருக்கு”  என்று சொல்கிறாள். தான் பெற்ற மகளைப் பார்த்தே பொறாமையுடன்உனக்கு தப்பிக்க ஒரு இடம் இருக்கு’ என்று சொல்கிற அந்த  ஒரு வார்த்தைக்குள் எத்தனை கதைகள் உறைந்திருக்கிறது? தான் அடிமைப் பட்டிருப்பதை அவள் உணரும் தருணமாகவும் மகள் விடைபெறும் தருணம் மாறுகிறது.

 வீட்டுக்குப் பின்னால் இருக்கும் ஒரு  ஷெட்டுக்குள் நள்ளிரவில் எழுந்து சென்று போய் கதவைத்திறந்து உள்ளே ஒரு கிழிந்த பாயில் விழுந்து அம்மா பெருத்த ஓசையுடன் அழுவதை இந்த மகள் பார்த்திருக்கிறாள்.அப்பாவுக்கு முன்னால் அவள் அழுவதில்லை.அப்பாவுடன் பேசுவதும் இல்லை.அப்பாவின் ஆண்மையையும் கணவன் என்ற பெருமிதத்தையும்  வெறும் மௌனத்தாலே கொன்றவளாக அந்த அம்மா வாழ்கிறாள்.

“சிறகுகள் முறியும்”  சாயா ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம்.தன்னையறியாமலே தன்னை இழக்கும் பெண் சாயா.

சாயாவின் கணவன் பாஸ்கரன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஊறுகாய் கேட்கிறான். ஊறுகாயை எடுக்கப் போனவள் அது கெட்டுப் போய்விட்டதைப் பார்க்கிறாள். பாஸ்கரன் அதற்காக அவளைத்  திட்டுகிறான் .

உதட்டைக் கடித்துக் கொண்டாள் சாயா. அவள் தவறுதான். ஜாடியைக் குலுக்கி விட வேண்டும் என்று ஞாபகமே இல்லை

அத்தனை உப்பும் காரமும் எண்ணெயும் வீண். பணத்தோட அருமை தெரிந்தால்தானேஎன்று கத்திவிட்டுக்  கை அலம்பப்  போய்விட்டான் பாஸ்கரன். உப்பும் காரமும் எண்ணெயும்ஹூம் .. எங்கேயும் போய் விடவில்லை அத்தனை உப்பும் காரமும் சேர்ந்து தான் நெஞ்சில் பற்றிக்கொண்டு எரிகிறது. எண்ணெய் முகத்தில் வழிகிறதே”

 பாஸ்கரன்  சரியான கருமி. இஸ்திரி போட்டு பேண்டும் சட்டையும் போட்டால்  செலவாகும் என்று இஸ்திரி போடாமலே உடை அணிபவன். சாயா அதற்கு நேர்மாறானவள். எல்லாவற்றுக்கும் காசுக் கணக்குப்  பார்க்கும் அந்த வாழ்க்கை அவளுக்குச்  சலிக்கிறது. இவன் ஏன் இப்படி இருக்கிறான்  என்று அவ்வப்போது மனதுக்குள் பரிசீலனை செய்து பார்ப்பாள்.

பின்னர் அது பயனற்றது என்று அவளுக்கே தோன்றும்.”கணவனை அனலைஸ் செய்வதுபோல் ஒரு முட்டாள்தனம் வேறு கிடையாது என்று இப்போது தோன்றியது. அவள் அவனுக்குத்  தானம் செய்யப்பட்டவை அவன் வயதில் பெரியவன். சரீரத்தில் பலம் வாய்ந்தவன். சோபா செட் போல அவள் அவன் சொத்து. அவன் இறந்து போனால் இவள் மேல் திரையை மூடி  “த எண்ட் “  என்று எழுதி விடுவார்கள். இதில் இவள் ஃபிராய்டு எல்லாம் படித்து மனத்தைக் குழப்பிக் கொண்டு அவன் நடத்தைக்கு காரணம் கற்பித்து என்ன பயன்? தான் ஆளப்பிறந்தவன் என்ற உரிமையை விட வேறு எந்த உணர்வு அவனை இப்படி பலசாலியாக முடியும்?”

தான் அவன் ஆளுகைக்கு உட்பட்டவள் என்கிற உணர்வுதான் பெண்ணின் தாழ்ச்சிக்குக் காரணம் என்பது கதையில் சொல்லப்படாமலே விளங்குகிறது நமக்கு.காலப்போக்கில் சாயாவும் காசுக்கணக்குப் பார்க்கும் கருமிபோல் ஆகிவிடுவதும் அதை உணரும் தருணங்களில் அவள் உடைந்து போவதுமாகத் தொடர்கிறது வாழ்க்கை.

 

அம்பையின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதைகளின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவை வீட்டின் மூலையில் ஒரு சமையலறையும் ‘வெளிப்பாடு’ம் ஆகும்.

‘வெளிப்பாடு’ கதையில் ஓர் ஆய்வாளர் பெண்மணி திருநெல்வேலிக்கு வருகிறார்.பெண்களின் வாழ்க்கை பற்றிய ஆய்வு.அங்கே அவர் இரண்டு பெண்களைச் சந்திக்கிரார்.முதல் பெண் மணி மணமானவர்.

அவள் தலையைப் பார்த்தாள். கருகருவென்று வெங்கலப் பானை மாதிரி முடிந்த தலைமயிர்.

என் முடியைப் பாக்கீகளா? எனக்கு வயசு அம்பது. ஒரு முடி நரைக்கல. இன்னும் தூரம் போகலை.”

உனக்கு மறைக்க ஒன்றுமே இல்லையா? உன்னையும் என்னை மாதிரி அடக்கி அடக்கித்தான்தலைப்பு ஏன் இப்படித் தொங்கறது? இடுப்பில் செருகு. வாசல் பக்கம் என்ன பண்றே? வாயை மூடு. கொரல் வெளில வரக்கூடாது படிப்பு கிடக்கட்டும்; இந்தக் காயை நறுக்கித்தா. அப்புறம் தயிர் கடையலாம்வளர்த்திருப்பார்கள். எந்த பலத்துடன் இப்படி வெள்ளையாய்ப் பேசுகிறாய்? சிரிக்கிறாய்?

– “பதினாலு வயசிலே கல்யாணம். இவுகளுக்கு வயசு இருபது அல்லு அசலு இல்ல. சொந்த மாமா பையன். பெறகு என்ன? சோறு வடிக்கிற ராச்சியந்தான். ரெண்டு பொட்டச்சிக. ஒரு மகன். கட்டிக் கொடுத்தாச்சு. அட, பேரன் எடுத்திட்டன்னா பார்த்துக்குங்களேன்.”

இதுதான் உன் வாழ்க்கையின் கதையா? நாலு வரியில்! உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்

தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு. சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு. ஒரு அறை வெச்சார்னா …” சிரித்தாள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன். —

வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை . முழங்கை அருகே பிடித்தது.

சாப்பிட வரீகளா? எனக்குப் பசிக்கி.” “நான் தோசை சுடட்டுமா?” . “அட, தோசை சுடத் தெரியுமா?” someo

ஏன், தெரியாதுன்னு நினைச்சீங்களா? உங்களை மாதிரி அவ்வளவு அழகா வராது. ஆனா சுடுவேன்.”

என்ன மாதிரின்னா , என் வயசு என்ன உங்க வயசு என்ன? பத்து வயசு தொடங்கி சுடறேன். நாப்பது வருஷத்துல

ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை . . . அம்மம்மா ….” |

ஒரு வருடத்துக்கு ஏழாயிரத்து முந்நூறு தோசைகள். நாற்பது வருடங்களில் இரண்டு லட்சத்துக் தொண்ணூற்றிரண்டாயிரம் தோசைகள். இது தவிர இட்லிகள், வடைகள், அப்பங்கள், பொரியல்கள், குழம்புகள். எவ்வளவு முறை சோறு வடித்திருப்பாள்? எவ்வளவு கிலோ அரிசி சமைத்திருப்பாள்? இவள் சிரிக்கிறாள்.

என்னா ரிப்போர்ட்டு எளுதணும்?” 

பொம்பளைங்க பத்தி.” 

பொம்பளைக பத்தி எளுத என்ன இருக்கு?” –

அதாவது அவங்க எப்படி வாழாறங்க, என்னெல்லாம் வேலை செய்யறாங்க, அவங்க தங்க வாழ்க்கையைப் பத்தி என்ன நெனக்கிறாங்க …..”

என்ன நெனக்கிறாங்க? புள்ள பெறுதோம். ஆக்கிப் போடுதோம்.”

எப்பப்பாரு புள்ள பெறலியே? நடுவிலே ஏதாவது யோசிச்சிருப்பிங்க, இல்ல?”

 “ஆமா, ரோசிச்சோம். போங்க.” 

 மௌனமாகச் சாப்பிட்டார்கள்.

இரண்டாவதாக அவர் சந்திக்கும் பெண் மணமாகாத ஓர் யுவதி.

ஒரு பேப்பரை எடுத்தாள். “கல்யாணம் கட்டிட்டு என்னெல் லாம் வேணும் சொல்லு. நான் பட்டியல் போடறேன்.”

கேலியா?”

சே, நிஜமாவே. சொல்லு.” 

ஊஞ்சல் சங்கிலியில் தலையைச் சாய்த்து, முழங்காலைப் பலகையில் ஊன்றி நின்றாள். கூந்தல் அலையாய் நெற்றியில் விழுந்தது. பாய்மர இமைகள் மேலெழுந்தன படகுக் கண்கள் மிதக்க. பட்டியல் அவளிடம் இருந்தது.

தெருல நடக்குணும் தெனம்

ஓட்டல்ல பலகாரம் சாப்பிடணும்

கடைக்குப் போய் நானே பொடவை எடுக்கணும்.

சினிமா போகணும்

நெறைய ஊர் பாக்கணும்.

பின்கட்டு உலகில் பதியப்பதிய நடந்தாள். எருமை மாட்டை அடக்கினாள். தீனி போட்டாள். தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள். எட்டிப் பார்க்கும்போதெல்லாம் அடுப்படியில். தோசை சுடவா அக்கா? இட்டிலி ஊற்றித் தரட்டுமா? இரவில் புடவை விலகாமல் இரு  கால்களையும் அடக்கி, மடக்கிப் படுத்தாள். யார் ஒரு தும்மல் போட்டாலும் எழுந்து மிளகு சீரகம் பொடித்த சுடுதண்ணி போட, விசை தட்டியவுடன் இயங்குபவள் போல் டாணென்று எழுந்தாள். இரவில் அவளுடைய கையை எடுத்து முகத்தில் வைத்துக்கொண்டாள். சோற்று மணம் அடித்தது. பல யுகங்களின் சோற்று மணம்.

Image
நன்றி: சொல்வனம்

அம்பை விவரிக்கும் இரு பெண்களின் வாழ்க்கைகளிலிருந்து எடுத்துத் தீற்றப்பட்ட இவ்விரு தீற்றல்களும் ’விலகி வீட்டிலோர் பொந்தில்’ வாழ விதிக்கப்பட்ட நடுத்தர வர்க்கத்து இந்தியப்பெண்களின் மொத்த வாழ்வையும் நம்முன் திறந்து வைக்கின்றன.இன்னும் சில ஆண்டுகள் கழித்துப் போனால் அந்த இரண்டாவது பெண்ணும் இரண்டு லட்சத்துச் சொச்சம் தோசைகள் சுட்டு முடித்து முன்னேறிக்கொண்டிருப்பாள்.”பல யுகங்களின் சோற்று மணம்” என்கிற ஒற்றை வரிக்குள் கடந்த பத்தாயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்தின் பெருமூச்சு புரள்வதை நாம் உணர்கிறோம்.

“வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்கிற தலைப்பே கதையின் உள்ளடக்கத்தைச் சட்டென விளக்கிவிடுகிறது.

ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என வீடு நிறைந்திருக்கும் அப்பெரிய ராஜஸ்தானிக் குடும்பத்துக்குச் சமைத்துக்கொட்டும் உணவுத்தொழிற்சாலையான அடுப்படி மூலையில் சின்னதாக இருக்கிறது.

”ஆனால் சமையலறை என்ற பௌதிக விவரம் அவர்களைப் பாதிக்கவில்லை. அப்படிப்பட்ட ஒன்று இல்லாததுபோல் இருந்தார்கள். அவர்கள் கூட்டுக் குடும்ப வீடுகளில் பாக்க கல்தரை முற்றம், கூடம் இவற்றைத் தாண்டிய இருள் மூலை சமையலறை. பூஜ்ய வாட் விளக்கு எரியும் அங்கு. முக்காடுஅணிந்து, அழுத்தமான வண்ணப் பாவாடைகள் இருளை ஒட்டியே இருக்க, பெண்கள் நிழல்களாய்த் தெரிவார்கள் அந்த அறையில் அறைந்து அறைந்து சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டோ, அடுப்படியில் கும்மென்று மணக்கும் மஸாலா பருப்பைக் கிளறியவாறோ. சமையலறை ஓர் இடம் இல்லை . ஒரு கோட்பாடு மட்டுமே. அத்தனை ருசியான, நாக்கை அடிமைப்படுத்தும் சாப்பாடும் மாயக் கம்பளத்தில் வந்தது போல் அலட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.

மீனாட்சிதான் ஒருமுறை சாப்பிடும் நேரத்தில் அந்த விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். பப்பாஜி அப்போது கீழே இருந்த கார்ஷெட்டின் மேல் ஓர் அறை கட்டிக் கொண்டிருந்தார்.

பப்பாஜி, சமையலறைக்கு வெளியே உள்ள தாழ்வாரத்தைப் பெரிது பண்ணிவிடுங்களேன். அதை நீங்கள் அகலமாக்கினால் நாற்காலி போட்டு உட்காரலாம். இடது பக்கம் ஒரு பாத்ரூம் அடினால் அதில் பெரிய தொட்டி போடலாம், பாத்திரம் தேய்க்க. பாத்ரூமுக்கு வெளியே துணி உலர்த்த அலுமினியக் கம்பி போட்டு விடலாம்.”

பப்பாஜி இந்த அபிப்பிராயத்தால் தாக்கப்பட்டவர்போல் பார்த்தார்.”

காதல் திருமணத்தால் அந்த வீட்டுக்குள் நுழைந்த மீனாட்சிதான் முதல் கல்லை உருட்டுகிறாள்.அவள்தான் வெளியிலிருந்து அந்த வீட்டுக்குள் வந்தவள் என்பதால் விமர்சனபூர்வமாக அவ்வீட்டின் வழக்கங்களைக் கேள்வி கேட்க முடிகிறது.எந்தப் பிற்போக்கான நடைமுறையையும் சிந்தனையையும் புரட்டிப்போட வெளியிலிருந்து பார்க்கும் கண்கள் –கண்ணோட்டம்- தேவையாக இருக்கிறது.சமையலறையின் சாவி தன்னிடம் இருப்பதுதான் தனக்கான அதிகாரம் ,தனக்கான இடம் என்று  அக்குடும்பத்தின் மூத்த பெண்மணியான ஜீஜீ நினைக்கிறாள்.அதிலிருந்து விடுபடுவதே உண்மையான பெண் அதிகாரத்தின் துவக்கம் என்கிற புரிதல் மீனாட்சிக்கு இருக்கிறது.

இந்தியக் கூட்டுக்குடும்பங்களில் ஆட்சி செய்யும் ஆணாதிக்கப் பண்பாட்டைக் கேள்விக்குள்ளாக்கும் இக்கதை அம்பையின் முக்கியமான கதைகளில் ஒன்று.

குடும்பத்தினர் எல்லோரையும் அழைத்துக்கொண்டு ஏரியைப் பார்க்க ஒரு சுற்றுலா செல்ல முது மருமகள் மீனா ஏற்பாடு செய்கிறாள்.பெண்களுக்கெல்லாம் ஒரு விடுதலை அல்லது இளைப்பாறுதல் இருக்கட்டுமே என்பது மீனாட்சியின் நினைப்பு.அன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் சமையலறை விழித்துக்கொண்டு விடுகிறது.சுற்றுலாவுக்குச் செல்லும் குடும்பத்தினருக்கான உணவுப்பொட்டலங்கள் தயாரிப்புத் துவங்கி விடுகிறது.சற்றுத் தாமதமாக எழுந்து சமையலறைக்கு வரும் மீனாவை இக்காட்சி தாக்குகிறது.அம்பை அந்த இடத்தில் ஒரு வரியை எழுதுகிறார் “ஏரிப்பயணத்தின் இந்த அம்சத்தைப் பற்றி மீனா யோசித்திருக்கவில்லை” என்பதாக.என்ன ஒரு வரி!

வாழ்வின் எந்தக் கணத்திலும் ”இந்த அம்சத்தைப் பற்றி யோசிக்காத” எத்தனையோ ஆண்களின் தலைமுறைகள் கடந்துபோய் விட்டன.தின்று தீர்த்துவிட்டுப் போய்விட்டனர்.அப்பெண்கள் இன்னும் அந்தச் சமையலறைக்குள்ளேயே கிடக்கின்றனர்.வெளிப்பாடு கதையின் அந்த இரு பெண்களையும் இந்த ராஜஸ்தானத்துச் சமையலறைப் பெண்களையும் இணைத்துப் பார்க்கும்போது பெண்ணடிமையின்  ஒரு தேசிய ஒருமைப்பாட்டை நம்மால் கண்டுணர முடியும்.இந்தியப் பண்பாட்டு வரலாற்றின் மூஞ்சியில் அறையும் கதைகள் இவை.

தன்னுடைய நீல நிற டைரியில் கவிதைகள் எழுதும் ஓர் இளம்பெண்னைப்பற்றிய “ஆரம்பகாலக் கவிதைகள்” கதை வாழ்வின் யதார்த்தம் காலப்போக்கில் அவளிடமிருந்து கவிதையைத் தட்டிப் பறித்துவிடுவதைச் சொல்கிறது.அக்கதையில் வரும் உடல் உழைப்பாளியான கெப்பம்மாவை அவள் அழைத்த எந்தத் தேவனும் வந்து அடிக்கும் புருசனிடமிருந்து காக்கவில்லை.அவள் அழைத்த வீட்டு நாயான மிக்கி வந்துதான் அவள் புருசனைக் கடித்து விரட்டுகிறது.இந்தக்காட்சிக்குப் பின் அந்த இளம்பெண்ணிடமிருந்து கவிதை விடைபெறத்துவங்குகிறதாகக் கதை முடியும்.

இசையரசியாகத் திகழும் பிரமராவிடமிருந்து இசையைப்பறித்து வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தெரு நடுவில் அவளை நிற்க வைக்கும் ஒரு 25 ஆண்டுகால வாழ்க்கையைச் சொல்லும் கதை “காவுநாள்”.அடித்துக் கொல்லப்படும் பன்றிகளைப்போல பெண்ணுக்கும் இயற்கையான இயல்பான சாந்தம் தவழும் மரணம் எப்போதும் இல்லை என்பதைக் குறியீடாகச் சொல்லும் கதை “ஒரு கட்டுக்கதை”

பெண்களுக்கென இருக்கும் ஆற்றல்கள,அறிவு,திறன்கள் எல்லாவற்றையும் மறுதலித்து இச்சமூகம் அவளுக்கெனத் தீர்மானித்து வைத்திருக்கும் அச்சில் அவளை உருக்கி ஊற்றி வார்க்கும் அத்துமீறல்களை அம்பையின் பல கதைகள் அடையாளம் காட்டுகின்றன.விளக்கி விவாதிக்கின்றன.அடையாளத்தேடல்

அப்பாவுக்கு உடம்பு முடியாமல்போனதும் மும்பாயிலிருக்கும் மகன் நெல்லூர் வந்து அம்மா அப்பா இருவரையும் தன்னோடு அழைத்துச் செல்லும் திட்டத்துடன் வருகிறான்.எவ்வளவு சாமான்களை மூட்டை கட்ட வேண்டியிருக்கும் என்று பார்ப்பதற்காக வீட்டை ஒரு சுற்றுச் சுற்றி வருகிறான்:

சமையலறைப் பக்கமும் குளியலறைப் பக்கமும் போன போது  தலையைச் சுற்றியது. பெரிய பித்தளை அண்டாக்கள் பித்தளைச் சொம்புகள். பித்தளைக் குடங்கள். அருக்கஞ்சட்டிகள், வாணலிகள். வெங்கல உருளிகள். அரிவாள் மணைகள் சிறியதும் பெரியதுமாய். கனமான பெரிய குழிவுடன் கரண்டிகள், பித்தளை அடுக்குகள். தாளிக்கும் இரும்புக் கரண்டிகள்.சேவை  நாழிகள். அப்பக்காரல்கள், இடுக்கிகள், கூஜாக்கள் பழைய ருக்மணி குக்கர், பால் தயிர் வைக்கும் வலை பீரோ.ஒருI பகுதியில் ரவிவர்மா வரைந்த கடவுள்கள், ஆரத்தித் கற்பூரத்தட்டுகள், சந்தனக் கல், கொலுப்படிகள், பண்ணுருட்டிக் கொலுப் பொம்மைகள், திரியை ஏற்றினால் ஓடும் படகுகள், கோலப் புத்தகங்கள். இன்னொரு திறந்த பீரோவில் குறுக்குத் தையலும் பூவேலைகளும் செய்த விரிப்புகள், மணிகள் கோர்த்த திரைச் சீலைகள். எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவின் கறுப்பு வீணை மஞ்சள் பட்டு சுற்றியபடி..

சோர்வுடன் சங்கர் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபோது, என்ன சங்கர், இப்படிக் குடைஞ்சு குடைஞ்சுப் பார்க்கறியே?’ என்றபடி வந்தாள் அம்மா காப்பியுடன்.

அம்மா, உன்னையும் அப்பாவையும் பம்பாய் கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேம்மாஎன்றான் காப்பியைப் பருகியபடி

எதுக்குப்பா ?’

அப்பாவை உன்னால தனியா எப்படீம்மா சமாளிக்க முடியும்? இங்க வந்தா ஏகப்பட்ட சாமான்கள். இதையெல்லாம் வெக்க பம்பாய்ல எங்கம்மா இடம்?’

அவன் காலருகே கீழே அமர்ந்துகொண்ட அம்மா, ‘சங்கர், இதெல்லாம் சாமான்கள் இல்லடா. இதெல்லாம்தான் நாங்க

சொல்லிவிட்டு அவன் கையிலிருந்த காலி டம்ளரை வாங்கிக்கொண்டு எழுந்தாள்.

தமிழில் உரையாடிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலோ என்னவோ, அவள் கூறியது புரிய நேரம் பிடித்தது சங்கருக்கு. புரிந்தது. அது சாமான்கள் நிறைந்த வீடு அல்ல.

அது ஒரு வாழ்க்கை முறையின் சரித்திரம். அது இரண்டு  சுய சரிதைகளுக்கான குறிப்புகள் கூடிய வெளி. அதில் ஒவ்வொன்றுக்கும் அம்மாவிடமும் அப்பாவிடமும் தேதி உண்டு: விவரங்கள் உண்டு; கதைகள் உண்டு. கட்டுக்கடங்காத சிரிப்பையும் உவகையையும் கண்ணீரையும் நெகிழ்வையும் உண்டாக்கும் நிகழ்வுகள் உண்டு. இசை உண்டு. ராகங்களின் பூச்சு உண்டு.  

‘அசர மரணங்கள்’ கதையின் சாராம்சமாக அந்த மீட்டப்படாத வீணை அம்மாவுடன் பயணிக்கிறது.

பொருள்சார் பண்பாட்டில் சிக்குண்டுவிட்ட இன்றைய தலைமுறைக்கு வெறும் பொருட்களாகத் தெரிவதெல்லாம் சென்ற தலைமுறைக்கு உணர்வுகளோடு பிணைக்கப்பட்டதாக இருக்கின்றன.அவர்களை மும்பைக்குப் பிய்த்து எடுத்துச் செல்ல முடியவில்லை.அப்பா இறந்தபிறகு அம்மா மும்பைக்கு வருகிறாள்.எல்லாப்பொருட்களையும் விட்டு விட்டாலும் அவளுடைய கறுப்பு மரத்தில் கடைந்த வீணையை மட்டும் சாகும்வரை கூடவே வைத்திருக்கிறாள்.வீணை இசைப்பதை அவள் அப்பாவுடனான ஒரு சண்டைக்குப் பின் அம்மா நிறுத்திவிட்டிருந்தாலும் அந்த வீணையை அம்மா சாகும்வரை தன்னோடே வைத்திருக்கிறாள்.வீணை அம்மாவின் சுய அடையாளத்தின் சின்னமாக இருந்திருக்கிறது.

இவ்வளவு பொருட்களோடும் வீணையோடும் முமபையிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் பிள்ளைகளோடும் கூடிய உயர்சாதி நடுத்தர வர்க்கத்து வாழ்வை மட்டும் அம்பை எழுதி நிற்கவில்லை.மும்பையின் புறநகர்க் குடிசைப்பகுதி ’சால்’ வாழ்க்கையையும் பயணம்-7 , கறுப்புக் குதிரைச் சதுக்கம் போன்ற  வேறு பல கதைகளில் பேசுகிறார். த்ரிசங்கு, அணில், பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர், காவுநாள்…,போன்ற கதைகளும் பெண்கள் தங்கள் அடையாளங்களைத் தேடும் கதைகளாக அமைகின்றன.

Image
நன்றி: சொல்வனம்

வெடித்தெழும் வாழ்வு

ஆய்வுக்காகப் பாரீஸ் போயிருந்தபோது ,அவனோடு –விச்வாவோடு-கொண்ட உறவால் உருவான குழந்தையை –ரெட்டைக் குழந்தைகள்- புனேவுக்குப் போய்க் கலைத்து விட்டு வந்திருந்தாள்.அவன் திருமணம் செய்துகொள்ளவோ அவை தன் குழந்தைகள் என ஏற்கவோ தயாராக இல்லை.காரணம் அவள் –சகு- கருப்பு.கருக்கலைப்புச் செலவுக்கு அவளுக்குப் பணம் அனுப்பியிருந்தான் அவனாலும் பொறுப்பை ஏற்க முடியும் என்னும் குறிப்புடன்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு பின் மாலையில், வாசகசாலையில் படித்துக்கொண்டிருந்த அவனைப் பார்க்கிறாள்.அவனிடம் வந்து கொஞ்சம் வெளில வர முடியுமா?” என்றாள்.

“நான் அது பத்திப் பேசத் தயாராக இல்லை”

இது அது பத்திப் பேச இல்லைஎன்றாள்.

வெளியே பசும் புல் தரையில் யாருமில்லை . அது எல்லோரும் இரண்டாவது முறை தேநீர் பருகப் போகும் நேரம். மங்கலான நிலவு.

புல்வெளியின் நடுவே அவன் வந்ததும், அவன் எதிர்பாராத இருணத்தில் காலிலிருந்த செருப்பைக் கழற்றி அவனைப் பாய்ந்து பாய்ந்து அடித்தாள். அவன் தடுத்துக்கொள்வதற்கு முன்னால் முகம், முதுகு, தொடை, தலை எனமாறி மாறி அடி விழுந்தது. இடுப்பில் சொருகி இருந்த பணத்தை அவன் மேல் வீசிவிட்டு மீண்டும் அடித்தாள். ‘பாட்டுக்குப் புரண்டுதடா அது ரெண்டும்! உன் நிறமும் இல்லாமல் என் நிறமும் இல்லாமல் ரத்தச் சதையாய் இருந்ததுடா! கண், காது, கை, கால் எல்லாம் இருந்ததுடா!’ ஒவ்வொரு சொல்லையும் அழுத்தி அழுத்திச் சொல்லிச் செருப்பால் அடித்தாள்.

என்னால் திருப்பி அடிக்க முடியாதா?’ என்று அவன் கத்தியபோது, தூரத்தே நின்றுகொண்டிருந்த அருள் அருகே வந்து,சினத்தால் நடுங்கிக்கொண்டிருந்த அவளை வலுக்கட்டாயமாய் அழைத்துப்போனான்.

”நிலவைத்தின்னும் பெண்” கதையில் வரும் ஒரு காட்சி இது.பெரிய படிப்புப் படித்து அறிவுஜீவிகளாக வாழ்ந்த நிலையிலும்,உடலைப் பகிர்தல் என்பது விருப்பம் சார்ந்தது மண உறவு என்னும் பந்தம் கட்டாயமில்லை என்கிற சிந்தனைப்போக்குள்ள அறிவுசார் உலகத்திற்குள்ளே செருப்படியைக் கொண்டு வந்து சேர்க்கிறார் அம்பை.அவனுக்கு அது தகும் என்று அவனுடைய அம்மாவே சகுவுக்குக் கடிதம் எழுதுகிறார்.தன்னை ஒரு மூத்த சினேகிதியாக ஏற்றுக்கொள்ளுமாறு கடிதத்தில் கோருகிறார்.

இப்படி ஒருமுகமாக அம்பையின் கதைகள் இருப்பதில்லை.பெரும்பாலும் கிளைக்கதைகள் இருக்கும்.இக்கதையிலும் ஒரு கலைஞன் இப்படி இருக்கலாமா என்கிற சகுவின் கேள்வியை முன் வைத்து விச்வாவின் அம்மா பாகீரதி தன் கதையைக் கூறுகிறார்.

கலையும் கலைஞனும் வேறு வேறா?கலையால் கலைஞனா கலைஞனால் கலையா என்கிற நீண்ட கால விவாதத்தைச் சற்றே நினைவுபடுத்திப் பின் தொடர்கிறது கதை.விச்வாவின் அம்மாவும் சகுவைப்போல அந்தத் தலைமுறையின் விடுதலை பெற்ற ஒரு பெண்மணிதான்.அதனால்தான் அவரால் சகுவைப் புரிந்து கொள்ள முடிகிறது.

சிறகுகள் முறியும் கதையிலும் சாயாவை அவளுடைய அம்மா மட்டுமே சரியாகப் புரிந்து கொள்வார்.காரணம் அவர் அம்மா என்பதால் அல்ல.அவரும் அவருடைய வாழ்க்கையில் தன் கணவனைச் சந்தித்தவள் என்பதால்.இப்படி அநேகமாக எல்லாக்கதைகளிலுமே இரண்டு தலைமுறைகள் மூன்று தலைமுறைகள் என அம்பை கதைகளை விரிப்பது தலை முறை தலைமுறையாகத் தொடரும் ஆணாதிக்க வாழ்முறையை உரித்துக் காட்டவே என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.நிலவைத்தின்னும் பெண் கதையில் இன்னும் கூட ஒரு கிளைக்கதை உண்டு.விச்வாவின் அப்பா  பாகீரதியைப் பிரிந்த பின் இன்னொரு பாடகியோடு வாழத்துவங்குகிறான்.அந்தப்பாடகியை ஒருமுறை பாகீரதி சந்திக்க நேர்கிறது.அவள் பாகீரதியின் அருகில் வந்து கிசுகிசுக்கிறாள்,”நீ பறந்துட்டே..நான் இன்னும் கூண்டில்..” சொல்லப்படாத கதை ஒவ்வொரு பெண்ணிடமும் தொக்கி நிற்கிறது என்கிற உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்திக்கொண்டே இருப்பவை அம்பையின் கதைகள் எனலாம்.

இந்தத்தலைப்பின் கீழ் கறுப்புக்குதிரைச் சதுக்கம்,பிரசுரிக்கப்படாத கைப்பிரதி,மல்லுக்கட்டு, ராவணன் கோட்டை, காவுநாள்,அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு எனப்பல கதைகளை விவாதிக்க முடியும்.

”கறுப்புக்குதிரைச் சதுக்கம்” ரோஸா என்கிற பெண்ணின் கதை.மார்க்சிய அறிவுஜீவியான டெல்லியில் வசிக்கும் லெனின் என்கிற தோழரின் தங்கை ரோஸா.ரோஸா அம்மாவுடன் மும்பாயில் வசிக்கிறாள்.ஆலைத்தொழிலாளர் சங்கத்தில் தீவிரமாக இயங்குபவள்.அதற்காகப் படிப்பையே விட்டவள். லெனினின் இணையர் அபிலாஷா ரோஸா வீட்டுக்குச் சென்று அவளைச் சந்தித்து அங்குள்ள நிலைமைகளை  லெனினுக்கு எழுதும் ஒரு கடித வடிவில் இக்கதை எழுதப்பட்டிருக்கிறது.

புரட்சிகர இயக்கம் ஒன்றைச் சேர்ந்த பிரபாகர் ஷிண்டேயுடன் சேர்ந்து வாழும் ரோஸா கருவுற்றிருக்கிறாள்.அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடத் திட்டமிட்ட அன்று காவல்துறை மில் கிடங்கில் தீ வைத்ததாகச் சொல்லி பிரபாகரை இழுத்துச் செல்கிறது.பிணமாகத்தான் மறுநாள் அவனைப் பார்க்கிறார்கள்.ரோஸாவின் அம்மாவும் பிரபாவின் அம்மாவும் எனச் சிலர் மட்டுமே அவன் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.மறுநாள் மில் கிடங்கில் தீ வைத்த வழக்கில் பிரபாகருடன் அவளும் உடந்தை என்று சொல்லி காவல்நிலையத்துக்கு விசாரணைக்கென ரோஸா அழைத்துச் செல்லப்படுகிறாள்.

”பொம்பளை ,போலீஸ் ஸ்டேஷன் போனா என்ன  ஆகும்? அதுதான் ஆச்சு. தடிதடியா வந்து விழுந்தாங்க மேல. மயக்கம் போட்டப்ப எல்லாம் தண்ணி அடிச்சு எழுப்பினாங்க. முழிக்கிற போதெல்லாம் ஒருத்தன் மேல இருந்தான். அவங்க பண்ணி சலிச்ச பெறகு இருக்கவே இருக்குது குச்சி, கம்பு, ஒயருன்னுட்டு, எதெது நுழையுதோ அது. அப்புறம் சிகரெட் நெருப்பால மார்ல சுட்டாங்க. கோடவுன்ல நெருப்பு வெச்சவன் கெடச்சுட்டான். உடம்புல பண்ண இன்னும் ஒன்றும் இல்லவெளீல அனுப்பிட்டாங்க”.அவள் கருவும் கலைந்து போனது.

ஆனால் அந்த வன்முறைக்கு எதிராகப் புகார் கொடுக்க அவள் தயாராக இல்லை.இந்த சட்ட ஏற்பாடுகளின் வர்க்கத்தன்மையை அவள் அறிந்திருந்ததால் அவற்றின் மீது அவள் நம்பிக்கை கொள்ளவில்லை.

”ரோஸாவைச் சம்மதிக்க வைக்க ஒரு வாரமாயிற்று. அவள் வாதம் தீர்மானமாக, துளி ஓட்டையில்லாமல் இருந்தது. தன் நிலை விளம்பரம் ஆவது பற்றி வெட்கமோ கூச்சமோ அவளுக்கு இருக்கவில்லை. ஆனால் நீதிமன்றங்களின் நீதிபற்றி அவளுக்கு உறுதியான அவநம்பிக்கை யிருந்தது. நான் சொல்லக்கூடியதெல்லாம் எந்த அமைப்பு உன்னை ஒதுக்குகிறதோ அதன் ஸ்தாபனங்களைஉன்னை ஒடுக்கப் பயன்படுகிறதே அவற்றைநீயும் உன்னளவுக்கு உபயோகி என்பதுதான். ஜனநாயக உரிமைக் கழக ராதாவும் இதை வந்து வற்புறுத்தினாள். ரோஸா டீ போட்டுத் தந்தாள். எங்களுடன் பல மணி நேரங்கள், இரவில்கூட, உட்கார்ந்திருந்தாள். நாங்கள் சொல்வதை எல்லாம் அவள் கவனமாகக் கேட்டாள். மாட்டேன் என்பதை அவள் வாய்விட்டுச் சொல்லாமலே அதன் அலைகளை அறையில் பரவவிட்டாள்

கடைசியில் அவளைக் கனிய வைத்தது உன் அம்மாதான். சண்டையிடும் பாணியும், ஆயுதமும் இப்படித்தான் என்பது சாஸ்வதமாக்கப் பட்டது இல்லை. தண்ணீரில் சண்டை போடும்போது துடுப்புத்தான் ஆயுதம், படகு கவிழ்ந்தால் கரைவரை கைதான் துணை. சொன்னது உன் அம்மா.

உன் அம்மா போன்றவர்களிடம் ஒரு பாஷை இருக்கிறது. அதற்கு, சொற்களுள்ள மொழியின் ஏற்ற இறக்கங்களும், ஒரு புலப்படாத உருவ அமைப்பும் இருக்கிறது. இருந்தும் அதில்

சொற்கள் இல்லை. கை வீச்சில், கண் பார்வையில், முதும் அழுத்தும் கையில், சிரிப்பில், அழுகையில், அரற்றலிம் ஒலத்தில், சொற்கள் நிராகரிக்கப்பட்ட மௌனத்தில் அழுந்திக்கொண்டிருக்கிற பாஷை இது. எங்களையும் அவர்களையும் பிரிப்பது இந்த பாஷைதான். ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் நாங்கள் பேசினாலும், அது ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ளும் மொழிதான். வெறும் பாலம். நாங்கள் தேடுவது வேறு பாஷை என்று தோன்றுகிறது இந்தப் பக்கம்அந்தப் பக்கம் என்று இல்லாத பாஷை. இரு கரைகளையும் முறுக்கிப் பிணைந்துவிடும் பாஷை. சிறு குழந்தை இரு கைகளையும் விரித்துத் தூக்கியவுடன் புரிந்துவிடும் பாஷை.”

மீண்டும் ரோஸாவிடம் வருகிறேன். அன்றையப் பேச்சுக்கு ரோஸா எந்த ஆயத்தமும் செய்யவில்லை. காலால் மிதித்து நசுக்கப்பட்டவர்களின் நாபியினுள் ஒரு மொழி ஊற்று இருக்கிறது. அது உன் எழுத்தில் இருக்கிறதென்று நான் எண்ணியதுண்டு. எவ்வளவு தவறு அது. உன்னிடமோ என்னிடமோ அது வர அதன் தாபம் நமக்குள் நுழைய வேண்டும். அதன் நாக்குகள் நம்மைத் தீண்டி நம் சருமத்தைக் கரகரவென்று நக்க வேண்டும்.

அம்மாவின் மொழி பற்றியும் ரோஸாவின் மொழி பற்றியும் அம்பை எழுதியுள்ள இவ்விரு பத்திகளும் மிக முக்கியமானவை. போராட்டப்பாதையில் பயணிப்பவர்கள் மக்களின் மொழியைக் கற்றுக்கொள்ளும் அவசியம் மற்றும் ஒரு வழிமுறை பற்றிய அழுத்தம் இப்பத்திகளில் இருப்பதாகத் தோன்றுகிறது.தன் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகளையும் தாண்டி போர்க்களத்தில் உறுதி குலையாது நிற்கும் ரோஸா, அம்பை படைத்த பெண்களில் தனித்த ஒளியுடன் துலங்குபவள்.

A Kitchen in the Corner of the House - Kindle edition by AMBAI, Holmström, Lakshmi. Literature & Fiction Kindle eBooks @ Amazon.com.

மதவாதம் ஒழிக

திக்கு,கடற்கரையில் ஒரு காவிப்பிள்ளையார்,ஓர் இயக்கம் ஒரு கோப்பு சில கண்ணீர்த்துளிகள்,1984 ,பயணம்-6,பயணம்-18,பயணம் -20 ஆகிய கதைகள் மதவெறி அரசியலுக்கு எதிராக வலுவான குரலில் பேசுகின்றன.கலைநுட்பம் கூடிய மதவெறி எதிர்ப்புக் கதைகளை தமிழில் இப்படி அம்பை அளவுக்கு வேறு யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.எவ்வித மனத்தடையுமின்றி ஒரு மதச்சார்பற்ற நிலைபாட்டில் காலூன்றி இக்கதைகளை அவர் எழுதியுள்ளார்.

‘1984’இல் இந்திரா காந்தி கொல்லப்பட்ட அன்று சீக்கியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள். டெல்லியில் காங்கிரஸ் மத்திய அமைச்சர் தலைமையில் காங்கிரஸ் குண்டர்களும் ஆர்.எஸ்.எஸ்.சங்கிக்குண்டர்களும் கைகோர்த்து இந்தப் படுகொலைகளையும் நடத்தினர்.அம்பையின் ‘1984’ கதை வாசிக்கும் எவரையும் கதறி அழ வைக்கும் கதை.ஜெர்மனியில் இருந்த ஒரு ஆய்வாளரான மலர், தன் சக ஆய்வாளரான –சீக்கியரான- தன் தோழி ஹர்ப்ரீத்தைத் தேடி அலைந்து அமிர்த்சரசில் தீவைக்கப்பட்டுச் சிதைந்த அவள் வீட்டில் 43 ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிறாள்.அந்தச் சந்திப்பில் மலரிடம் அன்று நடந்ததை ஹர்ப்ரீத் விளக்குகிறாள்:

இந்திராகாந்தியைச் சுட்ட பின்னால எங்களால திரும்ப முடியல. அதற்கடுத்த நாள் கூட்டம் கூட்டமாய் வந்தாங்க. கையில் கத்தி, கம்பு, துப்பாக்கி, கெரோஸின். என்ன நடக்குதுன்னே தெரியலை. மதன் என்னை மொட்டைமாடிக்குப் போகச் சொன்னார். நான் மகளுடன் போகத் திரும்பினேன், கதவு உடைபட்டுது. பாவ்ஜி, மதன், அர்மான், அம்ரிந்தர், காகாஜி எல்லாரையும் தரதரன்னு இழுத்துட்டுப் போனாங்க. டயரை எரிச்சு அவங்க மேல போட்டாங்க. லாஜ்வந்தியை யாரோ இழுத்துட்டு ஓடினாங்க. அவளோட உடலைத்தான் அப்புறம் பார்த்தேன். 14 வயதுக் குழந்தை அவள். அவளோட உடம்பைக் காகிதம் மாதிரிக் கிழிச்சு … “மம்மீ, பப்பான்னு அலறல் கேட்டுது. கேட்டுட்டே இருந்துது. பாவ்ஜி கத்தியது கேட்டுது. மதன்ப்ரீத், ப்ரீத்னு ஓலமிட்டது கேட்டுது. எல்லாச் சத்தமும் கலந்து கெரோஸின் வாசனையும் அலறலும்நான் மயங்கிப் போயிட்டேன். மலர், நான் அப்புறம் பார்த்தது வெறும் கரிக்கட்டைகளைத்தான். கரிக்கட்டைகளைத்தான் திருப்பி சுடுகாட்டுல எரிச்சோம். நானும் மதனும் விரும்பிய குழந்தை வயிற்றுல இருந்துது. ரத்தமும் சதையுமா வெளில வந்துது.”

ஹர்ப்ரீத்தின் குரல் எந்த உணர்ச்சியின்  ஈரமுமின்றி  உலர்ந்திருந்தது.

மலர், இத்தனை எல்லாம் ஆன பிறகும் நான் வாழ்ந்தேன். எனக்குப் பசிச்சுது. சாப்பிட்டேன். என்ன மாதிரி உடம்பு இது? எல்லாத்தையும் மாத்தினேன். வேற ஸ்கூல். வேற வீடு. ரிடயர் ஆனதும் நான் அமரித்ஸர் வந்தேன். இது எங்க பழைய வீடு. இந்த அறையை மட்டும் கொஞ்சம் ஒழுங்காக்கி இங்கே இருக்கேன். சாப்பாட்டைக் குறைச்சிட்டேன். சில நாள் சாப்பிடுவது இல்லை. அப்படியும் சாவு வரமாட்டேங்குது. ஏன் மலர்?” வறண்ட குரலில் கேட்டாள் மண்டியிட்டு அமர்ந்திருந்த அவளை நோக்கி.

அவள் கைகளை மெல்லத் தடவி, “ப்ரீத், நீ என் வீட்டுக்கு வா. மதன் என் கிட்ட எப்பவும் சொல்வார்ஹர்ப்ரீத் உன் தோழி இல்லை, உன் சகோதரி.’ என்னோட வாஎன்றாள்.

மிகவும் களைத்தவள்போல் நாற்காலியை விட்டு எழுந்து தரையில் அமர்ந்து அவள் தோளில் சாய்ந்துகொண்டு பிறகு சரிந்து அவள் மடியில் தலை வைத்துப் படுத்தாள்.

தூங்கணும் மலர். முப்பத்து நாலு வருஷமா தூங்கலைஎன்றாள்.

அவள் தலையைத் தடவித் தந்தாள்.

இந்தக்கதை 1984 படுகொலைகளை மட்டும் பேசும் கதையாக அல்லாமல் ராஜீவ் காந்தி படுகொலை வரையிலான எல்லா வரலாற்று நிகழ்வுகளையும்  விவாதிக்கிறது.கிளைக்கதைகளும் உண்டு.

I want someone to write my thesis: Someone To Write My Thesis

குஜராத்தில் முதலமைச்சர் மோடி அரசின் பாதுகாப்பின் கீழ் முஸ்லீம்கள் மீது ஏவப்பட்ட இனப்படுகொலை நாட்கள் பற்றிப் பேசும் கதை “பயணம்-20”.  ஆமதாபாத்திலிருந்து 2002இல் உயிர்தப்பி மும்பைக்கு  ஓடி வந்த ஒரு ஜோடிக் காதலர்களை அறிமுகம் செய்கிறது இக்கதை.ஒருவர் இந்து.இன்னொருவர் இஸ்லாமியர்.மோகன்பாய்-ஜமீலா. 2001இல் மதமறுப்புத் திருமணம் செய்துகொண்ட  அவர்களுக்கு இங்கு வந்தபிறகுதான் குழந்தைகள் பிறக்கிறார்கள். பிறந்த குழந்தைகளுக்கு ராம் ரகீம்,கபீர் கிருஷ்ணா,ஜாஸ்மின் ஜோத்ஸனா என்று பெயர்சூட்டி வளர்க்கிறார்கள்.இருவித மத வெறியையும் எதிர்க்கும் அரசியல் அத்தம்பதிகளின் உள்ளத்தில் இருக்கிறது. தையல் தொழில் பார்க்கும் மோகன்பாய் ஒருநாள் கைத்தையல்; எந்திரத்தோடு தண்டவாளத்தைத் தாண்டும்போது மின்சார ரயிலில் அடிபட்டுச் சாகிறார்.அவர் தானாக விழவில்லை.யாரோ தள்ளி விட்டார்கள்.துரோகி என்கிற சத்தமும் கேட்டது என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.துரோகி எனக்கத்தியது இந்துவா முஸ்லீமா என்பது தெரியவில்லை.குஜராத்தி தப்பி இங்கு வந்து மும்பையில் வளர்ந்து வரும் மதவெறிக்குப் பாலியான கதை.

இக்கதையில் சொல்லப்படாமல் நம் யூகத்துக்கு விடப்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன.2001 இல் திருமணமானாலும் குஜராத்தில் இருக்கையில் குழந்தை பெறவில்லை அவர்கள்.மதவெறி உச்சத்திலிருந்த குஜராத்தில் தாங்கள் எப்போதும் தாக்கப்படலாம் என்கிற சூழ்நிலையில் காதலும் காமமும் முகிழ்க்காது என்பது சொல்லப்படவில்லை.ஆனால் நமக்குப் புரிகிறது.குஜராத்திலிருந்து அவர்கள் தப்பும் காட்சி மனதை அசைக்கிறது.வெளிப்படையாக ஏதும் சொல்லாமலேயே நமக்கு இந்து வெறிச் சங்கிகளின் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மீதும் கோபம் வருகிறது.அதுதான் அம்பையின் கலையின் அரசியல். 

குஜராத்தில் 2002 பிப்ரவரி முதல் மே வரை நடைபெற்ற இன அழித்தொழிப்புக் காலத்தின் உடனடித் தொடர்ச்சியாக  2002 ஜூலை காலச்சுவடு இதழில் அம்பை  எழுதிய ”ஓர் இயக்கம் ஒரு கோப்பு சில கண்ணீர்த்துளிகள்” என்கிற சற்றே நீண்ட கதை ,சமகால நிகழ்வின் மீதான ஓர் படைப்பாளியின் காத்திரமான எதிர்வினை என்று சொல்ல வேண்டும்.குஜராத்தில் அருகருகே வாழ்ந்த குடும்பங்களுக்குள் விஷக்காற்றாய்ப் புகுந்து விட்ட மதநோக்கை யதார்த்தம் குலையாமல் இக்கதை எடுத்துரைக்கிறது.நரோடா பாட்டியா தீ வைப்புப் போன்ற சம்பவத்தில் கலந்துகொண்டு கையில் கெரசின் வாடையுடன் திரும்பும் பக்கத்து வீட்டுத்தோழியின் கண்களில் டாலடிக்கும் பகையுணர்ச்சியை அம்பையின் வார்த்தைகள் பதட்டத்துடன் பதிவு செய்கின்றன.

குஜராத்தில் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்காக இயங்கிய ‘ஜாக்ருதி’ என்கிற அமைப்பின் தீவிர செயல்பாட்டாளரான ஸகீனா மாடியிலிருந்து விழுந்து சாகிறாள்.ஏன் செத்தாள்?எப்படிச் செத்தாள்?தற்செயல் மரணமா?தற்கொலையா?என்கிற பல கேள்விகளுக்குக் கதை விடை தேடுகிறது.அவள் சாவதற்கு முந்தின நாள் இரவு ஸகீனா தன் தோழியுடன் பேசிக்கொண்டிருக்கிறாள்.அதைத் தோழி இப்போது நினைவு கூர்கிறாள்:

  முதல்நாள் இரவு நடந்த ஒரு சம்பவத்தைச் சொன்னாள். அகதிகள் முகாமருகே இவள் போனபோது சற்று நேரமாகிவிட்டதாம். எதிரே ஒரு முஸ்லிம் இளம்பெண்  இடுப்பில் ஒரு குழந்தையும், கையைப் பிடித்தபடி ஒரு குழந்தையுமாய் வந்துகொண்டிருந்தாளாம். குழந்தைகளையும் சமாளித்தபடி ஒரு கையில் பையையும் வைத்துக்கொண்டு வந்தவள், விரலிடுக்கில் மூவர்ணக் கொடி ஒன்றைப் பிடித்துக்கொண்டு அதை எதிரே நீட்டியபடி வந்துகொண்டிருந்தாளாம். ஒரு தற்காப்பு ஆயுதம் மாதிரி. நானும் இந்தத் தேசத்தின் பிரஜைதான் என்று முறையிடுவது போல்.

நான் கேவிக்கேவி அழுதேன், செல்வி, அதைப் பார்த்து. அப்படி நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏன் சிலருக்கு மட்டும்? என் காலா சுதந்திரப் போராளி. என் மாமு இந்த நகரத்தின் பல தர்மஸ்தாபனங்களின் தலைவர். என் அம்மி ஒரு பள்ளி நிர்வாகியாக இருந்து ஓய்வு பெற்றவள். கருகிச் செத்தவள். என் அப்பா உயர் அதிகாரியாக இருந்தவர். இதோ நான் பாம்புக் கழுத்துடன் நடமாடுகிறேன். அந்தப் பெண்ணுக்கும் அப்படி ஒரு குடும்பம் இருக்கலாம் இல்லை , இந்தியாவில் உள்ள எத்தனையோ ஏழைப் பெண்களில் ஒருத்தியாய் அவள் இருக்கலாம். குழந்தைகள், பை, மூவர்ணக் கொடி என்று அவள் தடுமாறிக்கொண்டு நடந்ததைத் தாங்க முடியவில்லை …” என்று கூறிவிட்டு வெகுநேரம் அழுதாள். “என் காலா இப்படி, என் அம்மி இப்படி என்று நான் வரிசைப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டதே ….” என்று சொல்லிச்சொல்லிப் பொங்கினாள்.

அவள் குடும்பத்தினர் இயல்பாகச் செய்தவைகளை நிரூபணங்களாகப் பார்க்கவேண்டி வந்துவிட்டதே என்று மாய்ந்து போனாள். “செல்வி, சாரு கூறுவாளே நினைவிருக்கிறதா? பறவை இறக்கத் தீர்மானித்ததும் ஏகப்பட்ட சிறு கற்களை விழுங்கிவிட்டு மேலே பறந்து, கற்களின் கனத்தால் பறக்க  முடியாமல் தரையில் மோதி விழுந்து இறந்துவிடும் என்று? நிறையக் கற்களை விழுங்கிவிட்டது போல் கனக்கிறது மனது

ஸகீனாவின் மரணத்துக்கு இதைவிடவும் முக்கியமான காரணம் இதே இயக்கத்தைச் சேர்ந்த நந்தினி அவளை முஸ்லீம் என்பதற்காக தன் குடும்பத்திலிருந்து  ஒதுங்கி இருக்கச் சொன்னதுதான் என்பதை நந்தினியின் தாய் கண்டுபிடிக்கிறாள்.நந்தினியை மன்னிக்கவே முடியாது என்பதால் அவளை வீட்டை விட்டு வெளியேறச் சொல்வதோடு கதை நிறைவு பெறுகிறது.

”வாழ்க்கை பற்றிய பெரும் நோக்கு மதங்களாகக் குறுகி,அவற்றின் குறியீடுகளாக்கி விட்டோம் நாம்.வெறும் குறியீடுகள் அவர்கள் கணிப்பில் மதத்துக்கான,நாட்டுக்கான குறியீடுகள்.அதில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது.இந்த யுத்தத்தில் உங்கள் களம் அதுதான்.அடையாளங்களால்,விளக்கங்களால்,குறுக்கப்படாத களம்” என்பதுதான் கதையில் சுதந்திரப்போராட்ட வீரர் நர்கீஸ் காலாவின் வழியாக அம்பை நமக்குக் கூறும் செய்தி. 

ஒரு அசலான கலைஞன் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பாக இக்கதையைப் பார்க்க வேண்டும்.நேரடியான கலவரச் சித்தரிப்புகளைச் சொல்வதை விட,அது தனி மனித உறவுகளை ஊடறுத்துப் பாய்ந்த கதையைச் சொல்வதுதான் மிக முக்கியம்.இன்று மெல்ல மெல்ல வலப்பக்கம் சாய்ந்து வரும் ஜனத்திரளுக்குள் சென்று வேலை செய்கிற செயல்வீரர்கள் அம்பையின் இந்தக் கதைகளையெல்லாம் வாசிப்பது அவசியம்.

Image
நன்றி: சொல்வனம்

அம்பையின் பயணக்கதைகள்

பயணம்-1,பயணம்-2,பயணம்-3……என 23 கதைகளை இதுவரை அம்பை எழுதியிருக்கிறார்.ஒரு பெண் இச்சமூக வெளியில் மேற்கொள்ளும் தனிப்பயணங்கள் (சாலைகளிலும்,தண்டவாளங்களிலும்,மன வெளிகளிலும் ) தரும் அனுபவங்களும் படிப்பினைகளும் எத்தனை விதமானவை?இந்தப்பயணங்கள் சமூகத்தின் பிற்போக்கான சிந்தனைகளை ஊடறுத்துச் செல்பவையாகவும் அமைகின்றன.

பயணம் -1 கதையில் திருச்சிக்கு ஒரு வேலையாகத் தனித்துச் செல்லும் ஒரு பெண் அங்கே உட்காராதீங்க..இங்கே உட்காருங்க என்பதில் துவங்கி பயணம் முழுக்க யார் யாராலோ எது எதற்கோ வழிகாட்டப்பட்டு,  விமர்சிக்கப்பட்டு, குறைகூறப்பட்டுக்கொண்டுமாகப் பயணிக்க வேண்டியிருக்கிறது.பெண் என்றால் அந்த விமர்சிக்கும் உரிமையை யார்வேண்டுமானாலும் பொதுவெளியில் எடுத்துக்கொள்கிறார்கள்.இது உண்மையில் அந்தத் தனிப்பெண்ணின் பயணக்கதையாக அல்லாமல் குறியீடாக ஒட்டு மொத்தப் பெண் குலத்தின் வரலாற்றுப் பயணத்தைச் சொல்வதுபோலாகிவிடுகிறது.

பயணம்-3 இல் அம்மை போன்ற வியாதிகளைத் தடுக்கும் சாமியான மாரியம்மனை வணங்கிப் படையலிட வேலைக்காரப் பெண்ணுடன் தன் மகளை அனுப்பி வைக்கும் ஒரு தாய் வருகிறாள்.ஆனால்,அவள் மாரியம்மனை வணங்கப்போவதில்லை.ஏனெனில் அது ”அவுங்க சாமி ”.சாதியில் ’குறைந்தோர்’ வணங்கும் சாமியை சாதியில் மேலிருக்கும் அவள் எப்படி வணங்குவது?

பயணம்-5 இல் பாண்டிச்சேரிபோய் வோட்கா குடிக்கவேண்டும் என்று ஆவலுடன் திட்டமிட்டுச் செல்லும் ஒரு பெண்கள் குழு கதை முடிவில் முதியோரான ஒரு ஆண்-பெண் நட்பின் வளையத்தில் இணைந்து அருந்துவதாக முடியும்.அவர்களின் மதுவைத்தேடிய பயணமாக கதை துவங்கினாலும் அந்த மூத்தோர் நட்பின் பயணத்தைச் சொல்லும் கதையாக மாற்றம் கொண்டு விடுகிறது.

 

பயணம் -14 சாதிக்கு எதிராகச் சண்டை போடும் ஒரு ரயில்பயணக் கதை.இப்பயணக்கதைகளில் மிக முக்கியமான கதை.சாதியத் தெரிந்து கொண்டபின் தான் எதிர் சீட்டுப் பெண்ணிடம் தண்ணீர் கேட்க முடியும் என்பதிஉல் உறுதியாக நிற்கும் முதியவரிடம் தன்னைத் தாழ்த்தப்பட்ட சாதிக்காரி என்று சொல்லி அவருக்குத் தண்ணீர் தர மறுக்கும் பெண்மணி இவ்வளவு சாதி பாக்கிற ஆளு விக்கிச் சாகட்டுமே என்று சக பயணிகளிடம் கூறுகிறாள்.

பயணம்-17 டில்லி எப்படி ஒரு பாலியல் வன்முறையின் தலைநகரமாகி விட்டது என்பதை விரிவாக விளக்கி, அந்த டெல்லியைப்பற்றி எதுவுமே தெரியாமல், தன்னுடைய பெற்றோரின் கட்டாயக்கல்யாண முயற்சியை முறியடிப்பதற்காக ஓடி வந்து ரயிலேறி டெல்லி செல்லும் ஓர் இளம் பெண்ணின் கதையை நம் மனம் பதைக்கச் சொல்கிறது.பாதுகாப்பற்ற ஊரிலிருந்து பாதுகாப்புத் தேடி அதைவிடப் பாதுகாப்பற்ற டெல்லிக்கு ஓடும் அவலம்தான் கதை.

பயணம்-18 இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது தற்செயலாக எந்த சேதாரமுமின்றித் தப்பி வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த திலீப் கன்னா நடிகனாகிப் புகழ் பெறத்துவங்கும் காலத்தைச் சொல்கிறது.தன்னுடைய குடும்பத்தில் எந்தப்பெண்ணுக்கும் ஏதும் நேராமல் இந்தியாவுக்குத் தப்பி வந்திருந்தாலும் திலீப் கன்னாவின் அப்பா மது அருந்தும் நாட்களில் “எல்லாம் போச்சே” என்று கதறுகிறார்.தேசத்தின் துயரைத் தனிப்பட்ட துயரமாக உணரும் அந்தத் தலைமுறையின் பிரதிநிதியாக அந்த அப்பாவை அம்பை படைத்திருக்கிறார்.

பயணம்-19,22,23 போன்றவை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் அனுபவங்களாக விரிகின்றன.

பயணம் -19இல் நார்வே செல்லும்  பெண்மணி தமிழ்நாட்டு வழக்கப்படி பேசும்போது அவளுடைய குரல் ஓங்காரமாகக் கேட்கிறது.ஆஸ்லோ நகரில் அவளுக்குத் தங்கியிருக்க இடம் கொடுத்த வீட்டார் தொந்தரவுக்குள்ளாகிறார்கள்.ஆஸ்லோ நகரம் மெல்லப்பேசும் கலாச்சாரத்தைக் கொண்ட நகரம்.அந்த வீட்டு நாய் கூட இவள் பேசத்துவங்கினால் தெறித்து ஓடிவிடுகிறது.இப்படியே வெகு சுவாரசியமாகச் செல்லும் இக்கதையில் ஒரு கட்டத்தில் அந்தநாயுடன் பேசுகிறாள் நம் தமிழணங்கு:

இதோ பார் தங்கமே, எங்க பண்பாடு வேற. நல்ல வெய்யில் எங்கள் குரலை இளக்கியிருக்கு. வெய்யில்ல கத்திப் பேசுவோம். குளிர்ல குளிரைத் தாங்கிக்கக் கத்திப் பேசுவோம். வசந்த காலத்துல உற்சாகமாக் கத்திப் பேசுவோம். இலையுதிர் காலத்துல மொட்டை மரங்களைப் பார்த்தபடி கத்திப் பேசுவோம். பொது டெலிபோன்ல ஊரைக் கூட்டும்படி குசலம் விசாரிப்போம். இருபதடி தூரம் இருப்பவரை இங்கிருந்தே கூப்பிட்டுக் கதை பேசுவாம். ஐந்தடி தூரத்தில் இருப்பவருடன் வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்துப்போம். கோபம், காதல், காமம், பிறப்பு,

எல்லாமே சத்தத்தோடுதான். கொண்டாட்டங்கள், கோலாகலங்கள் எல்லாமே சத்தம் போட்டுத்தான். கார்,

இரைச்சலை மீறிச் சத்தமாப் பேசுவோம் நகரத்துல இருக்கிறவங்க. எங்களுக்குள் ரகசியமே கிடையாது. மௌனமே  கிடையாது எங்களுக்கு. நீ புரிஞ்சுக்கணும். நீ ஐரோப்பிய நாய்..உனக்கு எங்களைப் பற்றித் தெரியாது”

ஒருவகையில் இக்கதை வாசிக்கச் சுவையாக இருந்தாலும் மௌனக்கலாச்சாரப் பின்னணியில் ஒரு தமிழ்ப்பெண்ணைக் கொண்டுபோய் நிறுத்தி இப்புனைவின்வழி தமிழ் வாழ்க்கையை நக்கலடிப்பதாகக் கொள்ளலாம்.அம்பைக்கு இந்தச் சத்தம் பிடிக்காவிட்டாலும் நமக்குப் பிடிக்கிறது.தவிர,சத்தமான சமூகம் என்று மொத்த சமூகத்தையும் ஒற்றை வரியில் அடையாளப்படுத்துவத் சரியா?மௌனியின் குரல் இக்கதைக்குள் நூலிழை அளவு ஓடுவதாகத் தோன்றுகிறது.முதுமையின் தனிமை போக்க…

சமயவேல் தன்னுடைய ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதுபோல “அம்பையின் சமீபத்திய (ஜன 2019 வெளியீடு) சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவைசிறுகதைத் தொகுப்பில் பெரும்பாலான கதைகள் மூப்படைதல் மற்றும் முதியோர்கள் பற்றிய மிக ஆழமான கதைகளாக இருக்கின்றன. வீட்டில் ஒரு தேவையற்ற சுமையாக கருதப்படும் முதியோர்களை எவ்வாறு dispose செய்வது என்பது தற்கால இளம் தலைமுறையினருக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது.” 60 வயதிலிருந்து 95 வயது வரையிலான பல பெண்களும் ஆண்களும் தொண்டை புடைத்த காகம்,வீழ்தல்,வில் முறியாத சுயம்வரங்கள்,பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்..,,அசர மரணங்கள் போன்ற பல கதைகளில் வருகிறார்கள்.பெரியவர்களை என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களுடைய குழந்தைகள் பேசி முடிவெடுத்துச் சொல்கிறார்கள்.ஆனால் அதன்படி நடக்க பெரியவர்கள் விரும்பவில்லை என்பதையே எல்லாக் கதைகளிலும் அம்பை பேசுகிறார்.

அம்பைதன்னுடைய 76-77 ஆவது வயதில் எழுதியிருக்கும் இந்த நுட்பமான கதைகள் ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் முக்கியமான கதையாகிறது.வில் முறியாத சுயம்வரங்கள் கதையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தன் கணவர் அருணை இழந்து, பிள்ளைகளை வெளிநாட்டுக்குக் கொடுத்துவிட்டுத், தனித்திருக்கும் சாந்தி சில நாட்களில் ஓய்வு பெற இருக்கிறாள்.அவள் ஓர் ஆண் சக பயணியைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் கூறுகிறார்கள்.அவரவர் சொத்து அவரவரிடம் இருக்க,மூத்த குடிமக்களான ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்யும் “சுயம்வர்” என்கிற  ஒரு அமைப்பு பற்றி மக்கள் கூறுகின்றனர்.ஆனால் சாந்தியோ தன்னை இள வயதில் நேசித்த தன்னைவிட ஆறு வயது குறைவான, இன்னும் தனித்தே இருக்கிற பாரதி நந்துவுடன் சேர்ந்து வாழ முடிவெடுக்கிறாள்-பிள்ளைகளின் எதிர்ப்பை மீறி.கணவன் அருண் இறந்து இரண்டே ஆண்டுகள்தாம் ஆகின்றன.அவனை ஒருபோதும் மறக்க முடியாது.நினைவிலிருந்து அவனை நீக்க முடியாது.அருணை விலக்கித்தான் பாரதி நந்துவைச் சேர்க்க முடியுமா?

அவள் ஏன் ஒன்றை வைக்க இன்னொன்றை நீக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் ஸ்தூல வடிவிலேயே பார்க்கிறாள்? ஒரு நதி கடலில் கலக்கும்போது வேறு எந்த நதியைத் தள்ளிவிடுகிறது? கடலில் கலந்த ஒன்றை எப்படி நீக்குவது? பிரவாகத்தில் உள்ள நீரின் கலவையை எப்படி அடையாளப்படுத்த முடியும்?

அருண் இறந்தபோது அவன் ஏன் வரவில்லை ?

அருணை இழந்த சோகம் அவளுக்கு உரியது. அந்தச் சோகத்துடன் உறவாட, அதை ஏற்றுக்கொள்ள, அருணின் நினைவுகளை அவள் மனத்தில் மெல்ல மெல்ல மென்சிட்டுகளாய்ப் பறக்கவிட அவளுக்குக் காலம் தேவைப்படாதா? இரண்டாண்டுக் காலம்தான் அதற்குத் தேவைப்படும் என்பதல்ல அவன் போட்ட கணக்கு. இரண்டாண்டுகள் அவளுக்கு மீண்டும் வலுவைத் தந்திருக்கும் என்ற கணிப்புத்தான்.

அவளிடம் எஞ்சியிருப்பது என்ன? முடி நரைத்துவிட்டது. உடல் தளர்ந்துவிட்டது.

அவளிடம் எஞ்சியிருப்பது அவள்தான். அறுபது ஆண்டு களின் தென்றலையும் புயலையும் வலியையும் சுகத்தையும் உள்ளடக்கிய அவள்.”

அந்த அவளை மட்டுமே நேசிக்கும் ஒருவனாக நந்து வந்து சேர்கிறான்.

ஆண்-பெண் உறவின் எல்லா வண்ணங்களையும் பரிமாணங்களையும் பேசித்தீர்த்துவிட்டார் அம்பை என்று தோன்றுகிறது.

சுதாகுப்தாவின் துப்பறியும் கதைகள் என வந்துள்ள மூன்று கதைகளிலும் வேறு வடிவத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறையைப் பேசியுள்ளார்.வடிவங்களில் விதவிதமான சோதனை முயற்சிகளை அம்பை துவக்கக் கதைகளிலிருந்து துப்பறியும் கதைகள் வரை செய்து கொண்டே இருக்கிறார்.ஆரம்பகாலக் கதைகளில் வெளிப்படும் வேகமும் வீச்சும் போகப்போக குறையும் என்பார்கள்.ஆனால் இந்த 77 வயதிலும் அதே படைப்பூக்கத்துடன் எழுதிக்கொண்டிருக்கும் நம் முன்னோடி-அம்பை. 

Read free pdf books online by Ambai on Juggernaut Books

அம்பையின் அரசியல்தான் என்ன?

பெண் விடுதலை,தனிமனித அறம்,அதைவிடத் தனிமனித சுதந்திரம்,சமூக அக்கறை,வெறுப்பு-பகைமையின் இடத்தில் அன்பை வைப்பது,மதவாத எதிர்ப்பு என்று பலவற்றைக் கூறலாம்.

அவருடைய கதைக்களன்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க வாழ்க்கையை மையமிட்டவை.பல கதைகள் பிராமணக் குடும்பப் பின்னணி கொண்டவை.இசையும் நாட்டியமும் கற்றுத்தந்த பிராமணக் குடும்பப்பின்னணி அவருடைய கதைகளின் வீச்சுக்கும் விரிவுக்கும் துணை செய்கின்றன.பரந்த ஞானமும்,மேற்கொண்ட உலகளாவிய பயணங்களும் அவருடைய பார்வையைக் கூராக்க உதவியிருக்கின்றன.

பெண் பார்வையில் ஆணை முழுமையாகப் பார்க்க வைத்த அவர் ஒரு நேர்காணலில் சொன்ன வார்த்தைகளோடு கட்டுரையை நிறைவு செய்வோம்:

கேள்வி: ஆண்கள் பெண்களுக்கு (பெண் சமுதாயத்திற்கு) எதிராக இழைத்த கொடுமைகளில் மிகவும் குரூரமானது என்று எதை நினைக்கிறீர்கள்?

அம்பை: ஆண்வழிச் சமுதாயம், அதில் தொக்கி நிற்கும் மதிப்பீடுகள் இவைதான் பெண்களுக்குக் கொடுமை இழைத்திருப்பதாக நான் நினைக்கிறேன். பெண்ணின் உடலும், அதை ஒட்டிய தேர்வுகளும் பெண்ணின் வசம் இல்லாமல் இருப்பதுதான் ஆண்வழிச் சமுதாயம் இழைத்திருக்கும் குரூரம் என்று நினைக்கிறேன். இச்சையிலிருந்து தாய்மை வரை பெண்ணின் உடல் அவள் ஆளுமையில் இல்லாமல் இருப்பது, அவள் உடலை மற்றவர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப விளக்கிக்கொள்ள அனுமதி அளிக்கிறது.

தீராத பக்கங்கள்: வலைப்பக்கத்தில் ...

எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் 

முந்தைய தொடர்கள்:

தொடர் 1 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்- 1 : எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 2 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல் – 2 : ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 3 ஐ வாசிக்க

தொடர் 3 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 4 ஐ வாசிக்க

தொடர் 4 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்தொடர் 5 ஐ வாசிக்க

தொடர் 5 – தமிழ்ச்சிறுகதையின் அரசியல்: ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 6 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-6 : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 7 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-7 : இன்குலாப்– ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 8 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-8: பிரபஞ்சன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 9 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-9: லிங்கன்– ச.தமிழ்ச்செல்வன்தொடர் 10 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-10: சா.கந்தசாமி – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 11 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-11: மு. சுயம்புலிங்கம் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 12 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-12: நாஞ்சில் நாடன் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 13 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 14 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-14: தஞ்சை ப்ரகாஷ் – ச.தமிழ்ச்செல்வன்

தொடர் 15 ஐ வாசிக்க

தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-15: கி. ராஜநாராயணன் – ச.தமிழ்ச்செல்வன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 7 thoughts on “தமிழ்ச்சிறுகதையின் அரசியல்-13: அம்பை – ச.தமிழ்ச்செல்வன்”
 1. வசீகரமான சொற்றொடருக்குள் முகிழ்ந்திருக்கிற வலிகள் பொருந்திய அர்த்தங்கள் ஒவ்வொன்றும் நேர்த்தியாக இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. தொல் நிலத்து துயரங்களின் கதைகளினூடே அவர்களின் அரசியலையும், பெருத்த மக்கள் சங்கிலித் தொடரில் அவர்கள் எந்தப் பக்கமாக நின்று படைப்பாக்குகிறார்களென கூர்ந்து அவதானிக்கிற இந்த அறிமுகம் அமபை அவர்களின் படைப்பை நோக்கி தேடிப் பயணப்பட தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது.

 2. அம்பையின் சிறுகதைகளின் அரசியல் இத்தொடரில் வெளிவந்த கட்டுரைகளில் மிகச்சிறந்த கட்டுரை என்று குறிப்பிடலாம். அம்பையின் பெண்களின் பிரச்சினைகள் குறித்த பார்வையும் அணுகுமுறையும் பெண்களைப் பற்றி எழுதுபவர்களுக்கு உதவும் கையேடாகக் கொள்ளலாம். அம்பையின் படைப்புகளை மிக கவனமாக வாசித்து வகைப்படுத்தி, தேவையான இடங்களில் அம்பையின் வார்த்தைகளையே கட்டுரையில் பயன்படுத்தி இருப்பது தமிழ்ச்செல்வனின் உழைப்பையும் நுண்மாண் நுழைபுலத்தையும் வெளிப்படுத்துகிறது. வாழ்த்துகள் தோழர் தமிழுக்கு.

 3. மிக நீண்ட ஆழமான கருத்துக்களைக் கொண்ட ஆய்வு. பெண்களின் உணர்வுகள், அரசியல், சமூகம், என அனைத்தையும் அலசி ஆராய்ந்து இருக்கிறார். அம்பை அவர்களின் சிறுகதையின் தொகுப்பை படிக்க ஆவலாக உள்ளது.

 4. தோழர் தமிழ்செல்வன் அவர்களுக்கு நன்றியோடு வணக்கங்களும்💐💐எத்தனை பெரிய உழைப்பாக இருக்கிறது இந்த கட்டுரை,அம்மை அவர்களின் மொத்த கதைகளின் தொகுப்பாக இந்த பதிவை அவ்வளவு சுவாரஸ்யமான நடையில் தந்தமைக்கு எத்தனை நன்றிகள் சொல்வது…அருமையான பதிவு தோழர்…அத்தனை கதைகளையும் படிக்க வேண்டும் என்ற மிகுந்த ஆர்வத்தையும் தந்திருக்கிறது இத்தப்பதிவு..👌👌👌💐💐💐💐

 5. சூரியனும் வீட்டின் கோடியில் ஒரு சமையலறை இரண்டுமே அவரது கதைகளின் உச்சாணியாக கருதுகிறேன்,

  ஒரு மாறுபட்ட களங்களில் இரு கதைகளும் செல்வது புதியபோக்கும் ஆகும். அதே தருணத்தில் மாற்றத்தை நோக்கி பயணத்தில் பெண் மட்டும் பயணித்தால் போதாது. ஆணும் சக பயணியாக இருக்க வேண்டும். இதை அம்பை நிராகரிக்கிறாரோ என்ற ஐயம் சிற்சில கதைகளை வாசிக்கையில் எழுகிறது.

 6. சூரியன் மற்றும் வீட்டின் மூலையில் ஒரு சமையலறை இரண்டுமே உச்சாணிக் கதைகளாகும், புதிய தளங்களை வாசகனுக்கு அறிமுகம் செய்பவை,

  பெண்ணும் ஆணும் சேர்ந்து பயணிக்கையில்தான் அடுத்த கட்டத்தை எட்ட முடியும் என்பதுதான் நிதர்சனம், ஆயின் தனியே பயணம் என்பது அம்பையின் கதைகளில் அடிக்கீற்றாக இருக்கிறது என்று கருதுகிறேன்.

 7. பதிவிட்ட தோழமைகளுக்கு நன்றி.தோழர் ராமச்சந்திர வைத்தியநாத் சொன்ன பார்வை அம்பைக்கு இல்லை என்பதை மொத்தமாக வாசிக்கையில் புரிந்து கொள்ளமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *