Era Ramanan's (இரா. இரமணன்) Marx Sila Therippukal (மார்க்ஸ் சில தெறிப்புகள்) Book Review By C. Subbarao (ச. சுப்பாராவ்)



இன்றொரு நல்ல புத்தகத்தோடு பொழுது விடிந்தது.  தோழர். இரா. இரமணன் அவர்களின் சிறு தொகுப்பாக வந்துள்ள மார்க்ஸ் சில தெறிப்புகள் என்ற புத்தகத்தில்,

என் சிந்தனையிலிருந்து
என் புரிதல்
என் உணர்விலிருந்து
என் கட்டற்ற சிருஷ்டி
வேண்டும் ஞானப்பால் உறிஞ்ச
யாருக்கும் தடையில்லை

என்ற அந்த மாமேதையின் கவிதைக்கு ஒப்ப வேண்டுமளவு ஞானப்பால் உறிஞ்சிக் கொண்டேன்.  ஞானப்பால் அல்லவா ! கொஞ்சமே கொஞ்சமாக  மொத்தமே 40 பக்கம்தான் ! ஆனால், படிக்கப் படிக்கத் திகட்டும் திக்கான பால் !

மார்க்ஸின் ஆரம்ப கால கவிதைகள் சில, அவரது சுவையான புராண, இதிகாச மேற்கோள்கள் சில,  மார்க்ஸிற்கும், ஹைன்ரிக் ஹைனா எனும் சிந்தனையாளருக்குமான உறவு பற்றி,  மார்க்ஸின் இறுதி நாட்கள் என்று நான்கு சிறு சிறு பாகங்கள். 

ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்த்துள்ள அனுபவம் கொண்ட எனக்கு கவிதைகளை மொழிபெயர்க்க அச்சம் என்பதை இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். மூல நூலில் ஏதேனும் இரண்டு வரிக் கவிதை ஒன்று வந்துவிட்டால் போதும், எனக்கு கைகால் உதறல் எடுத்துவிடும். ஆனால், தோழர் இரமணன் கவிதைகளை, அதுவும் மார்க்ஸின் கவிதைகளை அத்தனை எளிமையாக, அத்தனை இனிமையாக, அவற்றின் கவித்துவம் சிறிதும் குறையாதவாறு மொழிபெயர்த்துள்ளார். அதற்காக அவரை நான் இங்கிருந்தவாறே கட்டி அணைத்துக் கொள்கிறேன். அவற்றின் தலைப்புகளும் அவ்வாறே மிகக் கவித்துவமாக இருக்கின்றன. மார்க்ஸின் நக்கலும், நையாண்டியும் தமிழில் அப்படியே வந்துள்ளன.

ஒவ்வொரு தெருமுனையிலும்
உலுக்கியெடுத்த அறிவிப்புகள்
அற்புதங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன
ஒவ்வொருவருக்கும்
இரண்டு காலகளுக்குப் பதிலாக
மூன்று கால்கள்

என்று வரும் கவிதைக்கு மார்க்ஸ் இட்ட தலைப்பு என்னவென்று தெரியவில்லை. இரமணன் அழகாக மீண்ட சொர்க்கம் என்கிறார்.

காதல் உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த ஏழையின் பாடல்கள்
அத்தனையும் எடுத்துக் கொள்.
அதில்
யாழின் முழு இனிமையுடன்
ஒளிரும் கதிர்களுடன்
தளையேதுமின்றி என் ஆத்மா
உன்னை நெருங்கிடும்

என்று மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கவிதையை மொழிபெயர்க்கும் போது இரமணனுக்கு பாரதியின் காற்று வெளியிடை கண்ணம்மா நினைவிற்கு வருகிறது ! ஆஹா.. என்னவொரு ரசனை !

மார்க்ஸின் புராண இலக்கிய மேற்கோள்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அவற்றிற்கு இரமணன் தந்துள்ள புரிடானின் கழுதை, பொன்மகள் வந்தாள்  போன்ற தலைப்புகள் வியக்க வைக்கின்றன. மற்றொரு மேற்கோளுக்கு  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் வார்த்தைகளில் நெருப்பாறும், மயிர்ப்பாலமும் என்று ஒரு தலைப்பு. இந்த புராண மேற்கோள்களுக்கான விளக்கங்களையும், பின்னணித் தகவல்களையும் சேர்த்துத் தந்திருப்பதால் நம்மால் நன்றாகவே ரசிக்க முடிகிறது. மற்றொரு தலைப்பு சோறு கண்ட இடம் சொர்க்கம்…

மார்க்ஸின் உறவினரான அறிஞர் ஹைனா பற்றி ஒரு சுவையான தகவல். அக்காலத்தில் 320 பக்கங்களுக்குள் இருக்கும் புத்தகங்களை மட்டுமே அரசாங்கம் தணிக்கை செய்யுமாம். எனவே அவர் பெரிய எழுத்துகளில் 320 பக்கங்களுக்கு மேல் வருமாறு புத்தகங்களை அச்சிட்டாராம்.  பெரிய புத்தகங்களை யாரும் படிக்கப் போவதில்லை. எதற்கு சிரமப்பட்டு அதை தணிக்கை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தில் யாரோ ஒரு நிஜமான அறிவாளி முடிவு செய்திருக்கிறான். அது இன்றளவும் சரியாகவும் இருக்கிறது ! 

மார்க்ஸ் எனும் மாமேதையின் பல்வேறு பரிமாணங்களை முழுக்க யாராலும் காட்டமுடியாது. எனினும், இது போன்று ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் சென்றால்,  அவரைப் பற்றி முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே வாசகருக்கு வரும். இரமணனின் இந்த சிறு தொகுப்பின் நோக்கம் அதுதான்.

அது மிகச் சிறப்பாகவே நிறைவேறியிருக்கிறது.  தினமலர் வாரமலரில் போடுவதைப் போல. ”இதப் படிங்க முதல்ல,” பிறகு நீங்களாகவே மார்க்ஸ் பற்றிய படைப்புகளையும், மார்க்ஸின் படைப்புகளையும் தேடத் துவங்கிவிடுவீர்கள்.

மார்க்ஸ் – சில தெறிப்புகள்
இரா.இரமணன்
பாரதி புத்தகாலயம்
விலை – ரூ. 35.00
பக்கங்கள் – 40
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *