Maithili language Children Story Leaf and Soil Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை இலையும், மண்கட்டியும்

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: இலையும், மண்கட்டியும் – தமிழில் ச. சுப்பாராவ்



ஒரு வயலில் ஒரு அரசமரத்தின் இலையும், ஒரு மண்கட்டியும் இருந்தன. அவை இரண்டும் நண்பர்கள். இரவு, பகல் எந்த நேரமும் இரண்டும் சேர்ந்தே இருக்கும்.

இந்த இரண்டின் நட்பையும் பார்த்து எல்லோரும் பொறாமைப்பட்டார்கள். மழையும், காற்றும் இவர்கள் இருவரையும் பிரித்து விடுவது என்று சதியாலோசனை செய்தன. காற்று இலையை வெகு தூரத்திற்கு பறக்கச் செய்து விடுவது என்றும், மழை பலமாகப் பெய்து மண்கட்டியை கரைத்து விடுவது என்றும் முடிவு செய்தன.

இலைக்கும், மண்கட்டிக்கும் இந்த சதி பற்றி நண்பர்கள் மூலம் தெரிந்து போனது. இரண்டும் இந்த ஆபத்திலிருந்து தப்ப யோசனை செய்தன. திட்டமிட்டபடி மழை முதலில் தாக்கியது. மண்கட்டி அழ ஆரம்பித்தது. ‘நண்பனே ! நமது நீண்ட கால நட்பு முடியப் போகிறது. இந்த மழையின் வேகத்தில் நான் கரைந்து போய்விடுவேன் போலிருக்கிறதே !’ என்று கதறியது.

இலை, ‘நான் இருக்கும் வரை உனக்கு எந்த ஆபத்தையும் வர விடமாட்டேன்,’ என்றது புன்னகையுடன். சொல்லிவிட்டு, மண்கட்டியின் மீது உட்கார்ந்து மழை நீர் அதன் மீது விழாமல் பாதுகாத்தது. சிறிது நேரத்தில் மழை சோர்வடைந்து நின்றது. இப்போது காற்றின் முறை. அது வேகமாக வீச ஆரம்பித்ததும், இலை நடுங்கியது. ‘மண்கட்டி நண்பா ! இந்த காற்றின் வேகத்தை என்னால் சமாளிக்க முடியவில்லையே ! இந்த காற்று நம்மை பிரித்து விடும் போல் இருக்கிறதே !‘ என்று அழுதது.

‘கவலைப்படாதே நண்பனே ! நான் இருக்கிறேன், என்றது மண்கட்டி. சொல்லி விட்டு அது இலையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது.

காற்று சிறிது நேரத்தில் களைப்படைந்து நின்றது. ஆபத்துகளிலிருந்து தப்பிய மண்கட்டியும், இலையும் புன்னகை செய்து கொண்டன. அவர்களின் நட்பின் ஆழமும், ஒருவரது பலத்தை மற்றவரைக் காக்கப் பயன்படுத்திய விதமும் எல்லோரையும் வியப்படைய வைத்தன.

Maithili language Children Story The beard of the prince Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை ராஜகுருவின் தாடி

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: ராஜகுருவின் தாடி – தமிழில் ச. சுப்பாராவ்



ஒரு ஊரில் ஒரு ராஜகுரு இருந்தார். அரசனுக்கு அவர் மேல் மிகுந்த மரியாதை.  அனைத்து அரசாங்க விஷயங்களிலும் அவரிடம் ஆலோசனை கேட்டு அதன் படியே நடப்பான்.  ராஜகுரு தனது தவவலிமையால் நாட்டிற்கு எந்த ஆபத்தும் வராமல் பாதுகாப்பார் என்று அவரை மிகவும் நம்பினான். அதனால் அந்த ராஜகுரு மிகவும் ஆணவத்தோடு இருந்தார். மற்றவர்களை மதிக்க மாட்டார்.

ராஜகுரு மீது அரசருக்கு இருந்த மரியாதையைப் பார்த்து மற்ற மந்திரி பிரதானிகள் பொறாமை கொண்டார்கள்.  அவரை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு நாள் ஒரு பொறாமை பிடித்த மந்திரி அரசனிடம் சென்று, ‘அரசே ! இன்று ராஜகுருவின் தாடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கி வைத்துக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் உறுதியாக சொர்க்கத்தை அடைவீர்கள். அவரது தவவலிமை அத்தகையது,‘ என்றான்.

அரசன் உடனே சகல மரியாதைகளோடு ராஜகுருவை தன் அரண்மனைக்கு வரவழைத்தான். அவர் வந்ததும், ‘குருவே ! தாங்கள் எனக்கு ஒரு உதவி புரிய வேண்டும்,‘ என்றான். ராஜகுரு, ‘அரசே ! தாங்களுக்காக நான் உயிரையும் கொடுக்கத் தயார். என்ன செய்ய வேண்டும் ?‘ என்றார்.

‘உயிரையெல்லாம் தரவேண்டாம் குருவே. தாங்களது தாடியிலிருந்து ஒரு மயிரை பிடுங்கித் தந்தால் போதும்,‘ என்றான் அரசன். குரு மகிழ்ச்சியோடு தனது நீண்ட தாடியிலிருந்து ஒரு முடியைப் பிடுங்கித் தந்தார். அரசன் பணிவோடு வாங்கிக் கொண்டான். 

உடனே வரிசையாக மந்திரிகள், பிரதானிகள், தளபதிகள், போர்வீரர்கள், சேவகர்கள், பணிப்பெண்கள் என்று அரண்மனையில் இருந்த ஒவ்வொருவரும் தங்களுக்கும் ஒரு முடி வேண்டும் என்று கேட்டார்கள். ராஜகுருவும் ஒவ்வொருவருக்கும் ஒரு முடியைப் பிடுங்கித் தந்தார்.  தந்து விட்டு அரண்மனை வாசலுக்கு வந்தார்.

அதற்குள் ராஜகுருவின் தாடி முடி இருந்தால் சொர்க்கம் போகலாம் என்ற செய்தி பரவி விட, ஊர் மக்கள் அனைவரும் அரண்மனை முன் கூடிவிட்டார்கள். எல்லோரும் தங்களுக்கும் ஒரு முடியைப் பிடுங்கித் தருமாறு கேட்டார்கள். ராஜகுரு ஒவ்வொருவருக்கும் முடியைப் பிடுங்கித் தர ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கன்னங்கள் எரிய ஆரம்பித்தன. முகத்தலிருந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. கூட்டத்தினருக்கோ காத்திருக்கப் பொறுமையில்லை. ஆளாளுக்கு அவர் மேல் பாய்ந்து அவரது தாடியைப் பிய்க்க ஆரம்பித்தார்கள். ராஜகுரு வலியில் அலறித் துடித்தார். ஆனால் யாரும் அவர் அலறுவதைக் கண்டு கொள்ளவில்லை.

அப்போது ஒரு சிறுவன் வயலுக்குச் சென்று மாட்டிற்குப் புல் அறுத்துக் கொண்டு தன் வீடு திரும்பினான். வீட்டில் அவனது பாட்டி உடல்நலம் இன்றி, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாள். சிறுவன் வீட்டில் நுழைந்ததும் அவனது அம்மா,   ‘ டேய், பாட்டி சாவதற்குள் ராஜகுருவின் தாடி முடி ஒன்றை எடுத்து வா. சீக்கிரம். அப்போதுதான் உன் பாட்டி சொர்க்கத்திற்குப் போக முடியும்,‘ என்றாள். சிறுவன்  அரிவாளுடன் அரண்மனை வாயிலுக்கு ஓடினான்.

அவன் வந்த நேரம் ஊர் மக்கள் அனைவரும் அவரது தாடியைப் பிடுங்கி எடுத்துச் சென்றுவிட்டனர். முகம் முழுக்க ரத்தம் வழிய அரண்மனை வாசலில் அரைமயக்கத்தில் கிடந்தார் ராஜகுரு.. தாடி முழுக்க ஊர்காரர்கள் கைகளுக்குப் போய்விட்டது. ரத்தம் வடியும் கன்னத்தில் ஒரே ஒரு முடி மட்டும் ஒட்டிக் கொண்டிருந்தது ! சிறுவனுக்கு அவசரம். அரிவாளால், சரட்டென்று அவரது கன்னச் சதையை அந்த முடியோடு அறுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடினான்.

அவனது பாட்டி சொர்க்கத்திற்குப் போனாளா என்று தெரியவில்லை.  ஆனால் அந்த சிறுவன் வீட்டிற்குப் போவதற்குள் ராஜகுரு சொர்க்கத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார் !

Maithili language Children Story Two friends Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை இரு நண்பர்கள்

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: இரு நண்பர்கள் – தமிழில் ச. சுப்பாராவ்



ஒரு கிராமத்தில் கல்லு, மல்லு என்று இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் மிக ஏழைகள். கல்லு செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் அவனிடம் செருப்புத் தைப்பதற்கான தோல் வாங்க பணம் இல்லை. மேலும் ஊரில் எல்லோருமே ஏழைகள் தான் என்பதால் நிறைய பேர் செருப்பு வாங்க காசு இல்லாமல் வெறும் காலுடன்தான் நடந்தார்கள்.

மல்லு சலவைத் தொழிலாளி. அவனுக்கு ஏதோ கொஞ்சம் பிழைப்பு ஓடியது. கல்லு பக்கத்துக் காட்டில் இருந்து விறகு வெட்டிக் கொண்டு வந்து விற்று பிழைப்பை ஓட்டி வந்தான்.
ஒரு நாள் விறகு வெட்டப் போன போது ஒரு புலியைப் பார்த்தான். ஆனால், கல்லு மிகவும் புத்திசாலி. எனவே அவன் புலியைப் பார்த்ததும், மண்டி போட்டு, ‘வணக்கம் புலி மாமா !‘ என்றான்.
புலி யோசித்தது. பல நாட்களுக்குப் பிறகு நல்ல வாட்டசாட்டமான இளைஞன் மாட்டினான். தின்னலாம் என்றால் இவன் நம்மை வணங்கிவிட்டான். இவனைத் தின்றால் பாபமல்லவா ?

இப்படி புலி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, கல்லு இன்னும் பணிவாக, ‘புலி மாமா, நீங்கள் காடு மேடுகளிலெல்லாம் ஓடி ஓடி வேட்டையாடுகிறீர்கள். உங்கள் பாதங்கள் கல், முள் எல்லாம் குத்தி ரணமாக இருக்கின்றன. நான் செருப்புத் தைப்பவன். உங்கள் நான்கு கால்களுக்கும் அழகாக இரண்டு ஜோடி செருப்புத் தைத்துத் தருகிறேன். இன்று சூரியன் மறைந்ததும் என் குடிசைக்குப் பக்கத்தில் உள்ள புதரில் மறைந்து நின்று காத்திருங்கள். நான் செருப்புகளைத் தருகிறேன். ஓடி ஓடி வேட்டையாட வசதியாக இருக்கும்,‘ என்றான்.

புலி சரி என்றது. கல்லு அந்த நேரத்து ஆபத்திலிருந்து தப்பித்தோம் என்று தனது குடிசைக்கு ஓடினான். சூரியன் மறைந்ததும் புலி செருப்பு வாங்கிச் செல்வதற்காக அவனது குடிசைக்குப் பக்கமிருந்த புதரில் மறைந்து காத்திருந்தது. அதே சமயம் மல்லு தனது கழுதையைத் தேடிக் கொண்டு அந்தப் பக்கமாக வந்தான்.
‘நண்பா, என் கழுதையைப் பார்த்தாயா?‘ என்று கல்லுவிடம் கேட்டான் மல்லு. லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. நல்ல இருளும் வந்துவிட்டது. கல்லு, ‘புதர் பக்கம் தான் ஏதோ சலசலப்பு கேட்டது,‘ என்றான்.

மல்லு மெதுவாக புதர் பக்கம் போனான். இருட்டில் நின்ற புலியைப் பார்த்து தனது கழுதைதான் என்று நினைத்து அதன் மேல் ஏறி உட்கார்ந்தான். ‘ஊரைச் சுற்றி விட்டு புதரில் மறைந்து நிற்கிறாயே கழுதையே !‘ என்று தன் கையில் இருந்த சவுக்கால் அடி வெளுத்துவிட்டான். செருப்பு வாங்க வந்தால், யாரோ நம் மீது உட்கார்ந்து சவுக்கால் அடிக்கிறானே என்று பயந்து புலி மெல்ல ஓட ஆரம்பித்தது.
ஒரு மின்னல் வெட்டிய போது, தான் புலி மீது உட்கார்ந்திருப்பதை மல்லு பார்த்துவிட்டான். சட்டென்று கீழே தாவி, ஒரு மரப் பொந்தில் ஒளிந்து கொண்டான். புலி பயந்து கொண்டே காட்டிற்குள் ஓடியது.

பயந்து நடுங்கிக் கொண்டிருந்த புலியைப் பார்த்த ஒரு குள்ள நரி, ‘என்ன அண்ணே! என்ன ஆச்சு? பதட்டமா இருக்கீங்க ?‘ என்றது.
புலி, ‘ஏன் கேக்கற தம்பி… ஒரு பிசாசு எம் மேல ஏறி ஒக்காந்து, சவுக்கால அடி பின்னிருச்சு. இப்படி அடி நா வாழ்க்கைல வாங்கினதே இல்ல,‘ என்றது சோகமாக.
‘இப்ப அந்த பிசாசு எங்க?‘ என்றது நரி. ‘ஒரு மரப் பொந்துல இருக்கு,‘ என்றது புலி.

‘எங்க அண்ணன அடிச்ச பிசாச சும்மா விடக்கூடாது. அப்படி விட்டா, அது காட்டுல எல்லா மிருகங்களையும் அடிக்கும், வாங்க, அத பொந்துலேர்ந்து வெளிய இழுத்துப் போடுவோம்,‘ என்றது குள்ள நரி.

‘முட்டாள் குள்ளநரியே ! நானே பயந்து நடுங்குறேன். நீ என்ன பெரிய வீரனா? ஓவரா பந்தா பண்ணாத,‘ என்றது புலி.
ஆனால், புலி சொன்னதைக் கேட்காமல், குள்ளநரி அந்த பொந்தை நோக்கிச் சென்றது. பிசாசை பயமுறுத்த தனது நீண்ட வாலை பொந்துக்குள் விட்டது. மல்லு அதை சட்டென்று பிடித்து இழுத்தான். குள்ளநரி தனது வாலை வெளியே இழுக்க முயன்றது. இந்த இழுபறியில் நரியின் வால் அறுந்து மல்லுவின் கையோடு வந்துவிட்டது.
குள்ளநரி வலியில் ஊ..ஊ….. என்று ஊளையிட்டபடி ஓடியது. ‘பொந்தில் இருப்பது பிசாசு அல்ல. அது வால்பிடுங்கி. என்னை வாலைப் பிடுங்கிவிட்டது,‘ என்று அழுது புலம்பியது.

புலி, ‘ நான்தான் சொன்னேனே முட்டாளே !‘ என்று குள்ளநரியைத் திட்டியது. இரண்டும் சிறிது நேரம் வாக்குவாதம் செய்தன. பிறகு புலி, ‘இது சற்று சிக்கலான விஷயம்தான். ஒரு பிசாசு நம் காட்டிற்குள் வந்துவிட்டது. அது நம் காட்டு மிருகங்களை ஒவ்வொன்றாகத் தின்னப் போகிறது,‘ என்றது.
வாலையிழந்த குள்ளநரி இம்முறை மிகவும் பணிவாக, ‘புலி அண்ணே ! நீங்க பெரியவங்க. என்ன செய்யலாம்னு சொல்லுங்க,‘ என்றது. புலி குள்ளநரியிடம் காட்டின் சிங்கம், கரடி, சிறுத்தை, ஓநாய் என்று அனைத்து மிருகங்களையும் அழைத்து வரச் சொன்னது. ‘நாம் எல்லோருமாகச் சேர்ந்து அந்த மரத்தை வேரோடு சாய்ப்போம். பிசாசு வெளியே வரும் போது அதை கண்டதுண்டமாக குதறிப் போட்டுவிடுவோம்,‘ என்றது.

அப்படியே எல்லா மிருகங்களும் சேர்ந்து மரத்தை வேரோடு சாய்த்தன. மல்லு வெளியே குதித்ததும் அவனைச் சூழ்ந்து கொண்டன.

‘நான் இவனைத் தின்னப் போகிறேன்‘ என்று உறுமியது புலி.

‘நான் தான் காட்டின் அரசன். நான்தான் முதலில் அவனைக் கொன்று தின்பேன்,‘ என்றது சிங்கம். இது போலவே மற்ற புலிகள், கரடிகள், சிறுத்தைகள் எல்லாம் நான்தான் முதலில் கொன்று தின்பேன் என்று சண்டை போட ஆரம்பித்தன.
தான் இருக்கும் ஆபத்தான நிலையில் இருந்து தப்பிக்க மல்லு ஒரு யோசனை செய்தான். அவன் தனது கைகளைக் கூப்பி, ‘நீங்கள் நிறைய பேர் இருக்கிறீர்கள். என்னைக் கொன்றால், ஆளுக்கு ஒரு வாய் கறி கூட கிடைக்காது. எனவே நான் ஒரு யோசனை சொல்கிறேன். நீங்கள் எல்லாம் கிராமத்திற்குள் சென்று வீடுகளுக்குள் புகுந்து கோதுமை மாவு, நெய், சர்க்கரை எல்லாம் அள்ளிக் கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு நிறைய மால்புவா செய்து தருகிறேன். மனிதக் கறியை விட மால்புவா மிகவும் சுவையாக இருக்கும்,‘ என்றான்.

மிருகங்கள் சரி என்றன. எல்லாம் கிராமத்திற்குள் புகுந்து கோதுமை மாவு, நெய், சர்க்கரை எல்லாம் திருடிக் கொண்டு வந்தன. மல்லு சுவையான மால்புவா இனிப்பை நிறைய தயார் செய்தான். மால்புவா இனிப்புகளை சுடச்சுட தூக்கிப் போட, சிங்கம், புலி, சிறுத்தை போன்றவை டக் டக்கென்று கேட்ச் பிடித்துத் தின்றன. நரி, ஓநாய், முள்ளம் பன்றி போன்ற சின்ன மிருகங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் திரும்பவும் மிருகங்களுக்குள் சண்டை வந்தது.
இப்போது மல்லு, ‘ நான் ஒரு யோசனை சொல்கிறேன். பெரிய கயிறு ஒன்றைக் கொண்டு வாருங்கள். நான் உங்களை வரிசையாக நிற்க வைத்துக் கட்டிப் போடுகிறேன். பிறகு வரிசையாக மால்புவா தருகிறேன். கட்டிப் போட்டிருப்பதால் யாரும் இடையில் புகுந்து மால்புவாவை வாங்கிக் கொள்ள முடியாது. எல்லாருக்கும் சமபங்கு கிடைக்கும்,‘ என்றான்.

மிருகங்கள் அது போலவே பெரிய கயிறைக் கொண்டு வந்தன. மல்லு தம்மைக் கட்டிப் போடவும் அனுமதித்தன. எல்லாவற்றையும் கட்டிப் போட்டவுடன் மல்லு, சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த நெய்யை வரிசையாக ஒவ்வொரு மிருகத்தின் வாயிலும் ஊற்றினான். நெய்யின் சூட்டில் வாய் வெந்து, சூடு தாங்காமல் எல்லாம் இறந்தன.

உடனே ஊருக்குள் ஓடி நண்பன் கல்லுவிடம் செய்தியைச் சொன்னான். கல்லு தனது கத்தியைக் கொண்டு வந்து இறந்த மிருகங்களின் தோல்களை வெட்டி எடுத்தான். அவற்றை பதப்படுத்தி அழகழகான செருப்புகளைச் செய்தான். அந்த செருப்புகளை சந்தையில் நல்ல லாபத்திற்கு விற்றான். கிடைத்த லாபத்தில் பாதியை தன் நண்பன் மல்லுவிற்குத் தந்தான். இரு நண்பர்களும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள்.

Maithili language Children Story Diptipwa Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை டிப்டிப்வா

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: டிப்டிப்வா – தமிழில் ச. சுப்பாராவ்



ஒரு காட்டுப் பகுதியில் ஒரு கிழவி வாழ்ந்து வந்தாள். அவளிடம் ஒரு குதிரை இருந்தது. அதை தன் சொந்த பிள்ளை போல் அன்பாக வளர்த்து வந்தாள். காட்டின் செழிப்பான புற்களைத் தின்று குதிரை நல்ல வாட்டசாட்டமாக வளர்ந்தது. கிழவி இரவு நேரத்தில்  குதிரையை தன் குடிசைக்கு அருகில் இருந்த மரத்தில் கட்டிப் போட்டு, அதன் கால்களுக்கு நன்றாக மசாஜ் செய்து விட்டுத் தூங்கச் செல்வாள். காட்டில் கிழவிக்கு குதிரை நல்ல துணையாக இருந்தது.

ஒரு நாள் ஒரு திருடன் இந்தக் குதிரையைப் பார்த்துவிட்டான். அதை திருட முடிவு செய்தான். அதே சமயம் காட்டில் வசித்த புலி ஒன்றும் இந்த குதிரையை அடித்துத் தின்ன வேண்டும் என்று முடிவு செய்தது. புலிக்கும், திருடனுக்கும் அறிமுகமும் கிடையாது. ஒருவரது நோக்கம் மற்றவருக்குத் தெரியவும் தெரியாது. 

ஒரு நாள் வானம் கடுமையாக இருண்டது. காட்டுப் பகுதி முழுக்க மேகங்கள் சூழ்ந்தன. கடுமையான இடி, மின்னல், மழை. குதிரை கிழவியின் குடிசைக்கு அருகில் உட்கார்ந்திருந்தது.

இந்த மழை நேரம் தான் சரியான சந்தர்ப்பம் என்று புலியும், திருடனும்  முடிவு செய்தார்கள். தனித் தனியாகத்தான் என்றாலும், இருவருமே கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் குடிசைக்கு அருகில் வந்தார்கள். எதிர் எதிர் திசையில் நின்று  குதிரையைத் தாக்க சந்தர்ப்பம் பார்த்து நின்றார்கள்.

திருடனும், புலியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை என்றாலும், கிழவிக்கு ஏதோ ஆபத்து என்று மனதுக்குள் தோன்றியது. நீண்ட காலமாக காட்டில் தனியாக வசிப்பதால் அவளுக்கு இது போன்ற முன்னுணர்வு உண்டு.  கடுமையான வானிலையை, எதிரிகளை சமாளிக்கும் அறிவாற்றலும் உண்டு. கிழவி  வீட்டின் ஒரு புறம் திருடனும், மறுபுறம் புலியும் இருப்பதைப் பார்த்துவிட்டாள். அமைதியாக தனது குதிரையைக் காப்பாற்ற யோசனை செய்தாள். 

திருடன், புலி இருவருமே தமது இரை மேல் கவனமாக இருந்தார்கள். பெரிய மின்னல் ஒன்று வெட்டும் போது, குதிரை மீது பாயலாம் என்றிருந்தார்கள். திடீரென கிழவி, உரத்த குரலில், ‘எனக்கு புலிக்கும் பயமில்லை, திருடனுக்கும் பயமில்லை. டிப்டிப்வாவிற்குத் தான் பயம்,‘ என்றாள்.

புலிக்கும், திருடனுக்கும் இதைக் கேட்டதும் குழப்பம். ‘டிப்டிப்வா என்றால் என்ன? எனக்கு பயப்பட மாட்டாளாம். டிப்டிப்வாவிற்கு பயப்படுவாளாம். அப்படியானால் அந்த டிப்டிப்வா என்பது ஏதாவது கொடிய விலங்காக அல்லது பிசாசாக இருக்க வேண்டும்,‘ என்று இருவருமே நினைத்தார்கள்.  

அப்போது ஒரு மின்னல் வெட்டியது. அந்த வெளிச்சத்தில் குதிரை இருக்கும் இடத்தைக் குறி வைத்து புலி பாய்ந்தது. திருடன் அதே சமயம் குதிரையை நோக்கி சுருக்குக் கயிற்றை வீசினான்.  அந்த நேரம் பார்த்து புலி பாய்ந்த போது, சுருக்கு புலியின் கழுத்தில் விழுந்தது.

தன் மீது சுருக்குக் கயிற்றைப் போட்டு இறுக்குவது அந்த டிப்டிப்வாதான் போல என்று புலி நினைத்தது.  மையிருட்டில் ஒன்றும் தெரியவில்லை.  இருட்டில் தான் கயிற்றைப் போட்டது குதிரை மேல்தான் என்று நினைத்த திருடன், அதன் மேல் ஏறி உட்காருவதாக நினைத்து, புலி மீது ஏறி உட்கார்ந்தான். 

டிப்டிப்வாதான் தன் மேல் ஏறி உட்காரப் பார்க்கிறது என்று நினைத்த புலி திமிறியது. அடுத்த மின்னல் வெட்டியபோது தான் ஒரு புலி மீது அமர்ந்திருப்பதைப் பார்த்த திருடன், சட்டென்று குதித்து ஒரு மரப் பொந்திற்குள் ஒளிந்து கொண்டான்.

புலி காலை விடியும்வரை ஓடிக் கொண்டே இருந்தது. புலி ஓடுவதைப் பார்த்த நரி ஒன்று, ‘ புலி மாமா ! ஏன் பதட்டமா இருக்கீங்க? நீங்க தான் எங்க தலைவர். நீங்களே இப்படி பயந்த மாதிரி ஓடினா, நாங்க என்ன செய்யறது?‘ என்றது.

புலி நின்று, ‘நரியே ! என்னை டிப்டிப்வா தாக்கி விட்டது. என்னவோ, என்னை விட்டுவிட்டு, ஒரு மரப்பொந்தில் போய் உட்கார்ந்து விட்டது. நான் தப்பி ஓடி வருகிறேன்,‘ என்றது.  நரி,‘ மாமா, பயப்படாதீங்க. நாம ரெண்டு பேரும் சேந்து போய் அந்த டிப்டிப்வாவை மரப் பொந்திலிருந்து வெளிய வர வைப்போம். அதை அடிச்சு சாப்பிடுவோம்,‘ என்றது.

இருவரும், திருடன் ஒளிந்திருந்த மரப் பொந்திற்கு அருகே வந்தார்கள். டிப்டிப்வாவை பயமுறுத்த, நரியை அதன் வாலை பொந்திற்குள் விடுமாறு புலி சொன்னது. நரி தன் வாலை பொந்தில் விட்டது. திருடன் அதை இறுக்கப் பிடித்துக் கொண்டான். 

‘உங்க கைய உள்ள விட்டு டிப்டிப்வாவ பயமுறுத்துங்க,‘ என்றது நரி. ஆனால் புலியோ, பயந்து போய் ஓட்டம் பிடித்தது.  திருடன் நரியின் வாலைப் பிடித்து பலமாக இழுக்க வால் அறுந்து அவன் கையோடு வந்தது.

வாலை இழந்த நரி பல நாட்களுக்கு காட்டில் பரிதாபமாகத் திரிந்தது. காலப் போக்கில் காயம் ஆறிவிட்டாலும், காட்டில் மற்ற மிருகங்கள் எல்லாம் அதை கேலி செய்தன. காலம் இப்படிப் போய்க் கொண்டிருக்கும் போது, ஒரு பெண் நரி அதன் மேல் இரக்கப்பட்டு, காதல் கொண்டு, அதை கல்யாணம் செய்து கொண்டது.

சில மாதங்களில் பெண் நரி ஐந்து குட்டிகளைப் போட்டது.  பெண் நரி எங்களை உன் வீடுக்கு அழைத்துப் போ என்று சொல்ல, நரி மலையில் இருந்த ஒரு குகைக்கு அழைத்துச் சென்று, இதுதான் என் வீடு, இங்கே இருப்போம், என்றது.

பெண் நரி உள்ளே நுழையும் போது அங்கே ஒரு வினோதமான வாசனை அடித்தது. ‘இதென்ன புலி வாசனை அடிக்குது. இதப் போயி உங்க வீடுன்னு சொல்றீங்க?‘ என்றது பெண் நரி.

‘ அன்பே ! இது புலிக் கறியின் வாசனை. நா அப்பப்ப புலிய வேட்டையாடி சாப்பிடறது வழக்கம்,‘ என்றது நரி.

இந்த குகையில் வசிக்க ஆரம்பித்த சில நாட்களில், ஒரு புலி குகையை நோக்கி வருவதை நரி பார்த்தது. முன்பு யாருக்காக நரி தனது வாலை இழந்ததோ, அதே புலி. நரிக்கு பயமாகி விட்டது.  உண்மையில் அந்தப் புலியின் குகையில்தான் நரியின் குடும்பம் இப்போது வசித்து வந்தது. நரி தன் மனைவியிடம் உண்மையைக் கூறிவிட்டது.

ஆனால், பெண் நரி நல்ல தந்திரசாலி. அது ஒரு யோசனை செய்தது. அதன்படி தன் குட்டிகளைப் போட்டு அடித்தது. குட்டிகள் அழுதன.  நரி சத்தமாக, ‘ குட்டிக ஏன் அழுகுது?‘ என்று கேட்டது. பெண் நரி, ‘இதுங்களுக்கு ரொம்ப சேட்டையா போச்சு. கொடுத்தத சாப்பிடாம எங்களுக்கு புலிக் கறிதா வேணும்னு பிடிவாதம் செய்யுதுங்க. இந்த நேரத்துல புலிக் கறிக்கு எங்க போறது ? அதுதா கோபத்துல ரெண்டு கொடுத்தேன்,‘ என்றது சத்தமாக.

வாசலில் நின்ற புலி, ‘குட்டிகள் எனது கறி வேண்டும் என்று கேட்கின்றனவாம். இது நிச்சயமாக அந்த டிப்டிப்வா வின் குட்டிகள்தான். இங்கே நின்றால் ஆபத்து,‘ என்று ஓடிவிட்டது.

வழியில் வேறொரு நரியைப் பார்த்து அதனிடம் இந்தக் கதையைச் சொன்னது. அந்த நரி,‘ கவலைப்படாதீர்கள். உங்கள் குகையில் இருப்பது நம்ம நரி அண்ணன்தான். நா சொன்னா குகைய காலி பண்ணீறுவாங்க,‘ என்று தைரியம் சொல்லி, மீண்டும் குகைப் பக்கம் அழைத்து வந்தது.

பயந்த புலி வாலை கால்களுக்கு நடுவில் சொருக்கிக் கொண்டு, நரியின் பின்னால் சென்றது.  நரியோடு, புலி வருவதைப் பார்த்த பெண் நரி இப்போது மீண்டும் ஒரு தந்திரம் செய்து, கணவன் காதில் ஏதோ சொன்னது. 

நரியும், புலியும் குகை வாசலுக்கு வந்ததும், கணவன் நரி சத்தமாக,‘ பிள்ளைங்க அழுகுது, அஞ்சு புலிய ஏமாத்திக் கூட்டிக்கிட்டு வான்னு சொன்னா, இப்படி ஒரு புலி மட்டும் கூட்டிட்டு வந்து நிக்கறயே தம்பி ..  எனக்கு வர்ற கோபத்துக்கு உன்ன சும்மா விடமாட்டேன்,‘ என்றது. 

அடுத்த நிமிடம் புலி அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தது. வாலறுந்த நரி தன் குடும்பத்தோடு ஜாலியாக அந்த குகையில் வசித்தது.

Maithili language Children Story Kullanariyin Thanthiram Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை குள்ளநரியின் தந்திரம்

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: குள்ளநரியின் தந்திரம் – தமிழில் ச. சுப்பாராவ்



குள்ளநரியின் தந்திரம்

ஒரு குள்ளநரி காட்டில் பசியோடு இரை தேடித் திரிந்தது. அது குள்ளநரி என்பதால் பெரிய விலங்குகளை வேட்டையாட முடியாது. எனவே, முயல், அணில், எலி போன்ற சிறுபிராணிகள் ஏதேனும் சிக்குமா என்று தேடிக் கொண்டிருந்தது. ஆனால், சிறுபிராணிகள் எல்லாம் குள்ளநரியைப் பார்த்துமே ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன. கடைசியாக காட்டின் எல்லையில், ஊருக்கு அருகே ஒரு ஆடு மேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தது குள்ளநரி. ஆட்டைப் பார்த்ததுமே அதன் வாயில் எச்சில் ஊறியது. நல்ல கொழுத்த ஆடு. பெரிய கூர்மையான கொம்புகளும், பெரிய தாடியுமாக, பயங்கரமாக இருந்தது. அந்த ஆட்டைத் தாக்குவதற்கு குள்ளநரிக்கு பயம்.

ஆட்டின் மேல் பாய்ந்து, அது நம்மைக் கொம்பால் குத்திவிட்டால் ரணகளமாகப் போய்விடுமே என்று பயந்தது. ஆனால் அதன் தந்திரமான மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. மறைந்திருந்து ஆட்டைப் பின் தொடர்ந்து, அது என்ன செய்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்தது.

வயிறு முட்ட புல்லை மேய்ந்த ஆடு, தண்ணீர் குடிக்க அருகில் இருந்த குட்டைக்குச் சென்றது. தந்திரக்கார குள்ளநரிக்கு இப்போது ஒரு யோசனை தோன்றியது. ஆடு குட்டையின் ஓரத்தில் நின்று தண்ணீர் குடிக்கும் போது, அது திரும்பி வர வேண்டிய பாதையில் சிறுநீர் கழித்து வைத்தது குள்ளநரி.

குள்ளநரி நினைத்தபடியே, அந்த பாதை சொதசொதவென்று சகதியாகி விட்டது. குள்ளநரியின் தந்திரம் வேலை செய்தது. ஆடு கால் வழுக்கி குட்டைக்குள் விழுந்தது. ஆடு திரும்பவும் ஏறி வந்துவிடாதபடி, குட்டையின் எல்லாப் பக்கங்களிலும் சிறுநீர் கழித்து சகதியாக்கி விட்டது குள்ளநரி. ஆடு எவ்வளவு முயன்றும் குட்டையிலிருந்து மேலே ஏறி வர முடியவில்லை. குட்டையின் நீரில் மூழ்கி ஆடு இறந்தது.

ஆனால், குள்ளநரியின் வேலை இதோடு முடியவில்லை. ஆட்டை குட்டையிலிருந்து எப்படி வெளியே தூக்குவது? அதற்கு வேறொரு தந்திரம் செய்தது. பக்கத்தில் வயலில் ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தும், அவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் ஊ.. ஊ… என்று ஊளையிட்டது. குள்ளநரி ஊளையிடுவதைப் பார்த்த விவசாயிகள் அதைத் துரத்தி வந்தார்கள். குள்ளநரி குட்டை வரை ஓடி வந்து ஒரு புதருக்குள் நுழைந்து விட்டது. விவசாயிகள் குட்டையில் இறந்து கிடக்கும் ஆட்டைப் பார்த்ததும், அதை வெளியே எடுத்தார்கள்.

அதைத் தங்கள் வயலுக்கு அருகில் தூக்கிச் சென்று, தீ மூட்டி வாட்ட ஆரம்பித்தார்கள். குள்ளநரிக்கு நல்ல பசி. நான் கஷ்டப்பட்டு, கொன்ற ஆட்டை நீங்கள் வாட்டித் தின்பதா? விட மாட்டேன், என்று மனதுக்குள் கறுவியபடி யோசனை செய்தது.

வழக்கம் போலவே அதன் தந்திர புத்தி நன்றாக வேலை செய்தது. அதன்படி, பாய்ந்து ஓடி வந்து, விவசாயிகள் ஆட்டை வாட்டிக் கொண்டிருந்த நெருப்பிலிருந்து ஒரு எரியும் கட்டையை வாயில் கவ்விச் சென்று வயலுக்குள் போட்டது. நன்கு விளைந்து முற்றியிருந்த கதிர்களில் தீப்பிடித்தது. விவசாயிகள் அலறி அடித்துக் கொண்டு நெருப்பை அணைக்க ஓடினார்கள்.

குள்ளநரி நன்கு பதமாக வாட்டப்பட்ட சுவையான ஆட்டிறைச்சியை வயிறாரத் தின்று மகிழ்ந்தது.

Maithili language Children's Story Donkey And Dog Translated in Tamil By C. Subba Rao. சிறார் மொழிபெயர்ப்புக் கதை: கழுதையும், நாயும்

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: கழுதையும், நாயும் – தமிழில் ச. சுப்பாராவ்



கழுதையும், நாயும்

ஒரு ஊரில் ஒரு சலவைத் தொழிலாளி இருந்தார். அவரிடம் ஒரு கழுதையும், ஒரு நாயும் இருந்தன. அவை இரண்டும் அவரிடம் மிக விசுவாசமாக இருந்தன. கழுதை தினமும் சலவை செய்ய வேண்டிய துணிகளை ஆற்றுக்குச் சுமந்து செல்லும். சலவை செய்த துணிகளை வீட்டிற்கு சுமந்து வரும். நாய் தன் எஜமானரின் பொருட்கள் திருட்டு போகாமல் பாதுகாக்கும்.

ஒரு நாள் அந்த சலவைத் தொழிலாளி நாய்க்கு சாப்பாடு வைக்காமல் தூங்கிவிட்டார். நாய்க்கு கடும் பசி.  பசி வயிற்றைக் கவ்வ, தூக்கம் வராமல்  புரண்டு கொண்டிருந்தது.

நல்ல நடுநிசி. கிராமமே உறங்கிக் கொண்டிருந்தது. அப்போது ஒரு திருடன் சலவைத் தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து விட்டான். ஆனால் நாய் குரைக்கவில்லை. 

பக்கத்தில் இருந்த கழுதை, நாயிடம் மெதுவான குரலில், ” திருடன் நுழைகிறானே ? நீ ஏன் குரைக்கவில்லை ? நீ குரைக்காவிட்டால், எஜமானர் தூக்கத்திலிருந்து எழ மாட்டார். பொருட்கள் எல்லாம் களவு போய்விடுமே,” என்று மெல்லிய குரலில் சொன்னது.

நாய், ” நான் ஏன் குரைக்க வேண்டும்? அந்த ஆள் எனக்கு சாப்பாடு போடவில்லை. என்னை பட்டினி போட்டதற்கு அனுபவிக்கட்டும்,” என்றது கோபமாக.

கழுதை, ”இப்படி நன்றி மறந்து பேசாதே. அவர் தானே இத்தனை வருடங்களாக உனக்கு சாப்பாடு போட்டு வளர்த்தவர். இன்று என்னவோ மறந்து விட்டார் பாவம். அதற்காக நீ உன் கடமையிலிருந்து தவறக் கூடாது,” என்றது.

ஆனால் நாயோ கோபம் குறையாமல்.” வாயை மூடு. கடமை பற்றி எனக்கு உபதேசம் செய்யாதே ! எனக்கு எப்படி பசிக்கிறது தெரியுமா? வெறும் வயிற்றோடு கடமையைச் செய்வது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும்,“ என்றது.

ஆனால், கழுதைக்கு மனம் ஆறவில்லை. திருடன் திருடிக் கொண்டு ஓடிப் போகும் முன், எப்படியாவது எஜமானரை எழுப்விட வேண்டும் என்று நினைத்தது. ” நீ குரைக்காவிட்டால் பரவாயில்லை. நான் கத்தி, எஜமானரை எழுப்புகிறேன்,” என்றது.

”முட்டாள் கழுதையே ! அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். என் வேலையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தால் உனக்குத் தான் பிரச்சனை,“ என்றது நாய்.

ஆனால், நாயின் பேச்சைக் கேட்பது எஜமான துரோகம் என்று கழுதை நினைத்தது.  அது உரத்த குரலில் கத்த ஆரம்பித்தது.

சலவைத் தொழிலாளிக்கு அன்று மிகவும் களைப்பு. கடுமையான உடல் வலி.  நட்ட நடு ராத்திரியில் கழுதை கத்துவதைக் கேட்டு எழுந்தவுடன், தூக்கம் கெட்டுப் போனதில் அவருக்கு கடும் கோபம் வந்தது. துணிகளை அடித்துத் துவைக்கும் கட்டையை எடுத்து கழுதையை நன்றாக வெளுத்து வாங்கிவிட்டார். 

சலவைத் தொழிலாளி எழுந்ததைப் பார்த்த திருடன், கைக்குக் கிடைத்த பொருட்களை சுருட்டிக் கொண்டு. இருளில் நழுவி விட்டான்.  அடி வாங்கியதில் கழுதைக்கு முதுகு முழுவதும் ரத்த காயம். ஒரு கால் வேறு உடைந்துவிட்டது.

”முட்டாளே ! அவரவர் தனக்கு என்ன வேலையோ அதைத் தான் பார்க்க வேண்டும்.  தேவையில்லாமல் அடுத்தவர் வேலையில் தலையிட்டால், இப்படித் தான் ஆகும். நான் சொன்னதை நீ கேட்கவில்லை. நன்றாகத் துன்பப்படு,“ என்றது நாய்.

ஆனால், உண்மையில் துன்பத்தில் ஆழ்ந்தது சலவைத் தொழிலாளிதான்.  சேர்த்து வைத்த பொருட்களும் நிறைய திருட்டுப் போய்விட்டன. கால் ஒடிந்த கழுதையால் பொதி சுமக்கவும் முடியாமல் போனது.

Era Ramanan's (இரா. இரமணன்) Marx Sila Therippukal (மார்க்ஸ் சில தெறிப்புகள்) Book Review By C. Subbarao (ச. சுப்பாராவ்)

நூல் அறிமுகம்: இரா. இரமணனின் *மார்க்ஸ் சில தெறிப்புகள்* – ச. சுப்பாராவ்



இன்றொரு நல்ல புத்தகத்தோடு பொழுது விடிந்தது.  தோழர். இரா. இரமணன் அவர்களின் சிறு தொகுப்பாக வந்துள்ள மார்க்ஸ் சில தெறிப்புகள் என்ற புத்தகத்தில்,

என் சிந்தனையிலிருந்து
என் புரிதல்
என் உணர்விலிருந்து
என் கட்டற்ற சிருஷ்டி
வேண்டும் ஞானப்பால் உறிஞ்ச
யாருக்கும் தடையில்லை

என்ற அந்த மாமேதையின் கவிதைக்கு ஒப்ப வேண்டுமளவு ஞானப்பால் உறிஞ்சிக் கொண்டேன்.  ஞானப்பால் அல்லவா ! கொஞ்சமே கொஞ்சமாக  மொத்தமே 40 பக்கம்தான் ! ஆனால், படிக்கப் படிக்கத் திகட்டும் திக்கான பால் !

மார்க்ஸின் ஆரம்ப கால கவிதைகள் சில, அவரது சுவையான புராண, இதிகாச மேற்கோள்கள் சில,  மார்க்ஸிற்கும், ஹைன்ரிக் ஹைனா எனும் சிந்தனையாளருக்குமான உறவு பற்றி,  மார்க்ஸின் இறுதி நாட்கள் என்று நான்கு சிறு சிறு பாகங்கள். 

ஆயிரக்கணக்கான பக்கங்களை மொழிபெயர்த்துள்ள அனுபவம் கொண்ட எனக்கு கவிதைகளை மொழிபெயர்க்க அச்சம் என்பதை இங்கு வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறேன். மூல நூலில் ஏதேனும் இரண்டு வரிக் கவிதை ஒன்று வந்துவிட்டால் போதும், எனக்கு கைகால் உதறல் எடுத்துவிடும். ஆனால், தோழர் இரமணன் கவிதைகளை, அதுவும் மார்க்ஸின் கவிதைகளை அத்தனை எளிமையாக, அத்தனை இனிமையாக, அவற்றின் கவித்துவம் சிறிதும் குறையாதவாறு மொழிபெயர்த்துள்ளார். அதற்காக அவரை நான் இங்கிருந்தவாறே கட்டி அணைத்துக் கொள்கிறேன். அவற்றின் தலைப்புகளும் அவ்வாறே மிகக் கவித்துவமாக இருக்கின்றன. மார்க்ஸின் நக்கலும், நையாண்டியும் தமிழில் அப்படியே வந்துள்ளன.

ஒவ்வொரு தெருமுனையிலும்
உலுக்கியெடுத்த அறிவிப்புகள்
அற்புதங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன
ஒவ்வொருவருக்கும்
இரண்டு காலகளுக்குப் பதிலாக
மூன்று கால்கள்

என்று வரும் கவிதைக்கு மார்க்ஸ் இட்ட தலைப்பு என்னவென்று தெரியவில்லை. இரமணன் அழகாக மீண்ட சொர்க்கம் என்கிறார்.

காதல் உன் காலடியில் சமர்ப்பிக்கும்
இந்த ஏழையின் பாடல்கள்
அத்தனையும் எடுத்துக் கொள்.
அதில்
யாழின் முழு இனிமையுடன்
ஒளிரும் கதிர்களுடன்
தளையேதுமின்றி என் ஆத்மா
உன்னை நெருங்கிடும்

என்று மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய கவிதையை மொழிபெயர்க்கும் போது இரமணனுக்கு பாரதியின் காற்று வெளியிடை கண்ணம்மா நினைவிற்கு வருகிறது ! ஆஹா.. என்னவொரு ரசனை !

மார்க்ஸின் புராண இலக்கிய மேற்கோள்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. அவற்றிற்கு இரமணன் தந்துள்ள புரிடானின் கழுதை, பொன்மகள் வந்தாள்  போன்ற தலைப்புகள் வியக்க வைக்கின்றன. மற்றொரு மேற்கோளுக்கு  மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையின் வார்த்தைகளில் நெருப்பாறும், மயிர்ப்பாலமும் என்று ஒரு தலைப்பு. இந்த புராண மேற்கோள்களுக்கான விளக்கங்களையும், பின்னணித் தகவல்களையும் சேர்த்துத் தந்திருப்பதால் நம்மால் நன்றாகவே ரசிக்க முடிகிறது. மற்றொரு தலைப்பு சோறு கண்ட இடம் சொர்க்கம்…

மார்க்ஸின் உறவினரான அறிஞர் ஹைனா பற்றி ஒரு சுவையான தகவல். அக்காலத்தில் 320 பக்கங்களுக்குள் இருக்கும் புத்தகங்களை மட்டுமே அரசாங்கம் தணிக்கை செய்யுமாம். எனவே அவர் பெரிய எழுத்துகளில் 320 பக்கங்களுக்கு மேல் வருமாறு புத்தகங்களை அச்சிட்டாராம்.  பெரிய புத்தகங்களை யாரும் படிக்கப் போவதில்லை. எதற்கு சிரமப்பட்டு அதை தணிக்கை செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தில் யாரோ ஒரு நிஜமான அறிவாளி முடிவு செய்திருக்கிறான். அது இன்றளவும் சரியாகவும் இருக்கிறது ! 

மார்க்ஸ் எனும் மாமேதையின் பல்வேறு பரிமாணங்களை முழுக்க யாராலும் காட்டமுடியாது. எனினும், இது போன்று ஆங்காங்கே தொட்டுக் காட்டிச் சென்றால்,  அவரைப் பற்றி முழுமையாகப் படிக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே வாசகருக்கு வரும். இரமணனின் இந்த சிறு தொகுப்பின் நோக்கம் அதுதான்.

அது மிகச் சிறப்பாகவே நிறைவேறியிருக்கிறது.  தினமலர் வாரமலரில் போடுவதைப் போல. ”இதப் படிங்க முதல்ல,” பிறகு நீங்களாகவே மார்க்ஸ் பற்றிய படைப்புகளையும், மார்க்ஸின் படைப்புகளையும் தேடத் துவங்கிவிடுவீர்கள்.

மார்க்ஸ் – சில தெறிப்புகள்
இரா.இரமணன்
பாரதி புத்தகாலயம்
விலை – ரூ. 35.00
பக்கங்கள் – 40
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/

Maithili language Children's Story Nari Katra Paadm Translated in Tamil By C. Subba Rao. மைதிலி மொழி மொழிபெயர்ப்புக் கதை: நரி கற்ற பாடம்

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: நரி கற்ற பாடம் – தமிழில் ச. சுப்பாராவ்



நிறைய பனை மரங்கள் இருந்த ஒரு காட்டில் ஒரு நரியும், ஒரு குரங்கும் வாழ்ந்து வந்தன. அந்த பனை மரங்களில் நிறைய இனிப்பான நுங்குகள் பழுத்துத் தொங்கின. மேல் தோலை நீக்கிவிட்டால் உள்ளே மிக இனிப்பான பனி போன்ற நுங்கு இருக்கும்.

மரத்திற்கு மரம் தாவுவதில் திறமையுள்ள குரங்கு அந்த மரங்களில் ஏறி ஜாலியாக நுங்குகளைத்  தின்றது. நரி மரங்களைச் சுற்றிச் சுற்றி வந்து குரங்கு தூக்கிப் போட்ட பழங்களின் மிச்சங்களைத் தின்றது.  நரிக்கு முழு நுங்கைத் தின்ன வேண்டும் என்று மிகவும் ஆசை.

ஒரு நாள் குரங்கு மரத்தில் உட்கார்ந்து நுங்கு தின்று கொண்டிருக்கும் போது, நரி, ‘ குரங்கு அண்ணா ! எனக்கு ஒரு முழு நுங்கைத் தின்ன வேண்டும் என்று ஆசை. நீங்கள் மேலிருந்து ஒரு முழு பனம்பழத்தைத் தள்ளி விட்டால் நன்றாக இருக்கும்,‘ என்றது.

நுங்கைச் சுவைத்துக் கொண்டிருந்த குரங்கு, ‘ நீ ஏன் நுங்கு சாப்பிட என்னை நம்பி இருக்க வேண்டும்? தினமும் பழுத்த பழங்கள் தாமாகவே கீழே விழுகின்றனவே.  பழம் விழுவதற்காக மரத்தடியில் காத்து நின்றால் போதும். உனக்கு நுங்கு கிடைத்துவிடும்,‘ என்றது.

மறுநாள் காலை விடிந்ததும், நரி ஒரு உயரமான பனை மரத்திற்குக் கீழே காத்து நின்றது. சிறிது நேரத்தில் ஒரு பெரிய பனம்பழம் நேராக அதன் தலை மீது வந்து விழுந்தது.  வலியில் துடித்துக் கொண்டு, ஊளையிட்டபடி, நரி ஓடியது. தலையின் காயம் ஆறுவதற்காக சில நாட்கள் ஒரு புதரில் படுத்து ஓய்வு எடுத்தது. இனி பனை மரம் பக்கம் போகவே கூடாது என்று முடிவு செய்தது.

Fox, Helical, Helix, Line Art Animals, Misc, Ornament

சில நாட்கள் கழித்து நிறைய மாமரங்கள் இருந்த ஒரு கிராமத்திற்குப் பக்கமுள்ள காட்டிற்குச் சென்றது நரி. அப்போது மாம்பழங்களின் காலம். நரி ஒவ்வொரு தோப்பாகச் சென்று, தோப்பின் காவலாளிகள் தூங்கும் நேரமாகப் பார்த்து கீழே விழுந்து கிடக்கும் மாம்பழங்களை  வயிறு முட்டத்  தின்று விட்டு, தோல், கொட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு வர ஆரம்பித்தது.

இப்படி பல நாட்கள் நடந்தது. ஒரு நாள் நரி மாம்பழத்தைத் தின்னும் போது, அந்த  மாம்பழத்தில் இருந்த வண்டு ஒன்று நரியை நன்றாகக் கொட்டி விட்டது.  வண்டு சரியாக நரியின் நாக்கில் கொட்டிவிட்டதால், நரிக்கு வலி தாங்க முடியவில்லை. புரண்டு புரண்டு, ஊளையிட்டது. தோப்பின் காவலாளிகள் எழுந்து வந்து நரியை நன்றாக அடி வெளுத்து விட்டார்கள்.

நரி எப்படியோ தப்பி ஓடிவிட்டது. ஆனால் வாய் வீங்கி விட்டது.  மற்ற நரி நண்பர்கள் எல்லாம் வந்து, அதன் நாக்கு காயத்தை அவ்வப்போது நக்கி நக்கி உதவியதில் காயம் சில நாட்களில் ஆறிவிட்டது.

நாக்கு சரியானதும், நரி, இனி மேல் உணவுக்கு யாரிடமும் உதவி கேட்க மாட்டேன். திருடித் தின்ன மாட்டேன். நானே வேட்டையாடி மட்டுமே சாப்பிடுவேன் என்று உறுதி பூண்டது. 

Maithili language Children's Story Kakkaiyum Kuruvigalum Translated in Tamil By C. Subba Rao. Book Day is Branches of Bharathi Puthakalayam. மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: காக்கையும், குருவியும் – தமிழில் ச. சுப்பாராவ்

மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: காக்கையும், குருவியும் – தமிழில் ச. சுப்பாராவ்



ஒரு ஊரில் பானதி என்றொரு காக்கை இருந்தது. அது மிகவும் கொடூர குணம் கொண்டது. சின்ன பறவைகளை சித்ரவதை செய்து தின்பது அதற்கு மிகவும் பிடிக்கும். இப்படித்தான் ஒரு நாள் அதனிடம் ஒரு குட்டிக் குருவி மாட்டிக் கொண்டது. இது நம்மை சித்ரவதை செய்து கொன்று தின்றவிடுமே, எப்படியாவது தப்ப வேண்டுமே என்று குருவி நினைத்தது. அதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.

அது காக்கையிடம், ‘அண்ணா, நீங்கள் என்னைத் தின்னப் போவது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் கொஞ்சம் பக்திமான். பிற பறவை, பூச்சிகளைக் கொன்று தின்ற அதே அலகால் என்னை நீங்கள் கொத்தப் போவதை என் மனம் ஏற்கவில்லை. கங்கை நீரால் உங்களது அலகை சற்று புனிதப்படுத்திக் கொண்டு என்னைக் கொத்தித் தின்னுங்கள்,‘ என்று மிகப் பணிவாக வேண்டிக் கொண்டது.

‘நீ எனது கைதி. என்னை மீறி எங்கும் போக முடியாது. ஏதோ கடைசி ஆசையாகக் கேட்கிறாய். செய்கிறேன்,‘ என்று சொல்லிவிட்டு, குருவியைத் தன் கூட்டில் கட்டிப் போட்டுவிட்டு, காக்கை கங்கையை நோக்கிப் பறந்தது.

நதிக்கரையில் நின்று கொண்டு, ‘கங்கை நதியே ! நான் மிக அவசரமாக அந்தக் குருவியைத் தின்ன வேண்டும். உனது நீரால் எனது அலகை சுத்தப்படுத்திக் கொள்கிறேன்,‘ என்று சொல்லியபடி, தன் அலகை நீரில் நுழைக்கச் சென்றது. அப்போது கங்கை, ‘ காக்கையே ! தினமும் லட்சக்கணக்கானோர் எனது நீரில் நீராடி புனிதமடைகிறார்கள் என்று உனக்குத் தெரியும். நீ உன் அலகை என் நீரில் நுழைத்து என் புனிதத்தைக் கெடுக்காதே ! குயவரிடம் சென்று சின்ன சட்டி ஒன்று வாங்கி வந்து, அதில் எனது நீரை எடுத்துச் சென்று, அதில் உன் அலகை சுத்தம் செய்து கொள்,‘ என்றது.

காக்கை உடனே குயவரிடம் சென்றது. ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். எனவே எனக்கு ஒரு சட்டி தாருங்கள்,‘ என்றது. குயவர், ‘ இப்போது கைவசம் களிமண் இல்லையே. தோண்டித் தான் எடுக்க வேண்டும். மானிடம் சென்று அதன் கொம்பை வாங்கி வா. மான்கொம்பை வைத்து மண் தோண்டி சட்டி செய்து தருகிறேன்,‘ என்றார்.

காக்கை மானிடம் சென்றது. ‘ மானே ! மானே! ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்வதற்கு குயவரிடம் மண் இல்லை. அதைத் தோண்ட மானின் கொம்பு வேண்டுமாம். எனவே உன் கொம்பை ஒடித்துக் கொடு,‘ என்றது.
மான்,‘ என் கொம்பை நானாக உடைக்க முடியாதே. நீயும் என் கொம்பை முறிக்கும் அளவிற்கு பெரிய பறவை இல்லை. நாயை அழைத்து வந்து என் கொம்பை உடைத்துக் கொண்டு போ,‘ என்றது.

காக்கை நாயிடம் பறந்து சென்றது. ‘நாயே ! நாயே ! ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மானால் தன் கொம்பை தானே முறித்துத் தர முடியவில்லை. நீ வந்து கொஞ்சம் மான் கொம்பை உடைத்துக் கொடு,‘ என்றது.

நாய்,‘ காக்கையே ! நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். என்னால் இப்போது முடியாது. நீ பசுவிடம் சென்று சிறிது பால் வாங்கி வந்தால் நான் பாலைக் குடித்து, தெம்பாக வந்து மான் கொம்பை முறித்துத் தருகிறேன்,‘ என்றது.

Maithili language Children's Story Kakkaiyum Kuruvigalum Translated in Tamil By C. Subba Rao. Book Day is Branches of Bharathi Puthakalayam. மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: காக்கையும், குருவியும் – தமிழில் ச. சுப்பாராவ்

காக்கை இப்போது பசுவிடம் பறந்து சென்றது. ‘ பசுவே ! பசுவே ! ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மான் கொம்பை உடைத்துத் தர நாயால் தான் முடியும். ஆனால் நாய் மிகவும் களைப்பாக இருக்கிறது. பாலைக் குடித்தால் தான் என்னால் கொம்பை உடைக்க முடியும் என்கிறது. நீ கொஞ்சம் பால் கொடு,‘ என்றது.
பசு, ‘இப்போதுதான் என் மடுவில் இருந்த பால் முழுவதையும் என் கன்று குடித்துவிட்டுப் போனது. எனக்கு கொஞ்சம் புல் வெட்டிக் கொண்டு வந்து கொடு. அதைச் சாப்பிட்டால் பால் ஊறும். நான் உனக்கு பால் தருவேன்,‘ என்றது.

காக்கை உடனடியாக ஒரு தோட்டக்காரரிடம் சென்றது. ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மான் கொம்பை உடைத்துத் தர நாயால் தான் முடியும். ஆனால் நாய் மிகவும் களைப்பாக இருக்கிறது. பாலைக் குடித்தால் தான் என்னால் கொம்பை உடைக்க முடியும் என்கிறது. பசுவிடம் போய் பால் கேட்டால் பசு புல் சாப்பிட்டால்தான் பால் ஊறும் என்கிறது. எனவே, எனக்கு சிறிது புல் வெட்டித் தாருங்கள்,‘ என்றது.

தோட்டக்காரர்,‘ என்னிடமிருந்த அரிவாள் எங்கோ தொலைந்து போய்விட்டது. கொல்லரிடம் போய் ஒரு அரிவாள் செய்து கொண்டு வந்து கொடு. நான் உனக்கு புல் வெட்டித் தருகிறேன், ‘ என்றார்.

காக்கை நேராக கொல்லரின் பட்டறைக்குப் பறந்து சென்றது. ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மான் கொம்பை உடைத்துத் தர நாயால் தான் முடியும். ஆனால் நாய் மிகவும் களைப்பாக இருக்கிறது. பாலைக் குடித்தால் தான் என்னால் கொம்பை உடைக்க முடியும் என்கிறது. பசுவிடம் போய் பால் கேட்டால் பசு புல் சாப்பிட்டால்தான் பால் ஊறும் என்கிறது. தோட்டக்காரரிடம் சென்று பசுவிற்கு புல் கேட்டேன். அவரது அரிவாள் தொலைந்து போய்விட்டதாம். அரிவாள் செய்து வாங்கி வா, புல் தருகிறேன், என்றார். எனவே, எனக்கு ஒரு நல்ல அரிவாள் செய்து தாருங்கள். நான் சீக்கிரமாக அந்தக் குருவியைக் கொத்தித் தின்ன வேண்டும். குட்டிக் குருவியின் ருசியே தனிதான் ! ‘ என்றது.

கொல்லர் நாம் செய்யப் போகும் உதவியால் ஒரு குட்டிக் குருவி சாகப் போகிறதே என்று வருத்தப்பட்டார். அதைக் காப்பாற்ற ஒரு யோசனை செய்தார். காக்கையிடம், ‘பானதிக் காக்கையே ! உனக்கு கருப்பு நிற அரிவாள் வேண்டுமா? சிவப்பு நிற அரிவாள் வேண்டுமா?‘ என்றார். காக்கை இதுவரை சிவப்பு நிற அரிவாளைப் பார்த்ததில்லை. அதனால் அது சிவப்பு நிற அரிவாள் என்றால் இன்னும் அழகாக இருக்குமே என்று நினைத்து, ‘எனக்கு சிவப்பில் செய்து தாருங்கள்,‘ என்றது.

கொல்லர், நெருப்பில் இரும்பைக் காய்ச்சி ஊற்றி அழகான அரிவாளைச் செய்தார். நெருப்பில் வாட்டி வாட்டி அரிவாளை தட்டித் தட்டிச் செய்ததால் அது நல்ல சூட்டில் சிவப்பாக இருந்தது. அதை ஆறவைத்துத் தராமல், இடுக்கியால் அப்படியே எடுத்து, ‘ இந்தா, நீ கேட்ட சிவப்பு அரிவாள்,‘ என்றார்.
கொதிக்கும் இரும்பு அரிவாளைத் தன் அலகால் பற்றிய காக்கை சூடு தாளாமல் அலகும், முகமும் வெந்து போய் வேதனையில் உயிரை விட்டது. உயிரை விடும்போது கா… கா… என்று கத்தக் கூட முடியவில்லை.

பானதிக் காக்கை செத்துப் போனதை அறிந்து எல்லா சின்னச் சின்னப் பறவைகளும் நிம்மதி அடைந்தன. குருவியை கட்டை அவிழ்த்து விடுதலை செய்தன. அது மகிழ்ச்சியாகப் பறந்து சென்றது.