மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: காக்கையும், குருவியும் – தமிழில் ச. சுப்பாராவ்

Maithili language Children's Story Kakkaiyum Kuruvigalum Translated in Tamil By C. Subba Rao. Book Day is Branches of Bharathi Puthakalayam. மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: காக்கையும், குருவியும் – தமிழில் ச. சுப்பாராவ்ஒரு ஊரில் பானதி என்றொரு காக்கை இருந்தது. அது மிகவும் கொடூர குணம் கொண்டது. சின்ன பறவைகளை சித்ரவதை செய்து தின்பது அதற்கு மிகவும் பிடிக்கும். இப்படித்தான் ஒரு நாள் அதனிடம் ஒரு குட்டிக் குருவி மாட்டிக் கொண்டது. இது நம்மை சித்ரவதை செய்து கொன்று தின்றவிடுமே, எப்படியாவது தப்ப வேண்டுமே என்று குருவி நினைத்தது. அதற்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.

அது காக்கையிடம், ‘அண்ணா, நீங்கள் என்னைத் தின்னப் போவது பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நான் கொஞ்சம் பக்திமான். பிற பறவை, பூச்சிகளைக் கொன்று தின்ற அதே அலகால் என்னை நீங்கள் கொத்தப் போவதை என் மனம் ஏற்கவில்லை. கங்கை நீரால் உங்களது அலகை சற்று புனிதப்படுத்திக் கொண்டு என்னைக் கொத்தித் தின்னுங்கள்,‘ என்று மிகப் பணிவாக வேண்டிக் கொண்டது.

‘நீ எனது கைதி. என்னை மீறி எங்கும் போக முடியாது. ஏதோ கடைசி ஆசையாகக் கேட்கிறாய். செய்கிறேன்,‘ என்று சொல்லிவிட்டு, குருவியைத் தன் கூட்டில் கட்டிப் போட்டுவிட்டு, காக்கை கங்கையை நோக்கிப் பறந்தது.

நதிக்கரையில் நின்று கொண்டு, ‘கங்கை நதியே ! நான் மிக அவசரமாக அந்தக் குருவியைத் தின்ன வேண்டும். உனது நீரால் எனது அலகை சுத்தப்படுத்திக் கொள்கிறேன்,‘ என்று சொல்லியபடி, தன் அலகை நீரில் நுழைக்கச் சென்றது. அப்போது கங்கை, ‘ காக்கையே ! தினமும் லட்சக்கணக்கானோர் எனது நீரில் நீராடி புனிதமடைகிறார்கள் என்று உனக்குத் தெரியும். நீ உன் அலகை என் நீரில் நுழைத்து என் புனிதத்தைக் கெடுக்காதே ! குயவரிடம் சென்று சின்ன சட்டி ஒன்று வாங்கி வந்து, அதில் எனது நீரை எடுத்துச் சென்று, அதில் உன் அலகை சுத்தம் செய்து கொள்,‘ என்றது.

காக்கை உடனே குயவரிடம் சென்றது. ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். எனவே எனக்கு ஒரு சட்டி தாருங்கள்,‘ என்றது. குயவர், ‘ இப்போது கைவசம் களிமண் இல்லையே. தோண்டித் தான் எடுக்க வேண்டும். மானிடம் சென்று அதன் கொம்பை வாங்கி வா. மான்கொம்பை வைத்து மண் தோண்டி சட்டி செய்து தருகிறேன்,‘ என்றார்.

காக்கை மானிடம் சென்றது. ‘ மானே ! மானே! ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்வதற்கு குயவரிடம் மண் இல்லை. அதைத் தோண்ட மானின் கொம்பு வேண்டுமாம். எனவே உன் கொம்பை ஒடித்துக் கொடு,‘ என்றது.
மான்,‘ என் கொம்பை நானாக உடைக்க முடியாதே. நீயும் என் கொம்பை முறிக்கும் அளவிற்கு பெரிய பறவை இல்லை. நாயை அழைத்து வந்து என் கொம்பை உடைத்துக் கொண்டு போ,‘ என்றது.

காக்கை நாயிடம் பறந்து சென்றது. ‘நாயே ! நாயே ! ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மானால் தன் கொம்பை தானே முறித்துத் தர முடியவில்லை. நீ வந்து கொஞ்சம் மான் கொம்பை உடைத்துக் கொடு,‘ என்றது.

நாய்,‘ காக்கையே ! நான் மிகவும் களைப்பாக இருக்கிறேன். என்னால் இப்போது முடியாது. நீ பசுவிடம் சென்று சிறிது பால் வாங்கி வந்தால் நான் பாலைக் குடித்து, தெம்பாக வந்து மான் கொம்பை முறித்துத் தருகிறேன்,‘ என்றது.

Maithili language Children's Story Kakkaiyum Kuruvigalum Translated in Tamil By C. Subba Rao. Book Day is Branches of Bharathi Puthakalayam. மைதிலி மொழி சிறார் மொழிபெயர்ப்புக் கதை: காக்கையும், குருவியும் – தமிழில் ச. சுப்பாராவ்

காக்கை இப்போது பசுவிடம் பறந்து சென்றது. ‘ பசுவே ! பசுவே ! ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மான் கொம்பை உடைத்துத் தர நாயால் தான் முடியும். ஆனால் நாய் மிகவும் களைப்பாக இருக்கிறது. பாலைக் குடித்தால் தான் என்னால் கொம்பை உடைக்க முடியும் என்கிறது. நீ கொஞ்சம் பால் கொடு,‘ என்றது.
பசு, ‘இப்போதுதான் என் மடுவில் இருந்த பால் முழுவதையும் என் கன்று குடித்துவிட்டுப் போனது. எனக்கு கொஞ்சம் புல் வெட்டிக் கொண்டு வந்து கொடு. அதைச் சாப்பிட்டால் பால் ஊறும். நான் உனக்கு பால் தருவேன்,‘ என்றது.

காக்கை உடனடியாக ஒரு தோட்டக்காரரிடம் சென்றது. ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மான் கொம்பை உடைத்துத் தர நாயால் தான் முடியும். ஆனால் நாய் மிகவும் களைப்பாக இருக்கிறது. பாலைக் குடித்தால் தான் என்னால் கொம்பை உடைக்க முடியும் என்கிறது. பசுவிடம் போய் பால் கேட்டால் பசு புல் சாப்பிட்டால்தான் பால் ஊறும் என்கிறது. எனவே, எனக்கு சிறிது புல் வெட்டித் தாருங்கள்,‘ என்றது.

தோட்டக்காரர்,‘ என்னிடமிருந்த அரிவாள் எங்கோ தொலைந்து போய்விட்டது. கொல்லரிடம் போய் ஒரு அரிவாள் செய்து கொண்டு வந்து கொடு. நான் உனக்கு புல் வெட்டித் தருகிறேன், ‘ என்றார்.

காக்கை நேராக கொல்லரின் பட்டறைக்குப் பறந்து சென்றது. ‘நான் குருவியைத் தின்ன வேண்டுமானால், என் அலகை கங்கை நீரில் கழுவ வேண்டும். சட்டி இருந்தால்தான் கங்கை நீர் தரும். சட்டி செய்ய குயவருக்கு களிமண் தோண்ட மான் கொம்பு வேண்டும். மான் கொம்பை உடைத்துத் தர நாயால் தான் முடியும். ஆனால் நாய் மிகவும் களைப்பாக இருக்கிறது. பாலைக் குடித்தால் தான் என்னால் கொம்பை உடைக்க முடியும் என்கிறது. பசுவிடம் போய் பால் கேட்டால் பசு புல் சாப்பிட்டால்தான் பால் ஊறும் என்கிறது. தோட்டக்காரரிடம் சென்று பசுவிற்கு புல் கேட்டேன். அவரது அரிவாள் தொலைந்து போய்விட்டதாம். அரிவாள் செய்து வாங்கி வா, புல் தருகிறேன், என்றார். எனவே, எனக்கு ஒரு நல்ல அரிவாள் செய்து தாருங்கள். நான் சீக்கிரமாக அந்தக் குருவியைக் கொத்தித் தின்ன வேண்டும். குட்டிக் குருவியின் ருசியே தனிதான் ! ‘ என்றது.

கொல்லர் நாம் செய்யப் போகும் உதவியால் ஒரு குட்டிக் குருவி சாகப் போகிறதே என்று வருத்தப்பட்டார். அதைக் காப்பாற்ற ஒரு யோசனை செய்தார். காக்கையிடம், ‘பானதிக் காக்கையே ! உனக்கு கருப்பு நிற அரிவாள் வேண்டுமா? சிவப்பு நிற அரிவாள் வேண்டுமா?‘ என்றார். காக்கை இதுவரை சிவப்பு நிற அரிவாளைப் பார்த்ததில்லை. அதனால் அது சிவப்பு நிற அரிவாள் என்றால் இன்னும் அழகாக இருக்குமே என்று நினைத்து, ‘எனக்கு சிவப்பில் செய்து தாருங்கள்,‘ என்றது.

கொல்லர், நெருப்பில் இரும்பைக் காய்ச்சி ஊற்றி அழகான அரிவாளைச் செய்தார். நெருப்பில் வாட்டி வாட்டி அரிவாளை தட்டித் தட்டிச் செய்ததால் அது நல்ல சூட்டில் சிவப்பாக இருந்தது. அதை ஆறவைத்துத் தராமல், இடுக்கியால் அப்படியே எடுத்து, ‘ இந்தா, நீ கேட்ட சிவப்பு அரிவாள்,‘ என்றார்.
கொதிக்கும் இரும்பு அரிவாளைத் தன் அலகால் பற்றிய காக்கை சூடு தாளாமல் அலகும், முகமும் வெந்து போய் வேதனையில் உயிரை விட்டது. உயிரை விடும்போது கா… கா… என்று கத்தக் கூட முடியவில்லை.

பானதிக் காக்கை செத்துப் போனதை அறிந்து எல்லா சின்னச் சின்னப் பறவைகளும் நிம்மதி அடைந்தன. குருவியை கட்டை அவிழ்த்து விடுதலை செய்தன. அது மகிழ்ச்சியாகப் பறந்து சென்றது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.