Ganesh: An auto worker who evolved into a multifaceted artist - Pralayan Shanmugasundaram. Book Day is Branch of Bharathi Puthakalayam.



சென்னை கலைக்குழுவின் தொடக்ககால உறுப்பினர்கள் ஒவ்வொருவராக விடைபெறுகிறார்கள். முதலில் கே.பி பாலச்சந்தர், பிறகு டி.ஏ.விஸ்வநாதன், தற்போது கணேஷ். ஓர் ஆட்டோ ஓட்டுகிற தொழிலாளியாக இருந்துகொண்டு பன்முகம் கொண்ட கலைஞனாக பரிணமித்த தோழர். கணேஷ் ,2021 மே 4ஆம் தேதி , வடசென்னை மூலக்கொத்தளம் சுடுகாட்டில் சாம்பலாகி காற்றோடு கரைந்து போனார் .

ஹார்மோனியம் வாசிக்க வந்த அன்புராஜ் உடன் தபேலா வாசிக்கிற ஒரு சிறுபையனாக சென்னை கலைக்குழுவிற்கு அறிமுகமானவர்தான் கணேஷ். தொழிற்முறைக் கலைஞரான அன்புராஜினால் ஓரிரு நாடகங்களுக்குமேல் குழுவோடு பயணிக்கவியலாது போயிற்று. ஆனால் கணேஷ் அப்படியல்ல. தொடர்ந்து பங்கெடுத்ததோடு குழுவின் பிரதான கலைஞர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

தன்னார்வத்தோடும் அர்ப்பணிப்பு உளத்தோடும் பலரும் பணியாற்றுகிற சென்னைக் கலைக்குழுவில் பிரதானமான கலைஞரென்றும் பிரதானமற்ற கலைஞரென்றும் ஒருவரை வரையறுப்பது உசிதமில்லாதவொன்றுதான். மையப் பாத்திரங்களை ஏற்கிற நடிகர்கள் எவரேனும் வரமுடியாமல் போய்விட்டால் கூட ஒப்புக்கொண்ட தேதிகளில் சென்னை கலைக்குழு நாடகத்தை நிகழ்த்தத் தவறியதேயில்லை. உடனடி மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்கிற திறன் கலைக்குழுவிற்கு இருந்தது. எனினும் கணேஷால் வரமுடியாது போகிறபோது கலைக்குழு சற்றுத் திணறிவிடும். ஏனெனில் அவர் நடிகர் மட்டுமல்ல ; குழுவின் வாத்தியக்கலைஞரும் கூட.

சென்னை கலைக்குழுவினது திறந்தவெளி நாடகத்தில் இசையின் பங்கு என்பது ஏதோ கதைப்போக்கை இட்டு நிரப்புகிற பாடல்களை மட்டும் கொண்டதல்ல. பாத்திரங்களின் நுழைவு, வெளியேற்றம், காட்சி உருவாக்கங்கள், திருப்பங்கள், பொருள் கோடல் செய்தல்,அடிக்கோடிடுதல்,சூழல் மற்றும் உணர்வுகளை வலியுறுத்தல் என நாடகப் போக்கின் நாடக வடிவமைப்பின் நாடகக்கட்டுமானத்தின் நாடகமொழியின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக இசைஅமைந்திருக்கும். அதில் தாளவாத்தியக்கலைஞர்களின் பங்கு அளப்பரியது.

மையமான பாத்திரங்களைக்கூட ஓரிரு ஒத்திகைகளில் மாற்று ஏற்பாடாக தயார்செய்துவிடவியலும். ஆனால் வாத்தியக்கலைஞர்களை அவ்வாறியலாது . அப்படி வாத்தியக்கலைஞரை தயார்செய்யவியலாமல் சில நேரத்தில் நிகழ்ச்சிகளை ரத்துசெய்ததுமுண்டு. இத்தகைய சூழலே கணேஷுக்கு கலைக்குழுவில் ஒரு முக்கியத்துவத்தை உருவாக்கித்தந்தது.

கணேஷ் ஒரு சாதூர்யமிக்க நடிகர். ஏற்கிற எந்தவொரு பாத்திரத்தையும் அனாயாசமாகக் கையாளுவார். அவர் பங்கேற்கிற நாடகங்களின் அனைத்து வசனங்களும் போக்குகளும் அவருக்கு மிகவும் அத்துப்படி. அதனால் நாடகத்தில் எவரேனும் வசனங்களை மறந்துவிட்டால் எடுத்துக்கொடுப்பவராகவுமிருந்தார்.
சென்னைக்கலைக்குழுவின் நாடகத்தயாரிப்பு முறைகளில் ‘ப்ராம்ப்டர்’ [நடிகர்களுக்கு வசனத்தை எடுத்துக்கொடுப்பவர்]என்று எவரையும் வைத்துக்கொள்வதில்லை. ஒன்று அவர்களே இதனைச்சமாளிக்கவேண்டும் . அல்லது சகநடிகர்கள் உதவவேண்டும் . திறந்த வெளியில் வீதியின் சந்தடிமிக்க பாதுகாப்பும் அனுசரணைகளுமற்ற ஒரு சூழலில் நிகழ்த்தப்படுகிற நாடக வகைக்கு இத்தகைய அணுகுமுறைதான் சரியானதெனக் கருதி நாங்கள் பின்பற்றிவருகிறோம்.

No description available.

வட்ட வடிவிலான நடிப்பிடத்தின் விளிம்பில் தாளவாத்தியத்தோடு அமர்ந்து கொண்டிருக்கும் கணேஷ்தான் ஒட்டு மொத்த நாடக நிகழ்விற்கும், இது அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியல்ல என்ற போதிலும் கூட வரிகளை மறந்துவிடுகிற நடிகர்களுக்கு உற்சாகத்தோடு வசனங்களை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருப்பார்.
30 ஆண்டுகட்குமுன்பு திருவொற்றியூர் சென்றம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சி முகாமில்தான் ‘விடியல் கலைக்குழு’ உருவாக்கம் கண்டது.
நானும் கணேஷும்தான் அப்பயிற்சிமுகாமை முன்னின்று நடத்தினோம்..

சென்னைக்கலைக்குழுவினது ‘முற்றுப்புள்ளி’ எனும் நாடகமும் ’ஜப்தி’ எனும் நாடகமும் அவர்களுக்கு சொல்லித்தரப்பட்டது . முற்றுப்புள்ளி எங்க ள் சென்னை கலைக்குழுவின் தயாரிப்பு. ஜப்தி ,கோவில் பட்டி ‘சிருஷ்டி’ கலைக்குழுவினுடையது. அந்நாடகத்தை நாங்க ள் எங்களது பாணியில் வளர்த்தெடுத்து நிகழ்த்தி வந்தோம்.

‘ஜப்தி’ நாடகத்தை பயிற்சியளிக்கிற பொறுப்பினை முழுக்க முழுக்க கணேஷிடம் விட்டிருந்தோம். அப்பயிற்சியினை அவர் மிகவும் லாவகமாக கையாண்டார்.
முகாமில் பங்கேற்றவர்களெல்லாம் அசோக் லேலண்ட் தொழிலாளர்கள். அவர்களில் பலர் எங்களை விட வயதில் மூத்தவர்கள். தொழிற்சங்கத்தலைவரும் திருவொற்றியூர் நகர்மன்ற மேனாள் தலைவருமான தோழர் ஜெயராமன், தோழர் ஜேசு ரத்தினம், தோழர் ஜேசுதாஸ் இவர்களைப்போன்றவர்கள்தான் அப்போது குழுவின் நடிகர்கள்.

கணேஷுக்கு அப்போது 20 வயது கூட நிரம்பியிருக்கவில்லை. பயிற்சியில் பங்கேற்பதற்கு ஏதுவான ஒரு தளர்வான உடையை அதாவது ஒரு ட்ராக்கையும் டீஷர்ட்டையும் அணிந்து கொண்டு மூத்த கலைஞர்களுக்கெல்லாம் கணேஷ், அனாயாசமாக பயிற்சியளிப்பதை ப் பார்த்த விடியல் கலைக்குழுவின் பொறுப்பாளர் தோழர் வீர.அருண், ‘அவ்ளோதான் தோழர், இந்த மாதிரி ட்ராக்கை மாட்டி நிறைய பசங்கள களத்தில இறக்கி விடனும் தோழர்!’ என்றார்.

கலைஞராக மட்டுமல்ல பயிற்சி தருபவராக புதிதாகக் கலைஞர் களை உருவாக்குபவராக கணேஷைப் போல் பலரை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதுதான் தோழர் வீர அருண் சொல்லவந்தது. வீர. அருண் சொன்னது போல அடுத்த ஓரிரு வருடங்களில் சென்னை மாநகரில் பத்து நாடகக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. நன்கு பயிற்றுவிக்கப்பட்ட புதிய இளங்கலைஞர்களது தலைமையில் அவை செயல்படத்தொடங்கின. இக்குழுக்களின் உருவாக்கத்திலும் அக்குழுவினர்க்கு பயிற்சியளித்து வளர்த்தெடுப்பதிலும் கணேஷ் மட்டுமல்ல சென்னைகலைக்குழுவின் கலைஞர்கள் அனைவரும் அப்போது மிகப் பெரும் பங்குவகித்தனர்.

80 களின் இறுதியிலிருந்து 90களின் தொடக்கம் வரை நடைபெற்ற வீதிநாடகச் செயல்பாட்டினை முன்னிறுத்திய அறிவியல் கலைப்பயணம், அறிவொளி கலைப்பயணங்களின் பங்கேற்பாளராக மட்டுமல்ல அவற்றின் தலைமைப்பயிற்சியாளர்களில் ஒருவராகவும் செயல்பட்டவர் கணேஷ். தமிழ்நாட்டில் பரவலாக நடைபெற்ற வயது வந்தோருக்கான நூறுசத எழுத்தறிவியக்கம் , முதன் முதலாக 1989 ஆம் ஆண்டில் புதுவையில்தான் தொடங்கப்பட்டது. இதற்குத்தான் ‘அறிவொளி இயக்கம்’ எனப்பெயர்.  இந்த இயக்கத்தை மக்களிடம் கொண்டுசெல்ல வீதிநாடகச்செயல்பாடுகள் மிகப்பெரும் பங்கு வகித்தன.

இதற்கான நாடகத்தயாரிப்புகள் புதுவையில் , 1989 அக்டோபரில் , ஓரு பதினைந்து நாட்களும் பின்னர், 1990 மார்ச்சில், தாகூர் கலைக்கல்லூரி விடுதி வளாகத்தில் ஓர் இருபது நாட்களும் என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. எனது நெறியாள்கையில் எனது ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெற்ற இவ்வுண்டு உறைவிட நாடகத் தயாரிப்பு முகாம்களில் கடிதம்,சரஸ்வதி,விதை , கடையாணி, பிள்ளைகள் எங்கே, பூங்கோதை போன்ற திறந்தவெளிக்கான வீதி நாடகங்கள், புத்தகம் பேசுது, எழுதப்படிக்கதெரிந்துகொள், படி படி அண்ணே படி படி,அக்கா நீயும் படி படி, ஆனது ஆகட்டும் போன்ற ஆடலும் பாடலுமான இசைச்சிற்பங்கள் ஆகியவை தயாரிக்கப்பட்டன.

1989 அக்டோபரில் நடைபெற்ற இத்தயாரிப்பினது முதற்கட்ட முகாமை அப்போதைய புதுவை மத்திய பல்கலைக்கழகத்தினது நிகழ்கலைத்துறையின் இயக்குநர் பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி தொடங்கி வைத்தார். அம்முகாமில் என்னோடு சக பயிற்சியாளர்களாக பேராசிரியர் தோழர்.கே.ஏ.குணசேகரன், பேராசிரியர் வ.ஆறுமுகம் ஆகியோரும் பயிற்சியளித்தனர். பின்னர் 1990 மார்ச்சில் தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தயாரிப்பு முகாமிற்கு பேராசிரியர் ராமானுஜம் அவர்கள் ஓரு நான்கு நாட்கள் வந்து எங்களோடு தங்கியிருந்து எங்களது தயாரிப்புகளை செழுமைப்படுத்தினார்.

No description available.

இப்படி உருவான நாடகங்கள் ஒரு பத்து நாடகக் குழுக்களுக்கு சொல்லிதரப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டது .அந்த பத்து குழுவினரும் காரைக்கால் உட்பட பாண்டிச்சேரி மாநிலத்தினது பத்து கம்யூன்களில் பதினைந்து நாட்களுக்கு மேல் பயணம் செய்து தெருமுனைகளில் பள்ளிக்கூடங்களில் திறந்தவெளிகளிலென எல்லா இடங்களிலும் நாடகங்களை நிகழ்த்தினர்.

இது தான் தமிழ் பேசும் பகுதியில் நடந்த முதல் ‘அறிவொளி கலைப்பயணம்’. இந்த ‘முன்மாதிரி’தான் பின்னர் தமிழ்நாடு முழுதும் விரிவாக்கப்பட்டது.
அறிவொளி இயக்கம் என்கிற அரசினது ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட ஓர் ஒப்புவமையில்லாத மக்கள் இயக்கம் தமிழ்நாட்டிற்கு வந்த விதம் இதுவே!
அறிவொளி இயக்கம் ஒரு ரயில் வண்டியென்றால் அதை இழுத்துச்செல்லுகிற ‘எஞ்சின்கள்’ தான் இந்த வீதிநாடகக் கலைப்பயணங்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த செயல்பாடுகளில் எங்கள் சென்னை கலைக்குழுவினரோடு கணேஷும் ஓர் அங்கம்.

இன்னும் சரியாகச்சொல்லவேண்டுமெனில் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல 1989 அக்டோபரில், இச்செயல்பாடுகளுக்கு தொடக்கமாக , தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இரண்டு வீதிநாடகக்கலைப்பயணங்கள் நடத்தப்பட்டன. இவ்விரண்டு செயல்பாடுகளிலும் எனது ஒருங்கிணைப்பு மற்றும் நெறியாள்கையில் சென்னை கலைக்குழுவினது டி.ஏ.விஸ்வநாதன், குபா.தேவராஜன், சி.எம்.குமார், கணேஷ், தகடூர். தாஸ், இரா. கோடீஸ்வரன், முனு. கோடீஸ்வரன், உஷா கல்யாணராமன் [சென்னை கலைக்குழுவில் பங்கெடுத்து வந்த இவர், அப்போது புதுவை பல்கலையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தார்] மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து வந்திருந்த கவிஞர். முத்துநிலவன்,எழுத்தாளர்.ஜே.ஷாஜஹான், எழுத்தாளர் போப்பு, எழுத்தாளர்.மதுக்கூர் ராமலிங்கம், கருப்பு கருணா, கவிஞர் வெற்றிநிலவன் ஆகியோரும் பங்கெடுத்தனர். அது மட்டுமல்ல அப்போது புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தின் நாடகத்துறையில் பயின்று கொண்டிருந்த வேலு. சரவணன், ராஜ்குமார், ராமலிங்கம், ஜீவா, ராஜா ரவி வர்மா ஆகியோரும் இக்கலைப்பயணத்தில் பங்கெடுத்தனர். முதற்கட்டமாக இரு குழுக்கள் தயாராவதில் பெரிய பிரச்சினைகளேதும் தெரியவில்லை; மூத்த கலைஞர்களது உதவிகளோடு இக்குழுக்களின் பயிற்சிகளை நானே கையாண்டேன்.

பிறகு 1990 ஏப்ரல்-மே மாதத்தில் புதுவை மாநிலம் முழுதும் பயணம் செய்ய பத்து குழுக்களை உருவாக்கவேண்டும் என்கிறபோது அது ஒரு மலைப்பு மிக்க சவாலாக எங்கள் முன்வந்து நின்றது. பத்து குழுக்களுக்கு நடிகர்களாக 150 பேர் தேவைப்பட்டது. அதற்கு தமிழ்நாடு முழுவதுமிருந்து ஆட்களை அனுப்புவதற்கு அறிவியல் இயக்கமும் முற்போக்கு பண்பாட்டு இயக்கமும் ஏற்பாடுகள் செய்திருந்தன. இந்த பத்து குழுக்களுக்கு 10 பயிற்சியாளர்கள் தேவை என்கிறபோது யார் அந்த பத்து பேர் என்பதில் ஏற்பாட்டாளர்கள் பலருக்கும் ஒத்த கருத்தும் நம்பிக்கையும் இருந்திடவில்லை.

ஏனென்று சொன்னால் இதற்கு முன் 1987,1988 ஆண்டுகளில் நடந்த வீதி நாடகக் கலைப்பயணங்களுக்கு நானும் எங்கள் சென்னை கலைக்குழுவின் மூத்த கலைஞர் தோழர் அலெக்ஸும்தான் பயிற்சியளித்திருந்தோம். 1989 இல் நடந்த தொடக்க கலைப்பயணங்களுக்கு [Pilot Jathas] அலெக்ஸால் வரவியலவில்லை . அதனால் அனைத்திந்திய கலைப்பயணங்கள் ,மாநிலக் கலைப்பயணங்களில் என்னோடு பங்கெடுத்த தோழர்கள் டி..ஏ.விஸ்வநாதன்,கு.பா.தேவராஜன், ஆர்.ஜெயராமன் ஆகியோரின் உதவியோடு நானே அப்பயிற்சியினை ஒருங்கிணைத்தேன்.

எல்லா குழுவினது பயிற்சியிலும் எனது மேற்பார்வை மட்டுமல்ல எனது பங்களிப்பும் முக்கியம் என ஏற்பாட்டாளர்கள் கருதினர். எனவே ஓர் ஐந்து பயிற்சியாளர்களை அடையாளம் கண்டு ,ஐந்தைந்து குழுக்களாக இருகட்டங்களில் பயிற்சியை நடத்தலாமென்றும் அதன் மூலம் அனைத்து குழுக்களுக்கும் எனது பங்களிப்பை ஓரளவிற்காவது பெறலாமெனவும் அவர்கள் ஆலோசித்தனர். இல்லை, புதிய திறனாளர்களை வளர்த்தெடுக்கிற வாய்ப்பாகவும் இதனை நாம் பார்க்கவேண்டும். திறன் பெற்றவர்கள் நம்மில் இருக்கத்தான் செய்கிறார்கள், அவர்களைக்கொண்டு ஒரே கட்டமாக பயிற்சியை நடத்தலாம் என அவர்களுக்கு நான் நம்பிக்கையளித்தேன். பின்னர் ஒரு பத்து பேர் பயிற்சியாசிரியர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

1990 மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் புதுவை தாகூர் கல்லூரி விடுதி வளாகத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட நாடகத்தயாரிப்பு முகாமில்தான் இப்பயிற்சியாளர்களை உருவாக்குகிற பணியும் நடக்கிறது. நாடகப் பேராசிரியர் ராமானுஜம், ஒரு நான்கு நாட்கள் அம்முகாமில் கலந்துகொண்டு எங்கள் தயாரிப்புகளைச் செழுமையாக்கினார். அவர் பங்கெடுத்த அந்த நான்கு நாட்களின் போது சென்னை கலைக்குழுவில் செயல்பட்டுக்கொண்டிருந்த தோழர்கள் மங்கையும் நரேந்திரனும் கூடுதலாக அம்முகாமில் வந்து கலந்து கொண்டனர்.

21 கலைஞர்களைக்கொண்ட குழு அது. பயிற்சியாசிரியர்களாக அடையாளம் காணப்பட்ட அந்த பத்து கலைஞர்களின் பெயர்களை அக்குழுவில் ஒவ்வொன்றாக முன்வைக்கிறேன். அப்படி கணேஷின் பெயரை நான் சொல்கிறபோது தோழர் நரேந்திரன் சிரித்துவிட்டார். ஏனென்றால் முன் மொழியப்பட்ட பத்து கலைஞர்களில் கணேஷ்தான் வயதில் சிறியவர். அது மட்டுமல்ல, ஒரு நடிகராக தபேலா மற்றும் தவில் வாசிக்கிற வாத்தியக்கலைஞராக மட்டுமே அவர், கணேஷை அறிந்திருந்தார்.

அது மட்டுமல்ல கணேஷினது மொழி உச்சரிப்பு, எதிர்பார்க்குமளவிற்கு இருக்காது. ‘ர’ , ‘ன’ ,‘ந’, ‘ம’ உச்சரிப்புகளில் மயக்கங்கள் இருக்கும். அதாவது அவர் ‘மீனா?’ என்று சொன்னால் அது நம் காதுகளில் ‘பீலா’ என்று விழும். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் அவரது பேச்சில் மழலையின் ஈரம் பிசு பிசுத்துக் கொண்டிருக்கும். இவையெல்லாம் அவருக்கு மிகவும் இயல்பான பழக்கமான ‘சென்னை வழக்கு’ போன்ற பேச்சுமொழியைக் கையாள்கிறபோது நேர்கிற விஷயம்.
நரேந்திரன் சிரித்ததற்கு இவையெல்லாம் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் அதே நேரத்தில் கணேஷ், ஒரு செறிவூட்டப்பட்ட மொழியில் அல்லது மேடைத்தமிழில் வசனங்களை மொழிகிற போது மிகவும் தெளிவாகப் பேசிவிடுவார். அதுவும் கண்ணாடிச் சில்லைக்கொண்டு தகரத்தில் கோடு கிழிப்பது போல அவ்வளவு கூர்மையாகவும் தெளிவாகவும் பேசிவிடுவார். தேவையான பாவங்கள் அதற்கான உடல் மொழி எல்லாம் அவற்றில் இருக்கும்; அது பார்வையாளர்களை ஏற்கச்செய்துவிடும்.

பின்னர் அவர் பயிற்சியாளராக திருவொற்றியூர், சென்றம்பாக்கத்தில் என்னோடு பணிபுரிந்த அனுபவங்களையெல்லாம் நான் எடுத்துச்சொன்னேன்.
அனைவரும் ஏற்றுக்கொண்டனர். டி.ஏ.விஸ்வநாதன்,ஆர்.ஜெயராமன்,முகில், கணேஷ், தகடூர்.தாஸ், காளிதாஸ்,கருப்புகருணா, இமு.வெற்றிவளவன், கண்ணன், தனசெல்வம் இவர்கள் தாம் தலைமைப்பயிற்சியாளர்கள். இவர்களை நான் ஒருங்கிணைப்பேன். எனக்கு உதவியாக கு.பா.தேவராஜன் இருப்பார் என முடிவானது.
தமிழ்நாடு முழுதுமிருந்து வந்திருந்த ஆர்வலர்களில் ஆசிரியர்கள் மற்றும் அஞ்சல் துறை, வங்கி, இன்சூரன்ஸ்,மின்வாரியம்,போக்குவரத்து என சேவைத்துறையில் பணியாற்றுகிற நடுத்தரப்பிரிவைச்சார்ந்தோர் கணிசமாக இருந்தனர். அவர்கள் பத்து குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.

No description available.

பிரபல திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான வேல.ராமமூர்த்தி, எழுத்தாளர் ஷாஜஹான்,எழுத்தாளர் மணிமாறன், பாடகர் வைகறை கோவிந்தன், திரைப்படக் கலைஞர் ஐந்துகோவிலான் , ஒன்றிய அரசு அலுவலரான செங்கற்பட்டு ராஜன் [தற்போது இவர் கோவையிலுள்ளார்] பேராசிரியர் சத்யா, தீபா, ஜோதிமணி, தவில் கலைஞர் விநாயகம், சென்னை கலைக்குழுவின் மூத்த கலைஞர்களான, கீதா,செண்பகா,ஜெயா போன்ற ஆளுமைகளெல்லாம் இப்படிப் பயிற்சி பெற வந்திருந்தோரில் அடங்குவர். அனைவரது பெயர்களையும் இங்கே குறிப்பிட முடியவில்லை; பொறுத்தருள்க!

புதுவை அறிவொளியின் வீதி நாடக கலைப்பயணத்திற்குப்பிறகு இந்த பத்து குழுக்களில் பங்கெடுத்த அந்த 150 பேர்தான் அவ்வனுபவங்களை தமிழ் நாடு முழுக்க கொண்டு சென்றவர்களாக மிகப்பெரும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு வித்திட்டவர்களாக உருவெடுத்தனர். இவர்களைப்பயிற்றுவித்த தலைமைப் பயிற்சியாளர்களில் ஒருவர்தான் கணேஷ். இந்த 10 தலைமைப் பயிற்சியாளர்களில் முகிலுக்கும் கணேஷுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதுவென்னவெனில் இருவருமே வாத்தியக்கலைஞர்கள். தவிலை சிறப்பாக வாசிக்கத்தெரிந்தவர்கள்.

ஒரு குழுவிற்கு பயிற்சியளிக்கிறபோது தலைமைப்பயிற்சியாளரோடு அங்கே ஒரு தவில் வாசிக்கிற கலைஞரும் மிகவும் அவசியம்; அப்போதே அப்பயிற்சி முழுமையுறும். மற்ற பயிற்சியாளர்களுக்கெல்லாம் இப்படித் தனியாகத் தவில் கலைஞர்கள் தேவைப்படுகிற போது இவர்களோ, தாங்களே அந்தப்பணியினையும் செய்து முடித்தனர். இதனால் பயிற்சியாளர்கள் மத்தியில் இவர்கள் சற்று தனித்தே அடையாளம் காணப்பட்டனர்.

புதுவை மாநில அறிவொளிக்குப் பிறகு தமிழ் நாடு முழுதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவொளி இயக்கத்திற்கான தொடக்க வீதிநாடகக்கலைப்பயணங்கள் நடந்தன. அதில் சென்னை மாவட்டத்தில் உருவான கலைப்பயண குழுவிற்கு கணேஷே தலைமை தாங்கினார். பின்னர் தமிழ் நாடு முழுதுமுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட போது முதலில் நடந்த ஒன்றிரண்டு மாவட்டங்களுக்கு காளிதாஸ்,கருப்பு கருணா ,தகடூர் தாஸ் ஆகியோரோடு தலைமைப்பயிற்சியாளராய் கணேஷும் சென்றிருந்தார்.

இங்கே தலைமைப் பயிற்சியாளரென்போர் ஒரு நாடகப்பனுவலை நடிகர்களுக்குத் தந்து ஒத்திகைகள் பார்த்து பயிற்றுவித்து அதனை மேடையேற்றுகிற ஒரு நெறியாளுநரின் பணியினைத்தான் செய்கிறாரென்ற போதினும் அப்பனுவலுக்காக உருவாக்கப்பட்ட காட்சி அமைப்புகள், படிமங்கள் , அசைவுகள், அடவுகள், தளக்கோலங்களென இவை எல்லாவற்றையும் கறுத்தருபவராகவுமிருக்கிறார்.

அதே நேரத்தில் இவை குறித்த கேள்விகளும் விவாதங்களும் நடிகர்களிடத்தில் எழுகிறபோது அவற்றை உள்ளடக்கி பயிற்சியை முன்னெடுத்துச் செல்கிற திறனும் அவரிடத்தில் இருக்கவேண்டும். மேலும் அவர் தான் கையாள்கிற கலை குறித்த ஆழ்ந்த ஞானம் கொண்டவராகவும் அதன் நியாயங்களையும் உணர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய தன்மைகள் கொண்டோரே ஒரு சிறந்த பயிற்சியாளராக பரிமளிக்கமுடியும்.

சிறந்த கலைஞர்களாக இருப்பவர்களனைவரும் இப்படி சிறந்த பயிற்சியாளர்களாக சிறந்த ஆசிரியர்களாக இருந்துவிடுவதில்லை. இதற்கு பல உதாரணங்களைச்சொல்ல வியலும். ஆனால் கணேஷ் சிறந்த பயிற்சியாளரும் கூட. இதற்கு ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் சொல்லலாமெனக் கருதுகிறேன். 2005-2006 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் ‘நமது கிராமம்’ எனும் திட்டம் செயலாக்கம் கண்டது. இத்திட்டத்திற்காக ‘கிராம சபை’ போன்ற மக்கள் அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்தவும் , கிராம நலன் மற்றும் பொது நலன்களுக்கான செயல்பாடுகளில் மக்களது பங்கேற்பைக் கோரவும் மாநிலம் முழுதும் கிராமப்புறமக்கள் மத்தியில் வீதி நாடகங்கள் மூலம் கருத்துருவாக்கமும் பரப்புரையும் செய்யப்பட்டது.

இதற்காக நாடகங்கள்,பாடல்கள் உருவாக்கப்பட்டு மாநில முழுவதுமுள்ள நூற்றுக்கு மேற்பட்ட குழுக்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இப்பரப்புரைக்காக நடை பெறும் வீதி நாடகக் கலைப்பயணத்தில் ஏற்கனவே செயல்பட்டு வருகிற பல்வேறு மண்சார் கலையினை நிகழ்த்திவரும் மரபுக்கலைஞர்கள், நாட்டார் கலைக்குழுக்கள் இவற்றையெல்லாம் ஈடுபடுத்தவேண்டும்; அதன் மூலம் நாட்டார் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்திடவேண்டும் என அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்திருந்தது.

No description available.

அது போலவே அக்கலைஞர்களை அடையாளம் கண்டு வீதி நாடகங்களை நிகழ்த்துவதற்கான பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த மண்சார் மரபுக்கலைஞர்கள் தாங்கள் பயின்று வரும் கலைவடிவங்களில் ஆழ்ந்த அனுபவமும் தேர்ந்த புலமையும் கொண்டவர்கள். ஆனால் இந்த கலைப்பயணத்திற்காக உருவாக்கப்பட்ட நவீன நாடகத்தின் கூறுகளைக்கொண்டிருந்த வீதிநாடகங்களென்பது அவர்களது புழங்கு வெளிகளுக்கு அப்பாலிருந்தது. தாங்கள் பயின்று வந்த கலைச்சட்டகத்திலிருந்து வெளியே வந்து இவற்றை ஏற்றுக்கொள்வதில் தயக்கங்கள் மட்டுமல்ல அவர்களுக்கு மிகப்பெரிய சிரமங்களுமிருந்தது.

அறிவியல் மற்றும் அறிவொளி கலைப்பயணத்தில் பங்கேற்ற கலைஞர்களெல்லாம் கிராமப்புற, நகர்ப்புறப் பின்னணியிலிருந்து வந்த நடுத்தர வர்க்கத்தினர். மேலும் அவர்களிடத்தில் நாடகக்கலை குறித்த பொதுப்புத்திசார்ந்த சில கண்ணோட்டங்களைத் தவிர வேறு எந்த கலைமதிப்பீடுகளும் ஆழமாக வேரூன்றியிருக்க இல்லை. அதனால் அவர்களிடத்தில் ஒரு புதிய அணுகுமுறைகளைக்கொண்ட கலையினை அறிமுகப்படுத்தவும் எளிதாக அவர்களை பயிற்றுவிக்கவும் வசக்கிவிடவும் முடிந்தது.

ஆனால் மண்சார் மரபுக்கலைஞர்கள் அப்படியான காலிப் பெட்டகங்கள் அல்ல; அவர்கள் ஏற்கனவே கற்றுப் பயின்று வந்த கலைகளது கண்ணோட்டங்களால், கலைமதிப்பீடுகளால் நிரம்பிவழிகிற ஓர் அறிவுத்தொகுப்பினைக் கொண்டவர்கள். அவர்களிடத்தில் ஒரு 10 நாள் பயிற்சியில் எளிதாக புதியதெதனையும் இட்டு நிரப்பிவிடமுடியாது. என்னதான் நவீன நாடகமும், வீதிநாடகமும் மண்சார் மரபுக்கலைகளை செரித்துக்கொண்டு நமது மரபான கலைகளுக்குச் சிநேகமான ஒரு நாடக மொழியினைக் கொண்டிருந்தாலும் அது முற்றிலும் நகர்ப்புறம் சார்ந்த நடுத்தரவர்க்கத்தினரின் முன்னெடுப்பாகவே, குறுக்கீடாகவே பார்க்கப்படுகிறது. அதனால் வீதிநாடகத்திற்கும் அவர்களுக்கும் ஓர் இடைவெளி ஏற்படுவது இயல்பே.

அதுமட்டுமல்ல இச்செயல்பாடுகள், மரபான கலை வெளிகளுக்குள் ‘நவீனம்’ என்கிற ஹோதாவில் குறுக்கீடு செய்கிற பண்பாட்டுச் சிக்கல்கள் கொண்ட ‘அபாயகரமான வெளியில்’ பிரவேசிப்பதும் கூட. இது குறித்து விரிவாக வேறொரு தளத்தில் பேசவேண்டும். இங்கே நான் என்ன சொல்ல வருகிகிறேனென்றால் ‘மண்சார் மரபுக் கலைஞர்களுக்கு’ நவீன வீதி நாடகங்களை பயிற்சியளிப்பது எளிதானவொன்றல்ல; சவால்மிக்கது என்பதைத்தான்.

இதனை நாங்கள் எவ்வாறு கையாண்டோமெனில், அவர்கள் பெரும்பாலும் எழுத்தறிவு பெற்றவர்கள்; குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு வரையாவது படித்திருப்பவர்கள்; இருப்பினும் பாடல்கள் மற்றும் எழுதப்பட்ட நாடகப் பனுவல்களை வைத்துக்கொண்டு அவர்களது பயிற்சிகளைத் தொடங்குவதில்லை. எல்லாம் ‘வாய் மொழியிலேயே’ அவர்களுக்கு சொல்லித்தரப்படும். 6 நாட்களுக்குப் பிறகுதான் அவர்களுக்கு வாசித்துப் பயில்வதற்கு பனுவல்கள் தரப்படும். அதற்குள் அவர்கள் பாதி விஷயத்தைப் பயின்றிருப்பார்கள். இது ஒரு அணுகுமுறை. மேலும் நாடகத்தில் எடுத்தாளப்பட்டுள்ள ஆட்டத்தின் அசைவுகள் மற்றும் அடவுகளை அவர்களுக்கு 1,2,3 என எண்ணிக்கையிட்டு சொல்லித்தருவதைத்தவிர்ப்போம். ஆடுவதைப்பார்த்து அப்படியே ஆடிக்கொள்ளவேண்டியதுதான். இது போல பல அணுகுமுறைகள் உண்டு. கணேஷ் மட்டுமல்ல எல்லாப்பயிற்சியாளர்களும் இவற்றையெல்லாம் சிறப்பாக கையாண்டனர்.

இந்த மரபுக் கலைஞர்களது கற்றல் முறையென்பது குரு-சிஷ்யன் எனும் கால்வழி மரபில் வந்த ஒன்று. எனவே தனக்கு கற்றுக்கொடுப்பவர் வயதில் சிறியவரானாலும் அவருக்கு அவர்கள் அளிக்கிற ‘இடம்’ என்பது வேறானது;உயர்வானது. இவ்விதத்தில்தான் ஒவ்வொருவரும் தங்களது பயிற்சி ஆசிரியரை மதிப்பர்;அணுகுவர். இந்த குரு-சிஷ்ய உறவுமுறைக்குள் பொதிந்துள்ள அதிகாரப்படிநிலை அதன் சுரண்டல் தன்மை இவை குறித்தெல்லாம் அவர்களோடு ஓர் உரையாடலை நடத்தியிருக்கிறோம்.

இருப்பினும் பயிற்சி முடிகின்ற அன்று தங்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுதலைத் தெரிவிப்பது, நினைவுப்பரிசுகளை அளிப்பது போன்ற பிரிவுபசாரங்களை தாங்கள் விரும்பும் படி நடத்துவதற்கான அனுமதியை அவர்கள் வாதாடிப்பெற்றனர். எனவே வேட்டி ,புடவை, துண்டு, சால்வை, நினைவுப்பரிசாக பண்ட பாத்திரங்கள் அளிப்பதென இந்த கடைசிநாள் சடங்குகளெல்லாம் ஒவ்வொரு குழுவிலும் மிகவும் தடபுடலாக நடந்தேறும் .
இது போன்ற மண்டகப்படிகள் கணேஷுக்கு சற்றுக் கூடுதலாகவே நடக்கும். அவர் ஓர் ஆட்டோத்தொழிலாளியென அவர்களறிந்ததால் ஏற்படுகிற ஒரு நெருக்கம் மட்டுமே இதனை சாத்தியமாக்கிவிடவில்லை..

கணேஷ், எவரையும் எளிதில் கடிந்து கொள்ள மாட்டார். ஒரு நடிகர் தனது பயிற்சிக்கு வசப்படாத போது ஆத்திரப்படமாட்டார்; உணர்ச்சிவசப்படமாட்டார். அவரை ஒரு புன்முறுவலோடு சமாளித்து தன் வழிக்கு கொண்டு வந்துவிடுவார். கணேஷின் இத்தகைய அணுகுமுறைகள்தாம் அக்கலைஞர்களின் அன்பிற்குரியவராக அவரை ஆக்கியது. பிரிவுபசாரத்தின் போது நினைவுப்பரிசுகளளிப்பதோடு சில குழுக்கள் அவருக்கு மோதிரம் அணிவித்ததெல்லாம் நடந்திருக்கிறது.
இப்படியெல்லாம் தனது கலையினை மிகவும் லாவகமாகவும் வெற்றிகரமாகவும் கையாளத்தெரிந்த கலைஞர் கணேஷ் ,தனது சொந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில் தோற்றுப்போனாரென்றே சொல்லலாம்.

செய்து வைத்த முதல் திருமணம் முறிந்து போனது. அடுத்து அமைத்துக்கொண்ட மணவாழ்க்கையும் விலகிப்போனது. பொதுத்துறை நிறுவனத்தில் நிரந்தரமாகப் பணியாற்றுவதற்கு உருவாக்கிதந்த ஒரு வாய்ப்பு , பிறகு ஒரு குறைந்த பட்சப் பாதுகாப்பினையளிக்கிற தனியார் நிறுவன வேலை , அவை எல்லாவற்றையுமே உதறிவிட்டு ஒரு ஆட்டோ டிரைவராக தனது வாழ்க்கையை வரித்துக்கொண்டார். கடைசியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டுவதற்கு செய்து தந்த ஏற்பாட்டினைக்கூட அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. பின்னர் தீக்கதிர் பத்திரிகையில் ஆட்டோ ஓட்டுனராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அதிலும் தொடரமுடியவில்லை.

உண்மையில் கணேஷ் மட்டும் தோற்றுப்போகவில்லை. ஒரு வாழ்க்கையை அமைத்துத்தருவதில் சென்னை கலைக்குழுவும் அவரிடம் தோற்றுத்தான் போனது.
தலைவா வாழ்க! தலைவி வாழ்க! சரி நாங்கள் வாழ்வதெப்போது? என்கிற கேள்விகளோடு எண்பதுகளில் சென்னையின் பூர்வகுடியினரது வசிப்பிடங்களில், குப்பங்களில் வாலிபர் இயக்கம் மேலெழுந்தது.

மத்திய சென்னை பகுதியில் அந்த இயக்கத்தை முன்னெடுத்தவர்களான தோழர்கள் செபாஸ்டின், மாதவ், ஆகியோரால் சேத்துப்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டவர்தான் தோழர் கணேஷ். அந்த வாழ்க்கைச்சூழலின் பின்னடைவுகள் மட்டுமல்ல சில பெறுமதிகளும் அவரிடமிருந்தன. தபேலா வாசிப்பது, குத்துச்சண்டைப் பயிற்சி இவையெல்லாம் அவரது வாழிடச்சூழலில் அவர் பெற்ற விஷயங்கள். இந்த திறன்கள்தாம் அவரை சென்னை கலைக்குழுவுக்கு அழைத்துவந்தது.

No description available.

அப்பா, அஞ்சல் துறையில் ஓர் ஊழியர்; தபால்காரர். பின்னர் அண்ணனுக்கும் அதே பணி.அப்பாவிற்குப்பிறகு அம்மாவிற்கு பென்ஷன் வந்தது. ஓர் எளிய வெள்ளைக்காலர் வாழ்க்கையை கணேஷால் அமைத்துக்கொண்டிருக்கமுடியும். ஆனால் அவர் பாதுகாப்பான வாழ்க்கையை துச்சமென உதறித்தள்ளிவிட்டு நிலையற்ற ஓர் அன்றாடங்காய்ச்சி வாழ்வின் இருண்ட தாழ்வறைக்கு வந்து வந்து நின்று கொள்வார். அதற்காகவே தன்னை நேர்ந்து கொண்டது போலிருக்கும் அவரது நடவடிக்கைகள்.

அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. அப்பழக்கம் மட்டுமே அவரது பிரச்சினைகளுக்கு காரணம் எனச்சொல்லிவிடமுடியாது. அப்பா அண்ணன் அம்மா என ஒவ்வொருவராய்ப் போய்சேர்ந்துவிட்டார்கள். பிறகு கணேஷ், திருச்சியருகே உள்ள தனது உறவினர் வாழும் ஒரு கிராமத்திற்குச் சென்றுவிட்டார். விரக்தியின் உச்ச நிலைக்கு போய்விட்டார் எனச்சொல்வதா, வாழ்வின் அர்த்தங்களை எள்ளி நகையாடுகிறார் என நினைப்பதா , அவரது நிலைப்பாட்டை எப்படி வரையறுப்பதெனத்தெரியவில்லை.

ஒரு கை பேசி கிடையாது. நிரந்தரமான எண் கிடையாது. அவரே அழைத்தால்தான் உண்டு. அவரை தொடர்பு கொள்வதென்பதே கூட ஒருகட்டத்தில் பெரும் சவாலாகிப்போனது. வெளியூர் நிகழ்ச்சிகள் இருக்கும் போது இடையறாது முயன்று அவரது உறவினரது எண்ணோடு தொடர்பு கொண்டு அவருக்கு தகவல் தெரிவிப்போம். வந்து கலந்து கொள்வார். அபூர்வமாக சென்னை வரும் போது அதுவும் அப்போது ஏதேனும் நாடக நிகழ்வு இருந்தால் வந்து கலந்து கொள்வார்.

2019 ஜனவரி 1 அன்று மாலை சப்தர் ஹாஷ்மி நினைவுதினத்தன்று திருவான்மியூர், தெற்கு மாடவீதியில் நடந்த ‘பயணம்’ நாடகம்தான் அவர் கடைசியாகப் பங்கேற்ற நிகழ்ச்சி. அதற்குப்பிறகு நடந்த பல நாடகநிகழ்வுகளில் மட்டுமல்ல ,மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட தென்னிந்திய மக்கள் நாடக விழாவில் கூட அவர் பங்குபெறவில்லை. சென்ற ஆண்டு கொரோனா முதல் அலையின் போது தனக்கு காச நோயிருப்பது தெரியவந்து தாம்பரம் சானடோரியத்தில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். பின்னர் ஓரிரு மாதங்களுக்குப் பிறகு மறுபடியும் திருச்சிக்கே சென்றுவிட்டார்.

கடைசியில் ஸ்டான்லி மருத்துவமனையின் பிணவறையில் பார்த்ததுதான். ஒரு மக்கள் நாடக இயக்கத்தின் மதிப்பீடுகளுக்கும் தேவைகளுக்கும் ஒரு கட்டத்தில் கணேஷ் போன்ற கலைஞர்களால் ஈடுகொடுக்க முடியாமல் போய்விட்டதென்பது உண்மைதான். “அவரை ஒன்றும் செய்யமுடியாது தோழர்; விட்டுவிடுங்கள் தோழர்!” என்பதுதான் அவரோடு நெருங்கிப்பழகிய பல நண்பர்கள் தோழர்களின் கருத்து. அப்படியெல்லாம் அவரை நம்மால் விட்டுவிட முடியவில்லை. வழுக்கி வழுக்கிப்போனாலும் இறுகப்பற்றிக்கொண்டுதானிருந்தோம். கடைசியில் ஒரேயடியாகப் போய் சேர்ந்துவிட்டார்.

தெருக்களில் திறந்தவெளிகளில் நாடகம் தொடங்குவதற்கு முன் வரித்துக்கொண்ட நடிப்பிடத்தில் ஓரிடம் பார்த்து, அந்த இடத்தில் துணியை விரித்து, அமர்ந்து, தவிலை அவிழ்த்துவைத்து , முறுக்கேற்றுகிற ஸ்பேனர் இத்யாதி கருவிகளை ஒவ்வொன்றையும் பொறுமையாக வெளியே எடுத்து வைத்து , முறுக்கேற்றி, தவிலுக்கு சுதி கூட்டி , பின்னர் அக்கருவிகளை மீண்டும் எடுத்த இடத்தில் பத்திரப்படுத்திவைத்துவிட்டு, கணேஷ் தயாராவதென்பது பார்ப்பதற்கு மிகவும் நறுவிசாக இருக்கும். அச்செயல்பாட்டிலிருக்கும் ஓர் ஒழுங்கு, அது கிளர்த்தும் அதிர்வு, குழு நடிகர்களிடத்தில் ஒரு சக்தியாகப் பற்றிப்பரவும்.
சென்னை கலைக்குழு மட்டுமல்ல தமிழ்நாட்டின் மக்கள் நாடக இயக்கமும் கணேஷால் பெற்ற பெறுமதிகள் அதிகம். அவரது மறைவு பேரிழப்புதான்.

நான் தனிப்பட்ட முறையில், என்னோடு உடன் பயணித்த ஓர் உற்ற தோழரை இழந்திருக்கிறேன். கணேஷ் போன்ற கலைஞர்களை கண்டெடுப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் உயர்த்திப் பிடிப்பதிலும் நாம் ஒரு போதும் சளைத்துவிடக்கூடாது. நாம் இம்முயற்சியில் திரும்பத் திரும்பத் தோற்றுப்போனாலும் தளர்ந்துவிடக்கூடாது.கணேஷ் போன்ற மக்கள் கலைஞர்களுக்கு அவர் குறித்த நினைவுகளுக்கு நாம் செய்கிற அஞ்சலி அதுவாக மட்டும்தானிருக்கமுடியும்.

பிரளயன்
[email protected]



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



3 thoughts on “கணேஷ்: பன்முகம் கொண்ட கலைஞனாய்ப் பரிணமித்த ஓர் ஆட்டோ தொழிலாளி”
  1. நிறைவான நினைவஞ்சலி..
    அனுபவமே ஆசான்.

  2. Ganesh is an ever green multipersonality artist who cannot be replaced, will be living in our hearts for ever. Red salute.

  3. கணேசன் கலைக்கழுவில் எனக்கு சீனியர்.. அவனின் இறுதிநாள்வரை அந்த நினைப்பே எனக்கு வந்ததில்லை.. குழுவில் அப்படியான உறவு எங்களுடையது. அதற்கு அவனின் இணக்கமான செயல்பாடே காரணம்.. நிகழ்வுக்கு குறித்த நேரத்தில் வந்து தன் பணியிணை செவ்வனே முடிப்பான். எங்களுக்கு பேரிழப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *