நேர்காணல்: நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியில்லை : திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா – சங்கீதா பரூவா பிஷரோட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)

நேர்காணல்: நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியில்லை : திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா – சங்கீதா பரூவா பிஷரோட்டி (தமிழில்: தா.சந்திரகுரு)

ஜானு பரூவா

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தாலும் அல்லது சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாநிலத்தின் விவசாயிகள் தலைவரான அகில் கோகோயை விடுவிக்கக் கோருவதானாலும் சரி, தனது சொந்த மாநிலமான அசாம் தொடர்பான பல விஷயங்களில் பொது நிலைப்பாட்டை பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஜானு பரூவா முன்னெடுத்து வருகிறார், 14 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளவரும், பத்ம பூஷண் விருது பெற்றவரும், மும்பையில் வசித்து வருபவருமான பரூவா, தான் ஏன் அவ்வாறு செய்கிறேன் என்பதை இந்த நேர்காணலில் விளக்குகிறார்.  இப்போது நாட்டில் நடந்து கொண்டிருப்பது குறித்து எந்தவகையிலும் தனக்கு மகிழ்ச்சியில்லை என்று அவர் கூறுகிறார்.

நேர்காணலின் சுருக்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு: 

அசாமில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக நீங்கள் பேசியிருந்தீர்கள். இப்போது ஒரு வீடியோ அறிக்கை மூலமாக அகில் கோகோயை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக நீங்கள் முயல்கிறீர்கள். இதுபோன்ற அரசாங்கத்திற்கு எதிரானதாகக் கருதப்படக்கூடிய பொது நிலைப்பாடுகளை நீங்கள் எடுப்பதற்கான காரணங்கள் என்ன? சிஏஏ குறித்த உங்கள் நிலைப்பாட்டிற்குப் பிறகு, அரசியலில் சேர்வதற்கான ஆர்வத்துடன் நீங்கள் இருப்பதாக சில பகுதிகளில் இருந்து வதந்திகள் வந்தன.

இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் முன்பாக, நான் சிலவற்றை சொல்ல விரும்புகிறேன். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் விதமாக நான் என்ன சொல்வேன் என்பதை அறிந்து கொள்வதற்கு,  நான் யார், ஜானு பரூவா யார் என்பதை ஒருவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக, நான் கலாச்சாரத் துறையில் இருந்து வந்தாலும், அவையனைத்திற்கும் மேலாக, நான் என்னை இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமகனாகவே முதலில் கருதுகிறேன்.

என்னைப் பொறுத்தவரை, ஒரு குடிமகனாக என்னை அறிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. ஒரு குடிமகனாக என்னை நான் நினைத்துக் கொள்ளும் போது, மூன்று விஷயங்கள் என்னுடைய மனதில் முதலிடத்தில் வருகின்றன: எனது நாட்டின் அரசியலமைப்பு, அது உலகின் மிகச்சிறந்த ஒன்றாக இருப்பதை நான் உணர்கிறேன்; நாட்டை  ஆளுகின்ற அமைப்பு, அதாவது ஜனநாயகம், மனித பரிணாம வளர்ச்சியில் நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயம்; மூன்றாவதாக, நம்மிடம் உள்ள மனிதநேயம். என்னை மனிதநேயம் கொண்டவனாகவே நான் அழைத்துக் கொள்கிறேன். எந்தவொரு நிலையிலும் மனிதநேயம் குறித்து சமரசம் செய்து கொள்வதற்கு நான் ஒருபோதும் விரும்புவதில்லை. எனவே, ஒரு குடிமகனாக நான் செயல்பட முயற்சிக்கும் போது, ​​இந்த மூன்று விஷயங்களை நான் எப்போதும் என்னுடைய நினைவில் வைத்திருக்கிறேன்.

அசாமில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, பின்னர் மும்பை பெருநகரத்தில் வசிப்பவன் என, இதுவரையிலும் நான் ஏராளமாகப் பார்த்திருக்கிறேன், நிறைய அனுபவங்களைக் கொண்டிருக்கிறேன். எனது நாடு எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஏராளமான விஷயங்களை அறிந்து கொண்டிருக்கிறேன். வெளிப்படையாகச் சொல்வதானால், அது குறித்து எனக்கு மகிழ்ச்சி எதுவுமில்லை. நாட்டில் இப்போது நடந்து கொண்டிருப்பவை குறித்து எனக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை. ஆளுகின்றவர்களிடமிருந்து மாறுபட்ட சித்தாந்தம் என்னிடம் இருப்பதால் நான் இதைச் சொல்லவில்லை. மனிதநேயம் கொண்டவனாக மகிழ்ச்சியாக இல்லை என்பதாலேயே நான் இதைக் கூறுகிறேன்.

நாட்டில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடந்து கொண்டிருந்த போதிலும், சில விஷயங்களைப் பார்க்கும்போது, ​​நான் மிகவும் வருத்தமடைகிறேன். எங்கோ ஏதோ இங்கே தவறு நடப்பதாக உணர்கிறேன். அரசியலில் நான் இல்லை என்பதால் – உங்கள் கேள்விக்குப் பதிலளிப்பது என்றால், எனக்கு அதில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை – எதையாவது உடனடியாக விமர்சிப்பது என்பது புத்திசாலித்தனமாக இருக்காது. அவ்வாறு செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் ஒரு குடிமகனாக, நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான  எனது பங்கை எவ்வாறு அளிக்க முடியும் என்பதை நான் எப்போதும் கருத்தில் கொண்டே  இருக்கிறேன். 135 கோடி குடிமக்களில் ஒருவன் என்ற வகையில் நான் முக்கியமற்றவன் என்றாலும்கூட, குடிமக்கள் ஒவ்வொரும் தவறாக நடக்கின்ற விஷயங்களை மிகுந்த பொறுப்புடன் கவனிக்க வேண்டும் என்பதை நான் மிகவும் வலுவாக உணர்கிறேன்.

இந்திய குடிமக்கள் அனைவரும் இந்திய அரசியலமைப்பு மற்றும் நம்மிடம் உள்ள ஜனநாயகம் குறித்து பெருமைப்பட வேண்டும். அந்த வகையில், இந்தியக் குடிமக்கள் ஒவ்வொரும் தாங்கள் ஒரு வகையான சொர்க்கத்தில் இருப்பதை உணர வேண்டும். உலகின் பல பகுதிகளுக்குச் சென்றிருக்கும் நான்,  ஜனநாயகம் இல்லாததொரு நாட்டில் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். அந்த துன்பங்கள் நிச்சயமாக நம் துன்பங்களிலிருந்து வேறுபட்டவை. அந்த வகையில், நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம் என்றாலும், நம்மைக் கஷ்டப்படுத்துவதற்கு நாமும் பொறுப்புடையவர்களாகவே இருக்கிறோம். அந்த நாடுகளில், அமைப்புகளே தவறாக இருக்கின்றன. ஆனால் நம்மிடம் அருமையான அரசியலமைப்பு மற்றும் மிகவும் பொருத்தமான அரசாங்க அமைப்பு உள்ளது என்றாலும், நாம் பாதிக்கப்படுகிறோம். அதைப் பற்றித்தான் நான் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். பொறுப்புள்ள குடிமகனாக இந்த விஷயங்களைப் புரிந்து கொள்வது என்பது நிலையான போராட்டமாகவே இருந்து வருகிறது.

இரண்டாவதாக, நாம் 135 கோடி மக்கள் இருக்கிறோம். அதில் முறையாக தேசிய மற்றும் மாநில அடிப்படையிலான அரசியல் கட்சிகளில் பகுதியாக இருப்பவர்கள் சுமார் 6-7 கோடி பேர் இருப்பர். அதாவது மொத்த இந்திய மக்கள்தொகையில் அதிகபட்சம் 4% பேர் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு இருக்கலாம். மீதமுள்ள 96% அரசியல் சாராதவர்களாக இருப்பதாகவே கருதப்படுகிறது. அவர்கள் தங்களுடைய சிந்தனையில் முற்றிலும் சுதந்திரமாக இருப்பதாகவே நாம் கருதலாம். அவ்வாறு இருப்பதற்கே நமது அரசியலமைப்பு நம்மை அனுமதிக்கிறது. ஜனநாயகத்தில், நாம் அரசாங்கம் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அது ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு என்பதால், அது ஆளும் கட்சிக்கு வாக்களிக்காத நபருக்கும் சேர்த்து  அனைவரின் அரசாங்கமாகவே இருக்கின்றது. அரசாங்கம் சரியாக செயல்படவில்லை, சில தவறான முடிவுகளை எடுக்கிறது, அதிக துன்பங்களுக்கு வழிவகுக்கிறது என்பதைக் கண்டறிந்த பிறகு, மீண்டும் அவர்களைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பது குடிமக்களாக நம் அனைவரின் கடமையாகும். அதுவே நம்மிடம் உள்ள அதிகாரமும் ஆகும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று நாம் பார்ப்பது வேறாக இருக்கின்றது. நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 99% மக்கள் நேரடியாக அரசியலை நோக்கி செயல்படுகின்ற சூழ்நிலையை காண முடிகிறது. குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கிறார் அல்லது குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கவில்லை என்பதால், ஒருவருடைய வீட்டிற்குச் செல்லவோ பேசவோ வேண்டாம் என்பது போன்ற பேச்சுக்கள் அதிகரித்து வருகின்றன. எந்தவொரு அரசியல் கட்சியிலும் அதிகாரப்பூர்வமாக அங்கம் வகிக்காத சாதாரண குடிமகனிடமிருந்து இதுபோன்று வார்த்தைகள் வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமான விஷயம். இதுபோன்ற வார்த்தைகளை எதிர்கொள்பவர்கள் உண்மையில் அரசியலுடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருக்கலாம் அல்லது முற்றிலும் நடுநிலை வகிப்பவராகக்கூட இருக்கலாம். ஆனால் இதுதான் இப்போது நம் நாட்டில் நாம் காணுகின்ற காட்சியாக உள்ளது. ஒரு கட்டத்திற்கு அப்பால், நான் மக்களைக் குறை கூற விரும்பவில்லை. இதை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருப்பவை அரசியல் கட்சிகள்தான். மக்கள் இதற்காகப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வதற்கான ஒரே காரணம் என்னவென்றால், இவ்வாறு வீழ்ந்து கிடப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டாமா? அரசியல் கட்சிகளால் செய்யப்படுகின்ற இந்த விஷயங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? ஜனநாயகத்தில் குடிமக்களில் ஒருவனாக மக்களுடைய பங்கை முன்னிலைப்படுத்துவதற்காக மட்டுமே நான் இதைச் சொல்கிறேன்.

எது மாற்றியிருக்கிறது?

இன்று, யாராவது சில கொள்கைகளுக்கு எதிராக அல்லது அவன்/அவள் உடன்படாத அரசாங்கத்தின் வேறு சில நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்ப விரும்பினால், அவ்வாறு செய்வதற்கு அவர்கள் மிகவும் தயங்கவே செய்வார்கள். ஏனென்றால், அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் அல்லது அமைப்பிற்கு எதிரானவர்கள் என்று தாங்கள்  அழைக்கப்படலாம் என்ற அச்சம் அவன்/அவளிடம் உள்ளது. அதே சமயத்தில், ஆளும் கட்சிக்கு எதிரானவர் என்பதால் மட்டுமே ஒரு பிரச்சனையை அளவிற்கு மீறிப் பெரிதுபடுத்துகின்ற சிலரையும் நாம் காண்கிறோம். ஆளும் கட்சியை ஆதரிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சனை இருப்பதாகக் கண்டால், அமைதியாக இருந்து விடுவார்கள். ஜனநாயகத்தில், இந்த மூன்று சூழல்களுமே துரதிர்ஷ்டவசமானவை. அதன் விளைவாகவே, நாம் இப்போது கஷ்டப்படுகிறோம்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் ஒருவரை அரசாங்கத்திற்கு எதிரானவர் என்று முத்திரை குத்துவதற்குப் பதிலாக, அதனை வரவேற்க வேண்டும். விழிப்புணர்வு கொண்ட, பொறுப்பான குடிமக்கள் எதைக் குறித்தாவது கேள்வி எழுப்பும் போது, அவன்/அவள் குரல் காது கொடுத்து கேட்கப்பட வேண்டும்; அதுதான் உண்மையான ஜனநாயகம். தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்வது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. அத்தகைய கேள்விகளுக்கான கதவை அடைக்க கூடாது. ஒரு எளிய எடுத்துக்காட்டை நான் உங்களுக்குத் தருகிறேன். ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர், அந்த குடும்பத் தலைவரின் முடிவை விமர்சித்தால், அவர்களிடம் உள்ள அக்கறையை நாம் காது கொடுத்து கேட்போமா அல்லது குடும்பத்திற்கு எதிரானவர் என்று அவரைக் குறிப்பிடுவோமா? அதேபோன்ற செயல்முறையையே, ஜனநாயகத்திலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

முக்கியமாக நான் சொல்ல வருவது என்னவென்றால், நமது ஜனநாயகம் எங்கோ தவறாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு குடிமகனாக பல்வேறு பிரச்சினைகளை பகிரங்கமாக நான் கேள்விக்குள்ளாக்குவதை நீங்கள் காணும்போது, அதைப் புரிந்து கொள்ள முடியும்.

விழிப்புணர்வு கொண்ட குடிமகனாக அகில் கோகோயை நீங்கள் விடுவிக்கக் கோரியுள்ளீர்களா?

ஆம். நான் பயிற்சி பெற்ற வழக்கறிஞர் அல்ல என்பதால், அவருக்கு எதிரான வழக்குகளின் சட்ட விவரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் அகிலைப் பொறுத்தவரை நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பதைப் பார்க்கும்போது, ​​மனிதநேயம் தொலைந்து போயிருப்பதை என்னால் உணர முடிகிறது. அவரது சித்தாந்தம் என்ன, அவர் எந்த மாதிரியான மனிதர் என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், பொதுவான குடிமக்களாகிய நாம் அரசு அவருக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. தூரத்திலிருந்து கவனிப்பதன் மூலம், எந்த அளவிலான குற்றங்களை ஒருவர் செய்திருக்கிறார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். எனவே பொதுமக்களாக பேச வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. நான் எனது கடமையை மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே செய்கிறேன்.

C:\Users\Chandraguru\Pictures\Assam Barua\Nikhil Gogoi.jpg

அகில் கோகாய்

குறிப்பிட்ட சிறையிலிருந்து அகில் வெளியே வருகிறார், அங்கிருந்து அவர் வீட்டிற்குச் செல்வதற்கு முன்பே, வேறொரு மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்து, முடிந்தவரை சிறைக்குள்ளேயே அவரை அடைத்து வைக்கிறார்கள். மாநிலத்தின் முழு அதிகாரத்தையும் தனிநபர் ஒருவருக்கு எதிராகப் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் சமவாய்ப்பை மறுக்கிறீர்கள். இந்தியா உட்பட உலகம் முழுவதும், பல்வேறு நீதிமன்றங்கள் மனிதாபிமான அடிப்படையில் கோவிட்-19 காரணமாக சிறைகளில் இருந்து மக்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ள நிலையில், இது மிகவும் மனிதாபிமானமற்ற செயல் என்றே என்னால் கூற முடியும்.

அடிப்படையில் பார்த்தால், மனிதன் ஒருவன் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறான், அதிகபட்சமாக 80-90 ஆண்டுகள்? அந்த காலகட்டத்தில், மனிதர்களான நாம் இந்த உலகில் பல மனிதாபிமானமற்ற விஷயங்களை உருவாக்குகிறோம். நம்முடன் உடன்படாத ஒருவரை சித்திரவதை செய்வதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடிக்கிறோம். மனித வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, புதிய மதத்தின் பிறப்பு, புதிய அரசாங்க வடிவம், புதிய பொதுஇயக்கம் என்று எந்தவொரு மாற்றமும், மனிதநேயம் இழந்ததால் தான் உருவாகியிருப்பதைக் காண முடியும். இங்கே ஒவ்வொரு குடிமகனும் முக்கியமானவன், சமஉரிமை உடையவன் மற்றும் மனிதநேயத்தை இழந்து விடக்கூடாது என்பதாலேயே, இந்த நாட்டில் ஜனநாயகம் நம்மிடையே இருக்கிறது. அதனாலேயே நான் எதிர்வினையாற்றுகின்றேன். அவரை விடுவிக்கக் கோரி பொது நிலைப்பாட்டை எடுத்திருக்கிறேன்.

C:\Users\Chandraguru\Pictures\Assam Barua\dhemaji bomb blast.jpg

2004இல் அசாமின் தேமாஜியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 குழந்தைகள் கொல்லப்பட்டதற்கு எதிராக நீங்கள் பேசியிருந்தீர்கள்.

ஆம். அதைப்போன்றே எந்தவொரு கொலையையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால்தான் 2004ஆம் ஆண்டு சம்பவத்திற்கு எதிராக நான் பேசினேன். அந்த நேரத்தில் என் படம் டோரா சிறந்த குழந்தைகள் திரைப்படம் என்ற விருதைப் பெற்றிருந்தது. அதிலிருந்து எனக்கு கிடைத்த பணத்தை, அந்த குடும்பங்களுக்கு நன்கொடையாக நான் அளித்தேன். அதுபோன்ற கொலைகள் என்னை வெகுவாகப் பாதிக்கின்றன.

C:\Users\Chandraguru\Pictures\Assam Barua\Tora 01.jpg

நான் ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வந்தவன். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக, சாலைகள் எதுவும் இல்லாததால் எந்த வாகனமும் அந்த கிராமத்திற்குள் நுழைய முடியவில்லை. இன்றைய தராதரங்களின்படி ‘நவீன நாகரிகத்திலிருந்து’ வெகு தொலைவில் இருக்கின்ற என்னுடைய கிராமத்தில் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களை நான் ஒருபோதும் பார்த்ததில்லை என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்,

ஒரு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்லது வேறு எந்த இலக்கையும் அடைவதற்காக இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்யும்போது, அது எனக்கு வேதனை அளிப்பதாகவே இருக்கின்றது.

சிஏஏவிற்கு வருவோம். அசாமைப் பொறுத்தவரை அந்த சட்டத் திருத்தம் நல்லதல்ல என்று ஏன் நினைக்கிறீர்கள்?

நான் இந்தக் கேள்வியைக் கேட்பதன் மூலம் தொடங்குகிறேன், இதுபோன்றதொரு சட்டத்தை வேறு எந்த மாநிலத்திலாவது மக்களுடைய எதிர்ப்பை ஒதுக்கி வைப்பதன் மூலம் இவ்வளவு விரைவாக நிறைவேற்ற முடியுமா? அந்த சட்டத்திற்கு தாங்கள் பலியாகி விடுவோம் என்று கருதிய மக்கள் அதிக எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கிய போதும் அது நடந்தது. மற்ற மாநிலங்களில் இதுபோன்று மத்திய அரசால் ஏன் செய்ய முடியாது என்பதை நான் சொல்கிறேன். சுதந்திரம் அடைந்ததிலிருந்து அசாமில் உள்ள தலைமை பலவீனமடைந்து வருகிறது. இன்று அது மிகவும் பலவீனமான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய அரசியல் வர்க்கம் மக்களுடைய பிரதிநிதிகளாக இல்லாமல் இருப்பதோடு, மக்களின் பிரச்சனைகளை புதுதில்லியில் எதிரொலிக்கவும் தவறி விட்டது. புதுதில்லி என்ன சொன்னாலும், அது தங்களால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைமையே இப்போது இருக்கிறது.

அரசியல் களம் முழுக்கவே இது உண்மையாக இருக்கிறது என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவ்வப்போது அசாமுக்கு வெளியில் இருந்து யாரோ ஒருவர் வேறு மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராவதற்காக எளிதில் இங்கே அழைத்து வரப்படலாம், இந்த மாநில மக்களுக்காக அவர் ஒருபோதும் பாராளுமன்றத்தில் பேசமாட்டார். பொதுவான குடிமக்களாகிய நாங்கள் சில காலமாகவே இதுபோன்ற விஷயங்களைக் கவனித்து வருகிறோம். உள்ளூர் அரசியல்வாதிகளின் தோல்வி காரணமாகவே இதுபோன்று நடக்கிறது. தற்போதுள்ள அரசியல் வர்க்கம், அசாமிய சமூகம் தன்னுடைய அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும் என்று இங்கிருக்கின்ற மக்களால் உறுதியாக நம்ப முடியாது. வீடு, நிலம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்போம் என்ற வாக்குறுதியின் பேரில் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கான அனைத்து கதவுகளையும் அவர்கள் அடைத்து விட்டனர். அதனால்தான் சாமானிய மக்களின் கோபம் அதிகமாகத் தூண்டப்பட்டு, இதுபோன்ற பலத்த சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நாம் கண்டோம்.

அசாமியர்களின் அடையாளத்தை வரலாற்று ரீதியாகவோ அல்லது புவியியல் ரீதியாகவோ மகாராஷ்டிரா, குஜராத் அல்லது வங்காளத்துடன் ஒப்பிட முடியாது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். அசாமி அடையாளம் என்பது முற்றிலும் வேறுபட்டது. இது ஒரு மொழி மையப்படுத்தப்பட்ட சமூகம். எந்தவொரு மதம் அல்லது சமய நம்பிக்கையுடன் தொடர்பு கொண்டதில்லை. பழங்குடியினர், சாதி ஹிந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் என அடையாளங்கள் உள்ள அனைவரையும் ஒன்றிணைத்து, ஒட்டுமொத்தமாக அசாமி என்ற மிகப்பெரிய அடையாளம் உருவாவதை உங்களால் எங்கே காண முடியும்? இருப்பினும், சுதந்திரத்திற்குப் பின்னர், எங்களுடைய அரசியல்வாதிகள் தங்களுடைய பலவீனமான தலைமையால் இவ்வாறான நபர்களாக எங்களைப் புதுதில்லியில்  அறிமுகப்படுத்தத் தவறிவிட்டனர்

C:\Users\Chandraguru\Pictures\Assam Barua\sukapha-1200x900.jpg

600 ஆண்டுகளுக்கு முன்னர், பழங்குடியினர், சார் பழங்குடியினர் மற்றும் அனைத்து சமூகங்களை சௌலுங் சுகபா ஒன்றிணைத்தார். அதற்கு முன்பு சிதறி இருந்த அவர்கள், வெளியில் இருந்து வந்த தாக்குதல்களை எதிர்கொண்டு ஒன்றாகப் போராடினார்கள். உச்சத்தில் இருந்த வலிமைமிக்க முகலாயர்களை – ஜஹாங்கீர், ஷாஜகான் மற்றும் அவுரங்கசீப் காலத்தில் – இடைக்கால அசாமால் 17 முறை தோற்கடிக்க முடிந்தது. சமூக-கலாச்சார ரீதியாக அழகான சமூக அமைப்பின் மூலமாக ஸ்ரீஸ்ரீசங்கர்தேவ் எங்களை ஒன்றுபடுத்தினார். பழங்குடியினர், பழங்குடியினர் அல்லாதவர்கள் மற்றும் முஸ்லீம்கள் அனைவரையும்  ஒரே அடையாளத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார். அந்த ஒற்றுமை என்பது அசாமி மொழியை அடிப்படையாகக் கொண்ட கூட்டு அசாமி என்ற அடையாளத்தால் ஏற்பட்டது.

இதை வரலாற்று புத்தகங்களுக்குள் சென்றுதான் உங்களால் படிக்க முடியும். மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில், எங்களுடைய இளைஞர்கள் தங்களுடைய வேர்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் நமது வரலாற்றை ஆழமாகக் கற்பிக்கக் கூடாது என்ற வகையிலேயே கல்வி நிறுவனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 1614 முதல் 1682 வரை 68 ஆண்டுகளாக தங்கள் ராணுவத்தைத் தோற்கடித்த அசாமிய மன்னர்களை விட, ஜஹாங்கிர், ஷாஜகான் மற்றும் அவுரங்கசீப் பற்றியே அசாமியக் குழந்தைகள் அதிகம் தெரிந்து கொள்கின்றனர். இன்று, கௌஹாத்தியில் கூட, அந்த மன்னர்களுடைய பெயரிடப்பட்ட ஒரு சாலை கூட எங்களிடம் இல்லை.

நான் உங்களுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டைத் தருகிறேன். வரலாற்றில் உள்ள நம் பெண்களுடைய கதாபாத்திரங்களைப் பாருங்கள். 1530ஆம் ஆண்டில் டர்பக் கானை எதிர்த்துப் போராடுவதற்காக குதிரை மீது சவாரி செய்து பெண்களின் படைப்பிரிவை முலா கபாரு வழிநடத்திச் சென்றார். ஆனால் சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷாரை எதிர்த்து குதிரை மீது அமர்ந்து சண்டையிட்ட ஜான்சிராணியை மட்டுமே எங்களுடைய இளைஞர்களுக்குத் தெரியும்.

C:\Users\Chandraguru\Pictures\Assam Barua\Mula Gabharu 01.jpg

அஹோம் காலத்திய எங்களுடைய வரலாற்றின் மிகச் சிறந்த அம்சங்களைச் சுட்டிக்காட்டியதற்காக,  என்னை ஒரு அஹோம் என்று ஒருவர் எளிதில் விமர்சிக்கக்கூடும். ஆனால் அஹோம் மன்னர்களை நான் ஒருபோதும் அசாம்  மன்னர்களைத் தவிர வேறாகப் பார்ப்பதில்லை. அனைத்து அசாமிகளும் தமது கடந்த காலம் குறித்து பெருமை கொள்ள வேண்டும். எங்கள் குடும்பப்பெயர்களைப் பாருங்கள். புக்கான் அல்லது பரூவா என்பது ஒரு பிராமணராக இருக்கலாம், ஏன் கலிதா, அஹோம் அல்லது ஒரு முஸ்லீமாகக்கூட இருக்கலாம். இது எதைக் குறிக்கிறது? அது, நாங்கள் மதத்தை மையமாகக் கொண்டவர்கள் அல்ல என்பதையே குறிப்பிடுகிறது. எங்களிடம் இருப்பதைப் பற்றி நாங்கள் பெருமிதம் கொள்ள வேண்டிய நேரம் இது, அப்போதுதான் எங்களுடைய அடையாளத்தை நாங்கள் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மக்களைப் புறக்கணித்தல், சுரண்டுவது மற்றும் பொதுவான மக்களுடைய கோரிக்கைகளை எங்கள் தலைமையின் இயல்பற்ற தன்மை கேட்க வேண்டும் என்பதற்காகவே சிஏஏவிற்கு எதிராக நான் ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தேன், இது மிக நீண்ட காலமாக நீடித்து வந்திருக்கிறது. நாங்கள் இந்தியர்களா இல்லையா? மற்ற நாடுகளின் குடிமக்களை விட எங்களுடைய நலன்கள் இந்த நாட்டிற்கு முதன்மையானவை இல்லையா? அல்லது எங்களுடைய எண்ணெய், நிலக்கரி, தேநீர் மற்றும் பிற இயற்கை வளங்களுக்கு மட்டுமே நாங்கள் தேவையா? சம்பந்தப்பட்ட குடிமக்களாகிய நாங்கள் இதுகுறித்து பேசுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. இந்தச் சட்டம் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டால், அடுத்த ஆண்டிலேயே அசாமிய சமூகம் எவ்வாறு சிறுபான்மையினராகி விட முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக, சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது தரவுகளை மேற்கோள் காட்டி நான் வீடியோ ஒன்றை உருவாக்கினேன்.

https://cdn.thewire.in/wp-content/uploads/2020/01/02211640/Screen-Shot-2020-01-02-at-9.15.55-PM-1024x507.png

அசாமில் குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போரட்டம்

ஆக, மிகப் பலவீனமான மாநிலத் தலைமை இருப்பதாலேயே அசாமில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

ஆம். ஏனென்றால், எங்களுடைய தலைமைக்கு வரலாறு குறித்த எந்த உணர்வும் இல்லை. எங்கள் வேர்கள் மீதான பெருமையும் அவர்களிடம் இல்லை. அடுத்த தேர்தலை வெல்லும் கோணத்தில் மட்டுமே அனைத்தும் பார்க்கப்படுகிறது. வகுப்புவாத அடிப்படையில் வாக்காளர்களை திருப்திப்படுத்துவது அல்லது துருவப்படுத்துவது மட்டுமே அவர்களுக்குத் தெரியும். உங்களுக்கு எடுத்துக்காட்டு ஒன்றை நான் தருகிறேன். பிரம்மபுத்திரா நதிப் பள்ளத்தாக்கு வளமான நிலமாக இருந்து வருகிறது என்றாலும், அதிக விவசாயம் செய்வதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அதிகமான மக்களுக்கு வாக்குகளுக்காக கிலோ ரூ.2க்கு அரிசி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் யார் கடினமாக உழைக்க விரும்புவார்கள்? இதுபோன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் மூலமாக, இந்த அரசியல் வர்க்கம் மக்களை உண்மையில் முடக்கியுள்ளது. திஸ்பூரை எப்படியாவது கைப்பற்றுவதுதான் அவர்களுடைய ஒரே நோக்கம். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி பொதுவான குடிமக்கள் அரசியல்ரீதியாக அறிந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அரசியலில் இறங்கி அவர்கள் விளையாடத் தேவையில்லை, ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே, ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தெளிவு அவர்களிடம் இருக்கும். ஒரு ஜனநாயக அமைப்பில் இது மிகவும் முக்கியமானது.

நம் அனைவருக்கும் இந்த உரிமையையும், பொறுப்பையும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. குடிமக்களாக நாம் முதிர்ச்சியடைய வேண்டிய நேரம் இது.

https://thewire.in/rights/jahnu-barua-interview-citizens-rights-caa-government

நன்றி: தி வயர் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *