மனங்கொத்திக் கவிதைகள்

சூரியதாசின் “மனுவே ஆனாலும்…”கரையற்ற நீர் “ எனும் இரு கவிதைத் தொகுப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது ஒருவரம் .

இவரது மனுவே ஆனாலும் என்ற கவிதைத் தொகுப்பு நான்காவது தொகுப்புநூல்.

இந்நூலில் உள்ள அறுபது கவிதைகள் ஒவ்வொன்றும் வெண்கலக்குண்டுகள் ஆனாலும் வெடிக்கும் படிக்கும் மனங்களில்.

பல இதழ்களிலும் எழுதி வரும்
இவரின் கவிதைகள் நம் வாசகர்களுக்குப் புதிதன்று. ஒரு வாசக வட்டத்தையே ஈர்த்திருக்கும் இவரது கவிதைகள் சொற்களினால் ஆனதல்ல. சொற்சித்திரங்களால் ஆனவை.

“எவ்வளவு பெரிய அரசியல்வாதியும்
முதலில் வாக்காளன்தான்
எவ்வளவு பெரிய படைப்பாளியும்
முதலில் வாசகன்தான்”

இந்தக் கவிதையைப் பலமுறை படித்தால், மிகச் சொற்ப சொற்களால் உருவான பிரமாண்டமான வெளியை உணர்த்தும் இக்கவிதை ஜென் தத்துவத்தைப் புதுப்பிப்பதாக உணர்கிறேன். ஆணவம், பெருமிதம் போன்றவை அறியாமையின் வெளிப்பாடென்பதை உரக்கச் சொல்லிவிட்டுச் செல்கிற இதுபோன்ற பல கவிதைகள் இருக்கின்றன.

மனுவே ஆனாலும்.. அட்டைப்படத்தைக் கூர்ந்து பார்த்தால்தான் தெரியும்,.
அந்த முகச்சாயல் யாருடையது ,எதனுடைய சாயலில் நம் வாழ்க்கை நகர்கிறது என்பதை, உள்ளார்ந்து விளக்கும் அட்டைப்படத்திலிருந்து நகர்கின்றன அறுபது கவிதைகளும்.
அதில்
அழகே அழகே என்ற முதல் கவிதையின் இறுதி வரிகள்…

“நின்ற இடத்தில் நின்றபடி
உலகை ஆட்டி வைக்கும் மரங்கள்”

நம் மனத்தையும் சட்டென எட்டியசைத்துப் பார்த்து விடுகிறது . நூலின் தலைப்பான ’மனுவே ஆனாலும்….’ என்ற கவிதையில் கவிதையின் உச்சம் தொடுகிற இடங்கள் பல.

” எல்லாரும் தேடும் இனப்பெருக்க உறுப்பை
இடுப்புக்குக் கீழிருந்து
நெற்றிக்கு இடம் மாற்ற
எவனுக்கும் வாய்ப்பில்லை”

என பெண்ணுரிமை கோரி , கடைசியில்

’செத்தால் பிணம்
சிதைந்தால் பிண்டம்
சுட்ட பின்னே நீரு
புதைத்த பின்னே யாரு’

என வாழ்வின் மெய்மையை அதன் நிலையாமையை நம்மை நோக்கி சுற்றும்போது புத்தர் ஆகிறார் சூர்யா .

அடுத்து அகலிகை கவிதை

இத்தனை ஆண்டுகள் கழித்து
உயிர்பெற்ற அவள்
கால மாற்றத்தை எப்படிச் சமாளித்தாள்?
…………
உயிர்ப்பித்தவர் அவதாரமாய்
உயர்த்தப்பட்டார்
கால்பட்டு உயிர்த்தவளின்
உயிர்வாதையை யாரறிவார்?’

ஒரு திரைப்படம் பார்த்து முடிந்த பிறகு பார்வையாளனுக்குச் சில கேள்விகள் எழும். இந்தக் கவிதை எழுப்பும் கேள்விகள் பல இருக்கின்றன. இது பார்வையாளரின் கேள்விகளாகத் தெரியவில்லை. தன்னை அகலிகையாக உணர்ந்தவனின் கேள்விக்கணைகள் நம்மைக் சுற்றிச் சிந்திக்கச் செய்யும்போது சித்தராகிறார் சூர்யா.

’ அவரவர் மௌனம்
அவரவர்க்கு இசை
அடுத்தவருக்கு இரைச்சல்’

என்ற கவிதை நல்ல பொருண்மையின் கண்ணாடியாக மிளிர்கிறது. இங்கு வித்தகராகிறார் சூர்யா.

சாத்தானின் நாட்காட்டி என்ற இந்தக் கவிதையில் வரும் வரிகள் சிறப்பானவை. ஒவ்வொருநாளும் வேற்றுமையுணர்வை உருவாக்கிய சாத்தான் ஏழாம்நாளில் என்ன செய்தான்?

’கால்மேல் கால் போட்டுக்கொண்டு சாத்தான்
ஏழாம் நாள் ஓய்வெடுத்தான்’

என்பதாக முடித்திருப்பார்.

’சுட்டுட்டீங்களா’ எனும் கவிதை மிக எளிமையான வரிகளால் ஆனது. சொற்கோவையில், சொற்செறிவில்,
ஒரு திரைப்படக்கதையையே உள்வைத்து அடைத்திருக்கிற,ஒட்டுமொத்தப் பாலியல்
வன்கொடுமையின் சாராம்சத்தைச் சொல்லுகிற இக்கவிதை அத்தனை எளிதாக படிப்பவர் நெஞ்சை விட்டு நகராது.

’சுட்டுட்டீங்களா…
செத்துட்டாங்களா…
இனி இப்படி நடக்காதா…

அப்ப அவங்க சாகலை’
இவை போன்று நெஞ்சை அழுத்துகின்ற படபடக்கச் செய்கின்ற கவிதைகள் எல்லாமே.

அடுத்து அவரது குறுங்கவிதைத் தொகுப்பு

“கரையற்ற நீர்”. குறுங்கவிதைகள்தாம் இவை. ஆயின் விசாலமான பார்வை உடையவை. 1930களில் தொடங்கப்பட்ட புதுக்கவிதை இயக்கம் ஒரு நூற்றாண்டை எட்டிய நிலையில்
சொல்புதிது, சுவைபுதிது எனக் கவிதைக்கான கட்டமைப்புகள் மாறிக் கொண்டுதான் இருக்கின்றன. வார்த்தைகளோ, வடிவங்களோ, உள்ளடக்கமோ வாசிப்பவர் மனதைத் தொட்டாலே போதும்.

சூரியதாசின் இன்னொரு கவிதைத் தொகுப்பு ‘கரையற்ற நீர்’. அது கரையற்ற நீர் அல்ல ஒரு காட்டாற்று வெள்ளம். நம்மை அது ஏகபோகத்துக்கு அடித்துச் செல்லும். இதில்
அந்தப் புத்தனின் கவிஞன் வெற்றி பெற்றான்.

’குளிர்ந்த நீரோடையில் விட்டு வந்த
என் பிம்பத்தை நீர் வற்றிய
வறண்ட கோடையில்
எங்கே பத்திரப்படுத்தும்’

இந்தக் கவிதையில் கேள்விக்குள் ஒரு கேள்வியை இட்டு நிரப்பும் தன்மையை உணரலாம்.

’மனிதனின் வாயில்
மலம் திணிக்க வைக்கும் சாமியைவிடக்
குழந்தைகளைச் சோறுண்ண வைக்கும்
பூச்சாண்டி மேலானது’

என்ற கவிதை வரிகளைப் படிக்கும்போதே நம் மனதை ஊசியில் குத்துவது போன்ற வலியைக் கொடுக்கிறது.

’மெல்லாமல் விழுங்கிய உணவும்
சொல்லாமல் விழுங்கிய சொல்லும்
உறுத்தலாகவே இருக்கின்றன’

எத்தனை எத்தனை மனங்களை அவதானிப்பு செய்திருக்கிறது இந்த ஒரு கவிதை.

’கையேந்தும் யானை
காசா கேட்கிறது
காட்டையல்லவா கேட்கிறது? ’

அப்படியே ஒரு சாட்டையை எடுத்து நம் கையில் கொடுத்து நம்மை அடித்துக்கொள்ளச் செய்யும் இக்கவிதைக்கு எதைக் கொடுத்துத் தேற்றுவது?

’உங்களிடம் மருந்து மாத்திரை
இருக்கிறது என்பதற்காக
நான் நோயாளியாக முடியாது’

நாட்டில் மருந்து மாத்திரைகளால் அதிக நோயாளிகள் உருவாவதை துணிச்சலுடன் சொல்லும் கவிதை இது.

’விடிகிற எல்லாப் பொழுதுகளும்
நமக்கானதாகவே விடிகின்றன
முடிகிற பொழுதுகள்தான்
யாருக்கானதாகவோ முடிந்துவிடுகின்றன’

இந்தக் கவிதையைப் படிக்கின்றபோது ஒரு சோகம் நம்மை ஆரத்தழுவுதலை உணரமுடியும்.

’மயிலிறகு குட்டிபோடும் என்ற
அறியாமையால்தான்
பாடப்புத்தகம் அன்று
கவிதையாகியிருந்தது’

இந்தக் கவிதை பால்யத்தைக் கிளறிவிட்டு எங்கோ ஒளிந்து கொண்டு அவதானிப்பது போலிருந்தது.

’ஒரே ஒரு நிபந்தனையுடன்
நீ செத்து தொலையலாம்
ஒரு விதையைப் போட்டு நீரூற்றி
உன் வயதுவரை வளர்த்துவிட்டுச் செத்துப்போ’

தற்கொலை செய்து கொள்வதைத் தள்ளிப் போடும் இக்கவிதை அறியாமையை அகற்றுவதோடு பிறருக்காக வாழும் பேருண்மையை சொல்லிச் செல்கிறது.

’எல்லாரையும்
காதலித்துக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவாக’

என்றிவ்வாறு காதலில் தொடங்கி காதலில் முடித்திருப்பார்.

சூர்யாவின் கவிதை வரிகள் பாசாங்கு இல்லாதவை.
பொய்யடைந்த புனைவிலிருந்து தப்பித்துக் கொண்டவை.
தெளிந்த நீரோடையின் கூழாங்கற்களாக வெளிப்படுபவை.
இதில் படிமங்களைக் கையாளும் விதம் சிறப்பு.
நீங்கள் இக்கவிதைகளை வாசிப்பீர்களெனில்,
இவை நிச்சயம் உங்கள் மனசைக் கொத்தும் மரங்கொத்தியாக விளங்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

முனைவர். பெண்ணியம் செல்வக்குமாரி,
புதுச்சேரி.

புத்தகம் பெற
தொடர்புக்கும் 

கவிஞர். சூரியதாஸ்
9865620257
[email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *