குப்பனின் முகம் பார்த்தவர்கள்
இப்படித்தான் பேசிச்சென்றார்கள்…..
“உசுரோடு இருந்தவரை
ஒரு சொட்டுச் சிரிப்பும்
முகத்தில் காட்டாதவனின்;
இறந்துவிட்ட முகமெல்லாம்
மலர்ந்து கிடக்கும் சிரிப்பு”
அவனின் ஆழ்மனதை அறியாதவர்கள்….
எழுதிச் சென்ற தீர்ப்பு.
எங்கே வாழ்ந்தான்
சிரிப்பதற்கு?
ஆண்டானிடம் அடிமை,
அண்டியே பிழைத்த பிழைப்பு;
வயிறு நிறையாத பசி
குளிர் போக்காத ஆடை
எண்ணெய் காணாத தலை;
வலியென்றாலும்
வயற்காடே உழைப்பு!
மாடும் அவனும்
அவனும் மாடும்….
இம்மையும்
மறுமையுமானப் பிறவியாய்!
இனி…
எந்தவித நெருடலும் இல்லை;
மரணமே மகிழ்ச்சியானதால்!
இறந்துபட்டக் குப்பன்
இனி
ஏன் சிரிக்காமல் இருக்க வேண்டும்?
அவன்
உயிரற்ற உடலாவது
சிரிக்கட்டும்!
மனமுள்ளோர்
இப்போதாவது
அவன் உடல் மீது
மலர்களைத் தூவுங்கள்!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.