குளிர்ந்த காற்று முகத்தில் பட்டவுடன் கண் விழித்துப் பார்த்தான் காரைமுத்து. உடல் சிலிர்த்தது. கொல்லையில் முள் முருங்கை மரம் சேவல் கொண்டை போல் செவ்வண்ணமாய் பூத்திருந்தது. அதில் நீல வண்ணக் குருவிகள் அமர்ந்து விருந்தாளிகள் உணவருந்துவது போல் தேன் குடித்துக் கொண்டிருந்தன.
அவன் திடீரென்று திடுக்கிட்டு பெரிய திண்ணையைப் பார்த்தான்.வெறுமையாய்க் கிடந்தது. அதன் ஓர மேற்கு மூலையில் திண்டு போல கட்டியிருந்தார்கள். அதன் மேல் கிளியாஞ்சட்டி தீபம் எரிந்து கொண்டிருந்தது.
திண்டுக்குள் பச்சை மண் கலயத்தில் நிரம்பத் தண்ணீர் ஊற்றி மஞ்சள் துணியால் அதன் வாயைக் கட்டி வைத்திருந்தார்கள். கருமாதியன்று திண்ணை உடைத்துக் கலயத்தை எடுத்து… மஞ்சள் துணியை அவிழ்த்துப் பார்க்கும் போது.. அதில் தண்ணீர் குறைந்திருந்தால் இறந்தவர் மனவேதனையுடனும் , மனக்குறையுடனும் இறந்துள்ளார் என்றும் , தண்ணீர் குறையாதிருந்தால் திருப்தியுடன் இறந்துள்ளார் என்றும் அறிந்து கொள்வதற்குத் தான் இந்த ஏற்பாடு.
மனக்குறையுடன் இறந்தவரின் ஆத்மா சாந்தியடைவதற்கும், அவரின் மனக்குறை நீங்குவதற்கும் கோடாங்கியை வரவழைத்து குறி கேட்டு சாங்கித்தியங்களைச், சடங்குகளைச் செய்வார்கள்.
அவன் நீண்ட பெருமூச்சு விட்டான். கடந்த ஒரு வருட காலமாக அனுபவித்த அவஸ்தை,  சித்திரைவதை அந்தாதி.. இந்தா.. என்று நேற்றுத் தான் ஒரு முடிவுக்கு வந்தது.
அவனது வாடகை வீட்டின் முன்பக்க ஒட்டுத் திண்ணைகள் சிறிதும் பெரிதுமாக இடதும் வலமுமாக இருக்க எட்டுக்குப் பத்து அளவில் சின்ன அறை. அதில்தான் அவனுடைய குடும்பம் உயிர்த்திருந்தது.
அதற்கு அடுத்தாற் போல் உள்ள வடக்கு வீட்டில் வீட்டுக்காரருடைய விதவை அக்காளும் , அவரின் மூத்த வாழாவெட்டி மகளும் குடியிருந்தார்கள். இரு பெண்களும் காட்டு வேலைக்குச் செல்வார்கள்.
காரைமுத்துவின் வீட்டில் ஏதாவது நல்லது… பொல்லது… என வைக்கும் கறி ; சாப்பாடு போன்றவைகளை… கொடுக்கலையினா..ஜாடை பேசி..வம்புச் சண்டை போடுவது அந்த வீட்டுப் பெண்கள் வாடிக்கை.
அங்கு வேப்ப மரம் ஒன்று இருந்தது. எப்படியும் 50 வருடங்களுக்கு முன்னதாக இருக்கும். சுப்பையா என்பவரின் வீட்டுக்கும் முருகாயி தகர வீட்டுக்கும் எல்லையாக அது நின்றது. அந்த மரத்தில் காக்கைகள் கூடு கட்டியிருந்தன. அதனால் அல்லும் பகலும் அவை போடும் சத்தம் தாங்கமுடியதாயிருக்கும்.
மழை பெய்கிற காலங்களில் அவனுடைய வீட்டுக்கு முன்னால் தண்ணீர் பெருகி விடும். அதைக் கடப்பது மிகுந்த சிரமத்தைக் கொடுக்கும்.
அந்த வீடுகளுக்குச் சொந்தகாரர் தெற்குப் பக்கமாய் குடியிருந்தார்.
அவர் வனத்துறையில் வேலை பார்த்ததால் காலியிடங்களில் ஆங்காங்கு உயர் ஜாதி மரங்கள் அடுக்கப்பட்டிருந்தன. வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு வீடுகளை மாற்றிக் கட்ட திட்டமிட்டிருக்கிறாராம்.
வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை வீடுகளுக்குக் கேப்பத்தாள் அல்லது போதைப்புல் கொண்டு கூரைகளை வேய்ந்து கொடுப்பார்..அந்த வீடுகளின் சொந்தக்காரர். அதற்கான செலவு அவரவர் வீட்டுக்குத் தகுந்தவாறு வீட்டுக்காரருக்கு பெரிய பங்கும் , காரைமுத்து குடும்பத்திற்கு நடுத்தர பங்கும் , வீட்டுக்காரருடைய அக்காளுக்கு சிறு பங்கும் பகிரப்படும். வெயிலில் கூரை காயக் காய பொரு பொருவென ஆகிப் போகும். காக்கைகள் கூடு கட்ட கூரையை மூக்கால் நோண்டி நோண்டிப் பிரிக்கும். கூரை சல்லடையாக மாறிட.. மழைக்காலங்களில் உட்கார இடமில்லாமல்… மதிலோடு சாய்ந்து கொண்டு… ஒற்றைக் காலில் நின்று கொண்டு குடும்பங்கள் இம்சைப்படும்.
வீட்டுக்காரருடைய அப்பா அரண்மனையில் மாட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருந்ததால் அவருக்கு ஜமீன்தார் இனாமாக இந்த இடத்தைக் கொடுத்திருந்தார்.
தன் அப்பாவைப் போலவே வீட்டுக்காரரும் சிறு வயசுல ‌ இருந்து அரண்மனையில் தான் வளர்ந்தவராம். ஜமீன்தாருக்கு வெத்திலை இடித்துக் கொடுப்பது , கைகால் அமுக்கி விடுவது , பூந்தோட்டத்திலிருந்து தண்ணீர் சுமந்து வருவது , மாடுகளை மேய்ப்பது , அவைகளைக் குளிப்பாட்டிக் கொண்டு வருவது , ராத்திரியிலே மாடுகளுக்குத் தீவனம் போடுவது , தண்ணீர் காட்டும் போது பருத்திக் கொட்டையுடன் நிலக்கடலைப் பருப்பு , தேங்காய் சேர்த்து ஆட்டிப் பால் எடுத்து களனித் தண்ணீரில் கலந்து வைப்பது , ஜமீன்தாரோ அல்லது அவர் வீட்டுக்கோ கூட்டுவண்டியில் போகையில் வண்டிக்கு முன்னால் ஓடுவது என விசுவாசியாக இருந்துக்கிட்டு வந்தாராம்.
இது பற்றி காரைமுத்துவிடம் அவர் நிறையச் சொல்லியிருக்கிறார்..” குண்டா நெறைய பழைய கஞ்சிக் குடிச்சுட்டு கையில கம்பைத் தூக்கிட்டு வண்டிக்கு முன்னால ஓடுவேன்.வண்டியில பூட்டியிருக்கிற காளைகளெல்லாம் வரும் நாட்டுக் காளைகள். புலி பாய்ற மாதிரி வண்டியத் தூக்கிட்டுப் பறக்கும். ஆனால் அவைகள் என்னை ஒரு நாள் கூட முந்தினது இல்லை.
ஜமீன்ல காடுகள் வளர்க்க ஆரம்பிச்ச போது பாதுகாவல் வேலை இவருக்குக் கிடைத்தது. அப்புறம் நாடு சுதந்திரமடைந்த பிறகு… ஜமீன் ஒழிஞ்சு போனதும்…வனத்துறை அமைக்கப்பட்டு ” வாச்சராக ” அரசு ஊழியராக்கப்பட்டு… பதவி உயர்வு பெற்று” கார்டாக ” ஆனார்.
தகர வீட்டு முருகாயிக்கும் வீட்டுக்கார அம்மாவுக்கும் தினமும் சண்டை வராமல் இருந்ததில்லை. ஏனென்றால் வேப்பமரத்துல உட்காரும் காக்கைகள் தூக்கிக் கொண்டு வருகிற எலும்பு, கோழிக்கால்கள் , கோழிக்குடல்கள், செத்த எலி, செத்த தவளை மற்றும் ஏதாவது ஒன்று அவற்றின் வாயிலிருந்து நழுவி தகரக் கூரையில் விழும். அப்போது கல் எறிகிற மாதிரியான சத்தம் எழும். அதனால் வீட்டுக் கூரைமேல் கல் எறிவதாய் குற்றம் சாட்டிமுருகாயி சண்டைக்கு வருவாள். வீட்டுக்கார அம்மாவும் சளைச்சது இல்லை. லேசில் விடாது. ஒரே ரணகளம் தான்.
வீட்டுக்காரருடைய அப்பா சிலம்பாட்டம் தெரிந்தவர். ஆனால் எந்தப் போட்டியிலும் போய்க் கலந்துக்கிட்டதில்லை. மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுத்ததில்லை. அரண்மனையில் மாடுகளைப் பராமரிக்கப்போய்‌ ராணிக்கு வண்டி ஓட்டுபவராக ஆனார்.
அந்த வீடுகளுக்கு முன்னால் காலியிடம்… சும்மா கிடக்குதே என்று காரைமுத்துவினுடைய அப்பா பயிர்க் குழி போட்டார். அவரை, புடலை , பீர்க்கங்காய் என்று கொடிகள் செழித்து வளர்ந்து நிரைக்க நிரைக்கக் காய்கள் காய்த்தன. வீட்டு சொந்தகாரருக்கு… அவருடைய அக்காவுக்கு என்று விளைந்த காய்களைக் கொடுத்தும்… பொறாமைப்பட்டு வீட்டுக்காரருடைய அப்பாவான அந்த கிழவருக்கு வயித்தெரிச்சல் தாங்க முடியவில்லை. அவனுடைய அப்பாவுடன் சண்டை போட்டார். உடனே அவனுடைய அப்பாவும் தாங்க முடியாத ஆத்திரத்தில் அத்தனைக் கொடிகளையும் அத்து எறிந்தார். பந்தல்களை பிய்த்து வீசினார். அத்தோடு யாவும் முடிந்து போனது.
சிந்துபாத்தின் கடற்பயணத்தில் வருகிற கிழவன்…உதவி செய்யப் போன சிந்துபாத்தின் பிடரியில் ஏறி உட்கார்ந்து கொண்டு அவனை எவ்வளவு துன்புறுத்தினானோ அதைக்காட்டிலும் பல மடங்கு வீட்டுக்காரருடைய அப்பாவான அந்தக் கிழவரும் காரைமுத்துவின் குடும்பத்தைத் துன்புறுத்தினார்.
கிழவருக்கு வயது எண்பத்தேழு. ஆனாலும் கறி , மீன் தின்பதை மட்டும் விட்டு விடவில்லை அவர். எப்பவும் எதையாவது தின்னனும் என்கிற வெறியோடு கத்தி ரகளை பண்ணிக் கொண்டிருப்பார்.
நல்லா நடமாடிக் கொண்டிருந்த அவர் ஒரு நாள் காலை இடறி வலது கால் சுண்டுவிரல் காயம்பட்டுப் போனது. மகனோ..மகள்களோ..மருமகள்களோ..யாரும் கிழவருடைய காயத்தைப் பற்றி எதுவும் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை. கிழவரும் அதற்கு மருந்து எதுவும் போடாமல்.. தண்ணீர் படுகிற மாதிரி வைத்துக் கொண்டதால் சுண்டுவிரல் புண்ணில் சீழ் கட்டியது.
கிழவனாருடைய படுக்கை பெரிய திண்ணை என்பதால் இரவும் பகலும் புண்வலியால் அணத்தத் தொடங்கினார். காரைமுத்து வீட்டுக்கு முன்னால் வலது பக்கத்தில் பெரிய திண்ணை இருந்ததால்.. யாரும் அவரின் அணத்தலைக் கேட்டு சகிக்க முடியவில்லை.
புண் மேலும் மேலும் மோசமடைந்து புழு வைத்து படுக்கையில் ஊற ஆரம்பித்தது. கிழவனாரின் நடமாட்டம் நின்று போனது. சாப்பிடுவதும் , மலஜலம் கழிப்பதும் படுக்கையிலே என்று ஆகிப்போனது. வீட்டுக்குள் அவர்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. புண் வீச்சமும் , மலஜல நாற்றமும் காரைமுத்துவின் குடும்பத்தைச் சித்திரவதைப் படுத்தியது. எப்போதும் வீட்டின் கதவை மூடி வைத்தபடியே இருந்தார்கள். சின்ன குருவிக் கூடு மாதிரியான அந்த வீட்டிற்குள் ஆறு  ஜீவன்கள் (அக்குடும்ப நபர்கள் ) நரகத்தை நாளும் அனுபவித்தார்கள். நிதானமாக சாப்பிட முடியவில்லை ஆசுவாசமாக தூங்க முடியவில்லை. கிழவர் நொடியெல்லாம் வலி பொறுக்க முடியாமல் கத்திப் புலம்பிக் கொண்டிருப்பார். காரைமுத்துவின் குடும்பத்தினரைப் பார்த்துவிட்டால் சத்தத்தை அதிகப்படுத்துவார். அவனுடைய குடும்பத்தின் நிலைமை சரியில்லாததால் எதுவும் மறுபேச்சு பேசாமல் எல்லாவற்றையும் அவர்கள் ஜீரணித்துக் கொண்டார்கள். கிழவரின் கண்களுக்கு மறைவாகவே தங்களை வைத்துக் கொண்டார்கள்.


கிழவருக்கு மூன்று பிள்ளைகளில் இரண்டு பெண்கள்..ஒரு ஆண். தன்னோட இரண்டு மகள்களையும் உள்ளூரிலேயே கல்யாணம் செய்து கொடுத்திருந்தார். மூத்த மகளுக்கு மூன்று மகன்கள்..ஒரு மகள். அனைவர்க்கும் கல்யாணமாகி வெளியூருக்குப் போய் விட்டார்கள். இளைய மகளுக்கு இரண்டு பெண்கள்.  அந்த இரண்டு பேரில் மூத்தவளுக்குக் கல்யாணம் ஆகி பத்து வருடங்களாகக் குழந்தைகள் இல்லை. அவளது கணவன் விருப்பாச்சிக்குத் துணி வியாபாரத்திற்குப் போனவன் வேறு விதவைப் பெண்ணை சேர்த்துக் கொண்டு திரும்பி வரவில்லை. அதனால் அவள் தன் அம்மாவோட. வீட்டிலே தங்கி விட்டாள்.
இளையவளுக்கு ஆறு பெண்கள். அல்லோலகப் பொழப்பு. கணவனோ குடிகாரன். எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றித் திரிபவன். மகள்கள் கூலி வேலைக்குப் போய் குடும்பம் நடந்தது. எப்படி ? எல்லாப் பெண்களுக்கும் கல்யாணம் நடக்கப் போகிறது என்பது பெற்றவளுக்கு வியாதியாய் உருவெடுத்தது வீட்டிலிலேயே அவள் முடங்கிக் கிடந்தாள்.
கிழவனுடைய மகனுக்கும் குழந்தையில்லை. வேண்டாத தெய்வமில்லை… போகாத கோயில் குளம் இல்லை…பார்க்காத ஜோசியரும் இல்லை…செய்யாத வைத்தியமில்லை… கடைசியில் தன்னோட 50 ஆவது வயதில் வாரிசு வேணும் என்று ரெண்டாவது கல்யாணம் செய்து கொண்டார். மணப் பெண் ஏற்கெனவே இரண்டு பேருக்குக் கட்டிக் கொடுத்தும் வாழாமல் திரும்பியவள். அவர்களுக்கு ஆண் ஒன்று பெண்கள் இரண்டு என மூன்று குழந்தைகள் பிறந்தன.
நேற்று தான் அந்தக் கிழவர் செத்துப் போனார்.
இந்த உலகத்தில் பிறந்த எந்த ஜீவராசிகளுக்கும் ஏற்படாத வதையை அனுபவித்து… அருகிலிருந்த காரைமுத்துவின் குடும்பத்தையும் வதைத்து விட்டு ஒருவழியாகப் போய் சேர்ந்தார்.
வசந்ததீபன்


One thought on “சிறுகதை: இரு கைகளை வீசி நடந்தான் – வசந்ததீபன்”
  1. வசந்ததீபன் , இந்தக்கதையில் ஒரு நாவலுக்கான விஷயங்கள் இருக்கின்றன. நீங்கள் சிறு குறிப்புகளை உதிர்த்துவிட்டு கைகளை வீசிப் போய் விட்டீர்களே . முயலுங்க நண்பரே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *