கொரோனா தொற்று தொடங்கிய ஜனவரி 2020இல் ஜாக் கெல்லி என்கிற பத்திரிக்கையாளர் அது அமெரிக்க பொருளாதாரத்திலும் வேலை வாய்ப்பிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கும் ‘ஒரு கருப்பு அன்ன’ நிகழ்வு (*Black Swan event*)என்று கூறியிருந்தார். அதையாவது தொற்றின் பாதிப்பு தெரியாமலிருந்த காலம் என்ற வகையில் புரிந்து கொள்ளலாம். ஆனால் இப்பொழுது பிப்ரவரி 2021இல் கேப்ஜெமினி என்கிற பன்னாட்டு நிறுவனத்தின் முதன்மை அதிகாரி அஷ்வின் யார்டி மீண்டும் அதே தொடரைப் பயன்படுத்தியிருக்கிறார் (இந்து ஆங்கில நாளிதழ் 28.02.2021-பக்கம் 19)

‘கருப்பு அன்ன நிகழ்வு’ என்றால் என்ன? அது கொரோனா பெரும் தொற்றிற்குப் பொருந்துமா என்று பார்க்கலாம்.

ஒரு சூழ்நிலையில் சாதாரணமாக எதிர்பார்க்கக்கூடியவற்றிற்கு அப்பாற்பட்டுக் கணிக்க முடியாததும் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு நிகழ்வை ‘கருப்பு அன்ன நிகழ்வு’ என்று வர்ணிக்கின்றனர். பேராசிரியரும் புள்ளிவிவர நிபுணரும் பங்குச் சந்தை செயல்பாட்டாளருமான நசீம் தலேப் (Nassim Taleb) தனது ‘Black Swan’ புத்தகத்தில் இதை ‘மிக மிக அரிதானது; தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவது; நடந்து முடிந்த பின்னால் மனித இயல்பு அதற்கான காரண காரியங்களை விளக்கி ,அதை சாதாரணப்படுவதும்’ என வரையறை செய்கிறார். உலகப் போர்கள், சோவியத் ஒன்றியம் உடைந்தது, இஸ்லாமிய அடிப்படைவாத எழுச்சி, 9/11 இரட்டை கோபுர தகர்ப்பு, இணையதள வளர்ச்சியின் பாதிப்புகள், 1987,2008 பொருளாதார நெருக்கடிகள் ஆகியவை கருப்பு அன்ன நிகழ்விற்கு எடுத்துக்காட்டுகளாகக் காட்டப்படுகின்றன.

BOOK COVER – The Black Swan by Nassim Nicholas Taleb – Johnson Consulting Services

ஐரோப்பியப் பயண ஆய்வாளர்கள் அன்னப் பறவை அனைத்தும் வெள்ளை நிறமானவை என்று கருதியிருந்தார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவில் அவர்கள் எதிர்பாராமல் கருப்பு அன்னத்தைப் பார்த்ததும் அவர்களுக்கு ஏற்பட்ட உணர்விலிருந்து இந்த சொற்றொடர் வழங்கப்படுகிறது.

2007 ஆம் ஆண்டில் நசீம் தலேப் புத்தகம் வெளிவந்தபின், எதிர்பாராமல் நிகழ்வதும் அதிக பாதிப்பை உண்டாக்கக்கூடியதுமான எல்லா நிகழ்வுகளையும் ‘கருப்பு அன்ன நிகழ்வு’ என்று அழைப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் கோவிட்-19 பெரும் தொற்றை பெரும் அபூர்வ நிகழ்வு என்று வர்ணிப்பது ஆபத்தானது. அதனால் *அடுத்த பெரும் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக மாட்டோம். தயாரிப்புகளைச் செய்யவேண்டிய பொறுப்பிலுள்ளவர்கள் அரிய நிகழ்வு என்று சொல்லி தங்களது அப்பட்டமான தோல்விகளை மறைப்பார்கள்.*

கருப்பு அன்ன நிகழ்வின் முதல் வரையறுப்பான ‘எதிர்பாராதது’ என்பது கொரோனா தொற்றிற்குப் பொருந்துமா? இயற்கை அழிவுகள் மற்றும் போர்களைவிடத் தொற்று நோய்கள், பெரும் தொற்றுகள் மனித இனத்தின் பேரழிவிற்கு இட்டுச் சென்றிருக்கின்றன என்பதை வரலாறு காட்டுகிறது. எடுத்துக்காட்டாக முதல் உலகப் போரைவிட 1918ஆம் ஆண்டு ஃபுளூ நோயில் அதிக மக்கள் இறந்தனர். அதேபோல் பத்திரிக்கையாளர்களும் உடல்நல நிபுணர்களும் பில்கேட்ஸ் போன்றவர்களும்,டிரம்ப் நிர்வாக அதிகாரிகளும் பெரும் தோற்றுக் குறித்து எச்சரித்துள்ளனர். எனவே இது எதிர்பாராதது என்று கூற முடியாது.

இரண்டாவது வரையறுப்பான ‘அதிக பாதிப்பு’. கொரோனா மக்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் 1918ஆம் ஆண்டு ஃபுளூ நோயில் 5கோடி மக்கள் இறந்ததைப்போல் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்க முடியாது.



மூன்றாவது வரையறுப்பு ‘சாதாரணமாக்கிக்கொள்வது’(normalaisation). மனித உணர்வில் ஒரு நிகழ்வுக்குப் பின் அதைச் சகஜமாக்கிக்கொள்வது என்பது இயல்பானதாக இருக்கிறது. ஆகவே அதைக் கருப்பு அன்ன நிகழ்வின் ஒரு அம்சமாக கொள்ள முடியுமா? இது விதிமுறைகளில்லாத ஒரு தலைப்பட்சமானதாக இருக்கிறது.(arbitrary) மேலும் கொரோனா பெரும் தொற்று நிகழ்வின் இடையில் நாம் இருக்கிறோம். ஆகவே எப்போது அதைச் சகஜமாக்கிக் கொள்வோம் என்பது தெரியாது.

முடிவாக கொரோனா போன்ற ஒரு நிகழ்வு அவ்வளவு அரிதான ஒன்றல்ல. வரலாறு முழுக்க இத்தகைய நிகழ்வுகள் உள்ளன. பல்வேறு தரப்பிலிருந்தும் எச்சரிக்கைகள் தரப்பட்டுள்ளன. கணிதவியல் ரீதியாக அதைக் கணிப்பதும் இயலாத ஒன்றல்ல. பெரும் தொற்றைப் பொறுத்தவரை நிகழுமா என்பதல்ல கேள்வி;எப்பொழுது நிகழும் என்பதே. புத்தகத்தை எழுதிய தலேப் அவர்களே கொரோனா ஒரு கருப்பு அன்ன நிகழ்வா என்ற சர்ச்சைக்கு விடையளித்துள்ளார். ‘இல்லை’ என்பதே அவரது பதில்.

கட்டுரைக்கு உதவிய உசாத்துணைகள் (references)

https://www.forbes.com/sites/jackkelly/2020/01/27/the-coronavirus-is-a-black-swan-event-that-may-have-serious-repercussions-for-the-

Coronavirus is significant, but is it a true black swan event? (theconversation.com)

Glenn McGillivray

Managing Director, Institute for Catastrophic Loss Reduction, Western University

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *