John Donne Death be not proud Holy Sonnet10 in tamil Translated by Thanges. ஜான் டன் ஆங்கில கவிஞர் மொழி பெயர்ப்பு கவிதை - தமிழில்: தங்கேஸ்




கவிதைச் சூழல்
(ஷேக்ஸ்பியரின் சமகால கவிஞரான ஜான் டன் எழுதிய பத்து சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்றாக. (Death be not proud (Holy Sonnet 10) ) விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. காதல் கவிதைகளும் பெண் ஈர்ப்புக் கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்த ஜான் டன் தன் பிற்கால வாழ்க்கையில் ஒரு உண்மையான மத போதகராக மாறிய பின்பு முற்றிலும் கிறிஸ்த்துவ மத நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட பாடல் (Sonnet ) இது . மரணமென்பது வாழ்வின் முடிவல்ல இறைவனின் சொர்க்கத்தில் எல்லையின்மையில் வெளியில் தூய ஆன்மாவின் ஆனந்தம் தொடரும் என்கிற ரீதியில் எழுதப்பட்ட பதினான்கு வரிகளை கொண்ட பாடல் இது)

John Donne
Death be not proud (Holy Sonnet 10)

கர்வம் வேண்டாம் மரணமே I
ஆனாலும் அத்தனை கர்வம்
உனக்கு வேண்டாம் மரணமே |

அறியாதவர்களோ உன்னைப் பார்த்து
அகில உலகச் சக்கரவர்த்தி
அதி பயங்கர கு௹பி என்று அடைமொழியிட் டு
நடு நடுங்குகிறார்கள்
ஆனால் அப்பாவிகளைக் கொன்று குவிக்கும் நீ
அத்தனை ஆனந்தப்படத் தேவையில்லை

ஓர் இரகசியம் தெரியுமா உனக்கு?
மெய்யாகவே நீ கொல்லும் மனிதர்கள்
யாரும் சாவதில்லை

ஓய்வையும் உறக்கத்தையும்
ஓவியம் தீட்டுகிறேன்
அட ஆச்சரியம் உன் முகம் தோன்றுகிறது ஓவியத்தில்
அம்முகத்திலிருந்து பீறிட்டு பிரவாகமெடுக்கிறது ஆனந்தம்

ஆகச் சிறந்த மனிதர்கள் உன்னோடு பயணிக்கும் போது
அவர்களின் எலும்புகளோ
பூமிக்குள் போகின்றன
அவர்களின் ஆன்மாவோ எல்லையின்மைக்குள் பறக்கின்றது

பெருமிதத்தால் பெருத்து விடாதே மரணமே

நீ சுதந்திரமானவனா சொல் ?
அடிமை தானே நீ ?
விதிக்கும் அகாலத்திற்கும்
இரத்த வெறி கொண்ட அரசர்களுக்கும்
தற்கொலை என்ணம் கொண்ட வீணர்களுக்கும்
நீ அடிமை தானே மரணமே..?

உன் சகவாசம் என்ன?
விஷத்துடனும் போர்க்களத்துடனும் போக்கிடமற்ற நோய்களுடனும் தானே

ஓ… அதிகர்வி மரணமே !
விரல்களின் வருடல்களிலேயே
உயிர்களுக்கு தூக்கத்தைத் தருபவன் என
ஆணவத்தில் ஆர்ப்பரிக்க வேண்டாம்

பாப்பி மரங்களின் போதை நெடியும்
மந்திரவாதியின் உச்சாடனங்களும் கூட
எங்களுக்குத் தூக்கம் தருபவை தானே.

இறுதி என்பது என்ன?
இங்கே சிறு துயிலில் விழுகிறோம்
அங்கே எல்லையின்மையில் எழுகிறோம்
பிறகு எங்களுக்கேது இறப்பு?
உண்மையில் அது உனக்குத்தானே?

மூலம்: ஜான் டன்
மொழி பெயர்ப்பு: தங்கேஸ்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *