Parameshwari Poems 7 து. பா. பரமேஸ்வரியின் கவிதைகள் 7




காதலின் தோன்றல்
*************************
கணமொன்றில் தோன்றும்
தீப்பொறியே காதல்..
நின்று சுற்றுமுற்றும் பார்த்து
பல நாள் சிந்தித்து
சரி வருமா வராதா
என்று யோசித்துப்பின்
இருவிரலில் ஒன்றைத் தொட்டு..
பல விளக்கங்களுக்கு ஆட்பட்டு
பல்வேறு பிரயத்தனங்களுக்கு உட்பட்டு
பற்பல சான்றுகள் சுட்டப்பட்டு
பல்கிப் பெருகிய காரணங்கள் தூண்டப்பட்டு
அதற்குப் பின்பான
தீர்க்கமான யோசிப்பில் கூறுபோடும் காதலின் வெளிப்பாடு
நிலையற்றது.
சஞ்சலத்திலேயே வாழும்..
எப்போது வேண்டுமானாலும்
தம்மை விடுவித்துக் கொள்ளும்…

வாழ்க்கையின் போக்கு
******************************
கைகட்டி
எட்டநின்று
குறுக்கிடாமல்
கவனியுங்கள்
வாழ்க்கையின்
போக்கை..
அதிசயங்கள் பல நிகழ்த்த வல்ல
வல்லமை கொண்டது வாழ்க்கை..
அதை நீங்கள் கையிலெடுத்தால்
கைவிட்டுவிடும்..
அது உங்கள் கரம்பிடித்தால்
கைதூக்கி விடும்.

நினைவலைகள்
*******************
நினைவுகளின் அலைகள்..
முத்தமிட்டன‌ நனவில்
நிழல்களின் மீப்பெரு பிம்பங்கள்
மோதுகின்றன நிஜத்தில்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
உருப்பெறுகின்றன உருவாரங்கள்
மனதின் ஆதிக்கம்
சில்லறைத்தனமான என் அசைவுகள்
காண்போர் யாவரையும் கேளிக்கிரையாக்குகிறது..
ஏதும் பொருட்படுத்தா மனம்
மௌன இரையாகிறது..
பெரும் கைகலப்பு இடுக்குகளில்
எழுதுகோல் கதறுகிறது..
விரல்கள் கசிய கவிதையாகிறது ஏதோ ஒன்று

பெண் எனும் சுமைதாங்கி
*******************************
தந்தையைக் கண்ணுக்குள் சுமந்தவள்
சகோதரனை இடுப்பில் சுமந்தாள்
காதலனை நெஞ்சில் சுமந்தவள்
அவனையே கணவனாக மடியில் சுமந்தாள்
பிள்ளையை கருவில் சுமந்தவள்
பேரப்பிள்ளைகளை இருகரங்களில் சுமந்தாள்.
சுமைகளை‌க் கூடச் சுகிக்கும்
பெண்மையின்‌ மென்மையை
பூவிதழ் போன்று இதயக் கமலத்தில் கொள்ளும்
மணாளனைக் கொண்ட மங்கையின் மனம்
தடம் மாறிய வெளிச்சமாய்
பிரகாசிக்கும் என்றும்..

மொட்டுகளின் கண்ணீர்க் கதறல்
***************************************
மனிதரை மிருகத்துடன் ஒப்பிட்டுக்
கொச்சைப்படுத்த வேண்டாம்
மிருக இனத்தை.
மனிதனின்றி மிருகம் என்றும்
பச்சிளங் தளிர்கள் மீது
காட்டாது வன்புணர்வை
ஒருபோதும்..
மனிதன் மட்டுமே
துளிரானாலும்
கொடியானாலும்
பூச்செடியானாலும்
மலர்மொட்டானாலும்
காண்பன அனைத்தையும்
வன்மநாசம் செய்கிறான்..
ஆதலால்…
மலரை கசக்கி நாசப்படுத்தும்
இப்படியான மனிதரை
இனி மிருகமென்றழைக்க வேண்டாம்..
மிருகங்கள் வெட்கப்படுகின்றன.

படைப்பின் பால் இயல்பு
*****************************
எதிர்பாலின் மீதான பற்றென்பது மனித இயல்பே…
அம்மாவிற்கு ஆண்பிள்ளையின் மீது கூடதல் பாசம்
அப்பாவிற்கு பெண்பிள்ளை மீது.
அண்ணனுக்கு தங்கை மீதும்
அக்காவிற்கு தம்பி மீது
என தனதொத்தப் பாலைக் காட்டிலும்
தமக்கெதிரான பால் மீதான ஈர்ப்பென்பது உடலின் கூறு
சுரப்பிகளின்செயல்பாடு
இயற்கையின் படைப்பு..

நம்பிக்கை வேர்
********************
துளிர் விடும் போதே
கிள்ளியெறிய முயன்றாய்…..
கிஞ்சித்தும் கலங்கவில்லை…
மௌனமாய் தனக்கான வேரை மட்டுமே
உறுதியாய்ப் பற்றி நின்றது
நம்பிக்கையாய்..
இன்றோ..
பெருமரயாய் விரவிக் கிடக்கிறது…
பூத்துக் குலுங்கும் மலர்களையும்..
கனிந்து கிடக்கும் பழங்களையும்…
வாரி வழங்கக் கரம் நீட்டுகிறது இன்முகமாய்….

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *