விலங்குகளின் பாஷை
மூன்று பூனைகள் போல்
எட்டி பார்க்கின்றன
அரளி பூக்கள்
அம்மாரி யானை போல்
அசைகிறது
செம் பூக்கள் மரம்
ஆட்டுக்குட்டி போல்
என் காதைத் தருகிறேன்
உன் வருடலுக்கு
உடலை நெட்டி எடுத்த பின்
சிலிர்க்கும் பூனையின் சிலிர்ப்பு போல்
என் சுண்டு விரலை
நெட்டி எடுத்த பின்
சிலிர்த்துப் போகிறேன்
நரி வெள்ளரிப் பழத்தைக்
கவ்விச் செல்வது போல்
அன்பின் சொற்களை
கவ்வி கொண்டு வருகிறாய்
வெளியிலிருந்து
காய்கறி பழங்கள் வைத்த
குளிர் பதன பெட்டி முன்
நிற்கும் நரி போல்
நிற்கிறேன் உன் முன்
நீ சிரிக்கும் போது
குள்ள நரி போல்
பூனை போல்
குதிரை போல் மாறி மாறி
சிரிக்கிறாய்
விலங்குகளின் அன்னோன்ய பாஷை கூட நம் காதலில்
அனுமதிக்கபட்டிருக்கிறது
…க. புனிதன்