ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பு தவறு. நியூட்டன் ஒரு மூடன். என்று பேதைகள் காவியின் சாத்திர மனுநீதியாளர்கள் அது ஏதோ அறிவியல் பேருண்மை என்பதுபோல முழக்கமிடுகிறார்கள் இதுவும் அவர்களுக்கு ஒரு வேத பாராயணமே. இதன் மூலம் நமது அறிவியல் வரலாறுக்கே உலக அளவில் அவமானத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். அறிவியல் ஒரு நவீன அறிவாயுதம் என்று அறிவித்தார் மேரிக்யூரி. எதையும் சந்தேகி, என்று அறிவித்த சாக்ரடீஸ் காலத்திலிருந்தே அறிவியல் மதவாதிகளிடம் கடும் போராட்டங்களை நேரடியாக நடத்தியே வந்துள்ளது. அறிவியல் எனும் அறிவாயுதத்தை மிகக் கேவலமான எதிரியாக நடத்திய அவல வரலாறு எல்லா இனங்களுக்கும் பொருந்தும். என்றாலும் ரத்த ஆறுகளை ஓட வைக்கும் தனது காவிக்கயமையோடு இந்துத்வா ஆட்சி அதிகாரத்தைக் கைபிடிக்கும்போதெல்லாம் பல தபோல்கர்களை வேட்டையாடியது. போதாதென்று பல்கலைக் கழகங்கள் முதல் பள்ளிக்கூடப் பாடப் புத்தகம்வரை அபத்த காவி அறிவியலை தனது சனாதனமாக களம் இறக்குகிறது. ஆனால் இவ்வகை பண்டார மடமைக்கு எதிராகவும் மதவெறி ஆட்சி அதிகாரம் ஆக்கிரமிப்பு என அனைத்து வகை பிற்போக்கு கயமைக்கு எதிராகவும் இயங்கவேண்டிய அமைப்பாக அறிவியல் பீடுநடை போட்டது என்பதற்கான சான்றுகள் வரலாறு முழுதும் புதைந்துள்ளன. சாதாரண பாதசாரிக்குக் கூடத் தெரியும்.
ஐன்ஸ்டீன் தவறு என்றால், நியூட்டன் கண்டுபிடிப்பு தவறு எனில் செயற்கைக் கோள்கள் இல்லை. ஆனால் மனிதனை சாதி எனும் சனாதன சாக்காட்டை நோக்கித் தள்ளிய பண்டார வேதங்களும் சாத்திரமும் பொய், சோதிடம் ஒரு மோசடி, புராணக்குப்பை என்பது கட்டுக்கட்டாய் அடுக்கப்பட்ட அடிமை முறை கட்டுக்கதை என்பதை மானுடம் மீண்டும் மீண்டும் நிரூபித்தபடியே உள்ளது அறிவியல் என்பது ஒரு நிரந்தரத் தேடல். தினந்தோறும் மாறும், வளரும். தொடர் வளர்ச்சி அறிவியல் நேற்றைய கண்டுபிடிப்பு, இன்றைய கண்டுபிடிப்பு தொடரும் ஒரு முடிவற்ற சித்தாந்தம் அது. ஆனால் சனாதனம் உட்பட புராணம் யாவுமே மூடிய வடிவங்கள். இறுதிவரை எந்த மதச் சடங்கிற்கும் இடம் தராமல் ஒரு தேர்ந்த அறிவியல் வாதியாக அதிகாரத்தை எதிர்த்துப் போராடுபவராய் வாழ்ந்த சி.வி.ராமன், மூடப் பழக்க வழக்கங்களைக் களையவே அறிவியல் என முழங்கிய மெக்னாட் சாஹா, ராக்கெட் விடுவது இருக்கட்டும் மக்கள் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுவதே அறிவியல் என முழங்கிய சி.என்.ஆர். ராவ், இன்று மருத்துவமும் கல்வியும் தரம் பெற்று எளிய மக்களைச் சென்றடைய வைக்கும் போராட்டமே அறிவியல் வளர்ச்சி என கொதிக்கும் அறிஞர் அமர்தியாசென் உட்பட நமது அறிவியல் மாமேதைகள் வழி நடப்போம். காவிகளின் கபட அறிவியல் நாடகத்தின் கயமை அறுக்க தேசிய அறிவியல் தினத்தில் சூளுரைப்போம்.
– ஆசிரியர்