“கடன் பொறி இராஜதந்திரம் ” – அ.பாக்கியம்
சீனாவின் கடன் பொறியால் இலங்கை திவால்! பாகிஸ்தானில் நெருக்கடி! சொத்துக்களை கைப்பற்ற திட்டம்! என்று சீன எதிர்ப்பு சாக்கடைகளை வாந்தி எடுத்துக் கொண்டிருக்கும் ஊடகங்களை அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சீனாவின் பொருளாதார வளர்ச்சி இன்று அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளை கோபம் அடைய செய்துள்ளது. முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான கொள்கைகளை உடைய ஒரு நாட்டின் வளர்ச்சி அவர்களின் அடித்தளத்தையே ஆட்டிப்படைப்பதாக அச்சப்படுகின்றன. எனவே சீனாவிற்கு எதிராக தொடர் தாக்குதலை நடத்திக் கொண்டு உள்ளனர் அதில் ஒன்றுதான் இந்த கடன் பொறி ராஜதந்திரம்.

இந்த வார்த்தைகளை 2018 ஆம் ஆண்டு உருவாக்கி வலைதளங்களில் பரப்பி சுமார் சில மில்லியன்கள் தேட ஆரம்பித்தனர். டொனால்ட் ட்ரம்ப், பைடன், உலக வங்கி மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் சீனாவுக்கு எதிரான இந்த வார்த்தைகளை ஊதி பெரிதாக்கினார்கள். சீனா தற்போது அமலாக்கி வருகின்ற பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் 149 நாடுகள், 32 சர்வதேச அமைப்புகள் ஆகியவற்றுடன் 200க்கும் மேற்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இவையெல்லாம் இன்றைக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்கிறது. எனவே தான் சீனாவுக்கு எதிரான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டனர்.

முதல்கட்டுக்கதை:

சீனா பெல்ட் அண்ட் ரோடு தங்களை ஒருதலை பட்சமாக அறிவித்து பிற நாடுகளை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது! உண்மையில் சீனாவின் மேம்பாட்டு நிதியகத்தின் மூலமாக இரு தரப்பு தொடர்புகள், ஒப்பந்தங்கள் மூலமாக திட்டம் வரையறுக்கப்படுகிறது. குறிப்பாக கடன் பெறும் நாடுகளின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக அந்த நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நலன்களின் அடிப்படையில் கடன் பெறுபவர்கள் இதை தீர்மானிக்கிறார்கள்.

இரண்டாவது கட்டுக்கதை:

சீனா கடன் வாங்கும் நாடுகளை சிக்க வைப்பதற்காக கடுமையான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்படுத்துகிறது! உண்மையில் சீனா உலக வங்கி மற்றும் அமெரிக்க நிதி நிறுவனங்கள் கொடுப்பதை விட மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை கொடுக்கிறது. வட்டியை தவிர வேறு எந்த நிபந்தனைகளும் சீனா விதிப்பது இல்லை.

கடன் வாங்கும் நாடுகள் கடனை மறுசீரமைப்பதற்கும் விதிமுறைகளை கொடுக்கிறது தவிர்க்க முடியாத நேரங்களில் கடன்களை தள்ளுபடி செய்யக்கூடிய சலுகைகளும் இந்த கடன் வழங்கும் திட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கிறது

ஆகஸ்ட் 2022 17 ஆப்பிரிக்க நாடுகளுக்கு 23 வகையிலான வட்டி இல்லா கடன்களை தள்ளுபடி செய்தது. 2000-2019 இடையில் ஆன காலத்தில் சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களை மறுசீரமைத்துக் கொடுத்தது.
இந்தக் காலத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொடுத்த 3.4 பில்லியன்கள் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்தது.

உலக வங்கி மற்றும் ஐ எம் எப் போன்ற நிறுவனங்கள் கடன் கொடுத்து நாட்டை அடிமையாக நிபந்தனை போடுகிறது சீனா வட்டிக்கு மட்டும் கடன் கொடுக்கிறது.

மிகவும் பின்தங்கிய அடிமட்டத்தில் இருக்கும் கூடிய நா, அதற்கு மேல் இருக்கக்கூடிய நடுத்தர நாடுகளுக்கும், உலக வங்கி போன்ற நிறுவனங்கள் கடன் கொடுக்க மறுக்கும் 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சீனா, அந்த நாட்டின் வளர்ச்சிக்காக கூடுதலாகவே கடனை வழங்கி வருகிறது.

சுமார் 150 நாடுகளுக்கு 1.5 ட்ரீல்லியன் டாலர்களை நேரடி கடனாகவும் வர்த்தக கடனாகவும் சீனா வழங்கி வருகிறது.

மூன்றாவது கட்டுக்கதை:

சீனா கடனை திருப்பி கொடுக்காத நாடுகளின் சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வது என்ற கதைகளை கட்டிவிடுகின்றனர். சீனா இதுவரை கடன் திருப்பி செலுத்தாத எந்த ஒரு நாட்டின் சொத்துக்களையும் கைப்பற்றவில்லை. ராணுவ தளங்களையும் அமைக்கவில்லை. மாறாக அமெரிக்கா 159 நாடுகளில் 845 ராணுவ தளங்களை வைத்துள்ளது. இதில் 1,73,000 அமெரிக்க ராணுவ வீரர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம்:

இந்த கடன் பொறி ராஜதந்திரத்திற்கு இலங்கையின் அம்பாந் தோட்டைத் துறைமுகத்தை உதாரணமாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். பெல்ட் அண்ட் ரோடு பகுதியாக தெற்கு கடற்கரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குக் கடன் கொடுத்து அதற்கு ஈடாக சீன கடற்படை ராணுவ தளத்தை அமைத்துக் கொண்டது என்று கதை கட்டுகிறார்கள்.

அம்பாந்தோட்ட துறைமுகத்தை கட்ட வேண்டும் என்று சீனாவால் அல்ல இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு திட்டம் உருவாவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு திட்டத்தை உருவாக்கியது.

இலங்கை அரசாங்கம் இத்திட்டத்தை நிறைவேற்ற இந்தியாவிடமும் அமெரிக்காவிடமும் நிதி உதவியை கேட்டிருந்தது. இவர்கள் நிதி உதவி இல்லை என்று மறுத்து விட்டார்கள். இலங்கை அரசு சீனாவை அணுகியது. சீனாவின் “சைனா துறைமுக குழுமம்” ஒப்பந்தத்தை பெற்றது சீன வங்கி நிதியளிக்க ஒப்புக்கொண்டது. இவை அனைத்தும் 2007 ஆம் ஆண்டு அதாவது பெல்ட் அண்ட் ரோடு திட்டம் சீனாவால் துவங்கப்படுவதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாகவே முடிந்து விட்டது. இதை சீனா பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்காக ஆலோசனை உருவாக்கி கடன் கொடுத்து பிடித்துக் கொண்டது என்று நடக்காத ஒரு விஷயத்தை உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறது ஏகாதிபத்தியம்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடன் சுமைக்கு சீனா தான் காரணம் என்று கதை கட்டுகிறார்கள். 2017 ஆம் ஆண்டில் இலங்கையின் வெளிநாட்டு கடன் 50 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் சீனாவின் பங்கு மிகக்குறைவான 9%மட்டுமே. இலங்கையின் கடன்கள் அனைத்தும் மேற்கத்திய நாடுகளில் இருந்து பெறப்பட்டது. சீனாவை விட உலக வங்கியும் ஜப்பானும் இலங்கைக்கு கூடுதலாக கடனை கொடுத்துள்ளார்கள்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், வெளிநாட்டு கடன் நெருக்கடி அதிகமானதால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியுடன் பிரச்சனையை தீர்க்க முயற்சி செய்தது ஆனால் சர்வதேச நாணய நிதியகம் உதவி செய்யவில்லை.

வேறு வழியின்றி கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் குத்தகைக்கு விட முடிவு செய்தது. முதலில் இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களை இலங்கை அரசு அணுகியது. ஆனால் அவர்கள் குத்தகைக்கு எடுக்க தயாராக இல்லை மறுத்துவிட்டார்கள். இதன் பிறகு சீன அரசு நிறுவனமான China Merchants Ports Holdings பேச்சுவார்த்தை நடத்தி 1.12 பில்லியன் டாலருக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்றுள்ளது. இதனால் இலங்கை அரசு தனது கடன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடிந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ராணுவ நோக்கத்திற்காகச் சீனா கைப்பற்றியது பற்றி அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரச்சாரம் செய்கிறது. இது கட்டுக்கதை என்று சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவாகு தெளிவுபடுத்தி உள்ளார். சீனா ஒரு பொழுதும் துறைமுகத்தை கடற்படை தளமாக பயன்படுத்தவில்லை என்று பயன்படுத்துவதற்கு அனுமதியும் இல்லை என்று இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் மக்கள் கொந்தளிப்புக்கும் உலக வங்கி சர்வதேச நாணய அமைப்பு காரணம் என்பதை மறைப்பதற்காக அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் சீனாவின்மீது பழிசுமத்தி திசைதிருப்புகிறார்கள்.

81% கடன் தொகை ஐ.எம்.எப் மற்றும் ஜப்பான் நாட்டினுடையது. குறுகிய காலத்தில் மட்டும் IMF இலங்கைக்கு 16 முறை கடன்வழங்கி உள்ளது. மேற்கத்திய நாடுகளின் நவீன தாராள மையக் கொள்கைகளை அமுல்படுத்த கட்டாயப்படுத்தியதும் சிக்கன நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தியதில் தான் இலங்கை நெருக்கடிக்கு உள்ளானது.

உகாண்டாவில் உள்ள Entebbe சர்வதேச விமான நிலையம்:

கடன் பொறி ராஜதந்திரத்திற்கு உகண்டா நாட்டு விமான நிலைய கட்டுமானத்தைப் பற்றிய கட்டுக் கதைகளை உருவாக்குகிறார்கள்.

உகாண்டா நாட்டில் அமைந்துள்ள எண்டெபா விமான நிலையத்தை விரிவு படுத்துவதற்கான ஒப்பந்தம் சீனாவுடன் ஏற்பட்டது சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி இந்த திட்டத்திற்காக நிதி வழங்கியது. 207 மில்லியன் டாலர் கடனை 2% வட்டிக்கு மட்டுமே கடன் கொடுத்தது. இத்திட்டம் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் கீழ் வருவதாகும்.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜார்னல், இந்தியாவின் எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை, உகண்டாவின் சில பத்திரிகைகள் சீனா விமான நிலையத்தை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது என்று எழுதி வருகிறார்கள். அது மட்டுமல்ல ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்றும் எழுதுகிறார்கள். உகாண்டா கையெழுத்து போடவே இல்லை என்று பொய் பிரச்சாரத்தைச் செய்கிறார்கள்.

ஒப்பந்தத்தின் நகலை பெற்று பகுப்பாய்வு செய்து கடன் அளிப்பவர் விமான நிலையத்தை கைப்பற்றுவதற்கான எந்த சரத்தும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டனர். சர்வதேச திட்டங்களுக்கு நிதி அளிப்பதற்கான நிலையான விதி ஒன்று உள்ளது. அதாவது திட்டத்திற்கான அல்லது பண பிணையத்திற்காக எக்ஸ்ரே கணக்கு பராமரிக்கப்பட வேண்டும் என்று சரத்து உள்ளது. அமெரிக்க சார்பான பத்திரிகைகளின் பிரச்சாரத்தை உகாண்டா நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறையே மறுத்துவிட்டது இருந்தாலும் கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

உண்மையான கடன் பொறி:

சீன “கடன் பொறி இராஜதந்திரம்” என்று பிரச்சாரம் செய்வது அமெரிக்காவும் சர்வதேச நாணய நிதியம், தங்களது மோசடிகளைத் திசைதிருப்புவதற்காக செய்யக்கூடியதாகும்.

அபரிமிதமான அதிக வட்டி விகிதங்களுடன் கொள்ளையடிக்கும் கடன்களை உலகளாவிய நாடுகள் மீது திணிக்கும் அமெரிக்காவின் கடன் பொறி ராஜதந்திரம்தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

சீனக் கடன்கள் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு வழங்கப்படுகின்றன.அவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவை. அவை தனியார்மயமாக்கல் திட்டங்கள், மற்றும் IMF மற்றும் உலக வங்கி கடன்களைப் போல கட்டமைப்பு சரிசெய்தல், சிக்கன நடவடிக்கை போன்றவற்றுடன் இணைக்கப் படவில்லை.

உண்மையில்,IMF, உலக வங்கி கடன்கள் பொதுத்துறைகளை தனியார்மயமாக்குதல், சமூக நலத்திட்டங்களைக் குறைத்தல், மேற்கத்திய முதலாளித்துவ நலன்களை வளப்படுத்த வர்த்தக தாராளமயமாக்கல், ஆகியவற்றின் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

கொள்ளையடிக்கும் வட்டி விகிதங்கள், இந்தக் கடன்களை ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது என்பதை உறுதிசெய்கிறது. கடன் வாங்கும் நாடுகளை ஏழைகளாக வைத்து, வளர்ச்சியடையாத நிலையில் அவர்களை அடைத்து, மேற்கத்திய முதலாளிகள் மேலும் கொள்ளையடிப்பதையும், வளங்களைப் பிரித்தெடுப்பதையும், இவர்களின் கடன் உறுதிசெய்கிறது. இதுதான் உண்மையான கடன் பொறி.

அ.பாக்கியம்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.