நூல் அறிமுகம்: கல்வியும் சுகாதாரமும் | கொள்கைகள் , பிரச்சனைகள் , தீர்வுகள் – ஆசிரியர் சு .உமாமகேஸ்வரி

நூல் அறிமுகம்: கல்வியும் சுகாதாரமும் | கொள்கைகள் , பிரச்சனைகள் , தீர்வுகள் – ஆசிரியர் சு .உமாமகேஸ்வரி



நூல்: கல்வியும் சுகாதாரமும் | கொள்கைகள் , பிரச்சனைகள் , தீர்வுகள் – 
ஆசிரியர்: ஜீன் ட்ரீஸ், அமர்தியா சென் (தமிழில் பேராசிரியர் பொன்ராஜ்)
விலை : ரூ 70
பாரதி புத்தகாலயம்

இது ஒரு மொழிபெயர்ப்பு நூல்.

2 Chapters from UNCERTAIN GLORY by Jean Dreze,Amartya Sen என்ற நூலின் தமிழாக்கத்தை பேரா. பொன்ராஜ் செய்துள்ளார் .

ஜீன் ட்ரீஸ் (1959) : புகழ் பெற்ற லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ் பேராசிரியர். 1979 முதல் இன்று வரை இந்தியாவில் வாழும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் . அலகாபாத் பல்கலைக் கழகத்தின் வருகை தரு பேராசிரியர் .இந்த நூலைத் தவிர அமர்தியா சென்னோடு இணைந்தும் தனியாகவும் பல நூல்களும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

அமர்தியா சென் (1933 )

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் , தத்துவம் படிப்பிக்கும் நோபல் பரிசு பெற்ற இந்தியர். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் தலைவராகவும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேம்பாடு விடுதலையின் வழி (Development as freedom) , நீதி எனும் கருத்தாக்கம் (The Idea of Justice) சர்ச்சை மிகு இந்தியர்கள் (Agrementation Ludans) உள்ளிட்ட ஏராளமான நூல்களும் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளவர். ‘பாரத ரத்னா ‘ பட்டம் பெற்றவர்.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

பேராசிரியர் பொன்ராஜ் – ( மொழி பெயர்ப்பு )

நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியின் வேதியியல் துறைப் பேராசிரியராகவும் , முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். மூட்டா நிர்வாகிகளில் ஒருவராக பல ஆண்டு காலம் தொழிற்சங்கப் பணியாற்றியவர். பத்திரிகைகளில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தொடர்ந்து மொழி பெயர்ப்பு செய்து வருபவர்.

Understanding 'growth' with Amartya Sen, Jean Dreze - Times of India

கல்வியும் சுகாதாரமும்

இந்தியாவின் இரண்டு மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களான அமர்தியா சென்னும் ஜீன் டிரீஸ் – ம் , நிச்சயமற்ற பெருமை என்ற இந்த நூலில் நம் நாட்டின் சமூக நிலை பின் தங்கி இருப்பதற்கான காரணங்களை விளக்கி அதற்கான தீர்வுகளையும் முன் வைக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவை கல்வியும் சுகாதாரமும் தான். ஆனால் அந்த இரண்டும் இங்கு எவ்வாறு அரசியல்படுத்தப்படுகிறது என்பதை மூலை முடுக்கெல்லாம் ஆராய்ந்து உண்மைத் தரவுகளின் வழியாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர் . இந்தியா ஏழை நாடல்ல , ஆனால் மக்கள் பொருளாதார நிலையைக் கணக்கில் கொண்டால் மக்கள் பெரும்பான்மையினர் ஏழைகள் என அடையாளப்படுத்தப்படுகிறது, இந்த சூழலில் எப்படிப்பட்ட வளர்ச்சி வேண்டும் என்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் எவ்வழிகளில் உருவாக வேண்டும் எனவும் வழிகாட்டும் வேலையையும் செய்துள்ளது இந்நூல். தி ஹிந்து , தி எக்னாமிஸ்ட் , கார்டியன் ,தி நியூயார்க் டைம்ஸ் , ராமச்சந்திரகுஹா , ஃபினான்ஷியல் டைம்ஸ் என அனைத்தும் மிக முக்கியமான நூலாக இதை அறிமுகம் செய்கின்றன.

இந்தியாவின் கல்வி , அதன் மேம்பாடு , ஏன் இந்தியா பின்தங்கி விட்டது என ஆசிய நாடுகளின் வளர்ச்சியுடன் ஒப்பீட்டு அட்டவணையுடன் விளக்கப்பட்டுள்ளது. முன் பருவக் கல்வி முதல் உயர்கல்வி வரை இந்தியா முழுமைக்குமான சவால்களை நம் கண் முன்னே கொண்டு வருகின்றனர். ஒப்பீட்டளவில் இந்தியாவின் கல்விச் சூழல் ஏராளமான பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. இந்த இடத்தில் நம் தமிழகத்தின் கல்விச் சூழல் சற்றே மூச்சு விடும்படி உள்ளது என்பதையும் உணருகிறேன். இந்த நூல் ஒட்டு மொத்த இந்தியாவின் கல்வியைப் பேசுவதைப் பார்க்கையில் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 தயாரிப்பதற்கு முன் தயாரிப்புக் குழு இப்புத்தகத்தின் செய்திகளுக்கு கவனம் கொடுத்திருந்தால் நல்லது எனத் தோன்றுகிறது.

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

பள்ளிக் கல்வியின் சாதனைகளையும் குறைபாடுகளையும் மாநில வாரியாக விளக்குகிறது .உலகின் பிற பகுதிகளிலும் நம் நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் கற்பித்தல் பணி உற்சாகமாக நடைபெற்ற போது , வட இந்திய மாநிலங்களில் பாதி பள்ளிகளில் கற்பித்தல் பணி நடைபெறவில்லை என்பது தொடக்கக் கல்வி பெறும் உரிமையை இளம் மாணவர்களுக்கு மறுக்கிற செயல் என்று ஆணித் தரமாகக் குறிப்பிடுகின்றனர்.
கல்வியின் தரம் குறித்தும் அதன் மீதான நமது பார்வை எப்படி மாற வேண்டும் என தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது புத்தகம் .

இங்குள்ள வேறுபட்ட கல்வி முறையை இரட்டைக் கல்வி முறை எனவும் இவற்றை மாற்ற செய்ய வேண்டியன குறித்தும் விவாதிக்கும் போது தமிழகக் கல்வி முறையில் பல பிரிவுகள் இருப்பதால் இரட்டைக் கல்வி முறையை விடக் கொடிய பல முகக் கல்வி முறை என நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

எவையெல்லாம் பிரச்சனை ? ஊதியமா ? தனியார் பள்ளிக் கல்வியா ? ஒப்பந்த முறையா ? என அனைத்தும் அலசப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி குறித்து பரந்த நோக்கில் பேசுவதோடு மதிப்பீட்டின் இடைவெளியை மிக அழகாக சுட்டிக் காட்டும் இந்தப் புத்தகம் மிகச் சிறந்த வழிகாட்டி .

சுகாதாரம் குறித்தும் ஐந்தாண்டுத் திட்டங்களில் ஆரம்பித்து தடுப்பூசி விகிதம் , மருத்துவத்திற்கான செலவினம் என அனைத்தையும் ஆய்வு செய்துள்ளது. GDP இல் கல்வி குறித்து தான் பொதுவாகப் பேசுகிறோம். ஆனால் மருத்துவத்தில் GDP இன் பங்கு உலக நாடுகளை ஒப்பிட்டு விளக்கம்பட்டுள்ளது. மிகக் குறைந்த 1.2 % மட்டுமே இந்தியாவில் மருத்துவத்திற்கான GDP ஒதுக்கப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியங்கள் 8.1 % ஒதுக்குவதை நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.



ஊட்டச்சத்துக் குறைபாடு , அங்கன்வாடி திறப்பு , தனியார் மருத்துவக் காப்பீடு , குழந்தை வளர்ப்பு குறித்தும் பல்வேறுபட்ட தரவுகளின் அடிப்படையில் பிரச்சனைகளையும் தீர்வுகளையும் அலசியுள்ளனர் இப்புத்தகத்தில்.

இந்தியாவின் சமீப கால சாதனைகளை எளிதில்புறந்தள்ளி விட முடியாது. கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இன்று உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் அதிகமாகப் பேசப்படும் இந்தப் பெருமை நிலையற்றது என்பது தான் இப்புத்தகத்தின் சாரம்.

இன்றைய இந்தியாவின் சாதனைகளையும் தோல்விகளையும் ஆய்வு செய்வது அவசியமானது மட்டுமல்ல .அவசரமானதும் கூட என்று உணர்த்துகின்றது இப்புத்தகம் .

கல்விப் பிரிவில் 39 வகை ஆய்வு , ஆவணம் மற்றும் நூல்களைத் திரட்டி உண்மையை நமக்குக் கூறியுள்ளனர். அதே போல சுகாதாரப் பிரிவில் 53 வகையான திரட்டுகள் . கல்வி மற்றும் சுகாதரம் ஆகிய இரண்டிலும் நமது நாட்டு யதார்த்த நிலையை அறிந்து கொள்ள வேண்டும் எனில் , மாறுதல்கள் செய்யத் தேவைப்படும் அறிவிற்கான புரிதலுக்கான ஒரு நூலாக இதைப் பார்க்கலாம் .

நூல்: கல்வியும் சுகாதாரமும் | கொள்கைகள் , பிரச்சனைகள் , தீர்வுகள் – 
ஆசிரியர்: ஜீன் ட்ரீஸ், அமர்தியா சென் (தமிழில் பேராசிரியர் பொன்ராஜ்)
விலை : ரூ 70
பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

நன்றி: ஆசிரியர் சு .உமாமகேஸ்வரி முகநூல் 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *