Kamanam Movie directed By Sujana Rao Moviereview By Era. Ramanan திரை விமர்சனம்: கமனம் – பெரு வெள்ளத்தில் போகும் வாழ்க்கை - இரா. இரமணன்




டிசம்பர் 2021 இல் வெளிவந்துள்ள தெலுங்கு படம். ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், கன்னடா, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளது. சுஜானா ராவ் இயக்கியுள்ள முதல் படம். இதற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஷிரேயா சரண், சிவா கந்துகூரி, சாருஹாசன், பிரியங்கா ஜவால்கர், சுகாஸ் மற்றும் இரண்டு சிறார் நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஹைதராபாத் நகரத்தில் வாழும் மூன்று பேரின் வாழ்க்கையை ஒரு பெரு வெள்ளம் எவ்வாறு புரட்டிப் போடுகிறது என்பதே கதை. துபாய்க்கு சென்று இன்னொரு பெண்ணை மணந்துகொண்ட ஒருவனால் கைவிடப்பட்ட கமலா கேட்கும் திறன் குறைபாடு உடையவர். ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் தையல்  தொழிலாளி. கணவன் திரும்பி வந்துவிடுவான் என்கிற நம்பிக்கையில் கைக்குழந்தையுடன் போராட்ட வாழ்க்கை வாழ்பவர்.

கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்கிற பெரு விருப்பத்துடன் இருப்பவன் அலி. அவன் சாரா என்கிற பெண்ணைக் காதலிக்கிறான். இருவரும் இஸ்லாமியர்கள்தான் என்றாலும் சாராவின்  தந்தை அந்தஸ்து பார்க்கிறவர். பெற்றோரை இழந்த அலியை அவனது தாத்தா வளர்க்கிறார். தாங்கள் இறக்கும்வரை குடும்ப கவுரவம் பாழாகாமல் இருக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர்.

வீடில்லாமல் வடிகால் குழாய்க்குள் வசிக்கும் இரண்டு சிறுவர்கள். குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துகிறார்கள். கிடைப்பதை அன்புடன் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டப்படுவதைப் பார்க்கிறார்கள். சிறியவனுக்கு பிறந்த நாள் என்றால் என்னவென்றே தெரியாது.தாங்களும் கேக் வாங்கி சாப்பிட வேண்டும் என்று காசு சேர்க்கிறார்கள். அவர்களுக்கு அறிமுகமான நடைபாதை வியாபாரியிடம் அதைக் கொடுத்து அவர் விற்றுக் கொண்டிருக்கும் களிமண் பிள்ளையார் சிலைகளை  வாங்கிக் கொள்கிறார்கள்.அதன் மூலம் அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தை திரட்டிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒரு நாள், நகரில் பெரு மழை கொட்டுகிறது. நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. தொலைக்காட்சி செய்தியாளர்கள் அதிகாரிகளை நேர்காணும்போது ‘ஆற்றின் மீது பெரும் குடியிருப்புகளை கட்டினோம்.இப்போது ஆறு அதன் மீது செல்கிறது என்று நமக்குப் பழக்கமான வசனத்தைக் கூறுகிறார்கள். கமலா கைக்குழந்தையுடன் தன் சிறு வீட்டில் மாட்டிக் கொள்கிறார்.கதவை திறக்க முடியவில்லை. குழந்தையைக் காப்பாற்றவும் கதவை திறக்கவும்  போராடுகிறார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு ஜன்னலை உடைத்து குழந்தையும் அவளும் வெளியில் வருகிறார்கள்.  

இன்னொரு பக்கத்தில் சாராவின் தந்தை அலியின் தாத்தாவிடம் வந்து அலியும் சாராவும் ஓடிப் போய் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறி சண்டையிடுகிறார். குடும்ப கவுரவமே முக்கியம் என நினைக்கும் தாத்தா, அலியை வீட்டை விட்டு விரட்டி விடுகிறார். விரக்தியில் அலைந்து கொண்டிருக்கும் அலி, வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பள்ளி மாணவர்களைக் கப்பாற்றுகிறான். அதில் தன் உயிரையும் இழக்கிறான்.

பிள்ளையார் பொம்மைகளை விற்கவும் முடியாமல் மழையில் அவை கரையாமல் காப்பாற்றவும் முடியாமல் சிறுவர்கள் இருவரும் போராடுகிறார்கள். சிலைகளை பாதுகாப்பதற்காக கிடைத்த  கித்தான் துணியை மழையில் ஆட்டோவில் பிரசவம் நடக்கும் ஒரு பெண்ணின் மறைப்பிற்கு கொடுத்து உதவுகிறார்கள்.

எளிய மனிதர்களின் போராட்டமான வாழ்க்கை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தில்  அது மேலும் அழிவது, ஆணின் சந்தர்ப்பவாத மனப்போக்கு என சமுதாயத்தை மையமாகக் கொண்ட  படத்தை எடுத்ததற்குப் பாராட்டலாம்.ஆனால் சில இடங்கள் பலவீனமாகக் காட்டப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில்  மாணவர்கள் ஒரு வாகனத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மாடியில் இருந்து கொண்டு அரற்றுகிறார்கள். யாரும் காப்பற்ற முயலுவதில்லை.அலி மட்டும் தனி ஒருவனாக அவர்களைக் காப்பாற்றுகிறான். நல்ல திரைப்படங்களை எடுப்பவர்கள் கூட இது போன்ற சினிமாத்தனங்களை விட முடிவதில்லை. வெள்ளம், தீ விபத்து போன்றவற்றில் தனி ஆளாக பலரைக் காப்பாற்றிய உண்மை சம்பவங்களை பார்க்கிறோம். இருந்தாலும் இந்த திரைப்படத்தில் அந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் சரியில்லை. 

காந்தியின் ‘வைஷ்ணவ ஜனதோ பாடலும் அதன் உண்மையான பொருளில் வாழ்ந்து காட்டுபவர்கள்  சாதாரண மனிதர்கள் என்று காட்டியிருப்பதும் சிறப்பு. ஷிரேயாவின் மற்றும் சிறுவர்களின்  நடிப்பும் சிறப்பாக உள்ளது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *