நூல் அறிமுகம்: “கருத்துரிமை போற்றுதும்: சிறப்புமலர் 2020″ சுருக்கமான அறிமுகம் – தேனிசீருடையான்“கருத்துச் சுதந்திரத்துக்கான உரிமைகள் யாவும் ஏதோ கடவுள் கொடுத்த வரங்கள் அல்ல: நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அவை. இவற்றை நாம் போராடித்தான் காத்துக்கொள்ள வேண்டும்.” அமெரிக்க இடதுசாரி சிந்தனையாளர் நோம் சோம்ஸ்கி அவர்களின் மேற்கண்ட யதார்த்த வாக்கியத்தை முன்மொழிவாகக் கொண்டு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் “கருத்துரிமை போற்றுதும்” சிறப்பு மலரைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. முன்னணிச் சிந்தனையாளர்களின் இருபது கட்டுரைகளுடனும் இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகளுடனும் மலர் ஆழமும் அழுத்தமும் கொண்டு திகழ்கிறது. கண்களை வேர்க்கவைக்காத அச்சாக்கம் மற்றும் தரமான தாள் என்று பார்க்கவும் வாசிக்கவும் எளிமைகொண்டு மிளிர்கிறது. மலர்த் தயாரிப்புக்குழுவையும் ஆசிரியர் குழுவையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். எது ஒன்று தனிமனிதச் சிந்தனைகள் மீதும் சமூகச் செயால்பாடுகளின் மீதும் அதீதமான அதிகாரத்தைச் செலுத்தவில்லையோ அதுதான் யதார்த்தமான கருத்தியக்கக் கோட்பாடு ஆகும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிற, சமுதாயக்கருத்தை எதிர்த் திசையில் செலுத்துகிற சிந்தனைக்கும் கருத்தியலுக்கும் மாற்றாக நான் எனது சிந்தனை வழியே இயங்க விரும்புகிற உரிமையை அங்கீகரிப்பதுதான் கருத்துச் சுதந்திரம் ஆகும்.

இயல்பியக்கமும் எதிர் இயக்கமும் இணைந்துதான் மனிதகுல வரலாலற்றை அடுத்த கட்டத்துக்கு
நகர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த உண்மை யதார்த்தத்தை அடிவேராகக் கொண்டு கருத்துரிமை மலர் இயங்குகிறது. இந்த இதழில் பத்திரிகையாளர் அ. குமரேசன் எழுதுகிறார்.
“மானுட மகத்துவத்தின் வேர் யாதெனில், யாதொன்றைப்பற்றியும் மனதில் யாதேனும் ஒரு கதுத்து உருவாவதுதான். மானுடச் செயல்பாட்டின் மகத்துவம் என்னவெனில் மனதில் உருவான கருத்தை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திப் பகிர்வதுதான். மானுடக் கூட்டியத்தின் தொடர்ச்சி எதுவெனில், அந்தக் கருத்தை உள்வாங்கி எதிர்வினையாற்றுவதுதான்.” இந்த அடிப்படை நியதிதான் மனித இனத்தை மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபடுத்தி வைத்திருக்கிறது. மனிதன் விலங்ஞ நிலையிலிருந்து மேம்பட்டு உற்பத்தி உறவுகளை ஒழுங்கு படுத்தும் அரசியல் பிராணியாகவும் பண்பாட்டுக் கட்டுமானத்தை நிர்மாணிக்கும் செயல்பாட்டாளனாகவும் திகழ்வதற்கு கருத்துச் சுதந்திரம்தான் அடிகோலுகிறது.

இந்த மலர் சகலவிதமான கருத்துரிமைக் கோட்பாடுகளையும் பட்டியலிடுவதோடு கைக்கொள்ளவேண்டிய தனிமனிதச் செயல்பாட்டையும் கூட்டு இயக்க நடைமுறைகளையும் கோடிட்டுக்காட்டுகிறது. இன்றைய நிலையில் மதவாதிகளையும் பாசிசச் சிந்தனையாளர்களையும் எதிர்த்;துக் களம் காணவேண்டிய தருணம் வந்திருக்கிறது. மதவாதிகளும் ஜாதிய சக்திகளும் சேர்ந்துகொண்டு மனித உணர்வு வளர்ச்சியின் அடிப்படைத் தேவையான கல்விக் கட்டமைப்பை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள். “புதிய கல்விக் கெர்ளகை 2020” என்ற மத்திய அரசின் ஆவணம் அரசியல் சட்டம் வகுத்துத் தந்திருக்கிற அடிப்படை
உரிமையான கல்வி உரிமையைக் காவு வாங்குகிறது. ஜாதியால் அடிமைப்பட்டுக் கிடக்கிற பட்டியலின மக்களுக்குக் கிடைத்துக்கொண்டிருக்கிற கொஞ்சநஞ்ச சலுகைகளையும் தடுக்கும் விதத்தில் இந்தக் கல்விக்கெர்ளகைக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதைத் தனது “மறுக்கப்படும் சமூகநீதி” என்ற கட்டுரைமூலம் அம்பலப்படுத்துகிறார் அரசியல் மற்றும் பண்பாட்டுச் சிந்தனையாளர் பேராசிரியர் அருணன் அவர்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் அமலில் இருந்த “மனுஸ்ம்ருதி” என்ற பாகுபாட்டுத் தேற்றங்கள் இன்றையதினம் நடைமுறைப்படுத்த விழைகிறது இந்தக் கல்விக்கொள்கை.தமிழ்மண்ணின் சிந்தனைப்பரப்பில் அருணன் அளவுக்கு வேறு யாரும் மனு (அ)தர்மத்தை அம்பலப்படுத்தியதில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தும் ஸ்லோகங்களை எடுத்துக்காட்டி அந்த நூலை எரிக்கவேண்டும் என்றார். மனுஸ்ம்ருதியின் ஒன்பதாவது அத்தியாயம் “பெண்கள் விபச்சார தோஷம் கொண்டவர்கள்” என்று கூறுகிறது. இந்த ஸ்லோகத்தை எடுத்துக்காட்டியதற்கே ஆர். எஸ். எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வின் டிவி மூலம் கொலைமிரட்டல் விடுத்தார்கள். ஆனால் அருணனுக்கு அத்தகைய மிரட்டல்கள் வராததற்குக் காரணம் அருணன் எழுதியதை அவர்கள் வாசித்திருக்கமாட்டார்கள் போலும். இந்தக் கல்விக் கொள்கை 3, 5, 8, 9, 10, 11 மற்றும் 12 ஆகிய
வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்கிறது. உயர்நிலைக் கல்வியை முடிக்கும்போது 12ஆம் வகுப்புக்குத் தேர்வு நடத்துவது சரி: 3 மற்றும் 5 வகுப்புக்களுக்கு ஏன்? அதற்குக் காரணம் தேர்வாகாதவர்கள் இயல்பாகவே கல்வி கற்பதிலிருந்து நின்றுவிடுவார்கள். மூவாயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்து கல்வி பயின்றவர்கள் எளிதாய்ப் புரிந்து படித்துத்
தேரிவிடுவார்கள். கல்வி மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்கள் இயல்பாகவே தங்கள் குலத் தொழிலுக்குச் சென்றுவிடுவார்கள். அதாவது ராஜாஜி 1953ஆம் கொண்டுவந்த
குலக்கல்வித்திட்டத்தின் மறுபதிப்பு இந்தக் கல்வித்திட்டம். இட ஒதுக்கீடு பற்றியும் கூட இந்த வரைவு அறிக்கை பேசவில்லை. ஏனென்று கேட்டால் கஸ்தூரிரங்கன் சொல்கிறார். இந்தக் கல்வித்திட்டம் அமல்படுத்தப்பட்டால் இன்னும் இருபது ஆண்டுகளில் தலித்துகள் தங்களுக்கென்று சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்காமாட்டார்கள்.” அதன் அர்த்தம் என்னவென்றால் இன்னும் இருபது ஆண்டுகளில் இட ஒதுக்கீடு காலாவதியாகிவிடும். அல்லது அதுபற்றிப் பேசுவதற்கான தார்மீக சக்தியை இழந்து விடுவார்கள்.

ச. தமிழ்ச்செல்வன் “குழந்தைகளுக்கு இல்லையா கருத்துரிமை?” என்ற தலைப்பில் குழந்தைகளின் அறிவுத்திறன் பற்றியும் அதை வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவை பற்றியும் ஐநா மன்றத்தின் ஆவணங்களை முன்வைத்து உரையாடுகிறார். குழந்தைகளின் உரிமையைப் பறிக்காமல் விட்டாலே போதும், அவர்கள் மிகப்பெரும் ஆளுமைகளாய் வளர்வார்கள் என்பதற்கு வரலாற்றில் மிகச்சிறந்த சான்றுகள் உண்டு. மாற்றுத்திறனாளியான ஹெலன் கெல்லர், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மலாலா போன்றோர் அதிகம் சாதித்துள்ளனர். அவர்கள் வாழ்க்கையை உற்றுநோக்கினால் அவர்களின் சுதந்திரச் சிந்தனைதான் அவர்களின் தடங்கலற்ற வளர்ச்சிக்குக் காரணம் எனப் புரியும். இரா, தே. முத்து எழுதிய “புதுமைப்பித்தனின் தர்க்கப்பார்வை” என்ற கட்டுரை புதுமைப்பித்தனைப் புதிய கோணத்தில் ஆய்வுசெய்கிறது. புதுமைப்பித்தன் சுதந்திர்ப் போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில் வாழ்நதவர். முற்போக்கான சிந்தனையாளரான அவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் துலங்கிக் கொண்டிருக்கிறது. யதார்த்தமற்ற அந்தக் குற்றச்சாட்டை ஆதாரங்களுடன் நிறுவுகிறார் முத்து. பண்பாட்டுத்தளத்தில் இயங்கிய நீதிக்கட்சியையும் அரசியல் தளத்தில் மட்டும் பணியாற்றிய காங்கிரஸ் கட்சியையும் ஒருசேர நிராகரிக்கிறார். இரண்டு பார்வைகளையும் சவீகரித்து இயங்கிய அபேதகர்களாகிய கம்யூனிஸ்டுகளை எடுத்துக்காட்டி அந்த வழியில் சமுதாயத்தை இட்டுச் செல்லவேண்டும் என்று கூறியிருக்கிறார். புதுமைப்பித்தனின் இந்தக் கூற்று அவரின் பல கட்டுரைகளில் பதியமாகியிருப்பதை எடுத்துரைக்கிறார் இரா,தே முத்து. மருத்துவம் என்பது அரசியல் மற்றும் வாழ்வியல் விதானத்தின் தவிர்க்கமுடியாத பின்னல் கூறு ஆகும். மனித சிந்தனை என்பது இயற்கையிலிருந்து உருவாகிறது. இருப்பதைத் தவிர்த்துவிட்டுக் கற்பனையிலிருந்து எதையும் முன்னிறுத்த முடியாது. இயற்கையிலிருந்து மனித சுபிட்சத்துக்கான கருப்பொருளைக் கண்டறிந்தார்கள் தமிழர்கள்.அதாவது இயற்கைத் தாவரங்களிலிருந்தும் சில உயிர்ஜீவிகளிடமிருந்தும் மருந்தைக் கண்டுபிடித்தார்கள். தேனீயிடமிருந்து தேனையும் பாம்புகளிடமிருந்து விஷமுறிவு மருந்தையும் தேடி எடுத்தார்கள். ஆனால் இன்று ரசாயனப் பொருட்களிலிருந்து மருந்து கண்டெடுக்கப்படுகிறது. பக்க விளைவுகளையும் மனித உடலுக்குச் சேர்மானமாகாத சூழலையும் அவை உருவாக்குகின்றன. ஆங்கில மருந்துகள் இந்திய மண்ணில் திணிக்கப்பட்டதால் பாரம்பர்ய வரலாறும் சுபிட்சப் பயன்பாடும் கொண்ட தமிழ் மருத்துவம் புகழ்மங்கிக் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இயற்கை வாசம் மிகுந்த இந்திய மருத்துவ மலர்கள் வாடி வதங்கி, அந்நிய ரசாயன மலர்கள் பூத்துக் குலுங்குவது மருத்துவ உலகின் மருத்துவ அத்துமீறல் ஆகும் என வாதிடுகிறார் அ. உமர் பரூக். அவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு “ஒற்றை மருத்துவத் திணிப்பு எனும் சர்வாதிகாரம்.” கொரோனா காலத்தில் சித்த மருத்துவம் செய்துகொண்ட நோயாளிகள் யாரும் மரணமடைந்ததாகத் தெரியவில்லை. எந்தச் சூழலிலும் சர்வாதிகாரத் திணிப்பு மனித மனங்களை வெற்றிகொண்டதில்லை. இந்தத் தொகுப்பின் மிகமுக்கியமான கட்டுரை களப்பிரன் எழுதிய “கருத்துரிமை மறுப்பும் வரலாற்று விளைவுகளும்” ஆகும். மூவாயிரம் ஆண்டு பழமைவாய்ந்த செந்தமிழ் மணக்கும் நிலப்பகுதியில் விஞ்ஞானம் ஏன் வளரவில்லை என்ற கேள்வியை எழுப்பி அதற்கான வியைடயை ஆய்வுசெய்து கண்டடைகிறார். ஆங்கில நிலத்தில் பதினைந்தாம் நூற்றாண்டு வாக்கில் பௌதீக விஞ்ஞானம் வளர்ந்து விட்டபோது பண்பாட்டுத் தளத்தில் உயர்வடைந்திருந்த தமிழ்மண்ணில் அது ஏன் சாத்தியமாகவில்லை? எவறும் இலக்கியம் மட்டுமே படைக்கத் தெரிந்தவர்களா தமிழர்கள்?இந்தக் கேள்வியின் வழியே திருக்குறளையும் பழமையான இலக்கியப் பனுவல்களையும் ஆய்வுசெய்து, ஒரு முடிவுக்கு வருகிறார். அது பக்தி இலக்கிய வரவும் புராண இலக்கியத் திணிப்பும்தான் தமிழ் அரிவியல் வளராததற்குக் காரணம். கோபர் நிக்கஸ், கலிலியோ காலத்தில்தான் புவி பற்றிய அரிவியல் ஐரோப்பாக்கண்டத்தில் தோன்றியது. சூரியன் ஒரு நட்சத்திரம்: பூமி அதைச் சுற்றி வருகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது மதவாதிகள் அது பொய் என்று வாதிட்டதோடு, அந்த அரிவியலாளர்களைத் தண்டித்தார்கள். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அதாவது ஐரோப்பிய அரிவியல் தோன்றுவதற்கு 1500 வருடங்களுக்கு முன்பே திருக்குறள் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்று பறைசாற்றியது. சுழலும் உலகத்தில் உழவுதான் முதன்மையானது.

ஆனால் பக்தி இலக்கியங்கள் நுழைந்தபோது “தமிழ் இலக்கியங்கள் அனைத்திலும் மேற்சொன்ன மண்ணும் மக்களும் அவர்களின் அகப்புற வாழ்வியலும் அவர்களின் உணர்வு சார்ந்த நிலைபாடும் இல்லாமல் போய், எல்லாமே கடவுள் குறித்த பதிவுகளாகவே மாறிப்போகிறது.” இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது. பல நூற்றாண்டுகள் பொருள்முதல்வாதக் கோட்பாட்டை உள்ளீடாகக் கொண்டிருந்த தமிழ் வாழ்வியல் மரபு கருத்துமுதல்வாதக் கருதுகோளை எப்படி சுவீகரித்த்து எனச் சிந்திக்க அல்லது ஆய்வுசெய்ய அடுத்துவரும் ஆய்வாளர்களுக்கு ஒரு திறப்பை நிறுவுவதற்கான திறவுகோலைத் தந்திருக்கிறது இந்தக் கட்டுரை. தொகுப்பில் கருத்துரிமை மற்றும் மதவாதக் காலைத்தரவுகளை உள்ளடக்கமாகக் கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆடிட்டர் ஜெகதீஸ் எழுதிய கவிதை இன்றைய மதவாத பாசிசத்தைத் தோலுரித்துக்காட்டுகிறது.அதன் சிறகுகளில்
சின்னதாய்ச்
சிவப்புத் திரவம்!
காயமோ?

அந்தக் குஞ்சுப் புறாவைக்
கொத்தித்தின்னும் நோக்கில்
கத்தியபடி
காக்கைகளும் கூட சில!

கத்திக்கத்தி கத்தி வரும்
காக்கைகள் எல்லாம்
அந்த சிவப்பு ரத்தத்தை
உறிஞ்ச வந்தவையோ?

முண்டிக்கொண்டும்
முனகிக் கொண்டும்
பறக்கத்துடிக்கும்-அந்தப்
பாவப் புறாவை
என் விரல்களில் ஏந்தி
தலையை வருடி
கன்னத்தில் ஒத்திக்கொண்டால்
அது மாடப்புறாவாகி மகிழ்ச்சியடையும்.

இது ஒரு குறியீட்டுக் கவிதையாகும். ரத்தம் குடிக்கத்துடிக்கும் மதவாத பாசிச சிந்தனைகளை முறயடிக்க ஒவ்வொருவரும் முன்வரவ்வ்ணடும் என்கிறது
கவிதை.

புதிய கவிஞர்களும் பழம்பெரும் படைப்பாளிகளும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். புதிய உத்தி, புதிய சொல்முறை என்று அனைத்துக்கவிதைகளும் செழுமையாய்பக் பதிவாகி இருக்கின்றன. இந்த மலர் காலத்தின் தேவையைக் கச்சிதமாக நிறைவேற்றீயிருக்கிறது. கருத்து என்றால் என்ன: உரிமை என்றால் என்ன என அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் கட்டுரைகளும் கவிதைகளும் பதிவாகியிருக்கின்றன. நமது சுதந்திரச் சிந்தனைகளையும் வாழ்வியல் உரிமைகளையும் இயல்பான பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டுமானால் நோம் சாம்ஸ்கி சொன்னதுபோல் போராட்டக்களத்தில் இறங்குவதுதான் ஒரே வழி என்று அனைத்துக் கட்டுரைகளும் தெளிவாகச எடுத்துரைக்கின்றன. இந்த மலரை அனைவரும் அவசியம் வாசிக்கவேண்டும்.