கூண்டிலேற்றமுடியாத குற்றவாளிகள் (Kundiletra Mudiyatha Kuttravaligal) – நூல் அறிமுகம்
கம்பம் பள்ளத்தாக்கு நாட்டுப்புற பாடல்கள் – நூல் அறிமுகம்
அசைவுகளின் அர்த்தங்கள் கவிதைத்தொகுப்பு – நூல் அறிமுகம்
நட்சத்திரவாசிகள் (Natchathiravaasikal) – நூல் அறிமுகம்
தென்புலத்து மன்பதை – நூல் அறிமுகம்
சிந்திய குருதியில் வந்த சுதந்திரம் – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: ஒற்றை வாசம் – அல்லிஉதயன்
நூல் அறிமுகம்: சக்தி ஜோதியின் ’சொல்லினும் நல்லாள்’ – தேனி சீருடையான்
இது எழுத்தாளுமை சக்திஜோதியின் 13ஆவது கவிதைநூல். சங்க இலக்கியப் பனுவல்களை ஆய்வு செய்து அவர் எழுதிய “சங்கப் பெண் கவிதைகள்” சங்க இலக்கியத்தை இக்கால மனிதர்களுக்கு எளிமையான முறையில் அறிமுகப் படுத்துகிறது. இவர் எழுதிய இன்னொரு கட்டுரை நூல் “ஆண் நன்று; பெண் இனிது.” சங்கப் பாடல்களையும் இன்றைய கவிதைகளையும் இணைத்து சிறுகதைபோல சொல்லிச் செல்லும் அருமையான நூல்.
கவிதையில் இவரின் எழுத்துமுறை அலாதியானதாய்த் திகழ்வது போலவே உரைநடையிலும் தனித்துவப் புதுமையைக் கையாண்டு தனக்கெனத் தனிப் பாதை அமைத்துச் செயல்படுகிறார். புரியக் கடினமென நம்பப்படும் சங்கப் பாடல்களை அவ்வளவு எளிமைப் படுத்தி எழுதியிருக்கும் பாங்கு இனிமையான இவரின் எழுத்து நடைக்குச் சான்று.
“சொல்லினும் நல்லாள்” இவரின் சமீபத்திய கவிதை நூல். இவரின் மற்ற தொகுப்புகளைப் போலவே ஆழமும் அடர்த்தியும் கொண்டு இலங்குகின்றது. இயற்கையின் பரிமாணத் தோற்றங்களையும் சாந்தமும் சப்தங்களும் நிறைந்து அலைபாய்ந்துகொண்டிருக்கும் மனித மனசின் ஏகாந்தக் குரலையும் மௌன சௌந்தர்யத்தோடு படம் பிடித்துக் காட்டுகிது. இயற்கையில் இருந்து தொடங்கும் வாழ்க்கை இயற்கையின் வளர்ச்சியால் மேலும் வளம் பெறுகிறது. வாழ்க்கை இயற்கையின் நியதிப்படி இயங்குகிறது. விடியலும் வெயிலும் அந்தியும் இருளும் காலத்தின் அங்க லட்சணங்கள். அந்த அழகுக் கோலங்கள் மனித மேனியில் படிந்து வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன.
இயற்கை அழகு சார்ந்தது மட்டுமல்ல; வளர்ச்சி சார்ந்ததும் ஆகும். மனித சமூகத்தின் அனைத்து வளர்ச்சிகளும் இயற்கையால் கட்டமைக்கப் படுகிறது. நிலமும் காலமும் இயற்கையின் முதல் பொருள் என்கிறது தொல்காப்பியம். அவை இரண்டும்தான் பிரபஞ்சத்தை நிர்வகிக்கின்றன. அந்த நிர்வாகத்தின் வழியாக நமக்குக் கிடைப்பவை உணவு, உறைவிடம், உடை! இவை இருந்தால்தான் உயிரினங்கள் வாழமுடியும். இவற்றை “பொருளியல் வாழ்க்கை என்று வகைப் படுத்துகிறது தொல்காப்பியம். ”வாழ்வின் அடிப்படை பொருளாதாரம்” என்று காரல் மார்க்ஸ் வேறு கோணத்தில் நின்று பேசுகிறார். தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் சாரம் மார்க்சியத்தில் இருக்கிறது.
வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழிக்க வேண்டாம் என்றார் அண்ணல் காந்தியடிகள். கவிஞர்களும் இலக்கியவாதிகளும் அதையே வேறுகோணத்தில் பேசுகிறார்கள். இயற்கை விதவிதமான வடிவங்களும் நிறங்களும் வாசனைகளும் கொண்டு இலங்குவதற்குக் காரணம் ஜீவராசிகளை ஈர்க்கவும் வம்ச விருத்தியை உருவாக்கவும்தான். அதை அழித்துவிட்டால் உற்பத்தித் திறன் குறைந்துபோகும். மனிதன் இன்னொருபடி மேலே போய், ஞானக் கண் கொண்டு தரிசனம் செய்து “ரசனை” என்ற புதிய நுகர்வுத் தாக்கத்தை உருவாக்குகிறான். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஆற்றல் ஐம்புலன்கள் படைத்த அனைத்து உயிர்களுக்கும் உண்டு என்றாலும் அதையும் தாண்டிய ரசனைத் தன்மை மனித இனத்துக்கு மட்டுமே கையளிக்கப் பட்ட வரமாகும். உற்பத்தி, வினியோகம் என்ற எல்லைகளைத் தாண்டி இயங்குகிறது இந்த வரம். சிறகுகள் கொண்டு பறக்கவும் மூச்சுப் பிடித்து நீந்தவும் அண்டங்களைக் கடந்து கற்பனை செய்யவும் துணை நிற்கிறது. இந்த அம்சங்களை உள்வாங்கி மகத்தான கவிதைகளைப் படைத்து தமிழ் உலகுக்குத் தந்திருக்கிறார் கவிஞர் சக்திஜோதி.
”சொல்லினும் நல்லாள்!” தலைப்பு ஒரு மகத்தான வாழ்வியல் செய்தியை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. ஃப்ரன்ச் அறிஞர் சாசர் சொல்வது “மொழி, ஞானத்தின் திறவுகோல்.” ”ஆதிமனிதனிடம் மொழி இருந்தது; அது வாழ்க்கையாய் மலர்ந்தது” என்கிறது விவிலியம். கண்டு ரசித்தவையும் கேட்டு உள்வாங்கியவையும் மென்று ருசித்தவையும் மொழியாய்ப் பரிணாமம் கொள்கின்றன. காமத்தின் வழி செலுத்தப் பட்ட அன்பு மொழி உருவானபின் அன்பின் வழிக் காமம் என்று உருமாற்றம் கொள்கிறது. ஆக, மொழி ஞானத்தின் நுழைவாயில் மட்டுமல்ல; அன்பின் திறவுகோலும் ஆகும்.
அம்மாவின் அன்பு இந்த உலகத்தில் வேறு எந்த நட்புக்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் ஈடாகமுடியாது. பசி, தூக்கம், வலி எது நேர்ந்தாலும் குழந்தை அழுவதன்மூலம் உணர்த்தும். குழந்தை அழும்போது தாயின் உள்மனம் அழும். குழந்தையின் தேவை மட்டுமே தாயின் அழுகையில் அடங்கியிருக்கிறது. தன் உதிரம் தந்து குழந்தையின் உதிரம் வீர்யமடைய உதவுகிறாள் தாய். குழந்தையின் அழுகை தன்னலமானது. தாயின் உள்மன அழுகை குழந்தையின் வளர்ச்சிக்கானது. இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் பிரபஞ்ச வளர்ச்சியை மையமாகக் கொண்டது தாயின் உள்மன அழுகை.
அன்பும் ஞானமும் மொழி அல்லது சொல்வழிப்பட்டது. அது தாயின் வழியாக புதிய உயிர்ப்பைத் தருவதால் “சொல்லினும் நல்லாள்” தாய்.
பசியோ
தூக்கமோ
வலியோ
வருத்தமோ
வாய்விட்டுச் சொல்லத் தெரியாத
குழந்தையின் கண்ணீர்!
காலம்
அவ்வப்போது அழித்து
எழுதிய
எதனையோ கதைகளின்
துயரத்தை
தனதொரு புன்னகையால்
சமன் செய்துவிடுகிற
அம்மாவின்
அந்தரங்கமான அழுகை!
இவற்றை
முழுசாய்ச் சொல்லிவிடத்தான்
எப்போதும் தடுமாறுகிறது
என் மொழி.
அம்மாவின் அந்தரங்கமான அழுகையை முழுமையாய்ச் சொல்லிவிட முடியவில்லை என ஆதங்கப் படுகிறார் கவிஞர். ஒரு பெண்ணாகிய அவராலேயே சொல்ல முடியவில்லை என்றால் ஆண்களால் நினைத்தாவது பார்க்க முடியுமா என்ன?
கவிஞர் சக்திஜோதி இயற்கையின் உபாசகர். காலத்தின் சகல பரிமாணங்களையும் தனது சொற்களுக்குள் அடக்கி, வாசக மனசில் புதுவித உணர்வுகளையும் பொங்கிப் பெருகும் உணர்ச்சிகளையும் நதியெனப் பாய விடுகிறார். குளிக்கக் குளிக்க இன்பம் பொங்குகிரது. அலாதியனதோர் அந்தரங்க வெளியில் பறக்க விடுகிறது.
அந்திவானம் பற்றிய இவரின் சொல்லாடல் அலாதியானதும் அசாத்தியமானதும் ஆகும்.
விழிகளைக் கூசச்செய்யும்
பகல் வெளிச்சத்தை
இரவின் இருள்
தனக்குள் சுருட்டிக்கொண்டது
(அலகிலா விளையாட்டு).
கூசச்செய்யும் பகல் வெளிச்சம் வெப்பமானது. அதிலிருந்து விடுதலை தருகிறது அந்திவானம். மனிதனால் தாங்க முடியாத வெப்பத்தை இருள் தனக்குள் சுருட்டிக் கொள்கிறது என்பது அழகிய கற்பனை. கற்பனை மட்டுமல்ல; யதார்த்தமும் கூட. காலத்தின் இரு கரங்கள் பகலும் இரவும். பகலை விழுங்க இருளுக்கு அந்திப் பொழுது உதவி செய்கிறது. இருள் மட்டும் இல்லை என்றால் பகலின் ஆதிக்கம் கொடூரமானதாய் இருக்கும். ஆகவே, அந்திப் பொழுதை மனமுவந்து வரவேற்கும் சொல்லாடல் கவித்துவத்தின் பேரழகாய் மிளிர்கிறது. இன்னோர் இடத்திலும் கவிஞர் அந்தியை வர்ணிக்கிறார்.
அந்திவானம்
அழித்தழித்து எழுதிய
நிறங்கள் யாவும்
கரைந்து தீர்ந்து
கடைசியாய்
கடலின் நீலத்தைக் கருக்கிடச் செய்கையில்
மலை உச்சியில் இருந்து
தலைகாட்டும் நிலவு
தண்ணெனப் பொழியத்
தொடங்குகிறது.
(பிறையில் நிறையும் பூர்ணிமை)
அந்திவானம் பல நிறங்களை அழித்தழித்து எழுதுகிறது. முதலில் இளமஞ்சள்; அடுத்து செவ்வரியோடிய வட்ட நிறம்; அதையும் தாண்டி கருக்கல் நிறம். அதாவது பகலில் நீல நிறத்தில் இருந்த வானம் அந்தியின் வரவால் கருக்கல் நிறம் என்ற பரிமாணம் கொள்கிறது. அந்த நேரத்தில் “தண்ணென”த் தோன்றுகிறதாம் நிலவு. குளுமை தரும் கருவி நிலவு. அதை எடுத்துவந்து பூமாதாவுக்கு அர்ப்பணம் செய்கிறது அந்தி.
அந்தி எனும் காலக் கருவறைக்குள் நுழைந்து அதன் தாத்பர்யத்தையும் தத்துவத்தையும் அறிந்து புரிந்து மனித சமுதாயத்தின் புதுவிதமான ரசனைக்கு வழிகாட்டுகிறார் கவிஞர்.
சங்க இலக்கியத்தில் காதலைப் போற்றும் கவிதைகள் ஏராளம் இருக்கின்றன. திருவள்ளுவர் காதலையும் காமத்தையும் பேசுவதற்காக 250 பாக்களை வடித்திருக்கிறார். அன்றுமுதல் இன்றுவரை தமிழர்தம் வாழ்க்கை காதலோடு ஐக்கியமாகி நிற்கிறது. காதலையும் காமத்தையும் வசப்படுத்துவதற்காகவும் காதல் எதிரிகளை மயக்கமடையச் செய்வதற்க்காகவும்தான் சோமபானம் கண்டு பிடிக்கப் பட்டதாக “வீரயுக நாயகன் வேள்பாரி” நாவலில் சு. வெங்கடேசன் புனைந்துரைக்கிறார்.
காதல் என்ற இலக்கியத்துக்கு இலக்கணம் வகுத்த சங்க இலக்கியம். “செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” என்கிறது. மனசும் மனசும் கலந்தால் அது காதல்; உடலும் உடலும் சேர்ந்தால் காமம். செம்மண்ணில் கலந்துவிட்ட தண்ணீரை தனித்துப் பிரிக்க முடியாது; காதல் அத்தகையது. ஆனால் உடல் சோர்ந்துவிட்டால் காமம் துவண்டுவிடும். தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவுபோல எந்த அழிமானச் சூழலிலும் காதல்மனம் பிறழ்வதில்லை.
ஒருவரும் அறியாது
இரகசியமாய்
ஒளித்து வைத்தாலும்
ஊர் முழுவதும்
அலர் பரவும்.
அந்த
காதலால்தான்
கள்ளம் என்கிற சொல்
உள்ளத்துள் கரைந்து
வெல்லமென இனிக்கிறது.
(தித்திப்பு)
பெருமாள் முருகன் எழுதிய “நெடுநேரம்” என்ற நாவலில் ஒரு காட்சி! மேல்குலப் பெண்ணும் கீழ்க்குல ஆணும் யாருக்கும் தெரியாமல் சந்திக்கிறார்கள். படிக்கப் போகும் கல்லூரி வளாகத்தில், மாடு மேய்க்கப் போகும் புல்வெளியில் காதல் வளர்கிறது. எத்தனை ரகசியமாய்ச் சந்திப்பு நிகழ்ந்தாலும் ஒரு கண் பார்த்துவிட்டால் போதும்; ஊர் முழுக்க அலர் அல்லது கிசுகிசுப்புப் பரவுகிறது. உடனடியாக அவள் தனிமைப்படுத்தப் பட்டு வேறொருவனுக்குக் கட்டி வைத்து விடுகிறார்கள். இந்தக் காலக் காதலுக்கு நேரும் விபத்து இது. சங்க காலக் காதல் அப்படியல்ல. அலர் பரவினால் பெண்ணுக்கு மகிழ்ச்சி தருகிறது. ஊர் முழுக்கப் பரவும் ரகசியச் செய்தியே அலர். களவு செய்கிறார்கள் என்று ஊர் பேச ஆரம்பித்தால் உடனடியாகக் கற்பு வாழ்க்கைக்கான அதாவது கல்யாணத்துக்கான ஏற்பாடு தொடங்கிவிடும். காதலுக்கு மரியாதை தந்த தமிழர் மரபு இது.
இந்தக் காலத்திலும் அப்படியான காதல் மலர்ந்து அலர் பரவுகிறது என்று கற்பனை செய்கிறார் கவிஞர். அலர் ஓர் அழகிய சொல். இந்தக் காலத்தில் “பொரணி பேசுவது” என ஆகிவிட்டது. அலர் காதலர்களை இணைக்கும் செயல்பாட்டுச் சொல். இன்றும் அது நிகழவேண்டும் எனக் கவிஞர் விரும்புவது தமிழர் மரபை மீட்டெடுக்க வேண்டும் என்பதாகும்.
மழைநாளின் இரவு என்பது மனித உடலின் ஏக்கத்துக்கும் இன்ப நுகர்வுத் தேவைக்குமான வடிகால் காலம். அந்த இரவில் தூக்கம் தொலைந்து போனால் மேலெழும் உணர்ச்சியலைகள் பாடாய்ப் படுத்தும். ஆண் என்றாலும் பெண் என்றாலும் நிலமை அதுதான். ஒவ்வோரு மழைத் துளியின் ஓசையும் அந்தரங்க உணர்ச்சிகளை உசுப்பிவிட்டுப் பறிதவிக்க வைக்கும். ஏக்கம்! பெருமூச்சு! அலைகளாய் மேலெழுகையில் ஓர் அந்தரங்க இயக்கம் தேவைப்படுகிறது. அது நடக்குமா? நடந்தால்தான் மனம் அமைதி அடையும்.
விரகதாபம் கொண்டு தவிக்கும் மனசின் கவிதை இது.
முடிச்சென்றே அறியாமல்
பிணைத்துக் கொண்ட கணம்.
அதனால் திசை திரும்பிய வழித்தடம்.
இவ்வாறு இன்னும்
எதை எதையோ பொதிந்து வைத்திருக்கும்
அந்த நினைவு
அடர்ந்து திரண்டு
அலைகளென மேலெழுகையில்
ஆழ்கடலின்
அசங்காத அமைதிக்கு
ஏங்க்குகிறது
மனம்.
(மழைத்துளியின் ஓசை)
தொடக்கமும் முடிவும் இல்லாதது பிரபஞ்சம். அநாதிக் காலம் தொட்டு அநாதி9யாய்ச் சுழல்கின்றன கிரகங்களும் நட்சத்திரங்களும். இயக்கவியல் கோட்பாட்டின்படி எங்கு தொடங்கி எங்கு முடிந்தாலும் அதன்பின்னும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. அந்தத் தொடர்ச்சி இல்லாது போனால் வம்ச விருத்தி இல்லை. ஓடும் நதியும் படரும் கொடியும் தொடர்ச்சியின் விளைவுகளே. ஆக்கநிலை மாற்றம், அழிவுநிலை மாற்றம் எதுவானாலும் ஆதியந்தமில்லா இயற்கை இயக்கத்தின் தொகுப்பு என்கிறது தத்துவஞானம்.
இனி செய்வதற்கு ஏதுமில்லை
அவ்வளவுதான்
என்றான பிறகுதான்
சரித்திரத்தின்
அடையாளமாகிய
சாதனைகளும்
மணிமுடிகளுக்கான
அதிகாரப் போட்டிகளும்
மாத்திரமின்றி
மகத்தான
காதல்களும் கூட
நிகழ்ந்திருக்கின்றன.
நடக்கும் பாதை
முடிவுறும் போது
தன்னியல்பாக விரியத் தொடங்குகின்றன
இறக்கைகள்
வானத்தை நோக்கி.
(முடிவின் தொடக்கம்.)
இப்படியாக இந்தத் தொகுப்பு முழுவதும் மெல்லிய உணர்வுகள் துளிர்த்துக் கொண்டும் வளர்ந்துகொண்டும் வாழ்ந்துகொண்டும் இருக்கின்றன. தாய்க்கும் மகளுக்கும் இடையிலான மெல்லிய உணர்வைச் சொல்லும் “கடவுச்சொல்”, தத்துவச் செறிவு மிகுந்த “கூடு திரும்புதல்,” மற்றும் “இருப்பும் இன்மையும்” படிம உத்திகொண்டு இலங்கும் “கூடும் வானமும்” உள்ளிட்ட அனைத்துக் கவிதைகளும் வாசித்து இன்புறக் கூடியவை. அனைத்துப் படைப்புகளும் மனசை வருடுகின்றன. இந்தத் தொகுப்பை வாசித்து முடிக்கும்போது பிரபஞ்ச வெளியெங்கும் உலா வந்த திருப்தி ஏற்படுகிறது.
கவிதையின் அழகு சொற்களிலும் சொல்லும் முறையிலும் இருக்கிறது என நிரூபித்திருக்கிறார் கவிஞர் சக்திஜோதி.
– தேனி சீருடையான்
நூல் : சொல்லினும் நல்லாள்
ஆசிரியர் : சக்தி ஜோதி
விலை : ரூ.₹100/-
வெளியீடு : தமிழ்வெளி பதிப்பகம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
[email protected]