katturai: ulagai ulukkum thaniyar raanuva koolippadaikal - a.bakkiyam கட்டுரை: உலகை உலுக்கும் தனியார் ராணுவ கூலிப்படைகள்- அ.பாக்கியம்katturai: ulagai ulukkum thaniyar raanuva koolippadaikal - a.bakkiyam கட்டுரை: உலகை உலுக்கும் தனியார் ராணுவ கூலிப்படைகள்- அ.பாக்கியம்

ரஷ்யாவின் வாக்னரும் அமெரிக்காவின் பிளாக் வாட்டரும்

ரஷ்யாவில் இயங்கி வரும் தனியார் ராணுவப் கூலிப்படையான வாக்னர் குழுவும், அதன் தளபதி ஜெனியே பெர்கோஷினும்தான் தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய யுத்தத்தின் விவாத பொருளாக இருக்கின்றனர். குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க ஊடகங்கள் இந்த ரஷ்யாவை பலவீனப்படுத்துவதற்கான மிகப்பெரும் பிரச்சாரமாகவே முன்னெடுக்கிறார்கள். இந்த தருணத்தில் தனியார் ராணுவ கூலிப்படை என்பது வாக்னர் குழு மட்டுமல்ல, நவீன காலத்தில் இந்த கூலிப்படைகள் முறைப்படுத்தப்பட்ட இராணுவத்திற்கு சமமான அளவு செயல்பட ஆரம்பித்துள்ளது.What is the Wagner Group? A look at the mercenary group led by man accused of 'armed mutiny' in Russia

{படம்: வாக்னர் குழு ரஷ்யா}

ஜெனியேவ் பிரிகோஷின் யுத்த களத்தில் இருக்கும் போது ரஷ்ய இராணுவ தலைமைக்கு எதிராக கலகத்தை ஆரம்பித்தார். 24 மணி நேரத்தில் அவர் அறிவித்த கலகம் முடிவுக்கு வந்தது. வாக்னர் குழுவின் கலகத்தை ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் மக்களுக்கு எதிரான தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டி, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்படும், மரண தண்டனை உட்பட சட்ட ரீதியான அனைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. உடனடியாக பிரிகோஷின் தனது கலகத்தை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார்.The International Criminal Court issues an arrest warrant for Putin : NPR

{படம்: விளாடிமிர் புடின்}

யுத்த காலத்தில் இது ஒரு மோதலாக மாற வேண்டாம், அப்படிப்பட்ட மோதல் உக்ரைன் யுத்தத்திற்கு ரஷ்யாவிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்ற பின்புலத்தில் அவர் மீதான சட்ட நடவடிக்கை கைவிடப்பட்டு பெலாரஸ் நாட்டில் தஞ்சமடைய அனுமதிக்கப்பட்டார். ஜூலை 1ஆம் தேதிக்குள் அனைத்து ஆயுதங்களும் ராணுவ கவசவாகனங்கள் உட்பட ஒப்படைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய இராணுவம பலம் வாய்ந்தது என்பதும், இந்த கலகத்தை அடுத்து விளாடிமிர் புடின் ரஷ்ய ராணுவத்தையும் ஒன்றுபடுத்தி இருப்பதுடன், மக்களின் ஆதரவையும் அதிகப்படுத்தி இருப்பதாக களநிலவரம் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. வாக்னர் குழுவின் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ளது.The Rise & Fall of the World's Most Notorious Private Army - YouTube

{படம்:அமெரிக்க black water}

யார் இந்த ஜெனியேவ் பெர்கோஷின்?

1961 ஆம் ஆண்டு முந்தைய லெனின் கிராட் தற்போதைய பீட்டர்ஸ் பர்க் என்ற நகரத்தில் பிறந்தார். தனது 20 வயதில் மோசடி குற்றங்களுக்காக 9 ஆண்டுகள் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடைந்த பிறகு தொழில் முனைவோராக மாறினார். சிறிய தொழில்களில் ஆரம்பித்து 1990 ஆம் ஆண்டு ஒரு உணவகத்தை துவங்கினார். காலப்போக்கில் கான்கார்ட் என்ற பெரிய உணவமாக மாறியது. அப்போது செயின்ட் பீட்டர்ஸ் பார்க் நகரத்தின் துணை மேயராக விளாடிமிர் புடின் இருந்தார் அவரது நட்பு கிடைத்தது. புடின் அதிபரான பிறகு அரசு விழாக்களுக்கும் வெளிநாட்டிலிருந்து அரசு தலைவர்கள் வருகிற பொழுது நடைபெறுகிற நிகழ்வுகளுக்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் உணவு தயாரித்துக் கொடுக்கும் மிகப்பெரும் ஒப்பந்தங்களை பெற்று தனது உணவகத்தை பெரும் உணவமாக மாற்றினார். இதனால் இவரை விளாதிமிர் புட்டினின் சமையல்காரர் என்று அழைப்பார்கள்.Yevgeny Prigozhin (13-06-2023).jpg

{படம்:ஜெனியேவ் பெர்கோஷின்}

பிரிகோஷின் வேறுசில நிறுவனங்களையும் துவைக்கினார் குறிப்பாக இணையதளம் துறையில் இன்டர்நெட் ரிசர்ச் ஏஜென்சி என்று நிறுவனத்தை துவக்கி குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை இத்துறையில் செலுத்தினார். அமெரிக்க தேர்தலில் இந்த நிறுவனம் தலையிட்டது என்ற விமர்சனம் பத்திரிக்கையில் எழுதிய பொழுது அவர் அவ்வாறு இல்லை என்று மறுத்ததுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த பிறகு இந்த நிறுவனத்தின் மீதான விமர்சனம் நிறுத்தப்பட்டது. உணவகம் மற்றும் வலைதளத்தை அடுத்து ராணுவத்திற்கு உணவு கொடுப்பதன் மூலமாக கிடைத்த தொடர்புகளை பயன்படுத்தி தனியார் ராணுவப் படை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டார். 2014 ஆம் ஆண்டு வாக்னர் படை என்ற பெயரில் அரசின் உதவியுடன் ராணுவத்தை அமைத்தார். முன்னாள் ராணுவ வீரர்கள், புதிய வேலையில்லாத இளைஞர்கள் ஆகியவர்களையும் இதில் இணைத்தார். சிறை குற்றவாளிகளையும் ராணுவத்தில் சேர்த்தார்.

2014 ஆம் ஆண்டு உக்ரைனில் யுத்தம் செய்தார் என்ற தகவலை தவறான தகவல் என்று மறுத்துள்ளனர். படையை ஆரம்பித்த உடன் யுத்த களத்திற்கு செல்வது சாத்தியமில்லை. தற்போது நடைபெறக்கூடிய உக்கிரன் யுத்தத்தில் ரஷ்ய இராணுவம் வாக்னர் குழுவை வலுவாக பயன்படுத்தி வந்தது. குறிப்பாக ரஷ்யர்கள் அதிகமான வாழும் பகுதிகளில் பாதுகாப்பும், தற்போது ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகரை அடிபணிய வைத்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது என்பதால் புகழ்பெற்றார்.உக்ரைனில் பயங்கரமான கூலிப்படையை களமிறக்கும் ரஷ்யா! பிரித்தானியா தகவல் - லங்காசிறி நியூஸ்

{படம்: உக்ரைன் போரில் வாக்னர் குழு}

இந்தப் புகழின் மோகமாக ரஷ்யாவின் ராணுவ அமைச்சருக்கு எதிராகவும், ராணுவ தளபதிக்கு எதிராகவும் போர்க்கொடி உயர்த்தினார். அடுத்து அரசியல் பிரவேசத்திற்கான அச்சாரம் என்று கூட பத்திரிகைகள் எழுதின. புடின் தனது இராணுவ தளபதிகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இவரை பயன்படுத்துகிறார் என்ற கருத்தும் உள்ளது. இவரது ராணுவப் படையில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வாக்னர் தனியார் ராணுவகூலிப்படை முடக்கப்பட்டுள்ளது.

இந்த கலவரத்தைப் பற்றி புடின் அடக்குவதற்கான அறிவிப்புகள் செய்தாலும், 1917 ஆம் ஆண்டு கலகம் போல் என்று ஒப்பிட்டு பேசியிருப்பது வரலாற்றில் தவறான வழியில் சிதைக்கிறார். 1917க்கு பிறகு ரஷ்யாவில் எந்த இராணுவ கலகமும் நடைபெறல்லை என்று பேசுகிறார்.1917 ரஷ்ய புரட்சி - World Socialist Web Site{படம்:1917 ரஷ்யப் புரட்சி}

இதே போன்று தான் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் 1917 ஆம் ஆண்டு நெருக்கடி போல் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது என்று இந்த கலகம் பற்றி தெரிவித்தார். 1917ஆம் ஆண்டு நடைபெற்ற புரட்சி சமூக மாற்றத்திற்கான புரட்சி உலகையே புரட்டிப் போட்ட புரட்சி. இதை அதனுடன் ஒப்பிடுவது புதினின் முதலாளித்துவ வர்க்க பாசத்தை வெளிப்படுத்துகிறது. உக்ரைன் யுத்தம் ஆரம்பித்த காலத்தில், லெனின் கடைபிடித்த பிரிந்து போகும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைதான் சோவியத் சிதறுவதற்கு காரணம் என்று ரஷ்ய இனவாத சிந்தனையின் வெளிப்பாடாக கருத்தை தெரிவித்தார்

மேற்குலக ஆசை நிமிடங்களில் நிராசையானது

அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் என்ன நடக்கிறது என்ற முடிவுக்கு வரும் முன் கலகம் முடிந்து விட்டது. ரஷ்யாவை எதிர்ப்பதற்கு தனக்கு ஒரு கூட்டாளி கிடைத்துவிட்டார் என்று உக்ரைனும் மேற்குலகமும் நினைத்தமாத்திரத்தில் அவை நிறைவேறாமல் நிராசையாக மாறிவிட்டது. மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அதன் அரசு தலைவர்கள் குறிப்பாக ஜெர்மனிய பத்திரிகைகள் மிகப்பெரும் அளவிற்கு ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் துவங்கிவிட்டது, இந்த கலகம் புட்டின் முடிவுக்கான துவக்கம், விளாதிமிர் புட்டினின் பலவீனம் வெளிப்பட்டு இருக்கிறது, மாஸ்கோ வீழ்கிறது, சீனா ரஷ்யாவிற்கு கொடுக்கும் ஆதரவு பற்றி பரிசீலிக்கிறது என்று அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் எழுதி தீர்த்தார்கள். வாக்னர்குழு உக்கிரேனில் மட்டுமல்ல, லிபியா, ஆப்பிரிக்கா (58 ஆப்பிரிக்க நாடுகளில் சரி பாதி அமெரிக்க நிலைப்பாட்டை ஏற்கவில்லை) சிரியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் அவர்கள் இருக்கிறார்கள் என்று ஜெர்மனிய பத்திரிக்கை விரிவான முறையில் கட்டுரை எழுதி இருக்கிறது.

இந்தக் கட்டுரைகள் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருக்கக்கூடிய நாடுகளை எதிர்பக்கம் திருப்பக்கூடிய முறையிலும், அமெரிக்கா மட்டும் உலக நாடுகளின் அதிகாரத்தில் தலையிடுகிறார்கள் என்பதல்ல ரஷ்யாவும் தலையிடுகிறது என்று சமப்படுத்தி நிறுத்துவதற்கான முயற்சிகளாகும். ஜெனியேவ் பிரிகோஷின் பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்ததை அருகில் உள்ள போலந்து, லாட்வியா போன்ற நாடுகள் பேராபத்து என்றும் நாட்டோ தலையிட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்கள். உக்ரைன் யுத்தத்தில் நடுநிலையாக இருக்கக்கூடிய நாடுகளை குறிப்பாக சீனா, சவுதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளை அமெரிக்கா தன் நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பிரச்சாரங்களை மேற்கொண்டார்கள். சீனா உட்பட பல ஆப்பிரிக்க அமெரிக்காவின் இந்த முயற்சியை ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல யுத்ததை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்தைக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர்.

அமெரிக்கா தலைமையிலான நாட்டோ அமைப்பின் தலைமை, ரஷ்யாவில் குழப்பத்தை ஏற்படுத்த எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. ரஷ்யாவின் மீது சுமத்தப்பட்ட பொருளாதாரத் தடைகளும் வெற்றி பெறவில்லை. தற்போது ரஷ்யாவின் நாணய மதிப்பு யுத்தத்திற்கு முன்பு இருந்த நிலையை எட்டியுள்ளது. இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடமிருந்து அதிகமான கச்சா எண்ணெயை வாங்குவது ரஷ்யாவின் பொருளாதார நெருக்கடியை தீர்க்கிறது.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ரஷ்யாவை வீழ்த்தி விடலாம் என்ற நோக்கத்தோடு ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குவது மிகப்பெரிய ஆபத்தாகும். உலகின் பாதி அணு ஆயுதங்கள் உள்ள ஒரு நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு பதிலாக ஆயுதங்களை வழங்கி யுத்தத்தை நீடிக்கசெய்வது மிக ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இந்த நேரத்தில் ஆயுதங்கள் அதிகமாக கொடுத்தால் ரஷ்யாவில் வீழ்த்தி விடலாம் என்று பேசுகிறார். இந்த பேச்சின் நோக்கம் கூடுதல் ஆயுதங்களையும், நிதி உதவியும் பெறுவதாக தான் உள்ளது. நாட்டோவின் தலைவர்கள் இந்த தருணத்தை பயன்படுத்தி உக்ரைனுக்கு தேவையான ஏவுகணைகள் உட்பட அனைத்து விதமான ஆயுதங்களையும் உடனே அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

கலகம் தொடங்கிய அடுத்தநாளே ஐரோப்பிய ஒன்றியம் 3.8 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்து ஆயுதங்களை அனுப்புகிறது. இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் யுத்த தளவாடங்களுக்காக 13 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அளித்துள்ளது அமெரிக்காவும் இதற்கு சமமான முறையில் ஆயுதங்களையும் நிதிகளையும் கொடுத்துள்ளது.யுத்தம் எந்த வகையிலும் முடிவுக்கு வந்து விடக்கூடாது என்பதில் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கவனமாக இருக்கிறார்கள். இந்தியா உட்பட சில பத்திரிகைகள் இது தொடர்பான கட்டுரைகளை எழுதுகிற பொழுது மேற்கத்திய சாயல் கருத்துக்களை தாங்கியே வருகிறது.

புடின் தொடுத்த யுத்தத்தை யாரும் அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லை. ஆனால் இந்த யுத்தத்திற்கான காரணம் அமெரிக்க தலைமையிலான நாட்டோ அமைப்பின் விரிவாக்கமும், அதன் மூலம் ரஷ்யாவையும் துண்டு துண்டாக்கி தனது கட்டுப்பாட்டு கொண்டு வர வேண்டும் என்ற முயற்சியும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே தான் அமெரிக்கா இந்த யுத்தம் முடிவுக்கு வருவதை விரும்பாமல் நீடிக்கச் செய்கிறது.நேட்டோ அமைப்பு எப்படி உருவானது? அமெரிக்கா - ரஷ்யா பனிப்போர் சூழல் என்ன? - முழுமையான வரலாறு

{படம்: நாட்டோ அமைப்பில் உள்ள நாடுகள்}

தனியார் ராணுவ கூலிப்படைகள் 

(Private Military Company)

உக்ரைன்-ரஷ்ய யுத்தம் மேலும் ஒரு புதிய ஆபத்தின் வளர்ச்சி போக்கை வெளிப்படுத்தி உள்ளது. அதுதான் தனியார் ராணுவ கூலிப்படையாகும். முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தில் தேசிய அரசுகள் உருவாகாத சூழலில் பலரும் படைகளை பராமரித்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனி தனது நியாயமற்ற வணிக நோக்கத்தை நிறைவேற்றிட கம்பெனியின் பெயரில் ராணுவத்தையும், கப்பற்படையும் வைத்திருந்தது. இவையெல்லாம் சிறு சிறு சண்டைகள் யுத்தங்கள் போன்றவற்றில் பயன்பட்டது. பிறகு ஒவ்வொரு நாடும் மிகப் பெரும் ராணுவத்தை கட்டி அமைத்தனர்.{படம் :ஈராக்கில் தனியார் நிறுவனமான ‘பாண்ட் ஆப் பிரதர்ஸ்’ என்ற ராணுவம்}

பனிப்போர் முடிந்த பிறகு அமெரிக்க தலைமையிலான தனியார் ராணுவ கூலிப்படைகள் மிக அதிகமாக பெருக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு மட்டும் தனியார் ராணுவ கூலி படைகளுக்கான( மேற்கு மற்றும் அமெரிக்கா) முதலீடு 224 பில்லியன் டாலர் ஆகும். 2030 ஆம் ஆண்டு இது 457 பில்லியன் டாலர் அளவிற்கு உயரம் என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. அனேகமாக ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக தனியார் ராணுவ கூலிப்படைகளும் இன்றைய தினம் உருவாகிவிட்டது அல்லது உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பிளாக் வாட்டர் என்று சொல்லக்கூடிய தனியார் கூலிப்படை ராணுவம் தான் உலகத்தில் பெரியது. முன்னாள் ராணுவ அதிகாரி எரிக் பிரின்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தான் ஈராக் போரின் போதுதான் அதிகமான அளவு கூலிப்படைகள் பயன்படுத்தப் பட்டன. பிளாக் வாட்டர் படை அதிக பங்கை இந்த இருநாடுகளிலும் செய்தது, 2003 ஆம் ஆண்டு ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க ஆதரவு ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் இவர்கள்தான் பயிற்சி கொடுத்தார்கள். அன்றைய தினம் சுமார் 40,000 வீரர்களை கொண்டிருந்தது. ஆயுத மோதல்கள் மூலமாகவே அதிகமான பணத்தை இவர்கள் பெறுகிறார்கள்.

இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அமெரிக்காவின் பட்ஜெட்டில் 2001 ஆம் ஆண்டு கூலிப்படைக்கு 7, 35,000 டாலர் ஒதுக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டில் 25 மில்லியன் டாலர்களாகவும் 2006 ஆம் ஆண்டு 600 மில்லியன் டாலர்களாகவும் இந்த பிளாக் வாட்டர் தனியார் ராணுவ கூலிப்படைக்கு ஒதுக்கப்பட்டது. சராசரி ஒரு அமெரிக்க ராணுவ வீரனுக்கு தினசரி ஒதுக்க கூடிய தொகை 150 டாலரில் இருந்து 190 டாலர் வரை தான். ஆனால் இந்த கூலிப்படைக்கு தினசரி அமெரிக்க பட்ஜெட் ஒதுக்கியது 1200 டாலர்களாகும்.

ஈராக் நாட்டில் ஒரே நேரத்தில் தூசூர் நகரத்தில் 17 பொதுமக்களை விசாரணையின்றி தூக்கில் போட்டார்கள். இதுபோன்ற எண்ணற்ற கொடூர செயல்களை இந்த கூலிப்படை ஈராக்கில் செய்வது. கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களையும் பொது மக்களையும் கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள். ஆயுதக் கடத்திலிலும் கள்ளச்சந்தையில் ஆயுத விற்பனையிலும் மிக முக்கிய பங்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தனது பெயரை அகாடமி என்று மாற்றிக் கொண்டது.

வேறுசில பணிகளையும் செய்வதற்கான ஒப்பந்தங்களை எடுத்து தங்களுடைய கூலிப்படை குற்ற செயல்களை மறைத்துக் கொண்டார்கள். மற்ற நாடுகளில் அமெரிக்க ஆதரவு ராணுவத்திற்கு பயிற்சி கொடுப்பது, ஆப்கானிஸ்தான், இஸ்ரேல், ஈராக் போன்ற நாடுகளில் உள்ள அமெரிக்க தூதர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்று பணிகள் ஒதுக்கப்பட்டது.

{படம்:ஆப்கானில் செயல்பட்ட dyn corp எனப்படும் தனியார் ராணுவப் படை}

100க்கும் மேற்பட்ட தனியார் ராணுவ கூலிப்படைகள் அமெரிக்காவில் செயல்படுவது தெரிய வருகிறது. ஜி4s என்ற தனியார் ராணுவ கூலிப்படை அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 125 நாடுகளில் கிளை வைத்துள்ளது. 2006 முதல் 2008ஆம்ஆண்டு வரை அமெரிக்க தொழிலாளர்கள் மீது தாக்குதலுக்கும் அமெரிக்கா தலையீடுகள் செய்யக்கூடிய நாடுகளில் மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்கும் இந்த கூலிப்படை பயன்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க வீரர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கிற பொழுது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பாதுகாப்பு அளிப்பதற்கான பொறுப்பு இந்த கூலிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இந்த கூலிப்படை செய்த கொலைகளும், கொள்ளைச் சம்பவங்களும் பெரிய அளவிற்கு அம்பலப்படுத்தபட்டன.

மற்றொரு தனியார் ராணுவ கூலிப்படை டைன் கார்ப் (Dyn Corp) ஆகும். இதில் 24 ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்திற்கும், ஈராக்கிற்கும் இந்த கூலிப்படையிலிருந்துதான் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்கள் அனுப்பப்பட்டார்கள். அமெரிக்காவின் கெட்ட பெயர் எடுத்த சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ போன்ற நிறுவனங்கள் தனது பாதுகாப்பிற்கு 50 சதவீதம் இந்த தனியார் ராணுவ கூலிப்படையை நம்பித்தான் இருக்கிறது. இந்தப் கூலிப்படை கிழக்கு ஐரோப்பாவில் போஸ்னியா நாட்டில் 2000ம் ஆண்டில் நடைபெற்ற யுத்தத்தை ஒட்டி அனுப்பப்பட்ட பொழுது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பெண்களையும் குழந்தைகளையும் விற்பனை செய்தது ஆதாரப்பூர்வமாக பல புகார்கள் வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் இல்லை. 2001 ஆம் ஆண்டு ஈக்வடார் நாட்டில் விவசாயிகளின் பயிர்கள் மீது களைக்கொல்லி மருந்துகளை திருட்டுத்தனமாக வீசி விவசாயத்தை நாசம் செய்யும் பணிகளை இந்த கூலிப்படை நிறைவேற்றியது. இவர்கள் ஆப்கன் நாட்டில் இருந்த பொழுது குழந்தை விபச்சாரத்தை நடத்தினார்கள் என்றும் பெரும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.

{படம்:யூரோப்பியன் செக்கியூரிட்டி அகடமி என்ற தனியார் ராணுவம்.}

எம்.பி.ஆர்.ஐ என்ற அமெரிக்க தனியார் ராணுவ கூலிப்படை 1995இல் குரோஷியா நாட்டில் இன அழிப்பு கொடுமைகளில் ஈடுபட்டது. அல்பேனியா நாட்டில் கிளர்ச்சி ஏற்படுத்தி ஆட்சி கவிழ்ப்புக்கு இந்த படை உறுதுணையாக இருந்தது. ஆப்கானிஸ்தான் மற்றும் போஸ்னியா நாடுகளில் இஸ்லாமியர்களுக்கு என இருந்த படைப்பிரிவுக்குள் நுழைந்து சிஐஏ வழிகாட்டி அடிப்படையில் செயல்பட்டார்கள்.

ஏஜிஎஸ் டிபன்ஸ் சர்வீஸ் என்ற தனியார் ராணுவ கூலிப்படை இங்கிலாந்தில் 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. யுத்தம் நடைபெற கூடிய இடங்களில் தூதரகங்களை பாதுகாக்கும் பொறுப்பை இந்த கூலிப்படை ஏற்றுக் கொண்டது.

இங்கிலாந்தில் எர்னிஷ் இன்டர்நேஷனல் என்ற தனியார் ராணுவ கூலிப்படை ஈராக் நாட்டிற்கு அனுப்பப்பட்டு ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் கைதிகளை சித்தரவதை செய்யும் செயல்களில் ஈடுபட்டது. அதிகமாக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட தனியார் ராணுவப் படை என்று குற்றச்சாட்டுக்கு ஆளானது.

நார்த் பிரிட்டிஷ் சர்வீஸ் லிமிடெட் என்ற தனியார் ராணுவப்படை பிரிட்டனில் ஆரம்பிக்கப்பட்டு அமெரிக்க தனியார் ராணுவ படையுடன் இணைந்து டொமினிகள் குடியரசில் பதிவு செய்தார்கள். இந்த தனியார் ராணுவ கூலிப்படை தற்போது உக்ரைனுக்கு அதிகமான கூலிப்படைகளை அனுப்பி உள்ளது. இந்தக் கூலிப்படையில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் ராணுவ வீரர்களும், பிரான்ஸ், அமெரிக்காவை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். 2003 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவில் உள்ள லைப்ரிய நாட்டில் அரசுக்கு எதிரான கலவரங்களுக்கு இந்த படை அனுப்பப்பட்டு உதவி செய்து அந்த அரசை தூக்கி எறிய கூடிய வேலையை முடித்தது, அந்நிய நாட்டுக்குள் புகுந்து அப்பட்டமான முறையில் அரசுக்கு எதிரான செயல்களில் இறங்கினார்கள். அந்த நாட்டின் ஜனாதிபதியை சிஐஏ கடத்திச் செல்வதற்கு சிறப்பு திட்டத்தை தயாரித்துக் கொடுத்தவர்கள் இந்த கூலிப்படையை சேர்ந்தவர்கள்தான், ஐநா சபையின் தலையிட்டால் அது நடைபெறவில்லை.

{படம்:அமெரிக்காவின் தனியார் ராணுவமான பிளாக் வாட்டர் சீனாவில் செக்யூரிட்டி பெர்சனல் பயிற்சியை வழங்க பல மையங்களை திறந்துள்ளது.}

தனியார் ராணுவ கூலிப்படையில் சேர்வதற்கு உலகம் முழுவதும் இருந்து பலர் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளிவருகிறது. குறிப்பாக எக்கனாமிக் டைம்ஸில் வெளிவந்த செய்தி இந்தியாவுடன் தொடர்புடையது. நேபாள நாட்டிலிருந்து ஏராளமான இளைஞர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், வாக்னர் குழுவில் சேர்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டது. அவ்வாறு சேரக்கூடிய வீரர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகு ரஷ்ய குடியுரிமை வழங்கப்படும் என்ற சலுகை இருப்பதாகவும் அதனால் சேருகிறார்கள் என்றும் தெரிகிறது. நேபாள அரசு இது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற வகையில் முடித்துக் கொண்டார்கள். இந்திய அரசு நேபாள வீரர்களை ராணுவத்தில் எடுப்பதை நிறுத்திவிட்டது மட்டுமல்ல, அக்னி பாத் என்ற பெயரால் நிரந்தர ராணுவ பணியை ஒழித்துக் கட்டியதும் இதற்கு முக்கிய காரணம் என்றும் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்கள் இதுபோன்ற அண்டை நாடுகளில் இணைவது இந்தியாவுக்கு ஆபத்து என்று காங்கிரஸ் கட்சி ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

{படம்:உக்ரைனில் களம் இறக்கப்பட்ட அமெரிக்காவின் தனியார் ராணுவம் பிளாக் வாட்டர்}

பனிப்போர்தான் உலகை பதட்டமாக வைத்திருக்கிறது என்று கருதப்பட்ட காலம் முடிந்து அமெரிக்கா தலைமையில் ஒற்றை உலகம் என்ற நிலை ஏற்பட்ட பொழுதும் யுத்தங்கள் குறையவில்லை. அதன் பிறகு தான் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற பெயரால் எண்ணெய் மற்றும் இயற்கை வளமுள்ள நாடுகளையும் சுரண்டுவதற்காக மத்திய ஆசிய நாடுகளிலும் லத்தின் அமெரிக்க நாடுகளிலும் பல படையெடுப்புகளின் நடத்தியது. யுத்தம் இல்லாமல் முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் உயிரோடு இருக்க முடியாது. உலகம் முழுவதும் 850 க்கு மேற்பட்ட ராணுவ தளவாடங்களை 155 நாடுகளுக்கு மேல் அமெரிக்கா நிறுத்தி உள்ளது. இந்த வளர்ச்சிப் போக்கில் தனியார் ராணுவ கூலிப்படைகள் புதிய நிலைமைகளாகும்.

ஏற்கனவே அரசின் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவ அமைப்பு, பல மனித உரிமை மீறல்களையும், அடக்குமுறைகளையும் செய்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் அதற்கான விதிகளும், யுத்தம், யுத்த கைதிகள், பொதுமக்கள் மீது தாக்குதல் போன்றவற்றுக்கெல்லாம் விதிகளை மீறினால் அதற்கான நடவடிக்கை என்ற குறைந்தபட்ச ஏற்பாடுகள் இருந்தது.

தனியார் ராணுவ கூலிப்படைகளுக்கு இவைகள் ஒருபொருட்டே இல்லை, கொடூரங்களை தவிர வேறு எதுவும் உலகில் மீதம் இருக்காது. அதிக கூலி அதிக கொடுமைகள் என்ற கோட்பாட்டில்தான் இந்த தனியார் ராணுவப்படை செயல்படுகிறது. புதிய நிலைமைகள் உழைப்பாளி மக்களுக்கு பெரும் சவால்தான், காரணம் இழப்புகள் அனைத்தும் அவர்களுக்குத்தான். உழைப்பாளி மக்களின் விழிப்பும் ஒன்றுசேரலும் இல்லாமல் இதை தடுத்து நிறுத்த முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *