உயிர்த்தெழுந்த வாசம்
பசுமை பூத்திருக்கும்
நினைவுப்படிகளில்
குழந்தையாகி ஏறிச்செல்கிறேன்
கருணை நிலாக்கள் நீந்துகின்ற
அன்பின் கடலில்
பயணிக்கிறேன்
குளிர் தரு தென்றலாகும்
நேச உணர்வுகளில்
கொடுகிப் போகிறேன்
இருக்கும் வரைக்கும்
எதுவுமே பெறுமதி தெரிவதில்லை
இல்லாத பொழுதுகளில்
இதயத்திலே
அன்பின் வலிகள்
எச்சங்களாக…
அப்பாவின் கைகளில்
தலைவைத்து உறங்கிய
நாட்கள்
பாட்டியின் அணைப்பில் உணர்ந்த அன்பின்
உஷ்ணங்கள்
பொக்கை வாய்ப்பாட்டனின்
கருணையான அறிவுறுத்தல்கள்
அலைபோல் மீண்டும்
மீண்டும் அடிக்கும்
அற்புத நினைவுகளை
ஞாபகப்படுத்துகின்ற
பாதையோரப் பாட்டி
சைக்கிளோட்டும் தாத்தா
அதே அசப்பில்
அப்பாவின் சட்டை அணிந்து செல்லும் பேருந்து முதியவர்
காணுகையில்
வசந்தத்தின் புதிய பூக்களாய்
உள்ளத்தில் பரந்து கிடக்கும்
ஆத்ம நினைவுகளில்
சிறு பராயமாய்
உயிர்த்தெழுந்த வாசம்
காலத்தின் வீதிகளில்
கைகோர்த்திட்ட அன்பின்
அற்புதக் கரங்கள்
காற்றிலே கலந்து…
கரைந்து…
பிரிந்து…
Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை