தூரத்து தேசம்
என் பாதைகளுக்கு மட்டுமே தெரிகிற தேசத்திற்குப் பயணப்படுகிறேன்..
அது கற்களும் முற்களும் சுருட்டப்பட்ட
சிகப்பு கம்பளம்…
மலர்களும் மணங்களும் விரிக்க பழக்கமில்லை..
ஆங்காங்கே மைல்கற்கள்
தடம் காட்டும் பாதகத்தியாய்..
போகிற தூரம் நிறைய உள்ளதை…
நாட்காட்டியும் குறிப்பாகவே சொல்லித் தான் போகின்றன நேரம் கிடைக்கும் போதெல்லாம்…
இழந்த காலங்கள் அநேகம் என்பதையும் கடுமையான இந்த காலம் நினைவுப்படுத்தின..
நிறங்களும் அங்கங்கே
வெள்ளை சிகப்பு பச்சை காரிருள்
என பூசித் தீர்க்கிறது
முகங்கள் கூட சில குரூரங்களைக் காட்டி அச்சுறுத்தி மறைகிறது.
ஆயினும் பார்வையும் பாதமும் ஒரு நூலிழையை பிடித்தபடிக்கே கடிவாளங்களைக் கிழித்துக் கொண்டு கானல் தேசத்தின் பயணத்திற்கு ஆயுத்தமானது
சிலர் விரும்பியும்
பலர் விரும்பாமலும்…
****************************** ****************
புள்ளியிட்டாலே கோலமாகாது..
கோடுகள் போடும் சுழியாக
வட்டமடிக்கும் பாதையாக
சித்திரத்தின் விழியாக..
“அ”வனா போடும் வளைவாக
பிறக்கும் புள்ளிகள்…
துவக்கத்தில் கரிசனும்
கடுமையான விமர்சனமும்
வாங்கித் தின்னும்
நிறை தரிசனத்திற்காக..
****************************** ***************
உறங்குகிறேன் என நினைக்காதே..
என் விழிகள்..
உன் நிழலசைவை அவதானித்திருக்கும் அறிதுயிலதிலும்..
என் உள்ளம் உன் பெயரை
உச்சரித்திருக்கும் பேருறக்கத்திலும்..
என் சிந்தனை எப்போதும் உனையே சூடிக்கிடக்கும் அடர் தூக்கத்திலும்..
என் மொழியலையோ..
உன் இதழசைவை தனக்குள் வாசித்திருக்கும் ஆழ்நித்திரையிலும்..
எல்லாம் வல்ல என் உயிரானது..
உன் உயிருக்குள் கூடு பாய்ந்து
அரவணைத்திருக்கும் கண்ணயர்விலும்
உனை அடாது தனக்குள் ஒளித்துக் காத்துக் கிடக்கும் மயக்கமருண்மையிலும்..
****************************** *************
இயற்கைச் சீற்றம்
அடிக்கொருமுறை ஆள் மாறாட்டம் செய்து வைக்கும் இந்த கடும்பொழுதின் மீது தான் காலத்தின் கோபம் அவ்வப்போது கொப்பளிக்கிறது..
சீற்றமாக…
விதிமீறல்ளை ஒதுக்கி
இலக்கிற்கே இயல்பாகிறது
அன்றாடத்தில் திருகிய படிக்கே…..
து.பா.பரமேஸ்வரி
சென்னை