கரிசல் இலக்கியத்தின் தந்தை என அனைவராலும் போற்றப்படும் ராயமங்கலம் ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப்பெருமாள் என்ற இயற்பெயர் கொண்ட கி. ராஜநாராயணன் 18-05-2021 அன்று தனது பேனாப் பிரயோகத்தை நிறுத்திக்கொண்டார். அதாவது அவர் தனது உயிர்மூச்சையும் சிந்தனைத் திறனையும் இயற்கையிடம் ஒப்படைத்துவிட்டார். அவர் இறப்புப் பற்றி வர்ணிக்கும் எழுத்தாளர் உதயசங்கர் இவ்வாறு சொல்கிறார்.

”,,,,அடிக்கடி வானத்தைப் பார்த்து மந்திரம்போல் சொற்களை வீசிக் கொண்டு ஒரு விவசாயி வேலை செய்துகொண்டிருக்கிறார். மழை வருமா என்று அவருக்குத் தெரியாது. மண் நனையுமா என்று தெரியாது. விதை முளைக்குமா, வெள்ளாமை கிடைக்குமா என்று தெரியாது…… தான் பட்ட கடன்களையெல்லாம் அந்த வெள்ளாமை தீர்த்து விடுமா என்பதும் தெரியாது. எத்தனையோ காலம் மழை பொய்த்திருக்கிறது. ஒரு பொக்குக் கூட விளையாமல் காடு ஏமாற்றியிருக்கிறது. ஆனால் அவர் ஒருபோதும் நம்பிக்கை இழக்கவில்லை. மீண்டும் மீண்டும், விருவுகளோடிக் கன்னங்கரேலென்று பெருமூச்சுக்களைத் தீயென வெளியே விட்டுக்கொண்டிருக்கும் தன் நிலத்தை உழுதுவைக்கிறார். விதை விதைத்து விளைச்சலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார் நம்பிக்கையுடன். கரிசல் சம்சாரியின் வாழ்க்கையின் ஒருதுளி சாராம்சமே ஒரு பெருங்கடலாக விரிகிறது. அந்தக் கடலிலே முக்குளித்து அள்ள அள்ளத் தீராமல் 99 வயதுவரை எழுதிக்கொண்டே இருந்த கி. ரா. என்னும் மாபெரும் கதை சொல்லியின் விரல்கள் ஓய்வெடுத்துக் கொண்டன. கரிசல் இலக்கியத்தின் கதாசூரியன் மறைந்துவிட்டார்.” உணர்ச்சிச் சுடரைத் தாங்கி நிற்கும் இந்தச் சொற்கள் வெறும் கற்பனைக் கோடுகள் அல்ல. நிஜத்தின் பிரவாகத் துளிகள்.

கி. ரா. 1923 ஜனவரி 12ஆம் நாள் கோவில்பட்டி அருகில் உள்ள இடைச்செவல் கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் முன்னோர்கள் நிஜாம் ஆட்சியின் நிலப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஓர் இனமோதலின்போது அங்கிருந்து இடம் பெயர்ந்து நெல்லைச் சீமைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் கிராவின் குடும்பமும் அடக்கம்.

இளம் வயதில் இவருக்கு ஈளைநோய்த் தொற்றிக்கொண்டதால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவர் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் ஏழாப்புவரை படித்திருக்கிறார். புஞ்சைக்காட்டு வாழ்க்கையும் பூமிப்பரப்பின் கரிசல் மண்ணும் அவருக்கு நிறையப் பாடங்கள் சொல்லித் தந்தன. வாழ்க்கைப் பாடமே இலக்கியத்தின் உள்ளடக்கமாகி, மனித சுக துக்கங்களின் வழியாகப் பயணப்பட்டு சமுதாயத்துக்கான அறநெறிகளாய் உருப்பெறச்செய்து செப்பனிடுகின்றன எனப் புரிந்து அதன் வழியே பயணப்பட்டார்.



கரிசல் பூமி வறுமையாலும் ஏழ்மையாலும் மூடுண்டு கிடக்கிறது என்பதுதான் பொதுவான பரப்புரையாக இருந்து வந்துள்ளது. கடந்த 3-6-2021 அன்று ஜூம் செயலி வழியாக நடந்த “கிரா நினைவஞ்சலிக்” கூட்டத்தில் தோழர் ரவீந்திரன் பேசும்போது கரிசல் நிலத்தின் செழுமையான பகுதிகளைச் சுட்டிக்காட்டினார். மழை முழுமையாகப் பொய்த்து நிலம் விரிவோடிக் கிடக்கும் காலத்திலும் நிலத்தின் உள் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பாரக்கிழங்கு, பச்சைநிற வல்லிக்கிழங்கு, கோரைக்கிழங்கு போன்றவை பஞ்சந்தாங்கிகளாகிப் பசி போக்குகின்றன. வெறும் சருகுகளைத் தின்று நெடிதுயிர் வாழும் செம்மறியாடுகள் பாலும் இறைச்சியும் தருகின்றன. ஆஜானுபாகுவான நாட்டு மாடுகள் பாலும் தயிரும் ஈகின்றன மண்ணை ஓரடி தோண்டினால் சுவையான குடிநீர் கிடைக்கிறது. தண்ணீர் அதிகம் தேவைப் படாமலே விளையக்கூடிய பருத்தி இன்று உலகச் சந்தையின் கொள்வாருக்கும் கொடுப்பாருக்கும் முதன்மைப் பண்டம். இத்தனை வளங்களும் கரிசல் பூமியில் புதைந்து கிடக்கிறது என ரவீந்திரன் பேசியது பெரிய அளவில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் அது புவியியல் உள்ளடக்கத்தின் இயல்பான படிமம் என்பதை சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் எளிதில் புரிந்துகொள்வர்.

கிராவின் முதல் சிறுகதை 1958ஆம் ஆண்டு ‘சரஸ்வதி’ இதழில் வெளிவந்த ‘மாயமான்’ என்று நம்பபட்டு வந்த வேளையில், கடந்த 2020 செப்டம்பர் காலச்சுவடுவில் புதுச் செய்தி ஒன்று வந்தது. அதாவது 1948ஆம் ஆண்டு ‘சக்தி’ என்ற இதழில் பிரசுரமான “சொந்தச்சீப்பு” அவரின் முதல் கதை. காலச்சுவடு அதை வெளியிட்டு இலக்கிய உலகத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதே செப்டம்பர் இதழில் அந்தக் கதை பிரசுரிக்கவும் பட்டிருந்தது. ஒரு கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருக்கும் மூன்று மாணவர்கள் ஒரே சீப்பைப் பயன்படுத்துகின்றனர். ஒரு கட்டத்தில் சீப்பு ஒடிந்துவிடுகிறது. அவர்களில் சந்திரன் என்பவன் புதுச்சீப்பு வாங்கிப் பொதுமைப் படுத்துகிறான். எளிமையான கதைதான் என்றாலும் மாணவப் பருவத்தில் தோன்றும் சுயநலப் பண்பாட்டை நிராகரிக்கும் மனோபாவத்தை ஊக்கப்படுத்தும் படைப்பு.

ஆகவே கிரா தனது 25ஆவது வயதிலோ அதற்கு முன்போ கதை எழுத ஆரம்பித்துவிட்டார் எனத் தெரிகிறது. இதில் இன்னொரு கேள்வி தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. முதல் கதை 1948ல். பத்து வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது கதை என்றால் இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் அவர் எதுவுமே எழுதவில்லையா? கோடு போடத் தொடங்கிய பேனா பத்து வருடங்கள் ஓய்வெடுக்குமா? ஆய்வாளர்கள் விடைதேட வேண்டும். இடையில் பல படைப்புகள் வந்திருக்குமென்றே தோன்றுகிறது.

பாரதி ஆய்வாளர் ய. மணிகண்டன் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு பாரதியின் வெளிவராத படைப்புகளைத் தேடி எடுத்துத் தந்துகொண்டே இருக்கிறார். இதுவரை வெளிவராத பாரதியின் பல கவிதைகளும் கதைகளும் நாடகங்களும் மணிகண்டனின் தேடுதலில் இப்போது வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. அதோடு பாரதி பாடாதவைகளையும் பாரதியினுடையது என நம்பப் பட்டதையும் இனம் காட்டியிருக்கிறார். உதாரணத்துக்கு ”பாரதியார்” படத்தில் பாடப்படும் பாடல், “கேளடா மானிடவா; நம்மில் மேலோர் கீழோர் இல்லை.” இந்தப் பாடல் பாரதியார் பாடியது இல்லை. சு. நெல்லையப்பர் பாடியது என அந்தக்காலத்தில் வெளிவந்த சில பருவ ஏடுகள் மற்றும் நூல்கள் வழியாக நிறுவியிருக்கிறார். இதே போன்றதொரு ஆய்வை மேற்கொண்டு மறை நிழலில் பதுங்கியிருக்கும் கிராவின் படைப்புக்களையும் பதிப்பிக்க வேண்டும்.



கிரா தன்னை ஒரு கம்யூனிஸ்டாகத் அறிவித்துக்கொண்டார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் கோயில்பட்டி வட்டார விவசாய சங்கச் செயலாளராக இயங்கினார். தொழிற்சங்கமும் விவசாய சங்கமும் கட்சியின் வர்க்க ஸ்தாபனங்கள். அதாவது, மாணவர் சங்கம், வாலிபர் சங்கம், மாதர் சங்கம், ஆசிரியர் சங்கம் எனக் கிளை அமைப்புகள் இயங்கினாலும் மேற்கண்ட இரண்டு அமைப்புக்களும்தான் கட்சியின் ஜீவநாடிப் பிரிவுகள். ஒருவர் கட்சியில் தன்னைப் பதிவு செய்துகொண்ட மூன்று வருடங்களுக்குப் பிறகே முழு உறுப்பினராக முடியும். அதன் பிறகு தன்னலமற்ற முறையில் பணியாற்றி மக்களின் நன்மதிப்பைப் பெறும்போது வர்க்க ஸ்தாபனத்தில் இணைக்கப் படுவார். வர்க்க ஸ்தாபனத்தின் செயலாளர் பொறுப்பு என்பது கட்சியின் உயர்மட்டப் பொறுப்புக்குச் சமானம். கட்சி பிளவுபடும் வரை பொறுப்பில் இருந்தவர் பிளவுபட்டதை விரும்பாமல் ஒதுங்கிக்கொண்டார். ஆனாலும் தனது படைப்புகளில் கட்சியின் சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கலை நேர்த்தியோடு பதிவுசெய்தார்.

“கோபல்ல கிராமத்து மக்கள்” என்ற இவரது நாவலுக்கு சாகித்ய அக்காடமி விருது வழங்கப் பட்ட்து. ஒரு சிறு கிராமத்தில் இருந்துகொண்டு இந்திய சுதந்திரப் போராட்டத்தை விவரிக்கும் பகுதிகள் அதில், இருக்கின்றன. 1947 ஆகஸ்ட் 15ல் அந்த கிராமத்தில் மேடை போட்டுக் காங்கிரஸார் கொடியேற்றிக் கொண்டாடுகின்றனர். அதுநாள் வரை சுதந்திரத்துக்கு எதிராகவும் காங்கிரஸுக்கு எதிராகவும் செயல்பட்டுக்கொண்டிருந்தவர்கள், கதராடை அணிந்து மேடையேறி வீர முழக்கமிட்டனர். ரத்தம் சிந்தி அன்னிய ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய கம்யூனிஸ்டுகள் கீழேநின்று வேடிக்கை பார்த்தனர். அந்த நிகழ்வு இளைஞர்களின் மனம் கொந்தளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

“தோழன் ரெங்கசாமி” என்ற சிறுகதை ஒரு தொழிற்சங்கத் தலைவரின் தியாகத்தை விவரிக்கிறது. குடும்பத்தை உதறி, தனது சொந்த சுக துக்கங்களைப் பணயம் வைத்து, சாமான்ய மக்களுக்காக உழைக்கிறான் ரெங்கசாமி. அந்த உழைப்பு வெற்றுத் தியாகமாக இருக்கிறதே தவிர ஏழை எளியவர்களின் மன ஆழத்தின் பௌதீக சக்தியாக பரிமாணப்படவில்லை. காரணம் அடுத்த வேளைக் கஞ்சிக்கு அல்லாடும் வாழ்க்கைச் சூழல். ஆயினும் ரெங்கசாமியின் தியாகம் மனம் கனக்கும்படி சித்தரிக்கப்பட்டுள்ளது. எதிர்கால வாசகனின் மனசில் படிந்து பௌதீக சக்தியாக மாறும் என்பதில் ஐயமில்லை. அதுதான் இந்தக் கதையின் வெற்றி.
கிரா ஓர் இயற்கை உபாசகர். கரிசல் மண்ணின் தட்ப வெப்பத்தைக் கச்சிதமாய்க் கணக்கிட்டு நாளைய வெப்ப வீர்யத்தையோ மழைச் சலனத்தையோ காற்றின் ஈரப் பதத்தையோ சொல்லிவிடுவார்.



“நிலைநிறுத்தல்” என்றொரு சிறுகதை. பல மாதங்கள் மழை இல்லாததால் வரண்டு கிடக்கிறது கரிசல் நிலம். முதல் உழவு, இடை உழவு, கடை உழவு எதுவும் நடைபெறவில்லை. அடிமண் தந்த சட்டிக் கிழங்குகளும் கரணைக் கிழங்குகளும் தீரப் போடின்றன. மழை வந்தால்தான் அடுத்த உழைப்பு–பிழைப்பு. அனைவரும் அண்ணாந்து வானத்தைப் பார்க்கின்றனர். ஒரு கீதாரியின் வழியாக சில அறிகுறிகள் சொல்லப்படுகின்றன. ”நேத்துலேருந்து ஆடுக சரியா மேயாம கூடிக்கூடி அடையிதுக; அடமழ வராமப் போகாது” என்றார். பால் கறந்துகொண்டு வர விடலைப் பானையில் குருத்தோலை வெட்டப்போனபோது தூக்கணாங்குருவிகள் வேகமாய்க் கூடுகள் கட்டி முடிப்பதைப் பார்த்திருந்தார். தரைப் புற்றுகளிலிருந்து தேங்காய்ப் பூ போன்ற வெண்ணிறத்தில் தங்களின் முட்டைகளை அள்ளிக்கொண்டு மொலோர் என்ற எறும்புக் கூட்டங்கள் கிளம்பிப் போவதையும் அவர் பார்த்திருந்தார்.

இப்படி எழுதிப்போகும் கிரா மேலும் சில விபரங்களைக் கூறுகிறார். “மூணாம் நாள் காலை மஞ்சள் வெயில் அடித்தது…………………………………..யாரோ மேற்கே கைகாண்பித்தார்கள். வெகு தூரத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சிமலை இன்று ரொம்பக் கிட்டெ வந்து இருப்பதுபோல் தெரிந்தது. எப்பவும் ஒரு நீளமான நீல நிற அம்பாரமாக மட்டுமே தெரியும் மலை இன்று அதனுள்ளே இருக்கும் மலையின் திருப்பங்கள் மட்டங்கள் கூடத் தெளிவாகத் தெரிவதைப் பார்த்தார்கள். …………….கோயிலின் படிக்கட்டின் அடியிலிருந்து “டொர்ர்……டொர்ரக்” என்று ஒரு சொறித் தவளை சத்தம் கொடுத்தது. ஒருவர் ஒருவரை சந்தோஷமாகப் பார்த்துக்கொண்டார்கள்.”

இவையெல்லாம் கிராமத்தின் அனுபவ அறிவு படைத்த மனிதர்கள் கண்டடைந்த மழைக் குறிகள். கரிசல் மண்ணின் வாழ்க்கை என்பது மனித வாழ்க்கை மட்டுமல்ல. அங்கு குடிவாழும் பறவைகளின், விலங்குகளின் அறிவாற்றலோடு இணைந்ததும்தான்.

பூமிப் பரப்பின் எந்தப் பாலையும் எந்தப் பனிப்பரப்பும் எந்த மலைமுகடும் ஜீவராசிகள் வாழ்வதற்கு எதிரானவை அல்ல. தூந்திரப் பிரதேசங்களில் பனிக்கரடியும் இமயமலைச் சிகரங்களில் யெட்டியும் பாலைநிலத்தில் மனிதனுடன் ஒட்டகங்களும் பாம்புகளும் பல்லிகளும் வாழ்கின்றன. இவற்றைவிடவும் மேம்பட்டதான கரிசக்காடு மனிதகுலத்தை ஏமாற்றாது என்பதே கி. ராஜ நாராயணனின் இலக்கிய முடிபு.
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *