’ஏட்டுத் திக்கும் செல்வோம்; கலைச்செல்வங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்’ என்ற மகாகவி பாரதியின் கனவினை நினைவாக்கும் பெரும் பேற்றைப் பெற்றிருப்பவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் என்றால் அது மிகையில்லை. அவர்களில் எனக்கும் ஒரு சிறு பங்கு உண்டு என்ற பெருமிதம் பெற்றவன் நான். அப்படி ஒரு புத்தகத்தை சமீபத்தில் நான் மொழிபெயர்த்த போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆவலால் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

நான் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டது என்பது ஒரு மாணவனாகத்தான். தோழர் இ.எம்.ஜோசப் அவர்கள் தான் கட்டுரைகளை மொழிபெயர்க்கச் செல்லும்போது என்னையும் அழைத்துச் செல்வார். நான் அவர் மொழிபெயர்த்துக் கூறுவதை எழுதுவேன். பின்னர் தீக்கதிர் அலுவலகம் சென்னைக்கு வந்தபோது, தோழர் குமரேசனைப் பார்க்கச் சென்றிருந்தேன். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர் ஒரு சிறு துணுக்கைக் கொடுத்து மொழிபெயர்க்குமாறு கூறினார். அதில் திருப்தியடைந்தவர் என்னை அந்தப் பணியில் இறக்குவது என்று முடிவு செய்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரும் தோழர் சு.பொ.வும் கட்டுரைகளை மொழிபெயர்க்குமாறு எனக்கு வாய்ப்புக்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

பின்னர் எனக்கு புத்தகம் மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்ட போது தோழர் மயிலை பாலு என்னை அழைத்துச் சென்று அப்போதுதான் தொடங்கியிருந்த பாரதி புத்தகாலயத்தின் பொறுப்பாளர் தோழர் நாகராஜனிடம் விட்டார். அதிலிருந்து இன்றுவரை அதன் நிழலில் இயங்கிக் கொண்டே இருக்கிறேன்.

திருவிளையாடல் தருமியின் பாணியில் சொல்வதானால், சுப்பாராவ், லட்சுமணன் மற்றும் பல கைதேர்ந்த மொழிபெயர்ப்பாளனாக இல்லாவிட்டாலும் அத்துறையில் ஈடுபட்டிருப்பவன் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது எனக்குப் பெருமைதான். என்றாலும் தோழர் சு.பொ.அகத்தியலிங்கத்திடம் ஒருமுறையாவது ‘நன்றாகச் செய்திருக்கிறாய்’ என்ற பெயரைப் பெற்று விட வேண்டுமென்று ஆவல். இதுவரை நிறைவேறவில்லை.

மொழிபெயர்ப்பாளனின் சவால் பலரும் என்னை நேரடியாக எழுதுமாறு தூண்டினாலும், மொழிபெயர்ப்பின் சவால் என்னை விட மறுக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு சிந்தனை, களம், மொழி, பாணி அனைத்தும் அவருடையது. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கோ அவை அனைத்தும் வேறு ஒருவருடையது. அவருடைய சிந்தனையை, மொழியை, உணர்வை அப்படியே உள்வாங்கித் தனது மொழி வாசகனுக்குக் கொடுக்கும் பெரும் பொறுப்பு அவன் தோளில் விழுந்து விடுகிறது. அந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை.

மொழிபெயர்ப்பில் எனக்கென்று ஒரு பாணி உண்டு. (அதைச் சோம்பல் என்றும் குறிப்பிடலாம்?) அதாவது மூத்த மொழிபெயர்ப்பாளர்கள் என்னிடம் அடிக்கடி கூறும் அறிவுரை மொழிபெயர்க்க வேண்டியதை ஒருமுறை, இருமுறை, மும்முறை படித்து அதன் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு செய்ய வேண்டுமென்பது. ஆனால் நானோ நேரடியாக மொழிபெயர்ப்பில் இறங்கி விடுவது வழக்கம். அதிலும் ஒரு இலாபம் இருப்பதாக நான் கருதுகிறேன். (மூத்தவர்கள் மன்னித்து விடவும்). மூலத்தை முதன்முதலில் படிக்கும்போது ஏற்படும் உணர்வு அப்படியே என் மொழிபெயர்ப்பில் பிரதிபலித்து விடுகிறது என்பதுதான் அது. இரண்டு, மூன்று முறை படித்த பிறகு அதே உணர்வு ஏற்படும் என்று கூற முடியாது. (இந்த முறை அரசியல் கட்டுரைகளுக்குப் பொருந்தாது.)

சுமார் இருபது புத்தகங்களை மொழிபெயர்த்ததில் அவற்றில் என் மனதைத் தொட்டுப் பிழிந்தவை ஒன்றிரண்டு குறிப்பிடத்தக்கவை. ஒரு வாழ்க்கையின் துகழ்கள், அமீர் ஹைதர் கான், ‘கிரேப்ஸ் ஆஃப் வ்ராத்’ என்ற கோபத்தின் கனிகள். இவையெல்லாம் என் பாணியை விட்டுவிட்டு ஒரு வேகத்தை உண்டாக்கி எனக்குள் இருந்த வாசகனை முன்னிறுத்தி விட்டவை. ஒரு கட்டத்தில் மொழிபெயர்ப்பை நிறுத்தி விட்டு ஒரு வாசகனாக முழுவதையும் படித்த பிறகே மொழிபெயர்த்தேன்.

அதில் நான் சமீபத்தில் மொழிபெயர்த்த கோபத்தின் கனிகள் என்னை மிகவும் பாதித்தது. பணி முடிந்து, புத்தகம் வெளிவந்து இரண்டு, மூன்று மாதங்கள் கடந்த பிறகும், புத்தகத்தின் அத்தியாயங்கள், சம்பவங்கள் ஆகியவை என்னை விடாமல் துரத்திக் கொண்டிருக்கின்றன. 1939ஆம் ஆண்டில் வெளிவந்த, ஜான் ஸ்டீன்பெக்கால் எழுதப்பட்ட அந்த நாவல் ஒரு செவ்வியல் படைப்பு என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது.

சிறையிலிருந்து பரோலில் வெளிவந்து ஒரு வழிப்போக்கனாக அறிமுகமாகும் நாயகன் நம்மை நாவல் முழுதும் அழைத்துச் செல்கிறான். அவனது குடும்பத்தின் இடப்பெயர்வு, நீண்ட காலமாக இருக்கும் இடத்திலிருந்து வெளியேற்றப்படும் சோகம், கோபம், குடும்பத்தினரை மீண்டும் சந்தித்தல், அவர்களின் மகிழ்ச்சி, சோகம், குடும்ப உறுப்பினர்களை ஒவ்வொருவராக இழத்தல் என நாவல் முழுவதும் உணர்வுகளால் நிரப்பி இருக்கிறார் ஸ்டீன்பெக். இன்று விவசாய நிலங்களிலிருந்தும், பிழைக்கும் இடங்களிலிருந்தும் வேருடன் வெட்டி வெளியேற்றப்படும் மக்களின் உணர்வுகளை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

’நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்’ என்று வடிவேலு ஒரு படத்தில் கூறுவார். இந்த முதலாளித்துவம் இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் உழைப்பை அப்படித்தான் சுரண்டுகிறது என்பதை இந்த நாவல் விளக்கும் விதம் அற்புதமானது.

இன்று வேண்டுமென்றே உருவாக்கப்படும் வேலையின்மை, காண்ட்ராக்ட், தற்காலிக வேலைகள் போன்றவை நினைவுக்கு வரத்தான் செய்யும். ஆக இந்த நாவல் இடம் பெயர்ந்த ஒரு குடும்பத்தின் கதையாக இல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தின் சார்பில் பேசுகிறது என்பதே உண்மை. இந்த நாவலின் கடைசி வரி என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. அது என்னைக் கடைசி வரை துரத்திக் கொண்டே இருக்கும்.

இப்போதும் என்னைச் சுற்றிச் சுற்றி வரு அந்த நாவலின் நினைவுகளை அழிக்க முடியாமல், பகிரவாவது செய்வோம் என்ற முயற்சிதான் இது. இதுவரை நான் எந்தப் புத்தகத்துக்கும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பு எழுதியதில்லை. இந்த நாவல் என்னை எழுத வைத்து விட்டது.
மறைந்த இன்சூரன்ஸ் ஊழியர் தலைவர் தோழர். என்.எம்.சுந்தரம் தனது உரைகளில் இந்தப் புத்தகத்தை அடிக்கடி குறிப்பிடுவார் என்று கேள்விப் பட்டதுண்டு. இப்போது அதன் காரணம் புரிந்தது.

இந்தப் புத்தகத்தை மொழிபெயர்க்கும் வாய்ப்பை எனக்கு வழங்கிய பாரதி புத்தகாலயத்துக்கும், தோழர்.பி.கே.ராஜனுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டவன். இந்த மொழிபெயர்ப்பை முதலில் படித்துச் சரி பார்த்த தோழர் கமலாலயன் என்னை உடனே தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவரின் வாழ்த்துக்களும், நாவலின் உணர்வுகளும் என்னுள் பரவியபடியே உள்ளன.
இந்த நாவல் ஒரு திரைப்படமாகவும் வந்துள்ளது. அதைப் பார்த்து விட்டு மொழிபெயர்க்குமாறு தோழர் ராஜன் கூறியிருந்தார். இனிமேலாவது பார்த்து விட வேண்டும்!

– கி.ரமேஷ்

புத்தகத்தை வாங்க: https://thamizhbooks.com/product/kobathin-kanigal_stein-bek_-ramesh/

2 thoughts on ““கோபத்தின் கனிகள்” ஒரு மொழிபெயர்ப்பு அனுபவம் – கி.ரமேஷ்”
  1. அருமை… நாவலின் கடைசி வரி – ஆங்கிலத்தில் எப்படி இருந்தது, தமிழில் நீங்கள் எப்படி எழுதினீர்கள் என்று அறிய ஆசையாக இருக்கிறது.

  2. அனுபவ பகிர்வு, புதியவர்களுக்கு அறிமுக தொடக்கமாக அமைகிறது அருமை தோழர். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *